“இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரி இயங்குறதுக்கு அடிப்படையே நம்ம மக்களுக்கு வெள்ளை தோல் மேல உள்ள மோகம்… இவங்க ஃபேர் ஸ்கின் பின்னாடி லபோதிபோனு அலைஞ்சிட்டிருப்பாங்க, அதே நேரம் ஃபாரினர்ஸ் நம்ம ஊர்ப்பொண்ணுங்களை ‘டஸ்கி பியூட்டி’னு ரசிப்பாங்க… வெயில்ல போனா சன்டேன் வந்துடும்னு முகமூடிக்கொள்ளைக்காரிங்க மாதிரி ஃபேஸ் புல்லா கவர் பண்ணிட்டு நம்ம ஊர் பொண்ணுங்க சுத்துற நேரத்துல ஃபாரின் கேர்ள்ஸ் சன்ஸ்க்ரீன் போட்டுட்டு பீச்ல சன்பாத் எடுத்து டேன் ஆகிட்டிருப்பாங்க… நம்ம மக்களுக்கு மெலானின் மேல தீராவெறுப்பு… இது மட்டும் குறைஞ்சுதுனா நான் ஃபேர் ஸ்கின் பியூட்டியா இருப்பேனேனு நினைக்காத ஆளுங்களே இல்ல… ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க, இந்தியன் ஸ்கின்ல இருக்குற அதிகபட்ச மெலானின் தான் இங்க உள்ள மக்களுக்கு ஸ்கின் கேன்சர் அதிகமா வராததுக்குக் காரணம்… நியாயப்படி இந்தியன் பீபிள் மெலானினுக்கு தேங்க்ஸ் சொல்லணும்”
– கிரிஷ்
முந்தைய நாள் நடந்த சம்பவத்திற்கு பிறகு கிருஷ்ணராஜசாகர் தெளிந்துவிட்டான். காலையில் எழுந்ததும் அம்ரித் அருகே உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு யானை பலம் வந்ததை போல இருந்தது.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி என் மீது பாசம் வைத்திருக்கும் அம்ரித் என்னுடன் இருக்கையில் வேறு யார் என்ன சொன்னால் என்ன?
அவனது நெற்றியில் புரண்ட சிகையை ஒதுக்கிவிட்டு முத்தமிட்டான் கிருஷ்ணராஜசாகர். இரவு முழுவதும் ஓடிக்கொண்டிருந்த ஏ.சியால் அறையே ஸ்விட்சர்லாந்து போல குளிர்ந்து கொண்டிருக்க அம்ரித்துக்குக் கம்போர்ட்டரை இழுத்து மூடிவிட்டவன் வழக்கமாக நடைபயிற்சி செய்யும் தோட்டத்துக்குக் கிளம்பினான்.
இந்நேரத்துக்கு ஆனந்த்சாகர் எழுந்து உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார். உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் இருக்கும் அறைக்குப் போக விரும்பவில்லை அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நேற்றிரவு சம்பவத்தை அன்னை கட்டாயம் அவரிடம் கூறியிருப்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இக்கட்டிலிருந்து தப்பிக்க தோட்டத்து நடைபயிற்சியோடு உடற்பயிற்சியை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அங்கிருந்த புல்தரையை ஷூ கால்களால் அளவிட்டபடி நடந்தான்.
சற்று தொலைவில் அம்ரித்தும் நர்மதாவும் நட்டுவைத்திருந்த தாமரை கிழங்குகள் முளைத்து பரப்பிய இலைகளோடும் சில அல்லிச்செடிகளோடும் குளம் அவனை நீர்க்கரம் நீட்டி வரவேற்றது.
ஒரு காலத்தில் தாமரை அல்லிக்குப் பதிலாக கொய் மீன்கள் அழகாக நீந்திக்கொண்டிருந்த குளம் அது.
யாருக்கு அந்த மீன்கள் பிடிக்குமோ அவளே இல்லாத போது அவனது கவனம் குளத்தின் பக்கம் திரும்பவில்லை. அம்ரித்தின் வருகைக்குப்பிறகு குளத்திற்கு புதுவாழ்வு பிறந்தது.
யாருமற்ற அனாதையாய் கிடந்த குளத்திற்கு தாமரையும் அல்லியும் தத்துப்பிள்ளைகளாக வந்து சேர ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என வட்ட அலைகளை விரித்து பாட்டு பாடாத குறையாக குளம் ஜெகஜோதியாக காட்சியளித்தது.
கிருஷ்ணராஜசாகர் வியர்வை சொட்ட சொட்ட நடந்தவன் இளைப்பாற குளத்தின் பக்கவாட்டுச்சுவரில் அமர்ந்தான்.
நேற்றைய இரவு சம்பவத்தை மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்த்தான்.
அப்படி என்ன சொல்லிவிட்டாள்? எக்ஸ் ஒய்ப் தானே? சொன்னால் சொல்லட்டும். அவள் சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்ததாக அர்த்தமா என்ன?
மனசாட்சி அவனுக்கு ஆறுதல் கூறுவதாக பெயர் பண்ணிக்கொண்டு வேறு ஏதோ எண்ணத்தோடு பேசியது.
மனம் என்னடா மனம்? நான் இருக்கையில் நீ அதன் பேச்சை கேட்டுவிடுவாயா என கறுவிக்கொண்டு வந்தது மூளை.
எப்படியும் நித்திலா இங்கே வரமாட்டாள். நேற்றைய சீண்டலுக்குப் பிறகு அவள் பேசுவதே சந்தேகம் தான். அப்படி வந்தாலும் ஹனுமன் கோவிலில் அவளைப் பார்த்தபோது எப்படி சாதாரணமாக இருந்தாயோ அப்படியே இருக்க கற்றுக்கொள் என மூளை பேராசிரியனாக மாறி பாடம் எடுக்க கிருஷ்ணராஜசாகரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டான்.
தெளிந்த மனதோடு எழுந்தவன் குளித்துவிட்டு உடை மாற்றியபோது அம்ரித் நித்திலாவிடம் வீடியோ காலில் கொஞ்சிக்கொண்டிருந்தான்.
அவளது குரலைக் கேட்ட கிருஷ்ணராஜசாகரிடம் எவ்வித சலனமுமில்லை. ஏதோ பதிவு செய்யப்பட்ட ரோபோவின் குரல் போல கேட்டபடியே உடைமாற்றி முடித்தவன் அம்ரித் பேசி முடிக்கவில்லை என்றதும்
“நீ இன்னும் ப்ரஷ் பண்ணல அம்ரு… சீக்கிரம் பேசிட்டு ப்ரஷ் பண்ணு” என கட்டளையிட்டான்.
அம்ரித்தும் அவளிடம் பல் துலக்கப்போவதாக சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
அப்போது அறைக்கு வந்த நர்மதாவிடம் அம்ரித்தைக் கவனித்துக்கொள்ள ‘நானி’ ஒருவரை ஏற்பாடு செய்வது குறித்து பேசினான்.
“நான் ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே?”
“சொல்லுங்கம்மா”
“பெத்த அம்மாவ விட்டு இவனைப் பிரிச்சு கூட்டிட்டு வந்தது நானி வச்சு வளக்குறதுக்குத் தானா கிரிஷ்?”
“அப்ப நான் ட்வென்டி ஃபோர் ஹவர்சும் அம்ரு கூடவே இருக்கட்டுமா? ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் நர்மும்மா… ஆர்.ஜே பியூட்டி லான்ச் ஒர்க் நிறைய இருக்கு… அது போக அம்ருவோட ஸ்கூல் அட்மிசன் ஒர்க் வேற இருக்கு… அட்மிசன் ஒர்க்கை இப்ராஹிம் கவனிப்பான்… அம்ருவ கவனிக்க ஆள் வேணுமே? உங்களுக்கு அவன் பின்னாடி ஓடமுடியாதுனு தான் நானி வச்சுக்கலாம்னு சொல்லுறேன்”
எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கென கச்சிதமான பதில் வைத்திருப்பனிடம் என்ன சொல்லி புரியவைப்பது? சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் பிள்ளையை பணம் வருவதற்கான வழியாக மட்டுமே பார்ப்பார்கள். அவர்கள் ஆத்மார்த்த அன்புடன் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள மாட்டார்கள்.
“இதுக்கு நீ நித்திலாவையே வரவைக்கலாம்”
மனதிலிருப்பதை பட்டென போட்டு உடைத்தார் நர்மதா.
“அவ இங்க வந்து என்ன செய்யப்போறா?” என அலட்சியமாக கிருஷ்ணராஜசாகர் கேட்கவும் வேதாளம் மீண்டும் முருங்கைமரத்தில் தலைகீழாக தொங்க ஆரம்பித்துவிட்டதென சலிப்புடன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் நர்மதா.
ஒருவேளை அவள் இங்கே வந்தால் மீண்டும் மனம் மாறிவிடுவோமென மைந்தன் அச்சம் கொள்கிறானோ? அவனிடம் வெளிப்படையாகவே அதை கேட்க முனைந்தார்.
நீ நித்திலாவ லவ் பண்ணுறியா கிரிஷ்?”
அணிந்திருந்த ப்ளேசரை ஒருமுறை நாசுக்காக உதறிக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
“இந்தக் கேள்விய கேக்குறதுக்குப் பதிலா நீங்க என்னை ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்… இல்லனா இந்த உலகத்துலயே மோசமான கெட்டவார்த்தைய கண்டுபிடிச்சு திட்டிருக்கலாம்”
நர்மதா வாயடைத்துப் போய் நின்றார்.
“மேன்பவர் சப்ளை ஏஜென்சில இப்ராஹிம் டீடெய்ல்ஸ் குடுத்திருக்கான்.. அவங்க அனுப்பி வைக்கிற லேடீஸ்ல உங்களுக்கு ஓ.கேனு தோணுறவங்களை அப்பாய்ண்ட் பண்ணிடுங்கம்மா”
கட்டளை போல சொல்லிவிட்டுக் கீழ்த்தளத்துக்கு விரைந்தான். உணவுமேஜைக்கு ஆனந்த்சாகர் வரும் முன்னர் வீட்டை விட்டு கிளம்பிவிடும் அவசரம் அவனுக்கு.
செஃப் சுகுமாரின் கைவண்ணத்தில் காலையுணவு தயாராகியிருந்தது. கிருஷ்ணராஜசாகருக்காக மல்டி-க்ரெய்ன் தோசையும் புதினா சட்னியும் செய்திருந்தார். கூடவே அவனுக்குப் பிடித்த ஃப்ரூட் சாலட். ஒரு கோப்பை மாதுளை பழச்சாறு. இவ்வளவு தான் அவனது காலையுணவு.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டுமென வெறும் சத்துமாவு கஞ்சியைக் குடித்து வயிற்றைக் காயப்போடும் பணக்காரச்சீமான் இல்லை அவன்.
உடலைப் பேணுவதற்கான பயிற்சிகளை செய்துவிட்டால் போதாதா என்ற எண்ணமுள்ளவன். அவனது ஸ்ட்ராங் மெட்டபாலிசம் அதிகப்படியாக சதை போட அவனை அனுமதிக்காது என்பது போனஸ் பாயிண்ட்.
சாப்பிட்டு முடித்துவிட்டு தரிப்பிடத்தில் அவனுக்காக ஓட்டுனரோடு தயாராக நின்ற பி.எம்.டபிள்யூ 760 லி ஆர்மட் காரில் ஏறினான். குண்டு துளைக்காத வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கார் அது.
நேரே ராஜா அண்ணாமலைபுரம் அலுவலகத்தை அடைந்தவனுக்கு இப்ராஹிம் ஒரு முக்கிய தகவலோடு காத்திருந்தான்.
வந்ததும் அதை கேட்ட கிருஷ்ணராஜசாகர் அலட்டிக்கொள்ளவில்லை.
“காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில அவுட்-டேட் ஆன விரக்தில ப்ரஷ் மீட்ல கண்டபடி உளறி தள்ளிருக்கார்… இதை சீரியசா எடுத்துக்க சொல்லுறியா இப்ராஹிம்?”

“சீரியசா எடுத்துக்க வேண்டாம் சார்… பட் இக்னோர் பண்ணவும் வேண்டாம்னு சொல்லுறேன்… வீட்டுக்குப் பாதுகாப்பை இன்க்ரீஸ் பண்ணலாம்… கொஞ்சம் கார்ட்ஸ் அரேஞ்ச் பண்ணலாம்… வெளிய இருந்து வீட்டுக்குள்ள என்ன பொருளை கொண்டு வந்தாலும் செக் பண்ணிட்டு அலோ பண்ணலாம்”
“உஃப்” பெருமூச்சு விட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“ஓ.கே… செக்யூரிட்டிக்கான அரேஞ்ச்மெண்டையும் பாத்துடு” என இப்ராஹிமிடம் வேலையை ஒப்படைத்தான்.
*******
நியூரி அப்பார்ட்மெண்ட்ஸ், நுங்கம்பாக்கம்…
சமையலறையில் முணுமுணுப்பு வருவதை கேட்டபடி செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தார் ஜனார்தனன்.
வணிக செய்திகள் பகுதியைப் பார்த்ததும் அவரது கண்கள் ஜொளித்தது.
‘சாகர் குழுமத்தின் இயக்குனரும் சாகர் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுமத்தின் மேலாண்மை இயக்குனருமான சந்தீப் சாகர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேடன் ஹெல்ஸ்வொர்த்தோடு இணைந்து ஹாலிவுட் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்’
அதே நேரம் சமையலறையில் இருந்து வந்த முணுமுணுப்பு குறைசொல்லலாக மாறியிருந்தது.
“என் மகள் இல்லாத நேரத்துல அந்த வீட்டுல என்னமோ நடக்குது… நிஹி வரட்டும், எல்லாத்துக்கும் முடிவு கட்டச் சொல்லுறேன்”
உரத்தக்குரலில் பேசியவாறு கறிவேப்பிலையை எண்ணெய்யில் போட்டார் சைலேந்திரி. நிஹாரிகாவின் அன்னை.
இம்முறை அவர் சொன்னது ஜனார்தனனின் காதில் விழுந்துவிட்டது. ஆனால் அவர் வழக்கம் போல பேசவில்லை. கடந்த நான்காண்டுகளாவே அவர் சைலேந்திரியிடம் பேசுவதில்லை. அவரது கையால் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை.
கணவன் மனைவி என்ற பதத்திற்கு மரியாதையாக ஒரே வீட்டில் இருக்கிறார்கள். அவ்வளவு தான்!
செய்தித்தாளை மடித்த ஜனார்தனன் காபி காலியாகி டீபாய் மேல் அமர்ந்திருந்த கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் பிரவேசித்தார். அவர் உள்ளே வந்ததும் சைலேந்திரியின் குறைசொல்லல் நின்றது.
தாழித்த கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை கலவையைச் சட்னியில் ஊற்றி சட்னி கிண்ணத்தோடு சத்தமின்றி சமையலறையைக் காலி செய்தார்.
ஜனார்தனன் அப்படி ஒரு ஜீவன் அங்கே இல்லை என்பது போல சமையலறை அலமாரியில் இருந்த பெரிய பாட்டிலை எடுத்தார். அதில் முக்காவாசி நிரம்பியிருந்த ஓட்சை கரண்டியால் எடுத்து பாத்திரத்தில் போட்டவர் ஃப்ரிட்ஜிலிருந்த பாலை அதில் ஊற்றினார்.
சில நிமிடங்கள் பாலின் குளிர்ச்சி அடங்கும் வரை காத்திருந்து பாத்திரத்தை அடுப்பில் வைத்தவர் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த வாழைப்பழத்தை துண்டுகளாக்கினார்.

ஓட்ஸ் பாலில் வெந்து கஞ்சி பதத்திற்கு வரவும் அதில் வாழைப்பழத்துண்டுகளைப் போட்டு ஸ்பூனால் கிண்டியபடி பால்கனிக்குச் சென்றார்.
டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லியை விழுங்கிக்கொண்டிருந்த சைலேந்திரிக்கு அவரது செயல்பாடுகள் கண்ணீரை வரவழைத்தன.
“எவ்ளோ பிடிவாதம் இந்த மனுசனுக்கு? அந்தக் கழுதை சொல்லாம கொள்ளாம புருசனை விட்டுட்டு ஓடிப்போனதுக்கு நானும் என் மகளும் என்ன பண்ணுவோம்? ஜென்மவிரோதியா பாக்குறாரே”
வழக்கம் போல மனதிற்குள் புலம்பினார் சைலேந்திரி.
ஜனார்தனன் பால்கனியில் கிடந்த நாற்காலியில் அக்கடாவென சாய்ந்தமர்ந்து ஓட்ஸ் கஞ்சியை சாப்பிட ஆரம்பித்தார்.
காலையில் ஓட்ஸ் கஞ்சி, மதியம் காய்கறி கொஞ்சம் சாதம் மற்றும் தயிர், இரவு சப்பாத்தி அல்லது இட்லி – இவ்வளவு தான் அவரது சாப்பாடு.
ஆயுள் முடியும்வரை வாழவேண்டுமேன என கடமைக்குச் சாப்பிடுகிறார். இத்தனை வயதுக்குப் பிறகு தற்கொலை செய்துகொள்வது அவமானம் அல்லவா!
வாழைப்பழத்தோடு சேர்ந்த ஓட்ஸை அவசரமாக சாப்பிட்டதில் அவருக்குப் புரையேற “லொக் லொக்” என இருமினார் அவர்.
மூக்கில் சூடோடு பால் ஏறிக்கொண்டு எரிச்சல் வர தண்ணீர் எடுக்க எழுந்தவர் சைலேந்திரி தண்ணீர் தம்ளரை பால்கனிக்குக் கொண்டு வந்து நீட்டவும் இருமியபடி அமர்ந்துகொண்டார்.
“பேசவேண்டாம்… தண்ணிய குடிங்க போதும்”
சைலேந்திரி சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் இருமித் தீர்த்தவர் பேசவேயில்லை.
“அப்பிடி என்ன பாவம் பண்ணிட்டேன் நான்?”
குமைச்சலோடு கேட்டார் சைலேந்திரி.
அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காதவர் அரைகுறையாய் காலியான ஓட்ஸ் கஞ்சியோடு பால்கனியை விட்டுச் சென்றார். சமையலறை குப்பைத்தொட்டியில் ஓட்ஸ் கஞ்சியை ஜனார்தனன் கொட்டுவதைப் பார்த்து சைலேந்திரிக்குக் குற்றவுணர்ச்சி.
நாம் பேசியிராவிட்டால் இந்த மனிதர் சாப்பிட்டிருப்பாரோ?
அடுத்த நிமிடமே இதற்கெல்லாம் யார் காரணம் என நான்கு வருடங்களாக அவர் கறுவுகிறாரோ அவள் நினைவுக்கு வந்ததும் பொறுமையை இழந்தார்.
வெறும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிவிட்டு சோபாவில் சாய்ந்தவர் முன்னே வந்து நின்றார் சைலேந்திரி.
“ஏன் வயித்தை காயப்போடுறிங்க? போனவளை நினைச்சு நீங்களும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்துறிங்களே, இது உங்களுக்கே நல்லா இருக்கா?”
ஜனார்தனன் எதுவும் பேசவில்லை.
“உங்க கிட்ட தான் கேக்கேன்… ஏன் பதில் சொல்லமாட்றிங்க? உங்க மகள் நித்திலா புருசனை விட்டுட்டு ஓடிப்போனதுக்கு நானும் என் பொண்ணும் என்ன பண்ணுவோம்? எங்க கூட பேசி நாலு வருசம் ஆகுது… அப்பன் மேல பாசமில்லாம ஓடிப்போனவளுக்காக எங்களை ஒதுக்கி வைப்பிங்களா?”
ஆவேசமான சைலேந்திரியின் எந்தக் கேள்வியும் அவரைப் பாதிக்கவில்லை என்பது போல காட்டிக்கொண்டார் ஜனார்தனன்.
அதில் சைலேந்திரியின் கோபம் இன்னும் அதிகரித்தது.
“என் வயிறெரிஞ்சு சொல்லுறேன், அந்த ஓடுகாலி கழுதை நல்லா இருக்கமாட்டா… உருத்தெரியாம அழிஞ்சு நாசமா போயிடுவா”
அடுத்த நொடி அவரது காதுக்குள் ‘கொய்ங்’ என்ற சத்தம். கன்னமோ பாறையில் உராயந்ததை போல எரிந்தது.
கண்கள் அனிச்சையாய் கண்ணீரை சிந்த கோபாவேசத்துடன் நின்ற ஜனார்தனன் சைலேந்திரியின் பார்வையில் பட்டார்.
“இன்னொரு தடவை என் மகளை பத்தி பேசுன பல்லை உடைச்சிடுவேன்… நீயும் உன் மகளும் சதி பண்ணி தான் அவளை விரட்டுனிங்கனு எனக்குத் தெரியாதுனு நினைக்கிறியா? உன் மகள் கல்யாணம் நடக்கணும்னு நீ அவளை என்னெல்லாம் சொல்லி தாஜா பண்ணுன? உண்மைய சொல்லு, நீயும் உன் மகளும் சேர்ந்து உங்க காரியம் முடிஞ்சதும் என் பொண்ணை கொலை பண்ணிட்டிங்களா? இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளா இருக்கு”
ஜனார்தனன் தன் மீது போட்ட பழியில் சைலேந்திரி துடித்துப் போனார்.
“என்ன பேச்சு பேசுறிங்க? எனக்கு உங்க மகளைப் பிடிக்காது… அதுக்காக கொலை பண்ணுவேனாங்க? இத்தனை வருசம் என் கூட வாழ்ந்திருக்கிங்க, என் மேல இப்பிடி ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாமா?”
மனம் பொறுக்காமல் கண்ணீர் உகுத்தார் சைலேந்திரி.
“இத்தனை வருச வாழ்க்கையில நீ என் மகளையும் உன் மகளையும் ஒரே மாதிரி நடத்துறதா நம்பி ஏமாந்து போனேன்ல, அந்த ஏமாற்றத்தோட வலி என்னைப் பேச வைக்குது… உன் மகளோட வாழ்க்கைக்காக என் மகள் வாழ்க்கைய அடமானம் வச்சல்ல நீ… அப்பிடியும் உன் மனசு ஆறல, பணக்கார குடும்பத்துல அவ சந்தோசமா வாழ்ந்துடக்கூடாதுனு அம்மாவும் பொண்ணும் சதி பண்ணி என் மகளைத் துரத்திட்டு ஓடுகாலி பட்டம் வேற குடுக்குறிங்க… மனுசியாடி நீ? பெத்த பொண்ணு பணத்துக்குப் பின்னாடி ஓடுனப்ப தடுத்து நிறுத்தாம இன்னைக்கு வரைக்கும் சப்போர்ட் பண்ணுற நீ என் பொண்ணைப் பத்தி பேசலாமா? இனிமே ஒரு வார்த்தை என் பொண்ணு நித்திலாவை பத்தி நீயோ உன் மகள் நிஹாரிகாவோ பேசுனிங்கனா இந்த வீட்டுல கொலை விழும்… ஜாக்கிரதை”
கையை உதறிவிட்டு வெளியே போக எத்தனித்தவர் நின்றார். கண்ணீர் மல்க நின்ற சைலேந்திரியை அற்பப்பதரே என்பது போல பார்த்தார்.
“எழுதி வச்சிக்க, என் மகள் நித்திலா திரும்பி வருவா… அப்ப நீயும் உன் மகளும் என்னென்ன வண்டவாளம் பண்ணுனிங்கனு தெரியவரும்… அந்த நாள் தான் உன் வாழ்க்கையோட கடைசிநாளா இருக்கும் சைலேந்திரி… செஞ்ச பாவத்துக்கு உன் மகளும் அனுபவிப்பா”
கிட்டத்தட்ட சாபமே கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் ஜனார்தனன்.
நித்திலாவின் தந்தை. நான்காண்டுகளாய் மகள் எங்கே போனாள் என்ன ஆனாள் என்று கூட தெரியாமல் நடைபிணமாய் வாழும் மனிதர். அவள் வீட்டை விட்டுப் போவதற்கு முந்தைய நாள் எவ்வளவு சந்தோசமாக தன்னிடம் பேசினாள் என்பதை மறக்கவில்லை அவர்.
“சாகர் முன்ன மாதிரி இல்லப்பா… என் மேல அவருக்கு நிறைய அன்பு இருக்கு… எனக்கு இது போதும்பா”
தந்தையும் மகளும் பேசியதை சைலேந்திரி ஒட்டுக்கேட்டு நிஹாரிகாவுக்கு துப்பு கூறியதை நேரில் பார்த்த ஜனார்தனன் அன்று சைலேந்திரியைப் பேசாத பேச்சில்லை. மறுநாளே அவரது அருமை மகள் மாயமானாள்.
அவள் மீது அன்பையும் நேசத்தையும் அளவின்றி வைத்திருந்த மருமகன் பழையபடி இறுகிப்போனான். ஆம்! கிருஷ்ணராஜசாகருக்கு நித்திலா மீதிருந்த நேசத்தை அறிந்த ஒரே நபர் ஜனார்தனன் மட்டுமே! அவள் காணாமல் போன நாளன்று பதறியபடி அவன் விசாரித்ததும், சென்னையில் ஒரு இடம் விடாமல் விசாரித்ததையும் அன்றைய நாளின் முடிவில் வேதனையில் குமைந்ததையும் நேரில் கண்டவர் அல்லவா!
நித்திலா போன பிறகு சாகர் நிவாஸ் பக்கமே ஜனார்தனன் போனதில்லை. இருப்பினும் எங்கேயாவது சந்திக்க நேர்ந்தால் கிருஷ்ணராஜசாகர் அவரை மரியாதையுடனே நடத்துவான். அதே நேரம் நிஹாரிகாவையும் சைலேந்திரியையும் அவமானப்படுத்த தயங்கமாட்டான். அவன் வேதனை அவனுக்கு என ஜனார்தனனும் ஒதுங்கிவிடுவார். இன்றும் ஒதுங்கியிருப்பார். சைலேந்திரியின் வார்த்தைகள் அவரைப் பேசவைத்துவிட்டது.
மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் நித்திலா வருவாள் என்ற நம்பிக்கையோடு அவரும் காத்திருக்கிறார்! அவரது காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

