“என் கேமராக்குத் தீனி போடுற மாதிரி ஏதாச்சும் ஒரு இடம் சொல்லு. வீட்டுலயே இருந்தா செமய்யா போரடிக்குது பவி”
சுப்புலெட்சுமி செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை வாயில் அதக்கியபடி இருந்த பவித்ராவிடம் தீவிரமானக் குரலில் கூறினான் ஆதித்யன்.
“நல்லா சாப்பித்து உதம்பைத் தேத்து ஏ.கே” என்று வாயில் அடக்கிய கொழுக்கட்டையால் வார்த்தைகள் குழறியது பவித்ராவுக்கு.
“சாப்பிட்டுட்டுப் பேசு”
அவள் தலையில் தட்டியவனின் விழிகள் ஜன்னல் வழியே தெரிந்த நந்தினியின் வீட்டை நோட்டமிட்டன.
அவனது விழிகளின் ஓட்டத்தைக் கவனித்த தருண் நூல் பிடித்து அவை எங்கே போய் சங்கமிக்கின்றன என்பதைக் கண்டுகொண்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன தல! லவ்ஸா?”
கேட்டவனின் வயிற்றில் ஒரு குத்து விழுந்தது.
“அம்மாஆஆ!”
வயிற்றைப் பிடித்துக்கொண்டு அவன் அமர்ந்துவிட மகேஷும் பவித்ராவும் சிரித்தார்கள்.
“என்ன சிரிப்பு? ஒழுங்கா கொழுக்கட்டைய காலி பண்ணிட்டு ஏதாச்சும் ஒரு ஸ்பாட் செலக்ட் பண்ணு. சென்னைல இருந்தவரைக்கும் எங்க ஊரு அப்பிடி எங்க ஊரு இப்பிடினு பக்கம் பக்கமா பேசுவ. இங்க வந்ததும் கூட்டிட்டுப் போக ஏன் இவ்ளோ வருத்தப்படுற?”
“சோம்பேறித்தனமா இருக்கு ஏ.கே”
“இதோட பதினைஞ்சாவது கொழுக்கட்டை உள்ள போகுது. இதுக்குலாம் சோம்பேறித்தனமா இல்லையா?”
அந்நேரத்தில் “பவி” என்று சுப்புலெட்சுமியின் குரல் கேட்க அவள் எழுந்து கீழ்த்தளம் நோக்கி விரைந்தாள்.
ஆதித்யன் அவளைத் தொடர்ந்து படியிறங்கியவன் நந்தினியின் வீட்டுப்பின்வாயிலில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா எனப் பார்த்தபடியே கீழே சென்றான்.
“இதுல கொழுக்கட்டை இருக்கு. நந்தினிக்குக் குடுத்துட்டு வந்துடு. ராணிக்கு இந்தக் கொழுக்கட்டைனா உசுரு”
சுப்புலெட்சுமி பவித்ராவிடம் பேசிக்கொண்டிருப்பது அவனது செவியில் விழுந்தது.
காலையிலிருந்து அவனது விழிகள் நந்தினியைக் காண ஆளாய்ப் பறக்கின்றன. சம்பந்தப்பட்டவளின் தரிசனம் கிடைக்கவில்லை. ஏன் இப்படி யோசிக்கிறோம் எனத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டு ஆதித்யன் கண்டறிந்த பதில் – ‘இப்போது அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்ற அக்கறை’.
‘ஹூம்! நம்பிட்டோம்’ என்று மனசாட்சி செய்த கேலியை ஓரங்கட்டிவிட்டுச் சுப்புலெட்சுமியை நோக்கிச் சென்றான்.
“என்ன யோசிக்குற? அந்தப் பொண்ணு நமக்காக காசு வாங்காம வீடியோ நடிச்சுக் குடுத்திருக்கு. அதுக்குக் கொழுக்கட்டை குடுத்தா உன் பங்கு குறைஞ்சிடும்னு வருத்தமா?” கிண்டலடிப்பது போல் பேசி சாமர்த்தியமாக அவளோடு சேர்ந்து நந்தினியின் வீட்டுக்குப் போய் நின்றான்.
“யுவா அத்தை”
வெளியே நின்று நந்தினியின் அன்னை யுவராணியின் பெயரைச் சுருக்கி அழைத்தவளின் கையிலிருந்த எவர்சில்வர் டிபன் பாக்சைப் பிடுங்கிக்கொண்டான்.
“உள்ளே போய் குடுக்காம ஏன் வாயில்ல நின்னு அவங்க பேரை ஏலம் விடுற பக்கி?”
ஆதித்யன் பவித்ராவைக் கிண்டல் செய்தபோதே நந்தினியின் அன்னை வந்துவிட்டார்.
“நல்லா சொல்லுங்க தம்பி. என்னமோ இந்த வீட்டுக்கு இப்ப தான் புதுசா வர்ற மாதிரி வாசல்ல நின்னு அனுமதிலாம் கேக்குறா” என்று சிரித்தார்.
பின்னர் “நீங்க?” என்று கேட்டார்.
“என்னோட ஃப்ரெண்ட் அண்ட் ஒர்க்கிங் பார்ட்னர் அத்தை. நாங்க எல்லாரும் சேர்ந்து சென்னைல ஒரு கம்பெனி நடத்திட்டு வர்றோம்” என்று பவித்ரா பெருமிதத்தோடு சொல்ல யுவராணியும் அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
“உங்களுக்கும் நந்துவுக்கும் இந்தக் கொழுக்கட்டை பிடிக்கும்னு பெரியம்மா குடுத்துவிட்டாங்க. நந்து எங்க?”
பவித்ரா வாய் விட்டுக் கேட்டுவிட்டாள். ஆதித்யனோ விழிகளால் அவள் எங்கே எனத் தேடிக்கொண்டிருந்தான்.
“ஹூம்! மனசுக்குப் பாரமா இருக்குனு குமாரகோயில் வரைக்கும் போயிருக்கா” என்றார் யுவராணி சோர்வுடன்.
அவரது கையைத் தட்டிக்கொடுத்தாள் பவித்ரா.
“ஏன் இவ்ளோ சலிச்சிக்கிறிங்க? நம்ம நந்துவ கல்யாணம் பண்ணிக்க அவனுக்குக் குடுத்து வைக்கலத்தை. இப்பிடி மூஞ்சிய வச்சா நீங்க பாக்க கொடூரமா இருக்கிங்க. எங்க கொஞ்சம் சிரிங்க பாப்போம்”
இலகுவாகப் பேசி அவரைச் சிரிக்க வைத்தபோது நந்தினியும் வந்துவிட்டாள்.
ஆதித்யனின் மனம் ‘நந்தினியின் மனபாரம்’ என்ற வார்த்தையிலேயே சடன் ப்ரேக் போட்டு நின்றுவிட்டது. அவளே வந்து நிற்கவும் விழிகளால் “ஆர் யூ ஓ.கே?” என வினவினான் அவன்.
அன்னையின் முன்னிலையில் புதியவனுடன் உரையாடும் தைரியம் அவளுக்கு இல்லை. மருண்ட விழிகளால் அன்னையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் பவித்ராவைப் பற்றிக்கொண்டாள்.
“கொழுக்கட்டையா பவி? வாசல் கிட்ட வர்றப்பவே ஏலக்கா மணம் மூக்கைத் துளைச்சிடுச்சு” என்று கொழுக்கட்டையையே காணாதவள் போல அதைச் சாப்பிட ஆரம்பித்தாள்.
யுவராணி பவித்ராவிடம் ஏதோ கேட்க அவளும் பதில் சொல்ல இருவரும் பின்வாயிலுக்குச் சென்றுவிட கூடத்தின் தனித்து விடப்பட்டார்கள் ஆதித்யனும் நந்தினியும்.
கிடைத்த இடைவெளியில் கொழுக்கட்டை இருந்த டிபன் பாக்சை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டவன் “என்னை உனக்குத் தெரியவே தெரியாதுல்ல?” என்று கண்களில் கூர்மை மின்ன கேட்க
“ஐயோ அப்பிடி இல்லங்க. அம்மா இருந்தாங்க. அதான்…:” என்று இழுத்தபடி விரல் நுனியில் சுடிதார் துப்பட்டவைச் சுற்றி அவிழ்த்தாள்.
“அஹான்!”
அந்த ‘அஹானில்’ கூடமே அதிர்ந்த உணர்வு அவளுக்கு.
மெல்லிய சிரிப்புடன் “உங்க வாய்ஸ் ரொம்ப கம்பீரமா இருக்கு” என்றாள்.
“என்ன ஐஸா? நீ அண்டார்டிகாவையே தூக்கி என் தலையில வச்சாலும் இப்ப கொஞ்சநேரத்துக்கு முன்னாடி என்னைத் தெரியாத மாதிரி காட்டிக்கிட்டயே, அதை மறக்கமாட்டேன்”
“அப்பிடி இல்லங்க. உங்களைத் தெரியும்னு சொன்னா எப்பிடி தெரியும்னு கேள்வி வரும். அப்புறம்…”
“கிணத்தடி, தற்கொலை முயற்சி, அழுகாச்சி சீன் இதெல்லாம் சொல்ல வேண்டியது வரும். அதானே?”
புருவங்களை உயர்த்தி அவன் வினவியதும் சங்கடமாகப் புன்னகைத்தாள் நந்தினி.
“நான் உன்னைக் கோவில் வாசல்ல தானே மீட் பண்ணுனேன். அதைச் சொல்லிருக்கலாமே?” என்று கிடுக்குப்பிடியாய் அவன் அடுத்தக் கேள்வியை முன்வைக்க
“அது… வந்து… அம்மாக்கு அதுல்லாம் பிடிக்காதுங்க ஏ.கே” என்றாள் நந்தினி தவிப்போடு.
அவளது குரலில் ‘ஏ’கே’ என்ற தனது பெயர் மிகவும் அன்னியமாக ஒலிப்பது போல் தோன்றியது ஆதித்யனுக்கு.
“இட்ஸ் ஓ.கே. பை த வே, என்னை ஏ.கேனு கூப்பிடவேண்டாம். என் பேர் ஆதித்யன்”
“உங்க ஃப்ரெண்ட்ஸ் அப்பிடி தானே கூப்பிடுறாங்க?”
“நீ என் ஃப்ரெண்ட் இல்லையே. அதான் சொன்னேன்”
இலகுவாகச் சொன்னபடி கொழுக்கட்டை ஒன்றைக் கடித்துக்கொண்டே பின்வாயிலுக்கு விரைந்தான் அவன்.
நந்தினியின் முகமோ வாடிப்போனது. பவித்ராவின் தோழமைகளைத் தனது தோழமைகளாகக் கருதியவளுக்கு ஆதித்யனின் பதிலால் வருத்தம்.
பின்வாயிலில் இருந்து அன்னை மற்றும் பவித்ராவுடன் திரும்பி வந்தவன் அவளைப் பார்த்து சிரிக்க அவளோ முகம் வாட அறைக்குள் போய்விட்டாள்.
“நந்துவ இப்பிடி பாக்கவே பிடிக்கலத்தை. நாங்க எல்லாரும் ரோட் ட்ரிப்பா கண்ணுப்புளி மெட்டு போகலாம்னு இருக்கோம். நந்துவையும் என் கூட அழைச்சிட்டுப் போகட்டுமா?” என ஆசையாகக் கேட்டாள் பவித்ரா.
யுவராணிக்குமே மகளின் மனவேதனை குறைந்தால் போதுமென்ற எண்ணம். உடனே சம்மதித்துவிட்டார்.
“ஏ.கே உன் கேமராக்கு ஃபுல் மீல்ஸ் கிடைக்கப்போகுது” என்று சொல்லி அவனது கையைப் பற்றி இழுத்துப்போய்விட்டாள் பவித்ரா.
அவர்கள் போவதை அறையின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த நந்தினியின் தோளில் மென்மையாகப் படிந்தது யுவராணியின் கரம்.
“இன்னுமா குமரனை நினைச்சு வருத்தப்படுற?”
அன்னை இவ்வாறு கேட்டதும் ‘ஙே’ என்று விழித்தவள் ‘நான் ஏன் அவனைப் பற்றி நினைக்கப்போகிறேன்’ எனக் குழம்பினாள்.
ஆதித்யன் தன்னைத் தோழமை என்று சொல்லாத வருத்தம் அவளுக்கு. ஆனால் யுவராணிக்கு இது தெரியாதே! மகளின் சிகையை வருடிக்கொடுத்தவர் “குமரனோட சுயரூபத்தைத் தெரிஞ்சிக்க உனக்குக் கடவுள் குடுத்த வாய்ப்பா இதை நினைச்சுக்க. வருத்தப்படாத. என் தங்கத்துக்கு ஏத்த ராஜகுமாரன் சீக்கிரமா வந்துடுவான்” என்று ஆதுரமாகச் சொல்லி அவளைப் பவித்ராவோடு கண்ணுப்புளி மெட்டுக்குக் கிளம்பச் சொன்னார்.
அன்னை சென்றதும்தான் நந்தினிக்கு முந்தைய இரவில் ஆதித்யனிடம் பேசியதிலிருந்து இப்போது வரை குமரனின் நினைவு எழவில்லை என்பதே உறைத்தது.
‘இவ்வளவு தானா என் காதல்?’ எட்டு வருடக் காதலை அந்நேரத்தில் சந்தேகித்துவிட்டாள் அவள்.
ஆதித்யனின் வார்த்தைகள் அந்த முன்னாள் காதலை விட படுவீரியமான விளைவை அவளது மனதில் உண்டாக்கி விட்டதன் அறிகுறி இது என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அப்போது நந்தினிக்கு இல்லை.
சிறிது நேரத்தில் பவித்ரா வந்து அழைக்கவும் அவளது தோழமைகளோடு குண்டாறு அணை அமைந்திருக்கும் கண்ணுப்புளி மெட்டுக்குக் கிளம்பினாள்.
எப்போதும் ஆண் பிள்ளைகளோடு நட்பை ஒரு எல்லைக்குள் வைத்திருக்குமாறு அறிவுறுத்தும் யுவராணிக்குக் கூட பவித்ராவின் தோழமைகள்மீது வித்தியாசமான எண்ணம் எழவில்லை.
“கைலாஷ் அண்ணன் கார்ல தான் போகப்போறோம். அண்ணன் எனக்காக அமவுண்டுல கொஞ்சம் டிஸ்கவுண்ட் பண்ணுவாராம். நீ எங்க கூட வந்தா மட்டும் போதும்” என்று சொல்லி நந்தினியின் கையைப் பற்றி பின்னிருக்கையில் தன்னோடு அமர்த்திக்கொண்டாள் பவித்ரா.
கைலாஷ் என்பவர் அந்த ஊரைச் சேர்ந்த ஓட்டுனர்தான். சுப்புலெட்சுமிக்குத் தூரத்து உறவு வேறு. அதனால் கட்டணத்தில் சின்ன சலுகை கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.
நந்தினியைப் பார்த்ததும் அவரது விழிகளில் இரக்கம் பரவியது.
அதை ஆதித்யன் கவனித்துவிட்டான். கார் கிளம்பியதும் பின்னிருக்கையில் நந்தினியும் பவித்ராவும் ஏதோ பேசிக்கொண்டு வர, அவர்களுக்குப் பின்னே எதிரும் புதிருமாக இருந்த இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் தருணும் மகேஷும். நால்வரும் அரட்டை அடிக்க, ஆதித்யன் காரை ஓட்டிக்கொண்டிருந்த கைலாஷிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான்.
“நீங்க அந்தப் பொண்ணு நந்தினிய ஏன் பரிதாபமா பாத்திங்க?”
“நல்லப்பொண்ணு தம்பி. அத்தை மவனை உசுரா நினைச்சு விரும்புச்சு. அந்தப் பயலும் காதலிச்சான். இந்த ஊர் முழுக்க நந்தினிக்குக் குமரன் தான்னு எல்லாருமே பேசிக்கிட்டாங்க. இந்தப் பொண்ணு வேலை பாத்து குடுத்த காசுல வெளிநாடு போய் படிச்சவன், அங்க பெரிய வேலை கிடைச்சு குடும்பநிலமை உசந்ததும் இந்தப் பொண்ணை விட்டுட்டு நம்ம ஊரு மிராசுதார் மகளைக் காதோட காது வச்ச மாதிரி நிச்சயம் பண்ணி, ரெண்டு நாளுக்கு முன்னாடி திருப்பதில கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவன் வெளிநாட்டுல இருந்து வந்ததும் நந்தினிக்கும் அவனுக்கும் நிச்சயம்னு பேசி வச்சிருந்தாங்க. அம்மாவும் மகளும் எவ்ளோ நம்பிக்கையோட இருந்திருப்பாங்க? பாவம்! நல்லவங்களை ஆண்டவன் ரொம்ப சோதிக்குறான்”
நந்தினியை மணக்கவிருந்தவன் சொல்லாமல் கொள்ளாமல் வேறொரு பணக்காரியைத் திருமணம் செய்துகொண்டான் என்ற தகவல் சுப்புலெட்சுமியின் வாயிலாக ஆதித்யனுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றே. ஆனால் அவளது உழைப்பில் வந்த பணத்தால் உயர்ந்துவிட்டு இப்படி பாதியில் கழற்றிவிட்டவன் என்ற தகவல் புதிது.
‘சீ! இவன் எல்லாம் என்ன ஆண்மகன்? காதலித்தவளின் பணத்தில் படித்து, வேலை தேடி வாழ்க்கையில் உயர்ந்ததும் அவளைத் துரத்திவிட்டு இன்னொருத்தியை மணந்திருக்கிறான். இப்படியும் சிலர் இருந்து ஆண் வர்க்கத்தின் மானத்தை வாங்கி தொலைக்கிறார்கள்.’
மனதுக்குள் குமைந்தபடி ரியர்வியூ மிரரில் தெரிந்த நந்தினியின் முகத்தைப் பார்த்த ஆதித்யனுக்கு அவள்மீது இரக்கம் சுரந்தது.
அவன் தன்னைப் பார்ப்பது அறிந்து விழிகளில் கூர்மையை ஏற்றி என்னவென அவள் புருவத்தால் வினவவும் சட்டெனப் பார்வையைத் திருப்பிக்கொண்டான் ஆதித்யன்.
கண்ணுப்புளிமெட்டு வந்து ஊருக்குள் கார் நுழையவும் ஆங்காங்கே நிறுத்தி கேமராவால் இயற்கை காட்சிகளை அள்ள ஆரம்பித்தான் அவன்.
மேற்கு தொடர்ச்சி மலையின் கம்பீரத்தோற்றத்தை இரசிக்க இரசிக்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.
மதியப்பொழுதாக இருந்தாலும் மெல்ல தீண்டிய காற்றில் கூட குளுமையின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.
“அந்தப் பக்கம் குண்டாறு டேம் இருக்கு தம்பி. அப்பிடியே காரை விட்டிங்கனா பார்க் வரும். இதே வழில போனா அருவி வரும். ஆனா இந்த வழில கார் போகாது. பெரிய பெரிய பாறையும் கல்லுமா இருக்கும்.”
“அப்ப நடந்தே போகலாமா?” மகேஷ் ஆர்வமாகக் கேட்க
“பட் கொஞ்சதூரமா இருக்கும்” என்றாள் பவித்ரா.
“சோ வாட்? நடந்துக்கிட்டே வீடியோ கேப்சர் பண்ணுனா கால்வலி தெரியாது”
ஆதித்யன் தீர்வு சொல்லவும் அனைவரும் நடக்கச் சம்மதித்தார்கள். தாங்கள் கிளம்புகிற சமயத்தில் அழைக்கும்போது வந்தால் போதுமெனக் கைலாஷையும் அனுப்பிவைத்தார்கள்.
இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.
செல்லும் வழியில் குண்டாறு நீர்த்தேக்கம் தென்பட்டது.
“வாவ்! ரொம்ப அழகா இருக்கு பவி” கண்களில் ஆச்சரியம் கொட்டி அதைக் கேமராவில் வீடியோவாக்கினான் ஆதித்யன்.
“இங்கயே டைம் வேஸ்ட் பண்ணப்போறிங்களா? அருவிக்கரை பாக்க இதை விட அழகா இருக்கும்” என அவர்களுக்கு ஆசை காட்டினாள் நந்தினி.
“அப்ப உடனே கிளம்பலாம்”
மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்.
சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். காட்டுப்பாதை தான் என்பதால் இரு பக்கமும் விருட்சங்கள், புற்கள், காட்டுச்செடிகள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வஞ்சனையில்லாமல் அந்தப் பாதையை அழகாக்கியிருந்தன.
“இதுதான் தொட்டாச்சிணுங்கி”
இளம்ரோஜாவண்ணத்தில் பஞ்சு போன்ற மலர்களுடன் படர்ந்திருந்த தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டுக் காட்டினாள் நந்தினி.
ஆதித்யனின் விழிகள் சுருங்கிய தொட்டாச்சிணுங்கி இலைகளை விடுத்து நந்தினியின் விரல்களிலிருந்த மருதாணிச்சிவப்பில் படிந்தன.
பவித்ரா மற்ற இருவருடனும் வாயாடியபடி முன்னே செல்ல ஆதித்யன் நந்தினியிடம் பேச்சு கொடுத்தான்.
“அந்தப் பக்கம் போனா ஒரு தோட்டம் உண்டு. அங்க நிறைய மிளகு கொடி படர்ந்திருக்கும்” என்று பக்கவாட்டில் கை காட்டிச் சொன்னவளிடம்
“உனக்கு மருதாணி வைக்கப் பிடிக்குமா?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டு வைத்தான் அவன்.
“திடீர்னு ஏன் இந்தக் கேள்வி?”
“உன் விரலுக்கு அந்த மருதாணி அழகா இருக்கு. தெரிஞ்சிக்கலாமேனு கேட்டேன்.”
தோள்களைக் குலுக்கியவன் “எனக்கு மருதாணியோட நறுமணம் ரொம்ப பிடிக்கும்” என்றான் கண்களில் ஆர்வத்தோடு.
“குமரனுக்குப் பிடிக்கும். அவனைப் பாக்குறப்ப மருதாணி சிவந்திருக்குறதைக் காட்டி அவனுக்கு என் மேல இவ்ளோ காதலானு கேக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் தங்கியிருக்குற பி.ஜிய சுத்தி எந்த இடத்துலயும் மருதாணி இல்ல. தேடிப் புடிச்சு செங்கல்பட்டு ஃப்ளவர் மார்க்கெட்ல வாங்கி அரைச்சு வச்சேன்”
“வாட்? செங்கல்பட்டு ஃப்ளவர் மார்க்கெட்? பி.ஜி? எனக்குப் புரியல”
குழப்பத்தோடு பேசியபடியே நடந்தவனை விசித்திரமானப் புன்னகையோடு ஏறிட்டாள் நந்தினி.
“நான் சீனியர் ஜாவா டெவலப்பரா டெக்னோசிஸ் பரனூர் ப்ராஞ்ச்ல ஒர்க் பண்ணுறேன்”
நிதானமாகச் சொல்லிவிட்டு ஆதித்யனை அடக்கப்பட்டப் புன்னகையோடு பார்த்தாள் நந்தினி.
“வாட்? ஓ மை காட். நான் இதைக் கொஞ்சம் கூட எதிர்பாக்கல”
ஆச்சரியத்துடன் சிகையை, தாடையைக் கோதிக்கொண்டவன் “இந்த ஜிமிக்கி, கால்ல பூசிருக்குற மருதாணி இதெல்லாம் பார்த்துட்டு…” என்று தடுமாற
“ஐ.டில ஒர்க் பண்ணுனா ஜிமிக்கி போடக்கூடாது, மருதாணி வைக்கக்கூடாதுனு ரூல் எதுவும் இருக்குதா?” என்று கேலியாக வினவினாள் அவள்.
ஆதித்யன் பட்டெனக் கரங்களைக் குவித்தவன் “கொஞ்சம் ஸ்டீரியோடைப்பா யோசிச்சிட்டேன்” என்றான்.
“இந்த ஸ்டீரியோடைப்பிங்கை மைசூர் ப்ராஞ்ச்ல ஒர்க் பண்ணுனப்ப நிறைய ஃபேஸ் பண்ணிருக்கேன். பழகிப்போச்சு. சரி வாங்க, நடந்துக்கிட்டே பேசலாம்”
நந்தினி பாதையைக் காட்ட தனக்குள் எழுந்த ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு அவளோடு நடந்தான் ஆதித்யன்.
ஒவ்வொரு சந்திப்பிலும் அவளைத் தான் பார்க்கும் பரிமாணம் மாறிக்கொண்டே வருவதை உணர்ந்தவனுக்கு இன்னும் புதிய பரிமாணங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் துளிர்த்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


