“புவன் சார் மேல எனக்கு மரியாதை இருக்கு. இதுவரை மூனு தடவை அவர் கையால நான் ட்ராஃபி வாங்கிருக்கேன். ரொம்ப நல்ல மனுசன். ஸ்டூடண்ட்சை மரியாதையா நடத்துவார். அவரைப் போய் நான் எப்பிடி கல்யாணம் பண்ணிக்க முடியும்? இப்பிடி யோசிக்குறது கூட பாவம்னு நினைக்குறேன் நான். ஆனா மகிழ்மாறன் சார் எதை பத்தியும் கவலைப்படாம ஆர்டர் போட்டுட்டுப் போறார். அவ ஓடிப் போனதுக்கு நான் என்ன செய்யமுடியும்? அவளோட போனை வச்சிருந்த காரணத்துக்காக எனக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை? அந்தஸ்து, பணம், வசதியான வாழ்க்கை இதெல்லாம் விட என் குருவுக்கு நிகரா மதிச்ச ஒருத்தரை என்னால எப்பிடி கணவன் ஸ்தானத்துல வச்சு பாக்க முடியும்ங்கிற என்னோட சங்கடம் யாருக்குமே ஏன் புரிய மாட்டேங்குது?
-விழியின் மொழிகள்
யாரிடமோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள் மதுமதி.
“என் சி.வி அனுப்பிருக்கேன். பாத்துட்டு வேகன்சி இருந்தா சொல்லு.”
அவள் இரகசியக்குரலில் பேசிக்கொண்டிருக்கையில் பின்னே யாரோ தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது. உடனே மொபைலை மறைத்தபடி திரும்பினாள் அவள்.
அவளை வெட்டுவது போல முறைத்தபடி நின்றவர் மாணிக்கவேலுவே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உன்னைப் போன்ல பேசக்கூடாதுனு சொன்னேனா இல்லையா? இப்பிடி ரகசியம் பேசி பேசிதானே குடிய கெடுத்த. இன்னும் என்ன செய்யலாம்னு காத்திருக்க?”
அவர் மொபைலைப் பிடுங்கிக்கொண்டு கடுமையாகப் பேசவும் முகம் சுண்டிப்போனது அவளுக்கு.

“ஃப்ரெண்ட் கிட்ட வேலைக்குச் சொல்லிருந்தேன்பா”
“நீ வேலைக்குப் போயி கிழிச்சதெல்லாம் போதும். வீட்டோட இரு. வேற ஒரு இடத்துல மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி அனுப்புற வரைக்கும் இந்த வீட்டுவாசப்படிய நீ தாண்டக்கூடாது”
அவர் மிரட்டலாகச் சொல்லி முடிக்க மதுமதியின் முகம் இரத்தப்பசையில்லாமல் வெளுத்துப்போனது.
அந்நேரம் ஆபத்பாந்தவனாக வந்து நின்றான் பவிதரன்.
“எதுக்குப்பா கத்துறிங்க? ஒரு தடவை தப்பு பண்ணிட்டா! இனிமே கவனமா இருப்பா. வேலைக்குப் போகட்டுமே அவ”
“இவளை மட்டும் அவ்ளோ சுலபத்துல நம்பமாட்டேன் நான். என் மூஞ்சில கரிய பூசிட்டுப் போனவதானே! கொஞ்சம் அசந்தா இன்னொரு தடவையும் செய்வா”
அந்நேரத்தில் கோபத்தோடு அங்கே வந்தார் நிலவழகி.
“சும்மா பிள்ளைய திட்டாதிங்க. அவ மனசுல என்ன இருக்குனு தெரியாம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனது உங்க தப்பு”
“வாயை மூடுடி. இவ காதலிச்சவன் லெச்சணம் மட்டும் என்னவாம்? போயும் போயும் திருட்டுப்பயலைக் காதலிச்சிருக்கா. விவரம் சொல்லி போலீஸ்ல விசாரிச்சா மானம் போயிடும். மாணிக்கவேலு மவ காதலிச்சு ஓடிப்போனானு சொன்னா கூட ஜனம் விட்டுடும். ஆனா ஒரு திருட்டுப்பயலைக் காதலிச்சு நகையைத் தொலைச்சிட்டு வந்தானு தெரிஞ்சா கைகொட்டிச் சிரிக்கும் இந்த ஊரு. கூட வேலை பாத்தவன் எப்பிடினு கூட தெரியாம அப்பிடி என்ன காதல் வேண்டியது கிடக்கு? இன்னொரு வாட்டி இவளுக்கு ஏந்துக்கிட்டு வந்த, சங்கை நெறிச்சு அம்மையையும் மவளையும் கொன்னுடுவேன், ஜாக்கிரதை!”
எச்சரித்துவிட்டு அவர் வேலையைக் கவனிக்கப் போய்விட மதுமதி கலங்கிய விழிகளுடன் நின்றாள்.
பவிதரனுக்கும் அவள்மீது கடுங்கோபம்தான். ஆனால் அடிப்பேன் உதைப்பேன் என்று சொல்லுமளவுக்கு அவன் காட்டுமிராண்டி இல்லை. படித்தவன் கோபத்தைக் கூட மௌனத்தால் காட்டிவிட்டு விலகியிருந்தான்.
அவனும் தந்தையைத் தொடர்ந்து போய்விட அன்னையும் மகளும் மட்டும் மிச்சமிருந்தார்கள். மகளைத் தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றார் நிலவழகி.
“அழாதடி மது! எல்லாம் நேரம்! விட்டுத் தள்ளு. அப்பா சொல்லுறதைக் கேளு. அவர் உனக்கு நல்ல இடமா பாத்துக் கல்யாணம் பண்ணி வைப்பார்”
“எவன்மா வருவான்? வர்றவன் புவன் மாதிரி என்னோட சுதந்திரத்துல தலையிடாதவனா, நாகரிகமானவனா இருப்பான்னு என்ன கேரண்டி?”
“அதை இப்ப யோசிச்சு என்ன ஆகப்போகுது? நல்ல வாழ்க்கைய இழந்துட்டியே! குடும்பமும் அருமையானக் குடும்பம். அந்தக் கழுதை அங்க போய் உக்காரணும்னு இருக்கு போல”
நிலவழகி வயிற்றெரிச்சலோடு பேச மதுமதிக்கும் பொறாமை தாங்கவில்லை.
புவனேந்திரனுடன் திருமணம் பேசி முடித்த நாட்களில் அவனுடன் இணக்கமாகப் பேசியவள்தானே அவள்! அவர்கள் வீட்டின் புகைப்படத்தைப் பார்த்தபோது உண்டான பிரமிப்பு இப்போதும் அடங்கவில்லை.
‘இந்த மாளிகைக்கு நான் சொந்தக்காரி’ எனக் கர்வத்தோடு திரிந்தவளின் புத்தியை வெளிநாட்டு வாழ்க்கை பற்றி பேசி ஆசை காட்டி மாற்றியவன் ஆனந்த் பாட்டீல்.
முதலில் கலங்காதவள் பின்னர் மனம் மாறி புவனேந்திரனைத் தவிர்த்ததும், தவிக்க வைத்ததும் எப்பேர்ப்பட்ட முட்டாள்த்தனம். அப்படி இருந்தும் தனக்காக அகமதாபாத் வரை வந்தவனுக்கு இன்னும் தன் மேல் பிடித்தம் இருக்கும் என்ற நப்பாசை.
அதை அன்னையிடம் உளறவும் செய்தாள். அதைக் கேட்டுப் புருவம் சுருக்கி யோசித்த நிலவழகியின் முகத்தில் எண்ணற்ற உணர்வுகள்!
“இப்பிடி பண்ணுனா என்ன?”
“என்னம்மா?”
“எப்பிடியும் உன்னோட வாழ்க்கைய தானே அந்த மலர் வாழுறா”
“ம்மா! லாஜிக் இல்லாம பேசுற. அவ புவனைக் கல்யாணம் பண்ணல. மாறனைத் தானே கட்டியிருக்கா”
“அதனால என்னடி? அவளை மாதிரி கஞ்சிக்கு வழியில்லாத கழுதைக்கு முதலமைச்சர் வர்ற அளவுக்கு ஆடம்பரமா கல்யாணம் நடக்க யார் காரணம்? நீதானே? கல்யாணச்செலவு முழுக்க நம்மளோடது. அவ ஓசில போய் வாழ்ந்துடுவாளா? இந்தக் கடனை எப்பிடி அடைப்பா?”
“எனக்குப் புரியலைம்மா”
“அட அசட்டுப்பொண்ணே! நீ உக்கார வேண்டிய மணமேடைல உக்காந்து தாலி வாங்கிக்கிட்டவ அவ. அப்பன் ஆத்தா சல்லிக்காசு செலவளிக்கல அவ கல்யாணத்துக்கு. இதுக்குக் கைமாறா அவளோட புகுந்த வீட்டாளுங்க மனசை மாத்தி உன்னை அந்த வீட்டு மருமகளாக்க உதவுனு கேப்போம். அவ உதவாம எங்க போவா? நம்ம காசுல சொகுசா கல்யாணம் பண்ணுனவளுக்கு ரோசம் இருந்தா உதவுவா”
“இதே மாதிரி பேசுனா அவ நம்மளை ஒரு பொருட்டா மதிக்காம போய்டுவாம்மா”
“அது எனக்குத் தெரியாதா? அவ கிட்ட எப்பிடி பேசுனா காரியம் நடக்கும்னு எனக்குத் தெரியும். நான் சொல்லுற மாதிரி நீ செய்”

வயதுக்குக் கொஞ்சமும் பொருந்தாத திட்டமொன்றை சடுதியில் தீட்டி மகளின் விஷ மூளையில் அதைப் பதிவேற்றமும் செய்தார் நிலவழகி.
“இது சரியா வருமாம்மா?”
“அதெல்லாம் வரும். அவ மாமியாக்காரி சிவகாமி நம்ம ஊர் சிவன் கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் வருவா. இன்னைக்கும் வருவா. நான் சொன்ன மாதிரி செய். எல்லாம் தானா நடக்கும்”
நிலவழகி போட்டுக் கொடுத்த திட்டம் சரியாக வருமா வராதா என்று யோசிக்கக்கூட தனக்கு நேரமில்லை என நினைத்தாள் மதுமதி.
அவளால் அதிக நாட்கள் தந்தை விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள் குப்பை கொட்ட முடியாது. அதே நேரம் அவரை மீறியும் செல்லவியலாது.
கையில் வேலையுமில்லை. தந்தையின் சொத்து மட்டுமே அவளுக்கான பொருதாரப் பாதுகாப்பு. அதை நம்பி இருந்தால் சுதந்திரமாக வாழ முடியாது. தனக்கு இப்போது இருக்கும் ஒரே வழி புவனேந்திரனை மீண்டும் கைக்குள் போட்டுக்கொள்வது மட்டுமே!
அவன் தன்னைக் கட்டுப்படுத்த மாட்டான். கணக்கில்லாமல் செலவு செய்வான். அவனை மணந்தால் கோடீஸ்வர வாழ்க்கை கிடைக்குமென மனதுக்குள் கற்பனைக்கோட்டை கட்டியவள் அதைச் செயல்படுத்தவும் முனைந்தாள்.
அதன் முதல் படியாக அவளது மொபைலில் இருந்து மலர்விழிக்கு அழைப்பு போனது. முதலிரண்டு அழைப்புகள் ஏற்கப்படவில்லை. மூன்றாம் முறை அழைத்ததும் எடுத்தவள் “சொல்லு” என்றாள் மொட்டையாய்.
அவள் பேசிய தொனியே மதுமதிக்கு எரிச்சலை வரவழைத்தது.
‘நான் போட்டுக் கிழிந்த துணிகளை உடுத்தியவளுக்குப் பணக்காரவீட்டு மகளானதும் திமிர் வந்துவிட்டது’
மனதுக்குள் கறுவியதைக் காட்டாமல் “மனசுக்குப் பாரமா இருந்துச்சு மலர். யார் கிட்டவும் என் மனசுல உள்ளதை ஷேர் பண்ண முடியல. அப்பாவும் அம்மாவும் என்னை ஏதோ புழு பூச்சிய பாக்குற மாதிரி பாக்குறாங்க.” என்று போலியாய் அழத் தொடங்கினாள்.
மறுமுனையில் இருந்தவளுக்கோ யாரும் அழுதால் தாங்காதே! மனம் உருகிப்போனது.
“விடு மதுக்கா. கொஞ்சநாள் கோவமா இருப்பாங்க. அப்புறம் சரியாகிடுவாங்க. நீ வேற எதையும் யோசிச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காத”
“ம்ம்! என்னால எல்லாருக்கும் அசிங்கம்ல. சாரிடி! நான் அப்ப இருந்த நிலமை அந்த மாதிரி. காதலிச்சவனுக்குத் துரோகம் பண்ண முடியல. என் நிலமைய புவன் தவிர வேற யாருமே புரிஞ்சிக்கல மலர்”
புவனேந்திரனை அவள் உயர்த்திப் பேசவுமே அவளது குணாதிசயத்தில் வந்த மாறுதலைக் கவனித்துவிட்டாள் மலர்விழி. பொதுவாக மதுமதி தன்னைத் தவிர வேறு யாரையும் உயர்த்திப் பேசுபவள் இல்லை.
நடந்த சம்பவம் அவளை ஏதோ ஒரு விதத்தில் தெளிவானவளாக மாற்றியிருந்தால் சரி!
“சரி மதுக்கா! நானும் ஈசும் கேண்டீனுக்கு வந்தோம். க்ளாசுக்குப் போகணும். அப்புறம் பேசட்டுமா?”
“எல்லாரை விடவும் உனக்குத்தான் நான் பெரிய பாவத்தைப் பண்ணிட்டேன் மலர். நீ என்னை மன்னிச்சிடு. எனக்கு… எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்குடி. நீ எங்க வீட்டுக்கும் வரமாட்ட. உன் புகுந்த வீட்டாளுங்க அம்மா பேசுனதை வச்சு இந்நேரம் என்னையும் தப்பா நினைச்சிருப்பாங்கல்ல. நீ ரங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு இன்னைக்கு ஈவ்னிங் வர்றியா? எனக்காக மலர்.”
கெஞ்சும்போதே எரிந்தது மதுமதிக்கு. இவளிடமெல்லாம் இறங்கி பேசவேண்டியதாகிவிட்டதே என்ற கடுப்பு.
மலர்விழி கொஞ்சம் யோசித்தாள். பின்னர் சரியென்று சொல்லிவிட்டாள். அன்று அவளுக்கு புக் ஷாப்பில் சம்பள நாள். பார்ட் டைம் பணியாளர்களுக்கு மட்டும் கையிலேயே கரன்சியாகக் கொடுத்துவிடுவது வழக்கம்.
சமபளத்தை அன்னையிடம் கொடுத்த மாதிரியும் இருக்கும். கோவிலுக்குப் போய் மதுமதியைப் பார்த்துவிட்டு வந்தது போலவும் இருக்குமென நினைத்தாள்.
பப்சைக் கடித்தபடி இருந்த ஈஸ்வரி அவளது புஜத்தில் இடித்து என்ன சமாச்சாரம் என வினவியதும் “மதுக்கா என்னைப் பாக்கணுமாம். மன்னிப்பு கேக்கணுமாம்” என்றாள்.
“நம்பவே முடியலடி. எனக்கு மயக்கம் மயக்கமா வருது” என்று தள்ளாடுவது போல ஈஸ்வரி நடிக்க
“ப்ச்! அவளுக்கு நடந்த எல்லாம் சேர்ந்து பெரிய ஷாக். அதனால கொஞ்சம் மனசு மாறிருப்பானு தோணுது. என்னனுதான் கேப்போமே”
“அதுவும் சரிதான்! ஆனா நானும் உன் கூட வருவேன்”
கையைக் கட்டிக்கொண்டு சொன்னவளிடம் வேண்டாமென மறுத்தாள் மலர்விழி.
“அவளைப் பாத்தாலே நீ டென்சன் ஆகிடுவ. விடு! அவ என்னை எதுவும் பேசி நோகடிப்பாளோனு நீ யோசிக்குறது புரியுது. அவ இருக்குற நிலமைல அவ்ளோ தூரம் போகமாட்டானு நம்புறேன்”
தோழியைச் சரிகட்டிய மலர்விழியின் மனதின் ஒரு ஓரத்தில் மதுமதியின் குடும்பத்தாரிடம் ஒதுங்கியிருப்பது நல்லதென சிவகாமி சொன்ன அறிவுரை உறுத்திக்கொண்டே இருந்தது அன்று மாலை வரை.
அவர் கோவிலுக்குக் கிளம்பியபோது “நானும் இன்னைக்கு உங்க கூட வர்றேன் அத்தை” என்று சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தார் சிவகாமி.
பொதுவாகச் சனிக்கிழமைகளில் அவள் வீட்டை விட்டு நகரமாட்டாள். அப்போதிருந்தே வாரவிடுமுறை ஆரம்பிப்பதாகச் சொல்லுவாள்.
“ஆச்சரியமா இருக்குடி பொண்ணே!” என்று கிண்டல் செய்தாலும் அவளைக் கிளம்புமாறு கூறிவிட்டார்.
மடமடவெனக் குளித்துவிட்டு ஆலீவ் பச்சை புடவையில் ஆப்பிள் சிவப்பில் சின்னதாக ஜரி பார்டர் வைத்த மகேஷ்வரி காட்டன் சில்க் ஒன்றைக் கட்டிக்கொண்டு கூந்தலைப் பின்னலிட்டவள் நெற்றியில் பொட்டு வைத்தபோதே “கிளம்பிட்டியா மலர்?” என்ற சிவகாமியின் குரல் கேட்டது.
“இதோ வந்துட்டேன் அத்தை” உதட்டில் வாசலினின் லிப் டிண்ட் மினுமினுத்தது கொஞ்சம் அதிகமோ என ஆராய்ச்சி செய்தபடி பதிலளித்தவள் “நல்லாதான் இருக்கு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேகமாக அறையிலிருந்து கிளம்பினாள்.
வாயிலைப் போய் சேரும் முன்னர் உள்ளே வந்த மகிழ்மாறன் மீது மோதிக்கொண்டவள் தவிப்போடு விலக எத்தனிக்க, அவனோ அவள் விழுந்துவிடக்கூடாதென இடையோடு வளைத்து அணைத்து நிறுத்தியிருந்தான்.
வளைத்திருந்த கரம் தனது இடையில் அழுத்திய விதத்தில் வியர்வை அரும்பியது அவளது நெற்றியில்.
தனது ஸ்பரிசத்தால் பூத்த வியர்வைப்பூக்களைக் காண காண மகிழ்மாறனுக்கும் கர்வமே!
ஆட்காட்டிவிரல் அவளது இடையில் கோடாய் வருடவும் திமிறி விலக முயன்றாள் மலர்விழி.

“லிப் டிண்ட் எல்லாம் போட்டு அட்டகாசமா ரெடியாகி எங்க போறிங்க மிசஸ் மகிழ்மாறன்?”
ஆழ்ந்த குரலில் அமரிக்கையாய் அவன் கேட்க பதில் சொல்லவேண்டியவளோ திமிறி விலகுவதிலேயே கண்ணாய் இருந்தாள்.
“நீ ஆடாம அசையாம பதில் சொன்னனா இங்க இருந்து போகலாம். இல்லனா இப்பிடியே நிக்க வேண்டியதா இருக்கும். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! விடிய விடிய நிக்கணும்னாலும் நான் நிப்பேன்”
ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது ஆட்காட்டிவிரல் இடையில் கோலம் போட தவித்துப் போனாள் அவள்.
“நான் கோயிலுக்குப் போறேன் மகிழ் மாமா! ப்ளீஸ்!”
திக்கித் திணறி அவள் முணுமுணுக்கவும் மெல்லியச் சிரிப்போடு விடுவித்தான்.
“போயிட்டு வா!
கோவிலில் இருந்து திரும்பியதும் அவள் சொல்லப்போகும் செய்தியால் வெடிக்கப் போகிற பூகம்பத்துக்கான அறிகுறி கொஞ்சமுமின்றி புன்னகையோடு வழியனுப்பிவைத்தான் மகிழ்மாறன்.
“என்னடி முகமெல்லாம் சிவந்து வேர்த்திருக்கு? எதுவும் சொன்னானா உன் புருசன்?” சிவகாமி இரகசியமாகக் கேட்டார்.
“ஒ..ஒன்னுமில்லையே!” என்று அவள் பதற
“பாவம்! அப்பாவிப்பிள்ளைய மிரட்டி வச்சிருக்கான் இந்தப் பையன். அவன் இல்லனா கூட உனக்குப் பதறுது பாரேன்” என்று கேலியாய்ப் பேசிச் சிரித்த சிவகாமிக்கு மனதிற்குள் என்னவோ பூரிப்புதான்.
திடீர் திருமணம்! இருவருக்கும் வயது வித்தியாசம் வேறு! இருபத்தொன்றுக்கும் இருபத்தெட்டுக்கும் ஒத்துவருமா என்று அவருக்குள் இருந்த தயக்கங்கள் யாவும் இளையவன் மருமகளை நடத்துகிற விதத்தில் காணாமல் போயிருந்தன.
இதே போல மூத்தவனுக்கும் கடவுள் ஒரு நல்ல வழியைக் காட்டட்டுமென எண்ணிக்கொண்டார்.
மாமியாரும் மருமகளும் ரங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு வந்ததும் அவர்களுக்காகக் காத்திருந்த குழலிக்கு மகளைக் கண்டதும் ஆச்சரியம். சாமி கும்பிட்ட கையோடு சிவகாமியும் அவரும் பிரகாரத்தில் உட்கார அன்னையிடம் சம்பளத்தைக் கொடுத்தாள் மலர்விழி.
“என்ன பண்ணுற நீ? ஒரு வார்த்தை அவங்க கிட்ட கேக்காம…”
“மகிழ் மாமா தான் சம்பளம் வாங்குனதும் உங்க கிட்ட குடுக்கச் சொன்னார்”
மகள் இவ்வாறு சொன்னதும் சம்பந்தியைச் சங்கடமாகப் பார்த்தார் குழலி.
அவரோ “எங்க வீட்டு இளைய மகாராஜா பேச்சை நாங்களே தட்ட முடியாது மதினி. மலர் அப்பாவி வேற! அவன் சொன்னதைக் கேக்கறதைத் தவிர வேற வழியில்ல” என்றார் சிரிப்போடு.
“இருந்தாலும்….”
“என்னைப் படிக்கவச்சது நீங்க தானாம். அதனால என் உழைப்போட பலனை அனுபவிக்குற முதல் உரிமை உங்களுக்குத்தான் இருக்குதாம். இதைச் சொன்னது உங்க மருமகன். அத்தை சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. அந்த வீட்டுல மகிழ் மாமாவ யாரும் எதிர்த்துப் பேசிட முடியாது. நான் மட்டும் எப்பிடி பேசுறது?”
குழலிக்கு இன்னுமே சங்கடம் தான். அவர் பர்சுக்குள் காசை வைத்தபோதே “நீங்க பேசிட்டிருங்க. நான் கோவிலுக்கு வெளிய இருக்குற குளத்துல தாமரை இருந்தா பறிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கழண்று கொண்டாள்.
“நான் கோவிலுக்கு வெளிய இருக்குற குளத்துக்குப் பக்கத்துல நிக்குறேன் மலர்”
மதுமதி தகவல் அனுப்பியதால் அங்கிருந்து குளத்துக்குச் சென்றவள் இருள் கவிழும் நேரத்தில் நீரலைகள் மினுமினுக்க செந்தாமரை மொட்டுகளுடன் நின்ற காட்சியை ரசித்தபடி மதுமதியிடம் வந்தாள்.
மலர்விழியைப் பார்த்ததும் கண்களில் கன்ணீர் ஊற்றெடுக்கக் கரம் கூப்பினாள் மதுமதி.
“என்னை மன்னிச்சிடு மலர். என்னாலதான் பிடிக்காத ஒருத்தருக்குக் கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம் உனக்கு வந்துடுச்சு. நான் சுயநலமா எடுத்த முடிவால உன் வாழ்க்கை, ரெண்டு குடும்பத்தோட மரியாதை போச்சே”
மலர்விழிக்கு அவளது பேச்சில் முழுதாக உடன்பாடு இல்லை.
‘மகிழ்மாறனை எனக்குப் பிடிக்காதா என்ன? என் வாழ்க்கைக்கு என்ன குறைச்சலாம்?’
சிலையாய் நின்றாள் அவள். மதுமதி பேசிக்கொண்டே போனாள்.

“புவன் எவ்ளோ அற்புதமான மனுசன்னு இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன் மலர். உண்மையானக் காதல் அழகை, வசதியைப் பார்த்து வராதுனும் புரிஞ்சிக்கிட்டேன். அவருக்கு என் மேல எவ்ளோ காதல் இருந்தா ஓடிப்போனவ எக்கேடு கெட்டா என்னனு நினைக்காம எனக்காக அகமதாபாத் வரைக்கும் வந்திருப்பார்? அவரோட காதலைப் புரிஞ்சிக்காம போயிட்டேன். கண்ணாடிக்காக வைரத்தைத் தூக்கியெறிஞ்சிட்டேனே! இப்ப என் மேல அவருக்குக் கோபம் அதிகமா இருக்கு. அதனால அவரோட காதலை வெளிக்காட்டிக்க யோசிக்குறார். எப்ப அவர் எனக்காக இவ்ளோ தூரம் வந்தாரோ அப்பவே முடிவு பண்ணிட்டேன், அவரைத் தவிர வேற ஒருத்தருக்கு என் வாழ்க்கைல இடமில்லனு”
மலர்விழிக்கு முன்பிருந்தே புவனேந்திரன் மதுமதியை நேசிக்கிறான் என்ற எண்ணம் வலுவாக உண்டு. மகிழ்மாறன் அதை விஷமாக வெறுக்கிறான் என்பதும் தெரியும்.
ஒருவேளை புவனேந்திரன் மனதில் காதல் இருக்குமோ? அதைக் குடும்பத்துக்காக மறைக்கிறானோ?
“அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை பாக்குறார் மலர். என் மனசு முழுக்க புவன் மட்டும்தான் இருக்குறார். நீ நினைச்சா அவருக்கு என் நிலமைய புரிய வைக்க முடியும். எனக்காக இந்த உதவிய செய்வியா மலர்?”
கண் கலங்க தனது கரம் பற்றி யாசகம் கேட்பவளைப் போல நின்ற மதுமதியைச் சங்கடத்தோடு நோக்கினாள் மலர்விழி. அவளுக்குப் புவனேந்திரன் மீது மரியாதை உண்டு. அத்தனை பேர் சொல்லியும் மதுமதிக்காக அகமதாபாத் வரை சென்றவனின் மனதில் காதல் இருக்காதா என்ன?
காதலைத் திரைப்படத்திலும், நாவல்களிலும் மட்டுமே படித்தவளின் சிந்தனை வேறு எப்படி இருக்கும்? கூடவே மதுமதியின் கண்ணீரும், மாய்மாலமும் அவளை இரக்கத்தில் ஆழ்த்திவிட்டனவே!
விளைவு, மதுமதிக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தாள் மலர்விழி. அதனால் மகிழ்மாறன் எத்துணை கோபம் கொள்ளப்போகிறான் என்பதை அறியாதவளாக!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction