“தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசிப்பது போல மனிதர்களிடம் உங்கள் பாசத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் ஆழ்ந்து யோசியுங்கள். எப்படி அனைத்துத் தொழில்களும் முதலீட்டுக்கு ஈடான வருவாயைக் கொடுப்பதில்லையோ அதே போல தான் சில மனிதர்களும் நாம் அவர்கள் மீது வைக்கும் பாசத்திற்கான மரியாதையை நமக்குத் தருவதில்லை. தகுதியற்றவர்களை நமக்குப் பிரியமானவர்களாக தேர்ந்தெடுப்போமேயானால் அதற்கான பலனை நாம் அனுபவித்துத் தான் தீர வேண்டும். So, Don’t invest your feelings and love on undeserved people.
-தக்ஷிண்யா
குயின்ஸ் பேரடைஸ் ரிசார்ட், ஷான்ஃபி…
தக்ஷிண்யா முந்தைய நாள் திருமணத்தின் பரபரப்பு எல்லாம் வடிந்து இயல்புக்குத் திரும்பியிருந்த ரிசார்ட்டை நோட்டம் விட்டபடி தனது பணியிடத்துக்கு வந்தவள் மிச்சமிருந்த விருந்தினர்களுக்கு உணவு செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
இடையிடையே மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். காரணம் முந்தைய நாள் இரவிலிருந்து ருத்ரதேவ் அவளை அழைத்துப் பேசவில்லை.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள் நேரே அவனது அறைக்குச் சென்று பார்க்க அறையோ பூட்டியிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வேகமாக ரிசப்ஷனுக்கு வந்தவள் “அனுதீப் சாரோட ஃப்ரெண்ட் மிஸ்டர் ருத்ராவோட ரூம் லாக் ஆகியிருக்குதே… அவர் அபீஷியல் மேட்டரா எங்கயாச்சும் வெளிய போயிருக்குறாரா நேஹா?” என்று வினவ
“அவர் ஏர்லி மானிங்கே செக்கவுட் பண்ணிட்டுக் கிளம்பிட்டார் மேம்” என பதில் வந்தது.
தக்ஷிண்யாவால் அவளது காதுகளையே நம்ப முடியவில்லை. தன்னிடம் சொல்லாமல் ருத்ரதேவ் எப்படி கிளம்புவான்? நேற்று இரவு கூட நன்றாகத் தானே பேசினான். அப்போது கூட கிளம்புவது பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே!
குழம்பிப் போனவளின் மனம் தவிக்கத் துவங்க அனுதீப்பின் உதவியாளர் அவளை மேலாண்மை இயக்குனரின் தந்தை பார்க்க விரும்புவதாக கூறவும் அவ்வறை நோக்கி விரைந்தாள்.
ஆனால் தந்தைக்குப் பதிலாக அங்கே அனுதீப்பே அமர்ந்திருக்கவும் மீண்டும் குழப்பம். புதிதாகத் திருமணமானவனுக்கு இங்கே என்ன வேலை?
ஆனால் அனுதீப்பே அதற்கான காரணத்தைக் கூறினான்.
“நம்ம குயின்ஸ் பேரடைஸ் க்ரூப்ஸ்ல புதுசா க்ளாம்பிங் டெண்ட் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு ஐடியா இருக்கு… அதுக்காக இடம் பாத்துட்டுருக்கோம்… பட் அதுக்கு முன்னாடி ப்ராக்டிக்கலா ரன் ஆகுற ப்ளேஸ்கு உங்களை அனுப்பி இந்த க்ளாம்பிங் ஐடியா நமக்கு ஒத்துவருமானு அனலைஸ் பண்ணலாம்னு டாடி சொல்லுறார்… சோ குயின்ஸ் பேரைடஸ் சார்பா இந்த வேலையைப் பாக்குறதுக்கு நீங்க தமிழ்நாட்டுக்குப் போகணும்”
தமிழ்நாடு என்றதும் ஒரு நொடி உடல் விறைத்தது தக்ஷிண்யாவுக்கு. மறக்க நினைக்கும் நிகழ்வுகளையும் துறந்து வந்த மனிதர்களையும் நினைவுபடுத்தும் இடமல்லவா அது!
உடனே மறுப்பு கூற எத்தனித்தவள் அனுதீப் அவளுக்கும் ஆரோஹிக்குமான விமான பயணச்சீட்டைக் கொடுக்கவும் வாயடைத்துப் போனாள்.
“நாளைக்கு மானிங் ஃப்ளைட்ல நீங்களும் உங்க சிஸ்டரும் சென்னைக்குக் கிளம்புங்க… அங்க உங்களை ரிசீவ் பண்ண ஆள் இருப்பாங்க… அவங்களோட நீங்க ஊட்டிக்குக் கிளம்பணும்… ஊட்டில தான் அந்த க்ளாம்பிங் சைட் இருக்கு… உங்களுக்கு அங்க எல்லா வசதியும் பண்ணிக் குடுத்துடுவாங்க”
தமிழ்நாடு என்ற சொல் அவளைத் விறைக்க வைத்தது என்றால் ஊட்டி என்ற சொல்லோ அவளை அதிர்ச்சியடைய வைத்தது.
“சார் ஊட்டிக்கா?”
“யெஸ்… அங்க தான்… நீங்க தான் என்னோட நம்பிக்கைக்கு உரிய ஸ்டாஃப்… சோ உங்களை அனுப்புனா வேலை நல்லபடியா முடியும்னு நினைக்குறேன்… நீங்க அங்க இருந்து திரும்பி வர்ற வரைக்கும் நவ்யா உங்களோட வேலைய பாத்துப்பாங்க தக்ஷி”
இதற்கு மேல் என்ன கூறி மறுப்பது? விமானப்பயணச்சீட்டை எடுத்துக் கொண்டவள் திடீரென ஞாபகம் வந்தவளாக
“ருத்ரா சார் எப்ப கிளம்புனார்?” என்று வினவ
“அவன் ஏர்லி மானிங்கே கிளம்பிட்டான் தக்ஷி… அவங்க அத்தைக்கு உடம்பு சரியில்லனு கால் வந்ததும் அவசரமா கிளம்பிப் போயிட்டான்… ஏன் உங்க கிட்ட அவன் இன்ஃபார்ம் பண்ணலையா?” என்றான் அனுதீப்.
“சொல்லலை சார்”
பொங்கி வந்த ஏமாற்றத்தையும் அழுகையையும் அடக்கிக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
ஊட்டி என்ற சொல் உண்டாக்கிய அதிர்வோடு ருத்ரதேவின் புதிரான நடவடிக்கை உண்டாக்கிய ஏமாற்றத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நடந்தவளின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. நேரே ரிசார்ட்டின் பின்னே இருந்த நதிக்கரையை அடைந்தவள் மனபாரம் தாங்காமல் அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுது கரைந்து கொண்டிருந்த போதே “தக்ஷி” என்ற நவ்யாவின் குரல் கேட்டது.
தக்ஷிண்யாவின் விம்மல் சத்தத்தைக் கேட்டபடி வந்தவள் “ஏன்டி அழுற? என்னாச்சு?” என்று கேட்க
“அனுதீப் சார் என்னை ஊட்டிக்குப் போக சொல்லுறார்” என்றாள் அவள்.
“அதுக்காகவா அழுற?”
“அந்த ஊர்ல நிறைய கசப்பான ஞாபகங்கள் இருக்கு நவி… அங்க போனா அது எல்லாமே ஞாபகத்துக்கு வந்துடும்… போதாக்குறைக்கு ருத்ரா என் கிட்ட சொல்லாம கிளம்பி போயிட்டார்”
“எப்ப கிளம்புனார்? ஏன் கிளம்புனார்?”
“அவங்க அத்தைக்கு உடம்பு சரியில்லனு போயிட்டாராம்… அனுதீப் சார் சொன்னார்… நான் கால் பண்ணுனாலும் அவர் அட்டெண்ட் பண்ண மாட்றார் நவி… எனக்கு இப்ப எப்பிடி ரியாக்ட் பண்ணணும்னு தெரியல”
நவ்யாவுக்குத் தக்ஷிண்யாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. சும்மா இருந்தவளிடம் வந்து சிரித்துப் பேசி காதலிப்பதாக கூறியவன் ருத்ரதேவ் தானே! ஊருக்குக் கிளம்பும் முன்னர் அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினால் ஆகாதா?
இப்படி அவளை அழவைத்துவிட்டானே! நவ்யாவுக்கு எரிச்சல் வந்தது.
தக்ஷிண்யாவின் மொபைலை வாங்கி ருத்ரதேவின் எண்ணுக்கு அவளே அழைத்தாள்.
முழு அழைப்பும் சென்றாலும் ஏற்கப்படவில்லை. அத்தை மீது பாசம் இருக்கட்டும். ஆனால் இத்தனை நாட்கள் காதல் வசனங்களைப் பேசி தன் தோழியின் மனதைக் களைக்க தெரிந்தவனுக்கு கிளம்பிச் சென்றதற்கான காரணத்தைத் தெரிவிக்க என்ன கேடு வந்தது?
மொபைலை பார்த்தபடி உதட்டைப் பிதுக்கியவளிடம் “அட்டெண்ட் பண்ணுனாரா?” என்று கண்களில் பரிதவிப்புடன் கேட்டாள் தக்ஷிண்யா.
“இல்லடி… நீ தானே சொல்லுவ, அவருக்கு அத்தைனா உயிர்னு… அதான் உன் கிட்ட சொல்லாம போயிருப்பார்… அவரும் தமிழ்நாடு தானே… நீ அங்க தானே போற… நேர்லயே மீட் பண்ணி நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடு”
“அவருக்கும் ஊட்டி தான் சொந்த ஊர் நவி”
“அப்புறம் என்னடி? நீ அங்க போனதும் கால் பண்ணு… கண்டிப்பா அவர் உன்னை மீட் பண்ணுவார்”
நவ்யாவின் பேச்சில் தக்ஷிண்யா நம்பிக்கை கொண்டாலும் ஏனோ அவளுக்குள் எழுந்த கலக்கம் அடங்கியபாடில்லை.
மறுநாள் காலையில் சென்னை செல்ல வேண்டுமென்பது அனுதீப்பின் கட்டளை. எனவே அன்றையை தினம் முழுவதும் அலைக்கழிப்பிலும், உடமைகளை எடுத்து வைப்பதிலுமே கழிந்தது.
ஆரோஹியின் உடைகளை எடுத்து வைத்த நவ்யாவிடம் ருத்ரதேவ் வாங்கிக் கொடுத்த டேன்சிங் கேக்டஸையும் அவள் கொடுக்க அதை பார்த்ததும் மீண்டும் அவனது ஞாபகம் தக்ஷிண்யாவைத் தாக்கியது.
எதற்கும் மீண்டும் ஒரு முறை முயல்வோமென அவனது எண்ணுக்கு அழைத்தவள் அப்போதும் அழைப்பு ஏற்கப்படாமல் போகவும் நொந்து போனாள்.
இரவில் உணவும் இறங்கவில்லை. உறக்கமும் வரவில்லை. கண்களை மூடினால் ருத்ரதேவ் வந்தான். புன்னகை பூத்தவனாக அவளது நெற்றி வகிட்டில் குங்குமமிட்டான்.
அக்னியை வலம் வந்தான். கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டப் போகும் தருவாயில் யாரோ வந்து அவனது கையைப் பற்றி மணமேடையிலிருந்து எழும்பும்படி கூறினார்கள்.
அதற்கு அவன் பதிலளிக்கும் முன்னர் கனவு கலைந்தது. ஆம்! இவ்வளவும் நடந்தது தக்ஷிண்யாவின் கனவில் தான். அதை நினைத்து மனம் குமைந்தபடி இருந்தவள் உறங்காத கண்கள் கொடுத்த எரிச்சலோடு வைகறையை வரவேற்றாள்.
“குட் மானிங் தக்ஷி!” என்றபடி வந்த நவ்யா அவளைச் சீக்கிரம் குளித்து விமானநேரத்துக்குள் தயாராகும்படி கூறினாள்.
ஆரோஹியை யோசனையுடன் பார்த்தவளிடம் “அவளை நான் ரெடி பண்ணுறேன்… நீ குளிச்சு ஃப்ரெஷ்சா ரெடியாகு” என்று சொன்னபடி ஆடைகள் மற்றும் டவலுடன் குளியலறைக்குள் தள்ளி கதவை மூடினாள்.
தக்ஷிண்யா குளித்து உடை மாற்றி வரும் போது ஆரோஹியும் தயாராகி இருந்தாள். இருவருக்கும் காலையுணவை அறைக்கே வரவழைத்த நவ்யா தக்ஷிண்யாவைச் சாப்பிடும்படி கூறிவிட்டு தானே ஆரோஹிக்கு ஊட்டினாள்.
தமிழ்நாட்டுக்குச் செல்லப்போகிறோம் என்றதும் ஆரோஹிக்கு உற்சாகம்.
“நான், அப்பா, அம்மா எல்லாரும் சென்னைல தான் ரொம்ப நாள் இருந்தோம்… அங்க தான் நான் கிண்டர் கார்டன் படிச்சேன்… அப்புறம் நாங்க ஹைதராபாத்துக்குப் போயிட்டோம்”
அது எல்லாம் தக்ஷிண்யாவுக்குத் தெரிந்த கதை தான். அப்போது ஆரம்பித்து தேவிகாவின் மரணம் வரை அவர்களின் குடும்பம் ஹைதராபாத்தில் தான் வசித்தனர். அங்கே ‘டி.கே ஃபேஷன்ஸ்’ என்ற பெயரில் கணவனும் மனைவியும் சேர்ந்து பெரிய பொட்டிக் ஒன்றை நடத்தியதும், அதற்கு ஹைதராபாத்தின் பெரிய பெரிய வி.ஐ.பிக்கள் வாடிக்கையாளர்களாக இருந்ததும் தக்ஷிண்யா அறியாத விசயமில்லை.
தொழில் அமோகமாக நடந்து ஹைதராபாத்திலேயே நான்கு கிளைகளுடன் டி.கே ஃபேஷன்ஸ் விரிவடைந்த தருவாயில் தான் தேவிகாவின் மரணமும் நிகழ்ந்தது.
அந்த மரணம் தக்ஷிண்யாவைப் பெரியளவுக்குப் பாதிக்கவில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் அன்னையின் அரவணைப்பை இழந்தவளுக்கு அவரது மறைவு பெரிய இழப்பாக தோன்றாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால் அவருடனே வாழ்ந்த கமல்நாத்திற்கும், அன்னையுடனே ஒட்டிக்கொண்டு திரியும் ஆரோஹிக்கும் அது மறக்க முடியாத வலி. குழந்தை என்பதாலும் சகோதரி உடனிருப்பதாலும் ஆரோஹி அதிலிருந்து வெகுவிரைவில் மீண்டு விட்டாள். ஆனால் கமல்நாத்தால் மீள முடியவில்லை.
அதனால் தான் பெண் குழந்தையின் பொறுப்பை தக்ஷிண்யாவிடம் ஒப்படைத்துவிட்டு அந்த மனிதர் கண் காணாமல் எங்கேயோ போய்விட்டார். இதோ அவரைப் போலவே தான் ருத்ரதேவும் எந்தத் தகவலும் கொடுக்காமல் மறைந்து விட்டான்.
என்ன ஒன்று, அவன் எங்கிருப்பான் என்பது தக்ஷிண்யாவுக்குத் தெரியும். சோர்ந்த மனதை இதைச் சொல்லியே திடப்படுத்தினாள் அவள்.
“எங்க போயிடப்போறான்? நான் போற அதே ஊட்டில தானே அவனும் இருப்பான்… அவனை மீட் பண்ணி நவி சொன்ன மாதிரி நறுக்குனு நாலு வார்த்தை கேக்கணும்” என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
ஆனால் எடக்குமடக்காக யோசிக்கும் மனசாட்சியோ “அவன் ஊட்டில தான் இருப்பான்னு என்ன நிச்சயம்? ஒருவேளை அவன் உன் கிட்ட பொய் சொல்லியிருந்தா நீ என்ன பண்ணுவ தக்ஷி?” என்று அணுகுண்டை வீச
“அவன் ஏன் என் கிட்ட பொய் சொல்லப்போறான்? அவன் பொய் சொன்னாலும் அனுதீப் சார் ஏன் பொய் சொல்லணும்? அவனோட ஃபேமிலிக்கு ஊட்டியில பிசினஸ் இருக்குனு அவர் சொன்னது எப்பிடி பொய்யாகும்?” என்று எண்ணற்ற கேள்விக்கணைகளைத் தக்ஷிண்யா தொடுக்கவும் மனசாட்சி வாயை மூடிக்கொண்டது.
பின்னர் சற்று நேரத்தில் அனுதீப் ஏற்பாடு செய்தபடி நைனிடால் விமான நிலையத்தை அடைந்தனர் தக்ஷிண்யாவும் ஆரோஹியும். அவர்களை வழியனுப்ப நவ்யாவும் வந்தாள்.
சென்னை செல்வதற்கான விமான அறிவிப்பு வந்ததும் இருவருக்கும் விடைகொடுத்துவிட்டு அவள் கிளம்ப தக்ஷிண்யாவும் ஆரோஹியும் விமானம் மூலம் சென்னையை அடைந்தனர்.
அங்கே அனுதீப் சொன்னது போல அவர்களுக்காக காத்திருந்த நபர் வரவும் அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள் தக்ஷிண்யா.
“வணக்கம் மேடம்! அனுதீப் சார் உங்களை ஊட்டிக்குக் கார்ல அழைச்சிட்டுப்போக சொல்லியிருக்குறார்” என்றார் அந்நபர்.
உடனே தக்ஷிண்யாவின் புருவம் கேள்வியாகச் சுருங்கியது.
“ஆனா சார் என்னை கோவை வரைக்கும் ஃப்ளைட்ல போகச் சொல்லிட்டு அங்க இருந்து தான் ஊட்டிக்குக் கார்ல போகச் சொன்னார்”
“சார் ட்ராவல் ப்ளானை மாத்திட்டார் மேடம்… உங்க கிட்ட சொல்ல மறந்திருக்கலாம்” என்ற அந்நபர் அவர்களது உடமைகள் அடங்கிய ரோலர் சூட்கேசை தக்ஷிண்யாவின் அனுமதியின்றி உருட்டிக்கொண்டு விரைய
“ஹலோ சார்! என்ன நீங்க இப்பிடிலாம் பண்ணுறீங்க?” என்றபடி அவர் பின்னே ஓடினாள் தக்ஷிண்யா. ஆரோஹி வேறு உடனிருப்பதால் அவளால் வேகமாக ஓட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் மூச்சு வாங்க ஆரோஹியின் கையை விட்டவளின் அருகே வந்து நின்றது ஆடி Q7 கார் ஒன்று.
தக்ஷிண்யா பக்கவாட்டில் பார்க்கும் போதே காரின் கதவு திறந்து அவளை யாரோ உள்ளே இழுக்க வேகமாக முன்னிருக்கையில் விழுந்தாள்.
யார் என்னவென சுதாரித்து நிமிரும் போதே ஆரோஹி வெளியே இருப்பது நினைவில் வர பதற்றத்துடன் “ஹெல்ப் ப்ளீஸ்” என்று கத்தப் போனவள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் கண்ணிமைக்க மறந்தாள்.
“ஹலோ மேடம்! ஆர் யூ ஓ.கே?” என்றபடி புன்சிரிப்புடன் ஷீட் பெல்டை போட்டபடி அங்கே அமர்ந்திருந்தவன் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா அதிர்ச்சியோடு பார்க்கும் போதே அவளை நெருங்கியவன் வெகு உரிமையோடு ஷீட் பெல்டை அவளுக்கு மாட்டிவிட சில நொடிகள் சிலையாய் சமைந்தவள் அவளது கழுத்து வளைவில் சூடாய் உணர்ந்த அவனது மூச்சுக்காற்றில் இயல்புக்குத் திரும்பினாள்.
அதீத நெருக்கத்தை உணர்ந்து திடுக்கிட்டவளாய் அவனை விலக்க அவளது கரங்கள் எழும்பிய போதே அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் ருத்ரதேவ்.
பார்ப்பதற்கு மென்மையாய் தோன்றும் அவ்விதழ்கள் வன்மையாய் கன்னத்தில் பதிந்த போது இதழ்களோடு சேர்த்து அவனது கன்னச்சருமத்தில் முளைத்திருந்த ‘ஃபைவ் ஓ க்ளாக் ஷேடோ’ தாடியின் ரோமங்கள் உரசவும் தக்ஷிண்யாவின் வயிற்றும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா ஏதோ ஒன்று உருளத் தொடங்கியது.
“ஐ மிஸ் சோ மச் தக்ஷி”
ஹஸ்கியாய் காதலைக் குழைத்து ஒலித்த குரலில் மெய் சிலிர்த்து அடங்கியது.
அவளது நிலையை அறிந்து சற்று விலகி அமர்ந்தவன் “ஆரோஹிய பத்தி கவலைப்படாத” என்று சொல்லிவிட்டு அவளது முகத்தை முன்பக்க கண்ணாடியின் பக்கம் திருப்ப அங்கே ஆரோஹியோடு இன்னொரு காரில் ஏறினார் அவளை அழைத்துச் செல்ல வந்த நபர்.
தக்ஷிண்யாவுக்கு நிதானம் திரும்பியது. கூடவே கோபமும் தான்.
இரண்டு நாட்கள் அவளது அழைப்பை ஏற்கவில்லை. அவளிடம் மரியாதைக்குக் கூட ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. இங்கே வந்த பிறகோ கடத்தல்காரன் போல அவளைக் காரில் இழுத்துப் போட்டதோடு ஆரோஹியை தனியாக யாரோ ஒரு முன்பின் தெரியாத நபரோடு அனுப்பி வைக்கிறான். இவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்!
பொங்கிய கோபத்தோடு சீற்றமாக அவனைப் பார்த்தவள் ருத்ரதேவின் ஹேசல்நட் விழிச்சிமிட்டலில் தன்னை மறந்தாள்.
“ஏதோ கேக்க வந்த மாதிரி தெரிஞ்சுதே”
கேலியாய் பேசியபடி காரைக் கிளப்பினான் அவன்.
“காரை நிறுத்துங்க… நான் இறங்கணும்”
அவள் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு சாலையில் கண் பதித்தவன் “சாரி மேடம்! இது ஒன்னும் கால் டாக்சியோ ஊபர் ஓலாவோ இல்ல… என்னோட சொந்த கார்… இதை நான் நினைச்சா தான் ஸ்டாப் பண்ணுவேன்… சோ வேற ஏதாச்சும் கேளுங்க… அதாவது நான் செய்யக்கூடியதா பாத்து கேளுங்க” என்று அமர்த்தலாகப் பதிலளித்துவிட்டு ஸ்டீயரிங் வீலை வளைத்தான்.
“எனக்கு உங்க கூட வரப் பிடிக்கல”
“என்னோட க்ளாம்பிங் பிசினஸை பாக்க வந்தவங்க என் கார்ல வராம வேற யாரோட கார்ல போகலாம்னு ஐடியா?”
இவனது பிசினஸா? தக்ஷிண்யா திகைக்க புன்சிரிப்பில் வளைந்த இதழ்களோடு
“அனுதீப் உன்னை அனலைஸ் பண்ணச் சொன்னது என்னோட க்ளாம்பிங் பிசினஸை தான்… இந்த பிசினஸை பண்ணணும்ங்கிறது அவனோட முடிவு… ஆனா க்ளாம்பிங் டெண்டை பாத்து ஃபீல்ட் ஸ்டடி பண்ணுறதுக்கு உன்னை அனுப்பச் சொன்னது நான் தான்” என்றான்.
“ஏன்?” ஒற்றை வார்த்தையில் மொத்தக் கோபத்தையும் கொட்டிக் கேட்டாள் தக்ஷிண்யா.
“பாதி முடிஞ்ச நம்ம மேரேஜை முழுசா முடிச்சு உன்னை மிசஸ் ருத்ராவா மாத்துறதுக்காக தான்” இலகுவாகப் பதிலளித்து சீட்டியடித்தபடி அவன் காரை வேகமாகச் செலுத்த தக்ஷிண்யா அவனது அதிரடியான செயல்களை புரிந்துகொள்ள முடியாதவளாக அவனை நோக்க காரோ கோவை செல்வதற்காக நெடுஞ்சாலை நோக்கி விரைந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


