“இரண்டே இரண்டு உணர்வுகள் நம்மை ஆக்கிரமிக்கும் போது மட்டும் நம்மால் கட்டுக்குள் இருக்க முடியாது. முதலாவது கோபம், இரண்டாவது காதல். இவ்விரு உணர்வுகளும் ஒரு மனிதனை ஆட்கொண்டால் அவற்றை வெளிப்படுத்தும் வரை அம்மனிதன் தனக்குள் போராடி தீர்ப்பான். போராட்டத்தின் முடிவில் களைத்து சோர்ந்து முடிவிலிருந்து பின்வாங்கும் யோசனைக்கும் வருவான். ஆனால் அந்தப் போராட்டம் கொடுக்கும் அழுத்தம் தாங்காமல் ஒருநாள் அவனே இவ்வுணவுர்களை பிரவாகமாக கொட்டித் தீர்ப்பான். அதன் விளைவாக, முதலாவது உணர்வான கோபத்தால் அவன் உறவுகளை இழப்பான். இரண்டாவது உணர்வான காதலோ அவனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான புதிய உறவொன்றை ஈட்டித் தரும்”
-தக்ஷிண்யா
கோகோ லகூன் ரிசார்ட்…
“சோ உங்களுக்குள்ள இருந்த பிரச்சனைய பேசி தீர்த்துக்கிட்டிங்க… இனிமே நீ ஒரு நல்ல லைஃப் பார்ட்னரா இருக்கப் போறனு சொல்லு”
தனது நண்பன் அசோகமித்ரனிடம் வினவியபடி தேநீரைச் சுவைத்தான் ருத்ரதேவ்.
அவனும் அவனது மனைவி மாயாவும் ரிசார்ட்டின் உள் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை ருத்ரதேவுடன் கையெழுத்திடுவதற்காக வந்திருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மாயா கூறிய மாற்றங்கள் ருத்ரதேவுக்கு ஒப்புதலாக இருக்க இருதரப்பினரும் ஒப்பந்தத்தை பேசி முடித்துவிட்டனர். மாயா ரிசார்ட்டில் இருக்கும் ஏரியை ரசிக்கச் சென்றுவிட ஆண்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அசோகமித்ரனுக்கும் மாயாவுக்குமிடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது ருத்ரதேவுக்குத் தெரியும். அவையனைத்தும் இப்போது தீர்ந்துவிட்டதென அசோகமித்ரன் கூறவும் அவனுக்கு மகிழ்ச்சி.
“மாயாவ நான் ரொம்ப லவ் பண்ணுறேன் ருத்ரா… மனைவிய காதலிச்சா மட்டும் போதாது… அவளுக்கு எல்லா நேரத்துலயும் ஆதரவா இருக்கணும்னு தாத்தா அடிக்கடி சொல்லுவார்… அதை தான் நான் ஃபாலோ பண்ணுறேன்” என்றான் அசோகமித்ரன்.
“குட் பாலிசி… எனக்கு முன்னாடியே தெரியும்டா, நீ ஒன்னும் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணுறவன் இல்ல… ரொம்ப நாள் கழிச்சு குட் நியூஸ் சொல்லிருக்க… சோ நானும் உனக்காக ஒரு ஸ்பெஷல் மொமண்டை அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்குறேன்” என்று புதிராய் பேசினான் ருத்ரதேவ்.
அசோகமித்ரன் அது என்னவென புரியாது குழம்ப மாயா வந்த பிறகு இருவரும் ரிசார்ட்டில் அன்றைய இரவைக் கழிக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியளித்தான் அவன்.
மாயா வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டு வரவில்லை என்கவும் “இப்ப கால் பண்ணி சொல்லிடுங்க… இங்க ஸ்டே பண்ணிட்டு மானிங் கிளம்புங்க… இந்த டீலை மட்டும் நீங்க திருப்தியா முடிச்சுக் குடுத்திட்டிங்கனா உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கூட குடுக்க ப்ளான் பண்ணிருக்கேன்” என்று வற்புறுத்தி அவர்களை ஒரு ஹனிமூன் வில்லாவில் கொண்டு சென்று விட்டான் ருத்ரதேவ்.
“வெல்கம் டு கோகோ லகூன்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அவர்களுக்கு இரவுணவு இதர வசதிகளை செய்யும்படி ரிசார்ட் சிப்பந்தி ஒருவரிடம் ஆணையிட்டவன் தனது அலுவலக அறைக்கு வந்துவிட்டான்.
அவனது மனதில் அசோகமித்ரனின் வார்த்தைகளே மீண்டு மீண்டும் ஓடியது.
நீயும் தான் தக்ஷிண்யாவைக் காதலிக்கிறாய்; ஆனால் நீ அவளுக்கு ஆதரவாக இருக்கிறாயா?
சரியான நேரத்தில் கிடுக்குப்பிடி கேள்வியைக் கேட்டு அவனை சிந்திக்க வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது ருத்ரதேவின் மனசாட்சி.
அதே சிந்தனையுடன் வீட்டுக்கு வந்தவன் தாத்தா பாட்டியிடம் சிரித்த முகமாக பேசிக்கொண்டிருந்த தக்ஷிண்யாவைப் பார்த்ததும் சற்று நிதானித்தான். மாலினியும் அங்கே இருந்தாள்.
“நான் நல்லா கிடார் வாசிப்பேன் தாத்தா… இன்னும் ஒன் வீக்ல என் ஃப்ரெண்ட் நவி என்னைப் பாக்குறதுக்கு வருவா… அவ என் கிடாரை கொண்டு வர்றேனு சொன்னா… வந்ததும் நான் வாசிச்சு காட்டுறேன்”
மாணிக்கவாசகம் பேத்தியை மெச்சுதலாகப் பார்க்க என் பேத்தி திறமைச்சாலி என்ற பெருமிதம் மீனாட்சியின் முகத்திலும் வழிந்தது.
“அண்ணி எனக்கு டான்ஸ்னா உயிர்… ஆனா என்னை ஊக்குவிக்குறதுக்கு இந்தப் பிருந்தாவனத்துல ஒரு ஜீவன் கூட இல்ல”
சோகமாய் மாலினி முடிக்கவும் சதாசிவம் “கவலைப்படாதம்மா… உனக்கு வரப்போறவன் உன்னை ஊக்குவிப்பான்” என்று கேலி செய்தார்.
“டான்ஸ் நல்லா இருக்குனு சொல்லுறதுக்காக யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா தாத்தா? நான் கலைத்துறையில சாதிச்சிட்டுத் தான் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேனாக்கும்”
“எப்பிடி? சித்ராதேவிப்ரியா மாதிரியா?”
தக்ஷிண்யா கிண்டல் செய்ய பெரியவர்கள் மூவரும் சிரித்தனர்.
மாலினி மூக்கைச் சுருக்கிக் கொண்டவள் “யூ டூ அண்ணி? இருங்க, அண்ணா வந்ததும் உங்களைப் பத்தி கோள்மூட்டி விடுறேன்… இத்தனை நாள் குட் நாத்தனாரா இருந்தவளை லேடி வெர்சன் ஆப் நாரதரா மாத்திட்டிங்க மிசஸ் ருத்ரா… இதோட விளைவுகளை நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும்” என்று மிரட்டுவது போல நடிக்க
“நான் பயந்துட்டேன்மா” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் தக்ஷிண்யா.
அந்நேரத்தில் பார்வதி கையில் ஒரு கிண்ணத்தோடு அங்கே வந்தார்.
“கைய நீட்டு, மருதாணி வச்சு விடுறேன்” என்றபடி அவர் அமர மாலினி ஆவலோடு கையை நீட்டினாள். தக்ஷிண்யா அதை ஏக்கம் கொண்டு பார்க்கவும்
“முதல்ல உன் அண்ணிக்கு வச்சு விட்டுட்டு உனக்கு வைக்குறேன் கண்ணம்மா” என்ற பார்வதி தக்ஷிண்யாவின் கையை உரிமையாய் பிடித்து மருதாணியிட ஆரம்பித்தார்.
அவள் கலங்கிய கண்களை மறைக்க சிரமப்படுவதை பார்த்தபடி அவர்கள் அறியாவண்ணம் மாடியறைக்கு விரைந்தான் ருத்ரதேவ்.
அறைக்குள் வந்தவனுக்கு கீழே நடந்த சம்பவம் புரியவைத்தது ஒன்றே ஒன்றை தான்.
தக்ஷிண்யாவுக்கு இந்தக் குடும்பத்தின் மீது வெறுப்பில்லை. அவளது வெறுப்பு முழுவதும் லலிதா, ராஜேந்திரன் மீது மட்டும் தான். அவர்களுக்காக, தன் மீது பிரியம் வைத்துள்ள குடும்பத்தினரை அவள் வருத்த விரும்பவில்லை.
இதற்கெல்லாம் காரணம் தேவிகாவின் டைரிக்குறிப்பு. ராஜேந்திரனால் தன் மகளுக்கு நல்ல தந்தையாக இருக்க முடியாது; ஆனால் அவளுக்கு அவரால் இப்படிப்பட்ட குடும்பத்தைக் கொடுக்க முடியுமென அவர் நம்பி எழுதிய வார்த்தைகள் தக்ஷிண்யாவின் இம்மாற்றத்திற்கு காரணம்.
தன்னிடம் கூட அவள் கூறியது இதை தானே! அவளுக்குத் தேவை அரவணைப்பு என்றாளே!
ருத்ரதேவ் யோசனையோடு மாற்றுடைக்காக தனது வார்ட்ரோபைத் திறக்கும் போது ஆடி அசைந்து கீழே விழுந்தது ஒரு வஸ்து.
குனிந்து அதை எடுத்தவன் மென்மையாகப் புன்னகைத்தான். அது தக்ஷிண்யா அவனுக்காக வாங்கி கொடுத்த ட்ரீம் கேட்சர்.
“கெட்டக்கனவை மட்டுமில்ல, கெட்ட எண்ணங்களையும் எதிர்மறை விசயங்களையும் கூட ட்ரீம் கேட்சர் தடுக்குமாம்… இதை பெட்ரூம்ல தொங்க விட்டா நம்மளை சுத்தி ஒரு பாசிட்டிவ் வைப் வரும் ருத்ரா”
“இது உங்களுக்கு நல்ல ட்ரீம்சை வர வைக்கும்… அந்த ட்ரீம்ல நான் மட்டும் தான் வரணும்… வேற யாரும் வரக்கூடாது”
அவள் செல்லமாக மிரட்டியது ஞாபகம் வர புன்னகை மாறாமல் அதை எடுத்துச் சென்றவன் தங்களது அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் அருகே அதை தொங்கவிட்டான்.
அதிலிருக்கும் பாசிமணிகளும் பறவை இறகுகளும் மெதுவாய் அசைவதை ரசித்துக்கொண்டிருந்தவன் “எப்ப வந்திங்க ருத்ரா?” என்று குரல் கொடுத்தபடி தக்ஷிண்யா வரவும் திரும்பினான்.
வந்தவள் தான் வாங்கி கொடுத்த ட்ரீம் கேட்சர் தொங்குவதை பார்த்ததும் விழிமலர்ந்தாள்.
“இதை நீங்க பத்திரமா வச்சிருக்கீங்களா?”
அவனருகே வந்தவள் அந்த ட்ரீம் கேட்சரை தொடப் போக அடுத்த கணமே தனது கரத்திலிருந்த மருதாணி நினைவுக்கு வரவும் தொடாமல் நின்றுவிட்டாள்.
“நீ எனக்குக் குடுத்த எதையும் நான் தொலைக்க மாட்டேன்”
கனிவாய் பதில் வந்தது ருத்ரதேவிடமிருந்து.
“உங்க லவ் உண்மைக்கும் க்ரேட்… ஆனா நான் தான் இடையில கிறுக்குத்தனம் பண்ணிட்டேன்ல”
கூறிவிட்டு உதட்டைப் பிதுக்கியவளை முதல் முறை பார்ப்பவனை போல கூர்ந்து நோக்கினான் அவன்.
பின்னர் ஏதோ தோன்ற அவளை அணைக்க வர “நோ நோ நோ! ஸ்டாப்… என் கையில மருதாணி இருக்கு… அழிஞ்சிடும்” என்றபடி பின்னால் சென்றாள் தக்ஷிண்யா.
“டோண்ட் ஒரி… அழிக்காம ஹக் பண்ணுற வித்தை எனக்குத் தெரியும்” என்றபடி நெருங்கியவன் அவளை இறுக்கமாக ஆலிங்கனம் செய்தான்.
இருவருக்கும் இத்தனை நாட்கள் விலகலால் உண்டான வலிக்கு மருந்து போடுவது போல இருந்தது அந்த அணைப்பு.
“ஐ லவ் யூ தக்ஷி… ப்ளீஸ் டோண்ட் லீவ் மீ அட் எனி காஸ்ட்”
ஏக்கமாய் ஒலித்தது அவனது குரல். தக்ஷிண்யா அதை கேட்ட போது குற்றவுணர்ச்சியில் குன்றிப்போனாள். மெதுவாய் அவனது அணைப்பிலிருந்து விலகியவள் தலையைக் குனிந்தபடி “ஐ அம் சாரி ருத்ரா… ஐ டோண்ட் டிசர்வ் யுவர் லவ்… நான் ரொம்ப மோசமான பொண்ணுல்ல” என்று கம்மிய குரலில் கூறினாள்.
ருத்ரதேவ் அவளது வதனத்தை நிமிர்த்தியவன் “நீ சரியான முந்திரிக்கொட்டை கேரக்டர்… அவசரத்துல எல்லா முடிவையும் எடுத்துட்டு அப்புறம் அழுறது” என்று கொஞ்சியபடியே அவளது மூக்கைப் பிடித்து ஆட்ட
“நான் எல்லா முடிவையும் அவசரத்துல எடுத்தது இல்லையே.. உங்களோட ப்ரபோசலை ஏத்துக்க எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டேன்னு மறந்துட்டிங்களா?” என்று சாமர்த்தியமாக அவள் கேட்க
“அது ஒன்னு தான் நீ நிதானமா யோசிச்சு எடுத்த முடிவு” என்றான் அவள் கணவன்.
“சரி பேசிக்கிட்டே தான் இருக்கப் போறிங்களா?”
“வேற என்ன பண்ணணும் மேடம்?”
கேட்டவன் அவளை நெருங்கி நிற்க தக்ஷிண்யா பதிலளிக்காமல் திகைத்தவள் பின்னர் எக்கி நின்று அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.
“என்ன பண்ணணும்னு கேக்குறது ஓல்ட் ஸ்டைல்… செஞ்சு காட்டுறது தான் இப்ப ட்ரெண்ட்”
குறும்புத்தனமாக மொழிந்தவள் அவனை விட்டு விலகினாள்.
ருத்ரதேவ் அவளது சீண்டலை ரசித்தவன் “எனக்கும் இந்த ட்ரெண்ட்ல இஷ்டம் தான்… ஆனா நான் அடுத்தவங்க உருவாக்குன ட்ரெண்டை ஃபாலோ பண்ணுறவன் இல்ல… ஐ அம் அ ட்ரெண்ட் செட்டர்” என்று சொல்லிவிட்டு விலகி நின்றவளை அணைத்து தாமதிக்காமல் அவள் இதழை ஆட்கொண்டு அவர்கள் உறவில் தானே ட்ரெண்ட் செட்டர் என்பதை நிரூபித்தான்.
நீண்டு கொண்டே சென்ற இதழ் யுத்தத்தில் மூச்சுக்கு நுரையீரல் தவிக்க அவர்களின் இதயமோ நெகிழ்ந்து போனது.
இதழ்கள் விலகிய நொடி தக்ஷிண்யாவுக்குள் நாணம் வந்து குடியேற தவிப்பாய் அவனை ஏறிட்டவள் “இது தான் நீங்க செட் பண்ணுன புது ட்ரெண்டா?” என்க
“ம்ம்… இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு ட்ரெண்டும் செட் பண்ணுடானு என் ஹார்ட் எனக்கு ஆர்டர் போடுது… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று பூடகமாக கேட்டான் ருத்ரதேவ்.
“பிரச்சனைனு சொன்னா மட்டும் சார் விட்டுடுவிங்களா?”
“நோ வே! அப்பிடி விட்டுட்டேன்னா இதயம் சொல்லுறதை கேக்காத இதயமில்லாதவன்னு நீயே என்னைக் குத்தம் சொல்லுவ”
குறிப்பு காட்டி இரகசியப்பேச்சு பேசிய இத்தருணம் அவர்கள் கணவன் மனைவியாய் தங்களை உணர்ந்த முதல் தருணம்.
அன்றைய இரவுணவின் போது தக்ஷிண்யாவின் கரத்தில் இன்னும் மருதாணி இருக்கவும் ருத்ரதேவ் ஊட்டி விட்டான்.
லோகநாதன் மனைவியிடம் மகனைக் காட்டி “இந்த வீட்டுல ருத்ரானு ஒருத்தன் எல்லாரையும் ஆட்டிப்படைச்சிட்டு இருந்தான்… அவனை கொஞ்சநேரமா காணலை சசி” என்று கிண்டல் செய்ய
“பையன் பிழைச்சுப்பான்” என்றார் அவர்.
ராஜேந்திரன் மருமகன் மகளிடம் கொண்ட நேசத்தைக் கண்டதில் மனம் நிறைந்து போனார்.
மகாதேவும் மாலினியும் பெரியவர்களிடம் அவர்களை காட்டி விளையாட்டாகப் பேசி சிரிக்க அங்கே நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல உணவைக் கொறித்தார் லலிதா.
இடையிடையே சர்வானந்த் அது வேண்டும் இது வேண்டுமென கேட்க அவனுக்கு எடுத்துக்கொடுத்தவர் மனதின் பொருமலை வெளியே காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொண்டார்.
ருத்ரதேவும் தக்ஷிண்யாவும் தனியுலகில் அல்லவா இருந்தனர். அவர்கள் இது எதையும் கவனிக்கவில்லை.
இரவுணவுக்குப் பிறகு அறைக்குள் புகுந்தவர்களுக்கு அவர்களைத் தவிர வேறு யாரும் உலகில் இல்லை என்ற பிரமை.
“யாரோ புது ட்ரெண்ட் செட் பண்ணப்போறேன்னு ஜம்பமா பேசுனாங்க”
படுத்திருந்தவனைச் சீண்டியபடியே மெத்தைவிரிப்பை சீராக்கினாள் தக்ஷிண்யா.
அடுத்த நொடியே மெத்தைவிரிப்போடு சேர்த்து அவளையும் தன்னிடம் இழுத்து அணைத்துக்கொண்டான் ருத்ரதேவ்.
தடுமாறி அவனது அணைப்புக்குள் சரணடைந்த தக்ஷிண்யா ருத்ரதேவின் அருகாமையில் நெகிழ்ந்து உருகிப் போனாள். காதலும் மோகமும் கலந்த கூடலொன்று அங்கே அழகாய் அரங்கேற வன்மையும் மென்மையுமான முத்தங்களோடு இனிதாய் ஆரம்பித்தது தக்ஷிண்யா ருத்ரதேவின் அழகான இல்லறம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


