நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம். ஆனால் இங்கே பரிசுத்தமான மனிதன் என யாருமில்லை என்ற நிதர்சனம் நமக்குப் புரிபடுவதற்குள் அனேகம் முறை வாழ்க்கை அனுபவப்பாடத்தை எடுத்திருக்கும். யாரும் இறகில்லாத தேவதைகள் / தேவதூதர்கள் போல இருப்பதில்லை. அதே நேரம் கொம்பு முளைத்த சாத்தானாக யாரைக் கெடுக்கலாம் என்று முழுநேரமும் சிந்திப்பவர்களும் இல்லை. சூழ்நிலை ஒரு மனிதனை சில நேரங்களில் தேவதூதனாகவும், சில நேரங்களில் சாத்தானாகவும் காட்டும். இதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை எவ்வளவு சீக்கிரம் அடைகிறோமோ அவ்வளவு சீக்கிரம் வாழ்க்கையில் தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க முடியும்.
– அன்பனின் சிந்தனை சிதறல்கள்
“நீ சொன்ன மாதிரி கடையோட லே-அவுட்டை மாத்தியாச்சு அரசு… நானும் அருணும் அந்த வேலைய முடிச்சிட்டோம்… ஜூசர், இன்னும் சில எக்யூப்மெண்ட்ஸ் வாங்குறது மட்டும் பாக்கி”
தமக்கை கங்காவின் கணவர் பரணிநாதனிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தான் அன்பரசன். அவனது தந்தையின் பழக்கடையை அப்படியே ஜூஸ் பாராக மாற்றும் முயற்சியின் முதல் வேலை அதன் அமைப்பை மாற்றியமைப்பது.
அந்த வேலைக்காக ஆலங்குளத்துக்கும் சென்னைக்கும் அன்பரசன் அலைய வேண்டாமென பரணிநாதனே பொறுப்பெடுத்துச் செய்து முடித்துவிட்டார்.
“தேங்க்யூ சோ மச் மாமா… நீங்களும் அருணும் இல்லனா நான் ரொம்ப சிரமப்பட்டுப் போயிருப்பேன்… இன்னும் பத்து நாள் தான் இருக்கு நோட்டீஸ் பீரியட் முடியுறதுக்கு… அதுக்குள்ள என் கிட்ட ஒப்படைச்ச வேலைய சரியா முடிச்சு குடுத்துட்டேன்னா ரிலீவ் ஆகுறப்ப திருப்தியா இருக்கும்” என்றான் அன்பரசன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சார்வாள் எனக்கு தேங்க்ஸ் சொல்லுற அளவுக்குப் பெரிய மனுசன் ஆகிட்டிங்களோ? நான் பாத்து வளர்ந்தவன்டா நீ… உன் வாழ்க்கைல நீ சுயமா யோசிச்சு ஒரு தொழிலை ஆரம்பிக்கிறப்ப நான் அதுக்கு வேலை பாக்காம வேற யார் பாப்பாங்க? உன் அக்கா முன்னாடி இந்த தேங்க்சை நீ சொல்லிருக்கணும்” என்று பரணிதரன் கிண்டல் செய்யவும்
“ஐயோ அக்கா கிட்ட சொல்லிடாதிங்க மாமா” என பம்மினான் அவன்.
மறுமுனையில் மனம் விட்டுச் சிரித்த பரணிநாதன் “அப்புறம் நாளைக்குப் பிறந்தநாள்… தங்கச்சிமா உனக்கு எதுவும் கிப்ட் குடுத்தாளா? உங்க ஜென்ரேசன்லாம் பிறந்தநாளை வித்தியாசமா கொண்டாடுவிங்களேப்பா” என்று கேட்க
“ஆருவோட கிப்டுக்காக நான் காத்திருக்கேன் மாமா” என்றான் அன்பரசன். அவன் குரலில் இருந்த கனிவை மட்டும் தானே பரணிநாதனால் கேட்க முடியும், கண்களிலிருந்த காதலை அல்லவே!
“இந்தப் பிறந்தநாள் உன் வாழ்க்கையில மறக்க முடியாத நாளா அமைய என்னோட வாழ்த்துக்கள்” என்று வாழ்த்திவிட்டுப் பரணிநாதன் அழைப்பை முடித்துக்கொண்டார்.
அன்பரசன் புன்சிரிப்புடன் மொபைலைப் பார்த்தபடி நிற்பதைக் கவனித்த அவனது ரூம் மேட் கணேஷ் “உங்க பிறந்தநாளுக்கு இந்த வருசம் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடையாதா ஜி?” என்று கேட்க
“ட்ரீட் வேணும்.. அதானே?” என்றவன் கணேஷின் எண்ணுக்கு மெசேஜ் ஒன்றைத் தட்டிவிட்டான்.
“ரெஸ்ட்ரோ பார்ல ஆல்ரெடி உனக்கும் நவீனுக்கும் ரிசர்வ் பண்ணிட்டேன்… என்ஜாய்” என்று அவனது முதுகில் தட்டவும்
“பேச்சிலரா இது உங்களோட லாஸ்ட் பர்த்டே… நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணுங்கஜி” என்று ஆசையாக அழைத்தான் மகேஷ்.
“ஆளை விடுடா சாமி! கிளம்பு” என்று அவனது முதுகில் கை வைத்து தள்ளினான் அன்பரசன்.
“அதானே! நீங்க ஒரு சிப் குடிச்சிட்டா உலகம் அழிஞ்சிடாது? இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லப்பையனா இருக்கிங்கஜி” என்று குறைபட்டபடியே கிளம்பினான் மகேஷ்.
அவன் போனதும் கதவைச் சாத்தினான் அன்பரசன்.
ஆரபி இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளுக்கு நாளை தனது பிறந்தநாள் என்று தெரியும். ஏதாவது சர்ப்ரைஸ் தனக்காகக் காத்திருக்குமோ?
யோசித்தபடி சமையலறைக்குள் புகுந்தவன் தனக்கு மட்டும் சாப்பிட ப்ரெட் ஆம்லேட் போட்டு எடுத்துக்கொண்டான்.
வழக்கமாகப் பத்து மணிக்கு ஆரபியிடமிருந்து வரும் ‘குட் நைட்’ வந்ததும் பளீர் புன்னகை அவனிடம்!
அவள் ‘ஆப்லைன்’ போகும் முன்னர் அவசரமாக “ஆரு இன்னைக்கு நைட் நீ என் கூட இருக்குறியா?” என்று செய்தியொன்றை தட்டிவிட்டான்.
பிறந்தநாள் ஆரம்பிக்கும்போது அவள் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆசையில் அவ்வாறு அனுப்பினான். ஆனால் அனுப்பிய பிறகு செய்த பிசகின் தீவிரம் புரிந்தது. அன்பரசன் செய்தியை அழிக்கும் முன்னர் ஆரபி அதை வாசித்துவிட்டாள்.
“சாரி” என்று அவன் தட்டச்சு செய்யும் முன்னர் சுருக்கமாக அவளிடமிருந்து “நானும் ப்ரியாவும் ஆபிஸ்ல இருக்கோம் அன்பு” என்ற பதில் வந்தது.
அன்பரசன் திகைத்துப் போய் அவளது எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். “டென் ஓ க்ளாக் ஆகுது… இன்னும் ஆபிஸ்ல என்ன பண்ணுறிங்க?” என வினவினான்.
“அது… அன்பு ஒரு க்ளையண்ட்..” என்று ஆரபி திக்கித் திணறியபோதே “என்ன க்ளையண்ட் மண்ணாங்கட்டி க்ளையண்ட்! சிட்டில என்னென்ன க்ரைம் நடக்குதுனு தெரியுமா? விளையாட்டா போச்சா உனக்கும் பிரியாவுக்கும்? எந்தக் க்ளையண்டா இருந்தாலும் இப்பவே தேங்க்யூ, நாளைக்கு மீதிய கவனிக்குறேன்னு சொல்லி கட் பண்ணிட்டு பி.ஜிக்கு கிளம்புற வழிய பாருங்க” என்று அதட்டினான் அவன்.
“இல்ல அன்பு… அது பாசிபிள் இல்ல” உடனடியாக ஆரபியிடமிருந்து மறுப்பு வரவும்
“ஓஹ்! நீ வரவேண்டாம்… நான் வர்றேன் ஆபிசுக்கு” என அவன் சொல்லவும்
“இ..இல்ல… வேண்டாம் அன்பு” என்று அவசரமாக மறுத்தாள் ஆரபி.
“யூ ஷட்டப்… காலை கட் பண்ணு”
அதற்கு மேல் பேசவில்லை அவன்.
அண்ணாசாலை க்ளப் ஹௌஸ் சாலையிலிருக்கும் ஆரபி பணியாற்றும் அகர்வால் பங்கு பரிவர்த்தனை நிறுவனத்துக்குக் கிளம்ப பைக்கை உதைத்தான் அன்பரசன்.

வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்! பத்து மணி என்பதால் சாலைகளிலும் வாகன நெரிச்சல்கள் இல்லை. காற்றினும் வேகமாக பைக்கை விரட்டி அவன் அகர்வால் பங்கு பரிவர்த்தனை நிறுவனம் இருக்கும் ஏழு மாடி கட்டிடத்தின் முகப்பு வாயிலில் நிற்கையில் ஆரபியும் ஓடோடி வந்தாள்.
வந்தவளை முறைத்தவன் “இவ்ளோ நேரம் ஆகும்னு எனக்குக் கால் பண்ணி சொல்லிருந்தா நான் வெயிட் பண்ணி அழைச்சிட்டுப் போயிருப்பேன்ல… ஈவ்னிங் பேசுறப்ப கூட ஆபிஸ்ல இருந்ததா நீ காட்டிக்கவேல்ல… சரி ப்ரியா எங்க? கூப்பிடு, உங்க ரெண்டு பேரையும் கேப்ல அனுப்பிட்டு நான் பின்னாடி வர்றேன்” என்றான்.
ஆரபி திருதிருவென விழித்தாள்.
“என்ன முழிக்கிற? ப்ரியா எங்க?” என அன்பரசன் அதட்டியதும் அவள் கண்களில் கண்ணீர் பொங்கிவிட்டது.
“ப்…ப்ரியா ஊருக்குப் போய் ரெண்டு நாளாகுது அன்பு” என்று தடுமாறியபடி உரைத்தவளின் குரலில் அழுகை எட்டிப் பார்க்கவும் கொஞ்சம் தணிந்தான் அன்பரசன். ஆரபியின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்த விதமும் அவளது குரல் தடுமாறிய விதமும் அவனுக்கு வித்தியாசமாகப் பட்டது.
“அப்ப எதுக்கு ஆரு அவ உன் கூட ஆபிஸ்ல இருக்குறானு பொ… சொன்ன?”
‘பொய்’யை விழுங்கி அவன் கேட்கவும் “நான் தனியா இருக்கேன்னு சொன்னா நீங்க டென்சன் ஆவிங்க… அதனால தான அவ என் கூட இருக்கானு பொய் சொன்னேன் அன்பு… உங்களுக்குப் பொய் சொன்னா பிடிக்காதுனு தெரியும்… ஐ அம் சாரி அன்பு” என்று சொல்லிவிட்டு அவள் கேவி கேவி அழவும் அன்பரசன் பைக்கிலிருந்து கீழே இறங்கினான்.
பதறிப்போனவன் அவளை மார்போடு அணைத்துக்கொண்டான்.
“ஹேய்! இதுக்கு ஏன் அழுற? ஆரு, நீ சொன்ன இந்தப் பொய்யெல்லாம் பொய்யிலயே சேர்த்தி இல்லடி…. அழாத ஆரு” அவளது முதுகில் தட்டிக்கொடுத்தான் அவன்.
ஆரபியின் அழுகை நின்ற பாடில்லை. அவளை விலக்கி நிறுத்தியவன் “நாளைக்கு எனக்கு பர்த்டே… உன் கிட்ட இருந்து சர்ப்ரைஸ் எதாச்சும் வரும்னு ஆசையா இருந்தேன்… ஆனா என் அழுமூஞ்சி பொண்டாட்டிக்கு அது ஞாபகமே இல்ல போல” என அவன் சோகமாகக் கூறவும் அழுவதை நிறுத்தினாள் ஆரபி. மீண்டும் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன.
பிறகு நிம்மதியாக உணர்ந்தவள் அன்பரசன் சொன்னது நினைவுக்கு வரவும் எனக்கா ஞாபகம் இல்லை என்று சிலிர்த்து “எனக்கு ஞாபகம் இல்லனு உங்களுக்கு யார் சொன்னாங்க? இங்க பாருங்க” என்றபடி மொபைலின் தொடுதிரையில் ஸ்விகி செயலியைக் காட்டினாள்.
அதில் அவனுக்குப் பிடித்த சாக்லேட் ஃப்ளேவரில் பாப்சிக்கில்ஸ் எல்லாம் வைத்த கேக் ஒன்றை ஆர்டர் செய்வதற்காக தனது ஆர்டர் லிஸ்டில் இணைத்திருந்தாள்.
அன்பரசனுக்கு அவளது அழுகை நின்ற திருப்தியோடு தனக்காக அவள் சர்ப்ரைசாக ஏற்பாடு செய்திருந்த விவரம் கொடுத்த சந்தோசமும் சேர்ந்துகொள்ள மீண்டும் அவளை அணைத்துக்கொண்டான். ஆனால் முன்பு போல மென்மையாக அல்ல! விட்டால் அவன் மார்புகூட்டுக்குள் அவளைப் புகுத்தி கைகளால் சிறைசெய்துவிடுவது போல அத்துணை இறுக்கமான அணைப்பு அது!
அந்த அணைப்பில் விதிர்விதிர்த்தவள் விலக முயற்சிக்கவில்லை. உடல் இலகுவாக அவனது இறுகிப்போன ஆலிங்கனத்தில் குழைந்து நின்றாள்.
“ஆரு!”
ஹஸ்கி குரலில் அன்பரசன் கிசுகிசுக்கவும் “சொல்லுங்க” என்றாள் அவளும் மெதுவாக.
“இன்னைக்கு நைட் என் கூடவே இருக்கிறியா? எனக்கு உன் கூட என் பர்த்டேவை செலிப்ரேட் பண்ணனும்னு ஆசையா இருக்கு” முன்னர் பிசகென நினைத்ததைச் சொல்லியேவிட்டான் அன்பரசன்.
ஆரபி கொஞ்சம் அணைப்பை விலக்கி அவனைப் பார்த்தாள்.
“இது தப்பு அன்பு” எனத் தெளிவாக அவள் கூறவும்
“அப்பிடியா?” என்று சோர்வாகப் பதில் வந்தது அவனிடமிருந்து. அடுத்த நொடியே “ஐ ப்ராமிஸ் ஆரு! நான் குட்பாயா நடந்துப்பேன்… இங்க பாரு, இந்த விரல் நுனி கூட உன் மேல படாது” என்று ஆட்காட்டிவிரலைக் காட்டி அவன் சொல்லவும் ஆரபியின் முகத்தில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“எப்பிடி? இப்ப விரல் கூட படாம பாத்துக்குறிங்களே? இதே மாதிரியா?”
கண்களால் தாங்களிருவரும் அணைப்பிலிருந்த நிலையைக் காட்டி கேலியாக வினவினாள் ஆரபி.
அவளது அழுகை, பயம் எல்லாம் மாறி மீண்டும் இயல்புக்கு வந்துவிட்டாள் என்றதும் அன்பரசனின் பேச்சிலும் குறும்பு குடியேறியது.
“இது ஜஸ்ட் அ ஹக்… ஹக் பண்ணுறது, கிஸ் பண்ணுறதுலாம் வெஜிடேரியன் லவ்… அது கூட இல்லனா அது வீகன் லவ்டி அழுமூஞ்சி பொண்டாட்டி”
“இட்ஸ் ஓ.கே… கல்யாணம் ஆகுற வரைக்கும் நம்ம வீகன் லவ்லயே இருப்போம்” என முறுக்கிக்கொண்டவளின் காதில் “ஒரு வெஜிடேரியன் லவ்வரை வீகனா மாறச் சொல்லுறது கிட்டத்தட்ட அவனைப் பட்டினி போடுறதுக்குச் சமம்… இப்பிடியே போச்சுனா அவன் நான்-வெஜ் லவ்வர் ஆகிடுவான்” என்றான் அன்பரசன் கிசுகிசுப்பாக.
“நான்-வெஜ் லவ்வரா?” என ஆரபி திகைக்கும்போதே அவள் காதில் தான் சொன்னதற்கு அர்த்தமென்ன என்று அன்பரசன் விளக்க, அவளது வதனத்தில் செந்தூரத் தீற்றலாக நாணம்!
“சீ! யூ ஆர் சோ மீன்” வெட்கத்துடன் சொல்லிக்கொண்டவளை மந்தகாசப்புன்னகையோடு பைக்கில் ஏறுமாறு பணித்தான் அன்பரசன்.
“இதுக்கு மேல பி.ஜிக்குப் போக முடியாதுங்கிற ஒரே காரணத்துக்காக நான் உங்க கூட வர்றேன்… பட் அங்க போனதும் வெஜ், நான் வெஜ், வீகன்னு பேசுனிங்கனா கிளம்பிடுவேன்” என்று கறாராகச் சொல்லிவிட்டுப் பைக்கில் அமர்ந்தாள் ஆரபி.
வந்த போது இருந்த வேகத்தை விட அதிக வேகத்தில் அவன் பைக்கை விரட்டவும் பயத்தில் அன்பரசனின் முதுகோடு பசை போட்டது போல ஒட்டிக்கொண்டாள்.

“கொஞ்சம் மெதுவா போங்க அன்பு” என்றவளின் பேச்சை அவன் கேட்டால் தானே! ஆரபி அவன் தலையில் நறுக்கென குட்டலாமா என எண்ணியவள் அங்கே தலைக்கவசம் இருக்கவும் அமைதியாகிவிட்டாள்.
இருவரும் அவனது அறை இருக்கும் அப்பார்ட்மெண்ட் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆரபியிடம் “இங்க ஒரு ஃப்ளாட்டை நானும் என் டீம்ல உள்ள பையனும் ஷேர் பண்ணிருக்கோம்… சிங்கிள் பெட்ரூம் தான்… பட் கிச்சன் ஹால்னு நல்ல வசதியா இருக்கும்” என்று சொன்னபடி பைக்கைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அவளைத் தன் அறை அமைந்திருக்கும் முதல் தளத்துக்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்ததும் ஆரபிக்கு அவன் சொன்னது உண்மை தான் என்பது புரிந்தது. பேச்சிலர்கள் தங்கியிருக்கும் வீடு என்றே சொல்ல முடியாது. அவ்வளவு கச்சிதமாக இருந்தது.
“ஒன் மினிட்” என்று ஆரபியிடம் சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்த அன்பரசன் வெளியே வந்த போது அவன் கையில் ஒரு தம்ளர் நிறைய பழச்சாறு இருந்தது.
“நானே செஞ்ச ஜூஸ் இது… கஷ்டமைஸ்ட் டூ” என்றபடி அவளிடம் தம்ளரை நீட்டினான்.
எலுமிச்சைத்துண்டு வெட்டி ஒட்டப்பட்ட தம்ளரிலிருந்த பழச்சாறை பருகியவள் சுவை நன்றாக இருக்கவும் “இதுக்கு என்ன பேர் வச்சிருக்கிங்க?” என வினவ
“மேஜிக் மேங்கோ” என்றான் அவன்.
“ஜூஸ் மாதிரி நேமும் வேற லெவல்” அவள் மூன்று விரல்களை அபிநயித்துப் பாராட்டினாள்.
பின்னர் முன்பே திட்டமிட்டபடி அன்பரசனுக்குப் பிடித்த கேக்கை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தாள்.
அன்பரசன் அவளது கண்களிலிருந்த ஆவலை ரசித்தபடி ஹாலில் கிடந்த சோபாவில் படுத்திருந்தவன் அப்படியே உறங்கிவிட கேக்கும் வந்து சேர்ந்தது.
ஆரபி ஓடிச்சென்று வாங்கி வந்தவள் அன்பரசனை எழுப்ப மனமின்றி டீபாய் மீது கேக்கை வைத்தாள். ஸ்பார்க்ளிங் கேண்டிலை ஏற்றிவிட்டு அவனது புஜத்தைத் தட்டினாள்.
அன்பரசனும் உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான்.
ஸ்பார்க்ளிங் கேண்டிலினின் மத்தாப்பூ சிதறல்களுக்கிடையே ஜொலிக்கும் ஆரபியின் வதனத்தை ரசித்தபடியே எழுந்தவன் அவளைப் போலவே டீபாய் அருகே மண்டியிட்டு அமர்ந்தான்.
“ஹேப்பி பர்த்டே அன்பு” என்றவள் டீபாய் மீது கேக்கை வைத்தாள்.
“கட் பண்ணுங்க”
அன்பரசன் அவளது கையையும் சேர்த்துப் பிணைத்து ப்ளாஸ்டிக் கத்தியால் கேக்கை வெட்டினான். முதல் துண்டை அவளுக்கு ஊட்டப்போனவனிடமிருந்து வாங்கி அவனுக்கே ஊட்டிவிட்டாள் ஆரபி.
“பர்த்டே பாய் தான் முதல்ல சாப்பிடணும்” என்றவளுக்கு அவனும் ஊட்டிவிட்டான். கையில் மிச்சமிருந்த சாக்லேட் க்ளேஜை என்ன செய்யவென விழித்தவன் ஆரபியை பளபளக்கும் விழிகளோடு பார்க்கவும் அவள் சுதாரித்துக்கொண்டாள்.
“நோ மோர் சாக்லேட் ஃபேஷியல் அன்பு” ஆட்காட்டி விரலை நீட்டி அவள் மிரட்டியதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முகத்தில் பூசிவிட்டு ஓய்ந்தான் அன்பரசன்.
ஆரபி முகத்தைத் தூக்கி வைக்கவும் “நான் வேணும்னா க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணட்டுமா?” என நெருங்கியவன் அவள் ‘பத்திரம்’ என ஆட்காட்டிவிரலைக் காட்டி எச்சரிக்கவும் குளியலறையைக் காட்டி முகத்தைக் கழுவிக்கொள்ளும்படி கூறினான்.
ஆரபியும் சாக்லேட் கறை போக முகம் கழுவியவள் வெளியே வந்த போது அந்த அறையில் இரண்டு மெத்தைகள் இருப்பதைப் பார்த்தாள்.
“நீ அதுல படுத்துக்க… இது என் ரூம்மேட்டோடது… நான் இதுல படுத்துக்குறேன்” என்றான் அவன்.
“அப்ப அது?” கண்களில் குறும்பு மின்ன ஆரபி கேட்கவும் “அது என்னோடது” என்றவன் அவளை நெருங்கி “இனி என்னோடது எல்லாமே உன்னோடது ஆரு… இந்த பர்த்டேய ரொம்ப ஸ்பெஷலா மாத்துனதுக்கு தேங்க்ஸ்டி” என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
ஆரபி கண் மூடிக்கொள்ளவும் விலகியவன் “திஸ் இஸ் த ஹை டைம்… இதை தாண்டுனா அன்பு நான்-வெஜ் லவ்வர் ஆகிடுவான்… குட் நைட்” என்று சொல்லிவிட்டு நல்ல பிள்ளையாக ரூம் மேட்டின் மெத்தைக்குச் சென்றுவிட்டான்.
கண்களைத் திறந்த ஆரபி அவன் படுக்கையில் படுத்து இழுத்துப் போர்த்திக்கொள்வதைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள். தனது நேசத்திக்குரியவளிடம் அவன் காட்டும் கண்ணியத்தை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அத்தருணம் ஆரபிக்கு அமைந்தது எனலாம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

