“சமீப நாட்களா நான் ‘ரெட்ரோஆக்டிவ் ஜெலஜி’க்குள்ள மாட்டிக்கிட்டதா ஃபீல் பண்ணுறேன். அதாவது முடிஞ்சு போன ஒரு விசயத்தை இப்ப நினைச்சு பொறாமைப்படுறது. புவனோட வாழ்க்கைல மதுமதியோட சேப்டர் எப்பவோ குளோஸ் ஆகிடுச்சு. அவங்க ஏன் பிரிஞ்சாங்கனு தெரியும். இனி சேரவே போறதில்லனு கூட தெரியும். ஆனாலும் அவ மேல அவர் வச்ச நேசம் அவ்ளோ ஈசியா மறக்க முடியாததா இருக்குமோங்கிற எண்ணம் அடிக்கடி வந்துட்டுப் போகுது. இந்தப் பொறாமை என் மனசுல இருக்குற தன்னம்பிக்கைக்கும் எங்க உறவு மேல எனக்கு இருக்குற உரிமையுணர்வுக்கும் இடையில இருக்குற சின்ன இடைவெளிதான். சீக்கிரமா இந்த இடைவெளிய அடைச்சிட்டா நானும் ‘ரெட்ரோஆக்டிவ் ஜெலசி’ல இருந்து விடுபடுவேன்னு நம்புறேன்”
-ஆதிரா
ஆதிராவின் கரத்தில் மோதிரத்தைப் போட்டுவிட்டான் புவனேந்திரன்.
அடுத்து அவளது முறை. நாணத்தோடு அவனைப் பார்த்தவள் “கையைக் குடுங்க” என்று கேட்க

“குடுக்குறேன்! ஆனா எப்பவும் இந்தக் கையை விட்டுட மாட்டல்ல?” எனச் சீண்டிவிட்டுக் கையை நீட்டினான் அவன்.
அவனது விரலில் ஜம்மென்று போய் அமர்ந்தது ஆதிரா போட்டுவிட்ட மோதிரம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அடுத்த நொடி பாப்பர்ஸ் வெடித்து கலர் பேப்பர்கள் சிதறின. அதைச் செய்தவள் மிருணாளினி. அவளருகே நின்று கொண்டிருந்த கர்ணன் பாப்பர்ஸ் வெடித்ததில் திடுக்கிட்டுப் போனான்.
“ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல! குழந்தை இருக்கு. பாப்பர்ஸ் வெடிக்குது இது”
அவன் முணுமுணுத்தது கேட்டுத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் மிருணாளினி.
“குழந்தை அங்க என்ஜாய் பண்ணுது பாப்பர்ஸை” என்று அவள் சுட்டிக்காட்டிய திசையில் கதிர்காமன் சிரித்தபடி மகிழ்மாறனின் தோளில் சாய்ந்திருந்தான்.
அழகாக, மனம் நிறைந்த தருணங்களுடன் புவனேந்திரன் ஆதிராவின் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவுற்றது.
சொந்தக்காரர்களால் என்.எஸ்.என் ஹோட்டல் கார்டனியாவின் பாங்விட் ஹாலானது நிரம்பியிருந்தது. வினாயகம் நெருங்கிய உறவினர், தூரத்து உறவினர் அனைவரையும் அழைத்திருந்தார் அந்த நிச்சயத்துக்கு.
காரணத்தோடுதான் அவர் அழைத்திருந்தார். நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு வைக்கும்போதே “வைத்தியநாதன் குடும்பத்துச் சம்பந்தம் தவிர்க்க முடியாத காரணத்தால முறிஞ்சு போச்சு. நம்ம நரசிம்மன் மகனுக்கும் ஆதிராவுக்கும் பேசி முடிச்சிருக்கோம். நிச்சயதார்த்தத்துக்குக் கட்டாயம் குடும்பத்தோட வரணும்” என்று பேசிவிட்டு வந்தார் ஒவ்வொருவர் வீட்டிலும்.
திருமணம் அளவுக்கு நிச்சயதார்த்தத்துக்கே ஆட்கள் வந்ததில் சிவகாமிக்கும் நரசிம்மனுக்கும் கூட அத்துணை மகிழ்ச்சி.
மலர்விழியின் பெற்றோர் சிகாமணியும் குழலியும் ஜோடியாய் நின்ற புவனேந்திரனுக்கும் ஆதிராவுக்கும் ஆசியாய் மலர் தூவி மொய் கவரைக் கொடுத்தார்கள்.
ஆதிராவுக்கு யார் காலிலும் விழுவது பிடிக்காது என்பதால் காலில் விழுந்து ஆசி வாங்குவதைப் புவனேந்திரனும் தவிர்த்தான் எனலாம்.
ஆதிராவுடன் அன்பாய்ப் பேசினார்கள் குழலியும் சிகாமணியும்.
“உன்னைப் பத்தி மலர் அடிக்கடி பேசுவா. நீயே புவன் தம்பிக்கு வீட்டுக்காரியா ஆகப்போறனதும் அவளுக்குச் சந்தோசம் தாங்கல” என்றார் குழலி.
கூடவே தங்கள் வீட்டுக்கு ஒரு முறை வந்து செல்லுமாறு அழைப்பும் விடுத்தார்.
“கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கு வந்தா போதும்னு நினைச்சுடாதல. அதுக்கு முன்னாடியே ஒரு தடவை வா. நம்ம தோட்டத்தைச் சுத்திப் பாக்கலாம்” சிகாமணியின் வெள்ளந்தி பேச்சு யாரை தான் மறுக்கவைக்கும்?
“கண்டிப்பா வர்றேன் சித்தப்பா. மதினி இன்னும் ரெண்டு நாள் இங்க இருப்பாங்க. அவங்க நான் மலர் மூனு பேரும் வர்றோம்” என்று சொல்லி அவரது மனதைக் குளிர வைத்தாள் ஆதிரா.
அவர்கள் மணமேடையிலிருந்து இறங்கியதும் புவனேந்திரனைப் பார்த்த ஆதிரா அவன் தன்னையே கண்ணெடுக்காமல் பார்ப்பதை உணர்ந்து அவனது புஜத்தைப் பற்றி அழுத்தினாள்.
“எல்லாரும் நம்மளைப் பாக்குறாங்க”
“ஆனா நான் உன்னைத் தவிர யாரையும் பாக்கல”
“அதனாலதான் சொல்லுறேன்! மத்தவங்களையும் கொஞ்சம் கவனிங்க”
“அதெல்லாம் மாறனும் மலரும் பாத்துப்பாங்க.”
“புவன்”
மெல்லிய சிரிப்போடு இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எவ்வித இடையூறுமின்றி இனிமையான தருணங்களோடு நிச்சயதார்த்தமும் நிறைவடைந்தது.
சிகாமணி, குழலியிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற மறுநாள் மிருணாளினியைத் தன்னோடு அழைத்துக்கொண்டு மலர்விழியின் வீட்டுக்குக் கிளம்பினாள் ஆதிரா.
மலர்விழியை அழைக்க அவளது கார் நெல்லை குலவணிகர்புரத்தில் இருக்கும் ‘என்.எஸ்.என் நிவாசம்’ நோக்கி பயணித்தது.
போகிற வழியில் ஆதிரா மிருணாளினியிடம் திருமண வாழ்க்கை எப்படி போகிறதென வினவினாள்.
“நீங்க கோவப்படமாட்டிங்கனா உண்மைய சொல்லுவேன்” என்றாள் அவள்.
“உங்க கிட்ட நான் எப்பிடி கோவப்படுவேன் மதினி?”
“ப்ராமிஸ்?”
ஆதிரா சத்தியம் செய்ததும் “எனக்கு வீட்டுல இருக்குற ஃபீல் வரல. ஏதோ காட்டுக்குள்ள இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது. உங்கண்ணன் சரியான மலைக்குரங்கு. சில நேரம் கடுகடுனு கடுவன் பூனை மாதிரி இருக்குறார். எனக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்கனு கேக்குறப்ப சோம்பேறித்தனம் வந்து தேவாங்கா மாறிடுவார். மனுசன் கூட வாழுற ஃபீல் வரல எனக்கு” என்று கடுகடுத்தாள் மிருணாளினி.
ஆதிரா அனைத்தையும் கேட்டுவிட்டு “எனக்கு அடுத்து அவனைச் சரியா கணிச்சது நீங்கதான் மதினி” என்று சொல்ல இரு பெண்களும் ஹைஃபை கொடுத்துக்கொண்டார்கள்.

“ஸ்வேதாக்கா அவனுக்குச் செல்லம் குடுப்பா ஓவரா. அவங்க ரெண்டு பேரும் ஒரே கேங்க். நான் மட்டும் தனியாளா நிப்பேன்”
“இனிமே நான் துணைக்கு இருப்பேன்”
இந்தக் காலத்துப் பெண்கள் நாத்தனார் உறவை வைத்து வீட்டுக்கு வருகிற பெண்ணைப் பந்தாட விரும்புவதில்லை. சுஜாதா போல் ஏதோ ஒன்றிரண்டு பெண்கள் பொறாமையால் செய்யும் அற்ப காரியங்களை அனைத்துப் பெண்களும் செய்வதில்லையே!
கார் என்.எஸ்.என் நிவாசத்தை அடைந்ததும் அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தார்கள் மலர்விழியும் கதிர்காமனும்.
மருமகளாகப் போகிறவள் வீட்டுக்கு வரப்போகிற மகிழ்ச்சியிலிருந்த சிவகாமி ஆதிராவும் மிருணாளினியும் வந்ததும் சாப்பிட அழைத்துப் போனார்.
“சாப்பிட்டுட்டுத்தான் வந்தோம் அத்தை” என்றவளையும் மிருணாளினியையும் உணவு மேஜையில் அமர்த்திவிட்டார் அவர்.
“இங்க லைட்டா சாப்பிட்டா உன் வெயிட் ஒன்னும் அதிகமாகிடாது” என மிருணாளினியிடம் கேலியாய்ச் சொல்ல
“அதுக்கில்ல பெரியம்மா…” என இழுத்தவள் பிறகு தட்டில் மெத்தென்று வைக்கப்பட்ட ஆப்பத்தையும் கூடவே கிண்ணத்தில் ஏலக்காய் மணக்க வைக்கப்பட்ட தேங்காய்பாலையும் கண்ட பிறகு மறுக்கவில்லை.
ஆதிரா சாப்பாட்டினிடையே “புவன் எங்க அத்தை?” என வினவ
“அவன் இன்னைக்குச் சீக்கிரமா ஹோட்டலுக்குப் போயிட்டான் ஆதி. ஹோட்டலுக்காக ஏதோ சாப்ட்வேர் டிசைன் பண்ணுறாங்க. அதை டிசைன் பண்ணுறவங்க ஹோட்டலுக்கு வர்றாங்களாம்.” என்றார் அவர்.
ஆதிராவின் மனதில் மெல்லிய சுணக்கம். கடந்த முறை அவள் ஹோட்டலுக்குச் சென்றபோது அங்கே இருந்தவள் மதுமதி. அவள்தானே மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் புவனேந்திரனைச் சந்தித்தாள்.
அப்படி என்றால் இப்போதும்? இந்த எண்ணம் உதயமானதுமே மெத்தென்று பூவாய் இருந்த ஆப்பம் விள்ள முடியாமல் கல்லாய்ப் போனது போன்ற பிரமை அவளுக்கு.
தேங்காய்ப்பாலின் தித்திப்பு பாகற்காயாய் கசந்து வழிந்தது நாவில்.
இனி எங்கிருந்து சாப்பிடுவது? ஆனால் சாப்பாட்டை வீணாக்குவது பிடிக்காது என்பதால் சிரமப்பட்டு விழுங்கிவைத்தாள் அவள்.
சாப்பிட்டதும் கதிர்காமனோடு சேர்த்து மலர்விழியையும் அழைத்துக்கொண்டு அவளது கார் நதியூரை நோக்கி சென்றது.
“நீ குழந்தைய வச்சுக்க ஆதி. நான் காரை ட்ரைவ் பண்ணுறேன்” என்று மிருணாளினி சொல்லிவிட்டதால் மலர்விழியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டவள் அவளை முன்னிருக்கைக்கு அனுப்பிவிட்டுக் கதிர்காமனோடு பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
அவனோடு விளையாடும்போதே “ஏன் மலர் உன்னோட பெரியப்பா பொண்ணு மேல புவனுக்கு ரொம்ப லவ் இருந்துச்சோ?” என மெதுவாக விசாரித்தாள்.

முன்னிருக்கையில் மிருணாளினிடம் தங்களது வீட்டுத்தோட்டத்தைப் பற்றி பேசியபடி அமர்ந்திருந்த மலர்விழிக்கு ஆதிராவின் இக்கேள்வி சின்ன திடுக்கிடலை உருவாக்கியது. சட்டெனத் திரும்பிப் பார்த்தவள் “ஏன்கா திடீர்னு இந்தக் கேள்வி?” என வினவினாள்.
“அதில்ல! அவளை அகமதாபாத்ல இருந்து இங்க அழைச்சிட்டு வர புவன் ரொம்ப முனைப்பு காட்டுனார்னு கேள்விப்பட்டேன்”
“அதெல்லாம் அவ மேல இருந்த இரக்கத்துல செஞ்சதுக்கா. அவர் அவளை நேசிச்ச அளவுக்கு ஒரு சதவிகிதம் கூட அவரை மதுமதி நேசிக்கல. அந்த விவகாரம் தெரிஞ்சதும் புவன் மாமா ஒதுங்கிட்டார். அவ தான் என்னை வச்சு நம்ம வீட்டுக்குள்ள வர பாத்தா. பட் மகிழ் மாமா சரியான நேரத்துல எனக்குக் குடுத்த அறிவுரையால அவ வலையில நானும் விழல. புவன் மாமாவும் விழல”
“ஓஹ்!”
இதோடு ஆதிரா அமைதியாகிவிட்டாள். அடுத்தக் கேள்வி மிருணாளினியிடம் பிறந்தது.
“உன் ஃப்ரெண்ட் ஈஸ்வரி, அந்தப் பொண்ணு ரொம்ப அழகோ?”
‘அடுத்து நீயா’ என்ற ரீதியில் மிருணாளினியைப் பார்த்தாள் மலர்விழி.
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் மலர்” என அவள் சமாளிக்கப் பார்க்க
“மூக்கும் முழியுமா கோவில் சிலை மாதிரி அழகு மதினி. பேச்சும் படபடனு இருக்கும். எனக்கு எல்லா நேரத்துலயும் துணையா நின்னவ ஈஸ்வரி” என்றாள் மலர்விழி நெகிழ்ச்சியோடு.
இப்போது ஆதிரா குறும்புச்சிரிப்போடு ரியர்வியூ மிரரின் வழியே மிருணாளினியைப் பார்த்தாள்.
அவள் முகத்தில் தெரிந்தது பொறாமையில்லை. சின்னதாய் ஒரு பாதுகாப்பின்மை. இதற்கு காரணகர்த்தா அண்ணனாக மட்டுமே இருக்க முடியும்.
ஆதிரா அவளை அமைதிபடுத்தும் முன்னரே மலர்விழி அவளது தோளை அழுத்தினாள்.
“ஆனா ஈசுக்கும் கர்ணா அண்ணனுக்கும் பொருத்தமேயில்ல. அவளுக்குப் பணக்காரங்கனாலே அலர்ஜி. அதனாலதான் அவங்க சம்பந்தம் தட்டிப்போச்சு. இன்னொரு விசயம் சொல்லட்டுமா? கர்ணா அண்ணாவும் ஈசும் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்கயும் சந்திக்கல”
“எதே? சந்திக்காமலே அந்தத் தாடிக்காரன் காவியக்காதல் படம் ஓட்டுனானா?” மிருணாளினி கொதிக்க மற்ற இரு பெண்களும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள்.
“சிரிக்காதிங்க! ஹீ இஸ் ஈட்டிங் மை ப்ரெய்ன். நான் கூட அவன் ஓட்டுன படத்தை வச்சு அந்தப் பொண்ணு ஈஸ்வரி மேல செம கடுப்பா இருந்தேன். ப்ச்! பிரச்சனை அவன் கிட்ட தான். இன்னைக்கு வீட்டுக்குப் போய் அவன் மண்டைய பொளக்குறேன்”
“நம்ம வீட்டு பொறவாசல்ல தேங்கா உறிக்கிற கொண்டி இருக்கு மதினி. அதை வச்சு பொளந்து விடுங்க”
ஆதிரா பாயிண்ட் எடுத்துக் கொடுத்தாள் அவளுக்கு.
சிரிப்பும் பேச்சுமாக அவர்கள் நதியூரை அடைந்தபோது மலர்விழியின் வீட்டின் முன்னே கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது.
“அக்கா நீங்க வீட்டு முன்னாடி இருக்குற வேப்பமரத்தடியில காரை பார்க் பண்ணிடுங்க. அந்தக் கார் பவி அண்ணாவோடதுதான்” என்றாள் மலர்விழி.
காரை நிறுத்திவிட்டு மூன்று பெண்களும் இறங்கியதைச் சிகாமணி வீட்டுக்குள் இருந்தே பார்த்துவிட்டார்.
“குழலி! புள்ளைங்க வருது பாரு” என்று உற்சாகமாய்க் குரல் கொடுத்தவர் வாயிலுக்கு ஓடோடி வந்தார்.
“வாங்க வாங்க கதிர் குட்டி” என்று பேரனை ஆதிராவிடமிருந்து வாங்கி கொண்டார் அவர்.
“உள்ள வாங்கம்மா மூனு பேரும்! நம்ம பவி வந்திருக்கான். தோட்டம் பத்தி ஏதோ விவரம் வேணும்னு சொன்னான். எனக்கென்ன தெரியும்? அதான் நம்ம ஈஸ்வரிய கூப்பிட்டு விவரம் குடுக்க சொன்னேன்”
ஈஸ்வரி என்ற பெயர் மிருணாளினியையும், பவிதரனின் பெயர் ஆதிராவையும் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.
குழலி புன்னகையோடு வந்தவர் தன்னுடன் பவிதரனையும் ஈஸ்வரியையும் அழைத்தே வந்தார்.
“ஏ மலரு! இவங்கதான் புவன் சாரோட மேமா?” ஆச்சரியமாய்க் கேட்டபடி வந்த ஈஸ்வரியை நேரில் சந்தித்ததும் மிருணாளினிக்கு அவளை அறியாமல் முறுவல் பூத்தது.
முகத்தில் தெரிந்த துறுதுறு உணர்வும், முட்டைக்கண்ணுமாய் அழகிதான் இவள் என்று நினைத்துக்கொண்டவளிடம் அடுத்து ஈஸ்வரியின் பார்வை பாய்ந்தது.
“இவங்கதான் நீ சொன்ன புதுப்பொண்ணு! கரெக்டா?” என்றவள் மிருணாளினியிடம் சினேகப்புன்னகை வீசினாள்.
“நான் ஈஸ்வரி! மலரோட ஃப்ரெண்ட்”
“இந்தம்மா தான் நதியூரோட கலெக்டர்! தெரிஞ்சிக்கோங்கம்மா” எனப் பவிதரன் கிண்டல் செய்ய
“என்னைக் கிண்டல் பண்ணனும்னா உமக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி வரும்ல” என அவனை ஓரக்கண்ணால் முறைத்தாள் அவள்.
அனைவரும் அமர, குழலி கொடுத்த காபியோடு ஆதிரா அவரது குட்டித் தோட்டத்தைப் பார்க்க சென்றுவிட்டாள்.
குழலியும் அவளோடு வந்தார்.
“மருதாணி பறிச்சுத் தரட்டுமா ஆதிம்மா?” என அவர் கேட்க
“நான் வந்ததே அதுக்காகத்தான் சித்தி” என்றவள் “அதெல்லாம் பொறுமையா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பறிக்கலாம். இப்ப உக்காருங்க” என அவரைத் திண்ணையில் அமரச் சொல்லி தானும் அமர்ந்தாள்.
தன்னையே குழலி வைத்தக் கண் வாங்காமல் பார்க்கவும் “என்ன சித்தி?” என அவள் வினவ
“நீ தான் குடும்பத்தொழிலை தலமையேத்து நடத்துறதா மலர் சொன்னாம்மா. அவ்ளோ பெரிய பொறுப்புல இருந்தாலும், நீ உறவுகளை மதிக்குற. ஆச்சரியமா இருக்கு எனக்கு” என்றார் அவர்.
மதுமதி தங்களை வேலைக்காரர்கள் போல இகழ்ச்சியாய்ப் பார்த்த தருணங்கள் எல்லாம் குழலியின் நினைவிலாடின.
பணம் படைத்த அனைவருக்கும் செருக்கு இருப்பதில்லை. ஒருசிலர் மட்டுமே பணத்தை வைத்து மனிதர்களை எடை போடுவார்கள். அந்த ஒரு சிலருக்காக மொத்த பணக்கார வர்க்கத்தையே ஒதுக்கவேண்டியதில்லை என்ற ஞானத்தைச் சம்பந்தி குடும்பத்தின் வாயிலாகப் பெற்றவர் அல்லவா!

ஆதிராவைப் புரிந்துகொள்ள அவருக்கு அதிகநேரம் எடுக்கவில்லை. நிச்சயதார்த்தத்தில் புவனேந்திரனின் முகத்துக்காக அவள் தங்களிடம் அன்பாய்ப் பேசியிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் இப்போதுதான் அவன் இல்லையே! ஆனாலும் அந்த அன்பும் மதிப்பும் தங்கள் மீது இன்னும் அவளுக்கு இருக்கிறது. அப்படி என்றால் இந்தப் பெண் தங்களது சம்பந்தி குடும்பத்திற்கு தகுதியானவளே என்ற எண்ணம் அவரது மனதில் வலுவானது.
“புவன் தம்பி சொக்கத்தங்கம். எங்க மருமனோட அண்ணன்ங்கிறதால மட்டும் சொல்லல கண்ணு. யாருக்கும் கெட்டது நினைக்காத மனுசன். இப்பவும் பவி கூட அவரால சகஜமா தோழமையோட பேச முடியுது. காரணம் அவரோட நல்ல மனசு. எங்க குடும்பத்துல பிறந்தவளுக்கு அவரோட அன்புக்கு உரிமைக்காரியாகுற பாக்கியம் கிடைக்கல. ஏன்னா அவருக்கானவ நீதான். எல்லா விதத்துலயும் அவருக்குப் பொருத்தமானவ நீ.”
சொன்னதோடு மட்டுமன்றி முகத்தை வருடி நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார் குழலி.
அச்சமயத்தில் அங்கே வந்தான் பவிதரன்.
“டாக்குமெண்ட் விவரத்தை எழுதிட்டேன் சித்தி. சாயந்திரமா வந்து மத்ததைப் பேசுறேன். இப்ப நான் கிளம்பணும்” என்றவன் “லேடீஸ் டே அவுட் மாதிரி வந்திருக்கிங்க. என்ஜாய் பண்ணிட்டுப் போங்கம்மா.” என்றான் ஆதிராவிடம் புன்னகையோடு.
“கண்டிப்பா அண்ணா” என்றவள் “நான் அண்ணாவ கார் வரைக்கும் வழியனுப்பிட்டு வந்துடுறேன் சித்தி” என்றபடி எழுந்தாள்.
பவிதரனும் அவளிடம் மில் பற்றி விசாரித்தபடி நடந்து காரை அடைந்தவன் “சொல்லும்மா! என் கிட்ட என்ன பேசணும்?” எனக் கேட்க அவளுக்கோ ஆச்சரியம்!
“எப்பிடிண்ணா கண்டுபிடிச்சிங்க?” என ஆச்சரியத்தை விழிகளில் அவள் காட்டவும் சிரித்தான் அவன்.

“சொல்லு”
“புவனோட ஹோட்டலுக்காகச் சாப்ட்வேர் டிசைன் பண்ணுற டீம்ல உங்க தங்கச்சி இருக்குறது தெரியுமா?”
பவிதரனின் நெற்றியில் யோசனை சுருக்கங்கள்.
“இது எப்ப நடந்துச்சு?” எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன் “உனக்கு அவ இருக்குறது உறுத்தலா தோணுதாம்மா?” என்றான்.
“இல்லண்ணா! இதுல உறுத்தலுக்கு இடமில்ல. ஆனா அவங்க புவனை மறுபடி அப்ரோச் பண்ணுவாங்களோங்கிற பயம் எனக்குள்ள இருக்கு. சாரி! என்னடா இவ நம்ம தங்கச்சிய தப்பா பேசுறாளேனு நினைச்சுக்காதிங்க. நான் ஹோட்டலுக்கு ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ண போனப்ப அவங்களை புவனோட ஆபிஸ் ரூம்ல பாத்தேன். அவரோட பார்வைல தெரிஞ்ச விலகலைப் புரிஞ்சிக்காம அங்கயே இருந்தாங்க. அப்புறமா பி.ஏவ வரவழைச்சு புவன் அவங்களை அனுப்பிவச்சார். அவங்க டிவோர்சினு கேள்விப்பட்டேன். ஏன் அவங்களுக்கு ஏத்த ஒருத்தருக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது? முதல் தடவை அவங்க மேரேஜ் பண்ணிக்கிட்ட நபர் சரியானவர் இல்லனு மலர் சொன்னா. மதுமதிக்கும் அவங்க மனசைப் புரிஞ்சிக்கிட்ட ஒருத்தரோட நல்லபடியா வாழ உரிமை இருக்குல்ல அண்ணா?”
பவிதரனின் முகத்தில் மெல்லிய கவலை, குடும்ப கௌரவத்தைக் காக்கவென மதுமதியைப் பணக்காரக் குடும்பம் என்ற ஒரே காரணத்துக்காகப் பெண்பித்தன் முரளியின் தலையில் கட்டிய தந்தை மாணிக்கவேலுவை ஆயிரமாவது முறை மானசீகமாகக் கடிந்துகொண்டான் அவன்.
‘இதோ இந்தப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை கூட அவருக்கு இல்லையே!’
“சரிம்மா! நான் மதுமதியோட வாழ்க்கைய சரி பண்ணுறதுக்கான வேலைய பாக்குறேன். அவளால புவனுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் என் கிட்ட நீ தாராளமா சொல்லலாம். இந்த சாப்ட்வேர் விவகாரம் எனக்குத் தெரியாது. இதைப் பத்தியும் நான் அவ கிட்ட விசாரிக்குறேன்”
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா”
“தேங்க்ஸ் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை ஆதிரா. என் தங்கச்சியால புவன் நிறைய அனுபவிச்சிட்டார். அவரைச் சந்தோசமா பாத்துக்கம்மா”
பவிதரன் காரிலேறி அமர்ந்து அவனது கார் அங்கிருந்து கிளம்பும் வரை மரத்தடியிலேயே நின்று கொண்டிருந்தாள் ஆதிரா. மனதிலிருந்த குட்டி பாரம் அகன்ற உணர்வு அவளுக்கு!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

