காந்தம் கண்ட இரும்பைப்போல, உன் சுற்றுப்பாதையில் நான் கட்டுண்டு கிடக்கிறேன். உன் ஒற்றை இருப்பு, எனக்கான ஈர்ப்பு விதிகளை எப்படி இத்தனை அழகாகத் திருத்தி எழுதுகிறது?
-நேத்ரன்
நேத்ரனின் வெற்றியும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் வெற்றியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சூழலில் அவன் தேர்தல் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழை வாங்கிக்கொண்டான்.
அமைச்சரவை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக ராஜவேலுவுடன் அன்றிரவே சென்னைக்கு விமானம் ஏற வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
தனது முதல் தேர்தல் வெற்றியைத் தன்னவளோடு கொண்டாடிய களிப்புடன் சென்னைக்குக் கிளம்பினான் நேத்ரன். செல்லும் முன்னர் வெண்பாவிடம் வாட்ஸ்அப்பில் உரையாடியிருந்தான்.
“நாளைக்குத் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைப் பாக்கப் போறார் வெண்பா. காலையில அமைச்சரவை முடிவாயிடும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சாருக்கு மினிஸ்ட்ரியில இந்தத் தடவை இடம் இருக்குமா?” விளையாட்டாக வினவினாள் அவள்.
“டூ யூ திங்க் சோ? எனக்கு அமைச்சர் ஆகுற அளவுக்குத் தகுதி இருக்குனு தோணல. அனுபவம் வேண்டாமா டீச்சரம்மா?” என அவனும் விளையாட்டாகவே பதில் சொன்னான்.
கூடவே “இன்னும் நாலு நாள்ல சட்டமன்றம் கூடும். நான் எம்.எல்.ஏவா அங்க பதவியேத்துக்கணும். இந்த ஒரு வாரம் நான் சென்னையிலதான் இருந்தாகணும். சப்போஸ் உன்கூடப் பேச டைம் கிடைக்கலனா கோச்சுக்காத டீச்சரம்மா. எனக்கு வழக்கம் போல நீ போடுற குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் வேணும். நான் டெய்லி செக் பண்ணுவேன்” என்றான்.
அவன் அனுப்பிய செய்தியைப் பார்த்ததும் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் தனது செய்திக்காக அவன் காத்திருப்பதாகச் சொன்னது நெஞ்சில் இனித்தது மதுரமாய்!
“சரிங்க எம்.எல்.ஏ! நல்லபடியா போயிட்டு வாங்க” என்று செய்தியை அனுப்பி அவனை வழியனுப்பிவைத்தாள் வெண்பா.
அன்றிரவு அவள் வீட்டில் இரவுணவே தடபுடல்தான்.
“கார்லிக் நான், பனீர் பட்டர் மசாலா… ம்ம்.. மதினி டின்னர் சமைக்கச் சொன்னா விருந்தே சமைச்சிருக்கீங்களே?” என்று கேலி செய்தாலும் ஹேமாவின் கைமணத்தில் சுவையும் நறுமணமுமாய் இருந்த உணவைக் காலி செய்தாள் வெண்பா.
சாப்பிட்டு முடித்ததும் அன்னையோடு இருவரும் பின்பக்கத் திண்ணையில் அமர்ந்தார்கள். சாப்பிட்ட பிற்பாடு இப்படித் திண்ணையில் அமர்ந்து கதை பேசுவது மூவரின் வாடிக்கை.
எழிலனும் செண்பகராமனும் ஒரு பக்கம் உரையாடிக்கொண்டிருக்க செண்பகராமனின் ஈசி சேரில் சாய்ந்து அயர்ந்து உறங்கியிருந்தான் ஆகாஷ்.
சிலுசிலுவென்ற காற்றில் அமர்ந்து பேசிகொண்டிருந்த பெண்கள் திடுமென வெண்பாவின் மொபைல் சிணுங்கியதும் அதைப் பார்த்தார்கள்.
நேத்ரன் அழைக்கிறான் என்று ஹேமா எண்ணிக்கொள்ள அழைப்பு வந்ததோ வேறொருவரிடமிருந்து. வெண்பாவின் முகம் அந்தப் பெயரைப் பார்த்ததும் ஒளிர்ந்தது. உடனடியாக அழைப்பை ஏற்றாள்.
“சொல்லு ஜானு” என உற்சாகம் ததும்பப் பேச ஆரம்பித்தாள் தனக்கு அழைப்பு விடுத்த தோழி ஜானவியிடம்.
“என்ன சொல்லு ஜானு? நான் உனக்கு மேரேஜ் இன்விடேஷன் அனுப்பி ஒரு வாரமாகுது. இந்த வீக்கெண்ட் எனக்குக் கல்யாணம். நீ வர்றியா இல்ல ஆள் அனுப்பி ரங்கநல்லூர்ல இருந்து உன்னைத் தூக்கிட்டு வரட்டுமா சென்னைக்கு?”
அவளது செல்லமான மிரட்டலில் சிரித்தேவிட்டாள் வெண்பா.
“ஐயோ ரொம்ப பயமா இருக்குதே” என்று அவள் சொல்லவும் மறுமுனையில் அர்ச்சனை தொடர்ந்தது.
“நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடி? சிரிக்குற. மரியாதையா என் கல்யாணத்துக்கு வா.”
வெண்பா கொஞ்சம் யோசனையோடு அன்னையைப் பார்த்தாள்.
“ஜானு பேசுறாம்மா. இந்த வீக்கெண்ட் அவளுக்குக் கல்யாணம். என்னைச் சென்னைக்கு வரச் சொல்லுறா” என்றாள் யோசனையோடு.
மறுமுனையில் ஜானவியோ “நீ போனை அம்மாகிட்ட குடு. நான் பேசுறேன்” என்று பரபரத்தாள். மொபைல் உமையாளிடம் சென்றது.
அவரும் மகளின் தோழிக்கு வாழ்த்து தெரிவித்தார். கூடவே வெண்பாவிற்கும் திருமணம் ஏற்பாடாகியிருப்பதைக் கூறினார். அதைக் கேட்டு ஜானவியும் மகிழ்ந்துபோனாள். அதற்காகத் தான் போன் செய்த காரணத்தை மறந்துவிடவில்லை அந்தக் காரியக்காரி.
“இந்த வீட்டுல எந்த முடிவா இருந்தாலும் உன் அங்கிள்தான் எடுப்பார்டா ஜானு.” என்று உமையாள் சொல்ல
“அப்ப அங்கிள்கிட்ட போனை குடுங்க. நான் அங்கிளை எப்பிடிச் சம்மதிக்க வைக்குறேன்னு மட்டும் பாருங்க” என்றாள் அவள் உற்சாகமாக.
செண்பகராமன் அவ்வளவு தூரம் வெண்பாவை அனுப்பிவைப்பார் என்ற நம்பிக்கை அவளுக்கும் இல்லை. அவளது அன்னைக்கும் இல்லை. இருப்பினும் ஜானவியின் மனதை வருந்த வைக்காமல் மொபைலை செண்பகராமனிடம் கொண்டுபோய்க் கொடுத்தார் உமையாள்.
யார் என்பது போலக் கேள்வியாய்ப் பார்த்தவரிடம் “நம்ம சின்னதுரை மாமாவோட மக ஜானவி. சென்னையில செட்டில் ஆனாங்களே மூணு வருஷத்துக்கு முன்னாடி. அவதான் பேசுறா” என்றதும் செண்பகராமனின் முகம் மலர்ந்தது.
சின்னதுரை செண்பகராமனின் பால்ய சினேகிதர் ஆயிற்றே! இதே ரங்கநல்லூரில்தான் மூன்று வருடங்களுக்கு முன்னர் சின்னதுரையின் குடும்பம் வசித்துவந்தது. தொழில் குடும்பம்தான். மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்ட்னர் கிடைத்திருக்கிறார் என்று சென்னையில் சென்று தனது தொழிலை விரிவாக்கிய சின்னதுரைக்குச் சிங்காரச் சென்னை அள்ளிக் கொடுத்தது செல்வத்தை.
அதனால் கல்லூரி படிப்பு முடிந்த மகளோடு சென்னைக்கே குடும்பத்தோடு குடிபெயர்ந்துவிட்டார் மனிதர். நாணயமும் விடாமுயற்சியும் அவருக்குக் கைகொடுத்தது. இப்போது சென்னையின் பெரிய மனிதர்களில் அவரும் ஒருவர்.
அவர் மீது செண்பகராமனுக்குப் பெரிய மரியாதை உண்டு. எப்படி ஜானவி தோழியிடம் திருமண அழைப்பிதழை அனுப்பி வருமாறு வற்புறுத்துகிறாளோ அதேபோல் செண்பகராமனுக்கும் சின்னதுரையிடமிருந்து அழைப்பிதழ் வந்திருந்தது.
“நேர்ல வந்து வைக்கலனு யோசிக்காம கல்யாணத்துக்குக் குடும்பத்தோட வந்துடணும் ராமன். இங்க கொஞ்சம் வேலை அதிகம்டா” என்றிருந்தார் மனிதர்.
செண்பகராமனுக்கு இப்போது சென்னைக்குச் செல்லத் தோதுபடாத சூழல். ஜானவி உரிமையாய்க் கேட்கவும் வெண்பாவை அனுப்பிவைக்கச் சம்மதித்தார்.
“அப்பிடியே எழில் அண்ணாவும் மதினியும் வந்தா இன்னும் நல்லா இருக்கும் அங்கிள்”
செண்பகராமன் சிரித்தார். மணப்பெண் எனும் சலுகையை வைத்து நினைத்ததைச் செய்து முடிக்க எண்ணுகிறாள் என்று எண்ணியவருக்கு அவளது சாமர்த்தியத்தை மெச்சவும் தோன்றியது.
“புரியுதும்மா! ஆனா இங்க எழில் இல்லனா எனக்கு வேலை ஓடாது. ஆகாஷுக்கு வேற இப்பதான் ஃபீவர் வந்து சரியாகியிருக்கு. இந்நேரத்துல பிரயாணம் எல்லாம் அவன் உடம்புக்கு ஒத்துக்காதும்மா. எங்க எல்லார் சார்பாவும் வெண்பா வருவா. மருமகளுக்கு இந்த மாமாவோட ஆசீர்வாதம் எப்பவும் உண்டு”
வெண்பா வர அனுமதி கிடைத்துவிட்டதுமே ஜானவிக்குப் பெரும் மகிழ்ச்சி. ஆயிரம் நன்றிகளைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் பெண்.
வெண்பாவும் தந்தை சென்னைக்குச் செல்ல அனுமதி கொடுத்துவிட்ட மகிழ்ச்சியோடு நின்றாள்.
“எழில்கிட்ட சொல்லி டிக்கெட் போடச் சொல்லிடுறேன். அப்படியே ராமன்கிட்ட தகவல் சொல்லிட்டா ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பிடுவாப்ல” என்றார் செண்பகராமன்.
வெண்பா சம்மதமாய்த் தலையாட்டினாள்.
“அப்பிடியே கல்யாணப் பொண்ணுக்குப் பரிசு என்ன வாங்கணும்னு உன் அம்மைக்கிட்ட பேசி முடிவு பண்ணும்மா. ராமன் என் சினேகிதன். அவன் மக கல்யாணத்துக்கு வெறுங்கையோட போகக் கூடாது” என்றார் அவர்.
“சரிப்பா”
தந்தை சொன்னது போல உமையாளிடமும் ஹேமாவிடமும் என்ன பரிசு வாங்கலாமென ஆலோசிக்கலானாள் வெண்பா.
“இப்ப கப்பிள் ரிங்ஸ் வந்திருக்கு வெண்பா. மாமாகிட்டவும் உன் அண்ணன்கிட்டவும் பணம் வாங்கிக்க. நாம ஸ்ரீகுமரன் போய் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் மோதிரம் வாங்கிக்கலாம்” என்றாள்.
“ஆனா அவங்க விரல் அளவு தெரியாதுல்ல அண்ணி”
“ம்ம்! அதுவும் சரிதான்” என ஹேமா யோசிக்க
“இதுக்கு என்னடி இப்பிடி யோசிக்குற? பிரேஸ்லெட் வாங்கிட்டாப் போச்சு. மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் கெட்டியா வாங்கணும். ஜானுக்கு லேடீஸ் போடுற மாதிரி டிசைன் வச்சு மெல்லிசா வாங்கணும். அவ்ளோதானே?” என அனாயசமாக ஐடியா கொடுத்துப் பரிசு வாங்குவதில் தான் நிபுணியென நிரூபித்தார் உமையாள்.
ஹேமாவும் வெண்பாவும் மெச்சுதலாய் அவரைப் பார்த்துவிட்டு “இதுக்குத்தான் நம்ம ஆல் இன் ஆல் அழகுராணி வேணும்ங்கிறது” என்றார்கள் ஒருமித்த குரலில்.
அதே நேரம் ராஜவிலாசத்தில் அங்கயற்கண்ணி யாரிடமோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
“இல்லங்க மதினி! இது நேத்ரனோட விருப்பம். நான் என்ன பண்ண முடியும்? பொண்ணும் எங்களுக்குத் தெரிஞ்சவளாப் போயிட்டா”
குந்தவை இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. யாராக இருக்கக் கூடுமென்ற யோசனையோடு கடந்துபோனார் அந்தப் பெண்மணி. அங்கயற்கண்ணி பேசி முடிக்கட்டுமெனக் காத்திருந்தார்.
பேசி முடித்ததும் அங்கயற்கண்ணியிடம் விசாரித்தார் என்ன விவகாரமென.
“என்னோட ஒண்ணுவிட்ட அண்ணன் மதுரையில இருக்கார்னு சொன்னேன்ல. அவரோட பொண்ணைக்கூட நேத்ரனுக்கு விசாரிச்சேன்னு சொன்னேனே. அந்த மதினிதான் பேசுனாங்க. சின்னவன் எலக்சன்ல ஜெயிச்சதுக்கு வாழ்த்துற சாக்குல நாம துர்காவோட தங்கச்சியைச் சின்னவனுக்குப் பேசி முடிச்சிட்டோம்னு வருத்தப்படுறாங்க. நாம என்ன செய்ய முடியும்? அவனுக்கு வெண்பாவதானே பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன்”
குந்தவைக்கு இதுவே தர்மசங்கடமாய்ப் போனது. அங்கயற்கண்ணியின் கைகளைப் பற்றிக்கொண்டார் ஆதுரமாய்.
“சாரிக்கா! இப்பிடி ஒரு இக்கட்டு வரும்னு…”
“ப்ச்! என்ன நீ பெரிய மனுஷி மாதிரி சாரி எல்லாம் கேக்குற? சொந்தக்காரங்க மனசு கோணக் கூடாதுனு யோசிக்குறது நல்லதுதான். ஆனா அதைவிட நம்ம பசங்க மனசு வருந்திடக் கூடாதுங்கிறதுதான் நம்மளோட பிரதான கவலையா இருக்கணும் குந்தவை. நேத்ரன் வெண்பாவைக் கல்யாணம் பண்ணுனா சந்தோஷமா வாழுவான்னா அதுதானே நமக்கும் சந்தோஷம்? விடு! மதினி ரெண்டு நாள் புலம்பிட்டு நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு வச்சா சந்தோஷமா வந்து வாழ்த்துவாங்க.”
குந்தவைக்கு இருந்தாலும் மனது அடித்துக்கொண்டது. உறவுக்காரர்கள் யாரும் தங்கள் மீது வருத்தப்பட்டுவிடக் கூடாதென வெகு கவனமாக இருப்பார்கள் அவரும் அங்கயற்கண்ணியும். அப்படியும் சின்னதாய் ஒரு தடுமாற்றம்!
பெருமூச்சு விட்டவர் “அதுவும் சரிதான்கா. நாளைக்கு மதினி பேசுனாங்கனா என்கிட்ட சொல்லுங்க. நான் பேசி அவங்களைச் சமாதானப்படுத்துறேன்” என்க அங்கயற்கண்ணிக்கும் அதுவே நிறைவாய்!
தங்களது திருமணப் பேச்சு சொந்தக்கார வட்டத்தில் உண்டாக்கிய சலசலப்பைப் பற்றி எதுவும் அறியாமல் மறுநாள் விடியலில் நேத்ரனுக்கு வழக்கமான ‘குட் மார்னிங்குடன்’ கூடுதலாய் ஒரு செய்தியையும் அனுப்பிவைத்தாள் வெண்பா.
“ஃப்ரெண்டோட கல்யாணத்துக்காக நான் சென்னைக்கு வர்றேன். அண்ணன் டிக்கெட் போட்டுட்டான். ட்ரெயின்ல தேடுனோம். கிடைக்கல. பஸ் டிக்கெட்தான் அவைலபிளா இருந்துச்சு. இன்னைக்கு ஈவினிங் கிளம்புவேன் இங்க இருந்து”
அவனுக்கு இருக்கிற பரபரப்பில் தனது செய்தியைப் படிக்க எங்கே நேரம் இருக்கப்போகிறதென அசட்டையாய் ஆஃப்லைன் சென்றவள் தனது அன்னை, மதினியுடன் நகைக்கடைக்குச் சென்று ஜானவிக்கும் அவளது வருங்கால கணவனுக்கும் பிரேஸ்லெட்டுகளை வாங்கிக்கொண்டாள்.
தங்கத்தில் மெல்லிய கொடி வடிவத்தில் இதயங்கள் போல வைரங்கள் இருக்கும் பிரேஸ்லெட்டை ஜானவிக்கும், கொஞ்சம் தடிமனாய்த் தங்கத்தில் சங்கிலி வடிவத்தில் இருக்கும் பிரேஸ்லெட்டை அவளது வருங்கால கணவனுக்கும் தேர்ந்தெடுத்திருந்தாள் அவள்.
சரியாய்க் கடையை விட்டு வெளியே வரும்போது நேத்ரனிடமிருந்து அழைப்பு வந்தது அவளது மொபைலுக்கு.
“ஹலோ!” என்றவளிடம்
“நீ என்னைவிட பிஸி போல! டீச்சரம்மாக்கு வாட்ஸ்அப்ல நான் அனுப்புன எந்த மெசேஜும் இன்னும் ப்ளூ டிக் வாங்கல. எங்க இருக்குற நீ? ஒரே சத்தமா இருக்கு” என்றான் நேத்ரன்.
வெறும் ஹலோ மட்டும்தான் சொன்னாள். அதற்குள் அவளது குரலையும் அவளுக்குப் பின்னே கேட்கும் பின்னணி இரைச்சல்களையும் கணித்து வெளியே வந்திருக்கிறாள் என ஊகித்துவிட்டானே!
“ஜுவல்லரிக்கு வந்தோம் நேத்ரன்”
“ஃப்ரெண்டுக்கு கிஃப்ட் வாங்கவா?”
“ம்ம்!”
“வாங்கியாச்சா?”
“ம்ம்”
“என்ன நீ ஒரு மார்க் கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணுற மாதிரி ம்ம் ம்ம்னு மட்டும் சொல்லுற”
நேத்ரன் குறைபடவும் “அம்மாவும் மதினியும் இருக்காங்க” என மெதுவாய்க் கிசுகிசுத்தபடிக் காரில் ஏறி அமர்ந்தாள் அவள். ஹேமாவும் உமையாளும் தங்களுக்குள் கமுக்கமாய்ச் சிரித்துக்கொண்டார்கள்.
“நம்ம வீட்டு மகாராணி கூச்சப்படுறாங்கத்தை. நீங்க முன்னாடி என்கூட வந்து உக்காந்துக்கோங்க”
ஹேமா காரை ஓட்ட முன்னிருக்கையில் அமர உமையாளும் அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
கார் கிளம்பியதும் கொஞ்சம் குரலை உயர்த்தி நேத்ரனிடம் பேசினாள் வெண்பா.
“நீங்க… நாளைக்கு உங்களை நான் சென்னையில பாக்க முடியுமா?” அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் என்ற ஊகத்தால் தயக்கத்துடன் கேட்டாள் வெண்பா.
“ஒரு நாள் நான் திருநெல்வேலியில இல்ல. உடனே நீ ஃபார்மலா பேச ஆரம்பிச்சிட்ட. இதுக்காகவே உன்னைக் கைக்குள்ளவே வச்சுக்கணும் டீச்சரம்மா.” என்றான் அவன் சிரிப்போடு.

“ப்ச்! நான் கேட்டேனே”
“அந்தக் கேள்வியே தப்புங்கிறேன். நீ வாடா நேத்ரன்னு சொன்னா நான் வந்து நிக்கப்போறேன். இவ்ளோ ஃபார்மலா ‘நான் உங்களைப் பாக்க முடியுமானு’ ஹாலிவுட் படத்தைத் தமிழ்ல டப் பண்ணுன மாதிரி பேசுனா வலிக்குதுல்ல”
அவன் சொன்ன உதாரணத்தில் சட்டென நகைத்துவிட்டாள் வெண்பா. அவளது சிரிப்பைக் கேட்டு உமையாள் திரும்பிப் பார்க்கவும் முகபாவனையை மாற்றிக்கொண்டாள்.
“அசெம்பிளி அமைச்சரவைனு பிஸியா இருப்பீங்கனுதான்…” என மெதுவாகச் சொன்னாள் அவனிடம்.
“அதெல்லாம் வேற ட்ராக். நான் உனக்காக என் நேரத்தை ஃப்ரீ ஆக்கிப்பேன். சொல்லு! என்னைப் மீட் பண்ணணுமா டீச்சரம்மாக்கு? ம்ம்?” எனச் சீண்டும் குரலில் அவன் வினவ
“ஆமா! பாக்கணும்! கொஞ்சம் உங்ககூட ஊர் சுத்தணும்! பீச்ல காலார நடக்கணும். இப்பிடி நிறைய இருக்கு. இதுல எதெல்லாம் சாத்தியப்படுமோ அதை மட்டும் நிறைவேத்துங்க ப்ளீஸ்” என்றாள் மெதுவாய்.
“நீ லொகேஷன் மட்டும் அனுப்பு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன். ஹான், கல்யாணம் எங்க?”
“லீலா பேலஸ்ல”
“ஓகே! நீ வீட்டோட லொகேஷன் அனுப்பு. சென்னைக்கு எப்ப வர்றனு அந்த டைமிங்கையும் அனுப்பு”
அவன் பேசும்போதே “தம்பி தலைவர் உங்களை…” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது பின்னணியில்.
“நீங்க போங்க நேத்ரன். நான் பஸ்ல ஏறுனதும் உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணுறேன்”
“வர்றேன்! அப்புறம் பேசலாம்”
அவன் அழைப்பைத் துண்டித்தபோது தன்னையும் அவனையும் பிணைத்த நூல் ஒன்று அறுந்துபோன உணர்வு வெண்பாவுக்கு. அதற்காக எப்போதும் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தால் அவனது வேலை என்னாவது?
மொபைலால் தனது நெற்றியில் தட்டிக்கொண்டாள் வெண்பா குறுஞ்சிரிப்புடன். முப்பொழுதும் அவன் தன்னுடன் இருக்கவேண்டுமென எண்ணுவதெல்லாம் என்ன மாதிரியான பைத்தியக்காரத்தனம்! தன்னைத் தானே கேட்டுக்கொண்டவளுக்கு இந்த மனம்தான் காதல் வந்துவிட்டால் வெட்கம் கெட்டுப்போகிறதே என்ற திகைப்பு!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


