“நம்ம ஜெனரேசன் எல்லாரும் ‘வாட்ஸ்அப்‘ல பிஸியா இருக்காங்க. நான் மட்டும் தான் இன்னும் 1990-களுக்குப் போன மாதிரி லெட்டர் எழுதிட்டு இருக்கேன். நீ அட்வகேட் ஆகுறதுக்குள்ள நான் ஒரு பெரிய கவிஞராகிடுவேன் போல.”
–வானதியின் கடிதம்…
லண்டலிருந்து இந்தியா கிளம்பத் தயாரானார்கள் அருள்மொழியும் வானதியும். கிளம்பும் முன்னர் தர்மலிங்கம் அருள்மொழியைத் தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே சென்றதும் “ஆர்தரோட நெஃப்யூ மூலமா ஃபைல்ஸ் எல்லாம் சேகரிச்சாச்சு போலயே?” என்று அவர் சொன்னதும் அருள்மொழியிடம் சின்னதாய் திடுக்கிடல்.
“என்னடா அப்பிடி பாக்குற? எனக்கு எதுவுமே தெரியாதுனு நீயும் நினைச்சிட்டிருக்கியா? தர்மா மாமாவ தலைவரோட பினாமியா மட்டும்தான் இத்தனை வருசம் பாத்தியா நீ?” என்று அர்த்தபுஷ்டியோடு சிரித்தார் தர்மலிங்கம்.

அருள்மொழியின் கண்களில் கூர்மை! நிமிர்வாய் நின்றவன் “நான் அப்பிடி மட்டும்தான் உங்களை நினைக்குறேன்னு தோணுதா என்ன? ஜெயசந்திரனோட கைதியா நான் இங்க இருந்தேன்னா நீங்க என்னைக் கண்காணிக்குற வார்டனா இருந்திங்க. ஆனா ஒன்னு, நீங்க அன்பான வார்டன். அதையும் நான் மறுக்கமாட்டேன்” என்றான் துணிவாக.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தர்மலிங்கத்தின் முகத்தில் கர்வம் மின்னியது. சுந்தரமூர்த்தியின் அதே நிமிர்வை அவனிடம் கண்டவருக்குக் கர்வம் வராமல் இருக்குமா? அவனது தோளில் தட்டிக்கொடுத்தார்.
“உனக்குத் தெரியாதது நிறைய இருக்கு அருள். நீ என்ன நினைக்குற? மெமரி லாஸ்னு நீ சொன்னதை டாக்டர்ஸ் நம்பி ரிப்போர்ட் குடுத்தாங்கனா? நீ ஹாஸ்பிட்டல்ல கண் முழிச்ச நிமிசத்துல தலைவரை பாத்த பார்வையிலயே உனக்கு எதுவும் மறக்கலனு நான் கண்டுபிடிச்சிட்டேன்டா. டாக்டரை ரிப்போர்ட் குடுக்க வச்சு உன்னை இங்க கொண்டு வந்தது தலைவருக்கு பயந்து மட்டுமில்ல. சுந்தரமூர்த்தி ஐயா மேல எனக்கு இருந்த விசுவாசம். இங்க வந்த அப்புறம் இங்க உள்ள டாக்டர்களை சரி கட்டி தலைவர் கிட்ட இன்னைக்கு வரைக்கும் உன் மறதி நாடகத்தை நானும் சேர்ந்துதான் நடத்திட்டிருக்கேன்.” என்றவர் இன்னொரு கோப்பினையும் சேர்த்தே கொடுத்தார் அவனிடம்.
“என்ன இது?” என்றவனிடம்,
“இதுல உனக்குத் தெரியாத தகவல் எல்லாம் இருக்கு. என்ன செய்யணும்னு நினைக்குறியோ அதை செய். ஆனா சட்டத்துக்குப் புறம்பா எதையும் செஞ்சிடாத. அதிகாரம் கைக்கு வராத வரைக்கும் நீ என்ன செஞ்சாலும் சுந்தரமூர்த்தி ஐயாவோட நிலமைதான் உனக்கும் வரும். தலைவர் இந்த விசயத்துல மகளோட தாலி இறங்குனாலும் கவலைப்படமாட்டார்” என்றார் தர்மலிங்கம் கசப்போடு.
அருள்மொழிக்குத் தலை சுற்றாதக் குறை.
“ஏன் இதெல்லாம் ஒளிச்சு மறைச்சுப் பண்ணணும் மாமா? அந்தாளுக்கு ஏன் இவ்ளோ பயப்படுறிங்க? இந்த அடிமை வாழ்க்கை அவசியமா?” ஆற்றாமையோடு வினவினான் அவன்.
தர்மலிங்கம் விரக்தியாய் சிரித்தார். “எல்லாராலையும் மனசுல சரினு பட்டதை வாழ்க்கைல செயல்படுத்த முடியாது அருள். நான் கட்சியோட அடிப்படை உறுப்பினரா இருந்தவன். எனக்கு தலைவரோட குணம் அத்துப்படி. அவர் எதிரினு நினைச்சா அவங்களை கருவறுத்துடுவார். சுந்தரமூர்த்தி ஐயா விசயத்துல அதுதானே நடந்துச்சு. நான் அப்ப தனிமரம். என் உயிரை நினைச்சு எனக்குப் பயமில்ல. என் அண்ணன் குடும்பம்? அந்தச் சமயத்துல அகத்தியனுக்கு வெறும் இருபது வயது. நான் யோசிச்சது என் அண்ணன் குடும்பத்துக்காக. நான் நேர்மை நியாயம்னு பேசி தலைவர் கையால செத்திருந்தா என் இடத்துல இன்னொருத்தன் இதே மாளிகைல உன்னை கைதியாக்கிருப்பான் அருள். அவன் உன்னை எப்பிடி நடத்துவானோங்கிற கவலையும் எனக்கு இருந்துச்சு. எல்லா இடத்துலயும் வீரமா நடந்துக்க முடியாதுப்பா. நான் உன் அளவுக்கு வீரனும் இல்ல. உன்னையும் பாதுகாக்கணும். என் அண்ணன் குடும்பத்தையும் காப்பாத்தணும். எனக்குக் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டேன். எனக்கு வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னுதான். நீ நல்லா வாழணும். தலைவரைப் பழிவாங்குறதா சொல்லி உன் வாழ்க்கைய இழந்துடாத. சத்திரியனா யோசிக்கிறதை விட சாணக்கியனா யோசி அருள்.”
பேசி முடித்த பிறகு கண்கள் கலங்கியிருந்தது தர்மலிங்கத்துக்கு. அருள்மொழியும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் இருந்தான். என்ன நினைத்தானோ, தர்மலிங்கத்தை அணைத்துக்கொண்டான். அவன் பேசவில்லை.
பல நேரங்களில் ஒரு வார்த்தை கூட பேசாத மௌனத்தில் இமாலய அன்பின், பெருமதிப்பின் சாராம்சம் ஒளிந்திருக்கும். அதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்கள். அருள்மொழியின் மனதிலுள்ள உணர்வுகளை தர்மலிங்கமும் புரிந்துகொண்டார்.
அவரையும் மெகனையும் இந்தியா வருமாறு அன்போடு அழைத்துவிட்டு வானதியும் அருள்மொழியும் இந்தியாவுக்குக் கிளம்பினார்கள்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களைத் திருமண வாழ்க்கையில் சண்டையும் சச்சரவுமாகக் கழித்தவர்களுக்கு அந்த ஒன்றரை மாதத்தின் இறுதியில் அமைந்த தேனிலவின் சந்தோஷ தருணங்கள் இனி எந்தக் கருத்துவேறுபாட்டிலும் உறவின் பிணைப்பை உடைக்காத உறுதியை வளர்த்தது.
சென்னை வந்ததும் ஜஸ்டிஸ் டுடேவில் அடுத்தக் கட்ட வேலை ஒன்று வானதிக்காகக் காத்திருந்தது. அதற்காக மதுரை தேனி பகுதிகளுக்கு அவள் பயணம் செய்தாக வேண்டும். உற்சாகமாகவே அதற்காக அவள் தயாரானாள்.
அதே நாளின் இரவில் ஜெயசந்திரனிடம் தனக்குக் கட்சியில் உறுப்பினராக இணைய விருப்பமெனத் தனியே அழைத்துச் சென்று கூறினான் அருள்மொழி. ஜெயசந்திரனா உடனே சம்மதிப்பார்? அவனைச் சந்தேகக்கண்ணோடு பார்த்தார் முதலில்.
“என்ன திடீர்னு அரசியல் ஆசை? உங்க தொழில் நல்லாதானே போகுது?”
“தொழில், பணத்துல எனக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா அதிகாரம் தானே ஒரு மனுசனுக்கு உண்மையான அடையாளத்தைக் குடுக்கும்? அந்த அதிகாரம் அரசியல்ல ஈஸியா கிடைக்கும்னு நினைக்குறேன். ஏன்? நான் கட்சில சேரக்கூடாதா?”
“சேரக்கூடாதுனு இல்ல. ஆனா ஆதித்யனைக் கட்சியில சேர்த்தப்பவே வாரிசு அரசியல்னு எதிர்கட்சி விமர்சனம் பண்ணுனாங்க. இப்ப மருமகனையும் சேர்த்தா…”
“சுந்தரமூர்த்தியோட மகனா நான் கட்சில சேர விரும்புறேன்”
அருள்மொழி அழுத்தமாய் சொன்னதும் ஜெயசந்திரனுக்கு மாபெரும் அதிருப்தி.
‘இவனுக்கு மகளைத் திருமணம் செய்து வைத்து நான் ஒரு கணக்கு போட்டால் இவன் வேறுவிதமாய் கணக்கு போடுகிறானே’.
“மருமகனே! இன்னைக்குக் கட்சி இந்த நிலமைல இருக்குறது என்னால, இந்த ஜெயசந்திரனால. உங்களைக் கட்சில சேர்க்குறதுல பிரச்சனை இல்ல. இப்ப இருக்குற அரசியல் சூழல் அதுக்குச் சாதகமா இல்ல. கட்சி, அரசியல் இதெல்லாம் விட்டுட்டு உங்க தொழிலைக் கவனிங்க.”
அலட்சியமும் அதிகாரமுமாய் அவர் சொல்ல அருள்மொழியிடமோ கல்லின் கடினம்.
“இந்த விசயத்துல என் முடிவை நான் மாத்திக்கப்போறதில்ல. நான் சொன்னதைக் கேட்டா உங்களுக்கு நல்லது.”
“என்ன? பொண்ணைக் கட்டிக் குடுத்ததால பம்முவேன்னு நினைச்சிங்களோ?” நக்கல் தொனி ஜெயசந்திரனிடம்.
சட்டென நகைத்தான் அருள்மொழி.
“இதுல வானதியை இழுக்குற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல. உங்களுக்கு ஸ்விட்சர்லாந்து, ஸ்காட்லாந்துல எல்லாம் நிறைய இன்வெஸ்ட்மெண்ட் இருக்காமே! எல்லா தகவலும் இப்ப என் விரல் நுனில. நீங்க என் விருப்பத்தை மறுத்திங்கனா அந்தத் தகவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கசிய ஆரம்பிச்சிடும். எலெக்ஷனுக்கு இன்னும் கொஞ்சம் மாசம் தான் இருக்கு. யோசிங்க.”
ஏளனத்தொனியில் எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அருள்மொழி.
மறுநாள் வானதி மதுரைக்குக் கிளம்பியவள் வேலையோடு வேலையாக அருள்மொழியின் பெரியம்மாவையும் பார்த்துவிட்டு வரலாமென முடிவெடுத்திருந்தாள். அவளது வேலைக்கிடையே ரமாவின் வீட்டுக்கும் சென்றுவிட்டாள்.
“நீ வந்த வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” வழக்கத்தைக் காட்டிலும் ஆதுரம் சொட்டியது ரமாவின் விசாரிப்பில். வானதிக்கே அது ஆச்சரியமாய்! கணேசனும் மனம் குளிர அவளை வரவேற்றார்.
“அருளும் உன் கூட வந்திருந்தா சந்தோசமா இருந்திருக்கும். சரி விடு! நீ வந்ததே எனக்கு மனசு நிறைஞ்சு போச்சு” என்றவர் வானதிக்கு உபசரிப்பில் குறை வைக்கவில்லை.
மதிய உணவுக்குப் பிறகு கணேசன் ஓய்வெடுக்கப் போய்விட வானதியோ ரமாவிடம் தனக்கு வேண்டிய தகவல்களைக் கேட்டறியும் ஆவலோடு அவருடன் அமர்ந்துவிட்டாள். மெகன் ப்ரவுனுக்கு அடுத்து அருள்மொழி கொடுத்த பட்டியலில் ரமாவின் பெயர் தான் இருந்தது.
முதலில் பொதுப்படையாய் பேசிவிட்டுப் பின்னர் தனது சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தாள். முக்கியமாய் தனது தந்தை மீதான அவரது வெறுப்புக்கானக் காரணத்தைக் கேட்க முனைந்தாள்.
“உங்களுக்கு ஏன் எங்கப்பாவ பிடிக்கல? அம்மா கிட்ட அன்பா நடந்துக்குறிங்க. ஆனா அப்பாவ பத்தி பேசுனா கல்யாணத்துல கூட நீங்க முகம் சுழிச்சதை நான் கவனிச்சேன். என்ன காரணம்?”
“இதுக்காகத்தான் இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்தியா? நான் கூட மாமியார் மேல உள்ள பாசத்துல வந்தியோனு நினைச்சேன்” சற்றே கிண்டலாய் ஒலித்தக் குரலுக்குப் பொருத்தமற்ற சோகமான பாவனை ரமாவின் வதனத்தில்!

“உங்கப்பா இப்ப தலைவரா இருக்குற கட்சிய ஆரம்பிச்சவர் உன் தாத்தா. அவர் தனக்கு அப்புறம் கட்சியோட பொறுப்பை ஒப்படைக்க நினைச்சது உன் அப்பா கிட்ட இல்ல. என் தங்கச்சி வீட்டுக்காரர் சுந்தரமூர்த்தி கிட்ட. அப்ப இருந்து உன் அப்பாவோட குணாதிசயத்துல மாற்றம் வந்துச்சானு கேட்டா, நான் இல்லனு தான் சொல்லுவேன். ஆரம்பத்துல இருந்து சுந்தரமூர்த்தி மேல உன் அப்பாக்குப் பொறாமை உண்டு. கட்சில உன் தாத்தாக்கு அப்புறம் சுந்தரமூர்த்திக்குத்தான் மரியாதை அதிகம். அவருக்கான ஆதரவும் அங்க அதிகமா இருந்துச்சு. உன் தாத்தா இறந்ததும் கட்சியோட தலைமை சுந்தரமூர்த்திக்குப் போகப்போகுதுனு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. உனக்கு நம்பிக்கை இல்லனா அப்ப இருந்த நியூஸ் பேப்பரை செக் பண்ணு. இரண்டாகப் பிரிகிறதா த.மு.கனு கொட்டை எழுத்துல எல்லா நியூஸ் பேப்பர்லயும் தலைப்பு செய்தியா வந்துச்சு. என் தங்கச்சி வீட்டுக்காரர் ரொம்ப நியாயமான மனுசன். அவரை ஒருதலைபட்சமா நடத்துனதால உங்கப்பாவ எனக்குப் பிடிக்காது. அருள் குடும்பம் அழிஞ்சு போனதுல என் முழு சந்தேகமும் உன் அப்பா மேல தான். இதை நான் சொல்லல. அந்தச் சமயத்துல மொத்த தமிழ்நாடும் பேசுச்சு”
சொல்லி முடிக்கையில் ரமாவின் கண்கள் குளமாகியிருந்தன. எப்போதும் அலட்சியம் மட்டுமே குடியிருக்கும் அவரது வதனத்தில் துயரத்தின் சாயல்! வானதி அவரது கையைப் பற்றிக்கொண்டாள்.
“அருளோட குடும்பத்துக்கு நடந்த அத்தனை கெட்டதுக்கும் என் அப்பா காரணமா இருப்பார்னு உங்களுக்குத் தோணுதா?” என மெதுவாய் வினவினாள்.
ரமா கண்களைத் துடைத்தவர் “உன் அப்பாவைத் தவிர சுந்தரமூர்த்திக்கு யாரும் கெட்டது பண்ணிருக்க முடியாதுங்கிறது என் ஊகம். ஏன்னா நாம ரொம்ப நம்புற நபர்கள் தான் சுயநலத்துக்காக நம்ம முதுகுல குத்துவாங்க. ஒரேயடியா உன் அப்பாவையும் குறை சொல்லிட முடியாது. சுந்தரமூர்த்தியோட சொந்த அப்பா அம்மாவே அவரைத் தலைமுழுகி வெறுத்து ஒதுக்கிவச்சாங்க” என்றவர் “ராஜா மாதிரி வாழ்ந்த மனுசன். என் தங்கச்சிக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தார். அவங்க காதல் அவரோட பேரண்ட்ஸ்க்குப் பிடிக்கல. சபிச்சுதான் அவரையும் என் தங்கச்சியையும் அனுப்பி வச்சாங்க. எல்லாம் நல்லபடியா போயிட்டிருந்துச்சு. பிரணதி கர்ப்பவதியா என் தங்கச்சி வீட்டுக்கு வர்ற வரை” என்றார் கசப்போடு.
பிரணதி! சுந்தரமூர்த்தியின் தங்கை! வானதிக்கு அவரை நன்றாகத் தெரியும். அந்தக் குடும்பம் அழிந்தபோது பிரணதி இரண்டு மாதம் கருவுற்றிருந்தார் என்பதையும் அறிவாள்.
“அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அத்தை? அவங்களே பாவம்!”
“என்ன பாவம்? யாரையோ காதலிச்சு வயித்துல புள்ளையோட வந்தவளை அவளைப் பெத்தவங்களே சேர்த்துக்கல. கூடப்பிறந்தவ படுற கஷ்டத்தைப் பாக்க முடியாம சுந்தரமூர்த்தி அவளைத் தான் கூட வச்சுக்கிட்டார். அவ காலடி எடுத்து வச்ச நேரமே அந்தக் குடும்பத்துக்கு அழிவு ஆரம்பிச்சிடுச்சு. மகராசி வயித்துப்புள்ளையோட என் தங்கச்சி குடும்பத்தையே ஒரேயடியா எமலோகத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டா. மகனும் மகளும் வேற ஜாதில காதலிச்சதால சுந்தரமூர்த்தி அப்பாவே ஆள் வச்சு சுந்தரபாண்டியபுரம் வீட்டுக்குத் தீ வச்சார்னு அந்தச் சமயத்துல இன்னொரு பேச்சும் உலாவுச்சு. எது உண்மைனு அருளுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா அவனுக்கும் பழசு எல்லாம் மறந்துடுச்சே”
ரமா மனத்தாங்கலோடு அவரது ஊகங்களோடு சேர்த்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய சிக்கல்களையும் ஊகங்களையும் வானதியிடம் பகிர்ந்துகொண்டார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

