“ஒருவர் எப்போது நம்மை நல்லவர் என்று கூறுவார் தெரியுமா? நாம் அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கும் போதும், அவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதும், அவர்கள் அநியாயம் செய்தாலும் அதை கண்டிக்காமல் அதற்கு துணை நிற்கும் போதும் தான். தப்பித் தவறி மேற்காணும் ஏதோ ஒன்றை நீங்கள் செய்யவில்லை என்றால் அவர்களின் பார்வையில் நீங்களும் கெட்டவரே! எனவே எவ்வளவு தான் நமக்குப் பிடித்தமானவராக இருந்தாலும் அவரிடம் கெட்டவர் பட்டம் வாங்கினாலும் பரவாயில்லை என்ற துணிவோடு அவர் செய்யும் தவறுகளுக்குத் துணை போகாமல் நியாயத்தின் பக்கம் நிற்க கற்றுக்கொள்ளுங்கள்! அதுவே நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மை!
-தக்ஷிண்யா
தக்ஷிண்யாவுக்கு ஒன்பது வயதான போது தான் ராஜேந்திரனுக்கும் தேவிகாவுக்குமிடையே அவ்வபோது நடைபெறும் சிறுசிறு சண்டைகள் மாபெரும் பிரிவுக்கான முகவுரையாக மாறத் தொடங்கின.
இவர்கள் சண்டையில் பாதிக்கப்பட்டவள் என்னவோ தக்ஷிண்யா தான். இவர்கள் சண்டையிடும் போது கண்ணீர் மல்க ஒதுங்கிவிடுவாள்.
அவர்களின் சண்டைக்கு முக்கியமான காரணம் கமல்நாத் என்பது ராஜேந்திரனின் எண்ணம். ஆனால் ராஜேந்திரனின் பிறந்தவீட்டார் அவருக்கு துர்போதனை செய்வது தான் காரணம் என்று தேவிகா சசிகலாவிடம் கூறுவாள்.
தேவிகா வேலை பார்க்கும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் சீனியர் டிசைனராக கமல்நாத் வந்த போதே சசிகலாவிடம் கூறியிருந்தாள் அவள். மூவரும் கோவையில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் போதே நண்பர்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இளங்கலை முடித்ததும் தேவிகாவும் சசிகலாவும் திருமணம் செய்துகொள்ள கமல்நாத்தோ மெட்ராஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜியில் மேற்படிப்பு படிக்க சென்றுவிட்டான்.
அன்று சென்றவன் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக மீண்டும் கோவை வந்த போது தேவிகா பணியாற்றிய நிறுவனத்திலேயே அவனுக்கும் வேலை கிடைத்துவிட்டது.
ராஜேந்திரனிடம் பேசும் போது இடையிடையே கமல்நாத்தைப் பற்றிய பேச்சு வரும். அதை தேவிகா கள்ளமற்ற உள்ளத்தோடு தான் பகிர்ந்திருந்தாள். ஆனால் லலிதாவின் போதனையாலும், என் மனைவி என்னிடம் இன்னொரு ஆடவனைப் பற்றி எப்படி பேசலாம் என்ற முட்டாள்தனமான எண்ணத்தாலும் அதை நல்லமுறையில் ஏற்றுக்கொள்ளவில்லை அவன்.
லலிதாவின் பேச்சை அவன் அப்படியே நம்புவதற்கு காரணம் அவனுக்குள் இருந்த குற்றவுணர்ச்சி மட்டுமே. தன்னால் அவளது வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது என்ற எண்ணம் ராஜேந்திரனுக்கு. அதற்கேற்றாற்போல லலிதாவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட நிலமைக்கு அவள் செல்லக் காரணம் தானே என்று பழியைத் தன் மீது போட்டுக்கொண்ட ராஜேந்திரன் முடிந்தவரை அவளிடம் இனிமையாகப் பேசுவான்.
லலிதாவும் அவனது இளகிய மனதை புரிந்துகொண்டு அப்பாவி போல நடித்தே தேவிகாவைப் பற்றி தவறான உருவகத்தை அவனுக்குள் ஏற்படுத்தினாள்.
இப்படியே வாழ்க்கை போய் கொண்டிருந்த போது ராஜேந்திரன் அலுவல்ரீதி பயணமாக வெளியூர் சென்றுவிட அந்நேரத்தில் தக்ஷிண்யாவுக்கு உடல்நலக்குறைவு உண்டானது. தனி ஒரு பெண்ணாக தேவிகாவால் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைய முடியாத சூழ்நிலை. சசிகலாவை உதவிக்கு அழைக்கலாம் என்றாலோ ராஜேந்திரனின் பிறந்தவீட்டார் மீதான கசப்புணர்வு அதற்கு தடை போட்டுவிட்டது.
அச்சமயத்தில் கமல்நாத் தான் தக்ஷிண்யாவைப் பார்த்துக்கொள்ள தேவிகாவுக்குத் துணையாக இருந்தான். மருத்துவமனையில் தேவிகாவுக்கு உதவியாக இருந்தவனை சதாசிவத்தோடு மருத்துவ பரிசோதனைக்கு வந்த லலிதா பார்த்து விட்டாள்.
அவளுக்குக் காலம் கொடுத்த வாய்ப்பாக எண்ணி ஊரிலிருந்து திரும்பி வந்ததும் பிருந்தாவனத்துக்குச் சென்ற ராஜேந்திரனிடம் குடும்பத்தாரின் முன்னிலையில் இட்டுக்கட்டி கூறினாள்.
அச்சமயத்தில் சசிகலா நண்பனுக்கும் தோழிக்கும் ஆதரவாகப் பேசியதை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.
ராஜேந்திரனுக்கோ மனைவி இன்னொரு ஆடவனிடம் உதவி கேட்டது அவமானமாக இருந்தது. அதை வைத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். சண்டையின் முடிவில் தனது கணவனை தனக்கெதிராகத் திருப்பிவிடுபவள் லலிதா என்பதை சசிகலாவின் வாயிலாக அறிந்து கொண்டாள் தேவிகா.
அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. அதே கோபத்தோடு பிருந்தாவனத்தில் அடியெடுத்து வைத்தவளுக்கு அன்று லலிதாவைப் பெண் பார்க்க சதாசிவத்தின் தூரத்து உறவினர்கள் வந்தது தெரியாது.
அனைவரும் கூடியிருந்த சபையில் மாப்பிள்ளை குடும்பத்தாருக்குக் காபி கொடுத்துக் கொண்டிருந்த லலிதாவைப் பிடித்து இழுத்து பளாரென அறைந்தவள் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான்!
“ஏன்டி அடுத்தவ புருசனுக்கு ஆசைப்படுற?”
அந்த ஒரு கேள்வியில் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தமே வேண்டாமென ஓடிவிட லலிதாவோ உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளிப்பார்வைக்குத் தேவிகா தனக்கு அமையவிருந்த திருமண வாழ்க்கையைக் கெடுத்துவிட்டாள் என ஒப்பாரி வைத்து நடித்தாள்.
அதையும் பெரியவர்கள் நம்பிவிட அவர்கள் கோணத்தில் தேவிகா கெட்டவளாகிப் போனாள்.
மாப்பிள்ளை வீட்டார் என்ன கூறினார்கள் என கேட்க வந்த ராஜேந்திரனிடமும் அதே நாடகத்தை நடித்தாள் லலிதா.
“உங்க பொண்டாட்டி எங்க எல்லாரையும் அவமானப்படுத்திட்டா… ஆனா நீங்க நான் சொல்லுறதை நம்ப மாட்டிங்க… யாருக்காக உங்களை வருசக்கணக்கா காதலிச்ச என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டு போனிங்களோ அவ உங்க முதுக்குக்குப் பின்னாடி இன்னொருத்தன் கூட கள்ளத்தனமா உறவு வச்சிருக்கா… அதை என் கண்ணால பாத்தேன்… அவனும் அவளும் ஹாஸ்பிட்டல்னு கூட பாக்காம கொஞ்சி குலாவுனதை பாத்துட்டு தான் உங்க கிட்ட சொன்னேன்… உங்களுக்கு உண்மை தெரிஞ்சதை பொறுத்துக்க முடியாம மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி என் கேரக்டரை தப்பா பேசிட்டா அவ… இனிமே என்னை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க?”
ஏற்கெனவே லலிதாவின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்ட குற்றவுணர்ச்சியில் இருந்த ராஜேந்திரன் அவளுக்கு அமையவிருந்த நல்வாழ்க்கையை தேவிகா கெடுத்துவிட்டாள் என்ற கோபத்தில் அவளிடம் சண்டை போட்டான், அதுவும் லலிதாவின் வார்த்தைகளை அப்படியே நம்பியவனாக.
“இன்னொரு ஆம்பளை கூட சகவாசம் வச்சிருக்குறனு உண்மைய கண்டுபிடுச்சிட்டதால நீ லலிதாவுக்கு வந்த சம்பந்தத்தை கெடுத்து விட்டுருக்க… உனக்கே உன்னை நினைச்சா அசிங்கமா இல்ல?”
அவன் அநியாயமாக பழி போட்டு பேசியதை கூட கோபத்தில் பேசுகிறான் என்று தேவிகா கடந்து போயிருப்பாள். ஆனால் லலிதா கூறியதை அப்படியே நம்பி தன் மீது களங்கம் கற்பித்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இனி அவனுடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. அக்கணமே தக்ஷிண்யாவை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவள் எங்கே செல்வது என்று புரியாமல் தவித்த வேளையில் கமல்நாத் அவளுக்கு உதவிக்கரம் நீட்டினான்.
பெற்றோரின்றி தவித்தவனை அவனது தூரத்து உறவு பெரியம்மா தான் வளர்த்து ஆளாக்கினார். நல்ல வேலையில் அமர்ந்ததும் அவரை தன்னுடன் அழைத்து நல்லபடியாகப் பார்த்துக்கொண்டான் அவன்.
இப்போது பெண் பிள்ளையுடன் தனியாய் தவித்த தேவிகாவின் நிலைக்கு தானும் ஒரு காரணம் என அறிந்ததும் அவரிடம் கலந்து பேசி அவளை தாங்கள் இருவரும் தங்கியிருக்கும் வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டான்.
ராஜேந்திரனிடம் பேசிப் பார்க்கட்டுமா என அவன் கேட்ட போது வேண்டாமென மறுத்துவிட்ட தேவிகா மணமுறிவில் உறுதியாக இருந்தாள்.
ராஜேந்திரனும் லலிதாவின் பொய்களை நம்பிவிட்டதோடு கமல்நாத்தும் தேவிகாவும் ஒரே வீட்டில் இருப்பதை அறிந்ததும் மணமுறிவுக்குச் சம்மதித்துவிட்டான்.
இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பித்து அது கிடைத்தும் விட அதில் பாதிக்கப்பட்டதென்னவோ தக்ஷிண்யா தான். இனி தந்தையைக் காண முடியாதென அஞ்சியவள் தேவிகாவுக்குத் தெரியாமல் கமல்நாத்தின் உதவியோடு பிருந்தாவனத்துக்கு வந்தாள்.
ராஜேந்திரனைப் பார்க்க வேண்டுமென அவள் அழுத போது கூட லலிதா மனமிரங்கவில்லை.
“உங்கப்பாக்கு உன்னை பாக்க விருப்பமில்ல” என்று அவள் கூறிவிட அக்கணத்தில் தக்ஷிண்யாவும் ராஜேந்திரனை வெறுத்து கமல்நாத்துடன் கிளம்பிவிட்டாள்.
அதன் பின்னர் கமல்நாத் தன்னுடன் பெரியம்மாவையும் தேவிகாவையும் அழைத்துக்கொண்டு ஹைதராபாத்துக்குக் கிளம்பிவிட்டதாகவும், தக்ஷிண்யாவையும் அவர்கள் தங்களோடு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் ராஜேந்திரனுக்குத் தகவல் கிடைத்தது.
மற்றபடி அவர்களது முகவரியோ தொலைபேசி எண்ணோ அவனுக்குக் கிடைக்காமல் போக லலிதா இதை உபயோகித்துக் கொண்டு ராஜேந்திரனின் மனதை கரைத்து அவனை மணமுடித்துக்கொண்டாள்.
மணமுடித்த கையோடு தனது வாழ்க்கையில் இழந்த காதலையும் மனநிம்மதியையும் காரணம் காட்டி அதனால் உண்டான மன அழுத்தத்தை சொல்லி சொல்லியே வீட்டினரை தனது கைக்குள் கொண்டு வந்தாள்.
அவர்களும் பத்தாண்டுகள் நிம்மதியிழந்து தவித்த பெண் இனியாவது சந்தோசமாக வாழட்டுமென அவள் ஆட்டுவித்தபடி ஆடினர். இப்போது வரை ஆடிக்கொண்டும் இருக்கின்றனர்.
சசிகலா நடந்த அனைத்தையும் கூறிமுடித்த பிறகு தக்ஷிண்யா அமைதியாய் அமர்ந்திருக்க ருத்ரதேவோ அன்னை கூறியதை நம்ப முடியாமல் தவித்தான்.
இன்னொரு அன்னையாக தன்னை வளர்த்த அத்தை தனது சிறுவயதில் அடிக்கடி அழுவதைக் கண்டிருக்கிறான். அதற்கு காரணம் தேவிகா என்பதையும் கேட்டிருக்கிறான்.
“அந்த தேவிகா மோசக்காரி ருத்ரா… அவ உன் மாமாவ நம்ம கிட்ட அனுப்ப மாட்டா தங்கம்” என்று சொல்லி கண்ணீர் உகுப்பார் லலிதா.
அதனாலேயே அத்தை மீது பரிதாபம் கலந்த அன்பும், தேவிகா மீது கோபமும் அவனுக்கு எப்போதும் உண்டு.
ஆனால் நடந்ததே வேறு போலிருக்கிறதே! தனக்குத் தேவதையாகத் தெரிந்த லலிதா அத்தை தேவிகாவின் வாழ்க்கையை அழிக்கும் பிசாசினியாக அல்லவா இருந்திருக்கிறார்!
அவர் மீது இத்தனை வருடங்கள் வைத்திருந்த மரியாதை மணல் கோட்டை போல சரியத் துவங்கியது. ஆனால் பாசம் தான் குறைவேனா என்றது. பாசத்திற்கு தான் நியாயம் அநியாயம் தெரியாதே!
அவனுக்கு இப்போது தக்ஷிண்யாவைக் காண பரிதாபமாக இருந்தது. இளம்வயதில் தங்கள் வீட்டின் முன்னே அவள் வந்து அழுததாக அன்னை கூறினாரே! பத்து வயதுப்பெண்ணின் கண்ணீர் கூடவா லலிதாவின் மனதை அசைக்கவில்லை?
இதனால் தான் இவள் உறவுகளையே வெறுத்திருக்கிறாள் போல. இனி அவளே பேசட்டுமென அவன் காத்திருந்தான்.
சசிகலாவோ “உங்கம்மா உனக்காக மட்டும் தான் ஒரு வருசம் எங்கண்ணன் பேசுன பேச்சையெல்லாம் தாங்குனா தக்ஷி… ஆனா அவர் எப்ப அவளோட நடத்தைய தப்பா பேசுனாரோ அப்ப தான் விவாகரத்து வாங்குற முடிவுக்கு வந்தா… அவ ரொம்ப அன்பானவ, யாரோட மனசையும் கஷ்டப்படுத்தக்கூடாதுனு நினைப்பா… என்ன ஒன்னு, யார் தப்பு பண்ணுனாலும் தயவு தாட்சணியமில்லாம முகத்துக்கு நேரா கேட்டுடுவா… அதனாலயே நிறைய பேர் அவளை திமிர் பிடிச்சவனு சொல்லுவாங்க… ஆனா அவ கடைசி வரைக்கும் தன்னோட குணத்தை மாத்திக்கல” என்று பேசிக்கொண்டே செல்ல தக்ஷிண்யா விரக்தியாகப் புன்னகைத்தாள்.
“எங்கம்மாவும் உங்கண்ணனும் பிரிஞ்சதுக்கான காரணம் என்னனு இப்ப புரியுது… ஆனா நீங்க சொன்ன ஃப்ளாஷ்பேக் எதுவும் என் மனசை மாத்தப் போறதில்ல… உங்க அண்ணனும் அவரோட செகண்ட் ஒய்பும் இருக்குற வீட்டுல என்னால வாழ முடியாது” என்றாள் பிடிவாதமாக.
உனது முடிவு என்ன என ருத்ரதேவை சசிகலா நோக்க அவனது கண்கள் தக்ஷிண்யாவையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. சில நொடிகள் ஏதோ யோசித்தவன்
“நீங்க சொன்னது எல்லாம் சரி தான்மா… ஆனா இப்பவும் இவ என்னை ஒதுக்கித் தான் வைக்குறா… இவ என்னை உண்மையா காதலிச்சிருந்தா இந்த மாதிரி நடந்துப்பாளா? இவளோட அப்பா அறிவுக்கெட்டத்தனமா இவங்கம்மா லைஃபை கேள்விக்குறியாக்குன மாதிரி இவ என் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு இருக்குறா… நான் கிளம்புறேன்மா… இல்லனா கோவத்துல இவளை ஏதாச்சும் பண்ணிடப் போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க
“கோவப்படாத ருத்ரா” என்றபடி அவனைத் தடுத்து நிறுத்தினார் சசிகலா.
“கோவப்படாம என்ன பண்ண சொல்லுறிங்க? நீங்க சொன்ன ஃப்ளாஷ்பேக்கை கேட்டதும் எனக்கு இவ மேல பரிதாபம் வருது… அத்தை நடந்துக்கிட்ட விதத்துக்கு யாரா இருந்தாலும் யோசிப்பாங்க தான்… ஆனா இவ என்னை நம்பணுமா இல்லையா? அவங்க என்ன, என்னை படைச்ச கடவுளே வந்து தக்ஷிய பிரிஞ்சிடுனு சொன்னா கூட நான் ஒத்துக்க மாட்டேன்… ஏன்னா நான் உண்மையா இவளை காதலிச்சேன்… ஆனா இவ..” என்று அவளை நோக்கி கை காட்டியவன்
“நாங்க உண்மையா காதலிச்சோமா இல்ல வயசுக்கோளாறுல ஒன்னா சுத்துனோமானு நீங்க கேட்டிங்கல்ல… அதுக்கு இவளோட பதில் என்னனு இப்ப உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றான் விட்டேற்றியாக.
“என் லவ்வுக்கு யாரும் சர்டிபிகேட் குடுக்க வேண்டிய அவசியமில்ல”
சுள்ளென்று கூறினாள் தக்ஷிண்யா.
“சாரி! நீ பண்ணுனது லவ்வே இல்லனு தான் நான் சொல்லிட்டிருக்குறேன்”
“சரி, அப்பிடியே வச்சுக்கோங்க… ஆனா எந்தக் காரணத்துக்காகவும் என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்… நீங்களோ உங்கம்மாவோ என் மனசை மாத்தலாம்னு கனவுக்கோட்டை கட்டாம உங்க வேலைய பாருங்க”
தக்ஷிண்யா எடுத்தெறிந்து பேசவும் ருத்ரதேவின் கோபம் இன்னும் தான் அதிகரித்தது.
அவளை எரிப்பது போல பார்த்துவிட்டு “இனிமே இவ கிட்ட பேசுறது வேஸ்ட்மா… இந்த மகாராணிக்குப் பணிவிடை பண்ணுனதுலாம் போதும்.. காலும் கையும் நல்லா தானே இருக்கு… இனிமே இவளுக்கு உங்க உதவி தேவையில்ல” என்றவன் ஒரு நொடி கூட தாமதிக்காது சசிகலாவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு சோர்ந்து போய் அமர்ந்தாள் அவள். எதிர்காலம் அந்தகாரமாக தோன்றியது. அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை. அனுதீப் கொடுத்த வேலையைச் செய்யாமல் இங்கிருந்து செல்ல முடியாது. வேலையைக் கவனிக்கலாம் என்றாலோ ருத்ரதேவின் கோபத்தையும் இலவச இணைப்பாக அனுபவிக்க வேண்டும்.
யோசிக்க யோசிக்க ஆயாசமாக வந்தது. அதே நேரம் மனதின் ஒரு ஓரத்தில் கமல்நாத் மீது மரியாதையும் பிறந்தது. பெற்றோருக்கு நடந்த விவாகரத்து பற்றி அவளுக்குத் தெரியும். ஆனால் காரணம் என்ன என்பதை கடைசி வரை தேவிகா மகளிடம் கூறவேயில்லை. பத்து வயது சிறுமியிடம் காரணத்தைக் கூற தயங்கியிருப்பார் போல.
கமல்நாத் எப்படிப்பட்ட கணவர், எப்படிப்பட்ட தந்தை என்பதெல்லாம் தக்ஷிண்யா அறியாத விசயங்கள். ஆனால் அவர் ஒரு சிறந்த நண்பர் என்பதை இப்போது புரிந்து கொண்டாள். அவரை அன்னை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ளாமல் இருவரையும் வெறுத்தது தவறோ என்று காலங்கடந்து வருந்தியது அவளின் மனம்.
அவளின் அந்த வெறுப்பு தான் விடுதியில் சேர்த்து அவளைப் படிக்க வைக்கும் முடிவுக்கு தேவிகாவை வர வைத்தது.
தக்ஷிண்யா அதற்கும் கமல்நாத்தையே வெறுத்தாள். இந்த மனிதருக்காக என் அம்மா என்னை ஒதுக்கி வைத்துவிட்டாள் என்ற எண்ணத்துடன் தான் விடுதியில் காலடி எடுத்து வைத்தாள். அங்கே இருந்த மாணவிகள் அவளது அன்னைக்கு விவாகரத்து ஆனதை அறிந்ததும் செய்த கேலி கிண்டல்கள் சிறுமியான தக்ஷிண்யாவை வெகுவாகப் பாதித்துவிட்டது.
அச்சம்பவங்களே ஓராண்டு விடுதியில் தங்கினால் தங்களின் பாசம் புரிந்து மனம் மாறிவிடுவாள் என்று நம்பிய தேவிகாவிடம் இனி எப்போதும் விடுதியிலேயே தங்கிக்கொள்வேன் என்று அவளைக் கூற வைத்தது.
அதற்கடுத்த வருடங்களில் கமல்நாத்தோ தேவிகாவோ அவளைக் காண வந்தால் பார்க்க விருப்பமில்லை என்று சொல்லி அறையிலேயே இருந்து கொண்டாள் தக்ஷிண்யா.
பின்னர் தேவிகாவின் மனமும் மரத்துப்போனது போல. எந்த மகளை கணவரிடம் போராடி தன்னுடன் அழைத்து வந்தாரோ அந்த மகளே வெறுத்து ஒதுக்கவும் தேவிகாவின் வருகை அடியோடு நின்றது.
ஆனால் தக்ஷிண்யாவின் படிப்புச்செலவு முழுவதையும் கமல்நாத்தும் தேவிகாவும் பார்த்துக்கொண்டனர். படித்து முடித்து வேலை கிடைத்ததும் அவர்கள் அனுப்பிய பணத்தை திருப்பியனுப்பியவள் அவர்களிடம் சொல்லாமல் ஷான்ஃபிக்குச் சென்றுவிட்டாள்.
பின்னர் ஆரோஹி பிறந்த தகவல் கிடைத்த போதும், தேவிகாவின் மரணம் பற்றிய செய்தி காதுக்கு வந்த போதும் மட்டும் ஹைதராபாத் வந்து ஒரு மகளாக அன்னையைக் கண்டுவிட்டுச் சென்றாள்.
புரிதலின்றி அன்னையையும் கமல்நாத்தையும் வெறுத்தவள் உறவுகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிட்டாள். அதை மீட்டுத் தந்தவனையும் இப்போது இழக்கும் சூழ்நிலை. அதற்கும் நீ தான் காரணம் பெண்ணே என்று விதி அவளை பழி கூறியது தக்ஷிண்யாவின் காதில் விழவில்லை.
அதே நேரம் பிருந்தாவனத்தை அடைந்த சசிகலா கெஸ்ட் ஹவுஸில் நடந்த அனைத்தையும் வீட்டினரிடம் கூறிவிட்டார்.
லலிதாவின் முகம் அனைத்தையும் கேட்ட பிறகு வெளிறிவிட்டது. இப்போதும் அவர் செய்த எதுவும் தவறில்லை என்பது தான் லலிதாவின் எண்ணம். ஆனால் அவரது பயம் ருத்ரதேவைப் பற்றி தான். இனி அவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்ற பயம் அவருக்கு.
அப்படி தான் நடக்குமென்பதை சசிகலாவின் துச்ச பார்வை உணர்த்த அந்தப் பயத்துக்கிடையே தக்ஷிண்யா ருத்ரதேவை திருமணம் செய்ய மறுத்துவிட்ட தகவல் தேனாய் இனித்தது.
எப்படி அனாதையான தேவிகா கூட்டுக்குடும்பத்தில் பிறந்த ராஜேந்திரனை தங்களிடமிருந்து பிரித்தாளோ அதே போல தக்ஷிண்யாவும் ருத்ரதேவை பிரித்துவிடுவாள் என்று பயந்தவருக்கு அவளின் மறுப்பு நற்செய்தியாகத் தோன்றியது. அவளது அன்னையைப் போல தங்கள் குடும்பத்திற்குள் நுழைய தக்ஷிண்யாவுக்கும் தகுதியில்லை என்று தனது தீய எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டார் அவர்.
எது நடக்கவே நடக்காது என்று அதீத நம்பிக்கையில் லலிதா கனவுலகில் மிதக்கிறாரோ அது நடக்கப் போகிற நாள் வெகுதூரம் இல்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


