“ஏன்னு தெரியல மகிழ்மாறன் சார்…ப்ச்… மகிழ் மாமாவ நேருக்கு நேரா பாத்து ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள வார்த்தை வாய்க்குள்ளவே கபடி ஆடுது எனக்கு. அவர் ஒன்னும் பேயோ பூதமோ இல்லதான். ஆனா என்னமோ ஒரு தயக்கம், ஏதோ ஒரு டென்சன். என்னனு சரியா சொல்லக் கூட தெரியல. அவர் அதை எப்பிடியோ கண்டுபிடிச்சுட்டார். அவர் கூட சகஜமா பேச, ஒரு மனைவியா நான் பழகிக்கணுமாம். சொல்லுறப்ப ரொம்ப ஈசியா தோணுதுல்ல. ஆனா எனக்கு அது இமையமலையில ஏறணும்ங்கிற மாதிரி பிரமிப்பைக் குடுக்குது. நாங்க தம்பதியா பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். என்னோட தயக்கமும் பயமும் எங்களுக்குள்ள அன்னியோன்யத்தை வரவிடாதுனு மகிழ் மாமா யோசிக்குறது எனக்குப் புரியாம இல்ல. ஆனா… ப்ச்! சொல்லத் தெரியலங்க”
-விழியின் மொழி
“ஆடி மாசக் கடைசி செவ்வாய்ல நம்ம ஊர் அம்மன் கோவில்ல கொடை வருது மதினி. நீங்க எல்லாரும் வரணும். கொடை முடிஞ்ச கையோட மலரையும் இங்க அழைச்சிட்டு வந்துடுங்க”
காரப்பூந்தியைச் சாப்பிட்டபடியே சிவகாமியிடம் பேசிக்கொண்டிருந்தார் குழலி.

“சரிங்க மதினி. கண்டிப்பா வருவோம். கொடை எல்லாம் பாத்து வருசக்கணக்காகுது. இங்க உள்ள கோவில்ல எங்களுக்கு முதல் மரியாதை குடுக்குறதால நேரத்துக்குப் போய் சாமி கும்பிடுறதோட சரி. மக்களோட மக்களா இருந்து கொடையப் பாக்குறதெல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போயிடுச்சு” என்ற சிவகாமி அவரது தட்டில் வேணி கொண்டு வந்த பஜ்ஜியை வைத்தார்.
இன்னொரு பக்கம் சிகாமணியைத் தன்னுடன் அழைத்துப் போன நரசிம்மன் நிலமோசடியில் அவர் ஏமாந்த விவரத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஐஸ் ஃபேக்டரி சின்னதா வச்சு ரங்கநல்லூர்ல நடத்திட்டிருந்தேன் சம்பந்தி. நல்லா போச்சு. அந்தத் தைரியத்துல கொஞ்சம் அகலக்கால் வச்சிட்டேன். போதாக்குறைக்கு அப்ப நண்பர்கள்னு கூட இருந்தவனுங்களுக்கு எல்லாம் ஜாமீன் கையெழுத்து வேற நிறைய இடத்துல போட்டுட்டேன். அவங்க கட்டாத பணத்துக்கு எனக்கு நோட்டீஸ் வரும். நம்ம நண்பன் தானேனு என் சொத்தை அடமானம் வச்சு கட்டுன கடன் ஏராளம். ஆனா நான் கையில நயாபைசா இல்லாம நின்னப்ப அந்த நண்பனுங்க யாரும் வரல. எங்கண்ணன்தான் இருக்க வீடும், வேலையும் குடுத்து என் குடும்பத்தை அரவணைச்சாரு. நிலத்துல விட்ட காசு போனா போகுது, உன் உழைப்பை நம்பு சிகாமணினு எனக்குத் தைரியம் குடுத்தார். எங்க மதினி கொஞ்சம் மோசம்தான். அண்ணன் அப்பிடியில்ல”

நரசிம்மனுக்குச் சிகாமணியைப் பார்த்தால் பாவமாக இருந்தது. இவ்வளவு அப்பிராணியாக இருக்கிறாரே இந்த மனிதர் என நினைத்தவர்
“வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சு ஏமாந்திருக்கிங்க சம்பந்தி. உங்களோட தப்பு இதுல ஒன்னுமில்ல. உங்களை நம்ப வச்சு ஏமாத்துனவங்களுக்கு அதுக்கானக் கூலியைக் கடவுள் குடுப்பார்” என்றார் வருத்தத்துடன்.
இது அனைத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்த மகிழ்மாறனிடம் கண் காட்டினார் நரசிம்மன். அவனும் தலையாட்டினான்.
அதற்கு அர்த்தம் ‘இனி நீதான் ஏதாவது செய்யவேண்டும்’ என்பதே!
அவன் தீர்மானித்துவிட்டான் பவிதரனிடம் பேசவேண்டுமென. அதற்கு முன்னர் அவனுக்குத் தக்க ஆதாரங்கள் வேண்டுமே!
அதைச் சேகரித்தப் பிற்பாடு அவனிடம் சென்றால் வேலை கச்சிதமாக முடியும் என்று திட்டமிட்டிருந்தான்.
அதே நேரம் மலர்விழி தனது உடைமைகளைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் சின்னதாக ஒரு தவிப்பு நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தது.
‘ஆடி மாதத்தில் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் இருக்கக்கூடாதெனச் சொன்ன அறிவாளி எவனோ?’
முன்னோர்களைத் திட்டித் தீர்த்தது அவளது மனம்.
கைகள் என்னவோ மாமியார் கொடுத்த புத்தகங்களை பேக்கில் வைத்துக்கொண்டிருந்தன.
அடுத்து உடைகளை வரிசையாக அடுக்கி வைத்தவள் துப்பட்டா ஒன்றைக் காணவில்லை என்றதும் வார்ட்ரோபைத் திறந்து தேடினாள். அந்நேரத்தில் அவளது பார்வையில் விழுந்தது மகிழ்மாறன் டீசர்ட். ஆங்காங்கே மருதாணியின் சிவப்பு தீற்றலாக இருந்த டீசர்ட்டைத் தான் அவள் பாழாக்கிவிட்டாள் என அவன் புலம்பியிருந்தான்.
அதரங்களில் பூத்த புன்னகையோடு அந்த டீசர்ட்டை எடுத்தவள் அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டபோது சரியாக அந்த அறைக்குள் வந்து சேர்ந்தான் மகிழ்மாறன்.
மலர்விழி தனது டீசர்ட்டை அணைத்தபடி நின்ற கோலத்தைப் பார்த்ததும் தொண்டையச் செருமியவன் அவள் சுதாரித்து டீசர்ட்டை மடிக்கவும்
“என் டீசர்ட்டை எதுக்கு எடுக்குற?” என்று கேட்டான்.
“நீங்க இந்த டீசர்ட்டைப் போடுறதில்ல. அதான் நான் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எங்க வீட்டுல குளிருறப்ப இதைப் போட்டுப்பேன்” என்றவளின் நாசியிலேறியது டிடர்ஜெண்ட் மற்றும் நறுமணமூட்டியையும் தாண்டி அந்த டீசர்ட்டில் ஒட்டியிருந்த மகிழ்மாறன் உபயோகிக்கும் பெர்ஃபியூமின் துளி வாசனை.
“ஆடி மாசத்துல உனக்கு மட்டும் குளிருமா?” கேட்டவனின் விழிகளில் விசமத்தனம்.
“எங்க வீட்டைச் சுத்தி மரமும் செடியுமா இருக்குல்ல, அதனால குளிரும்”
முகம் பார்க்காமல் பதில் சொல்லி முடித்தாள் மலர்விழி. கோபம் குறைந்து முன்புபோல அவன் பேசியதும் சகஜமாகப் பேச அவளுக்கும் இப்போது விருப்பமே!
“இதுக்கு முன்னாடி குளிர்ந்தப்ப என்ன பண்ணுனிங்க மிசஸ் மகிழ்மாறன்?”
“எங்கப்பாவோட பெரிய சட்டையைப் போட்டுப்பேன்”
என்ன கேள்வி கேட்டாலும் என்னிடம் பதில் இருக்கும் என்ற அமர்த்தல் பாவனை அவளது வதனத்தில்.
மீண்டும் தனது துப்பட்டாவைத் தேடியவளின் கையில் எப்படியோ அது சிக்கிவிட்டது.
அதை மடிக்கப் போனவளிடம் இருந்து பறித்துக்கொண்டான் மகிழ்மாறன்.
“எதுக்கு?” என்று விழித்தவளிடம்
“எனக்கும் குளிரும்ல” என்றான்.
“ப்ச்! குளிரும்னு நினைக்குறவர்தான் விடிய விடிய ஏ.சி போட்டுத் தூங்குறிங்களா?” என்றவளைக் கண்கள் கனியப் பார்த்தவன்
“ஏ.சி டெம்பரேச்சரைக் குறைக்க குறைக்க நீ என் கிட்ட ஒட்டிப் படுத்துப்ப. குட்டி பொம்மை மாதிரி உன்னை அணைச்சுக்கிட்டுத் தூங்குற சுகமே தனி. நீ இல்லனா கட்டியணைச்சுத் தூங்க ஏதாச்சும் வேணும்ல” என்று சொல்ல மலர்விழியின் முகத்தில் செவ்வண்ணம் பரவியது.
இரவுகளில் ஏ.சியின் குளிர் திடுமென அதிகமாவதன் மர்மம் என்னவென அவளுக்கு இப்போது புரிந்துபோனது.
ஒன்றரை மாதங்கள் பேசாமல் தவிக்கவிட்டபோது கூட இரவில் அவனை ஒட்டிக் கண்ணயர்வதுதானே வழக்கம்! ஏசியின் குளிருக்கு அவனது பெரிய தேகத்தின் வெம்மை இதமாக இருப்பதாகத் தோன்றும். கூடவே அவனுடைய அணைப்பில் தோன்றும் பாதுகாப்பு உணர்வுக்கு ஈடான உணர்வை அவள் எங்கும் அனுபவித்ததில்லை.
நடு இரவில் தண்ணீர் குடிக்க எழுந்து விலகி படுத்தாலும் காலையில் கண் விழிக்கையில் அவனது கைகளுக்குள் கட்டுண்டு கிடப்பாள் அவள். சண்டை, முறைப்பு எல்லாம் உறக்கத்தில் இல்லை என்பது போல மகிழ்மாறனும் நடந்துகொள்வான்.
இதெல்லாம் எதேச்சையாக நடக்கிறதென நினைத்தவளுக்கு இப்போது திட்டமிட்டச் செயல் எனத் தெரிந்தவுடன் வெட்கத்தில் உடல் நடுங்கியது.
‘பார்ப்பதற்கு கடுகடுவென இருப்பவனுக்குள் இப்படியொரு காதல் மன்னனா?’
திகைப்பும் நாணமுமாக விலகிப் போக நினைத்தவளை கரம் பற்றி இழுத்துத் தனது அணைப்புக்குள் கொண்டு வந்தான் மகிழ்மாறன்.
“எ…என்ன?” மிரட்சி அவளது விழிகளில்!
“நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல?” கரகரப்பானக் குரலில் வினவினான் அவன்.
‘என்ன சொன்னான்? எதை மறந்தேன்? இவனது அருகாண்மையில் எனக்கு அனைத்தும் மறந்து போகிறதே!’

தனக்குள் அவள் தவித்துக்கொண்டிருக்கையில் அவளது நெற்றியில் ஆட்காட்டிவிரலால் இடித்தான்.
“இந்த மண்டையில எப்ப நான் சொல்லுறது எல்லாம் ஏறும்? மதுமதி பத்தி சொன்னேனே?”
“நான் இனிமே கவனமா இருப்பேன்னு சொன்னேனே”
“உன்னை நம்பலாமா?”
“நம்பிக்கை இல்லனா எங்கம்மா அப்பா கூட அனுப்பாதிங்க”
“அப்பிடியா? இப்பவே போய் சொல்லிடவா?”
அவளை விலக்கிவிட்டு வேகமாகச் செல்லத் துடித்தவனின் சட்டை காலரைப் பற்றி இழுத்துத் தன்னருகே நெருக்கிக்கொண்டாள் மலர்விழி. எங்கே அவன் சொன்னதைச் செய்துவிடுவானோ என்ற பயம்தான்.
“அப்பிடியெல்லாம் கேட்டுடாதிங்க. ப்ளீஸ்”
கயல்விழிகளில் மயிற்பீலியாய் இமைகள் படபடக்க அவள் கேட்டதும் உருகிப்போனது அவனுக்கு.
இன்னும் சில நிமிடங்கள் இந்த நெருக்கம் நீடித்தால் ஆடி மாதம் பிரித்து வைப்பதற்கான அடிப்படையே தகர்ந்துவிடும் என அவனது புத்தி விழித்துக்கொண்டு அறிவுரை கூறவும் சுதாரித்தான் மகிழ்மாறன்.
“சரி கேக்கல! ஆனா இந்த துப்பட்டா இங்கயே இருக்கட்டும்”
அமர்த்தலாகச் சொன்னபடி விலகினான் அவன்.
சரியெனத் தலையாட்டிய மலர்விழி அதை வார்ட்ரோபிலேயே வைத்துவிட்டாள்.
எல்லா பொருட்களையும் எடுத்து வைத்த பிறகு ஹாலுக்கு வந்தவளையும் அவளது பெற்றோரையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிடவைத்தார் சிவகாமி.
விபூதியை மகனுக்கும் மருமகளுக்கும் பூசியவர் “நல்லபடியா அழைச்சிட்டுப் போங்க மதினி. நாங்க எல்லாரும் கோவில் கொடைக்கு வருவோம்” என்க மாமனார் மாமியாரிடம் சொல்லிக்கொண்டு பெற்றோருடன் கிளம்பினாள் மலர்விழி.
மகிழ்மாறனுக்கு நீண்ட பெருமூச்சு! மலர்விழியிடம் பேசாமல் முறைத்துக்கொண்டு திரிந்த ஒன்றரை மாதத்தை மனதுக்குள் சபித்தான் அவன்.
கொஞ்சம் பேசியிருக்கலாம்! நிதானமாக அவளது தவறுகளை எடுத்துச் சொல்லியிருக்கலாம்! சொன்னால் கேட்டுக்கொள்பவள்தானே! அதை விடுத்து கோபமாக இருப்பதாகக் காட்டிக்கொண்ட பொழுதுகள் இப்போது அவனைப் பார்த்துச் சிரித்தன.
ஒரு மாதம்! கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிடும்! இப்படியான எண்ணவோட்டங்களுடன் மகிழ்மாறன் தன்னைத் தானே தேற்றிக்கொண்ட சமயத்தில் அவர்களின் ஹோட்டலில் பவிதரனுடன் பேசிக்கொண்டிருந்தான் புவனேந்திரன்.
முன்னரே பேசியிருக்க வேண்டிய விவகாரம். பவிதரனின் தொழிற்சூழல் ஒத்துவராதக் காரணத்தால் சந்திப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்து இதோ இப்போதுதான் தருணம் வாய்த்தது.
வந்தவனை வரவேற்று உபசரித்த பிற்பாடு அவனது தங்கை செய்த காரியத்தைக் கூறினான் புவனேந்திரன். பவிதரனுக்கு அதிர்ச்சி. தந்தை அவ்வளவு தூரம் படித்து படித்துச் சொல்லியும் மலர்விழியை மூளைச்சலவை செய்யத் துணிந்தாள் என்றால் மதுமதியின் புத்தி இப்போது நிதானத்தில் இல்லை என்றுதானே அர்த்தம்!
இன்னும் என்னென்ன செய்து வைக்கப் போகிறாளோ? சும்மாவே அவளால் தலைகுனிவு!
மனம் திறந்து மன்னிப்பு வேண்டினான் பவிதரன்.
“அவளை நான் எச்சரிச்சு வைக்குறேன் புவன் சார். அவளால மலருக்குப் பிரச்சனை வர்றதுக்கு நான் எப்பவும் அனுமதிக்கமாட்டேன். இந்த விவகாரம் முன்னாடியே என் காதுக்கு வந்திருந்தா மதுக்குப் புத்தி சொல்லிருப்பேன்”
“உங்க பி.ஏ கிட்ட பேசுனப்ப நீங்க ஆத்தூர்ல ஏதோ லேண்ட் பிரச்சனை சம்பந்தமா அலையுறதா சொன்னார். உங்களைத் தொந்தரவு பண்ண விருப்பமில்லாம விட்டுட்டேன்”
“தொழில் பிரச்சனை எப்பவும் உள்ளதுதான். அதுக்காக வீட்டைக் கவனிக்காம இருக்க முடியாதுல்ல?”
பொறுப்பாய்ப் பேசிய பவிதரனை கனிவாய்ப் பார்த்தான் புவனேந்திரன். இப்படிப்பட்டவனுக்கு மதுமதியைப் போல சுயநலவாதி எப்படி தங்கையாகப் பிறந்தாள் என்ற ஆச்சரியம்.
ஆனால் அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தது பவிதரனும் ஷண்மதியுமே என்ற விவரம் எல்லாம் அவனுக்குத் தெரியாதே!
பவிதரனிடம் புவனேந்திரன் இந்த விவகாரத்தைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே மதுமதி அவளது வீட்டில் நிலவழகியிடம் பேச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
“அந்த மலர் ஒரு இளிச்சவாய். அவளை நயமா பேசி கைக்குள்ள போட்டுக்க உனக்குத் துப்பில்ல. நீயா புவன் தம்பிய உன் கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவ? அந்தக் கனவைக் கலைச்சிட்டு ஒழுங்கா உன் அப்பா சொல்லுறவனுக்குக் கழுத்தை நீட்டு”

நிலவழகி முடிப்பதற்குள் மதுமதிக்கு வந்ததே ஆத்திரம்! பெற்ற அன்னை என்று கூட பாராமல் அவரது கழுத்தை நெறித்துவிடலாமா என யோசித்துவிட்டாள் க்ஷணப்பொழுதில்!
முகத்தில் அத்துணை குரூரம் அவளுக்கு! நினைத்ததை நடத்திப் பழகியவளின் சிறகுகள் வெட்டப்பட்டு கூண்டுக்குள் அடைத்துவிட்டார் மாணிக்கவேலு.
அவருக்குத் தனது மகளின் மகிழ்ச்சியைக் காட்டிலும் கௌரவம் முக்கியமாகிப்போனது. அவரது மகளுக்கோ டாம்பீகமாக வாழவிருந்த வாழ்க்கை தனது முட்டாள்தனத்தால் போய்விட்டதே என்ற எரிச்சல்.
மலர்விழியிடம் நைச்சியமாகப் பேசிக் காரியம் சாதிக்கலாமெனக் கனவுக்கோட்டை கட்டியிருந்தாள். அவளும் தனது மொபைல் எண்ணை ப்ளாக் செய்துவிடவே, ஒன்றரை மாதங்களாகப் பைத்தியம் பிடிக்காதக் குறை மட்டுமே மதுமதிக்கு.
இப்போது அன்னையின் பேச்சு அவளது ஆத்திரத்தை இன்னும் தூண்டிவிட்டது.
“வாயை மூடும்மா” என்று கத்தினாள் அவள்.
“என் கிட்ட கத்தி என்ன பிரயோஜனம்? அந்த பிள்ளைப்பூச்சிய வழிக்குக் கொண்டு வர தெரியலயே உனக்கு! அவ மட்டும் இந்நேரம் நீ சொன்னபடி ஏதாச்சும் செஞ்சிருந்தானா நான் அதைச் சாக்கா வச்சு உனக்கும் மாப்பிள்ளைக்கும் கல்யாணப்பேச்சை எடுத்திருப்பேனேடி. அந்த ஊமைக்கோட்டான் எல்லாத்தையும் கெடுத்துவிட்டுட்டா. நம்ம போட்ட பிச்சைல கல்யாணம் பண்ணிட்டுப் போனவ இப்ப பவுசு காட்டுறா. அவளை நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுச் சாமர்த்தியமா பிழைக்கத் தெரியாதவ நீ”
எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றும் வேலையை நிலவழகி செய்ய மதுமதிக்கோ புவனேந்திரன் கை நழுவிப்போய் விடுவானோ என்ற கலக்கத்தில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“நான் யாருனு உனக்குக் காட்டுறேன்மா. அந்த மலர் என்ன, யார் நினைச்சாலும் புவனுக்கு நான் பொண்டாட்டி ஆகுறதைத் தடுக்க முடியாது”
“பேசுனா மட்டும் போதாது. காரியத்துல காட்டு உன் வீராவேசத்தை”
மகளுக்குத் தூபம் போட்டுவிட்டத் திருப்தியில் திளைத்தார் நிலவழகி.
தங்களை அண்டிப் பிழைத்த சிகாமணியின் மகள் கோடீஸ்வரனின் மனைவியாக வளைய வருவதே அவருக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருந்தது.
தங்களது மானத்தைக் காக்க மணமேடை ஏறியவளின் நல்ல மனதை அந்தப் பெண்மணியால் இப்போது கூட புரிந்துகொள்ள முடியவில்லை. கிடைத்தது பணக்காரச் சம்பந்தமெனச் சிக்கென்று பிடித்துக்கொண்டார்கள் சிகாமணியும் குழலியும் என்ற எண்ணத்தோடே இத்தனை நாட்கள் உலா வருகிறார் இந்த நிலவழகி.
எப்படியாவது மலர்விழிக்குச் சமமான இடத்தில் மகளை மணமுடித்துவிடும் வெறியே வந்துவிட்டது சமீப நாட்களாக. அவரது கணவர் கொண்டு வந்த சம்பந்தம் எதுவுமே திருப்தியாக இல்லை.
எதுவுமே புவனேந்திரனுக்குச் சமமில்லை என்றே நினைத்தார்.
புவனேந்திரனின் படிப்பும், பண்பான குணமும், அவனது செல்வ வளமுள்ள குடும்பமும் மற்ற எவருக்கும் வாய்க்கவில்லை. ஒன்று இருந்தால் மற்றொன்று குறைந்து போனது.
மகளும் சாமர்த்தியமாகப் பிழைத்துக்கொள்ளவில்லையே என்ற மனக்குறை! நயமாகப் பேசினால் காரியம் நடக்காதென மகளது ஈகோவைத் தூண்டிவிட்டார் நிலவழகி.
மலர்விழியின் சாமர்த்தியம் உன்னக்கில்லையே என்று எள்ளி நகையாடுவது போல பேசினாலாவது மகள் எதையாவது செய்து புவனேந்திரனுக்கு மனைவியாகிவிட மாட்டாளா என்ற நப்பாசை அவருக்கு.
தானும் மகளும் யோசிக்கிற அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க பவிதரன் தயாராகிவிட்டான் என்பது மட்டும் அவருக்குத் தெரியவந்தால் அவரது நிலை?
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction