“எப்பவுமே பேசுறப்ப கையைப் பிடிச்சுக்குறது புவனோட பழக்கம். இன்னைக்கும் அப்பிடித்தான் நான் நினைச்சேன். பேச்சுவேகத்துல திடீர்னு அவரோட குரல் மென்மையானதை நான் கவனிக்கல. அவரோட பிடி இன்னும் இறுக்கமாச்சு. சட்டுனு ஒரு குட்டி முத்தம் என் கையில. எல்லாமே ஒரு செகண்ட்ல முடிஞ்சுடுச்சு. ஆனா அந்த ஃபீல் இன்னும் எனக்குள்ள இதமா இருக்கு. முதல் முத்தம்! கொஞ்சம் ஷாக் தான்! நிமிர்ந்து அவர் கண்ணைப் பாத்தா அதுல காதல் ரொம்ப அழுத்தமா கொஞ்சம் உரிமை கலந்து தெரிஞ்சுது. எனக்குள்ள சின்னதா பயம், ஒரு தயக்கம், கொஞ்சம் நெகிழ்ச்சி. என் கையில பதிஞ்ச அந்த உஷ்ணமான முத்தத்தை எங்களோட உறவை இன்னும் இறுக்கமா பிணைச்சதா ஃபீல் ஆகுது”
-ஆதிரா
பவிதரன் அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டது அவனது அன்னை நிலவழகிக்கு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக பத்து மணிக்கு மேல் வருபவன் அன்று ஆறரைக்கே வீட்டில் ஆஜராகியிருந்தான்.
அவனது முகத்திலிருந்த தீவிரபாவனை வேறு அவரைக் குழப்பியது. ஓராண்டாகவே தகப்பனுக்கும் மகனுக்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லை. ஒருவேளை கணவர் சார்ந்த பிரச்சனையாக இருக்குமோ என மனம் பதபதைக்க அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனுக்குக் காபி கொடுவென வேலைக்காரப் பெண்மணியிடம் ஆணையிட்டார்.
“தம்பி காபி”
அவர் நீட்டவும் மறுக்காமல் வாங்கிக்கொண்டவன் ஒரு முடிவோடு மதுமதியின் வருகைக்காக காத்திருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
காபி தீரவும் அவள் வரவும் சரியாக இருந்தது.
வந்தவளுக்கும் நிலவழகியைப் போல ஆச்சரியத்தில் ஒரு நொடி தன்னையே நம்ப முடியவில்லை. உலகமே அழிந்தாலும் பத்து மணிக்கு முன்னர் வீடு திரும்பாதவன் இன்று தனக்கு முன்னரே வந்திருக்கவும் எதுவும் பிரச்சனையாக இருக்குமோ என யோசித்தாள்.
“வா! இப்பிடி உக்காரு”
காபி டம்ளரை டீபாய் மீது வைத்தவன் தங்கைக்கு ஆணையிட, அவன் மீதிருக்கும் மரியாதையின் காரணமாக மறுப்பு கூறாமல் அமர்ந்தாள் மதுமதி.
“சீக்கிரமே வந்த மாதிரி இருக்கே?” என்றவளிடம்
“அப்பா பின்வாசல் திண்ணைல உக்காந்திருக்கார். அவர் காதுல விழாம சில சமாச்சாரம் பேசணும் உன் கிட்ட” எனப் பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தான்.
என்னவெனப் புரியாமல் விழித்த மதுமதி அவன் பேச ஆரம்பித்ததும் முகம் வெளிறிப்போனாள்.
“நீ புவனோட ஹோட்டலுக்காக சாப்ட்வேர்ட் டெவலப் பண்ணுற வேலைல இருக்குறியா?”
“ஆ…ஆமா”
“அவரோட புராஜக்ட்னு தெரிஞ்சதும் ஏன் ஒதுங்கல?”

“ஏன் ஒதுங்கணும்ணா? இது புரொபசன். இங்க என் எதிரியே க்ளையண்டா வந்தாலும் நான் வேலை பாக்கணும். அதுதான் அந்த வேலைக்கு நான் செய்யுற நியாயம். புவன் என்னோட…”
உணர்ச்சி வேகத்தில் பேசிக்கொண்டே போனவள் சட்டென வாயைப் பொத்திக்கொண்டாள். அதைக் கவனித்த பவிதரனின் பார்வையில் கடுமையேறியது.
“என்ன? புவன் உனக்கு என்னனு கேட்டேன்” இடிமுழக்கமாய் பவிதரனின் ஒலிக்கவும் பின்வாயிலில் இருந்து மாணிக்கவேலுவின் குரல் கேட்டது.
“என்ன பிரச்சனை?”
“ஒன்னுமில்லப்பா. நீங்க உங்க புக்கை கண்டினியூ பண்ணுங்க”
மதுமதியின் கண்கள் கலங்கிப்போக பவிதரனோ அவளை எச்சரிகக் ஆரம்பித்தான்.
“இங்க பாரு! இனிமே அந்த புராஜெக்ட்ல இருந்து நீ ரிலீவ் ஆக முடியுமானு எனக்குத் தெரியல. புராஜெக்டைக் கம்ப்ளீட் பண்ணி குடுத்துட்டு ஒதுங்கிடு. இதைக் காரணமா வச்சு புவனை அப்ரோச் பண்ணனும்னு நினைக்காத. அவருக்கு உன் மேல எந்த அபிப்பிராயமும் இல்ல. அதை மனசுல பதிய வச்சுக்க முதல்ல. அதுவுமில்லாம அவருக்கு அவர் விரும்புற பொண்ணோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆயாச்சு. அவரைத் தொந்தரவு செய்யணும்னு நினைக்காத. நான் பாத்துக்கிட்டுச் சும்மா இருக்கமாட்டேன்”
“புவன் என்னைப் பத்தி என்ன சொன்னாலும் நீ நம்பிடுவியாண்ணா?”
“புவன் ஒன்னும் உன்னைப் பத்தி சொல்லலை. உன்னைப் பத்தி பேசுற அளவுக்கு நீ அவருக்கு முக்கியமானவ இல்லங்கிறதை மறந்துடாத மது. நீ அவரைப் பாக்க ஹோட்டலுக்குப் போனப்ப ஆதிரா வந்திருக்கா. அவ உன்னைப் பாத்திருக்கா. இன்னைக்கு அவளும் அவளோட மதினியும் மல்ர் கூட சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தாங்க. அங்க தனியா பேசுனப்ப இந்த தகவலைச் சொன்னா. அன்னைக்குப் புவன் போகச் சொல்லியும் ரூமை விட்டுக் கிளம்பாம இருந்தியாமே நீ?”
‘ஆதிரா’ என்ற பெயரைக் கேட்டதும் பெட்ரோல் ஊற்றாதக் குறையாக உடல் எரிந்த உணர்வு மதுமதிக்கு.
பவிதரனும் புவனேந்திரனின் நிச்சயதார்த்தத்துக்குப் போய்வந்தானே! அவனது மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பார்த்து ஆதிரா தான் அன்று தங்கள் உரையாடலின் இடையே வந்த ஆகாயநீல வண்ண சுடிதார் பெண் என்று அறிந்து வைத்திருந்தாள்.
அவளது அழகில் அத்துணை புகைச்சல் மதுமதிக்கு. போதாக்குறைக்குச் சொந்தத் தொழிலை நிர்வகிக்க வேறு செய்கிறாளாமே என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனாள் அவள்.
அவள்தான் தமையனிடம் தனது வருகையைப் பற்றி போட்டுக்கொடுத்தவள் எனக் கேள்விப்பட்டதும் கோபம் தாளவில்லை.
“அவ எதுக்கு என்னைப் பத்தி உன் கிட்ட பேசுனா? உன் தங்கச்சிய பத்தி யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியாண்ணா? அவ யாரோ ஒருத்தி உனக்கு. என் தங்கச்சிய பத்தி பேச உனக்கு என்ன உரிமை இருக்குனு அவளைத் திட்டியிருக்க வேண்டாமா?”
பவிதரன் இன்னும் கடுப்பானான்.
“எதுக்கு திட்டணும்? அவளுக்குச் சொந்தமானவனை நீ தட்டிப் பறிக்கப் பாக்குறதா அவ சொல்லலை. அதுக்குப் புவன் இடம் குடுக்கமாட்டார்னு ஆதிராவுக்குத் தெரியும். அவ உன் மேல எந்தப் பழியும் போடல. இன்ஃபேக்ட் உனக்கு ஏத்த இடத்துல நல்ல மாப்பிள்ளைய பாத்து கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னா. உன் கவனம் புவன் மேல பதியக்கூடாதுனு அவ நினைக்குறா. அதுல தப்பில்லயே?”
“அண்ணா…”
“நீ அந்தப் புராஜெக்ட்ல வேலை பாரு. ஆனா புவனைத் தொந்தரவு பண்ணாத. உன் மனசுல அப்பிடி எதுவும் எண்ணம் இருந்தா மாத்திக்க. இதுக்கு மேல இந்தப் பேச்சு நம்ம வீட்டுல வரக்கூடாது”
ஆணையிடும் குரலில் சொல்லிவிட்டு எழுந்தான் பவிதரன்.
அவனும் மகளும் உரையாடியதை நிலவழகியும் சமையலறையில் இருந்தபடி கேட்டுக்கொண்டுதான் இருந்தார். என்ன செய்ய முடியும் அவரால்?
மகனைக் குற்றம் சொல்ல வழியில்லை. மொத்தத் தொழிலையும் கட்டிக் காப்பாற்றுபவன் அவன். கணவரிடம் சொல்லவும் முடியாது. மனிதர் கொந்தளித்துவிடுவார். அதே நேரம் மகளையும் கடிந்துகொள்ள மனமில்லை.
திருமணமாகி ஆறே மாதத்தில் வீட்டுக்குத் திரும்பியவள் விவாகரத்தையும் வாங்கிக்கொண்டு புண்பட்ட மனதோடு உலாவுகிறாள். அவளை எப்படி கடிந்துகொள்வது?
மகன் சென்றதும் அவளிடம் ஆறுதலாகப் பேச வந்தார்.
அன்னையைக் கண்டதும் மதுமதியின் கண்கள் கட்டுப்பாடின்றி கண்ணீரைச் சிந்தின.
“இங்க பேசவேண்டாம்” என்றவர் மதுமதியை அவளது அறைக்கு அழைத்துச் சென்றார்.
உள்ளே போய் கதவை மூடியவர் “ஏன்டி இப்பிடி செய்யுற? உன் அப்பா உன்னைத் தலைமுழுகிட்டார். எங்க காலத்துக்குப் பிறகு உனக்கு எல்லாமே பவி தான். அவனையும் ஏன்டி உன்னை விட்டு விலகி நிக்க வைக்குற?” என இயலாமையோடு புலம்பினார்.
மதுமதிக்கு வந்ததே ஆத்திரம்.
“நானா? நானா தப்பு பண்ணுறேன்? எல்லா தப்பையும் செஞ்சவர் உன் புருசன். ஆமா! நான் ஆனந்தைக் காதலிச்சு அவனுக்காகக் கல்யாண மண்டபத்துல இருந்து அகமதாபாத்துக்கு ஓடுனேன். அவன் என்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சதும் புவன் என்னைக் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வரலனா என் நிலமை என்னாகிருக்கும்? அதனால அந்த மலரை வச்சு அவரை எனக்குச் சொந்தமாக்கிக்க நினைச்சேன். அவ புருசன் எல்லா திட்டத்தையும் கெடுத்துட்டான். உன் புருசன் குடும்ப கௌரவத்தைக் கெடுக்குறேன்னு ஒரு பொம்பளை பொறுக்கி தலையில என்னைக் கட்டி வச்சார். அதுக்காக அவன் கூட நான் வாழணுமா? என்னைக் கல்யாணம் பண்ணிட்டு அவன் முறையில்லாம நிறைய பொண்ணுங்க கூட வாழ்ந்திட்டிருந்தான். அதை நிரூபிச்சு டிவோர்ஸ் வாங்கிக்கிட்டேன். அது தப்பா? கடவுள் மறுபடி புவனை என் வாழ்க்கைல வர வச்சிருக்கார்னா என்ன அர்த்தம்? அவர் எனக்கானவர்னுதானே அர்த்தம்?”
நிலவழகி தலையிலடித்துக்கொண்டார்.
“பைத்தியம் மாதிரி பேசாத மது. அவருக்கு நிச்சயம் ஆகிடுச்சு”
“கல்யாணம் ஆகிடலையே?”
திமிராய்ச் சொன்னாள் அவள். நிலவழகியின் முகத்தில் பயத்தின் சாயல்!
‘இந்தப் பெண் மீண்டும் எதையோ செய்து சிக்கலில் மாட்டிக்கொள்வாளோ?’
அவரது யோசனைக்கு ஏற்ப அன்றிரவு சாப்பிட்ட பிறகு மதுமதி புவனேந்திரனின் ஹோட்டல் அலுவலக எண்ணுக்குத் தனது மொபைலில் இருந்து அழைப்பு விடுத்தாள்.
அழைப்பை ஏற்றவன் அரவிந்த். அவனிடம் மென்பொருள் பற்றி விவரம் கேட்க புவனேந்திரனின் மொபைல் எண்ணை அவள் கேட்க ஆயிரம் கேள்விகளுக்குப் பிறகு அவனும் கொடுத்தான்.
தாமதமின்றி புவனேந்திரனின் எண்ணுக்கு அழைத்தவள் அவன் அழைப்பை ஏற்றதும் “நான் மது பேசுறேன் புவன். ப்ளீஸ் காலைக் கட் பண்ணிடாதிங்க” என்று அவசரமாகச் சொல்ல
“உனக்கு என் நம்பர் எப்பிடி கிடைச்சுது?” எனப் புவனேந்திரன் பற்களை நறநறவெனக் கடிக்கும் சத்தம் கேட்டது.
“அது முக்கியமில்லங்க. நீங்க கல்யாணம் பண்ணிக்கப்போறவளுக்கு உங்க மேல துளி கூட நம்பிக்கை இல்ல போல?” என எடுத்ததும் எகத்தாளமாகப் பேசினாள்.
“ஏய்!” புவனேந்திரன் கர்ஜித்ததில் மதுமதி மொபைலைத் தவறவிட்டாள் பதறிப்போய்.
பின்னர் துடிக்கும் இதயத்தை அடக்கிக்கொண்டு மொபைலை எடுத்தவள் காதில் வைக்க புவனேந்திரனோ எரிமலையாய் கொதித்தான்.
“ஆதிராவைப் பத்தி ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து தப்பா வந்தாலும் நீ உயிரோட இருக்கமாட்ட. உனக்கு என்ன தகுதி இருக்குனு அவளைப் பத்தி என் கிட்ட தப்பா சித்தரிக்க பாக்குற? தொலைச்சிடுவேன்! ஜாக்கிரதை!”
மதுமதி கண்களை இறுக மூடித் திறந்தாள்.
‘இது பயப்படுவதற்கான நேரமில்லை. துணிவோடு பேசு’
“அவளைப் பத்தி தப்பா பேச என்ன இருக்கு? அவ இன்னைக்குப் பவி அண்ணாவ மலரோட வீட்டுல பாத்திருக்கா. அங்க உங்க ஹோட்டலுக்கான சாப்ட்வேர் புராஜெக்ட்ல நான் இருக்கேன்னு அவர் கிட்ட சொல்லிருக்கா. நான் உங்களை அப்ரோச் பண்ண பாக்குறதா கூட சொல்லிருக்கா. எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணுமாம். எங்க நீங்க அவ கையை மீறிப் போயிடுவிங்களோனு அவளுக்குப் பயம், அதுக்கு அடிப்படை அவளோட நம்பிக்கை குறைவு. அதை மறந்துடாதிங்க.”

மறுமுனையில் புவனேந்திரன் நிதானித்தான்.
“இங்க பாரு! ஆதிரா எந்தத் தப்பான எண்ணத்தோடவும் இதைச் சொல்லிருக்கமாட்டா. அவளைப் பத்தி எனக்குத் தெரியும். அவளுக்கும் எனக்கும் எண்ணவோட்டம் ஒரே மாதிரி. வேண்டாம்னு ஒதுக்குனவங்களுக்கு என் வாழ்க்கைல மறுபடி முக்கியத்துவமும் இடமும் குடுக்கமாட்டேன்னு அவளுக்கு நல்லா தெரியும். நீ எங்களைப் பத்தி யோசிக்காம உன் வாழ்க்கைய கவனி. இதை மட்டும் மறந்துடாத! ஆதிராவ பத்தி எப்பவும் நீ தப்பா பேசக்கூடாது. பேசுனதா கேள்விப்பட்டேன், புவனோட இன்னொரு ரூபத்தை நீ பாக்க வேண்டியதா இருக்கு”
அவள் பேச இடமளிக்காமல் அழைப்பைத் துண்டித்தவனின் மனதில் மசமசவென ஏதோ குழப்பம்.
‘இந்தக் குழப்பம் தொடரக்கூடாது. உடனடியாக ஆதிராவிடம் இதைப் பற்றி பேசவேண்டும்’
புவனேந்திரன் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்க, மதுமதியோ இதை வைத்து புவனேந்திரனுக்கும் ஆதிராவுக்கும் சண்டை வருமெனப் பகற்கனவை இரவில் கண்டுகொண்டிருந்தாள்.
புவனேந்திரன் மறுநாள் ஹோட்டலில் தனது அலுவலைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு மற்ற பொறுப்புகளை அரவிந்திடம் ஒப்படைத்துவிட்டு அம்பாசமுத்திரதுக்குக் கிளம்பினான்.
இது போனில் பேசி புரியவைக்கிற விவகாரம் இல்லை என அவனுக்குத் தோன்றியதாலே நேரில் சென்று ஆதிராவைப் பார்த்து அவளுக்குப் புரியவைத்துவிடும் வேகம்!
சந்திரவிலாசவாசிகள் அவனை அன்போடு வரவேற்றார்கள்.
“ஆதிக்குப் போன் போட்டுட்டேன். இப்ப வந்துடுவா” என்று சொல்லி மருதநாயகி அவனோடு பேச ஆரம்பிக்க எழிலரசியும் வினாயகமும் மருமகனுக்கான விருந்தோம்பலில் மூழ்கினார்கள்.
வெயிலுக்கு இதமாய் நன்னாரி கலந்த எலுமிச்சை சாறை அருந்தியவன் மருதநாயகியிடம் பேச்சு கொடுத்தபடியே ஆதிராவுக்காகக் காத்திருந்தான்.
“என்ன பேராண்டி திடீர் வருகை?”
“உங்க பேத்தி ஒரு கிப்ட் வாங்கணும். அதைப் பத்தி பேசிட்டுப் போகலாம்னு வந்தேன் ஆச்சி.”
“போனுல பேசிருக்கலாமேய்யா? இந்த வெயில்ல இங்க வரைக்கும் கார் ஓட்டிக்கிட்டு வரனுமா?”
“இதை நேர்ல பேசுனாதான் சரியா இருக்கும் ஆச்சி”
“என்னமோ பொடி வச்சு பேசுற. இந்தக் காலத்துப் பசங்களுக்கு வருங்காலப் பொண்டாட்டி மேல எவ்ளோ பிரியம்? எல்லாரும் எங்க வீட்டு பொலிகாளை மாதிரி இருக்கமாட்டாங்களே?’
புவனேந்திரனிடம் பேசும் சாக்கில் கர்ணனுக்கு ஒரு குட்டு! நல்லவேளையாக அவனும் மிருணாளினியும் காலையிலேயே சென்னைக்குப் பேருந்து ஏறிவிட்டார்கள்.
இல்லையென்றால் இந்நேரம் பாட்டிக்கும் பேரனுக்கும் போர்க்களமே நடந்திருக்கும்.
மருதநாயகி அதைச் சொல்ல புவனேந்திரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அவருடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே ஆதிரா வந்துவிட்டாள்.
“வாங்க புவன்”
வாயிலில் செருப்பைக் கழற்றிவிட்டு வியர்க்க விறுவிறுக்க வந்தவள் புன்னகைக்க அவனிடமும் புன்னகை விரிந்தது.
“உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஆதி”
அன்னை, தந்தை, ஆச்சியின் முன்னிலையில் அவன் இவ்வாறு சொல்லவும் ஆதிராவுக்குச் சிறியதாய் சங்கடம்.
கண்களை உருட்டி அன்னையைப் பார்த்தாள்.
‘போய் பேசு’ என மாடியைக் காட்டினார் அவர்.
அங்கே வராண்டா உண்டு. அதில் மூங்கில் நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். காற்றோட்டமாக அங்கே அமர்வது மருதநாயகியின் வழக்கம்.
புவனேந்திரனை அங்கே அழைத்துச் சென்றாள் அவள்.
அமரும்போதே ஒற்றையாய் பின் செய்யப்பட்ட முந்தானையை கொஞ்சமாய் எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள்.
“சொல்லுங்க” என்றவளின் இந்தக் கோலம் எப்போதுமே அவனது மனதை மயக்க மறப்பதில்லை. இப்போதும் அவனது பார்வையில் மாற்றம் தெரிய ஆதிரா அவனது புஜத்தைத் தொட்டு ‘என்ன’ என்பது போல விழிகளை விரித்தாள்.
“நீ புடவை முந்தானையை இப்பிடி போடுறப்ப ரொம்ப அழகு”
வந்த விசயத்தை மறந்து போயின புவனேந்திரனின் மூளையும் இதயமும்.
“இதைச் சொல்லவா அம்பாசமுத்துக்கு வந்திங்க?”
“ஏன் வரக்கூடாதா?”
“வரக்கூடாதுனு இல்ல. ஆனா இதுக்காக வந்திங்கனு சொன்னா அதை நான் நம்பமாட்டேன். சொல்லுங்க. என்ன விசயம்?”
புவனேந்திரன் பெருமூச்சு விட்டான்.
இந்நேரம் அவனது மனம் இரு கோணங்களில் யோசித்தது. தனது பேச்சை ஆதிரா புரிந்துகொள்வாள் என்பது முதல் கோணம். ஒருவேளை மதுமதியின் பேச்சைக் கேட்டுக் கண்டிப்பதாக ஆதிரா எண்ணிக்கொண்டால் தவறாகிவிடுமே என்பது இரண்டாம் கோணம்.
“உஃப்” தலையை உலுக்கியவன் ஆதிராவின் கையை எடுத்துத் தனது கைகளுக்குள் பொதிந்துகொண்டான்.
“மது எனக்குக் கால் பண்ணியிருந்தா ஆதி”
ஆதிராவின் முகத்திலிருந்த சிரிப்பு கொஞ்சமாய் தொலைந்த உணர்வு! அவளது மெத்தென்ற கை இறுகியதைத் தனது கைகளுக்குள் உணர்ந்தான்.
“ரிலாக்ஸ்! எதுக்கு இவ்ளோ டென்சன்?” என்று மென்மையாய்ச் சொன்னவன் அவளது கரத்தை எடுத்து வருடிக்கொடுக்கவும் ஆதிராவின் இறுக்கம் உடைந்தது. மெல்ல இளகிப்போனாள் அவள்.
“பவி கிட்ட அவ புராஜெக்ட் பத்தி மறைச்சிருப்பா போல. அவர் திட்டியிருக்கலாம். அந்தக் கோவத்துல எனக்குக் கால் பண்ணிருக்கா. நீ அவர் கிட்ட அவ என்னை அப்ரோச் பண்ண முயற்சி பண்ணுறதா சொன்னியா?”
“ஆமா! அன்னைக்கு நீங்க போனு சொல்லியும் அவ போகாம அங்கயே உக்கார்ந்திருந்ததைப் பாத்தப்ப எனக்கு அப்பிடித்தான் தோணுச்சு. எனக்கு உங்க மேல சந்தேகம் இல்ல புவன். ஆனா அவங்க வீட்டாளுங்களுக்கு அவ செய்யுறதை யாராச்சும் சொல்லணும்ல. பவியண்ணா காதுல அவளைப் பத்தி போட்டு வச்சேன். அவளை நினைச்சா எனக்குள்ள சஞ்சலம் வருது புவன். நானும் சராசரி பொண்ணுதானே?”
புவனேந்திரனுக்கும் அவளின் மனநிலை புரிந்தது. தன்னை அவள் சந்தேகிக்கவில்லை என்பதில் அவனுக்கும் உவகையே!
அதை மறைக்காமல் முகத்தில் காட்டியவன் “உனக்கு எந்த உறுத்தலும் வரக்கூடாதுனு நீ யோசிக்குறது தப்பில்ல. ஆனா உன்னை உறுத்துற அளவுக்கு அவ எனக்கு முக்கியமானவ இல்லனு நீ புரிஞ்சிக்கணும் ஆதி. அவ எனக்குச் சம்பந்தமில்லாதவ. யாரோ ஒருத்தியா தான் நான் அவளைப் பாக்குறேன். அவளுக்குக் கல்யாணம் ஆனாலும், டிவோர்ஸ் ஆனாலும் எனக்குக் கவலை இல்ல. அவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பவியோட முகத்துக்காக அந்தக் கல்யாணத்துக்குப் போக கூட நான் ரெடி. இவ்ளோ தான் அவ எனக்கு. இன்னொன்னு சொல்லட்டுமா? இவ்ளோ விளக்கம் அவளைப் பத்தி சொல்லுற அளவுக்குக் கூட என் வாழ்க்கைல அவளுக்கு முக்கியத்துவம் இல்ல. ஆனா உனக்கு இந்த விசயத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்குல்ல?”
‘ஆம்’ என்பது போல ஆடியது ஆதிராவின் சிரம்.
“நான் சொல்லுறது உனக்குப் புரியுதுல்ல?”
இதற்கும் தலையாட்டல்தான்.
“இனிமே அவளை நினைச்சு நீ சஞ்சலப்படக்கூடாது. இந்த விளக்கத்துக்கு அப்புறம் அதுக்கான அவசியம் உனக்கு வராதுனு நம்புறேன். என் நம்பிக்கைய காப்பாத்துவல்ல ஆதி?”
“எப்பவுமே புவன்”
கண்ணிமைகள் படபடக்க காதிலிருந்த குட்டி ஜிமிக்கிகள் ஆட அவள் சொன்னபோது புவனேந்திரனுக்கும் விளக்கம் சொல்லும் மனநிலை மாறிப்போனது.
‘இது ரசனைக்கான நேரம்’ அவனது மனசாட்சி எஃப்.எம் ரேடியோ அறிவிப்பாளினி போல சொல்ல தனது கைகளுக்குள் பொதிந்திருந்த ஆதிராவின் கரத்தில் முத்தமிட்டான் புவனேந்திரன் மென்மையாக.

அவனது உதடுகளின் ஸ்பரிசமும், மீசையின் குறுகுறுப்பும் மெல்லிய சிலிர்ப்பை ஆதிராவுக்குள் இழையோடச் செய்ய பெண்ணவளின் கண்களுக்குள் குட்டி குட்டியாய் நட்சத்திரங்கள் மின்னின!
“என்ன இது?” வார்த்தைகள் கொஞ்சம் தடுமாறின.
“இது ஒரு புது ஆரம்பம்னு நினைச்சுக்க” என்றவன் மீண்டும் அழுத்தமாய் முத்தமிட்டான், ‘நமக்குள் இதெல்லாம் இனி அவசியன்ம்’ என்ற அர்த்தத்தோடு.
அர்த்தம் உணர்ந்தவளின் கன்னங்கள் நாணத்தின் வசிப்பிடமாய் மாறிப்போக இமைகள் அனிச்சையாய்த் தாழ்ந்தன. இதழ்கள் முறுவலைப் பூசிக்கொள்ள நிமிர்வான ஆதிரா மெல்ல மெல்ல மறைந்து புவனேந்திரனின் ஆதியாக மாறிப்போனாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

