வானதி கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் மதுரை தேனி சுற்றுவட்டாரத்தில் தனது அடுத்த இன்வெஸ்டிகேட்டிவ் ஆபரேஷனுக்காகச் சுற்றி வந்தவள் ஒருவழியாகச் சென்னைக்கு விமானம் ஏறவும் செய்தாள்.
வீட்டுக்கு வந்தவளின் செவியில் விழுந்தது அவளது தமையன் ஆதித்யன் தந்தையிடம் அதிருப்தியோடு பேசிக்கொண்டிருந்த விசயமே!
“அவனுக்கு வானதியை கல்யாணம் பண்ணியே வச்சிருக்கக் கூடாதுப்பா. என்ன தெரியும் அவனுக்கு அரசியலைப் பத்தி?”
அருள்மொழியைப் பற்றிய பேச்சு என்றதும் வானதியின் தலை சூடானது. தமையன் அருள்மொழியைப் பற்றி துச்சமாய் பேசிய விதம் பிடிக்காமல் புயல் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளை அங்கே எதிர்பாராத இருவரும் திணறும்போதே ஆதித்யனை தீப்பிழம்பாய் உறுத்து விழித்தாள்.
“அருள் இந்த வீட்டோட மருமகன். நீ அந்த மரியாதையை அவனுக்குக் குடுக்கணும். அவனுக்கு அரசியல் தெரியாதுனே வச்சுப்போம், உனக்கு அரசியல்ல எல்லாம் தெரியுமா? நீ துணை முதலமைச்சர் ஆகக் கனவு காணுறப்ப என் புருசன் அரசியலுக்கு வரணும்னு ஆசைப்படக்கூடாதா?”
“அவனுக்கு ஓவரா வக்காலத்து வாங்காத. நான் தேர்தல் வியூகம் வகுக்குறதுல கிங். எனக்குத் துணை முதலமைச்சராகுறதுக்கு எல்லா தகுதியும் இருக்கு. உன் புருசனுக்கு அரசியல்ல ஆனா ஆவன்னா தெரியுமாடி?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆதித்யனிடம் பேச விருப்பமின்றி தந்தையிடம் திரும்பினாள் வானதி.
“நீங்க தானே அவனை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிங்க. வேற ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா வரதட்சணைனு எவ்ளோவோ செஞ்சிருப்பிங்கதானே? அதுக்குப் பதிலா அரசியல்ல அருள் என்ன ஆசைப்படுறானோ அதைச் செஞ்சு குடுக்கலாமேப்பா. சுந்தர் மாமா மகன் அவன். ரொம்ப தந்திரமான அட்வகேட். முக்கியமா நீதி நியாயம்னு உளறமாட்டான். இதுக்கு மேல உங்க இஷ்டம்.”
காச்மூச்சென்று கத்திவிட்டு மேல்தளத்துக்கு வந்து சேர்ந்தவள் அருள்மொழி அவனது மடிக்கணினியில் கண்ணாய் இருப்பதைப் பார்த்துவிட்டு அதிருப்தியாய்த் தொண்டையைச் செருமினாள்.
அருள்மொழி மலர்ச்சியோடு அவளைப் பார்த்தவன் அணைக்க வரவும் சட்டென விலக்கி நிறுத்தினாள் வானதி.
“என்ன திடீர்னு அரசியல்ல ஆர்வம் உனக்கு? உன் தொழில் நல்லாதானே போகுது? ஏன் இந்த விபரீத ஆசை?”
கீழே கத்திய அதே தொனியில் அருள்மொழியிடமும் அவள் பேச அவனுக்கோ எரிச்சல்.
“ஏன்? உன் அண்ணனும் அப்பாவும் மட்டும்தான் அந்தக் கட்சிய ஆளணுமா? அதே கட்சிக்காக உழைச்சுச் செத்தவரோட மகன் நான். எனக்கு அந்தக் கட்சில சேரணும்னு ஆசை வரக்கூடாதா? அந்தக் கட்சி என்ன உன் குடும்பச் சொத்தா? ஜெயசந்திரன் மகளால அவங்கப்பாக்கு எதிரா யோசிக்க முடியுமா? போடி.”
சலிப்போடு சொன்னவன் பால்கனிக்குப் போய்விட்டான் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு.
இரவுணவுக்குப் பிறகும் இருவரும் மௌனத்தை உடுத்திக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்கள். அருள்மொழி அக்கடாவென படுத்துக்கொண்டான். வானதிக்கு உறக்கம் வரவில்லை.
‘இவனுக்காக நான் அண்ணனிடம் சண்டையிட்டிருக்கிறேன். இவன் என்னை புரிந்துகொள்ளாமல் சுயநலவாதியெனப் பட்டம் சூட்டுகிறானே’.
மதுரை, தேனியில் சேகரித்த தகவல்களை ஆர்ட்டிக்கிளாகத் தயார் செய்ய வேண்டிய வேலை இருந்தது. இப்போதைய மனநிலையில் உறக்கம் வராது என்பதால் அந்த வேலையில் ஆழ்ந்து போனாள் வானதி. மொத்த அறையும் இருளில் மூழ்கியிருக்க வானதி அமர்ந்திருந்த மேஜையில் ஒரு மேஜை விளக்கு ஒளிர்ந்து அவளது வேலைக்கு உதவிக்கொண்டிருந்தது.
வானதி நெட்டி முறித்துச் சோம்பலைக் காட்டினாள். தட்டச்சு செய்ததில் கைவிரல்கள் வலியெடுத்தன. கண்களும் மடிக்கணினியைப் பார்த்துப் பார்த்து எரிந்துகொண்டிருந்தன. ஆனால் இன்னும் அவள் அந்த ஆர்ட்டிக்கிளை முழுவதுமாகத் தட்டச்சு செய்து முடிக்கவில்லை. இவ்வளவு நேரம் தகவல்களை நம்பிக்கையான ஆவணங்களிலிருந்து எடுத்துத் தொகுப்பதில் நேரம் கடந்தோடியிருந்தது. பாதி ஆர்ட்டிக்கிளில் இருக்கும்போதே உடற்சோர்வு ஆட்டி வைத்தது.
“இன்னும் தூங்கலையா?” உறக்கம் கலைந்து வினவினான் அருள்மொழி.
“வேலை இருக்கு.”
பாதி உறக்கத்திலிருந்த கண்களைக் கசக்கியபடி எழுந்து வந்தவன் அவளருகே வந்து மடிக்கணினியில் நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவு இரண்டு மணி.
“ஹேய்! ரெண்டு மணி ஆகுது. இவ்ளோ நேரமாவா வேலை பாக்குற? போதும். வந்து தூங்கு.”
உறங்குவதற்கு முன்னர் நடந்த வாக்குவாதத்தை யோசித்தவனுக்கு, ஒருவேளை அதனால்தான் உறங்க முடியாமல் வேலை செய்துகொண்டிருக்கிறாளோ என்ற குற்றவுணர்ச்சியுடன் கூடிய ஐயம். வானதி முடியாதெனத் தலையாட்டினாள்.
“நாளைக்கு இந்த ஆர்ட்டிக்கிளை சப்மிட் பண்ணணும் அருள்,” என்றவள் கழுத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் கழுத்து வலியைச் சற்று மட்டுப்படுத்த முயன்றாள்.
அருள்மொழி அவளது கழுத்தோரம் தனது கரங்களால் அழுத்திவிட்டவன், “ரொம்ப நேரம் இப்பிடியே உக்காந்திருந்தா கழுத்து முதுகெல்லாம் வலிக்கத்தான் செய்யும்” என்று சொல்ல, வானதிக்கோ அவனது கரங்களின் அழுத்தம் வலித்த கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இதமாக இருந்தது.
ஆனால் இதமான உணர்வு நீடித்தால் அவள் வசமிழப்பது உறுதி. தெரிந்தேதான் இந்தத் திருடன் செய்கிறான் என்று புரிந்ததும் அவனது கைகளைத் தோள்பட்டையிலிருந்து விலக்கிவிட்டாள் வானதி.
“உங்க சேவைக்கு நன்றி! போய் தூங்குங்க பாரீஸ்டர்.”
“நான் ஜஸ்ட் மசாஜ்தானே பண்ணுனேன்,” அப்பாவி போலச் சொல்லிவிட்டு இன்னொரு இருக்கையை அவளருகே போட்டு அமர்ந்துகொண்டான்.

“நீ யாருனு எனக்குத் தெரியும்டா. திருட்டுப்பூனை நீ!” கிண்டலாய்ச் சொல்லிவிட்டு அவள் தட்டச்சு செய்வதில் முனைப்பானாள்.
அருள்மொழி அந்த மேஜை மீது கை வைத்து, அந்தக் கை மீது கன்னத்தை வைத்து வானதியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வேலையில் மூழ்கிவிட்டால் உறக்கம், உணவைக்கூட மறந்துவிடுவாள் என்பதை இத்தனை நாட்களில் அவன் அறிந்திருந்தான். சில நேரங்களில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகளோ வாக்குவாதங்களோ அதீதமானால், அந்த வேலையை ஒரு போதையாக எடுத்துக்கொள்வாள் வானதி.
அது அருள்மொழியை முன்பெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இப்போது குற்றவுணர்ச்சியைக் கிளறுகிறது. இனி வாக்குவாதங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென யோசித்தபடியே வேலையில் இலயித்திருந்தவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
குவிந்த பார்வை, ஒரு ஓவியன் தான் வரைந்து முடித்த ஓவியத்தின் கடைசி வண்ணத்தீற்றலை ரசிப்பதைப் போல அவளில் மூழ்கியிருந்தது. விரல்கள் கடகடவென விசைப்பலகையில் தட்டச்சு செய்வதும், புருவங்கள் சுருங்குவதும் கூட ஹைக்கூ கவிதையாய்!
ஒரு பெண்ணின் அறிவு சார்ந்த உழைப்பை ரசிப்பதில் ஆண்கள் கைதேர்ந்தவர்கள். அன்புக்குரியவள் தன்னைத் தவிர்த்து வேறொன்றில் மும்முரமாக இருக்கும் தருணங்களில் அவளை ரசிக்கும் ஆண்கள், அதீதக் காதலின் நட்சத்திரத் தூதுவர்கள்!
அருள்மொழியின் பார்வை தன் மீது படர்ந்து ஒரு வலை போலப் பின்னுவதை உணர்ந்தபடியே தட்டச்சு செய்துகொண்டிருந்தவளின் இதழ்கள் முறுவலில் குளித்தன.
“நம்மளை மாதிரி மானங்கெட்ட கப்பிள் இருக்கமாட்டாங்க அருள்.”
“அஹான்!” வார்த்தைகள் வெளிவந்தாலும் கண்கள் அவளை விட்டு அகலவில்லையே!
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எதிரி நாடுகள் மாதிரி சண்டை போட்டுக்கிட்டோம். அப்பிடி ஒரு சம்பவம் நடக்கவே இல்லங்கிற மாதிரி இப்ப பேசிட்டிருக்குறோம். மான ரோசமே இல்ல நமக்கு.” வானதி கேலியாய்க் குறிப்பிட, அருள்மொழியின் இதழ்களிலும் சிரிப்பின் சாயல்.
“புருசன் பொண்டாட்டி வாழ்க்கையே அப்பிடித்தான். அதை விடு. பதினைஞ்சு நாள் ரெஸ்ட் இல்லாம வேலை பாத்திருப்ப. உன் ஆபிஸ்ல டைம் கேட்டு அப்புறமா இந்த வேலைய பாரு.”
வற்புறுத்தி அவளைப் படுக்க வைத்தான் அருள்மொழி. படுத்திருந்தவளின் கால்களை மடியில் வைத்துக்கொண்டவன் மெதுவாக அழுத்திவிட வானதிக்கும் அது இதமாக இருந்தது.
“சாரி! நான் கத்துனதுக்கு” – அருள்மொழி.
தலையை உயர்த்தியவள் இரு கைகளையும் விரித்து அவனை நோக்கி கண் சிமிட்ட, அவளது அணைப்பில் அடங்க அருள்மொழிக்குக் கசக்கவா செய்யும்? வாகாய் அந்த அணைப்பில் அடங்கிக்கொண்டான் அவன்.

மெல்ல அவனது சிகையை கோதிக்கொடுத்தவள் “உன் கிட்ட பேசுறதுக்கு முன்னாடி அப்பா கிட்ட பேசிட்டுத்தான் வந்தேன். உனக்கு ஆசையா இருந்தா அரசியல்ல இறங்கு. ஆனா அந்த அரசியல் உன்னை முழுங்காம பாத்துக்க.” என்க, அருள்மொழி அவளது உள்ளங்கையில் இதழ் பதித்தான்.
“இந்த உலகத்துல என்னை முழுசா முழுங்க உன் காதலால மட்டும்தான் முடியும்.” மெதுவாகச் சொன்னவனுக்கு அவளது அணைப்பில் அன்றிரவு சுகமான நித்திரை! வானதியும் களைப்பில் கண்ணுறங்கிப் போனாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

