“நான் மகிழ்மாறன் சாரைக் கல்யாணம் பண்ணிக்கணுமாம்! முதல் தடவை நான் எனக்காகப் பேசத் துணிஞ்சேன். அதுக்கு அடுத்த நொடி என் வாழ்க்கையை என்னோட அனுமதி இல்லாம தீர்மானிச்சிட்டாங்க. நன்றிக்கடன்னு அப்பா ஒரு பக்கம் சொல்லுறார். இத்தனை வருசம் அப்பாவ வேலைக்காரனா நடத்துன பெரியப்பா அவரைக் கையெடுத்துக் கும்பிடுறார். வாழ்க்கையில நடக்க சாத்தியமே இல்லாத சம்பவம் எல்லாம் என் கண்ணு முன்னாடி நடக்குது இப்ப. கரெஸ் சார் முன்னாடி என்னைத் தனியா நிக்க வச்சிட்டு எல்லாரும் போயிட்டாங்க. அரைமணி நேரத்துக்குள்ள என் மனசை நான் தயார்ப்படுத்தணுமாம். அது எப்பிடி சாத்தியம்? யார் முன்னாடி நிக்கவே எனக்கு உடம்பு நடுங்குதோ அவர் கூட காலம் முழுக்க இருக்கணும்னா என்னால எப்பிடி உடனே அதுக்குத் தயாராக முடியும்?”
-விழியின் மொழிகள்
மலர்விழியின் நிலமை சங்கடமாகப் போய்விட்டது. மாணிக்கவேலுவின் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதே என்ற சிவகாமியின் அறிவுரை ஒரு பக்கம்; கண்ணீரும் கம்பலையுமாகத் தன்னிடம் வந்து உதவுமாறு கேட்ட மதுமதி.
மனம் இளகி அவளுக்கு வாக்கு கொடுத்துவிட்டாள். காரில் செல்லும்போதெல்லாம் எப்படி புவனேந்திரனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்ற கலக்கம். குடும்பத்தினருக்கு அவமானத்தைத் தேடித் தந்ததால் அவனுக்கு நிச்சயம் மதுமதி மீது கோபம் இருக்கும்.
அன்று மாணிக்கவேலுவின் வீட்டில் நடந்த சம்பவங்கள் எதுவும் அவளிடம் சொல்லப்படவில்லை. குழலியின் மனதில் இன்னும் துவேசம் உள்ளது என்பது மட்டும் சிவகாமி சொன்னதன் மூலமாகத் தெரிந்தது.
ஆனால் மதுமதியிடம் தனது நிலைப்பாட்டைப் புவனேந்திரன் தீர்மானமாகச் சொன்னானே, அதை யாருமே மலர்விழிக்குச் சொல்லாததுதான் இப்போது அவளைத் தவறான அனுமானத்துக்குள் தள்ளிவிட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன யோசனைடி?” சிவகாமி மருமகளின் கையைப் பற்றி கேட்டதும் உணர்வுக்குழப்பங்களிலிருந்து வெளியே வந்தவள்
“நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டிங்களே?” என்று கேட்க
“நீ என்ன கேட்டாலும் எனக்குக் கோவம் வராது” என்றார் அவர்.
“அது… மதுக்கா ரொம்ப மாடர்ன் டைப். அது உங்களுக்குத் தெரியுமா?”
“ஹூம்! தெரியும். அவ பேச்சு, நடை உடை பாவனைல என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது. இப்ப எதுக்கு அவளைப் பத்தி கேக்குற?”
“இல்ல, அவளோட பழக்கவழக்கம் எல்லாம் உங்களுக்குப் பிடிச்சுதா இல்லையானு சின்னதா க்யூரியாசிட்டி”
“மாடர்ன், கன்சர்வேட்டிவ் இதெல்லாம் அவங்கவங்க வளர்ந்த சூழ்நிலைய வச்சு உருவாகுற மனநிலை. அதை அடிப்படையா வச்சு எந்தப் பொண்ணோட கேரக்டரையும் நான் முடிவு பண்ணுறதில்ல. எனக்கு மதுமதிய ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவ கொஞ்சம் புத்தியா இருந்திருந்தா இந்நேரம் மூத்தவன் நிம்மதியா இருந்திருப்பான். ப்ச்! விடு., முடிஞ்சதைப் பேசவேண்டாம்”
மலர்விழியும் அதோடு நிறுத்திக்கொண்டாள். வீட்டுக்குச் சென்றபோது மகிழ்மாறனும் புவனேந்திரனும் அமர்ந்து ஏதோ தொழில் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மகிழ்மாறன் முன்னிலையில் மதுமதியைப் பற்றி பேசினால் அவள் கதி அதோகதிதான்! எனவே அமைதியாக நகர்ந்தவள் அறைக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டாள்.
பின்னர் பூனை போல காலடிகளை எடுத்து வைத்து ஹாலுக்கு வந்தவள் மகிழ்மாறன் மட்டும் அங்கே இருக்கவும் புவனேந்திரனைத் தேடினாள்.
“என்ன விசயம்?” பார்வையை உயர்த்தி கண்ணாடியின் ஃப்ரேமை அழுத்திக் கேட்டான் அவன்.
“புவன் மாமா எங்க?” ஆர்வமாகக் கேட்டாள் அவனிடம்.
“அவன் முக்கியமானக் கால் வந்துச்சுனு போயிருக்கான். நீ ஏன் திடீர்னு அண்ணாவைத் தேடுற?” குறுக்கு விசாரணை செய்தவனிடம் பேசினால் கட்டாயம் உளறிவிடுவோம் என்பதால் பொய் சொல்ல வேண்டிய நிலை மலர்விழிக்கு.
“ஒரு டவுட் கேக்கணும். நீங்க வேலைய பாருங்க”
“அந்த டவுட்டை என் கிட்டவும் கேக்கலாம்” அமர்த்தலாகச் சொல்லிவிட்டுக் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டான் மகிழ்மாறன்.
யாராவது சிங்கத்தின் வாய்க்குள் தானாகவே போய் தலையை விடுவார்களா?
மாட்டேன் என மறுத்தாள் மலர்விழி. அவள் பார்வையில் தெரிந்த கள்ளத்தனத்தைக் கண்டுகொள்ள மகிழ்மாறனுக்கு அதிக நேரமெல்லாம் எடுக்கவில்லை.
“ஏதோ பண்ணுற. பண்ணு! எனக்குத் தெரிய வர்றப்ப பாத்துக்குறேன்”
அவன் சொன்ன விதமே அடிவயிற்றைக் கவ்வி இழுத்தது. இன்னும் சிறிது நேரம் இங்கேயே இவன் முன்னே நின்றால் கட்டாயம் உண்மையை உளறவைத்துவிடுவான்.
“நான் புவன் மாமா கிட்ட டவுட் கேக்கப் போறேன்” என்று நழுவியவள் தோட்டத்தில் புவனேந்திரனின் குரல் கேட்கவும் அங்கே சென்றாள்.
அவன் போன் பேசிக்கொண்டிருக்கவும் சற்று தூரம் சென்று பேசி முடிக்கட்டுமெனக் காத்திருந்தாள்.
புவனேந்திரனும் அவளைப் பார்த்ததும் பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டான்.
“என்னம்மா மலர் என் கிட்ட எதுவும் பேசணுமா?” என்று கேட்டான் புன்னகையுடன்.
“ஆமா மாமா!” என்றவள் வெகு கவனமாகத் திரும்பி கணவன் வருகிறானா என்று பார்த்துவிட்டு சின்னக் குரலில் “நீங்க கோவப்படமாட்டிங்கல்ல?” என்று கேட்க
“கோவமா? நோ வே! சொல்லு! என்ன விசயம்” என்றான் அவன் சினேகமாக.
“அது… இதை நான் உங்க கிட்ட கேக்கலாமானு தெரியல. பெரிய எடுப்புத்தனமா பேசுறதா நினைச்சுக்காதிங்க மாமா. நான் இன்னைக்குக் கோவிலுக்குப் போனேன்ல, அங்க மதுக்கா வந்திருந்தா. எதேச்சையா எல்லாம் வரல. அவ என்னைக் கூப்பிட்டதாலதான் நான் கோவிலுக்குப் போனேன்” என்றவள் புவனேந்திரனின் பார்வையில் இறுக்கம் தெரியவும் நிறுத்திவிட்டாள்.
இந்தப் புவனேந்திரன் அவளுக்குப் புதியவன். கனிவானப் பார்வையும், புன்னகை துளிர்த்த முகமுமாக வலம் வரும் கரெஸ்பாண்டெண்ட் புவன் சார் இல்லை இவன்.
தயங்கி பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டாள் மலர்விழி. புவனேந்திரனுக்கும் அவள் பேச்சை நிறுத்தியது புரியவும் தனது முகத்தைச் சீராக்கிக்கொண்டான்.
“நீ சொல்லும்மா”

“அக்கா உங்களை இன்னும் கா…. ப்ச்… நேசிக்கிறதா சொல்லுறா மாமா. உங்க மனசுல அதே நேசம் இருந்ததாலதான் குஜராத் வரைக்கும் போனிங்கனு சொன்னா. அவளுக்கு இப்ப பெரியப்பா வேற மாப்பிள்ளை பாக்குறாங்களாம். ஆனா மதுக்காக்கு உங்களைத்தான் பிடிச்சிருக்குனு அழுறா. நானும் உங்க கிட்ட பேசுறதா அவ கிட்ட வாக்கு குடுத்துட்டேன். உங்களுக்கு அவ மேல இன்னும்….”
புவனேந்திரனின் புருவம் இறுகி நெறிந்தது.
நேருக்கு நேர் இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டு வந்த பிறகும் சிறுபெண்ணின் மனதைக் கலைத்து தந்திரமாகத் திட்டம் தீட்டும் மதுமதி மீது சொல்லவொண்ணா வெறுப்பு துளிர்த்தது அவனுக்கு.
“எனக்கு அவ மேல எந்த ஃபீலிங்சும் இல்லம்மா” என்றான் உறுதியாக.
மலர்விழியின் முகத்தில் வாட்டம் தெரியவும் அவனது பார்வை வாஞ்சையாக மாறிப்போனது. இந்த அப்பாவியை வைத்து இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டுபவள் மீது இன்னும் இன்னும் வெறுப்பு!
“மதுமதியால நடந்த குழப்பம், உண்டான அவமானத்தை மறந்துட நான் ரெடிமா. ஆனா அவ ஒரே நேரத்துல ரெண்டு பேரை அவளோட சுயநலத்துக்காகப் பயன்படுத்தப் பாத்திருக்கா. அப்பிடி ஒருத்தியை எந்த நம்பிக்கைல நேசிக்க முடியும்? அவளால யாரையும் உண்மையான மனசோட நேசிக்க முடியாதும்மா. எல்லா கண்ணீரும் உண்மையானது இல்ல மலர். சில கண்ணீருக்குப் பின்னாடி மனுசங்களோட சுயநலமும் தந்திரமும் இருக்கும். நீ அப்பாவினு தெரிஞ்சு உன்னை வச்சு அவ காய் நகர்த்த பாக்குறா. இனிமே அவளே உன் கிட்ட பேச முயற்சி பண்ணுனாலும் நீ அவாய்ட் பண்ணிடு. சரியா?”
ஒரு ஆசானுக்குரிய அன்போடும் அக்கறையோடும் அவன் சொல்ல மலர்விழிக்கு அவனது பிடித்தமின்மை தெளிவாகத் தெரிந்தது. அதே நேரம் மதுமதி தன்னைப் பயன்படுத்துகிறாளோ என்ற ஐயமும் துளிர்த்தது.
“யாரை அவாய்ட் பண்ணனும்?” என்ற மகிழ்மாறனின் குரல் அவள் முதுகுக்குப் பின்னே கேட்டதும் அரண்டு போய்விட்டாள் அவள்.
திருதிருவென விழித்தபடி திரும்பியவள் தங்களிடமிருந்து சில அடிகள் தொலைவில் நின்று கொண்டிருந்தவன் நிதானமாக நெருங்கவும் பதற்றத்தை மறைக்க முடியாமல் தவித்தாள்.
“யாரை அவாய்ட் பண்ணனும்னு கேட்டேன்”
இறுக்கமானச் சூழல் அங்கே நிலவியது. புவனேந்திரனுக்கு இளையவனின் கோபம் பற்றி நன்கு தெரியும். இப்போது மதுமதியின் பெயரை எடுத்தால் கட்டாயம் மலர்விழியை அவன் கடிந்துகொள்வான் என்பதால் சமாளிக்க முயன்றான்.
“இது காலேஜ் விவகாரம் மாறா”
“ஓஹ்! உன் காலேஜ்லதான் மதுமதி படிச்சாளா? இல்ல, நான் அங்க நின்னேன்ல. அப்ப மதுமதி பேர் என் காதுல விழுந்துச்சு”
மலர்விழிக்கு வேர்வை ஊற்றெடுத்தது. தொலந்தேன் நான் என்று எண்ணியவளாகப் பரிதாபமாக விழித்தாள்.
“மாறா! இது வேற விசயம்”
“ம்ம்… புரியுது. ஆனா என் கிட்ட உன்னால மறைச்சிட முடியாதுண்ணா. எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன்”
மலர்விழியைப் பார்த்தபடியே சொன்னவன் “வா! உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல அவளோ அனாதரவாய் நிற்கும் குழந்தை தந்தையைத் தேடுவது போல புவனேந்திரனின் முகத்தைப் பார்த்தாள்.
“அவ மேனிபுலேட் பண்ண பாத்திருக்கா மாறா. மலர் என்ன பண்ணுவா?” என்று அவனும் மலர்விழிக்கு ஆதரவாக வர
“உன் ஸ்டூடண்டை நான் ஒன்னுமே சொல்லையே!” என்றவனின் பார்வையில் இறுக்கம் கொட்டிக் கிடந்தது.
இதற்கு மேல் புவனேந்திரனும் ஒன்றும் பேசமுடியாதே!
“வா!” கையைப் பிடித்து மலர்விழியைத் தன்னோடு அழைத்துச் சென்றவனைக் கவலையோடு பார்த்தான் புவனேந்திரன். அவனது எரிச்சல் முழுவதும் மதுமதி மீது திரும்பியது.
அவளது சதிகளை முறியடிப்பதை மட்டுமே அவன் யோசித்தான் என்றால் அவனது தொழில் வாழ்க்கை கெட்டுவிடும். சீக்கிரம் அவளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
அதே நேரம் மலர்விழியைத் தன்னோடு அழைத்துச் சென்றவனோ கடுமையாக அவளை உறுத்து விழித்தான்.
“மதுமதி பேரை இந்த வீட்டுல சொல்லக் கூடாதுனு தெரிஞ்சும் அண்ணா கிட்ட அவளைப் பத்தி பேசுற நீ! அவ்ளோ திமிரு?”

உறுமியவனின் குரலில் வெடவெடத்துப்போனாள் மலர்விழி.
பார்வையின் ஊசிக்குத்தல்களை விட குரலின் கடுமைதான் அவளைப் பதறவைத்தது.
“இ…இல்ல… அக்கா…”
“அக்காவா? அவளா? இன்னொரு தடவை அவளை நீ அக்கானு கூப்பிட்டதைக் கேட்டேன், தொலைச்சிடுவேன்!”
விரல் நீட்டி எச்சரித்தவனின் பேச்சில் கண்கள் கலங்கின மலர்விழிக்கு.
“அறிவில்ல உனக்கு? அவளால தானே நானும் நீயும் அவசரகதில கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அது கூடவா புத்தில உறைக்கல? அன்னைக்கு எல்லாரையும் பதற வச்சிட்டு ஓடுனவ என்ன நியாயம் சொன்னாலும் அதை ஏத்துக்க முடியாது. என் அண்ணன் அவளைப் பிடிக்கலனு தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் உன்னைத் தூது விடுறானா ஒன்னு அவளுக்குத் தைரியம் அதிகமா இருக்கணும். இல்லனா நீ அடிமுட்டாளா இருக்கணும். யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியா? மூளை இருக்குல்ல? அதை யூஸ் பண்ணவே மாட்டியா? உன்னோட அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமா ஒருத்தி யூஸ் பண்ணிக்கிறானு கூடவா தோணல? இங்க பாரு! மகிழ்மாறனோட பொண்டாட்டி புத்தியுள்ளவளா இருக்கணும். சுயமரியாதை கொஞ்சமாவது இருக்கணும். இது எதுவுமே உனக்கு இல்லையா? என்ன பொண்ணு நீ?”
எரிச்சலும் விரக்தியுமாகச் சொன்னவன் அவள் அழ ஆரம்பிக்கவும் “ஆ ஊனா அழ மட்டும் செய். இன்னொரு தடவை அவ கூப்பிட்டானு எங்கயாச்சும் போனா, மறுபடி இந்த வீட்டுக்கு வந்துடாத” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் மகிழ்மாறன்.
போய் தோட்டத்தில் அமர்ந்தவனுக்குச் சில நாட்களாக அவனுக்குத் தெரிய வந்த விசயங்கள் மனதில் நிழற்படங்களாக ஓடத் தொடங்கின.
மாமனாரின் சொத்து முழுவதையும் மாணிக்கவேலு எப்படியெல்லாம் மூன்றாவது நபர்களை வைத்து அபகரித்தார் என்ற செய்தியைச் சேகரிக்கத் தொடங்கியிருந்தான் அவன்.
ஐஸ் பேக்டரிக்கு வாங்கிய நிலத்தில் வில்லங்கம் வந்ததால் நில உரிமையாளன், சிகாமணி கொடுத்த பணத்தோடு ஓடிவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
ஆனால் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அந்த நிலத்தின் சர்வே எண்ணைப் போட்டுத் தேடினாலோ உரிமையாளர் என மாணிக்கவேலுவின் பெயரைக் காட்டியது.
யாரோ ஒருவரிடம் பணத்தை ஏமாந்தது போல சித்தரித்து அந்தப் பணத்தையும், தம்பி வாங்கவிருந்த நிலத்தையும் உரிமையாளரிடமிருந்து பறித்தவர் மாணிக்கவேலுவே என்பது ருசுவானது.
உண்மை தெரிந்த நாளிலேயே தந்தையிடம் கூறியிருந்தான் மகிழ்மாறன். மாணிக்கவேலுவின் முகமூடியைக் கிழிக்க கொஞ்சம் காத்திரு என நரசிம்மன் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்.
இப்படிப்பட்ட கயவரின் மகளிடம் போய் உறவாடிவிட்டு வருகிறாள் சிகாமணி பெற்ற புத்திரி. சுண்டைக்காய் அளவு சுயமரியாதை இருந்தால் கூட இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்திருக்கமாட்டாளே!
எரிச்சலோடு சில மணி நேரங்கள் கழிந்தன. இரவுணவு வேண்டாமெனச் சொன்ன மலர்விழிக்கு வேணி மூலம் பால் கொடுத்து அனுப்பிய சிவகாமி கணவரையும் பிள்ளைகளையும் சாப்பிட அழைத்தார்.
“மலர் சாப்பிடலையாம். கோவில் பிரசாதம் சாப்பிட்டது வயிறு ஃபுல்னு சொல்லிட்டா. நைட்டுக்குப் பால் மட்டும் போதுமாம்”
மகிழ்மாறன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவன் தனது அறைக்குத் திரும்பியபோது மலர்விழி இரவு விளக்கத்தின் வெளிச்சத்தில் உறங்கிக்கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.
உடலைக் குறுக்கிப் படுத்திருந்தவளின் முகத்தில் சோகம் சொட்டியது. அழுதவண்ணம் உறங்கியிருப்பாள் போல. கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர்க்கோடுகள்!

மகிழ்மாறன் அவளருகே அமர்ந்து மலர்விழியின் கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீர்த்தடங்களை வருடியவன் “லூசுப்பொண்ணாடி நீ? உன்னோட இரக்கச்சுபாவமும் அப்பாவித்தனமும் எத்தனை பேருக்கு அட்வாண்டேஜா இருக்கு பாரு” என்று கடிந்துகொண்டான்.
இம்முறை அவனது குரலில் கோபமில்லை. வருத்தம் மட்டுமே!
தலையணைக்கு அருகிலிருந்த கரத்தில் அன்றொரு நாள் அவன் வைத்துவிட்ட மருதாணி ஆரஞ்சாய் மாறி சிரித்தது.
கைவிரல்களை வருடிக்கொடுத்தவனுக்கு மருதாணி வைத்ததற்கு மறுநாள் காலையில் அரக்கு வண்ணத்தில் சிவந்திருந்த கரங்களை ஆசையாகப் பார்த்தவளின் நாணச்சிவப்பேறிய முகம் நினைவுக்கு வந்தது.
“சிரிப்பெல்லாம் பலமா இருக்கு” எனச் சீண்டியவனிடம்
“உங்களுக்கு என் மேல நிறைய அன்புல்ல” என்று ஆவலாய்க் கேட்டாள்.
“நான் சொன்னேனா அப்பிடி?” ஜம்பமாகச் சொன்னவன் “உன்னால என் டீசர்ட் வேஸ்டா போயிடுச்சு. பாரு மருதாணி கறை ஒட்டிருக்கு அங்கங்க” என்று டீசர்ட்டைக் காட்டினான்.
அதில் ஆங்காங்கே கோடாய் தீற்றியிருந்த மருதாணி சிவப்பைப் பார்த்தவள் “இது எப்பிடி?” என்று யோசிக்க
“நைட் உறங்குறப்ப அப்பிடி இப்பிடி புரண்டா என் மேல தானே மருதாணி ஒட்டும். நல்லவேளை கட்டிப் பிடிச்சுத் தூங்குனதால சட்டையோட போச்சு” என்று விசமமாகச் சொல்லி அவளை இன்னும் சிவக்க வைத்தான் மகிழ்மாறன்.
அந்நினைவலைகளிலேயே அன்றைய இரவு கரைந்து கடந்துபோனது.
மறுநாள் விடியலில் தன் முகம் பார்த்துப் பேசமாட்டானா என மலர்விழி தவித்த கணங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு அவளிடம் முகம் கொடுக்காமல் கடந்து போனான் அவன்.
“மகிழ் மாமா” என்றவளின் அழைப்பைக் கேட்க அந்த அறையில் காற்று மட்டுமே இருந்தது.
முகம் கூம்ப, குளித்து உடையணிந்து கல்லூரிக்குத் தயாரானவள் மாமியார் அதட்டிக் கொடுத்த காலையுணவைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்மாறனுடன் கல்லூரிக்கு வந்தும் சேர்ந்தாள்.
எப்போதும் காரை விட்டு இறங்கியதும் “பத்திரமா போ” என்று சொல்லுபவன் அன்று அமைதியாக நிற்க
“மகிழ் மாமா நான்…” என்று திணறி பேச்சை ஆரம்பித்தாள்.
போ என்பது போல சைகை காட்டியவன் அவனது அலுவலக அறையை நோக்கி செல்ல, மலர்விழி கலங்கிய விழிகளுடன் தனது வகுப்பறையை நோக்கிச் சென்றாள்.

மதுமதிக்கு உதவுகிறேன் என்று தனக்கும் மகிழ்மாறனுக்குமானச் சுமூக உறவைக் கெடுத்துக்கொண்டோமோ என்ற பயம் அவளுக்குள் துளிர்த்து கிளை பரப்பி அவளது முழு மனதையும் ஆக்கிரமித்துவிட்டது.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction