இரவு நேரத்தில் விளக்கின் ஒளியில் அந்தத் தோட்டம் தேவலோகம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன.
“முதல்ல உஷாவோட கைலதான் மெஹந்தி வைக்கணும். அதுக்கு அப்புறம் மத்தவங்களுக்கு வைக்க ஆரம்பிங்க” என்று மெஹந்தி வைக்கும் பெண்களிடம் செய்ய வேண்டியவற்றை விளக்கிக் கொண்டிருந்தாள் ரித்திமா.
“உஷா இங்க கொஞ்சம் திரும்பு” என்று சொல்லிவிட்டு அவளுடைய நெற்றிச்சுட்டியைச் சரி செய்தாள் அவந்திகா. உஷாவின் பார்வை எதிரில் இருக்கையில் அமர்ந்திருந்த வருணைத் தவிர வேறு யாரையும் பார்ப்பேனா என்று அடம் பிடித்தது.
“ஏய்! கொஞ்சம் என்னைப் பாருடி” என்று அவந்திகா அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பிச் சரி செய்துவிட்டு வருணுடன் சென்று அமர்ந்துகொண்டு அவனைக் கிஷோருடன் சேர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
பின்னர் ஒவ்வொருவராக மெஹந்தி வைத்துக்கொண்டிருக்க அவந்திகா எழுந்து சென்று சங்கீத்கு ஒளிபரப்ப வேண்டிய பாடல்களை அமரிடம் வரிசையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளை அழைத்த சுமித்ரா மெஹந்தி வைத்துக்கொள்ளுமாறு கூற அவளும் அமர்ந்து அவளுக்குப் பிடித்த டிசைனைச் சொல்ல அவள் கையிலும் மருதாணி வைக்கப்பட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ரித்திமா தன் கையிலிருந்த மருதாணி சங்கீத்தில் நடனமாடும் முன் காய வேண்டுமே என்ற பதற்றத்தில் கையை ஆட்டி ஆட்டி வாயால் ஊதிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டிருந்த கிஷோருக்கு அவளின் செய்கை சிரிப்பாக இருக்க அவளிடம் சென்று “வாட் இஸ் திஸ் ஹனி? கையால டான்ஸ் பண்ணிட்டு இருக்க? சங்கீத்கு இன்னும் டைம் இருக்கு.., அதுக்குள்ள அவசரப்பட்டா எப்பிடி?” என்று அவளைச் சீண்டினான்.
அவனை முறைத்தவள் “இங்க பாரு., நான் இன்னைக்கு ரொம்ப நல்ல மூட்ல இருக்கேன். சோ உன்கூட சண்டை போட எனக்கு டைம் இல்ல. என்னை வெறுப்பேத்துறத விட்டுட்டு வேற ஏதாச்சும் யூஸ்ஃபுல்லா பண்ண ட்ரை பண்ணு மேன்” என்று நக்கலாகக் கூறினாள்.
“பண்ணிட்டாப் போச்சு டார்லிங்” என்று சொல்லிவிட்டு அவள் எதிரிலேயே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான். அவனது செய்கையில் குழம்பியவள் “ஹலோ இப்போ எதுக்கு இப்பிடி உக்காந்திருக்க நீ?” என்று கேட்டாள்.
“உஸ்! பீ காம். நான் யூஸ்ஃபுல்லா ஒரு வேலை பண்ணிட்டிருக்கேன்” என்றபடி ரித்திமாவையே பார்க்க
அவள் கேலியாக “இப்பிடி உக்காந்திருக்கிறதுக்குப் பேரு உங்க ஊர்ல யூஸ்ஃபுல்லான வேலையா?” என்று கேட்க அவள் கேள்விக்குப் பதிலளிக்காமல் கன்னத்தில் கை வைத்து அவளது முகபாவனைகளை ரசித்தவனைக் குழப்பத்துடன் பார்த்துவிட்டு “கோ டு ஹெல்” என்று பல்லைக் கடித்தபடியே முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் சென்றதும் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த கிஷோரை இடைமறித்தாள் நேகா, அவனின் உடன் பிறந்த தங்கை. “என்ன நடக்குது இங்க?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள் அவள்.
அவளைச் சாதாரணமாகப் பார்த்தபடி “ஒன்னும் இல்லையே” என்று தோளைக் குலுக்கினான் கிஷோர்.
“நடிக்காத ப்ரோ! அண்ணியோட ஃப்ரெண்டைப் பாத்த உடனே உன் ஃபேஸ்ல ஒரு பிரைட்னஸ் வருது! அது என்னன்னு கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டு ரித்திமா சென்ற திசையில் சென்றான் கிஷோர்.
அதே நேரம் அவந்திகாவின் கையில் மெஹந்தி போட்டு முடிக்கப்பட்டது
“மெஹந்தி போட்டாச்சா? அப்பிடியே என் பேரன் பேரை இங்க எழுது பாப்போம்” என்று சுமித்ரா சொன்னதும் அவந்திகா அவரைப் புரியாமல் பார்த்தாள்.
“பட் தாதி. என்னோட கையில உங்க பேரன் பேரை எதுக்கு எழுதச் சொல்றீங்க?”
“மனைவியோட கையில கணவன் பேர எழுதுறது இங்க வழக்கம். உஷாவோட கைல வருண் பேர எழுதுன மாதிரி உன் கைல ராகவ் பேர எழுதச் சொல்லுறேன்” என்று சுமித்ரா விளக்க
அவரைக் கேலியாகப் பார்த்து “இஸிட்? இந்தச் சம்பிரதாயம் எல்லாம் ஏன் வைஃப் மட்டுமே ஃபாலோ பண்ணணும்? நான் உங்க பேரனோட வைஃப்தானே. அப்போ அவரு என்னோட பேரை என்ன கையில எழுதவா போறாரு? நான் மட்டும் எதுக்கு எழுதணும்?” என்று அவந்திகா கேட்க
“உன் புருஷன் வந்ததும் நீ வேணா அவன் கையில மருதாணியால உன் பேர எழுது. யாரும் உன்னத் தடுக்க மாட்டோம்., ஆனா இப்போ நீ ராகவ் பேர உன் கைல எழுதியே ஆகணும்” என்று சுமித்ரா தன்னுடைய வெண்கலக் குரலில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராகவ் வந்துவிட்டான்.
தன் தாதியிடம் என்னவென்று கேட்டவன் அவந்திகா அருகில் சென்று அமர்ந்து மெஹந்தி வைத்துக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து மருதாணியை வாங்கினான்.
அவனைப் பார்த்த அவந்திகா குழப்பத்துடன் “ராகவ்., இப்போ நீ என்ன கலாட்டா பண்ணப் போற?” என்று கேட்டாள்.
அவளுக்குப் பதிலளிக்காமல் தன்னுடைய உள்ளங்கையில் அவந்திகாவின் பெயரை எழுத ஆரம்பித்தான். அவன் எழுதி முடித்ததும் விருந்தினர் அனைவரும் ஆர்ப்பரிக்க ராதிகா அவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார்.
“இப்போ ஹாப்பியா? உன்னோட நேம என்னோட கையில போட்டாச்சு” என்று ராகவ் புருவத்தை உயர்த்திக் கேட்கவும் அவந்திகா “வாட் எவர்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிக்கொண்டு எழும்ப முயன்றாள்.
அவளது கையைப் பற்றி இழுத்து அவளை மீண்டும் அமரவைத்தவன் “எழுந்திருச்சுப் போனா என்ன அர்த்தம்? இப்போ உன்னோட டர்ன்” என்று அழுத்தமாகக் கூறினான்.
“நான் உன்னோட பேர எழுதிப்பேனு தாதிக்குப் பிராமிஸ் ஒண்ணும் பண்ணல. ஐயாம் நாட் கோயிங் டு ரைட் யுவர் நேம் ஆன் மை ஹேண்ட்” என்று அவளும திருத்தமாகக் கூறினாள்.
அவளைப் பார்த்து அழகாக முறுவலித்தவன் அவள் மெஹந்தி வைத்த கையை எடுத்து ராகவ் என்று எழுதினான்.
அவன் புன்னகைக்க ஆரம்பிக்கும்போதே அவந்திகாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது. “லுக் அவந்திகா! அவன் சிரிப்பை மட்டும் நீ பாக்காத., பாத்தா சுத்தி நடக்குற விஷயங்களை நீ மறந்துடுவ” என்று அவளது மூளை அறிவுறுத்தும்போதே ராகவ் தன் பெயரை அவள் கையில் எழுதி முடித்துவிட்டான்.
“டன். ஓகேவா தாதி” என்று சுமித்ராவைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் கன்னத்தில் தட்டி அவளைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தான்.
கனவிலிருந்து விழித்தவளைப் போல இருந்தவள் கையைப் பார்த்ததும் ராகவை முறைத்தாள். அவனோ “வாட் எவர்” என்று அவளைப் போலவே சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
இப்படியாக மெஹந்தி நல்லபடியாக முடியச் சங்கீத் ஆரம்பித்தது. அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர மணமக்கள் இருவரும் அழகான நீண்ட இருக்கையில் அமர்ந்தனர்.
மேடையில் தோன்றிய ரித்திமா “எல்லாருக்கும் வணக்கம்., நம்ம இப்போ இங்க ஒன்னா கூடியிருக்கிறது நம்ம லவ்லி உஷா அண்ட் வருண் சங்கீத்காக., இந்தப் பியூட்டிஃபுல் மொமண்ட்ட அழகாக்க ஃபர்ஸ்ட் வரப்போறது நம்ம நேகா அண்ட் பிந்து” என்று சொல்லவும் கரகோஷமும் கூச்சலும் எழுந்தது.
அவர்கள் இருவரும் கிஷோரின் சகோதரிகள். தங்கள் வீட்டில் முதன்முதலில் நடக்கும் திருமணம் என்பதால் அதன் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் இருவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அதுவும் நடனமென்றால் பஞ்சாபிகளை மிஞ்ச முடியுமா? இதோ வந்துவிட்டார்கள் அந்த அழகான சகோதரிகள்…
‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்திலிருந்து ‘ராதா ஆன் த டான்ஸ் ஃப்ளோர்’ பாடல் ஒலிக்கப் பிந்துவும் நேகாவும் ஆட ஆரம்பித்தனர். விருந்தினர் அனைவரும் கரகோஷத்துடன் அவர்களை உற்சாகப்படுத்த வருணும் உஷாவும் கை தட்டி ஆனந்தமாக அந்தத் தருணத்தை ரசித்தனர்.
அவந்திகா அமருடன் நின்று பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தவளும் அவர்களின் நடனத்தை ரசிக்கத் தவறவில்லை. பாடல் முடியவே ரித்திமா மேடையில் மீண்டும் தோன்றி அடுத்து ஆடப்போகிறவர்களின் விவரத்தைக் கூறினாள்.
“நெக்ஸ்ட் நம்ம ரன்வீர் அண்ணா அண்ட் அமர்” என்று ரித்திமா கூறிவிட்டுச் செல்லவும் அவந்திகா அமரை நடனமாடச் சொல்லிவிட்டு அவளே பாடலை ஒலிபரப்பத் தொடங்கினாள்.
வான்டட் படத்திலிருந்து பாடல் ஒலிபரப்பாக உஷாவும் அவந்திகாவும் “கம் ஆன் அண்ணா! ரன்வீர் ரன்வீர்” என்று ஆனந்தமாகக் கூச்சலிட கௌசல்யாவின் கவனம் அவந்திகாவின் பக்கம் திரும்ப அவள் சத்தத்தைக் குறைத்துக்கொண்டு கையை மட்டும் தட்டினாள்.
“அண்ணா! தூள் கெளப்பிட்டீங்க!! அடுத்து வரப்போறது நம்ம உஷா அண்ட் வருண்., எல்லாரும் இந்த ஜோடிக்குக் கிளாப் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள் ரித்திமா.
வருண் உஷாவிடம் கை நீட்ட அவன் கையுடன் தன் கையைக் கோர்த்துக்கொண்டு மேடை ஏறினாள். ஓம் சாந்தி ஓம் படத்திலிருந்து ‘மே அகர்கஹூன்’ பாடல் ஒலிக்க வருணைக் காதலுடன் பார்த்தவாறே நடனம் ஆடத் தொடங்கினாள்.
வருணும் உஷாவைத் தவிர வேறு யாருமே உலகில் இல்லையென்ற நினைவுடன் மெய்மறந்து அவளுடன் ஒன்றிவிட்டான். விருந்தினர்கள் அனைவரும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பற்றிப் பெருமையாகக் கூற சுமித்ரா மூத்த பேரனுக்கு இங்கிருந்தே திருஷ்டி சுற்றிப் போட்டார்.
பாடல் முடிந்த உணர்வு கூட இல்லாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் வந்த ரித்திமா “மை டியர்ஸ்! சாங் முடிஞ்சு பத்து நிமிஷம் ஆச்சு” என்று கிண்டலடிக்கவும் வெட்கப்பட்ட உஷா வருணைக் கட்டிக்கொண்டே ஜொலித்த முகத்துடன் மேடையிலிருந்து இறங்கினாள்.
இறங்கிய மணமக்கள் இருவரும் அடுத்த அறிவிப்பு கொடுத்துவிட்டு வந்த ரித்திமாவின் காதில் ஏதோ சொல்ல அவளும் சிரித்தவாறே தலையாட்டினாள்.
மேடையில் இரு குடும்பப் பெரியவர்களும் நடனம் ஆடிக்கொண்டிருக்க ரித்திமா அவந்திகாவை அழைத்து அடுத்து ஆடுமாறு கூற அவள் மறுத்தாள்.
கீழே இறங்கிய சுமித்ரா ராகவைக் கண் காண்பித்து அடுத்து மேடைக்குச் செல்லுமாறு கூற அவனோ ரித்திமாவிடம் மறுத்துப் பேசிக் கொண்டிருந்த அவந்திகாவைப் பார்த்தபடியே சரியென்று கூறிவிட்டு அவளை நோக்கிச் சென்றான்.
ராகவைக் கண்டதும் அமைதியான அவந்திகாவை “ஸ்டேஜுக்குப் போ” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ரித்திமா.
“போலாமா?” என்று ராகவ் கேட்கவும் விழிகளை விரித்த அவந்திகாவைப் பார்த்தவன் “உன் கண்ணு பாக்க நார்மலாவே அழகுதான். சோ இப்பிடி உருட்டிக் காமிச்சுதான் அழகுனு ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்ல” என்று சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றான் ராகவ்.
இருவரையும் மேடையில் பார்த்ததும் வருணும் உஷாவும் சந்தோஷக் கூச்சலிட அமர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலிருந்த ‘பன் கி டிட்டிலி தில் உடா’ பாடலை ஒலிபரப்பினான்.
அவந்திகாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க ராகவோ ஒரு கையால் அவள் கையைப் பற்றி, இன்னொரு கையால் அவள் இடையை வளைத்து மெதுவாக நடனமாட ஆரம்பித்தான். திடுக்கிட்ட அவந்திகா அவன் கையைத் தட்டிவிட முயலவும் அவள் காதில் “இங்க பாரு ஜான்சிராணி டோன்ட் கிரியேட் எனி சீன் ஓகே! டான்ஸ் பண்றதால நீ ஒன்னும் கொறஞ்சு போக மாட்ட” என்று மெதுவாகக் கூறிக்கொண்டே ஆடினான்.
“ஹவ் டேர் யூ டச் மீ? இப்போ கைய எடுக்கப் போறியா இல்லையா?” என்று பல்லைக் கடித்தபடி அவன் ஆட்டுவித்தபடி ஆடினாள் அவந்திகா.
அவர்கள் சண்டை போட்டுக் கொண்டே ஆடி முடிக்கவும் பாட்டும் முடிந்தது. பாட்டு நின்றவுடன் ராகவிடமிருந்து விலகி வேகமாக மேடையை விட்டு இறங்கி அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் அவந்திகா.
வீட்டினர் இதை வித்தியாசமாகப் பார்க்கவும் அவந்திகா மீது ராகவுக்குக் கோபம் வந்தது. அவளைத் தொடர்ந்து சென்றவன் வேகமாகச் சென்று அவள் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திவிட்டு அவளை முறைத்தான்.
பின் கடுமையான ஆனால் மெதுவான குரலில் “லிசன் அவந்திகா! உன்னோட சைல்டிஷான பிஹேவியரை பாத்தா எனக்கு இரிட்டேட் ஆகுது. அடிக்கடி என்னைச் சொல்ல வைக்காத! இந்த மேரேஜ் முடியுறவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் நார்மல் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா ஆக்ட் பண்ணனும்னு ஆல்ரெடி டிசைட் பண்ணதுதானே. தென் வொய் ஆர் யூ ஆக்டிங் லைக் திஸ்? இப்பிடி நீ என்னை அவாய்ட் பண்ணா ரெண்டு ஃபேமிலிக்கும் நம்ம மேல தேவையில்லாம சந்தேகம் தான் வரும். இதால வருண் பய்யா மேரேஜ்ல தேவையில்லாத பிராப்ளம்ஸ் வரும். சோ ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் த சிச்சுவேஷன்” என்று தெளிவாகக் கூறி முடித்தான்.
அவனது குரலில் இருந்த கடுமை முகத்திலும் பிரதிபலிக்க அவந்திகா ஒரு நிமிடம் பதில் பேசத் தயங்கினாள். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “எனக்கு இந்த மாதிரி யாருகூடவும் டான்ஸ் பண்ணிப் பழக்கம் இல்ல ராகவ்” என்றவளைத் திகைத்த பார்வை பார்த்தவன் “இம்பாஸிபில்” என்று மனதில் சொல்லிக்கொண்டான்.
“நான் டான்ஸ் பத்தி மட்டும் பேசல.., எப்போ ஃபேமிலி முன்னாடி நான் ஒரு நார்மல் ஹஸ்பெண்ட் மாதிரி பிஹேவ் பண்ணுனாலும் நீ விலகித்தான் போற… வொய்?” என்று அவன் புரியாமல் கேட்க அவளோ “பிகாஸ் என்கிட்ட யாரும் இதுவரைக்கும் இப்பிடி பிஹேவ் பண்ணது கெடையாது ராகவ்” என்று சங்கடத்துடன் கூற
“அப்போ நான் மட்டும் என்ன டெய்லி நாலஞ்சு வைஃப் கூட பேசிப் பழகிட்டா இருக்கேன்? இடியட்” என்று கடுப்பில்கூறிவிட்டுத் தலையைக் கோதிக்கொண்டவன் “லுக்! உனக்குப் பழக்கம் இருக்கோ இல்லையோ ஐ டோண்ட் கேர், இனிமே பழகிக்கோ!” என்றான் கட்டளையிடும் தொனியில்.
“என்னால அப்பிடிலாம் பழகிக்க முடியாது மிஸ்டர். ராகவ் கபூர். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றாள் அவளும் சவால் விடும் குரலில்.
அவளின் இந்தப் பதிலை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் தலையைச் சரித்துக்கொண்டு “இஸிட்? அப்போ தேவையில்லாம இந்த ஹஸ்பன்ட் அண்ட் வைஃப் டிராமா லைஃப்லாங் தொடர வேண்டியதா இருக்கும்” என்று சாதாரணமாகக் கூறினான் ராகவ்.
“வாட்?” என்று அதிர்ந்தவளிடம் “யெஸ்! பீ ரெடி டு ஆக்ட் லைக் எ வைஃப்” என்று அவளின் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான்.
அவன் சென்ற பின்னும் நீண்டநேரம் அங்கேயே நின்று யோசித்துக்கொண்டிருந்தாள் அவந்திகா. எப்படி யோசித்தாலும் தேவையில்லாமல் நடந்த இந்தத் திருமணம் தன்னுடைய இயல்பான வாழ்க்கையை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதாகவே அவளின் மனதுக்குப் பட்டது.
ஆனால் அவளால் அதை இந்தச் சந்தோஷமான மனநிலையில் மொத்த குடும்பமும் இருக்கும் சூழ்நிலையில் யாரிடமும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் தன்னைப் போல ராகவுக்கும் இதில் சுத்தமாக விருப்பம் இருக்காது என்று அவள் நூறு சதம் நம்பினாள். ஆனால் அவளுக்குத் தெரியாத ஒரு விஷயம் அவன் என்றும் அவனுடைய குடும்பத்தின் சந்தோஷத்துக்காக அவனுக்குப் பிடிக்காத விஷயத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயங்க மாட்டான் என்பதுதான்.
ராகவும் கிட்டத்தட்ட அவளுடைய மனநிலையில்தானிருந்தான். அவனுக்கும் இது பிடிக்காத திருமணம்தான். ஆனால் என்ன செய்வது? அவனுடைய அன்னையிலிருந்து பாட்டி வரை அனைவரும் அவந்திகாவைக் கபூர் குடும்பத்தின் மருமகளாவே பார்த்து வர அவள் அவர்களின் குடும்பத்தில் இணையும் நாளுக்காகக் காத்திருந்தனர். அவந்திகாவின் சிறுபிள்ளைத்தனமான செய்கையால் இந்தத் திருமணத்தில் எந்த மனகஷ்டமும் வந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தான்.
இருவரும் அதற்குப் பின் எதுவும் பேச முற்படவில்லை. சுமித்ராதான் அவர்கள் பக்க உறவினர் அனைவரிடமும் அவந்திகாவை அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவரும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைச் சிலாகிக்கவும் ராகவ் எப்படி உணர்ந்தானோ தெரியவில்லை., ஆனால் அவந்திகாவிற்கு அது தர்மசங்கடமாகவே இருந்தது.
அமைதியாக அவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டவளின் காதில் கல்யாணி தேவி சுமித்ராவிடம் கூறிய விஷயம் கேட்கவே அவள் இன்னும் குழப்பமடைந்தாள்.
“எனக்குத் தெரியும். அன்னைக்குச் சிவனோட சன்னதியிலேயே நாகராஜா அவந்திகாவுக்குத்தான் முதல்ல ஆசீர்வாதம் பண்ணார். அப்போவே நெனச்சேன். அவரோட கணக்குப்படிதான் இந்தக் கல்யாணம் நடந்துருக்கு. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளைக்குச் சந்தோஷமா வாழுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று பெருமையாகக் கூறினார் கல்யாணி தேவி. சுமித்ராவும் இதையே ஆமோதித்தார்.
அவர்கள் அனைவரையும் விட்டு விலகி வெளியே வந்து வானத்தில் முழுநிலவைப் பார்த்தபடி நின்றவளின் காதில் “அப்போ தேவையில்லாம இந்த ஹஸ்பன்ட் அண்ட் வைஃப் டிராமா லைஃப்லாங் தொடர வேண்டியதா இருக்கும்; பீ ரெடி டு ஆக்ட் லைக் எ வைஃப்” என்ற ராகவின் வார்த்தைகளும் “அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளைக்குச் சந்தோஷமா வாழுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்ற கல்யாணி தேவியின் வார்த்தைகளும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது.
காதுகளை மூடிக்கொண்டவள் சிறிது நேரம் கழித்துக் காதிலிருந்து தன் கையை எடுத்தபோதுதான் அதைக் கவனித்தாள்.
அவளது இடது கை மெஹந்திக்கு மத்தியில் ராகவ் என்ற பெயர் தெளிவாக எழுதப்பட்டிருக்கக் கையையே கண்ணை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாளோ தெரியவில்லை. “உன் கைல மட்டும் இல்ல. தலையெழுத்துல கூட இந்த ராகவோட பேர்தான் இருக்கு அவந்திகா!” என்ற ராகவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள். அவன் எதேச்சையாக அங்கே வந்தவன் அவள் உள்ளங்கையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க அவளை இயல்பாக்க அவ்வாறு கூறினான்.
தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டவளைக் கேலியாக உற்றுப் பார்த்தவன் “உண்மையைக் கேக்கக் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். பட் யூ ஹேவ் டு அக்செப்ட் தட்” என்று கூறவும் அவந்திகா அவனுக்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்தாள்.
“மிஸ்டர் ராகவ் கபூர்! என்னோட தலையெழுத்த எழுதுற வேலைய நான் எந்த மூணாவது மனுஷனுக்கும் குடுக்கல! தென் நீங்க சொன்னது உண்மைதான்! என் பேரோட உங்க பேர் சேர்ந்துதான் இருக்கு. ஐ காண்ட் டெனி தட். பட் அதுக்காக நான் இவ்ளோ கூடச் சந்தோஷப்படல” என்று சொல்லித் தன் ஆட்காட்டி விரல் நுனியைக் காட்ட ராகவிற்கு அவள் சண்டை போடும் மூடுக்கு வந்துவிட்டாளென்றாலே இயல்பாகிவிட்டாள் என்றே அர்த்தம் என்பது புரிய அமைதியாக அவளது பதிலை ஏற்றுக் கொண்டான்.
“எனக்கு உங்ககூட சண்டை போடுறத விட நெறைய வொர்க் பேலன்ஸ் இருக்கு, ஸோ ப்ளீஸ் மூவ் எ லிட்டில்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவளை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு அவனும் அந்த முழுநிலவை ரசித்தபடி அங்கேயே நின்றான். முன் பின் தெரியாத மனிதர்களுக்கு இடையே காதலை உருவாக்கும் சக்தி காலத்துக்கு மட்டுமே உண்டு! இதில் தலையெழுத்தோ விதியோ எதுவும் செய்ய முடியாது என்பதை உணர அவர்களுக்கு இன்னும் நேரம் வரவில்லை…..
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


