இன்னைக்குக் காலையில இருந்து ஒரே யோசனைதான். நான் ஏன் இப்படி இருக்கேன்? ஏன் இவ்வளவு அமைதியா, அப்பாவியா இருக்கேன்? சின்ன வயசுல இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சேர்ந்து பேசினா, நான் சும்மா கேட்டுக்கிட்டே இருப்பேன். ஏதாவது கருத்து சொல்லணும்னு தோணினாலும், வாயைத் திறந்து பேச யோசனையா இருக்கும். அப்புறம் பேசாமலே போயிடுவேன். அதனாலயே நிறைய விஷயங்கள்ல நான் ஒதுக்கப்பட்டு இருக்கேன். இந்தக் கஷ்டமெல்லாம் தாங்க முடியாமதான் நான் புத்தகங்களைச் சரணடைஞ்சேன். அதுல எனக்கு நிம்மதி கிடைக்குது. புத்தகங்களுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நான் பேசலைன்னாலும், புத்தகங்கள் என்னை ஏத்துக்கும்.
-விழியின் மொழி
காலையிலேயே பரபரப்போடு காணப்பட்டார்கள் குழலியும் சிகாமணியும். திருமணத்துக்குப் பிறகு மகள் முதல் முறையாக மறுவீடு வருகிறாள் அல்லவா! அவளோடு புகுந்த வீட்டார் அனைவருமே வருவதாக ஏற்பாடு.
அவர்கள் பக்கத்தில் திருமணம் நிச்சயமானதும் பெண் வீடு பார்க்க, மாப்பிள்ளை வீடு பார்க்க என ஆட்கள் போய் வருவதுண்டு. சம்பந்திகளின் வீடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கான முறை என வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் இரு குடும்பத்தாரும் இணக்கமாக இருப்பதற்காகப் பெரியவர்கள் யோசித்து வைத்த முறையே அது.
திடுதிடுப்பென மகிழ்மாறன் – மலர்விழி திருமணம் நடந்ததால் இந்த முறை எல்லாம் தவறிப் போயிருந்தது. அதை மறுவீடு செல்கையில் செய்துவிட்டால் திருப்தியாக இருக்கும் என்பது சிவகாமியின் எண்ணம்.
“நாங்க எல்லாரும் வர்றதால உங்களுக்கு ஒன்னும் சிரமம் இருக்காதே மதினி?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன இப்பிடி கேக்குறிங்க மதினி? எங்க வீடு உங்களுக்குச் சௌகரியப்படுமானுதான் நானும் மலர் அப்பாவும் யோசிச்சோம். மத்தபடி நீங்க எங்க வீட்டுக்கு வர்றதுல ரொம்ப சந்தோசம்”
“வசதி என்ன வசதி? அதை விடுங்க. உங்க வீட்டுல நீங்க தோட்டம் எல்லாம் போட்டிருக்கிங்களாம். தினமும் பூ பறிக்குறப்ப உங்க தோட்ட புராணம் தான் பாடுறா உங்க மக”
சிவகாமி சகஜமாகப் பேசியதால் குழலிக்குள் இருந்த தயக்கமும் அகன்றுவிட அவரும் முன்பு போல அளந்து பேசாமல் இயல்பாக அவரிடம் உரையாடினார்.
இரு சம்பந்திகளும் பேசி வைத்து ஏற்பாடு செய்த மறுவீடு இது!
மகளுக்குப் பிடித்த உணவு வகைகள், மருமகனுக்கு என்ன பிடிக்குமென சம்பந்தியம்மாளிடம் கேட்டு வைத்த உணவுகள், அவர்களது குடும்பத்தாருக்குச் சமையலில் எது ஆகும் எது ஆகாது, உப்பு சர்க்கரை அளவு என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார் குழலி.

சிகாமணி சும்மா இருக்காமல் மனைவிக்கு உதவியாகச் சின்ன சின்ன வேலைகளைச் செய்து கொடுத்தார்.
“கீரை வேண்டாம் குழலி! அதைப் பிறகு பறிச்சு வச்சிடுறேன். மலரும் மருமகனும் வீட்டுக்குக் கிளம்புறப்ப குடுத்து விடலாம்”
“சரிங்க”
இவர்கள் இங்கே பரபரப்புடன் காலையுணவைச் சமைத்துக் கொண்டிருக்க மலர்விழியோ அவளது புகுந்தவீட்டாருடன் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்தாள்.
“என் வாழ்க்கை எப்பிடி இருக்கப்போகுதோங்கிற தவிப்பு தாலி ஏறுன கணத்துல இருந்து என் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அந்த உறுத்தலைப் போக்கிட்டிங்க. அப்பிடியே புவன் மாமாக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டுங்க. எங்க குடும்பத்தால அவருக்கு நடந்த தலைகுனிவு, அவருக்கு நிறைய வேதனைய குடுத்திருக்கும். அதைப் போக்குறதுக்கான வழிய அவருக்குக் காட்டுங்க”
மனமுருகி அவள் வேண்டியது பலித்துவிடும் என்பது போல கோவில் மணியும் ஒலித்தது.
துளசியும் தீர்த்தமும் வாங்கிய பிறகு கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்கள். ஒரு ஓரமாகப் பிரசாத வினியோகம் நடந்து கொண்டிருந்தது.
சிவகாமியும் நரசிம்மனும் பிரசாதம் வாங்க போய்விட இரு சகோதரர்கள் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தார்கள்.
மலர்விழி இருவரையும் ‘வரவில்லையா?’ என்ற கேள்வியோடு பார்த்தாள்.
“நீ போம்மா. எங்களுக்குக் க்யூல நின்னு பிரசாதம் வாங்குறது எல்லாம் சின்ன வயசுல இருந்தே பிடிக்காது” என்றான் புவனேந்திரன்.
மலர்விழி இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்தவள் “இதுல என்ன இருக்கு? யாரா இருந்தாலும் கோவில்ல தலைகுனிஞ்சு, பணிவோட கடவுள் முன்னாடி கையேந்தி, தனக்கு வேணுங்கிறதை வேண்டிக்கனும்ங்கிறதை சிம்பாலிக்கா சொல்லுறதுதான் இந்த பிரசாத வினியோகத்துக்கான வரிசைனு எங்க ஆச்சி சொல்லுவாங்க” என்று அவள் சொல்ல

“நீ பேசவே மாட்றனு யோசிச்சது எவ்ளோ பெரிய தப்பு. பேசுனா அந்தக் காலத்து ஆச்சி மாதிரி பேசுற” என்று இடையிட்டது மகிழ்மாறனின் குரல்.
மலர்விழி அவன் தன்னை மூதாட்டிகளுடன் ஒப்பிடுவதால் வந்த கடுப்பை மறைத்தபடி “எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்” என்று முனகிவிட்டுப் பிரசாதம் வினியோகிப்பவர்களை நோக்கி சென்றுவிட்டாள்.
புவனேந்திரன் இளையவனின் முதுகில் விளையாட்டாக அடித்தான்.
“இப்பிடி கிண்டல் பண்ணுனா எங்க இருந்து அவ உன் கிட்ட ஜோவியலா பழகுறது? வா! போகலாம்” என்று அவனை அழைக்க
“எங்க?” என்றான் மகிழ்மாறன்.
“பிரசாதம் வாங்க. மலர் சொன்னது ஒரு வகைல உண்மைதானே? கோவிலுக்குள்ள வர்றப்ப நமக்குள்ள இருக்குற ‘நான் ரொம்ப பெரியவன்’ங்கிற நினைப்பைச் செருப்போட சேர்த்து வெளிய விட்டுட்டு வந்துடணும். நம்ம மூளையில சுமந்துக்கிட்டு வர்றதாலதான் பிரசாதத்துக்காக கையேந்தணுமாங்கிற கேள்வியே வருது. வாடா”
விளைவு, இரு சகோதரர்களும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்து கடைபிடித்த பிடிவாதத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு முதல் முறையாக வரிசையில் நின்று புளியோதரை வாங்கிக்கொண்டார்கள்.
சிவகாமிக்கு அதிர்ச்சியில் மயக்கம் வராதக் குறை! நரசிம்மனோ சிரித்துவிட்டார்.
“முரண்டு பிடிச்ச பசங்களுக்கு யாரோ பாடம் எடுத்திருக்காங்க சிவகாமி”
பிரசாதத்தைச் சாப்பிட்டுக் கை கழுவிவிட்டுக் காரிலேறியபோது சிவகாமியின் மொபைல் அலறியது. அழைத்தவர் நரசிம்மனின் ஒன்றுவிட்ட சகோதரி லோகநாயகி. பெருமாள்புரத்து அத்தை என்று முன்னர் விளிக்கப்பட்டவர் இவரே.
“சொல்லுங்க மதினி” என்ற சிவகாமியின் முகம் சடுதியில் மாறி களையிழந்து போனது.
அதைக் கவனித்த நரசிம்மன் அவரது தோளில் ஆறுதலாக அழுத்த, இந்த க்ஷண நேரச் சம்பவம் மகிழ்மாறனின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.
புவனேந்திரனிடம் கண் காட்டியவன் “ஏதோ தப்பா இருக்கு. கார்ல போறப்ப விசாரிச்சு வை” என்று சொன்னபடி தனது காரை நோக்கி விரைந்தான்.
காரில் ஏறியதும் மலர்விழியின் முகம் பூரிப்பிலிருந்ததைக் கண்டுகொண்டான். பிறந்தகத்துக்குப் போகிற மகிழ்ச்சி என்று எண்ணியவனின் இதழிலும் குறுஞ்சிரிப்பு துளிர்த்தது.
நதியூர் அவர்களை அன்போடு வரவேற்றது. அடிக்கடி சாலை மார்க்கத்தில் போகும்போது கடக்கும் ஊர்தான். ஆனால் இன்று ஏனோ மகிழ்மாறனுக்கு அந்த ஊரின் பச்சைவண்ணப் பெயர்ப்பலகை புதியதொரு உணர்வைக் கொடுத்தது.
மலர்விழியின் வீடு ஊருக்குள் இல்லாமல் சாலையோரமாக இருந்தது பெரும் வசதி. யாரும் அனாவசியமாக நின்று வேடிக்கை பார்க்கவில்லை.
அப்போதுதான் முதல் முறை அந்த வீட்டுக்கு வருகிறார்கள் மகிழ்மாறனின் குடும்பத்தினர். சிறிய காரை வீடு. அதன் உயரத்தைத் தாண்டி வளர்ந்து வீட்டின் முன்வாயில் வரை கிளை பரப்பி நின்ற வேம்பின் நிழலில் காரை நிறுத்தினார்கள் புவனேந்திரனும் மகிழ்மாறனும்.
கார்கள் வரும் சத்தத்திலேயே முன்வாயிலுக்கு ஓடி வந்துவிட்டார் சிகாமணி.
“சம்பந்தி குடும்பம் வந்தாச்சு. சீக்கிரம் ஆரத்தி கரைச்சுக் கொண்டு வா குழலி”
குழலி முகம் மலர ஆலம் கரைத்த தட்டுடன் வந்தவர் மகளுக்கும் மருமகனுக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வீட்டுக்கு அழைத்தார்.
“வாங்க மதினி. வாங்கண்ணா! வாங்க புவன் தம்பி”
குழலியும் சிகாமணியும் அன்போடு வரவேற்ற விதத்தில் வீட்டின் அளவெல்லாம் மனதில் பதியவேயில்லை அவர்களுக்கு.
நாற்காலிகள் போதவில்லை என்று தரையில் பாயை விரித்திருந்தார்கள்.
“இதுலயே உக்காருவோம். சோஃபா சேர்ல் உக்காந்து போரடிக்குது” என்று சொல்லி பாயில் அமர்ந்துகொண்டார்கள் நரசிம்மனும் சிவகாமியும்.
மாமியார் கொடுத்த காபியைக் கையில் வாங்கிக்கொண்டு தமையனோடு வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டான் மகிழ்மாறன்.
“என்ன பிரச்சனை? அம்மாக்குக் கால் பண்ணுனது யாரு?”
“பெருமாள்புரம் லோகா அத்தை. நீ அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போகலங்கிற வருத்தத்தைக் கொட்டிருக்காங்க.”
“நாம மலர் வீட்டுக்கு வர்றோம்னு தெரியும்தானே?”
“தெரியும்டா! யாரோ அரசல் புரசலா மலர் குடும்பத்தோட ஃபினான்சியல் கண்டிசன் பத்தி சொல்லிருக்காங்க. அங்கல்லாம் போய் எதுக்கு உங்க கௌரவத்தைக் குறைச்சிக்கிறிங்க அது இதுனு பேசிருக்காங்க லோகா அத்தை. அப்பாக்கும் அம்மாக்கும் இந்த மாதிரி பேசுனா பிடிக்காதுல்ல. அங்க போவிங்க, என் வீட்டுக்கு வரமாட்டிங்களானு பிரச்சனை பண்ணிருக்காங்க. ப்ச்! சொந்தக்காரங்கனாலே இப்பிடித்தான் போல”
சலித்துக்கொண்டான் புவனேந்திரன்.

“இப்ப என்ன வேணுமாம் அவங்களுக்கு?”
“சீர் செனத்தி செய்ய வசதியில்லாத சம்பந்திக்காக என் வீட்டுக்கு வர்றதை ஒதுக்கி வச்சிங்களா மதினு கேட்டு அம்மாவ நோகடிச்சிட்டாங்கடா. இதனால அவங்க பக்கத்து சொந்தக்காரங்க மத்தில பெரிய அவமானமாம். முதல்ல என் வீட்டுக்குத்தான் விருந்துக்கு வருவாங்கனு இவங்க தம்பட்டம் அடிச்சு வச்சிருக்காங்க. வரலனதும் எல்லாரும் போன் போட்டு விசாரிக்குறாங்களாம்”
மகிழ்மாறன் நெற்றியைக் கீறிக்கொண்டான். அந்நேரம் மலர்விழி அங்கே சிவகாமியுடன் வரவும் முகபாவனையை மாற்றிகொண்டான்.
“வந்ததும் தனியா ஒதுங்கிட்டிங்களா? என்ன பசங்களோ?” என்று கிண்டல் செய்த சிவகாமி மருமகளோடு மலர்ச்செடிகள் பக்கம் ஒதுங்கிவிட்டார்.
“இப்ப என்ன செய்யணும்னு எதிர்பாக்காங்க?”
“தெரியல. அடுத்த வாரம் வர்றோம்னு அம்மா சொல்லிருக்காங்க. அப்பவும் மனக்குறை அவங்களுக்கு. அம்மா ஏதோ சொல்லி சமாளிச்சாங்க”
சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே வந்து சேர்ந்தான் பவிதரன். அவனைப் பார்த்ததும் சங்கடமான மௌனத்தின் ஆதிக்கம் அங்கே.
“வாங்க” என்று பொதுப்படையாக வரவேற்றவன் புவனேந்திரனிடம் மட்டும் குற்றவுணர்ச்சியோடு கைகுலுக்கினான்.
புவனேந்திரன் அதைக் கண்டுகொள்ளாமல் சினேகமாக முறுவலித்தான்.
“மது பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” என்று விசாரித்தான்.
பவிதரனுக்கு அப்போது மதுமதி மீது வந்த ஆத்திரத்தைச் சொல்லி மாளாது.
இப்படி ஒருவரை இழந்துவிட்டாளே முட்டாள் என்று மானசீகமாகக் கடிந்தவன் “ஜாம்நகர்ல இருந்து அவ அகமதாபாத் போனதா நேத்து ஒரு இன்ஃபர்மேசன் கிடைச்சிருக்கு. விசாரிச்சிக்கிட்டிருக்காங்க. அப்புறம் அவளால நடந்த எல்லாத்துக்கும் ரொம்ப சாரி. இப்பிடி பண்ணுவானு கனவுல கூட நினைச்சுப் பாக்கல” என்று மன்னிப்பு கேட்டான் புவனேந்திரனிடம்.
மகிழ்மாறனுக்கு மதுமதி இப்படி ஊர் ஊராகப் போனதே அவளைத் தேடி வருபவர்களைக் குழப்புவதற்குதானோ என்ற சந்தேகம் வந்தது. அதைப் பவிதரனிடம் பகிரவும் செய்தான்.
“அவ மனசுல என்ன இருந்துச்சுனு சுத்தமா புரியல. அம்மாவும் அப்பாவும் இப்ப கொஞ்சம் தெளிஞ்சிருக்காங்க. இன்னைக்கு மலர் மறுவீட்டுக்கு வர்றதா சித்தப்பா சொன்னாங்க. அதனால நான் வந்தேன்”
இவர்கள் இங்கே உரையாடிக்கொண்டிருக்க மாமியாரும் மருமகளும் மருதாணி இலைகளைப் பறித்து முடித்திருந்தார்கள்.
“இன்னைக்குச் சாயங்காலம் போனதும் வச்சுடலாமா அத்தை?”
“இங்க இருந்து நம்ம வீட்டுக்குப் போகப்போறது இல்லடி பொண்ணே! என் நாத்தனார் பெருமாள்புரத்துல இருக்காங்க. இன்னைக்கு அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்றதா சொல்லிருந்தேன். சம்பந்தியம்மா மறுவீடு பத்தி சொன்னதால ப்ளானை மாத்துனேன். அதுல அவங்களுக்குக் கொஞ்சம் வருத்தம். நேரா பெருமாள்புரம் போய் அவங்க வீட்டுல தலை காட்டிட்டு அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை அங்க விருந்துக்கு வர்றோம்னு சொல்லிட்டு அப்புறமா வீட்டுக்குப் போவோம். நேரமாகிடும். அதனால நைட் தூங்குறதுக்கு முன்னாடி வச்சிட்டு அப்புறமா தூங்கு”

“சரி அத்தை” என்ற மலர்விழிக்குப் பெருமாள்புரம் பெண்மணியின் வருத்தம் மனதுக்குள் உறுத்தலாக இருந்தது.
ஆனால் அன்னை சமைத்து வைத்த உணவின் நறுமணத்தில் யாவும் மறந்து போயின.
மறுவீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்குச் சொதி விருந்து வைப்பது அவர்களின் பழக்கம். அதனால் சொதிக்கு ‘மாப்பிள்ளை சொதி’ என்ற பெயரும் உண்டு.
தேங்காய் பாலின் தித்திப்பு, பச்சைமிளகாயின் காரம், பயத்தம்பருப்பின் கொழுக்கொழுப்பில் அமிர்தமாய் ருசித்தது சொதி. கூடவே இஞ்சி பச்சடி.
விருந்துண்டவர்களுக்கு அப்படியொரு ஆத்ம திருப்தி.
“என் கை பக்குவத்துக்குச் சொதி நல்லாவே வர்றதில்ல மதினி.” என்ற சிவகாமியிடம் தான் சொதி வைக்கும் முறை பற்றி விளக்கினார் குழலி.
உரையாடலும் சிரிப்புமாக நேரம் கழிந்தது. நரசிம்மனோ சிவகாமியோ நாங்கள் பரம்பரை பணக்காரர்கள் என்ற அலட்டலின்றி நடந்துகொண்ட விதம் குழலியையும் சிகாமணியையும் மனநிம்மதியில் ஆழ்ந்தியிருந்தது.
அளந்து பேசினாலும், அலட்சியம் காட்டாமல் மரியாதையும் அன்புமாகப் பேசிய மருமகனும், அவனது சகோதரனும் இன்னொரு பக்கம் அவர்களை சொல்லவொண்ணா மகிழ்ச்சியில் தத்தளிக்க வைத்தார்கள்.
அவர்கள் விடைபெறும் முன்னர் தங்க ப்ரேஸ்லேட் ஒன்றை மகிழ்மாறனின் கரத்தில் மாட்டிவிட்டான் பவிதரன்.
“எதுக்கு இதெல்லாம்?” என்று மறுக்கப் போனவனிடம்
“மச்சான் முறைக்கு நான் செய்யவேண்டியது இது. வேண்டாம்னு சொல்லிடாதிங்க” என்று பவிதரன் சொல்ல, மகிழ்மாறன் அதன் பின்னர் மறுக்கவில்லை.
“உங்க வீட்டுக்கு வந்ததுல ரொம்ப சந்தோசம் சம்பந்தி. ஆழ்வார்திருநகரி போறப்ப எல்லாம் நான் வருவேன். உங்க வீட்டு மருதாணிக்காக!” என்று சொல்லி விடைபெற்றார் சிவகாமி.
கிளம்பும் முன்னர் ஈஸ்வரியும் வந்துவிட்டாள். மலர்விழியிடம் காதில் ஏதோ கிசுகிசுத்தவள் அவள் அசட்டையாகத் தோளைக் குலுக்கவும் “நம்புடி! நான் சொல்லுற மாதிரி நடக்கும்” என்று சொல்லி அவளை வழியனுப்பி வைத்தாள்.
மகிழ்மாறன் காரிலேறியதும் “மலர் கிட்ட ஒரு விசயம் சொல்லிருக்கேன் கரெஸ் சார். பாத்துப் பண்ணுங்க” என்றாள்.
அவனோ “கரெஸ் சாரா?” என்று அதட்ட
“பிரின்சிபலை பிரின்சினு சொல்லுற மாதிரி கரேஸ்பாண்டெண்டை கரெஸ்னு செல்லமா சொல்லுவோம் சார். தப்பா நினைச்சுக்காதிங்க” என்று சிரித்துச் சமாளித்து அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
கார்கள் இரண்டும் கிளம்பிய பிறகு “அத்தை எனக்கும் மருதாணி வேணும், பறிச்சு வை” என்று குழலியிடம் அவள் உரிமையாய்ச் சொல்ல
“ஏன் உன் கையை வாடகைக்கு விட்டுட்டு வந்திருக்கியா? சித்திக்கு இன்னைக்கு முழுக்க வேலை அதிகம். நீயே போய் பறிச்சுக்க” என அதட்டினான் பவிதரன்.
ஈஸ்வரியின் முகம் அஷ்டகோணலானது.
“நீங்க ஒன்னும் எனக்கு ஆர்டர் போடவேண்டாம். எங்கத்தைய நான் என்ன வேணும்னாலும் வேலை ஏவுவேன். உங்க சோலிய பாத்துக்கிட்டுப் போங்க” என்று அலட்சியமாகச் பதில் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.
பவிதரன் கடுப்பில் பற்களைக் கடிக்க “விடுப்பா சின்னப்புள்ளை! மனசுல வச்சுக்காம பேசும்” என்றார் சிகாமணி.
அதே நேரம் காரில் செல்லும்போது மகிழ்மாறனின் மனம் சகோதரன் சொன்னதை அசை போட்டுக்கொண்டிருந்தது.
பெருமாள்புரம் அத்தை தனது மனைவியின் வீட்டைப் பற்றி குறைவாகப் பேசியிருக்கிறார். கட்டாயம் அவரது வீட்டுக்குப் போயே ஆகவேண்டுமா என்ற கேள்வி அவனுக்குள்!
மலர்விழிக்குள் வேறு விதமானத் தவிப்பு. வீட்டுக்கு மருமகள் வந்ததும் மற்ற உறவுகளை ஓரங்கட்டுவதாக அந்தப் பெண்மணி எண்ணிவிட்டால்? அதன் காரணமாக உறவுகளுக்குள் கசப்பு வளர்ந்தால்?
தனது வருகையால் இதெல்லாம் நடக்கிறது என்ற பெயர் வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு.
ஒருவழியாக பெருமாள்புரத்தில் இருக்கும் லோகநாயகியின் வீட்டுக்கு வந்தும் சேர்ந்தார்கள்.
வரவேற்கும்போதே மலர்விழியை அவர் பார்த்த விதத்தில் அவ்வளவு மரியாதை இல்லை!
“வா!” என்று சொன்னதோடு சரி! அவளைக் கண்டுகொள்ளவில்லை.
“நீங்க எல்லாம் இங்க வருவிங்கனு இந்த வாரம் முழுக்க செஞ்ச ஏற்பாடு எல்லாம் வீண்” என்று பிலாக்கணம் வைத்தவர் வேலைக்காரப்பெண்ணிடம் பழச்சாறு எடுத்து வரச் சொன்னார்.
“மறுவீட்டு விருந்து நல்லபடி முடிஞ்சுதா மதினி?” என்று விசாரித்தார்.
நரசிம்மனும் இரு மகன்களும் நடப்பதை வேடிக்கை பார்க்க மலர்விழிக்கோ முள்படுக்கையில் இருப்பது போல அவஸ்தை.
லோகநாயகியின் பார்வையில் தெரிந்த அலட்சியம் அவளுக்கு அசௌகரியத்தைக் கொடுத்தது.
“ஹூம்! எல்லாம் அவசரகதில முடிஞ்சுதே, விருந்தாச்சும் முறைப்படி வைக்கலாம்னு நினைச்சேன்ணே! அதுவும் இப்பிடி ஆகிடுச்சு. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போறிங்களா? உங்க சம்பந்தி வீட்டுல குறுக்கை சாய்க்கக் கூட இடம் இருந்திருக்காது. மாலா திருச்செந்தூர் போனால்ல. இவங்க வீட்டை போட்டோ எடுத்துட்டு வந்தா. வெளிப்பக்கம் பாக்கவே சின்னதா தெரிஞ்சுது. ஏன்மா ரெண்டு ரூம் இருக்குமா வீட்டுல?” என்று விசாரித்தார்.
இந்த இடத்தில் மலர்விழியின் முகம் இருண்டு போனது. அவர்கள் செல்வ வளத்தில் குறைந்தவர்கள் என்பதால் அவர்கள் பக்கத்து உறவுகளே எள்ளி நகையாடுவார்கள். இந்தப் பெண்மணி மட்டும் விதிவிலக்காகவா இருப்பார் என வருத்தத்துடன் எண்ணிக்கொண்டாள்.
“மூனு ரூம் இருக்கும்ங்க”
அமைதியாகச் சொன்னவளைப் பார்வையால் அலசினார் அவர்.
“இவங்க வீட்டுல என்ன போட்டாங்க? கழுத்துல கயிறு மட்டும்தான் இருக்கு. கையில, காதுல எல்லாம் இருக்குறது தங்கம் தானா? இவ்ளோ மெல்லிசா இருக்கே”
மலர்விழி பதில் சொல்லும் முன்னர் மகிழ்மாறன் குடித்துக்கொண்டிருந்த பழச்சாறை வைத்துவிட்டு எழுந்தான்.
“உனக்கு ஏதோ புக் வாங்கணும்னு சொன்னியே! கிளம்பு” என்று மலர்விழியை எழும்பச் சொன்னான்.
“என்னப்பா இப்பதானே வந்திங்க?” என்ற லோகநாயகியிடம்
“வந்து ஜூஸ் குடியாச்சுல்ல. இதுலயே மனசு நிறைஞ்சிடுச்சு” என்றவன் மலர்விழி இன்னும் அமர்ந்திருக்கவும் “உன் கிட்ட தான் சொன்னேன் கிளம்பலாம்னு. இன்னும் உக்காந்திருந்தா என்ன அர்த்தம்?” என்று அவளிடம் காட்டமாகப் பேசினான்.
அங்கிருந்த அனைவரோடு சேர்ந்து மலர்விழியும் திகைத்துப் போனாள் அவனது திடீர் காட்டமானப் பேச்சில்! இருப்பினும் அவனது பேச்சைத் தட்டாதவளாக எழுந்துகொண்டாள்.
“வர்றேன்ங்க” என்று லோகநாயகியிடம் விடைபெற்றவளின் கையைப் பிடித்து விறுவிறுவென வெளியே இழுத்துச் சென்றவன் கார்க்கதவைத் திறந்துவிட்டான்.
மலர்விழி அமைதியாக அமரவும் அவனும் காரினுள் அமர்ந்து கிளப்பினான்.
சில நொடிகள் அமைதியாகக் கழிந்தன. கார் என்னவோ குலவணிகர்புரத்தை நோக்கிதான் விரைந்து சென்றுகொண்டிருந்தது.
மலர்விழி சிறிது நேரம் கழித்து “நான் எப்ப புக் வேணும்னு சொன்னேன்?” என்று வினவ
“நான் உன்னைப் புக் வாங்க அழைச்சிட்டு வரல” என்றான் இறுக்கமான வதனத்தோடு.
“அப்ப எதுக்கு இவ்ளோ அவசரமா கிளம்பணும்?”
“அங்க ஏன் நாம் இருக்கணும்? உனக்குக் காது கேக்கும்தானே? அவங்க அலட்சியமா பேசுனது உன்னையும் உன் குடும்பத்தையும். ஒரு வார்த்தை ‘என் குடும்பத்தைப் பத்தி இப்பிடி குறைவா பேசாதிங்கனு’ சொல்லத் தெரியல. வார்த்தை வேண்டாம். உன் கோவத்தை முகத்துல கூட காட்டல. என்ன பொண்ணு நீ?”

மகிழ்மாறனின் பேச்சில் சலிப்பும் கோபமும் தெரிந்தது. இதே போல யாரும் அவனிடம் அவனது குடும்பத்தையும் பெற்றோரையும் குறைத்துப் பேசியிருந்தால் அவர்களை விட்டு வைத்திருக்கமாட்டான் அவன். உண்டு இல்லையெனப் பண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அப்படி ஒரு மானஸ்தனுக்கு இப்படியொரு மனைவி! கடுப்பை அடக்க வழி தெரியவில்லை அவனுக்கு.
மலர்விழிக்கு லோகநாயகியின் வார்த்தைகளை விட மகிழ்மாறனின் கோபமே அதிக வலியைக் கொடுத்தது.
“அவங்க… அவங்க புதுசா ஒன்னும் பேசல. இதெல்லாம் நாங்க கேட்டுப் பழகுன வார்த்தைகள்தான்”
“முதல் தடவை கேட்டப்பவே, சொன்னவங்களை நறுக்குனு நாலு வார்த்தை பேசிருந்தா ஏன் பழக்கப்படுத்திக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கப் போகுது?”
இதற்கு என்ன பதில் சொல்வது? தந்தையும் தாயும் எவ்வழியோ அவ்வழியே நானும் என வளர்ந்துவிட்டாள்! கிட்டத்தட்ட அது அவளது சுபாவம்.
முகத்தை முறிப்பதுபோல பேச அவளுக்குத் தெரியாது. கணவனின் குணத்துக்கும் தனது குணத்துக்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லை என்பது புரிந்தது இப்போது. அவனது சலிப்பும் கோபமும் அவனும் அப்படித்தான் எண்ணுகிறானோ என்ற ஐயத்தை உண்டு பண்ணியது அவளுக்குள்.
பொருளாதார ரீதியான வேறுபாட்டை விட இந்தக் குணரீதியான வேறுபாடு பெரிய பிரச்சனையாகத் தோன்றியது அந்நேரத்தில். அமைதியாகிப் போனாள் மலர்விழி! மகிழ்மாறன் தன்னைப் பொருத்தமற்றவள் என்று நினைக்கிறான் என்ற எண்ணம் அவளுக்குள் விதையாய்த் தூவப்பட்டது!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction