“உறவுகள்லயே திருமணவுறவை விட அழகான, ஆழமான, கவர்ச்சியான உறவு வேற எதுவும் கிடையாதாம்… ஆனா அதை நம்மளால மட்டும் தீர்மானிக்க முடியாதுல்ல… நம்ம தலையெழுத்துல கடவுள் கிறுக்கி வச்ச ஒருத்தனோ ஒருத்தியோ நம்ம கூட சேர்ந்து தீர்மானிக்க வேண்டிய விசயம் அது… நல்ல திருமணவுறவுக்கு அதுல இணையுற ரெண்டு பேரோட இணக்கமான மனநிலை ரொம்ப முக்கியம்… அதை இங்கிலீஸ்ல என்ன சொல்லுவாங்க? ஹான் Compatibility, அது இல்லனா எந்த திருமணவுறவும் அழகா, ஆழமா, கவர்ச்சிகரமா மாறாது”
-ஆனந்தி
பி.பி.எல் திருமண மண்டபம், பாளையங்கோட்டை…
“எல்.ஐ.சி கிட்டவா நிக்கிங்க? அங்க வ.உ.சி கிரவுண்டு பக்கத்துல இருந்து நேர் ரோடு போகுதா, அதுல அப்பிடியே நடந்து வாங்க… உள்ள வந்தா முதல் கட்ல வலதுபக்கம் மூனாவது பில்டிங் தான் மண்டபம்… ஆமா… பேர் போட்டிருப்பாங்க… சரி சரி… வந்துட்டு என் போனுக்குக் கூப்பிடுங்க”
மணமேடையில் ஐயர் எதையோ கேட்க அதை காதில் போட்டுக்கொள்ளாது மொபைலில் யாருக்கோ திருமண மண்டபத்துக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தார் சாந்தி, மணமகனின் தாயார்.
“இதுல கொஞ்சம் புஷ்பத்தை வைக்க சொல்லுங்கோ”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆயிரமாவது முறை கத்திவிட்டார் ஐயர். எப்படியோ சாந்தியின் காதில் விழுந்துவிட்டது.
“பூ தானே?” என்று கேட்டவர் “ஏ அனு” என்று பெருங்குரலெடுத்து கத்த மணமேடைக்கு பாவாடை தாவணி சரசரக்க வந்து நின்றாள் ஒரு இளம்பெண். அவள் அனு, முழுப்பெயர் அனுஷியா. மணமகனின் தங்கை.
“என்னம்மா?”
“பொண்ணு ரூம்ல பூ வச்சிருந்தேன்… அதை எடுத்துட்டு வந்து குடு”
அவளோடு அவரும் சென்றுவிட மணமேடையில் அமர்ந்திருந்த மணப்பெண்ணானவள் அங்கே பரவிய ஹோமகுண்ட புகையில் இரும ஆரம்பித்தாள்.
“இதுவுமா என்னைச் சோதிக்கணும்? எனக்கு மட்டும் இருமல் வருது… இந்த நாக்குப்பூச்சி கல்லு மாதிரி உக்காந்திருக்கான்… க்கும்… இவனுக்கு எப்பிடி இருமல் வரும்? இவன் தான் ரஜினிகாந்த் மாதிரி சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைலா பிடிப்பானே… நிகோடினை தாங்குன நுரையீரலை ஹோமப்புகை என்ன பண்ணப்போகுது?”
மனதிற்குள் எல்லாம் சொல்லவில்லை அவள். அருகில் இருப்பவனுக்குக் கேட்கும் குரலில் அதே நேரம் ஐயருக்குக் கேட்காமல் முணுமுணுத்தாள்.
அவளது முணுமுணுப்பு அவனது செவியில் விழுந்ததன் அறிகுறியாக பக்கவாட்டுப்பார்வையில் அவன் அவளது புறம் திரும்புவது தெரிந்தது.
வெறும் பார்வை மட்டும் தான். வாயைத் திறக்க மாட்டான். எப்படி திறப்பான்? திறக்கும் தைரியம் அவனுக்கு எப்படி வரும்?
ஆனால் அவனுக்குத் தைரியம் வந்துவிட்டது போல.
“ஆனந்தி”
தனது பெயரை அவன் உச்சரித்ததும் ஏதோ கெட்டவார்த்தை சொல்லி அழைத்ததை போல சீற்றமாக முறைத்தாள் மணப்பெண் ஆனந்தி.
அவளது முறைப்பில் அவனது தைரியம் மீண்டும் அந்தர்த்தனம் ஆகிவிட கப்சிப்பானான் மணமகன்.
ஆனந்திக்கு இப்போது அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. சரியாக சவரம் செய்யாத தாடிக்குள்ளும் மீசைக்குள்ளும் புதைந்திருக்கும் முகத்தில் இழையோடிய சோகம் சொல்லாமல் சொன்னது அவனுக்கும் இத்திருமணத்தால் ஒன்றும் சந்தோசமில்லை என்று. பின்னர் ஏன் இவன் மறுக்கவில்லை?
ஊர் முன்னே எனக்கும் பெண் கிடைத்துவிட்டது என மார் தட்டிக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இத்திருமணத்தைக் கருதிவிட்டானோ? ஊர் முன்னே மார் தட்டிக்கொள்ளவா? அல்லது அந்த சுப்ரஜாவிடமா?

ஆனந்திக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அப்போது அவளது தோளில் அழுத்தமாக ஒரு கரம் படிந்தது. கூடவே செவியில் ஒரு குரல் ஒலித்தது.
“கல்யாணப்பொண்ணா முகத்துல சந்தோசத்தோட இரு ஆனந்தி… அகிலன் உனக்குத் தெரியாத ஆளா? சின்ன வயசுல இருந்து ஒன்னா ஓடி பிடிச்சு விளையாடுனவன் தானே? நீங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கடவுளே நினைச்சுட்டார்… அதான் உனக்கு ஏற்பாடு பண்ணுன கல்யாணமும் நின்னுடுச்சு… அவனுக்கு ஏற்பாடு பண்ணுன கல்யாணமும் நின்னுடுச்சு”
சொன்னது வேறு யாருமில்லை. ஆனந்தியின் அன்னை மங்கை. அவரை உஷ்ணமாக முறைத்தாள் ஆனந்தி. அவரது கண்கள் கலங்கவும் உஷ்ணத்தைக் குறைத்து
“சும்மா கண்ணைக் கசக்காத… அதான் எல்லாருமா பேசி வச்சு என்னை இங்க உக்கார வச்சிட்டிங்கல்ல… இப்ப எதுக்கு அழுற? கண்ணைத் துடை… உன் புள்ள வர்றான்… அப்புறம் இதுக்கும் அவன் என்னைத் தான் திட்டுவான்” என்றாள்.
அதற்குள் “சாந்தி அத்தை எங்க போனாங்கம்மா? அவங்க அக்கா குடும்பம் வந்தாச்சு… அத்தைய தேடுறாங்க” என்றான் மங்கையின் புதல்வனும் ஆனந்தியின் அண்ணனுமான சரவணன்.
மங்கை கண்களைத் துடைக்கவும் அவனது பார்வை ஆனந்தியைக் குற்றம் சாட்டியது. அவள் அவனைக் கவனித்தால் தானே!
அதற்குள் சாந்தியே மேடைக்கு வந்துவிட விவரத்தைக் கூறி அவரை அழைத்துச் சென்றுவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் தங்கத்தை ஆடையாக உடுத்தியவளாக ஒரு பெண் மணமேடைக்கு வந்தாள். வந்தவள் ஆனந்தியை அளவிடும் பார்வை பார்த்துவிட்டு மணமகன் அகிலனின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்தாள்.
“என்னடே தாடிய கூட ஷேவ் பண்ணாம மணக்கோலத்துல உக்காந்திருக்க? சுப்ரஜாவ மறக்க முடியலையோ?”
அவள் கூறிய ரசக்குறைவான நகைச்சுவைக்கு அவளே கெக்கபிக்கவென நகைத்தாள்.
மணமகனான அகிலன் அவளைப் பார்த்த பார்வையில் அமைதியானாள்.
“கோச்சுக்காதடே… உன் கல்யாணத்துக்கு நீ பட்டுப்புடவை எடுத்துக் குடுத்து கூப்பிட்டல்ல, அதான் அக்கா வந்துட்டேன்… ஹூம்! சுப்ரஜாவுக்கு மூனாவது முடிச்சு போடணும்னு நினைச்சு காத்திருந்தேன்… ஆனா பாரேன் நம்ம ஆனந்தியே உனக்குப் பொண்டாட்டி ஆகப்போறா”
மீண்டும் ஒரு அசட்டுச்சிரிப்பு. அச்சிரிப்புக்கு ஆனந்தி அகிலன் இருவரிடமும் பதிலடி இல்லையெனவும் மணமேடையில் ஜம்பமாக நின்று கொண்டாள் அவள். அகிலனின் பெரியம்மா மகள். பெயர் அன்னபூரணி.
மேடையில் நெருங்கிய சொந்தங்கள் சூழ்ந்துகொள்ள அனுஷியா அடிக்கடி ஆனந்தியின் நெற்றிச்சுட்டியைச் சரி செய்து விட்டாள். மணமகனின் தங்கை என்ற பெருமை!
“எல்லாரும் மணமேடைக்கு வந்தாச்சா? மாங்கல்யத்தை கொண்டு போய் ஆசிர்வாதம் வாங்கிண்டு வாங்கோ” என ஐயர் அனுஷியாவிடம் மாங்கல்யமும் அட்சதையும் வீற்றிருந்த தட்டைக் கொடுக்க அவளும் ஆர்வத்தோடு கீழே அமர்ந்திருந்த உறவுக்காரர்களிடம் எடுத்துச் சென்றாள்.
ஆனந்தி கண்களை மூடிக்கொண்டாள். இனி ஆண்டவனே நினைத்தாலும் இத்திருமணம் நடக்கும். அப்போது அவளது தோளில் அகிலனின் புஜம் உரச தீச்சுட்டாற்போல கண் விழித்தாள்.
அவனை முறைக்க அகிலனோ மாலையைச் சரி செய்தபடியே “எனக்கு வேற வழி தெரியல ஆனந்தி… மாமா என் கையை பிடிச்சு கெஞ்சுனார்… எங்கம்மா கல்யாணத்துக்குச் சம்மதிக்கலனா தூக்கு மாட்டிக்குவேன்னு மிரட்டிச்சு” என்றான்.
பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனாலும் அவளது மனம் ஆறவில்லை.
ஆனந்திக்கு உள்ளுக்குள் இருக்கும் குமுறலை கொட்ட வடிகால் தேவை. தானாக வந்து வாயைக் கொடுத்து அவளிடம் சிக்கிவிட்டான் அகிலன்.
ஆனால் அவள் பதிலுக்குச் சீற நேரம் கொடுப்பதற்கு கடவுளுக்கே விருப்பமில்லை போல. மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டுவந்து ஐயரிடம் நீட்டினாள் அனுஷியா.
ஐயரும் ஏதோ மந்திரம் சொன்னபடி அதை எடுத்தவர் அகிலனிடம் நீட்டினார்.
அவன் எவ்வித தயக்கமுமின்றி எந்திரம் போல அதை வாங்கினான்.
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
ஆனந்தியின் மீது அட்சதையோடு மலர்கள் தூவப்பட்டது.
“தாலியை நெஞ்சுக்கு நேரா பிடிச்சிக்க” என யாரோ பின்னிருந்து கூறினார்கள்.
அனிச்சையாக அவள் மாங்கல்யத்தை மார்பு கூட்டுக்கு நடுவே பிடித்துக்கொள்ளவும் அகிலன் அவனது கடமையை முடித்திருந்தான்.
பொன்னில் செய்யப்பட்ட வினாயகரையும் இரு நட்சத்திர வடிவ முகடுகளையும் சேர்த்த மாங்கல்யத்தைத் தன்னகத்தே கொண்ட அந்த மஞ்சள் சரடு தான் இனி அகிலனையும் ஆனந்தியையும் பிணைத்து வைக்கப் போகிறது.
ஆனந்திக்கு அதில் நெஞ்சில் மோதும் போதே சொல்லவொண்ணா பாரம் அங்கே அமர்ந்தது போன்ற உணர்வு.
மணமகனின் பெற்றோரிடம் ஆசி வாங்கும் போது அகிலனின் தந்தை ஆவுடையப்பன் ஆனந்தியிடம் இருகரம் கூப்பி நன்றி கூறினார்.
“என் குடும்ப மானத்தை காப்பாத்திட்ட தங்கம்”
சிறுவயதிலிருந்தே அவளை அப்படி தான் அழைப்பார். அவரருகே நின்று கொண்டிருந்த சாந்தி வாயைத் திறந்து நன்றியுரைக்கவில்லை., ஆனால் அவரது மனமும் ஆனந்தியிடம் நன்றிக்கடன் பட்டுவிட்டது.
“உனக்குனு ஒருத்தி வந்துட்டா… இனியாச்சும் பொறுப்பா இருந்து பிழைக்கப் பாரு அகில்… பழசை எல்லாம் தூக்கிப் போட்டுடணும்” என மகனுக்கு அறிவுரை வழங்கி ஆசி கொடுத்தார் அந்த அன்னை.
அடுத்து ஆனந்தியின் பெற்றோரிடம் ஆசி வாங்க வேண்டும்.
இருவரும் சென்று நிற்கவும் மங்கை வந்து நின்றார். ஆனந்தியின் தந்தை ராஜகோபாலனை அவரது மைந்தன் சரவணன் சக்கர நாற்காலியில் கொண்டு வந்து நிறுத்தினான்.
தந்தையைப் பார்த்ததும் ஆனந்திக்கு அவ்வளவு நேரம் இருந்த கோபமும் இறுக்கமும் உடைந்து கண்கள் கலங்கியது.
“ப்பா!” குரல் தழுதழுக்க முழங்காலிட்டு அமர்ந்தாள்.
அவளுடைய சேலையோடு பிணைக்கப்பட்ட அகிலனின் அங்கவஸ்திரம் இழுக்கப்பட்டதை கவனிக்கவில்லை ஆனந்தி.
“அழக்கூடாது பொன்னுகுட்டி… அகிலன் என்ன வேத்து மனுசனா?” என்றார் அவர்.
சரவணன் அடிக்குரலில் “எல்லாரும் பாக்குறாங்க ஆனந்தி” என்க
“சும்மா என்னை மிரட்டாத… என்னை இவன் கூட அனுப்பி வச்சுட்டு நீ உன் பொண்டாட்டி பின்னாடி போயிடுவ… அப்புறம் அம்மாவையும் அப்பாவையும் யார் பாத்துப்பாங்க?” என வெடித்தாள் ஆனந்தி.
அதற்கு பதில் வரவில்லை. ராஜகோபாலன் கவலையோடு அகிலனை ஏறிட்டார்.
“மாப்பிள்ளை…” என அவர் தயங்க
“என்ன புதுசா மாப்பிள்ளை அது இதுனு? நான் எப்பவும் உங்க அகில் தான் மாமா… புது உறவுக்காக பழசை மறக்க முடியாதுல்ல” என்றான் அகிலன்.
அது தனக்கு வைக்கப்படும் குட்டு என ஆனந்தி சந்தேகித்தாள். ஆனால் அகிலனோ ராஜகோபாலனை தேற்றிக்கொண்டிருந்தான்.
அடுத்து நடந்த அனைத்தையும் நாடகம் போல வேடிக்கை மட்டும் தான் பார்த்தாள் ஆனந்தி.
சடங்கு சம்பிரதாயம் என்றார்கள். போய் அமர்ந்து அனைத்தையும் அவனோடு செய்து முடித்தாள். மோதிரம் தேடுதல், அப்பளம் உடைத்தல் என சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகள் முடிவடைந்தது.
அடுத்து சட்டரசம். மாப்பிள்ளை, அவரது சகலை, மைத்துனர் என மூவர் அமர வேண்டும். அவர்களுக்கு புதுமணப்பெண் பாயாசத்துடன் வாழைப்பழத்தைச் சர்க்கரை கலந்து பரிமாறவேண்டும். அதையும் செய்தாள் ஆனந்தி.
அடுத்து அவர்கள் சாப்பிட்ட இலையில் உள்ள மிச்சத்தை அவரவர் மனைவியரைச் சாப்பிடச் சொன்னார்கள்.
அவளைத் தவிர மற்ற இருவரும் எவ்வித அசூயையுமின்றி தங்களது கணவன்மார் மிச்சம் வைத்த பாயாசம் வாழைப்பழ சர்க்கரை கலவையைச் சாப்பிட்டு முடித்தனர்.
“என்ன புதுப்பொண்ணு தொட்டுக் கூட பாக்க மாட்டேங்குது?”
யாரோ கூறி சிரிக்க ஆனந்திக்கு சுர்ரென கோபம் வந்துவிட்டது.
“அடுத்தவங்க எச்சிலை சாப்பிடுற பழக்கம் எனக்கு இல்ல”

சொல்லிவிட்டு அகிலனை அவள் பார்த்த பார்வையில் அவன் பஸ்பமாகாதது அவளது தாலி பாக்கியம் தான்.
மங்கை கண்டனப்பார்வை பார்க்க சாந்தியோ “அவளுக்குப் பிடிக்கலனா விடுங்க… புருசன் பொண்டாட்டிக்குள்ள அன்னியோன்யம் வந்தா இந்த எச்சில் அருவருப்புலாம் காணாம போயிடும்” என்றார்.
அடுத்தடுத்து ஒவ்வொரு நிகழ்வாக நடந்தேறியது
இறுதியாக பிள்ளையை மாற்றுவது.
பித்தளையில் செய்யப்பட்ட குழந்தை உருவத்தை பட்டுத்துணியில் சுற்றி மணப்பெண்ணின் மடியில் வைப்பார்கள். அருகே மணமகனும் அமர்ந்திருப்பான்.
திருமணவுறவின் முக்கியக்கொள்கையே அடுத்த சந்ததியை உருவாக்குவது என்பதை சொல்லாமல் சொல்லும் அச்சடங்கு.
“இப்ப இது ஒன்னு தான் குறைச்சல்?” என்று முணுமுணுத்தபடி அதையும் அகிலனோடு செய்தவளுக்கு மாலை வரவேற்பிலும் கவனமில்லை.
அனுஷியா அழைத்து வந்த அழகுக்கலை நிபுணர் செய்த அலங்காரத்தில் பதுமையாய் நின்றாளேயொழிய பேசவில்லை சிரிக்கவில்லை. அசையக்கூட இல்லை.
“ஒருநாள் தான் மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருக்கோம்… இதுக்கே வாடகை மட்டும் நாப்பத்தஞ்சாயிரம் ரூவா… நமக்குக் கட்டுப்படி ஆகாது மதினி”
சாந்தி யாரிடமோ கூறிக்கொண்டிருந்தார்.
சொன்னது போலவே வரவேற்பு முடிந்ததும் சாப்பிட்ட பிறகு மணமக்களை மணமகனின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல கார் வந்து நின்றது.
சரவணன் ஏற்பாடு செய்திருந்தான் போல.
ஓட்டுனரோடு அவனும் அமர கார் பாளையங்கோட்டை முருகப்பெருமாள் தெருவை நோக்கி விரைந்தது.
அகிலனின் வீட்டின் முன்னே கார் நிற்க மணமக்கள் இறங்கினர்.
அது ஒன்றும் ஆனந்திக்குத் தெரியாத வீடல்ல. அவளது வீடு எதிரே தானே இருக்கிறது. என்னவொன்று ஆனந்தியின் இல்லம் பழங்கால கட்டடம். அகிலனின் வீட்டை கொஞ்சம் மாற்றியமைத்து கிரில் கேட் எல்லாம் போட்டிருந்தார்கள்.
மணமக்கள் இறங்கியதும் சாந்தி ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்.
“மதினி திருஷ்டியும் சுத்தி போட்டுடுங்க”
மங்கை வெள்ளைப்பூசணி மீது கற்பூரம் வைத்து கொடுத்தார்.

அப்போது சுற்றத்தாரின் தலைகள் ஆங்காங்கே தெரிய ஆனந்திக்கோ கூச்சமாக இருந்தது.
அதில் சிலர் ஏதோ பேசுவதும் முணுமுணுப்பதுமாக இருந்தனர்.
அப்போது ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
“கொலைகாரனை கல்யாணம் பண்ணிட்டு வந்து மகள் நிக்குறா… ஆத்தாக்காரி பூசணிக்கா வச்சு திருஷ்டி சுத்தி போடுறா… செத்தவன் சாபம் சும்மா விடுமா? இதுங்க எங்க நல்லா இருக்க போகுது?”
ஆனந்தியின் முகம் கலவரம் கொள்ள அகிலனின் முகத்திலோ அவமானக் கன்றல்.
மங்கைக்கு ஆத்திரம் வந்துவிட்டது. கிரில் கேட்டைத் திறந்து தெருவுக்கு வந்தவர் ஆத்திரத்தில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்.
“என் மருமகனை பத்தி பேசுறதுக்குத் தைரியம் இருந்தா நேருக்கு நேரா வந்து நின்னு பேசுங்கடி… இப்பிடி முதுகுக்குப்பின்னாடி புறம் பேசாதிங்க… என்னமோ உங்க வீட்டு ஆம்பிளைங்க எல்லாரும் உத்தம ரத்தினம் மாதிரி பேசுறிங்க… இங்க ஒவ்வொரு வீட்டுலயும் என்ன பஞ்சாயத்து போகுதுனு தெரியாமலா இத்தனை வருசம் குடியிருக்குறோம்?”
சாந்தி திருஷ்டி கழித்துவிட்டு பூசணிக்காயை வீசிய வேகத்தில் புறம் பேசியவள் மட்டும் நேரில் வந்தால் சும்மாவிடமாட்டேன் என்ற அவரது கோபம் வெளிப்படையாக தெரிந்தது.
“விடுங்க மதினி… இதுங்க கூட தாயா பிள்ளையா பழகுனதுக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்… நம்ம பிள்ளைங்களை வீட்டுக்குள்ள அழைச்சுட்டுப் போவோம்”
கோபத்தில் மூச்சு வாங்க மங்கையை மணமக்களோடு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் சாந்தி.
ஆனந்தி தலையைக் குனிந்தபடி வலது காலை வீட்டுக்குள் எடுத்து வைக்க அகிலனோ அவளது கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு அடியெடுத்து வைத்து உள்ளே வந்தான். தனது கரத்தைப் பிடித்திருப்பவனை பெயர்சொல்லத் தெரியாத உணர்வோடு ஏறிட்டவள் இவனா கொலைகாரன் என தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction