“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? வேலை, வீட்டு வேலை, குழந்தைகளைப் பாத்துக்குறது, வயசானவங்களைப் பாத்துக்குறதுனு ஏகப்பட்ட பொறுப்பை மொத்தமா மனைவிங்கிற ஒரு பொண்ணு தலை மேல சுமத்துறதால அவளுக்குத் தொடர்ச்சியான மன அழுத்தம் உருவாகுமாம். இதை அவளோட மூளை ‘ஏதோ ஆபத்து’ங்கிற மாதிரிதான் புரிஞ்சிக்குமாம். அவ இதெல்லாம் செஞ்சாதான் குடும்பத்துக்கு ஏத்தவங்கிற அழுத்தத்தைச் சமுதாயமும் சேர்த்து அவளுக்குக் குடுக்குறதால உளவியல்ரீதியான அழுத்தமும் அவளைத் தாக்குது. இதனால அவளோட சிம்பேதட்டிக் நெர்வஸ் சிஸ்டம் எப்பவுமே ‘டிஃபென்ஸ் மோட் அல்லது ஹைபர் விஜிலன்ஸ் மோட்’ல இருக்கும். இப்பிடி இருக்குற பெண்கள் யாரையும் நம்ப மாட்டாங்க. எந்த உறவு மேலயும் அவங்களுக்கு நம்பிக்கை வராது. வெளிப்பார்வைக்கு இயல்பா தெரிஞ்சாலும் அவங்களால முழு மனசோட யாரையும் நம்ப முடியாது. ஆனா அவங்களோட வாழ்க்கைத்துணையான ஆண் நினைச்சா அந்தப் பொண்ணுங்களோட ‘டிஃபென்ஸ் மோட்’ உடைஞ்சு அவங்களை இயல்பாக்கலாம். அதுக்கு அந்த ஆண் ‘நான் ஆம்பளை’ங்கிற ஈகோவ உடைச்சிட்டு அவளோட வேலைச்சுமை, உறவுகளைக் கட்டிக்காப்பாத்துற கலாச்சார சுமை, குழந்தைங்க வயசானவங்களைப் பராமரிக்கிற சமுதாயப்பொறுப்புச் சுமைய பகிர்ந்துக்கணும். அன்பார்சூனேட்லி இதைப் பகிர்ந்துக்குற ஆண் இந்த உலகத்துல பிறக்கலனுதான் நான் நினைக்குறேன் (அப்பாவும் அண்ணாவும் கூட இந்த இடத்துல தோத்துதான் போயிடுறாங்க)”
-ஆதிரா
சுஜாதா லாபியில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள். அவளது கணவரின் உறவுக்காரக் குடும்பமொன்று கேரளாவுக்குச் சுற்றுலா வந்திருந்தார்கள். அவர்கள் ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் மதியம் கேரளா செல்வதாக ஏற்பாடு.
வீட்டிற்கு வரச் சொல்லி சுஜாதா சொன்னபோது “இல்ல மதினி. என் பெரியம்மா வீட்டுக்குப் போயிட்டு அங்க இருந்து வர்கலா போகலாம்னு ப்ளான். உங்களுக்கும் அத்தைக்கும் வாங்குன திங்சை நீங்க ஹோட்டலுக்கு வந்து வாங்கிக்கிறிங்களா? தப்பா எடுத்துக்காதிங்க மதினி. என் பெரியம்மாக்கு உடம்பு முடியல. அங்க போறப்ப அப்பிடியே வெகேசனையும் முடிச்சிடலாம்னுதான் இவர் சொல்லியிருந்தார்” என்று சொல்லிவிட்டார் சுஜாதாவின் கணவருடைய ஒன்றுவிட்டத் தங்கை.
கணவன் வீட்டு உறவினர்! கூடவே சுஜாதாவிடம் அன்பும் உண்டு அந்தப் பெண்மணிக்கு. எனவே சுஜாதாவாலும் மறுக்க முடியவில்லை.
அந்தக் குடும்பத்தினர் என்.எஸ்.என் ஹோட்டல் கார்டனியாவில் தங்கியிருந்தார்கள். அவர்களைப் பார்க்க வந்த இடத்தில்தான் புவனேந்திரனையும் ஆதிராவையும் பார்த்துவிட்டாள் சுஜாதா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சும்மாவே ஆதிராவின் மீது அவளுக்கு அதிருப்தி. இதில் அவளது அத்தை மகன் உறவாக அறியப்பட்ட இளைஞன் அவளை ஹோட்டல் அறைக்குத் தூக்கிச் சென்றதைக் கண்ணால் பார்த்த பிற்பாடு சும்மாவா விடுவாள்?
ஆதிராவும் புவனேந்திரனும் வரும்வரை காத்திருக்கத் தீர்மானித்தாள்.
அதே நேரம் புவனேந்திரன் ஆதிராவின் கன்னத்தில் தட்டி அவளது மயக்கத்தைத் தெளிவிக்க முயன்று கொண்டிருந்தான். மகேஷ் தண்ணீருடன் வரவும் அதை வாங்கி ஆதிராவின் முகத்தில் தெளித்தான்.
தண்ணீரின் குளுமையில் மயக்கம் தெளிந்தவளுக்கு இன்னும் பதற்றம் தீரவில்லை. வேகமாக எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பரபரப்புடன் பார்த்தாள்.
“ரிலாக்ஸ்!”
“லிப்ட்… லிப்ட் என்னாச்சு?” பதறியவளின் கையைப் பற்றியவன்
“நாம ஹோட்டல் ரூம்ல இருக்குறோம் ஆதிரா. லிப்ட்ல சின்னதா பிரச்சனை. டெக்னீசியன் அதைச் சரி பண்ணுனதும் லிப்ட் ஒர்க் ஆகிடுச்சு. உனக்கு டென்சன்ல…” என்று அவளை அமைதிப்படுத்த முயலும்போதே
“க்ளாஸ்ட்ரோஃபோபியா” என்றாள் ஆதிரா.
சொன்னதோடு தலையைக் கவிழ்ந்து இரு கரங்களாலும் அதைத் தாங்கிக்கொண்டாள்.
புவனேந்திரனும் கேள்விப்பட்டிருக்கிறான் இதைப் பற்றி. இது ஒரு அதீத பயத்தின் வெளிப்பாடே தவிர நோய் அல்ல என்று அவனுக்கும் தெரியும்.
“ப்ச்! எல்லாம் சரியாகிடுச்சுல்ல. சியர் அப் லேடி”
அமைதியாய் அவன் சொல்லவும் தலையை உயர்த்தினாள்.
“எனக்கு ரொம்ப ஷேமா இருக்கு புவன்” மூக்கைச் சுருக்கி அவள் சொன்ன விதத்தில் இப்போது அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“இதுல என்ன இருக்கு? எல்லாருக்கும் ஏதோ ஒரு பயம் இருக்கும். உனக்கு சின்ன அடைப்பான இடத்தைப் பாத்து பயம். அவ்ளோதான். கரப்பான்பூச்சி. எலிய பாத்து பயப்படுற பொண்ணுங்களே ஷேமா ஃபீல் பண்ணுறதில்லையாம். நீ க்ளாஸ்ட்ரோக்ஃபோபியாக்கு ஏன் ஷேமா ஃபீல் பண்ணனும்?”
அவளது கையைப் பற்றி அவன் தட்டிக்கொடுத்துச் சொல்லவும் ஆதிராவும் தெளிவானாள்.
தனது பிரதியாய் அவன் கொடுத்த கோப்பினை எடுத்துக்கொண்டவள் புவனேந்திரனோடு அங்கிருந்து வெளியேறினாள்.
லாபிக்குச் சென்றார்கள் இருவரும்.
“காரை ட்ரைவ் பண்ணிடுவியா? இல்ல நான் வரட்டுமா?”
“தேங்க்ஸ்” குரல் கனிய அவள் சொல்லவும் அவனது நடை நின்றது.
“எதுக்கு?” என்றான் தலையை மட்டும் இலேசாகக் குனிந்து. அழகாய் சுழித்தப் புருவங்கள் அவனை அழகனாகக் காட்டின ஆதிராவுக்கு.
“நானே போயிடுவேன்” என்றவள் சொன்னபோதே “தனியா போய் முடிக்க வேண்டிய வேலைய எல்லாம் முடிச்சாச்சா தம்பி?” என்று குதர்க்கமாகக் கேட்டபடி வந்து நின்றாள் சுஜாதா.
அவளை அங்கே பார்த்ததில் முதலில் திகைத்தவள் ஆதிராவே!
“மதினி!”

ஆதிராவைத் தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சியாய்ப் பார்த்தாள் சுஜாதா.
அவள் அணிந்திருந்த ஷிபான் துப்பட்டாவிலிருந்த சுருக்கங்கள், முன் நெற்றியில் விழுந்திருந்த குழல் கற்றை, தோள்பட்டையைத் தொட்ட குர்தியின் கழுத்து என அனைத்தையும் பார்த்தவளின் புத்தி கேவலமாகவே சிந்தித்தது.
“அடிக்கடி தம்பிய பாக்க வருவியோ?” கேள்வியில் தொனித்த குதர்க்கத்தை ஆதிராவாலும் புவனேந்திரனாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
“இல்ல மதினி! இன்னைக்கு அக்ரிமெண்ட் சைன் பண்ண வந்தேன்”
“ஓஹ்! தனி ரூமுக்குள்ள போய் தான் சைன் பண்ணுவிங்களா?”
அப்பாவி போல பேசியவளின் மனதிலிருக்கும் தவறான எண்ணத்தை இன்னொரு பெண்ணாக ஆதிரா வெகு சீக்கிரம் புரிந்துகொண்டாள்.
“தனி ரூம்ல ரெண்டு பேர் இருந்தாலே இப்பிடி குதர்க்கமா கேள்வி கேக்கணும்னு உங்களுக்கு யார் சொல்லிக் குடுத்தாங்க?”
தனது கேள்விக்கு ஆதிரா தலை குனிவாள், பயப்படுவாள் என்று மனதுக்குள் இவ்வளவு நேரம் கற்பனை கோட்டை கட்டிய சுஜாதாவுக்கு அவளது கேள்வியில் மூக்குடையாதக் குறை.
அதுவே அவளை இன்னும் கீழே இறங்கி தவறான காரியங்களைச் செய்யத் தூண்டும் காரணியானது.
“நல்லா பேசுற. பேச்சு மாதிரியே செயல்லயும் துணிச்சல்தான். துணிச்சல்கார பொண்ணுங்க எல்லா எல்லையையும் சுலபத்துல தாண்டிடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப பாக்கவும் செய்யுறேன்”
சுஜாதாவின் பேச்சில் இலைமறைக்காயாக இருந்த அருவருப்பானக் குற்றச்சாட்டு ஆதிராவைச் சினங்கொள்ள வைத்தது. ஆனால் புவனேந்திரனுக்கு அதெல்லாம் புரியவில்லை.
அவன் முன்னிலையில் குரலை உயர்த்தினால் கட்டாயம் அவனது கண்டிப்புக்கு ஆளாவோமெனப் புரிந்து ஆதிரா அமைதியானாள்.
எனவே அமைதியாக “நான் கிளம்புறேன் புவன். ரொம்ப லேட் ஆச்சுனா அம்மா என்னவோ ஏதோனு பதறிடுவாங்க” என்றவள் சுஜாதாவிடம் திரும்பினாள்.
“நீங்க என் கூட வர்றிங்களா?” என அவளிடம் கேட்டாள்.
சுஜாதா நக்கலாகச் சிரித்தாள்.
“கண்டிப்பா நானும் என் குடும்பமும் ஒரு நாள் உன் வீட்டுக்கு வருவோம். அந்த நாள் இன்னைக்கு இல்ல. நீ கிளம்பு”
இதற்கு மேல் ஒரு வார்த்தை சுஜாதா நக்கலாகவோ, குதர்க்கமாகவோ பேசினால் கட்டாயம் ஆதிரா வெடித்துவிடுவாள். எனவே புவனேந்திரனிடம் விடைபெற்றாள் அவள்.
அவனும் கவனம் சொல்லி அவளை அனுப்பிவைத்துவிட்டுச் சுஜாதாவிடம் சொல்லிக்கொண்டு ஹோட்டலின் துறைகளில் வழக்கமாய் செய்யும் இன்ஸ்பெக்சனுக்குக் கிளம்பினான்.
சுஜாதா இருவரும் கிளம்பியதும் செய்த முதல் காரியமே கணவரின் உறவுக்காரர்களிடம் சொல்லிக்கொண்டு விக்கிரமசிங்கபுரத்துக்குக் கிளம்பியதுதான்.
போனவள் அலமேலுவிடம் ஹோட்டலில் தான் கண்ட அனைத்தையும் ஒருவரி விடாமல் சொல்லிவிட்டாள்.
“கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம என் கண்ணு முன்னாடி உங்க வருங்கால மருமகள் அவளோட சொந்தக்காரன் கூட கூத்தடிக்குறா. அவளை அவன் ஹோட்டல் ரூமுக்குள்ள தூக்கிட்டுப் போனதையும், திரும்பி வந்தப்ப அவ ட்ரஸ் கலைஞ்சிருந்ததையும் என் கண்ணால நான் பாத்தேன். இவளை மாதிரி ஒரு ஒழுக்கங்கெட்டவ நம்ம குடும்பத்துக்கு மருமகளா வரணுமா?”

அலமேலு பதறிப்போய் மகளின் வாயைப் பொத்தினார்.
“என்ன பேசுற நீ? ஒரு பொண்ணோட நடத்தையை எப்பவும் இன்னொரு பொண்ணு தப்பா பேசக்கூடாது சுஜாதா. அது பெரிய பாவம். அவங்க சொந்தக்காரங்கனு நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதானே? ஏன் குதர்க்கமா யோசிக்குற?”
அன்னையின் கையைத் தட்டிவிட்டாள் சுஜாதா.
“சொந்தக்காரங்களா இருந்தாலும் ஏதோ அவ கழுத்துல தாலி கட்டுனவன் மாதிரி அவன் ஹோட்டல் ரூமுக்குள்ள தூக்கிட்டுப் போகலாமா? அவ வீட்டோட அடங்கி கிடக்க மாட்டானு தலைபாடா அடிச்சேன். கேட்டிங்களா? இந்த மாதிரி பிசினஸ் பண்ணுறேன், வேலை பாக்குறேன்னு கிளம்புற பொம்பளைங்க எல்லாம் அவங்களோட முன்னேற்றத்துக்காக எதையும் செய்ய தயாரா இருப்பாங்கனு எனக்குத் தெரியும்மா. எப்ப ஒருத்தி குடும்பத்தைத் தாண்டி வேலை, தொழிலுக்கு முக்கியத்துவம் குடுக்குறாளோ அப்பவே அவ முழு சுயநலவாதியா ஆகிடுவாம்மா. அந்தச் சுயநலம் அவளை எதுவும் செய்ய வைக்கும்”
பேசி பேசி மனதை மாற்றுவது எல்லாம் ‘மேனிபுலேசனின்’ ஒரு வடிவம். சுஜாதா அதில் கைகாரி. ஒரு பெண்ணைத் தவறாகப் பேசாதே என்று தடுத்த அலமேலுவையே ஒரு கட்டத்தில் அமைதியாய் யோசிக்க வைத்துவிட்டாளே!
“இப்ப என்ன செய்யலாம்னு சொல்லுற?” தலையில் கைவைத்தபடி கவலையாய்க் கேட்டார் அலமேலு.
“ஞாயிறு அவங்க வீட்டுக்குப் போய் அவ கிட்ட நேர்ல நான் கேக்குறேன். நாம குடும்பமாவே போகலாம். அவினாஷையும் வரச் சொல்லுங்க”
அந்த வீட்டில் அவள் வைத்ததுதானே சட்டம்! சொன்னபடியே ஞாயிறன்று அவினாஷையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வரவைத்தார்கள். அவனிடம் சுஜாதா இச்செய்தியைச் சொன்னபோது அலமேலு போல அவனுமே தவறாய்ப் பேசாதே என்று துடித்தான்.
பின்னர் சுஜாதாவின் வலையில் அவனும் விழுந்துவிட்டான்.
“சரிக்கா! உன் சந்தேகத்தை நீயே ஆதிரா கிட்ட கேளு”
வருங்கால மனைவியிடம் தனியே கேட்க வேண்டிய விவகாரத்தைப் பொதுவில் வைத்துக் கேட்டு உறுதிபடுத்திக்கொள் என்று தமக்கையிடம் சொன்னபோதே ஒரு ஆணாக தோற்றுப்போகிறோமென அவினாஷுக்குத் தெரியாதே! அவனும் சுஜாதாவின் வார்த்தைகளில் குழம்பிவிட்டான்.
அவனுக்கு ஆதிரா மீது முழு நம்பிக்கை இருந்திருந்தால் இந்தக் குழப்பம் வந்திருக்காதுதானே?
இதன் தொடர்ச்சியாக, சந்திர விலாசத்தில் வைத்தியநாதனின் குடும்பத்தினர் வந்து நின்றதும் பரபரப்பாக ஆனார்கள் வினாயகத்தின் குடும்பத்தினர். அன்று மில்லுக்கு விடுமுறை என்பதால் ஆதிராவும் வீட்டில் இருந்தாள்.
சுஜாதாவின் கேள்விகள் அவளை அத்துணை தூரம் எரிச்சலாக்கியிருந்தன. ஆனால் குடும்பத்தினரிடம் அதை அவள் பகிர்ந்துகொள்ளவில்லை. இப்படி சுஜாதாவைப் பார்த்தேன், எனக்கு க்ளாஸ்ட்ரோஃபோபியா வந்தது, புவனேந்திரன் எனது மயக்கத்தைத் தெளியவைத்தான் என்பதை எல்லாம் சொல்லியிருந்தாள்.
வந்ததும் கொடுக்கப்பட்ட காபியை யாரும் தொட்டுப் பார்க்கவில்லை. அவினாஷ் மட்டும் ஆதிராவிடம் அனைவர் முன்னிலையிலும் பேச வேண்டும் என்றான்.
ஆதிரா எந்த உணர்வையும் காட்டாமல் நின்றாள்.
“அக்கா உன்னை ஹோட்டல்ல பார்த்ததா சொன்னா.”
மேற்கொண்டு எப்படி பேசுவதென அவனுக்கே சங்கடமாக இருந்தது. அவன் பேசத் தடுமாறவும் சுஜாதா இடையில் புகுந்தாள்.
“நீயும் உன் சொந்தக்காரனும் ஹோட்டல் ரூமுக்குள்ள போனதை நான் என் கண்ணால பாத்தேன். நீ மயக்கமா இருந்த. அவன் உன்னைக் கையில ஏந்திக்கிட்டுப் போனானே! அப்ப அங்கதான் நான் இருந்தேன். என் புருசனோட ஒன்னுவிட்ட தங்கச்சி குடும்பத்தைப் பாக்க ஹோட்டலுக்கு வந்த இடத்துல இந்தக் கண்றாவிய எல்லாம் பாத்துத் தொலைச்சிட்டேன்”
வினாயகமும் எழிலரசியும் அவள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தே போனார்கள். ஆதிரா அவர்களிடம் ஹோட்டலில் நடந்ததை மறைக்காமல் சொல்லியிருந்தாள். அதை இப்படியா ஒரு பெண் தவறானக் கோணத்தில் பார்ப்பாள்?

ஆதிராவின் முகத்தில் கோபத்தின் சிவப்பேறியது.
“மதினி வார்த்தையில கவனம். நீங்க அன்னைக்கே இது மாதிரிதான் தப்பா பேசுனிங்க”
“ஓஹ்! நான் தப்பா பேசுனேன்ல. நீ அவன் கூட ஒரே ரூம்ல ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்டிருந்தியா? திரும்பி வந்தப்பதான் உன் ட்ரஸ்சை நான் கவனிச்சேனே! சுடிதார் டாப் தோள்பட்டை வரை வழிஞ்சுது. துப்பட்டா எல்லாம்…”
சுஜாதா சொன்ன வார்த்தைகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தன. அனைவருக்கும் பெரியவரான மருதநாயகி ‘இதுதான் உங்கள் வளர்ப்பா?’ என்ற ரீதியில் அலமேலுவையும், வைத்தியநாதனையும் கோபத்தோடு உறுத்து விழித்தார்.
அவர்கள் சங்கடத்தில் தவித்தார்கள்.
ஆனால் பெண்ணைப் பெற்ற வினாயகத்தால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?
“போதும்மா! எனக்கு என் மகளைப் பத்தியும் புவனைப் பத்தியும் நல்லா தெரியும். அவ ஹோட்டல்ல நடந்த எல்லாத்தையும் அன்னைக்கே எங்க கிட்ட சொலிட்டா” என்றவர் லிப்ட் பழுதானது, ஆதிராவின் க்ளாஸ்ட்ரோஃபோபியா என அனைத்தையும் சொல்லி முடித்தார்.
சுஜாதாவின் இதழ்கள் கேலியாய் வளைய இப்போது எழிலரசிக்கே எரிச்சலானது.
அவினாஷின் முகத்தில் குழப்பம் மட்டுமே!
அந்நேரத்தில் ஆதிரா அவனது குடும்பத்தினர் அனைவரின் முகங்களையும் பார்த்தாள். இப்போது கூட யாரும் சுஜாதாவைத் தடுக்கவில்லை. அவளது பேச்சிலிருக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பற்றி விசாரிக்க இங்கே அவர்கள் குடும்பமாக ஒன்று சேர்ந்ததே தனது நடத்தை மீது அவள் சொன்னதை அவர்கள் நம்பியதற்கு சான்று!
இப்படிப்பட்ட குடும்பத்திற்கு கட்டாயம் தான் மருமகளாக வேண்டுமா? தவிப்போடு தந்தையைப் பார்த்தாள் ஆதிரா.
அவர் இதை ஏதோ தவறானப் புரிதல் என்று எண்ணிவிடுவாரோ என்ற கலக்கம் அவளுக்கு. இப்படியொரு பழியைத் தூக்கிப் போடும் உறவினளை அவள் எப்படி வாழ்நாள் முழுக்க சகிக்க முடியும்?
மகள்களின் கலக்கங்கள் தந்தையரை எத்தகைய தீவிரமான முடிவையும் தாமதிக்காமல் எடுக்கும் வைராக்கியத்தில் தள்ளிவிடும். அந்த நேரம் வினாயகமும் எவ்விதத் தாமதமும் இல்லாமல் கடினமானதொரு முடிவை எடுத்தார்.
“என் மகளை உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப எங்க குடும்பத்துக்கு விருப்பமில்ல வைத்தியநாதன். இதுக்கு மேல இங்க நின்னு என் பொண்ணோட கேரக்டரை உங்க மகள் அசிங்கப்படுத்துனா நடக்குறதே வேற”
சிம்மக்குரல் என்பார்களே! அப்படியொரு குரலில் அவர் கர்ஜித்ததும் அவினாஷோடு சேர்ந்து சுஜாதாவும் அதிர்ந்து போனாள்.
“மாமா…” என்று அவினாஷ் ஏதோ சொல்ல வந்தவனை அலட்சியப்படுத்திவிட்டு வைத்தியநாதனைப் பார்த்தார்.
“கிளம்புங்க வைத்தியநாதன். நாம சம்பந்தத்தை இதோட முறிச்சிக்கிட்டதா நினைச்சுக்கோங்க.”
வைத்தியநாதனும் அலமேலுவும் எழுந்தார்கள். அவர்களின் முகங்கள் கறுத்துப் போயின. சுஜாதாவும் தம்பியின் கையைப் பிடித்தாள்.
“வாடா! உனக்கு வேற பொண்ணா கிடைக்காது? என்னமோ இவ ஒருத்திதான் பொண்ணு மாதிரி”
“ஒரு நிமிசம்” வினாயகம் அவளை நோக்கி விரலைச் சொடுக்கினார்.
சுஜாதாவும் திரும்பிப் பார்த்தாள்.
“என் வீட்டுக்கு வந்து என் மகளோட கேரக்டர் மேல சேறு பூச நினைச்சல்ல, எழுதி வச்சுக்க. நீ ஒருத்தி இருக்குற வரைக்கும் உன் தம்பிக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது. செக்குமாடு செக்கைச் சுத்தி சுத்தி வர்ற மாதிரி வீட்டோட நாலு சுவருக்குள்ள நீ அடைஞ்சு கிடக்கலாம். அதனால என் மகளும் அப்பிடித்தான் இருக்கணும்னு நீ எப்பிடி எதிர்பாக்காலாம்? ஆரம்பத்துல இருந்தே உனக்கு என் மகளைப் பாத்துப் பொறாமை!”

“எனக்கா?”
“உனக்குத்தான்! வீட்டையும் தொழிலையும் ஒரு பொண்ணு மேனேஜ் பண்ணுறது உனக்கு எரிச்சலா இருந்திருக்கு. இங்க பாரும்மா, ஹோம்மேக்கரா இருக்குறது உன்னோட சாய்ஸ். பிசினஸ் வுமனா இருக்குறது என் மகளோட சாய்ஸ். அவ சாய்ஸைத் தப்புனு சொல்ல நீ யாரு? ஒரு பொண்ணுக்கு வீடும், புருசனும்., குழந்தையும் மட்டும்தான் உலகமா இருக்கணும்னு அவ தீர்மானிக்கணும். அதை அவ மேல திணிக்கக்கூடாது. இதுதான் கலாச்சாரம், பண்பாடுனு நீ நினைச்சனா அதைக் காப்பாத்த வேண்டிய அவசியம் ஆம்பளைக்கும் இருக்கு. காலம் மாறுனதை ஏத்துக்க முடியாத, உன்னை மாதிரி வீடே உலகம்னு வாழுற பொம்பளைங்க ‘புரொபஷனலி சக்சஸ்ஃபுல்லா’ இருக்குற என் பொண்ணைச் சுயநல்வாதியா ஈசியா முத்திரை குத்துவிங்கனு எனக்குத் தெரியும். ஆனா நடத்தைய அசிங்கப்படுத்துவிங்கனு எதிர்பாக்கல. இப்பவே உன் குணம் புரிஞ்சு போச்சு. இந்த வீட்டோட வாசல் படியைத் தாண்டுனதும் நீ என் மகளைப் பத்தி பேசுனதை நிறுத்திடணும். என் காதுல இதுக்கு மேல இந்தச் சம்பவம் பத்தி எதுவும் விழுந்துச்சுனா நான் சும்மா விடமாட்டேன் உன்னை. வைத்தியநாதன்! உங்க மகளுக்குப் புத்திமதி சொல்லி வைங்க. இல்லனா நல்லா இருக்காது”
ஆணையிடும் குரலில் அவர் சொன்னதும் வைத்தியநாதனின் முகமும் இறுகிப்போனது.
“சுஜாதா போதும்! கிளம்புவோம்” என்றவர் வாயிலைக் கடக்கும்போது வினாயகத்தைத் திரும்பிப் பார்த்தார்.
அந்தப் பார்வையில் என்ன இருந்ததென வினாயகத்துக்குத் தெரியவில்லை. அவர் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. சின்ன சின்ன பிரச்சனைகளை விட்டுவிடலாம். இது மகளின் வளர்ப்பையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்கும் அளவுக்கு எழுந்த பிரச்சனை.
இதை அப்படியே விடுவது, குடும்ப கௌரவத்தைக் காரணம் காட்டி மகளுக்கு அநியாயம் செய்வது போல அல்லவா!
அவர்கள் சென்றதும் எழிலரசியின் முகமே மாறிவிட்டது. கண்கள் கலங்க மருதநாயகியை ஏறிட்டார் அவர்.
அந்த முதியப்பெண்மணிக்கும் மனவருத்தம்தான். இவ்வளவு பெரிய பழியை வீடு தேடி வந்து ஒருத்தி தன் பேத்தி மீது சுமத்துவதை வேடிக்கை பார்க்கும் துர்பாக்கியம் வாய்த்துவிட்டதே என்று நொந்து போனார்.
“ஆதிரை! மனசை விட்டுடாத” என்றார் பேத்தியின் தோளை அணைத்து.
ஆதிராவுக்கோ பெரிய துன்பத்திலிருந்து தப்பித்த உணர்வு! அதோடு தந்தை தனக்காகப் பேசியது, சுஜாதாவை வறுத்து எடுத்ததில் அத்துணை நிம்மதி!
“இப்பிடிப்பட்ட ஒருத்தியோட குடும்பத்துல இருந்து தப்பிச்சிட்டேன்னு சந்தோசமா இருக்குறேன் ஆச்சி” என்றவள் தந்தையை நன்றியோடு பார்த்தாள்.
“தேங்க்ஸ்பா” என்றாள்.
எழிலரசியின் மனம்தான் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
‘என் மகளுக்கேற்ற ஒருவன் எப்போது வருவான்? நிச்சயம் முடிந்து திருமணம் நின்றுவிட்டது என்பதை உறவுக்காரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? முதலில் அவர்களிடம் எப்படி இந்தப் பிரச்சனையை விளக்குவது?’
அன்னையின் மனம் ஆயிரம் கோணங்களில் யோசித்து கலங்கியது.
அவரது தோளில் கனமாய் வந்து விழுந்தது ஒரு கரம்.

“என் மனசுல ஒரு உபாயம் தோணுது எழில். வா! பேசுவோம்” என்றார் அந்தக் கரத்தின் சொந்தக்காரரான வினாயகம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

