“என் பேர் மலர்விழி. ஆனா மலர்விழி எம்.காம் ஃபர்ஸ்ட் இயர்னு இப்ப மாறிப்போனதா தோணுது. எல்லாம் கரெஸ்பாண்டெண்ட் உபயம்தான். அது என்னமோ அவர் அப்பிடி சொன்னா சிரிப்பு வந்துடுது எனக்கு. ஆனா சிரிக்கவும் முடியாது. ஒருவேளை கரெஸ் கோவப்பட்டுட்டா என்ன செய்யுறது? அன்னைக்கு ரோட்ல முரளிய லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குனதே என் கண்ணுக்குள்ள இன்னும் நிக்குது. ஷப்பா! என்ன காரம் குரல்ல? ஒன்னு மட்டும் உண்மை! ஆம்பளைங்க சிரிச்ச முகமா இருந்தா உலகம் ஏமாத்திடும். அதுவே கறார் பேர்வழியா இந்தக் கரெஸ் மாதிரி இருந்தா பயந்து வழிவிடும்.”
-விழியின் மொழிகள்
நடுக்கூடத்தில் தலைகுனிந்து நின்றிருந்தாள் மதுமதி. மாணிக்கவேலு அவளிடம் கோபம் கொள்வதா, அல்லது உயிர் பிழைத்து வந்தாயே இது போதுமென அவளை அணைத்து ஆறுதல் சொல்வதா எனப் புரியாமல் தவிப்போடு அமர்ந்திருந்தார்.

அவளைத் தவிர மற்ற அனைவரும் இருக்கைகளை நிரப்பியிருந்தார்கள். அதில் புவனேந்திரனும் அவனது குடும்பத்தாரும் அடக்கம்.
மலர்விழி சொன்னாள் என்பதற்காக சிகாமணியும் குழலியும் அங்கே வரவில்லை. மதுமதிதான் வந்துவிட்டாளே! ஒருவேளை அவள் ஏடாகூடமாக ஏதாவது பேசினால் குழலியின் வாய் சும்மா இருக்காது என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர்களை போகாதீர்கள் என்று தடுத்திருந்தாள்.
அவளுமே கல்லூரிக்குப் போய்விட்டாள். உபயம் அவளது கணவனின் மிரட்டல்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நாளைக்குக் காலைல பதினோரு மணிக்கு அண்ணா மதுமதியோட வந்துடுவான். நீ இதுதான் சாக்குனு லீவ் எடுத்து ஒரு நாள் லெசனைக் கோட்டை விட்டுடாத. ஆக்சுவலி மேடம் அக்கவுண்டன்சில அவுட்ஸ்டாண்டிங்கா இருக்கிங்க. பாத்துக்கோங்க”
இதற்கு பிறகு அவளுக்கு மட்டும் அங்கே போகவா தோன்றும்!
சிகாமணி மகளிடம் பேசியது போல முந்தைய தினம் மாலையில் மாணிக்கவேலுவின் வீட்டுக்கு வந்து அவருக்கும் மதினிக்கும் ஆறுதல் சொன்னதோடு சரி! குழலி அதற்கும் வரவில்லை.
மதுமதியை அழைத்துக்கொண்டு வருவதாகப் பவிதரனிடம் மட்டும் மொபைலில் அன்று காலையில் செய்தி அனுப்பியிருந்தான் புவனேந்திரன். அதுவரை பவிதரனுக்குமே அவளது உயிருக்கு ஆபத்தில்லை என்ற தகவல் தெரியாது.
அச்செய்தியை மகிழ்மாறன் மூலம் அறிந்தவள் மலர்விழி மட்டுமே!
“மதுமதி இங்க வர்ற வரைக்கும் யார் கிட்டவும் எதையும் சொல்லிடாத”
ஏன் என்று அவள் கேட்டதற்கு கூர்மையான ஒரு பார்வை மட்டுமே பதிலாக வந்தது.
“அதுக்கில்ல… மதுக்காவ நினைச்சு ஷண்மதிக்கா ரெண்டு நாளா தூக்கம் இல்லாம தவிக்குறா”
“நாளைக்குக் காலைல வரைக்கும் தவிக்கட்டும். ஒன்னும் தப்பில்ல. நீ அந்த மாதிரி தவிக்கக்கூடாதுனுதான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன்”
உன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலைப்படும் எண்ணம் எனக்கில்லை என்று சொல்லிவிட்டான் அவன். அதனாலேயே மலர்விழி இரகசியம் காக்கவேண்டியதாயிற்று.
இதோ இப்போது மதுமதியை அழைத்து வந்து அனைவர் முன்னும் நிறுத்திவிட்டான் புவனேந்திரன். அவளைப் பார்த்ததும் முதலில் மாணிக்கவேலுவின் குடும்பத்தினர் அதிர்ந்துதான் போனார்கள்.
அவர்களிடம் பேச விரும்பாமல் தனது பெற்றோரை அங்கே வருமாறு அழைத்தான். அன்றைய தினம் அவளால் தலைகுனியும் நிலை வந்தது தனது பெற்றோருக்கும்தானே என்ற கடுப்பு அவனுக்கு.
அவர்களும் வந்தார்கள். வந்தவர்கள் ஒரு வார்த்தை பேசவில்லை.
“வாங்க” என்ற மாணிக்கவேலு – நிலவழகியின் அழைப்புகளுக்குத் தலை கூட அசைக்கவில்லை.
எவ்வளவு நேரம் அமைதியாக இருப்பது? அவரவருக்கு ஆயிரம் வேலைகள் தலைக்கு மேல் இருக்கிறதே! நரசிம்மன் தனது மைந்தனைப் பார்க்க அவனும் புரிந்தாற்போல பேச்சை ஆரம்பித்தான்.
“உங்க பொண்ணு ஆனந்த் பாட்டீல்னு ஒரு பையனைக் காதலிச்சிருக்கா. உங்க கிட்ட வந்து அவனைப் பத்தி சொல்லிருக்கா. அவன் வசதியில்லாதவன், அவனைக் கல்யாணம் பண்ணுனா வீட்டை விட்டு ஒதுக்கிவச்சிடுவேன், கொன்னுடுவேன்னு மிரட்டுனிங்களா?”
முதல் கேள்வியே மாணிக்கவேலுவிடம்தான். அவர் விக்கித்துப் போய் நின்றார். நிலவழகிக்கு இந்த விவகாரமே தெரியாது. பவிதரனோ பாதி நேரம் அவர்களின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் கதியாய்க் கிடந்தானே!
இப்போது புவனேந்திரன் சொன்னதும் அவர்களே கலங்கிப் போய்விட்டார்கள்.
“என்னது இது? மதி” ஏமாற்றத்தோடு மகளை நோக்கினார் நிலவழகி.
நரசிம்மனும் சிவகாமியும் கோபத்தோடு பார்த்தது என்னவோ மாணிக்கவேலுவை மட்டுமே!
“இங்க பாருங்க! உங்க பொண்ணுக்கு ஆல்ரெடி காதல் இருக்குனு தெரிஞ்சும் ஏன் எங்க வீட்டுல சம்பந்தம் பேசுனிங்க? போதாக்குறைக்கு உங்க பொண்ணை மிரட்டிருக்கிங்க. சொத்து தரமாட்டேன், கொன்னுடுவேன்னு. என்ன தகப்பன் நீங்க? பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கைய அமைச்சுக் குடுக்காம அவளையும் கஷ்டப்படுத்தி எங்களையும் அசிங்கப்படுற நிலமைக்குத் தள்ளி என்ன சாதிச்சிட்டிங்க இப்ப?”
மாணிக்கவேலு யோசிக்காமல் அவனிடம் கைகூப்பினார்.
“என்னை மன்னிச்சிடுங்க தம்பி”
அவனோ அவரை ஒதுக்கிவிட்டான். இப்போது அவனுக்குப் பதில் சொல்லவேண்டியவள் மதுமதி! சொல்லப்போனால் அவனது முழு ஆதங்கமும் அவள்மீதுதான்.
குனிந்த தலை நிமிராமல் இருந்தவளின் கண்கள் கலங்கியிருந்தன.
என்ன சொல்ல முடியும் அவளால்? வெளிநாட்டில் போய் வாழலாம் என ஆசைக்காட்டிய காதலனுக்கும், தந்தை பார்த்து வைத்த பணக்காரச் சம்பந்தத்துக்கும் இடையே சிக்கித் தவித்து யார் பக்கம் செல்வதெனத் தெரியாமல் நாட்களைக் கடத்தி திருமணம் வரை வந்தவள் அதற்கிடையே வெளிநாட்டுப்பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துவைத்த காதலன் உருக்கமாகப் போனில் பேசியதும் நகை பணத்துடன் கிளம்பிவிட்டாள்.
“இந்த ஊருலயே சொந்தபந்தத்துக்காக என்னை மாத்திக்கிட்டு, சாகுற வரைக்கும் உங்க கூட இருக்க என்னால முடியாதுனு தோணுச்சு. எனக்குப் பிடிச்ச வேலை, சுதந்திரமான மாடர்ன் லைஃப்ஸ்டைலை இழக்க விருப்பமில்ல. அப்பா முதல்ல சம்பந்தம் பேசுனதும் உங்க வசதி, அந்தஸ்தை பாத்து என் காதலைத் தூக்கியெறிஞ்சேன்! வாழ்க்கைய சந்தோசமா வாழ பணம் அவசியம்னு அப்ப தோனுச்சு. அப்புறம் ஆனந்த் பேச பேச என் வாழ்க்கை இங்கயே முடிஞ்சிடுமாங்கிற ஏக்கம் வந்துச்சு. ஆசைப்படுற மாதிரி ஒரு ஜீன்ஸ் கூட போடமுடியாது. க்ராப் டாப் எல்லாம் கனவுல கூட போடமுடியாது. இந்த கன்சர்வேட்டிவான வாழ்க்கை வேண்டாம்னு நினைச்சேன். போயிட்டேன். லண்டன்ல எங்க ரெண்டு பேருக்கும் வேலை ரெடியா இருக்குனு ஆனந்த் சொன்னான். எனக்குனு இவங்க சேர்த்து வச்ச எல்லா நகையையும் எடுத்துட்டுப் போனேன். ஆனா அவன்… நகைய எடுத்துக்கிட்டு நைட்டோட நைட்டா என்னைத் தனியா அந்த ஓட்டல்ல விட்டுட்டு எங்கயோ போயிட்டான். அகமதாபாத் முழுக்க அவனைத் தேடுனேன். ஏர்போர்ட்டுக்காச்சும் வருவான்னு நம்புனேன். அவன் வரல. நானும் லண்டன் போகல”
மதுமதி வாய் திறந்து சொல்லி முடித்ததும் அனைவரின் வதனங்களும் வெறுப்பை உமிழத் தவறவில்லை. புவனேந்திரனுக்குக் கேட்க வேண்டியக் கேள்வி ஒன்று பாக்கியிருந்தது.
“ஒரே ஒரு கேள்வி கேட்டுக்குறேன். என் கூட ஹனிமூன் டெஸ்டினேசன் எல்லாம் செலக்ட் பண்ணுன. திடீர்னு நீ லவ் பண்ணுறவன் வெளிநாட்டு வாழ்க்கை சுதந்திரமா வாழலாம் வானு சொன்னதும் ஓடிட்ட. நீ என் கூட பேசுனப்ப என் ஃபேமிலி பேக்ரவுண்ட், வசதியான வாழ்க்கை இதைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிச்சது இல்லயா?”

மதுமதி உடைந்து அழ ஆரம்பித்தாள். காதலன் கை கழுவிய பிறகு தன்னை அங்கிருந்து இங்கு வரை அழைத்து வந்திருக்கிறான். ஒரு தடவை கூட அவன் கோபத்தைக் காட்டவில்லை.
அவளது அமைதியே அவனுக்குப் பதிலாக அமைந்தது.
“எனக்கு வரப்போற ஒய்ப் என்னை நேசிக்குறவளா இருக்கணும்ங்கிறது என்னோட ஆசை. நீ அப்பிடி இல்லங்கிறதை இப்ப தெரிஞ்சிக்கிட்டேன். சொல்லப்போனா நீ யாரையும் அந்த நபருக்காக நேசிக்கிறவளா தெரியல. உனக்கானத் தேவைய நிறைவேத்துற ஆளா இருந்தா மட்டும் போதும்ங்கிற எண்ணத்தோடவே இருந்திருக்க. கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஓடுனது எவ்ளோ பெரிய நல்ல காரியம்னு இப்ப தோணுது. ரொம்ப தேங்க்ஸ், கல்யாணத்துல இருந்து ஓடி என் வாழ்க்கைய நாசமாக்காம இருந்ததுக்கு. ஹான்! உன்னை விட அற்புதமான ஒருத்தி எங்க வீட்டுக்கு மருமகளா வந்ததுக்கும் நீதான் காரணம். அதுக்காக உன்னைச் சும்மா விட்டுட்டுப் போறேன்.”
கோபத்தோடு எச்சரித்தவன் “இவளால அன்னைக்கு நடந்த அவமானத்துக்கு நான் நினைச்சா உங்க குடும்பம் மேல மான நஷ்ட வழக்கு போட முடியும். சிகாமணி மாமாக்காக விட்டுட்டுப் போறேன். மனசுல பதிய வச்சுக்கோங்க, அவர் முகத்துக்காக மட்டும்தான் விட்டுட்டுப் போறேன்.” என்று சொல்ல மாணிக்கவேலு, நிலவழகியோடு சேர்ந்து மதுமதியும் அவமானமாக உணர்ந்தாள் அந்நொடியில்.
அசட்டு மனிதர், ஏமாளி, வேலைக்காரன் என்றெல்லாம் அவள் யோசித்துவைத்த சிகாமணிதான் இன்று அவர்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணகார்த்தா என்ற கசப்பான உண்மையை மதுமதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அமைதியாக அவமானத்தைச் சீரணித்தபடி சிலையாக நின்றவளைப் பார்க்க கூட வெறுத்தவனாகத் தவிர்த்தான் அவளது சகோதரன் பவிதரன்.
மீண்டும் ஒரு முறை நரசிம்மன், சிவகாமி, புவனேந்திரன் முன்னே கரம் கூப்பி தலைகுனிந்து நின்றான் அவன்.
“நீங்க தலை குனிய என்ன அவசியம்? தப்பு செஞ்சது உங்கப்பாவும் உங்க தங்கச்சியும்தான். பணமும், வசதி வாய்ப்பும் நிரந்தரம்னு நினைக்குற அவங்களோட திமிரான குணம் உங்க வாழ்க்கைய பாதிச்சிடாம பாத்துக்கோங்க. ஒரு நலம்விரும்பியா என்னோட அட்வைஸ் இது”
“ரொம்ப தேங்க்ஸ் புவன்”
சிவகாமி போவதற்கு முன்னர் நிலவழகியிடம் ஒன்றே ஒன்று மட்டும் சொன்னார்.
“தாலிக்குப் பொன்னுருக்குனப்ப எதுக்கு சிகாமணி அண்ணனும் குழலி மதினியும் ஒதுங்கியிருக்காங்கனு கேட்டதுக்கு நீங்க சொன்ன பதில் ஞாபகம் இருக்கா? வசதியான இடங்களுக்கு வந்து பழக்கப்படாதவங்க அவங்கனு சொன்னிங்க. ஒருவகைல அது எவ்ளோ நல்லதுல்ல. உங்களை மாதிரி ஆளுங்க கூட ஒன்னு மண்ணா பழகியிருந்தா நீங்க அவங்களையும் உங்களை மாதிரியே மாத்திருப்பிங்க. கடவுள் புண்ணியத்துல என் சம்பந்தி குடும்பமும் என் குடும்பமும் உங்க எல்லார் கிட்ட இருந்தும் தப்பிச்சிட்டோம். போயிட்டு வர்றோம்”
புவனேந்திரன் தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறும்போதே நிலவழகி கதறுவது கேட்டது.
“பாவி பாவி! எப்பிடி சீராட்டி வளத்தேன் உன்னை? இப்ப என்ன பேர் வாங்கி குடுத்திருக்க பாரு. போயும் போயும் கஞ்சிக்கு வழியத்தக் குடும்பத்தால நம்ம இன்னைக்கு தப்பிச்சிருக்கோம்னு சொல்லிட்டுப் போறாங்க. இந்த அசிங்கத்துக்கு அரளி விதைய அரைச்சுக் குடிச்சிட்டுச் சாகலாம். நீ போயிட்ட! உனக்கு அமைஞ்ச வாழ்க்கைய அங்க மலர் வாழ்ந்துட்டிருக்காடி”
கதறியபடியே மகளை அவர் அடிப்பதும் கேட்டது.
“சீ! இப்பவும் இவங்க மாறல பாரு” சிவகாமி முகம் சுளிக்க புவனேந்திரனுக்குள் ஆசுவாசப்பெருமூச்சு! அவன் மனதை உறுத்தியது ஒருவேளை மதுமதி கட்டாயத்தின் பெயரில் யாருடைய மிரட்டலுக்கும் பணிந்து போயிருப்பாளோ என்ற கேள்வி மட்டுமே!
அதற்கான விடை தெரிந்த ஆசுவாசம் அவனை நிம்மதிக்குள்ளாக்கியாது.
நடந்த அனைத்தையும் மகிழ்மாறனிடம் செய்தியாகத் தெரிவித்தும் விட்டான் மாலையில் வீட்டுக்கு வந்ததும்.
சிவகாமி மருமகளிடம் இனி மாணிக்கவேலு குடும்பத்தினரிடம் பேச்சு வைத்துக்கொள்ளாதே என்று அறிவுறுத்தியதோடு இன்னும் நிலவழகியின் மனதில் மலர்விழிக்கு நல்வாழ்க்கை அமைந்த பொறாமை இருக்கிறதென்பதையும் கூறிவிட்டார்.
மகளைக் காணாமல் தவிக்கிறார்களே என்ற பரிதாபம் பறந்து போனது அவளுக்கு.
கடுப்போடு தங்கள் அறைக்கு வந்தவள் கணவன் யாரிடமோ சிரித்தபடி பேசுவதைக் கேட்டதும் ‘அடேங்கப்பா’ என்று மனதுக்குள் யோசித்தவளாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
வீட்டுக்கு வந்ததும் முகம் கழுவி உடைமாற்ற வேண்டும் என்பது மகிழ்மாறனின் கட்டளை.
முகம் கழுவிவிட்டு வந்தவள் மாற்றுடையை வைத்துக்கொண்டு பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும் சேர்ந்து வீடு திரும்பினால், முதலில் உடை மாற்றிவிட்டு அறையிலிருந்து வெளியேறிவிடுவான் மகிழ்மாறன். இன்றோ இன்னும் அறைக்குள்ளே அமர்ந்திருக்கிறானே!
தவிப்போடு அவனைப் பார்ப்பதும் உடைமாற்றும் தடுப்பைப் பார்ப்பதுமாக இருந்தவளின் செவியில் அவனது பேச்சு விழுந்தது.
“இப்பவே லீவ் இல்ல ஸ்வேதா! பட் சீக்கிரம் லீவ் வரும். அப்ப கண்டிப்பா போவோம்”
இவ்வளவு நேரம் யாரிடம் பேசுகிறான் என்ற கடுப்பும் வேறு!
அவள் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி நிற்பதை அறிந்ததும் என்னவென்பது போல தலையுயர்த்தினான் மகிழ்மாறன்.
“அது… நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்”
“பண்ணு. நான் என்ன உன் கையைப் பிடிச்சுத் தடுக்குறேனா?” என்று கேட்டபடி சோஃபாவில் வாகாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான். அவள் உடைமாற்ற போகாமல் நிற்கவும் புருவம் சுருக்கினான்.
“என்ன?”
“நீங்க இருந்தா நான் எப்பிடி ட்ரஸ் சேஞ்ச் பண்ணுறது?” என்று அவள் கேட்கவும் சத்தமாகச் சிரித்துவிட்டான் மகிழ்மாறன்.
“இதுக்கே தயங்குற. உன்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போகனும்னு சொல்லுறா ஒருத்தி. காலக்கொடுமை”
“ஹனிமூனா?”
அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள் மலர்விழி.
“இதுக்கு இவ்ளோ ஷாக் ஆகவேண்டிய அவசியமில்ல. கல்யாணம் ஆச்சுனா ஹனிமூன் போறது ஒன்னும் புதுசில்லையே”
“ஆனா நாம எப்பிடி?”
அவள் திணறும்போதே எழுந்தவன் “ஏன்? நாம ஹனிமூன் போகக்கூடாதுனு சத்தியப் பிரமாணம் எடுத்துட்டுக் கல்யாணம் பண்ணுனோமா?” என்று கேட்டபடி அவளை நெருங்க
“அப்பிடி இல்ல! ஆனா நான் படிக்கிறேன்ல” என்றவள் நெருங்குபவனை எப்படி தடுப்பதெனத் தெரியாமல் விழித்து பின்னர் அவனது மார்பில் கைவைத்து நிறுத்திவிட்டாள்.
“இத்தூண்டு கையை என்னால விலக்க முடியாதுனு நினைக்குறியா”
“ம்ஹூம்” முட்டைக்கண்கள் அழகாய் விரிய அவள் சொல்லவும்
“லுக்! நானும் ரத்தமும் சதையும் உள்ள மனுசன். எனக்கும் ஆசாபாசம் இருக்கும்ல” என்று கேட்டான் அவன்.
“ம்ம்”
“அப்ப நம்ம ஹனிமூன் போகனும்னு நான் ஆசைப்படுறது தப்பில்லையே?”
“ஆனா,… நான்….””
“கல்யாணம் பண்ணுனோம்ல. கல்யாண வாழ்க்கைல இதெல்லாம் ஒரு பகுதி. புரியுதா?”
புரிகிறது என்று சொல்லும் முன்னரே அவளது கழுத்தில் இன்னும் தொங்கிக்கொண்டிருந்த ஐ.டி கார்டைக் கழற்றினான் மகிழ்மாறன்.
“வீட்டுக்கு வந்ததும் முதல்ல இதைக் கழட்டு. இல்லனா உன் கண்ணுக்கு நான் கரெஸ்பாண்டெண்டா மட்டும்தான் தெரிவேன். புருசனா பாத்தாதான் நான் சொல்லுறதோட அர்த்தம் உனக்குப் புரியும்”
தன்னை விழுங்குவது போல விரிந்த இமைகளினூடே தெரிந்த கண்ணின் கருமணியைப் பார்த்தபடி சொன்னவனின் விரல்கள் ஈரத்தால் மலர்விழியின் கன்னத்தில் ஒட்டியிருந்த கூந்தல் இழையைக் காதோரம் ஒதுக்கிவிட்டன.

பின் அவ்விரல்கள் மெல்லிய கோடாக அவளது கன்னத்தை வருடவும் விதிர்விதிர்த்த மலர்விழி பேசாமல் மலங்க மலங்க விழித்தாள். ஆனாலும் உள்ளுக்குள் சில்லென்ற உணர்வு எழுந்து அவளை அதற்குள் மூழ்கடித்தது.
மகிழ்மாறன் கன்னத்தை வருடுவதை நிறுத்திவிட்டுச் சிறு பிள்ளைகளைக் கொஞ்சுவது போல அதைக் கிள்ளி இழுத்தவன் “போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணு. இன்னொரு தடவை படிக்குறதைச் சாக்கா சொல்லி பொண்டாட்டி ரோல்ல இருந்து நீ விலகக்கூடாது” என்று சொல்ல
“சரி” என அவசரமாகத் தலையாட்டினாள் மலர்விழி.
“அப்ப பொண்டாட்டியா லெச்சணமா என் கூட ஹனிமூன் வரணும். இன்னும் கொஞ்சம் நாள்ல பூஜா ஹாலிடேஸ் வரும். அப்ப நாம ஹனிமூன் போறோம். ஹனிமூன், டூர் இல்ல. அர்த்தம் புரியுதுல்ல?”
கண்களில் ரசனை கொட்டி அவன் கேட்க அதற்கும் தலையாட்டல்தான்.
மனதுக்குள்ளோ “காதலை புல்ஷிட்னு சொல்லுறார். இப்பிடியும் பேசுறார். இந்த மனுசனை என்னால புரிஞ்சிக்கவே முடியல” என்று புலம்ப ஆரம்பித்தாள் மலர்விழி.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction