“மனிதர்கள் பாவ புண்ணியத்தைப் பற்றி யோசிக்காமல் செய்யும் தவறுகளுக்கு என்ன காரணம் தெரியுமா? அந்த தவறுகளுக்கான தண்டனை சரியான நேரத்தில் கிடைக்காமல் இருப்பது தான். சில தண்டனைகளை கொடுப்பதற்கு நாகரிக சமுதாயம் சட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் சட்டம் புகாத இடங்களில் நடைபெறும் குற்றங்களுக்கான தண்டனையை கடவுள் மட்டுமே தீர்மானிக்கிறார். ஆனால் அவரும் கூட ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்ற கோட்பாட்டைத் தீவிரமாக கடைபிடிப்பதால் மனிதர்கள் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காது தைரியமாக தவறிழைக்கின்றனர்”
-ருத்ரதேவ்
பின்வந்த நாட்களில் தக்ஷிண்யா ருத்ரதேவிடம் கூறியது போல பிருந்தாவனத்தில் லலிதாவுக்கு இருந்த அதிகாரம் அனைத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டாள்.
அந்த வீட்டின் சமையல் மெனுவில் ஆரம்பித்து அவர்களின் தொழில் ஒப்பந்தம் வரை தேவையற்று மூக்கை நுழைத்தவர் இப்போது கையாலாகாதவராக ஒரு மூலையில் முடங்கிப் போனார்.
அவரது மைந்தன் சர்வானந்த் கூட அவரிடம் முன்பு போல வாஞ்சையாய் இருப்பதில்லை. அவனுக்கு தக்ஷிண்யாவை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவளது முதுகுக்குப் பின்னே குறை பேசும் அன்னையை விட்டு விலகியது அவன் தவறில்லையே!
லலிதாவின் பெற்றோரோ கணவரோ அவரை விலக்கி வைக்கவில்லை. ஆனால் முன்பு போல தங்கத்தட்டில் வைத்து தாங்குவதெல்லாம் அரிதாகிப் போனது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதன் காரணமாகவே லலிதாவுக்கு சில நாட்களாக மனவுளைச்சலும் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கமும் தொடர்கதையானது.
ஒரே இரவில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த அரசியைப் போல ஆகிப்போனார் லலிதா. அவருக்கு இருந்த சின்ன ஆறுதல் என்னவென்றால் அவரது குடும்பத்தினர் முற்றிலுமாக அவரை வெறுத்து ஒதுக்கிவிடவில்லை என்பதே!
ருத்ரதேவும் அவர் மீது வருத்தம் கொண்டிருந்தாலும் அவர் மீதான மரியாதையை இழக்கவில்லை. எப்போதும் போல் அவரிடம் பரிவும் பாசமுமாக தான் இருக்கிறான். மகாதேவும் மாலினியும் தான் முன்பு போல் ஒட்டுவதில்லை.
பெற்ற பிள்ளையே விலகி நிற்கும் போது தமையனின் பிள்ளைகளை எவ்வாறு அவர் நொந்து கொள்வார்?
தக்ஷிண்யாவுக்கு அவரது இந்நிலையைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. இந்தக் குடும்பத்தினரின் ஆதரவை வைத்துக்கொண்டு தானே தனது அன்னைக்கு அநியாயம் இழைத்தார்! வினை விதைத்தவர் அதை அறுவடை செய்வதில் பரிதாபம் கொள்ள என்ன இருக்கிறது என்பது அவளது எண்ணம்.
வீட்டின் நிலை சீரானதும் ருத்ரதேவ் அவளை கோகோ லகூனில் ஹாஸ்பிட்டாலிட்டி மேலாளராக பணியாற்ற வேண்டுகோள் விடுத்தான். அவளும் அதை ஏற்றுக்கொண்டாள்.
இதோ ஒரு வாரமாக அவனோடு சேர்ந்து தக்ஷிண்யாவும் வாழைக்கொம்பு நாகூரில் இருக்கும் ரிசார்ட்டுக்குச் சென்று வருகிறாள்.
இதற்கிடையே கமல்நாத்தின் ‘டி.கே ஃபேஷன்சும்’ பன்னிரண்டு பணியாளர்களுடன் செயல்பட ஆரம்பித்திருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் அதன் திறப்புவிழா நடந்து முடிந்திருந்தது.
கமல்நாத் பொட்டிக்குக்குச் செல்லும் நேரங்களில் ஆரோஹி பிருந்தாவனத்தில் சசிகலாவின் பொறுப்பில் இருப்பாள். கோடைவிடுமுறை காலமென்பதால் சர்வானந்தும் வீட்டிலிருக்க இருவரும் நண்பர்களாகிப் போனார்கள்.
அன்றும் வழக்கம் போல ஆரோஹி சர்வானந்துடன் மிதிவண்டி ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போதே வேலை நேரம் முடிந்து வந்த கமல்நாத் ஆரோஹியும் சர்வானந்தும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனிடமும் லோகநாதனிடமும் மரியாதை நிமித்தம் பேச அக்காட்சியைப் பார்த்த லலிதாவோ கொதித்துப் போனார்.
அந்நேரம் பார்த்து தக்ஷிண்யாவும் ருத்ரதேவோடு வர கோபத்தை வெளிப்படையாக காட்டி தனக்கு இருக்கும் கொஞ்சநஞ்சம் மரியாதையையும் கெடுத்துக்கொள்ள விரும்பாதவர் நாசூக்காக பேசி மட்டம் தட்ட அவர்களிடம் சென்றார்.
லலிதாவைக் கண்டதும் மூவரும் எதிர்வினையாற்றவில்லை. அவர்களின் பேச்சைத் தொடர்ந்தனர்.
லலிதாவோ தன்னை கடந்து சென்ற தக்ஷிண்யாவைப் பார்த்தபடி வேண்டுமென்றே மூக்கை நுழைத்தார்.
“வெளிநாடுகள்ல பிரிஞ்சு போன தம்பதிகள் அவங்கவங்க குடும்பத்தோட சந்திச்சா என்ன பேசிப்பாங்களாம் தெரியுமா? உன் பிள்ளையும் என் பிள்ளையும் நம்ம பிள்ளையோட விளையாடுறதை பாருனு பேசிப்பாங்களாம்… இப்ப இந்த வீட்டுலயும் அதே சீன் ஓடுது”
குரலில் ஏளனம் தொனிக்க அவர் கூற தக்ஷிண்யாவின் முகம் கறுத்துப்போக கமல்நாத்தோ மனதளவில் அடிபட்டுப்போனார்.
“என்ன பேசுறனு புரிஞ்சு பேசு லல்லி… நீ என் சம்பந்தியையும் மருமகளையும் அவமானப்படுத்துறதை பாத்துட்டு நான் சும்மா இருக்கமாட்டேன்”
எச்சரிக்கையாய் ஒலித்தது லோகநாதனின் குரல்.
“விடுங்க சம்பந்தி” என்ற கமல்நாத்திடம்
“இத்தனை நாள் விட்டு விட்டு தான் இப்பிடி ஒரு நிலமையில வந்து நிக்குறோம்” என்று பதிலளித்தார் லோகநாதன்.
லலிதாவோ முகம் சுளித்தவராக “சம்பந்தி சம்பந்தினு ரொம்ப தாங்காதிங்கண்ணா… இவர் அப்பிடி பொண்ணுக்கு என்ன பண்ணி கிழிச்சிட்டார்? ருத்ரா காதலிச்சதை சாக்கா வச்சு தக்ஷிய ஃப்ரீயா நம்ம குடும்பத்துல கொண்டு வந்து தள்ளிட்டார்… அது மட்டுமா? மருமகனோட காசுல தொழில் நடத்துறார்… மகளோட புகுந்தவீட்டுல கை நனைக்க கூட யோசிக்கிறவங்க மத்தியில இவர் மருமகனோட உழைப்புல வந்த காசை வச்சு தான் வாழ்க்கையே நடத்துறார்… இதுக்கு இவர் அசிங்கப்படணும்” என்று அவமானப்படுத்தும் எண்ணத்தோடு வார்த்தைகளை வாரியிறைத்தார்.
தக்ஷிண்யா கோபத்தோடு அவரை நெருங்கியவள் “இது தான் உங்களோட லிமிட்… இதை தாண்டி பேசுனா நல்லா இருக்காது” என்று எச்சரித்தாள்.
கூடவே “கமல் அங்கிள் ஒன்னும் ருத்ராவோட பணத்துல பொட்டிக்கை ஆரம்பிக்கல… ஹைதராபாத்துல பொட்டிக்கை வித்த பணத்தை என் பேர்லயும் ஆரோஹி பேர்லயும் டெபாசிட் பண்ணி வச்சிருந்தார்… அதை முதலா வச்சு தான் பொட்டிக்கை ஆரம்பிச்சார்… அவர் என்னை ஃப்ரீயா இந்த வீட்டுல தள்ளுனதா சொல்லுறிங்க, ஃப்ரீயா வந்ததுக்கு கைமாறா தான் உங்க மருமகனோட ரிசார்ட்ல சம்பளம் வாங்காம நான் வேலை பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் பேச பிடிக்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
“நீ இருக்குற வரைக்கும் இந்த வீட்டுல என் மகனும் மருமகளும் நிம்மதியா வாழவே முடியாது லல்லி… முதல்ல ராஜாவோட வாழ்க்கைய கெடுத்த… இப்ப என் மருமகளோட சுயமரியாதைய கேள்விக்குறியாக்கி அவளை வீட்டை விட்டு துரத்த ப்ளான் பண்ணி என் மகனோட வாழ்க்கைய கெடுக்க நினைக்குற… இனிமே என் முகத்துல முழிக்காத”
லோகநாதன் கடுகடு முகத்தோடு அங்கிருந்து சென்றுவிட ராஜேந்திரன் கமல்நாத்தை குழந்தைகள் மிதிவண்டி ஓட்டும் இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
தனிமையில் விடப்பட்ட லலிதா லோகநாதனின் கோபச்சொற்களில் அதிர்ந்து போனார். யார் மாறினாலும் என் அண்ணன் மாறமாட்டார் என்ற கர்வம் அவருக்கு இருந்தது.
ஆனால் தங்கையா மருமகளா என்று வந்ததும் அவரும் மாறிப்போனாரே என மனம் குமைந்தவர் யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் சென்று அடைபட்டுக்கொண்டார்.
தனது உலகமாக இருந்த பிருந்தாவனத்தில் இப்போது வேண்டாத விருந்தாளியைப் போல, தான் நடத்தப்படுவதாக வருந்தியவர் அதே சிந்தனையில் உழன்று சில நாட்களாக மாத்திரைகளை போடாமல் விட்டதை மறந்தே போனார்.
இப்போது நடந்த சம்பவம் வேறு அவரது மனதை வெகுவாக பாதித்துவிட அன்றைய தினமும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை மறந்துவிட்டார் லலிதா.
கணவரின் வெறுப்பு, பிள்ளையின் ஒதுக்கம், பெற்றோரின் அதிருப்தி, நாத்தனாரின் கோபம் என அனைத்தையும் வாங்கி கட்டிக்கொண்டவர் அன்று தமையனின் புறக்கணிப்பையும் எதிர்கொண்டுவிட்டார்.
வார்த்தைக்கு வார்த்தை லல்லி என்று அன்பாய் தாங்கும் அண்ணனும் தன்னை ஒதுக்கிவிட்டாரே என்ற சுயகழிவிரக்கத்தில் கண்ணீர் ஊற்றெடுக்க தலைபாரமாக உணர்ந்தார் லலிதா.
அப்படியே படுத்தவர் உறங்கியும் போனார்.
அதே நேரம் வீட்டுக்குள் இருந்த பெரியவர்களுக்கு இந்தக் கலவரம் நடந்ததே தெரியாது. அவர்கள் வழக்கம் போல இயங்க வருத்தத்தில் ஆழ்ந்திருந்த தக்ஷிண்யாவைத் தேற்றிக் கொண்டிருந்தான் ருத்ரதேவ்.
அவளும் சமாதானமாகிவிட்டாள். இவ்வாறே மாலைப்பொழுதும் வந்தது.
சசிகலா பெரியவர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்ப மாலினியோ சர்வானந்தை தனது நடனவகுப்புக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.
அப்போது தான் மகாதேவிடமிருந்து ருத்ரதேவுக்கு மொபைல் அழைப்பு வந்தது.
அவர்களின் கிராண்ட் மவுண்ட் ஹோட்டலின் சமையலறையில் தீவிபத்து ஏற்பட்டுவிட்டதென அவன் கூறவும் ராஜேந்திரன், லோகநாதனோடு ருத்ரதேவும் ஹோட்டலுக்குப் பதற்றத்துடன் கிளம்பி சென்றுவிட்டான்.
தக்ஷிண்யா சமையலறையிலிருந்த யாருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடக்கூடாதென மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். ஒருவித பதற்றத்துடன் மாடிப்படி ஏறப்போனவள் லலிதா தடுமாற்றத்துடன் வரவும் யோசனையோடு நின்றாள்.
லலிதா சுவரைப் பிடித்து நடந்தவர் திடீரென நிலை தடுமாறி விழ தக்ஷிண்யா அதிர்ந்தவளாக அவரைப் பிடிக்க ஓடினாள்.
அதற்குள் தரையில் விழுந்துவிட்ட லலிதா இடுப்பில் அடிபடவும் “அம்…” என்று கத்தியவர் அம்மா என்ற வார்த்தையை முடிக்கும் முன்னர் முகத்தின் ஒருபக்கம் உணர்விழந்து போகவும் வாய் குழற எழுந்திருக்க முயன்றார்.
தக்ஷிண்யா அவர் எழுந்திருக்க உதவ லலிதாவோ ஒரு காலின் பிடிமானத்தை இழந்து மீண்டும் விழுந்தார்.
“உங்களுக்கு என்ன பண்ணுது?” என அவள் பதற
“காலு….க்காஆஆல்ல்ல்லு…” என்று வாய் மீண்டும் குழற மயக்கமானார் லலிதா.
தக்ஷிண்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ருத்ரதேவுக்கு அழைத்து விவரத்தைக் கூற அவனோ “அத்தைக்கு ஹை ப்ளெட் ப்ரஷர் உண்டு… அதுக்கு ரெகுலரா டேப்லட் போட்டுட்டிருந்தாங்க… அவங்க ரெகுலரா செக்கப்புக்குப் போற ஹாஸ்பிட்டல் அட்ரஸை நோட் பண்ணிக்க” என்று முகவரியையும் தொலைபேசி எண்ணையும் அவசரமாக அளித்தான்.
ஹோட்டலின் சமையலறையோடு டைன்-இன் ஏரியாவும் எரிந்து சாம்பலாகிப் போக ஊழியர்கள் உயிருக்கு ஆபத்தின்றி சிறு சிறு காயங்களுடன் தப்பித்தாலும் விபத்து உண்டாக்கிய பதற்றத்தில் இருந்தான் அவன்.
மகாதேவும் ராஜேந்திரனும் லோகநாதனோடு சேர்ந்து தீயணைக்கும் வேலையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
“லேட் பண்ணாம கிளம்பு தக்ஷி” என்றான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா லலிதாவைச் சிரமத்தோடு தூக்கி தன் மீது சாய்த்தபடி எழுந்தவள் வீட்டில் இப்போது கார் இல்லை என்பதை அறிந்ததும் கமல்நாத்தின் எண்ணுக்கு அழைத்தாள்.
விவரத்தைச் சொன்னதும் அவரும் வேகமாக பிருந்தாவனத்தை அடைந்து லலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்க தக்ஷிண்யாவோடு கிளம்பினார்.
கெட்வெல் மருத்துவமனையில் லலிதா வழக்கமாக பரிசோதனைக்குச் செல்லும் மருத்துவர் அமர், அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க கட்டளையிட்டுவிட்டு என்ன நடந்தது என்பதை தக்ஷிண்யாவிடம் கேட்டறிந்தார்.
லலிதாவுக்குச் சிகிச்சை ஆரம்பித்தது. தக்ஷிண்யாவும் கமல்நாத்தும் பதற்றத்துடன் மருத்துவமனை இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
மருத்துவர் தக்ஷிண்யாவை அழைத்து லலிதாவின் சுகவீனத்தைக் கூறினார்.
“அவங்க ஹை ப்ளெட் ப்ரஷருக்கு மருந்து சாப்பிட்டுட்டிருந்தாங்க… கொஞ்சநாள் மெடிசினை போடாம இருந்திருக்காங்க… ப்ரஷர் லெவலையும் கவனிக்கல… அதோட விளைவு இப்ப ஸ்ட்ரோக்ல கொண்டு வந்து நிறுத்திருக்கு”
“ஸ்ட்ரோக்கா?”
“ஆமா மிசஸ் ருத்ரா… அவங்க கண் முழிச்சா தான் மத்த விவரம் சொல்ல முடியும்”
தக்ஷிண்யாவும் கமல்நாத்தும் லலிதா கண் விழிப்பதற்காக காத்திருக்க சில மணி நேரங்கள் கடந்து ருத்ரதேவும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
அவனிடம் மருத்துவர் கூறிய விவரத்தைத் தெரிவித்தாள் தக்ஷிண்யா. ருத்ரதேவின் கண்களில் கலக்கம் தெரிந்தது. அதே நேரம் லலிதாவுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதாக செவிலி வந்து கூற மருத்துவரும் அவரைப் பரிசோதிக்க விரைந்தார்.
பரிசோதனை முடிந்து வெளியே வந்தவர் ருத்ரதேவை மட்டும் தனியே அழைத்தார்.
“லலிதா மேடம்கு ஸ்ட்ரோக்கால பராலிசிஸ் அட்டாக் வந்துருக்கு… அவங்க உடலோட இடதுபக்கம் செயலிழந்து போயிடுச்சு மிஸ்டர் ருத்ரா”
அவர் கூறிய செய்தியில் ருத்ரதேவ் அதிர்ந்து போனான். மனம் உடைய தக்ஷிண்யாவிடம் அத்தகவலைக் கூற அவளும் கமல்நாத்தும் திகைத்துப் போயினர்.
லலிதாவுக்குச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் குடும்பத்தினர் கவலையோடு வந்து சேர்ந்தனர்.
லலிதாவுக்கு முடக்குவாதம் என்ற செய்தி தெரியவும் பார்வதியும் மீனாட்சியும் உடைந்து அழத்துவங்கினர். சசிகலாவின் கண்ணிலும் கண்ணீர். மாணிக்கவாசகமும் சதாசிவமும் வாய்விட்டு சொல்லாவிட்டாலும் வருந்துவதை அவர்கள் முகமே காட்டியது.
ராஜேந்திரனோ இடிந்து போய் அமர்ந்துவிட்டார். லலிதாவின் மீது அவருக்கும் கோபம் தான். ஆனால் இப்படி அவர் செயலிழந்து போகவேண்டுமென எப்போதும் நினைத்ததில்லை.
லலிதாவின் முடக்குவாதம் பிருந்தாவனவாசிகளை துயரத்தில் ஆழ்த்தியது. லலிதாவோ தனக்கு நேர்ந்த கதியை எண்ணி கண்ணீர் விடவும் முடியாமல் மனமுடைந்து போய்விட்டார்.
அப்போது தான் மருத்துவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது கமல்நாத்தும் தக்ஷிண்யாவும் தான் என்ற விவரத்தைக் கூறினார்.
தான் கண் மூடும் முன்னர் கடைசியாய் தக்ஷிண்யாவைக் கண்டதாய் அவருக்கு நினைவு. இவள் என்னை பழி தீர்ப்பாளோ என்ற எண்ணத்தோடு தான் மயங்கிப்போனார் அவர்.
ஆனால் அவளும் கமல்நாத்தும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்தனர் என்ற தகவல் தெரிந்ததும் வாழ்க்கையில் முதல் முறையாக தான் செய்த தவறுகள் அனைத்தையும் நினைவு கூர்ந்து குற்றவுணர்ச்சியில் மூழ்கினார் லலிதா.
எந்த தக்ஷிண்யாவை ராஜேந்திரன் முகத்தில் விழிக்க விடாமல் துரத்தினாரோ அதே தக்ஷிண்யா தான் தன்னைக் காப்பாற்றியிருக்கிறாள். எந்தக் கமல்நாத்தை அவர் துச்சமாகப் பேசினாரோ அதே கமல்நாத் தான் காலதாமதமின்றி அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்.
எத்துணை மோசமானவள் நான் என தன்னைத் தானே திட்டிக்கொண்டவருக்கு குரல் நாண்களும் நாவும் ஒத்துழைக்கவில்லை. காரணம் முடக்குவாதத்தால் அவரது முகத்தின் இடது பாகம் செயலிழந்ததால் பேச்சு குழறி தெளிவற்று போயிருந்தது.
மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில் சசிகலா தான் அவரைக் கவனித்துக்கொண்டார். தன் மீது கோபம் இருந்தாலும் இவர்கள் யாரும் தன்னை எதிரியாக எண்ணவில்லை என்பது லலிதாவுக்கு அப்போது தான் புரிந்தது.
மனவுளைச்சலோடு ஆண்கள் மருத்துவமனைக்கும் தொழில் நடக்கும் இடத்திற்கும் மாறி மாறி செல்ல பெரியவர்களை வீட்டிலிருந்து கவனித்துக்கொண்டாள் மாலினி.
லலிதாவோடு சசிகலா மருத்துவமனையில் தங்கிவிட அவர்களுக்கு உணவு எடுத்து வருவது, சசிகலா வீட்டுக்குச் செல்லும் சமயத்தில் லலிதாவுக்குத் துணையாக இருப்பது போன்ற வேலைகளை தக்ஷிண்யா செய்து வந்தாள். ஒருவழியாக லலிதாவின் உடல்நிலை கொஞ்சம் தேறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நாளும் வந்தது.
“எங்களால முடிஞ்சதை நாங்க செஞ்சுட்டோம்… அவங்களுக்குப் பேச்சு மட்டும் ஓரளவுக்குத் திரும்பியிருக்கு… ஆனா கை கால் சரியாகுறது கேள்விக்குறி தான்… ஆயுர்வேதால இதுக்கான பலன் கிடைக்கலாம்… எனக்குத் தெரிஞ்ச நண்பர் பெரும்பாவூர்ல இருக்குறார்… அங்க வைத்யா ஹெல்த்கேர்னு ஒரு ஆயுர்வேத ஹெல்த் செண்டர் இருக்கு… அங்க முடக்குவாதத்துக்கு ட்ரீட்மெண்ட் குடுப்பாங்க… நான் அவரை காண்டாக்ட் பண்ணி மத்த டீடெய்ல்ஸ் சொல்லுறேன்… இப்போதைக்கு இந்த மெடிசினை ஃபாலோ பண்ணுங்க” அத்தை மீது கொண்ட பாசத்தால் அவரை எப்படியாவது பழையபடி நடக்க வைப்பதற்காக மருத்துவர் அமரிடம் ஆலோசனை கேட்டிருந்தான் ருத்ரதேவ். அவரும் ஆயுர்வேத வைத்தியத்தை நம்பும்படி கூறிவிட, பாதி குணமடைந்த லலிதாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினர் பிருந்தாவனவாசிகள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


