“எவ்ளோ பெரிய சண்டையையும் முடிச்சு வைக்குறதுக்கு ஒரு கப் டீ, செஞ்ச தப்பை உணர்ந்த மனசு, இதமா ஒரு ஸ்பரிசம் இந்த மூனும் போதும். சண்டை போட்டுட்டோம்னு ஒருத்தர் விலகி நின்னா இன்னொருத்தர் இழுத்துப் பிடிக்கணும். அந்த இன்னொருத்தர் எல்லா நேரத்துலயும் கணவனா மட்டும்தான் இருக்கணும், மனைவியா மட்டும்தான் இருக்கணும்னு அவசியமில்ல. சில நேரம் கணவன் இருக்கலாம். சில நேரம் மனைவியா இருக்கலாம். அந்த இழுத்துப் பிடிக்குற பொறுப்பை ஒருத்தர் தலையில மட்டும் சுமத்துறது தப்பு. அதை மட்டும் மனசுல அழுத்தமா பதிய வச்சுக்கணும்.”
– ஈஸ்வரி
ஈஸ்வரியின் பவிதரன் மீதான வருத்தத்துக்கு அவனே முற்றுப்புள்ளி வைத்தான். அவளது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டதும் அவன் செய்த முதல் காரியம் மன்னிப்பு கேட்டதே.
அதையும் புதிய தொழிலைச் சாக்காக வைத்தே கேட்டான்.
அவனது வேலைக்காக ‘செகண்ட் ஹேண்டில்’ ஒரு கணினியை வாங்கியவன் அதில் கட்டடங்களின் வரைபடத்தை இரு பரிமாணம், முப்பரிமாணம், புகைப்படம் என பல்வேறு வடிவங்களில் தயார் செய்யும் சில மென்பொருட்களை அதில் இன்ஸ்டால் செய்துவிட்டு, நல்ல நாளில் மணிபாரதி மூலம் அவனைச் சந்தித்த ஒரு நபருக்கு எஸ்டிமேட் ஒன்றைப் போட்டுக் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தான்.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் ஈஸ்வரி சாமி படங்களுக்குப் பூ போட்டு கற்பூரம் காட்டுவாள் என்று எதிர்பார்த்தவன் அவளிடம் தனது கணினியைக் காட்டினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இன்னைக்கு முதல் எஸ்டிமேட் போடப்போறேன்.”
சாமி படங்களில் இருக்கும் பூக்களில் சிலவற்றை எடுத்து கணினி மீது தூவியவள், “உன் ஓனரை மாதிரி ஓரவஞ்சனை பிடிக்காம நல்லபடியா வேலை செய்,” என்று அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த பவிதரன் சிரித்துவிட்டான்.
அவனிடம் கற்பூர ஆரத்தியை அவள் காட்டவும் பக்தியோடு கண்களில் ஒற்றிக்கொண்டான். விபூதியை எடுத்துக் கீற்றாக அவனது நெற்றியில் பூசியவள் “இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்றாள் கனிவாய்.
அவளது கனிவில் அவன் மனம் உருகியபோதே பவிதரன் மன்னிப்பும் கேட்டுவிட்டான். அதில்தான் அவளது மனம் சாந்தமடையத் தொடங்கியது எனலாம்.
அடைமழை பெய்து ஓய்ந்த பிறகு மரங்கள் புத்துணர்ச்சியாய்ச் சிலிர்த்துக்கொண்டு அதீதப் பசுமையோடு தெரியுமே, அது போல ஊடலுக்குப் பிறகான அவர்களின் காதலும் அதீதமாய், ஆழமாய் மாறிப்போனது.
காதல் எனும் வாக்கியத்தில் ஊடல் என்பது காற்புள்ளியாய் இருக்கவேண்டுமே தவிர அது முற்றுப்புள்ளியாகிவிடக் கூடாது. காதலெனும் வாக்கியத்தை அந்தக் காற்புள்ளியானது இன்னும் மெருகேற்ற வேண்டுமே தவிர ஒரேயடியாக அர்த்தமற்றதாக்கிவிடக் கூடாது.
ஏழு நாட்கள் மௌனமும், கோபமுமாய் வார்த்தைகளை அளவாய் உதிர்த்து நடமாடிய காதல் மனைவியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் ஆயிரம் உணர்வுகள் அவனுக்குள் கவிதையாய் பிரவாகித்தாலும் அதை வாசிக்க அவள் விரும்பவில்லை என்பதால் சின்னதொரு விலகல்.
அவன் படுக்கையறையிலும் அவள் ஹாலிலுமாய் உறங்கிய ஏழு நாட்களின் இரவுகள் மனக்கலக்கத்தின் கூடாரமாய்!
சம்சார வீணையில் முதலில் தவறிய சுருதியாய் அவர்களின் இந்தப் பிணக்கு ஏழு நாட்களில் முடிவுக்கு வந்த பிறகு அந்த வீட்டில் சிருங்காரநாதம் இசைக்கப்படுவதாய்!
இயல்புக்குத் திரும்பிய வாழ்க்கையின் இனிமை அவர்களை இன்பசாகரத்தில் ஆழ்த்தினாலும் அவரவர் வேலையில் கவனம் வைத்துப் பொறுப்பாய் குடும்பத்தின் வரவு செலவு கணக்கையும் சமாளித்தார்கள் எனலாம்.
“மொத்தமா லிஸ்ட் போட்டு சந்தைல காய்கறி வாங்கிடலாம். மளிகை எல்லாம் நான் மொத்தமா வாங்கிடுறேன். அப்பப்ப வாங்குனா நமக்குக் கட்டுப்படியாகாது,” என்று ஈஸ்வரி திட்டமிட பவிதரனும் தலையாட்டினான்.
முதலில் மொபைலுக்கு மாதாமாதம் ரீசார்ஜ் செய்யும் செலவைக் கட்டுக்குள் வைக்க இருவரது மொபைல் மற்றும் கணினிக்கான இணைய இணைப்பு இரண்டையும் கருத்தில்வைத்து அதற்கேற்ற பிளான்கள் போட்டார்கள்.
“அன்லிமிட்டட் இண்டர்நெட் இருக்குதா? அப்ப நான் எனக்குப் பிடிச்ச மூவி, சீரிஸ் எல்லாம் டேட்டா காலி ஆகுதேங்கிற கவலை இல்லாம பாக்கலாம்.”
முதல் மாதத்தில் இருந்தே இப்படித் திட்டமிட்டால்தான் சேமிக்க முடியுமென இருவரும் ஒரே மாதிரி யோசித்தார்கள்.
அவர்கள் திட்டமிட்டுக் குடும்பம் நடத்த ஆரம்பித்தபோது தர்ஷன் அவனது பேராசையில் முழுவதுமாக மூழ்கியிருந்தான். பணம் ஒன்றே குறிக்கோளாக அவன் கிரிப்டோவில் முதலீடு செய்ய நண்பனிடம் பெரிய தொகையொன்றைக் கொடுக்க அது மூன்று மடங்காய் திரும்பக் கிடைத்தது.
மதுமதிக்குச் சந்தோஷம் தாளவில்லை. என் கணவன் இவ்வளவு புத்திசாலியா என எண்ணி எண்ணிப் பூரித்தாள். மாணிக்கவேலுவுக்கு மருமகனின் சாமர்த்தியத்தை அறிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பாய் இந்தத் தருணத்தைப் பார்த்தார்.
இனி அவனை முழுவதுமாய் நம்பலாமென்ற முடிவுக்கு வந்தவர் அனைத்துத் தொழில் சார்ந்த முடிவுகளையும், தொழிலில் புழங்கும் பணம் சார்ந்த முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார்.
அச்சமயத்தில்தான் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய லே-அவுட் ஒன்றைப் போட்டான் அவன். கிட்டத்தட்ட நூறு பிளாட்கள். திருநெல்வேலியில் வளர்ந்துகொண்டிருக்கும் பிரதான பகுதியில் பிளாட்கள் இருந்ததால் அட்வான்ஸ் கொடுத்து வாங்க மேல்தட்டு மக்களும் ஆர்வம் காட்டினார்கள்.
முன்பணத் தொகை மொத்தமாக மூன்று கோடி வசூலானதும் நில உரிமையாளருக்குப் பணத்தைச் செட்டில் செய்ய மூன்று மாதங்கள் கால அவகாசம் இருந்ததால் அதை கிரிப்டோவில் சாஜன் மூலம் முதலீடு செய்ய முடிவெடுத்தான் தர்ஷன்.
அதே நேரத்தில் பெரிய வணிக வளாகம் ஒன்றை கட்டுவதற்கான புராஜெக்ட் மேரு பில்டர்ஸுக்குக் கிடைத்தது. வாடிக்கையாளர் கொடுத்த முன்பணம், அது போக சில புராஜெக்டுகளுக்காக வாங்கிய வங்கிக்கடன் எனக் கைவசம் இருந்த புழக்கத்திலிருக்கும் பணத்தையெல்லாம் சேர்த்து நண்பனிடம் கொடுத்துவிட்டான்.
“மூனு மாசம் இந்தப் பணத்தைக் கிரிப்டோல போட்டோம்னா பல மடங்கு இலாபம் வரும் மாமா. அதை வச்சு லேண்ட் ஓனருக்குக் குடுக்கவேண்டிய தொகைய குடுத்துடலாம். கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கட்ட கார்ப்பரேஷன் கிட்ட இருந்து அனுமதி கிடைக்கவும் டைம் எடுக்கும். அதுக்குள்ள போட்ட காசை நாம திரும்ப எடுத்துடலாம். அதுவும் கொள்ளை இலாபத்தோட.”
அவரது மூளையைச் சலவை செய்து ‘ரொட்டேஷனில் இருக்கும் பணம்’ முழுவதையும் கிரிப்டோவில் முதலீடு செய்யுமாறு சாஜனுக்கு அனுப்பிவிட்டான் தர்ஷன்.
ஒரு பக்கம் பவிதரன் அவனது திட்டமிடுதல் மூலம் முன்னேற்றத்தின் முதல் படியில் ஏறிக்கொண்டிருந்தான் என்றால் மற்றொரு பக்கம் தர்ஷன் அவனது பேராசையின் விளைவால் அழிவின் வாசலுக்குச் சென்றுகொண்டிருந்தான்.
அவனது செயல்பாடுகள் நிலவழகியிடம் ஒருவித அதிருப்தியைக் கிளப்பிவிட அந்தப் பெண்மணி சகுந்தலாவிடம் கூட ஒதுங்கிக்கொண்டார்.
மகனும் மருமகளும் எப்படி வாழ்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள அவ்வப்போது குழலியிடம் பேசுவார்.
“அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இருக்குற வருமானத்தை வச்சு கட்டுச்செட்டா வாழுறாங்க,” என்று எப்போதுமே நிலவழகியின் மனம் குளிரும் வகையில் பதிலளிப்பார் குழலி.
உண்மையும் அதுதான். மின்சாரக் கட்டணத்தில் ஆரம்பித்து மளிகை செலவு வரை அனைத்தையும் திட்டமிட்டே வாழ்ந்தார்கள் பவிதரனும் ஈஸ்வரியும்.
புதுமணத்தம்பதிகளை உறவுக்காரர்கள் விருந்துக்கு அழைக்கவும் தவறவில்லை. ஒரு மாதம் இப்படியே கழிந்தது.
முதல் மாதச் சம்பளத்தைக் கையில் வாங்கியபோதே புக் சென்டரின் அன்றாட விற்பனைகளையும் செலவுகளையும் கணக்கு எழுதுவதற்கான மென்பொருளில் ஏற்றும் வேலை ஈஸ்வரியிடம் கொடுக்கப்பட்டது.
அடுத்த மாதத்திலிருந்து ஊதியத்தில் கொஞ்சம் அதிகமாகும். குதூகலத்தோடு கிளம்பியவள் பெரியவர்களுக்கு இனிப்பு வாங்கிக்கொண்டாள். பவிதரனுக்குக் குழலியின் வீட்டைப் போல தங்களது வீட்டிலும் பின்வாயிலில் தோட்டம் வைக்க ஆசை. எனவே பேருந்து செல்லும் மார்க்கத்தில் கிருஷ்ணா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தே நர்சரி ஒன்றை அடைந்தாள்.
நிறைய மரக்கன்றுகள், மலர்ச்செடிகள் என பசுமையோடு வண்ணங்கள் குழைத்த அழகான ஓவியம் போல குளிர்ச்சியாய் அவளை வரவேற்றது அந்த நர்சரி.

ரோஜா பதியன்கள் வெவ்வேறு வண்ணங்களில் வாங்கிக்கொண்டாள் ஈஸ்வரி.
மறுநாள் காலையில் செடிகளை நட்டுவைக்கலாம் என்ற யோசனையோடு அடுத்தப் பேருந்தைப் பிடித்தாள். நதியூரை அடைந்ததும் குழலியின் கையிலும் இளவரசியின் கையிலும் இனிப்பு அடங்கிய கவர்களைக் கொடுத்துவிட்டு வீட்டை அடைந்தவள், பவிதரன் மும்முரமாய் ஒரு மூன்று மாடி கட்டடத்துக்கான பிளானைத் தயார் செய்துகொண்டிருந்தான்.
அவன் முன்னே போய் நின்றவள் “நம்ம தோட்டம் வைக்கலாம்னு ஆசைப்பட்டிங்கல்ல. அதுக்கு ரோஜா செடி வாங்கிட்டு வந்திருக்கேன். டார்க் ரெட் ஊட்டி ரோஸ் ஒன்னு, பீச் கலர் ஒன்னு.”என்க,
“அப்பிடியா? சரி! காலைல ரெண்டு பேருமா சேர்ந்து நட்டு வைக்கலாம்,” என்றவனின் குரலில் ஆர்வம் மிஸ்ஸிங்.
ஈஸ்வரி உதட்டைச் சுழித்தாள். வேலையில் மூழ்கிவிட்டால் பவிதரன் அவளைக் கண்டுகொள்வதில்லை என்ற சுணக்கம் அவளுக்கு.
அதே நேரம் வேலை செய்யும்போது தொந்தரவு செய்யும் பழக்கம் அவளுக்கு இல்லை என்பதால் இரு பதியன்களையும் கையோடு எடுத்துச் சென்று பின்வாயில் திண்ணையில் வைத்துவிட்டாள்.
பவிதரன் வீட்டைச் சுத்தமாகப் பெருக்கியிருந்தான். கூடவே அவன் சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவி வைத்திருந்தான்.
முதலில் அவன் கையில் துடைப்பத்தை எடுத்தபோது இளவரசி ஓடோடி வந்து வாங்கிக்கொண்டார்.
“ஆம்பளை இந்த வேலையெல்லாம் செய்யக்கூடாதுப்பா,” என்றவரிடம்,
“என் வீட்டு வேலையத்தானே நான் செய்யுறேன் அத்தை. ஈஸ்வரி சாயங்காலம் வர்ற வரைக்கும் வீடு இதே மாதிரி குப்பையா கிடக்கணுமா?” என்று சொல்லிவிட்டான்.
இதைச் செய்யுங்கள் என்று அவள் கட்டளையிடவில்லை. மனைவியின் சிரமம் அறிந்து அவனே முன்வந்து ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் இவை.
ஈஸ்வரி கழுவி வைக்கப்பட்ட பாத்திரங்களை அவற்றுக்குரிய இடத்தில் அடுக்கியபடியே, “எனக்கு டீ போடப்போறேன். உங்களுக்கு வேணுமா?” என்று கேட்க,
“வேண்டாம்,” எனப் பதில் வந்தது.
மதியம் சாப்பிட்ட வயிற்றோடு வேலை பார்க்க உட்கார்ந்திருப்பான் என்று புரிந்துதான் அவள் கேட்டாள். ஆனால் பவிதரன் மறுத்துவிடவும் தனக்கு மட்டும் டீ போட்டவள் மலர்விழி வாட்ஸ்அப்பில் ஏதோ செய்தி அனுப்ப சாட்டிங்கில் மும்முரமாகிப்போனாள்.
“மிருணா மதினிக்கு இது ஆறாம் மாசம். அடுத்த மாசம் மெட்ராஸ்ல வளைகாப்பு வைக்குறதா கர்ணா அண்ணா சொன்னாராம்.”
“அவங்களுக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும்னு தோணுது மலர். அந்தக்கா முகம் பளபளனு இருக்கு பாத்தியா?”
“அடியே! பொண்குழந்தைங்க வயித்துல இருக்குறப்ப அம்மாவோட அழகை உறிஞ்சிடும்னு சொல்லுவாங்க. ஆதியக்கா தேஜுவ உண்டானப்ப அவங்களுக்கு மெலாஸ்மா வந்து முகமே நிறம் மங்கி போச்சு. ஆனா கதிர் என் வயித்துல இருந்தப்ப நான் எக்ஸ்ட்ரா அழகா இருந்தேன், தெரியுமா? நீ என்ன மாத்தி பேசுற?”
“அதெல்லாம் இல்ல. அந்தக்கா வயிறு உருண்டையா இருக்கு. அப்ப பொண்குழந்தைதான்.”
பெண்களுக்கே உரிய ஊகங்களும் கற்பனையுமாக நகர்ந்த அரட்டை மும்முரத்தில் நேரத்தைக் கவனிக்கத் தவறினாள் ஈஸ்வரி.
“எட்டு மணி ஆகிடுச்சுலா. நாளைக்குப் பேசுவோம்; உங்கண்ணன் சிஸ்டம் முன்னாடி உக்காந்து இருக்காரு. பசி தூக்கம் மறந்துடும் அந்த மனுஷனுக்கு. நான் தான் கவனிச்சு டைமுக்குச் சாப்பிட வைக்கணும்.”
தேநீர் காலியாகியிருந்தது. மலர்விழியுடன் பேசியதில் மனம் இலகுவாயிருந்தது. அதே இதமான உணர்வோடு சப்பாத்திக்கு மாவு பிசைந்தவள், “இன்னைக்குச் சப்பாத்தியும் ஒயிட் குருமாவும் வைக்கப்போறேன். சாப்பிடுவீங்களா?” என்று சமையலறையில் இருந்தபடி வினவினாள்.
பவிதரன் கணினியில் முழு கவனத்தையும் பதித்திருந்தவன் “வேண்டாம்” என்க, விறுவிறுவெனச் சமையலறையிலிருந்து அவன் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்து அவனது மேஜையைத் தட்டினாள்.
அப்போதும் அவன் தலை நிமிராமல் “சொல்லு” என்க,
“டீ வேண்டாம். சாப்பாடு வேண்டாம். நானாச்சும் வேணுமா வேண்டாமா?” என்று கேட்க,
“உன்னைப் போய் வேண்டாம்னு சொல்லுவேனா?” என்றபடி கண்களைக் கணினியின் திரையிலிருந்து விலக்கி மனைவி மீது பதித்தான் பவிதரன்.
ஈஸ்வரி மோவாயைத் தோளில் இடித்து தனது அதிருப்தியைக் காட்டினாள்.
“க்கும்! வார்த்தை தேனா இருக்கும். ஆனா செயல்ல ஒன்னுமேயில்ல. நான் வந்து அங்கயும் இங்கயும் நடமாடுறேன். பேசுறேன். எதையாச்சும் கவனிச்சிங்களா நீங்க?”
பவிதரன் சிரிப்போடு அவளது இடையை வளைத்துத் தனது மடியில் அமர்த்திக்கொண்டான். கூடவே அவளது கன்னத்தில் அழுத்தமான முத்தமும் சூடாய்ப் பதிய, “சின்னக்குழந்தை அட்டென்ஷனுக்கு அடம்பிடிக்குற மாதிரி இருக்குடி உன் பேச்சு,” என்றவன் அவளது கழுத்தோரம் நாசி நுழைத்து குறுகுறுப்பூட்ட கூச்சத்தில் விலக எத்தனித்தபடியே சிரித்தாள் அவள்.
“செல்லம் கொஞ்சுனது போதுமா குழந்தைக்கு?” அவன் குறும்பாய்க் கேட்க,
“போதாதுனு சொன்னா அப்பிடியே காதல் கணவனா கட்டி அணைச்சு…” அவள் மேற்கொண்டு பேசுவதற்குள் தனது கையால் வாயைப் பொத்தினான் பவிதரன்.
“அடி கழுதை! என்னெல்லாம் பேசுற நீ?” சிரித்தபடியே வினவியவன் அவளை எழுப்பி விட்டான்.
“நீ எங்க இருந்தாலும் என் கவனம் உன்னைத் தாண்டி தான் மத்த விஷயத்துல பதியும்.”
ஈஸ்வரி வெட்கத்தை மறைத்தவளாய், “அப்பிடியே சாப்பாடு, தூக்கத்தையும் கவனிக்கணும் நீங்க. மதியம் கொஞ்சமா சாதம் சாப்பிட்டுட்டுத் தண்ணி ஊத்தி வச்சிருக்கிங்க. நைட் சப்பாத்தி சாப்பிடுவீங்களா மாட்டீங்களா?”
பவிதரன் கணினியின் திரையைக் காட்டினான்.
“இன்னும் ரெண்டு நாள்ல முடிக்கணும்டி. கொஞ்சம் நல்ல அமவுண்ட் கிடைக்கும். இவர் கவர்மெண்ட் ஆபிஸ்ல செல்வாக்கு உள்ள ஆளு. கொஞ்சம் கஷ்டப்பட்டா பலன் நல்லா இருக்கும்.”
“அதுக்குனு சாப்பிடாம கொள்ளாம கஷ்டப்பட வேண்டாம்.”
“சரி! ரெண்டு சப்பாத்தி போதும்.”
ஈஸ்வரி இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தவள், “இவ்ளோ பெரிய உருவத்துக்கு அது எப்பிடி போதும்?” என்று கேட்டுவிட்டுச் சமையலறைக்குள் போனவள் ஒரு மணி நேரத்தில் சப்பாத்தியும் குருமாவும் சமைத்து முடித்தாள்.
திரும்பி அவள் ஹாலுக்கு வந்தபோது அவள் கையில் நான்கு சப்பாத்திகள் அடங்கிய தட்டு இருந்தது. இன்னொரு தட்டில் அவளுக்கானச் சப்பாத்தியும் குருமாவும்.
அதைக் கண்டவன் “ரெண்டு போதுமே?” என்று சொல்ல,
“ஐயா சாமி! நீங்க உங்க வேலைய பாருங்க. நான் ஊட்டி விடுறேன்,” என்றவள் சப்பாத்தி விள்ளலைக் குருமாவில் தோய்த்து அவனது வாயில் திணித்தாள்.
பொறுமையாய் அவனுக்கு ஊட்டியபோதே தானும் சாப்பிட்டு முடித்தாள்.
“அவ்ளோதான்! சாப்பாடு முடிஞ்சுது. இதுக்குப் போய் அரையும் குறையுமா சாப்பிட்டு, வயித்தைக் காயப்போட்டு ஏன் உடம்பைப் பாடாய்ப்படுத்தணும்?”
செல்லமாய் அவனது தலையில் குட்டிவைத்துப் போனவள் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்துவது அவனது காதில் கேட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

