“எனக்கு அவ்ளோ பேர் முன்னாடி, கேமரா ஃப்ளாஷ் முன்னாடி நிக்குறதுக்கே பயம். இதயம் படபடனு வேகமா அடிக்குது. கை எல்லாம் நடுங்கிடுச்சு. அந்த நேரத்துல ஒரு பெரிய கைக்குள்ள என் உள்ளங்கை அடைக்கலமானதை என்னால உணர முடிஞ்சுது. அந்தக் கையோட அழுத்தம் ‘உனக்கு நான் இருக்கேன்’னு சொல்லாம சொல்லிச்சு. இவ்ளோ நேரம் இருந்த டென்சன் அடங்கி என்னால சிரிக்க கூட முடிஞ்சுதுனா பாருங்க”
-விழியின் மொழிகள்
“மனோரமா இயர் புக் 2024 ஒன்னு குடுங்க”
மலர்விழியிடம் கேட்டுக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவளோ மொபைலில் கவனமாகியிருந்தாள். இரண்டு முறை கேட்டவன் அவள் முன்னே இருக்கும் புத்தக அடுக்கின்மீது தட்டவும் திடுக்கிட்டுத் தலையை உயர்த்தினாள்.
“என்ன வேணும்ணா? சாரி” என்று மன்னிப்பு கேட்டவளிடம் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு மனோரமா இயர் புக்கை வாங்கிக்கொண்டு கிளம்பினான் அவன்.
அவன் சென்றதும் ஈஸ்வரி அங்கே வந்து மலர்விழியை முறைத்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீ சரியில்ல மலர். வேலைல எப்பவும் கவனமா இருப்ப. வீட்டுக்கவலைய வீட்டுவாசல்ல வச்சிட்டு வெளியே வரணும்டி குடும்ப இஸ்திரி”
“உனக்கென்ன? ஈசியா சொல்லிடுவ. மகிழ் மாமா என் கிட்ட முகம் குடுத்துப் பேசி ஒன்றரை மாசம் ஆகுது. என்ன கேட்டாலும் ஒரே வார்த்தைல பதில் வருது. நான் அப்பிடி என்ன பண்ணிட்டேனாம்?”
மனத்தாங்கலோடு பேசியவளின் தலையில் இரண்டு குட்டுகள் வைக்கலாமா என்று யோசித்த ஈஸ்வரி பற்களைக் கடித்தாள்.
“ஊருல இல்லாத அக்காக்காரினு அந்த மதுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு புவன் சார் கிட்ட தூது போனல்ல, அது பெரிய அஃபென்ஸ். கரெஸ் சார் இடத்துல நான் இருந்திருந்தேன்னா பஞ்சாயத்து வச்சிருப்பேன் ரெண்டு குடும்பத்து ஆளுங்களையும் கூட்டி”
அந்த விவகாரத்தில் ஈஸ்வரியின் முழு ஆதரவும் மகிழ்மாறனுக்கே! ஒரு மாதம் அவன் பேசாதது தோழியைப் பாதிக்கிறது என்றாலும் இந்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவில்லை என்றால் அவள் மீண்டும் மீண்டும் மதுமதி விரிக்கும் சதி வலையில் போய் மாட்டிக்கொள்வாள்.
“நான் செஞ்சது தப்புதான்! ஆனா…”
“ஆனா ஆவன்னா எல்லாம் சொல்லாத. நீ செஞ்சது தப்பு. புவன் சார் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்ததால எல்லாத்தையும் கடந்து வந்துட்டார். இல்லனா மது செஞ்ச காரியத்துக்கு வேற ஒரு ஆம்பளையா இருந்தா உடைஞ்சு போயிருப்பான். அவருக்கு இன்னும் அந்த மதுவால தொந்தரவு வரக்கூடாதுனு கரெஸ் சார் நினைக்குறது ஒன்னும் தப்பில்லையே?”

“ம்ம்! நியாயம் தான்! ஆனா நானும் பாவம்ல. டெய்லி டிசைன் டிசைனா மன்னிப்பு கேட்டுட்டேன். மகிழ் மாமா மனசு இரங்கவே மாட்டேங்குறார்”
சோகமாகச் சொன்னவளை நினைத்தாலும் பரிதாபமாக இருந்தது ஈஸ்வரிக்கு. அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாம்! இரக்கச்சுபாவம் மட்டும் நல்லதாகவா போய்விடும்?
மகிழ்மாறனின் வருத்தமென்ன என்பதை ஈஸ்வரியால் புரிந்துகொள்ள முடிந்தது. மலர்விழியின் குணத்தில் கட்டாயம் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகதான் அவன் கோபத்தை விடாமல் பிடித்திருக்கிறான் என்பது அவளது ஊகம்.
“சரி விடு! கரெஸோட கோவம் எப்பிடிப்பட்டதுனு உனக்குத் தெரிஞ்சிருச்சுல்ல. இனிமே அவரைக் கோவப்படுத்துற மாதிரி எதையும் செய்யாத. இந்தப் பிரச்சனை சரியாகிடும்” என மலர்விழிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினாள் அவள்.
சரியாக மாலை ஆறு மணிக்கு மலர்விழியின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.
“கிளம்பியாச்சா?” கரகரப்பாக ஒலித்தது மகிழ்மாறனின் குரல்.
“ம்ம்!”
“நான் வந்துட்டேன்”
அவ்வளவுதான்! அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மலர்விழி முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு பேக்கை எடுத்துக்கொண்டாள்.
இருவரும் புக் ஷாப்பை விட்டு வெளியே வந்தபோது காரில் சாய்ந்து காத்திருந்தான் மகிழ்மாறன்.
“குட் ஈவ்னிங் சார்” என்று அவனிடம் சொன்ன ஈஸ்வரிக்கு மட்டும் புன்னகையைப் பதிலாக அளித்தான்.
“போயிட்டு வர்றேன் சார்… டி மலர்! டாட்டா”
ஈஸ்வரி போன பிறகு கார்க்கதவை மலர்விழிக்குத் திறந்துவிட்டான் அவன்.
‘இந்தக் கதவைத் திறக்க எனக்குத் தெரியாதாக்கும்? இதெல்லாம் பண்ணுவார். ஆனா பேசமாட்டார்’
கார்க்கதவை அடைத்தபோது “ஏதாச்சும் சொன்னியா?” என்று அவன் கேட்க தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு.
‘மனதில் நினைத்ததைக் கூட கண்டறியும் திறன் இவனுக்கு உண்டா?’
“இல்ல! ஒன்னும் சொல்லலை”
கார்க்கதவு அடைத்தவன் தானும் அமர்ந்து காரைக் கிளப்பினான்.
கார் போகும்போதே “இன்னும் ரெண்டு நாள்ல அத்தையும் மாமாவும் வருவாங்க” என்று சொல்ல மலர்விழி ‘என்னிடமா பேசுகிறாய்?’ என்ற ரீதியில் பார்த்துவைத்தாள் அவனை.
“உன் கிட்ட தான் பேசுறேன். இன்னும் ரெண்டு நாள்ல ஆடி மாசம் வரப்போகுது. ஆடி மாசம் புதுசா கல்யாணமானவங்க ஒரே வீட்டுல இருக்கக்கூடாதாம். அம்மா சொன்னாங்க. அங்க போறதெல்லாம் சரி, ஆனா அதிகபிரசங்கித்தனமா எதையும் செஞ்சு வச்சிடாத”
கட்டளையிடும் தொனியில் சொன்னவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் மலர்விழி.
அவன் திட்டிய தினத்தில் மதுமதியின் எண்ணை அவள் ப்ளாக் செய்துவிட்டாள். ஒவ்வொரு நாளும் அவன் தன்னிடம் முன்பு போல பேசுவானெனத் தவிப்போடு அவனது விழிகளை ஏறிடுபவளுக்குக் கிடைத்தது என்னவோ அவனது அமைதிதான்.
ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று சட்டையைப் பிடித்து உரிமையாகக் கேட்கலாம், அவன் மீது தவறு இருந்தால்! இங்கே தவறியவள் அவள்தானே!
எனவே மலர்விழியால் தன்னை நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.
வீடு வந்ததும் நேரே மாமியாரைத் தேடிப் போய்விட்டாள் மலர்விழி.
“மலர் வந்துட்டியாடி பொண்ணே? உன் கிட்ட ஒன்னு காட்டணும்னு நினைச்சேன்டி. வா வா!”
சிறு குழந்தையாக அவளது கரத்தைப் பிடித்து இழுத்தவராகத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

“அங்க பாரு! போன வாரம் வச்ச ஜாதிமல்லி நிமிர்ந்து நின்னுடுச்சு. ரெண்டு இலை கூட விட்டிருக்கு.”
மாமியாரும் மருமகளும் நதியூர் சென்றபோது குழலி பதியன் வைத்திருந்த ஜாதிமல்லியைக் கொடுத்துவிட்டார்.
“பூ பூத்துச்சுனா வீடே மணக்கும் மதினி” என்ற பீடிகை வேறு.
அதை ஆசையாக நட்டு வைத்திருந்தார் சிவகாமி. ஒரு வாரம் செடி வாடினாற்போல நின்றது. இப்போது மண்ணில் வேர் பிடித்துவிட்டது போல. செழிப்பு அதன் பசுமையில் தெரிந்தது.
இனி இலைகள், கிளைகள் விட்டுப் பரவி கொடியாய் வளர்ந்துவிடும்.
மலர்விழிக்கும் அந்தச் செடியைப் பார்த்ததும் மகிழ்ச்சிதான். அடுத்த நொடியே “நான் ஆடிக்கு எங்க வீட்டுக்குப் போறேன்னு மாமா சொன்னார். உங்களுக்கு அதுல வருத்தமேயில்லையா?” என்று கேட்டாள் வாட்டத்தோடு.
“வருத்தம்தான். இங்க அத்தை அத்தைனு என்னைச் சுத்தி வர்ற குட்டிப்பொண்ணை நானும் மிஸ் பண்ணுவேன். ஆனா சம்பிரதாயம் நிறைய நேரம் மனுச உணர்வுகளை ஜெயிச்சிடுதே பொண்ணே!”
அடுத்த நொடியே “இந்த முகவாட்டத்துக்குக் காரணம் அது மட்டும்தானா?” என்று விளையாட்டாகக் கேட்டவர் அவள் பதிலளிக்கத் திணறவும் “சரி விடு! நேத்து நீ டவுட் கேட்ட எல்லாத்துக்கும் அந்தந்தப் பக்கத்துல துண்டு பேப்பர் வச்சு விளக்கம் எழுதிருக்கேன். வா! புக் தர்றேன். வீட்டுக்குப் போறப்ப இதெல்லாம் கொண்டு போடி. நான் சனிக்கிழமை கோவிலுக்கு வருவேன்ல! அப்ப உன் டவுட்டைக் க்ளியர் பண்ணுறேன்” என்றபடி தனது அறைக்கு அழைத்துப் போய்விட்டார்.
அதே நேரம் மகிழ்மாறனோ அவனது தோழி ஸ்வேதாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். புக் ஷாப்பில் மலர்விழியை அவன் முதலில் சந்தித்தபோது உடன் இருந்தாளே, அவளேதான்.
மகிழ்மாறனுக்குத் தூரத்துச் சொந்தம், அவனுடன் படித்தவள் என்ற முறையில் தோழி! திருமணமாகி கணவர், குழந்தையுடன் பெங்களூர்வாசி ஆகிவிட்டாள்.
கூடுதல் தகவல் – அவளது இளைய சகோதரன் கர்ணனுக்குத்தான் ஈஸ்வரியைப் பெண் கேட்டிருந்தார்கள்.
அவள் மகிழ்மாறனிடம் ஈஸ்வரியைப் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தாள்.
“அந்தப் பொண்ணு வீட்டுல படிக்கட்டும்னு சொல்லுறாங்களாம். எப்பிடி வெயிட் பண்ணலாமா?”
“நல்லப்பொண்ணுதான்! தைரியமானப் பொண்ணும் கூட. குறை சொல்லுற மாதிரி எந்தக் குணமும் கிடையாது. அப்பிடி இருந்திருந்தா மலர் அவ கூட இத்தனை வருசம் ஃப்ரெண்டா இருக்கமாட்டா”

“பார்றா! அந்தப் பொண்ணைப் பத்தி பேசுறப்பவே பொண்டாட்டிய பத்தி ரெண்டு வார்த்தை புகழ்ந்துடுற. நீ நிறைய மாறிட்ட மாறா”
“நீ கூட தான் மாறிட்ட. காலேஜ்ல அடாவடியா வலம் வந்த உன்னை கவின் அண்ணா ரொம்பவே மாத்திட்டார் போ”
“அடிக்கடி அவர் கிட்ட இதைச் சொல்லு. என் மாமியார் என்னவோ அவரை நான்தான் மாத்திட்டேன்னு புலம்பல்”
சிரித்தான் மகிழ்மாறன். அவனால் ஸ்வேதாவிடம் மனம் விட்டு அனைத்தையும் பகிர முடியும். தூரத்து உறவில் அத்தை மகள் என்ற முறை இருந்தாலும் தோழமையைத் தாண்டி அவர்கள் சிந்தித்ததில்லை.
அவளுடன் பிறந்தவர்கள் கர்ணனும் கடைக்குட்டி ஆதிராவும். அவர்களுக்கு மகிழ்மாறன் என்றால் கொஞ்சம் பயம். கர்ணனாவது மகிழ்மாறனிடம் பேசுவான். புவனேந்திரனிடம் அது கூட கிடையாது. ஆதிரா பாதிநாட்கள் படிப்புக்காக அவர்களின் பெரியம்மா வீட்டில் இருந்தவள். எனவே மூவரில் புவனேந்திரனுக்கும் மகிழ்மாறனுக்கும் ஸ்வேதா தான் நெருக்கம்.
அதனாலேயே அவர்களுக்குள் ஒளிவு மறைவு இருந்ததில்லை.
“புவன் இப்ப ஓ.கேவா? என்ன சொல்றாப்ல?”
“மச் பெட்டர்! எல்லாரும் என்னை அழுத்தம்னு சொல்லுறிங்க. உலகமகா அழுத்தக்காரன் அவன். என்ன ஒன்னு, ரொம்ப ஸ்வீட்டா ப்ளசண்டா இருந்தவனுக்குள்ள கொஞ்சம் மாற்றம் தெரியுது.”
“எல்லாம் அந்தக் கடன்காரியால தானே? கவினுக்கு உடம்பு முடியாம போனதால கல்யாணத்துக்கு வரமுடியாம போனதை நினைச்சு இப்பவும் வருத்தப்படுறேன் மாறா. வந்திருந்தா அவளோட பேரண்ட்சைச் சும்மா விட்டிருக்கமாட்டேன்”
கோபம் அவளது குரலில்.
“ரிலாக்ஸ்! எல்லாம் நல்லதுக்கே! அவ போகலனா மலர் இங்க வந்திருக்க மாட்டா”
கனிந்த குரலில் மகிழ்மாறன் சொன்னதும் மறுமுனையில் ஸ்வேதா சிரித்தாள்.
“சிரிக்காத”
“இதைத்தான் சொன்னேன், நீ மாறிட்ட மாறா. எப்பிடியோ பொண்டாட்டி புள்ளை குட்டியோட சந்தோசமா இரு”
“எங்க இருக்குறது? ஆடி மாசத்துக்காக இன்னும் ரெண்டு நாள்ல அவங்க வீட்டுக்குப் போயிடுவா”
“பார்றா! ஐயா வருத்தப்படுறிங்களா? நீதான் பிடிவாதக்காரன் ஆச்சே. போகாதனு சொல்லி பொண்டாட்டிய பிடிச்சு வைக்க வேண்டியதுதானே?”
“பெரியவங்க சொல்லுறாங்க. கேக்கலனா நல்லா இருக்காது”
“அதுசரி! அப்ப பொண்டாட்டிய வழியனுப்பி வை. ஒரே வீட்டுல தானே இருக்கக்கூடாது. நீயும் அவளும் காலேஜ்ல சந்திக்கலாமே! அப்ப ஆசை தீர பாத்துக்க”
ஸ்வேதா பேசும்போதே அவளது மகன் எதற்கோ அழைக்க “இந்தா வந்துட்டான்! நான் கொஞ்சநேரம் ரிலாக்சா இருந்தா இவனுக்கும் கவினுக்கும் மூக்கு வேர்த்துடும். பை மாறா!” என்று விளையாட்டாகக் குறை கூறியபடி விடைபெற்றாள் ஸ்வேதா.
அவளிடம் பேசியவனின் முகத்தில் சிரிப்பின் ரேகைகள்!
அந்நேரத்தில் அறைக்குள் புத்தகப்பொதியோடு நுழைந்தாள் மலர்விழி.
அவளுடைய கண்களுக்கு அந்தச் சிரிப்பு தப்பவில்லை.
அமைதியாக மேஜை மீது புத்தகங்களை வைத்தவள் சிரிப்புக்கானக் காரணம் என்னவாக இருக்குமென யோசித்தபடி மாற்றுடையோடு குளியலறைக்குள் புகுந்து முகம் கழுவி அதை அணிந்துவிட்டு வெளியே வந்தாள். தனது மேஜையில் அமர்ந்தவள் புத்தகத்தைப் பிரித்தாள். நாவலை அல்ல! படிக்கும் புத்தகத்தைத்தான்!
வீட்டுக்கு வந்ததும் நாவல், கதைப்புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டால் திட்டு விழுமென அவளுக்குத் தெரியாதா என்ன?
ஒரு கண் புத்தகத்தில், இன்னொரு கண் ஓரப்பார்வையாக மகிழ்மாறனை ஆராய்ந்தது. கடந்த ஒன்றரை மாதத்தில் அவனது மௌனத்தின் ஜூவாலையைத் தாங்க முடியாமல் அவள் இப்படித்தான் நடந்துகொள்கிறாள்.
மகிழ்மாறனுக்கு அந்நேரம் பார்த்து அழைப்பு வந்துவிட்டது.
“சொல்லுங்க தனபால் சார்”
கல்வி அமைச்சரின் காரியதரிசியான தனபாலிடமிருந்து வந்த அழைப்பு அது. திருச்செந்தூரில் பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பதற்கான அனுமதி பற்றி அமைச்சரிடம் நேரடியாகப் பேச வருமாறு கூறினார் காரியதரிசி.
அதற்காக இன்னும் ஒரு வாரத்தில் அவன் சென்னைக்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.
இதெல்லாம் அவனது மொபைல் பேச்சிலிருந்து அவள் கிரகித்தச் செய்தி.
அதை ஒரு கட்டத்தில் கவனித்துவிட்டான் மகிழ்மாறன்.
“தேங்க்யூ தனபால். சென்னைல சந்திப்போம்”
மொபைல் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவளைப் பார்த்தான்.
மலர்விழி திடுக்கிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
“இங்க வா”
அவனது அதட்டலில் எழுந்தவள் திருதிருவென விழித்தபடி புத்தகத்துடன் நின்றாள்.
“இங்க வானு சொன்னேன்”
புத்தகத்தோடு அவன் முன்னே போய் நின்றாள். அதை வாங்கியவன் இரண்டு பக்கங்களைப் புரட்டிவிட்டு “கார்பரேட் சஸ்டெய்னபிளிட்டினா என்னனு சொல்லு” என்று அவன் கேட்க
“எதே?” என்று விழித்தாள் அவள்.
புத்தகத்தை மூடி வைத்தவன் பார்த்தப் பார்வையில் அந்த அறையில் அனலடிக்காதக் குறை.
“இந்தப் புக்கை இவ்ளோ நேரம் திறந்து வச்சிட்டு என்ன படிச்ச நீ?”
“அது… நான் வேற டாபிக் படிச்சேன்”
“சரி! படிச்ச டாபிக் பத்தி கடகடனு ரெண்டு வரி இங்கிலீஸ்ல சொல்லு பாப்போம்”
அதற்கும் திருதிருவென விழித்தாள்.
“படிக்காம அப்பிடி என்ன வேடிக்கை உனக்கு? இங்கயே இப்பிடினா உங்க வீட்டுக்குப் போனா நீ சுத்தமா படிக்கமாட்ட”
“நான் படிப்பேன்”
சட்டெனப் பதில் வந்தது அவளிடமிருந்து.
மகிழ்மாறன் நிதானமாக அவளை ஏறிட்டவன் “எம்.காமை ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணு. அடுத்து உனக்குப் பிடிச்ச லைப்ரரி சயின்ஸ் டிகிரிய நம்ம காலேஜ்லயே பண்ணலாம். நீ மட்டும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் ஆகலனா லைப்ரேரியன் கனவை மறந்துடு” என்று கடுமையாக எச்சரிக்கவும் மலர்விழியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
நூலகர் ஆகவேண்டும் என்பது அவளது நீண்ட வருடக் கனவு. இவன் என்ன இப்படி சொல்கிறான்?
“அழுதா மட்டும் போதாது. படிக்கணும்! எம்.காமை ஒப்பேத்துனனா லைப்ரரி சயின்ஸ் படிக்கப்ப உனக்குப் படிப்புல கமிட்மெண்ட் இருக்காது. கனவு மட்டும் போதாது மலர். அதுக்காக உழைக்கணும். இப்ப கஷ்டப்பட்டுப் படிச்சாதான் எந்த படிப்பும் ஈஸியில்லனு புரியும். இப்பவே மேம்போக்கா படிச்சா, அந்தப் படிப்பையும் நீ மேம்போக்கா படிக்கத்தான் நினைப்ப. புரியுதா நான் சொல்ல வர்றது?”
கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
“தலையாட்டுனா மட்டும் போதாது. படிக்கணும்! எம்.காம் நீ அடுத்துப் படிக்கப்போற படிப்புக்கானத் தகுதி. அதை மனசுல வச்சு படி”

“என் மைண்ட் ஒரு நிலையில இல்லாம போக நீங்கதான் காரணம்”
தலையைக் குனிந்தபடி சொன்னாள் அவள். ஆனால் குரல் நடுங்கவில்லை. திடமாகவே இருந்தது.
சட்டென ஒரு முறுவல் உதயமானது மகிழ்மாறனின் உதடுகளில். அதை அவள் கவனித்துக்கொள்ளும் முன்னர் துடைத்துவிட்டுக் கறாராகப் பார்த்தான்.
“நான் என்ன பண்ணுனேன்?”
“என் கூட பேசவேல்ல. ஒன்றரை மாசமா நீங்க என்னை தவிக்க விட்டிருக்கிங்க”
சின்னப்பிள்ளையைப் போல குறை சொன்னவளைச் சமாதானப்படுத்த அவனது கரங்கள் துடித்தன. ஆனாலும் அடக்கிக்கொண்டான்.
“நீ காதலுக்குத் தூது போக முயற்சி பண்ணுனியே. அதுக்காக உன்னைக் கொஞ்சணுமா?”
“உங்களுக்கு ஏன் காதல்னாலே இவ்ளோ கடுப்பு? புல்ஷிட்னு சொன்னிங்கல்ல”
மகிழ்மாறன் திகைத்துப் போனான். இந்தப் பெண் அனைத்தையும் கவனிக்கிறாள். சொல்லப்போனால் நுணுக்கமாகக் கவனிக்கிறாள். நினைக்கும்போதே நெஞ்சோரமாய் சிறு சிலிர்ப்பு.
‘என்னைத் தானே கவனிக்கிறாள்’ என்ற எண்ணமே இதயத்தில் மதுரமாய் தித்திப்பைப் பரவச் செய்தது.
“நான் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல. உன் அக்கா…”
“அக்கானு சொன்னா தொலைச்சிடுவேன்னு சொன்னிங்க” இதைச் சொன்னதும் அவளது குரல் உள்ளே போய்விட்டது.
மகிழ்மாறனுக்கும் வருத்தமே! அவளிடம் அத்தகையைத் தொனியில் கடுமையான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அவன் மட்டும் கொண்டாட்ட மனநிலையிலா இருக்கிறான்?
“சொன்னேன்! அது அந்த நேரத்துக் கோவம். அதை விடு. உன் பெரியப்பா மகளோடது காதல் இல்ல. அதை புல்ஷிட்னு சொன்னதுல என்ன தப்பு? அந்தக் கருமத்துக்கு நீ தூது போக வேற முயற்சி பண்ணுன. அதுக்கு உன்னைத் திட்டாம கொஞ்சவா செய்யணும்? உங்க வீட்டுக்குப் போனதும் அவ உன் கிட்ட பேச முயற்சி பண்ணுவா. குற்றவுணர்ச்சிய தூண்ட கூட பார்ப்பா. நீ உஷாரா இருந்துக்க. எனக்குச் சென்னைல ஒரு வாரம் வேலை இருக்கு. நான் உன் கூட இருக்க முடியாது”
அவன் சொல்ல சொல்ல இத்தனை நாட்கள் மௌனத்தால் உண்டான பாரம் அகன்ற நிம்மதி மலர்விழிக்குள் பரவியது.
“நான் இனிமே கவனமா இருப்பேன்”
புத்தகத்தை அவளிடம் நீட்டியவன் “போய் படி! இன்னும் ஒன் ஹவர் கழிச்சு மறுபடி கொஸ்டீன் கேப்பேன்” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.
அவள் முகத்தைச் சுருக்கியபடி அமர்ந்து படிப்பதைக் கவனித்தும் கவனியாதவனாகக் காட்டிக்கொண்டு இதழோரம் துளிர்த்த சிரிப்பை அடக்கியவனாக வேலையில் ஆழ்ந்து போனான் மகிழ்மாறன்.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction