அவந்திகா அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓரளவு சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாலும் மருத்துவர் அவளை இன்னும் நார்மல் வார்டுக்கு மாற்ற ஒத்துக்கொள்ளவில்லை. தலையில் காயம் பலம் என்பதால் இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் மாற்ற முடியும் என்று கூறியதால் அவளைப் பெங்களூருவிற்கு அழைத்துச் செல்லும் எண்ணத்தை அப்போதைக்கு ஒத்திவைத்தனர் மூவரும்.
மற்ற காயங்கள் எல்லாம் ஓரளவுக்கு ஆறினாலும் தலையில் உள்ள காயமும் கை கால் ஃப்ராக்சரும் இன்னும் சரியாகவில்லை. அதற்குக் கொஞ்சம் நாள் எடுக்கும் என்று மருத்துவரும் அவளைப் பரிசோதனை செய்துவிட்டுக் கூறினார்.
அந்த ஏழு நாட்களில் அவள் உடல்நிலை குறித்து ரித்திமாவும் ராகவும் கவலைப்பட்டனர் என்றால் கிஷோரோ வீட்டில் உள்ளவர்களைச் சமாளிப்பதற்குள் ஓய்ந்து போனான்.
அவனால் தாதி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியவில்லை. அவந்திகா ஏன் இத்தனை நாளாகப் பேசவில்லை என்று கேட்டவருக்குப் பதிலளிக்க முடியாமல் அவன் திணறிப்போனான்.
அவளுக்கு வேலை இருப்பதாகக் கூறி அவரைச் சமாளித்து வைத்தான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. பதினேழு நாட்களாகவா அவளுக்கு வேலை என்று அவனை வறுத்தெடுத்துவிட்டுத்தான் போனை வைத்தார் அவர்.
இந்த நிலையில் இந்த விபத்து பற்றிக் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பதால் காவல்துறை அதிகாரிகளும் அவ்வப்போது வந்து போயினர். அவர்கள் மருத்துவர் உதவியுடன் அவந்திகாவிடம் ஸ்டேட்மென்ட் வாங்கிக்கொண்டு ராகவிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இவ்வாறாக ஒரு வாரம் ஒரு யுகம் போல் கழிந்தது. அதன்பின் வழக்கமான பரிசோதனைகளைச் செய்துவிட்டு அவந்திகாவினால் பயணம் செய்ய முடியும் என்ற உத்தரவாதத்தை மருத்துவர் கொடுத்ததும் ராகவ் பெங்களூர் சிட்டி ஹாஸ்பிட்டலுக்கு அவளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவளை அந்த மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவரிடம் கூறிவிட்டான்.
அந்த பதினேழு நாட்களில் வீட்டின் பெண்மணிகள் மருமகளும் மகனும் தங்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாததால் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தனர். அவர்களிடம் பேசிய கிஷோர் கூறிய காரணங்கள் எல்லாமே அவர்களுக்குச் சாக்குபோக்காகவே தோன்ற மோகனிடமும் குணாலிடமும் கூறிப் புலம்பினர்.
ஆனால் அவர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்தியை அறிய முடியாத காரணத்தால் வீட்டினர் அனைவரும் ஒரு வித நிம்மதியின்மையுடனே சுற்றிக்கொண்டிருந்தனர்.
“இந்த வீட்டு ஆம்பிள்ளைங்கதான் பிசினஸ்னு போனா வீட்டையே மறந்துடுவாங்க! இப்போ மருமளையும் அவங்கள மாதிரியே மாத்திட்டாங்க” என்று ஆதங்கத்துடன் புலம்பினார் ராதிகா.
“அவங்க திரும்பி வரட்டும் அண்ணி! நான் அவந்திகாகிட்ட பேசுறேன். இனிமே பிசினஸ் ட்ரிப்னு எது போனாலும் வீட்ல இருக்கிறவங்ககிட்ட டெய்லி பேசணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடுறேன்” என்று அவரைச் சமாதானம் செய்தார் கௌசல்யா.
“என்னதான் வேலையா இருந்தாலும் ஒரு வார்த்தை எப்பிடி இருக்கீங்கனு கேக்கக் கூடவா உன் பொண்ணுக்கு நேரம் இல்லாமப் போகும்? வரட்டும். நான் அவகூடப் பேசவே போறதில்ல” என்று சிறு பிள்ளை மாதிரி பிடிவாதமாகக் கூறிய சுமித்ராவைப் பார்த்துச் சிரித்தார் பிரியா.
“உங்களால அவகூடப் பேசாம இருக்க முடியாது சாஸுமா! நீங்க வேஸ்டா சபதம் போடாதீங்க” என்று சொன்னவருடன் கௌசல்யாவும் ராதிகாவும் இணைந்துகொண்டனர்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த மோகனும் குணாலும் எப்படியோ பேச்சுத் தங்கள் பக்கம் வராமல் போய்விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
சிட்டி ஹாஸ்பிடல், பெங்களூரு….
அவந்திகாவை நன்கு பரிசோதித்த மருத்துவர் தலைகாயம் கட்டுப் பிரிக்கும் வரை கட்டாயம் மருத்துவமனையில்தான் அவள் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
காயத்தைப் பொறுத்தவரை அது இப்போது ஆறும் நிலையில் இருப்பதாகவும் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் நோய்த்தொற்று ஆவதற்கு வாய்ப்பு இருப்பதால் அது முழுவதுமாக ஆறும் வரை அவள் அங்கேதான் இருந்தாக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்.
கை கால் ஃப்ராக்சர் குணமாக எப்படியும் இன்னும் இரு மாதங்களாவது ஆகும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவந்திகாவால் ஒரு கையையும் காலையும் அசைக்க முடியவில்லை. அதனால் அவளுக்கு உதவியாக ரித்திமா அவளுடனே இருப்பதாகக் கூற கிஷோரும் ராகவும் வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாயினர்.
போகும் முன் அவந்திகா “ராகவ்! இதுக்கு மேல அவங்ககிட்ட பொய் சொல்ல வேண்டாம். நீ ஆக்சிடென்ட் பத்தி அவங்ககிட்ட சொல்லிடு. நான்தான் நல்லா ஆயிட்டேன்தானே! இப்போ என்னைப் பாத்தாலும் அவங்க டென்ஷன் ஆக மாட்டாங்க” என்று சொல்ல ராகவ் “என்னால யார வேணாச் சமாளிக்க முடியும். பட் கௌசிம்மாவ எப்பிடிச் சமாளிக்கப் போறேன்னுதான் தெரியல. பை த வே நீ இன்னும் முழுசா சரி ஆகல. சோ கைய கால வச்சிட்டுக் கொஞ்சம் சும்மா இரு. எது வேணும்னாலும் ரித்திகிட்ட கேளு. டோன்ட் மூவ். அன்டர்ஸ்டாண்ட்?” என்று கேட்க அவளும் தலையாட்டினாள்.
“ராகவ் போறதுக்கு முன்னால எனக்கு ஒரு மிர்ரர் வாங்கிக் குடுத்துட்டுப் போ” என்று அவள் அமர்த்தலாகச் சொல்ல “மிர்ரரா? எதுக்கு ஜான்சி ராணி?” என்று புரியாமல் கேட்டான் ராகவ்.
“இந்த ஆக்ஸிடென்டால என்னோட ஃபேஸ்ல எதாச்சும் அடிபட்டு என் பர்சனாலிட்டி கம்மியா ஆயிருக்கா இல்லயானு தெரிஞ்சுக்கத்தான்” என்று கேட்கவும் ராகவ் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தான்.
“இங்க அவன் அவன் வீட்ல இருக்கிறவங்களை எப்பிடிச் சமாளிக்கன்னு தெரியாம முழிச்சிட்டுருக்கான். இப்போ உன் பர்சனாலிட்டி பத்திதான் உனக்குக் கவலை!” என்று கடுப்பில் பொரிந்துவிட்டான்.
“அது உன்னோட கவலைபா! அதுக்கு நான் என்ன பண்ணுறது? எனக்குக் கண்ணாடி பாத்தே ஆகணும்”
அடுத்த சில நிமிடங்களில் அவள் கையிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துத் திருப்திபட்டுக்கொண்டாள் அவந்திகா.
“நல்ல வேளை ஃபேஸ்ல சின்ன அடி கூடப் படல… தேங்க்யூ சோ மச் கடவுளே” என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியை ஒரு ஓரமாக வைத்துவிட்டுத் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மூவரையும் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தலை கட்டைத் தடவிக்கொண்டாள்.
“பாபி! என்னாச்சு? தலை வலிக்குதா?” என்று கிஷோர் பதற்றத்துடன் கேட்க “இல்லையே! இந்தக் கட்டு ரொம்ப டிஸ்டர்பா இருக்கு. அதான் சும்மா டச் பண்ணிப் பாத்தேன்” என்று கேலி செய்துவிட்டு ராகவைப் பார்த்துச் சிரித்தாள்.
அவன் கிளம்புவதற்காகத் திரும்பும்போது “ராகவ்” என்று மீண்டும் அழைத்தாள் அவந்திகா.
பெருவிரலால் நெற்றியில் கீறிக்கொண்டே திரும்பியவன் “இப்போ என்ன?” என்று புருவம் உயர்த்தி அவளைக் கேட்க “ஒன்னும் இல்ல! வீட்டுக்கு போன உடனே ஃபர்ஸ்ட் இந்தத் தாடிய ஷேவ் பண்ணு. நீ பாக்க அகோரி பாபா மாதிரி இருக்க” என்று சொல்லவும் அவள் அருகில் குனிந்தான் அவன்.
“உன்னை மாதிரி ஒருத்தியக் கல்யாணம் பண்ணா வேற எப்பிடி இருக்க முடியும்?” என்று கேலி செய்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டுக் கிளம்பினான்.
அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டே முகம் சிவந்தவளை ரித்திமா கிண்டல் செய்தே பாடாய்ப் படுத்திவிட்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்தான் ராகவ். வீட்டுக்குள் நுழையும்போதே கௌசல்யாவின் குரலைக் கேட்டவன் அப்படியே சிலையாகிவிட்டான். கிஷோர்தான் அவனைத் தைரியம் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்துக் குடும்பத்தினர் சந்தோஷப்பட்டனர். அனைவரின் அடுத்த கேள்வி “அவந்திகா எங்கே?”
கிஷோர் தயங்கிவிட்டு நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.
முடிக்கும்போது அனைவரும் சிலை போல் நின்றதைப் பார்த்தவன் “பட் டோன்ட் வொர்ரி! அவங்க இப்போ ரெகவர் ஆயிட்டாங்க” என்று சொன்னாலும் யாருடைய முகத்திலும் பயம் அகலவில்லை.
“ராகவ் கார் கீயக் குடுங்க. நாங்க ஹாஸ்பிட்டல் போகணும்” என்ற உஷாவின் குரலில் அனைவரும் சுயநினைவுக்கு வந்தனர்.
“வாட்? நீங்க இந்த நெலைமைல ட்ரைவ் பண்ணப் போறீங்களா? ப்ளீஸ் பாபி. அது கொழந்தைக்கு நல்லது இல்ல”
“கொழந்தைக்கு நல்லதா இல்லயாங்கிறத நான் பாத்துக்கிறேன். நீங்க கீய மட்டும் குடுங்க”
“ஏன் இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறீங்க? இப்போ அங்க போய் நீங்கல்லாம் என்ன பண்ணப் போறீங்க? அவ இப்போதான் கொஞ்சமா ரெகவர் ஆக ஆரம்பிச்சிருக்கா! இதுல நீங்க எல்லாரும் அங்க போய் அவளை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்?”
“அவ இன்னைக்குத்தான் உங்க பொண்டாட்டி சார். 10 வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட். அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகி 20 நாள் ஆகியும் எங்க யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாம மறைச்சிட்டீங்க! சரி! நாங்க டென்ஷன் ஆகிப் பயந்துடுவோம்னு நீங்க நெனச்சிருக்கலாம். பட் இங்க வந்ததுக்கு அப்புறமும் பாக்கக் கூடாதுனா என்ன அர்த்தம்?”
“பாபி! இப்போவே போக வேண்டானுதான் நான் சொல்லுறேன். ஈவ்னிங் நானே எல்லாரையும் கூட்டிட்டுப் போறேன். நீங்க வீணா டென்ஷன் ஆகி உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க. அண்ட் அன்னைக்கு எனக்கும்தான் அடிபட்டுச்சு. அன்ட் இந்த 20 டேய்ஸ்ல நான் கிட்டதட்டப் பைத்தியம் மாதிரி ஐ.சி.யு வாசலே கதினு கெடந்திருக்கேன்! ஐ டூ நீட் சம் ரெஸ்ட்” என்று அவன் சொல்லவும் உஷா இன்னும் பதற்றமடைந்தாள்.
“வாட்? உங்களுக்குமா அடிபட்டுச்சுனா நீங்க ஏன் இவ்ளோ அவசரமா வந்தீங்க ராகவ்? ட்ரீட்மென்ட் ஃபுல்லா முடிஞ்ச அப்புறமா வந்திருக்கலாம்தானே” என்று அவள் இன்னும் படபடக்க ராதிகாதான் அவளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றார்.
மௌனமாக நின்ற கௌசல்யாவின் அருகில் வந்தவன் “கௌசிம்மா! ஐயாம் ரியலி சாரி! நான் உங்க பொண்ணைப் பத்திரமாப் பாத்துப்பேன்னு சொல்லி இந்த நெலைமைக்குக் கொண்டு வந்துட்டேன்” என்று தழுதழுத்த குரலில் கூற அவனது தலையை வருடிக் கொடுத்தார் அவர்.
“நீ இல்லாம வேற ஒருத்தன் அவளோட புருஷனா இருந்தா இந்நேரம் என் பொண்ணு உயிரோட திரும்பிருக்க மாட்டா ராகவ்! உன்னை விட வேற யாருமே அவளைப் புரிஞ்சிக்கவும் முடியாது, அவளை நல்லபடியா பாத்துக்கவும் முடியாது. இதுல உன் மேல ஒரு தப்பும் கெடையாது. அவளுக்கு நேரம் சரியில்ல. அவ்ளோதான். பட் அப்பிடிப்பட்ட டைம்ல கூடக் கடவுள் உன்னை அவ பக்கத்துல இருக்க வச்சிருக்காரு பாத்தியா?” என்று சொல்லி அவனைத் தேற்றினார்.
அவர் கொடுத்த தைரியத்தில் தங்களின் அறைக்குச் சென்றவன் அங்கே இருந்த ரிசப்ஷன் போட்டோவிற்கு அருகே சென்று அதை வருடிக் கொடுத்தவாறே பேச ஆரம்பித்தான்.
“உன்னோட கோவத்தோட மின்னுன அந்த அழகான கண்ணுலதான் நான் விழுந்தேன் அவந்திகா! பட் எனக்கு அப்போ இதுக்குப் பேரு என்னன்னு புரியல. அந்த ஃபீலிங்தான் லவ்னு நீயும் நானும் புரிஞ்சிகிட்ட நேரத்துல எங்க நீ என்னை விட்டுப் போயிடுவியோனு இந்த 20 நாள்ல நான் செத்துச் செத்துப் பொழச்சிருக்கேன் தெரியுமா? இனிமே யாராலயும் உனக்கு எதுவும் ஆகுறதுக்கு நான் விடமாட்டேன்” என்று மனம் போன போக்கில் பேசியவன் திரும்பிக் கண்ணாடியைப் பார்த்தான்.
அதில் தெரிந்தது தானா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. கசங்கிய சட்டை, தூக்கமிழந்த விழிகள், வாராத தலை அதனுடன் அந்த 20 நாள் தாடியுடன் பார்க்க அவந்திகா கூறியது போல அவன் அகோரி பாபா மாதிரிதான் அவன் கண்ணுக்கும் தெரிந்தான்.
அவளது பேச்சின் நினைவில் அவனையறியாமல் அவன் இதழ்கள் புன்னகைக்க ஆரம்பிக்கக் குளியலறைக்குள் சென்றான் ராகவ்!
மாலை நேரம்….
அவந்திகா ரித்திமாவுடன் சேர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க அங்கே வந்த நர்ஸ் அவளுக்கு மாத்திரை கொடுத்துவிட்டுச் சென்றார்.
அதை வாங்கும்போது முகத்தைச் சுழித்தவள் வேறு வழியின்றி வாயில் போட்டுத் தண்ணீரைக் குடித்தாள்.
“இந்த மாத்திரையைக் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல மாட்டுனான்னு வைய்யேன் ரித்தி, நான் அவனைக் காலி பண்ணிடுவேன்! சை! என்ன கசப்பு! முடியல! இதுக்குக் கான்ஷியஸ் திரும்பாமலே இருந்திருக்கலாம் போல” என்று சொல்லும்போதே ராகவுடன் உள்ளே நுழைந்த ஐந்து பேரையும் பார்த்து அவந்திகா பேச்சை நிறுத்தினாள்.
நன்றாகச் சென்ற மருமகள் இப்படித் தலை கை கால்களில் பேண்டேஜுடன் பார்த்ததும் ராதிகாவுக்கு மயக்கம் மட்டும்தான் வரவில்லை. தலையில் போடப்பட்டிருக்கும் கட்டைப் பார்த்ததுமே நடந்த விபத்தின் அபாயத் தன்மையை உணர்ந்தவர் அவளின் அருகில் சென்றதும் கண் கலங்கிவிட்டார்.
“அவந்திகா! வலிக்குதாடா” என்று அவர் வருத்தம் நிறைந்த குரலில் கேட்க அவளோ கேலி போலச் சிரித்து “இல்ல மாமியாரே! எனக்கு யாரோ கிச்சு கிச்சு மூட்டுற மாதிரி இருக்கு” என்று சொல்லவும் அவருக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது.
“அட வாயாடி! இந்த வாயக் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிட்டுச் சீக்கிரமாக் குணமாகி வீட்டுக்கு வரப் பாரு! எப்பவுமே உன் சத்தம் கேட்டுப் பழகிப் போச்சா, நீ இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கு” என்று சுமித்ரா அவளைப் பதிலுக்குக் கேலி செய்தார்.
பிரியா “நீ வந்ததும் உன்கிட்ட நெறைய விஷயம் பேசணும், அதுமட்டுமில்லாம நம்ம வீட்ல அடுத்து இன்னொரு கல்யாணம் வேற நடக்கப் போகுது” என்று சொல்லவும் அவந்திகா ஆர்வத்துடன் கிஷோரைப் பார்த்தாள்.
அவனோ ரித்திமாவைப் பார்த்துக் கண் சிமிட்ட அவள் அருகில் நின்றவனின் கையில் கிள்ளிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நின்றுகொண்டாள். கத்த முடியாமல் அமைதியாக வலியை அனுபவித்தவனைப் பார்த்துச் சிரித்த அவந்திகாவை இருவரும் ஒருசேர பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டனர்.
எல்லாரும் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த உஷா ரித்திமா தவிர அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அவந்திகாவின் பெட்டின் பக்கவாட்டில் அமர்ந்தாள்.
“ரொம்ப வலிச்சுதா ஹனிபி?” என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டே அவளது தலையைத் தடவிக்கொடுத்தன அவளது விரல்கள்.
அவளிடம் மறைக்க இயலாதவள் “ம்ம்ம்… ரொம்ப வலிச்சுது. உங்க யாரையும் பாக்காமலே போயிடுவேனோனு நான் பயந்துட்டேன் தெரியுமா? இப்போவும் வலிக்குது. பட் அப்ப வலிச்ச அளவுக்கு இல்ல” என்று சொல்லி முகத்தைச் சுருக்கி வலியை மறைத்தாள்.
“நாங்கல்லாம் இருக்கிற வரைக்கும் உன்னை அப்பிடியேல்லாம் போக விட்டுருவோமா? நீ இல்லன்னா என் பேபிம்மாகூட யாரு சண்டை போடுவாங்க? ராகவை யாரு டார்ச்சர் பண்ணுவாங்க? வீணாம்மாக்கு யார் பதிலடி குடுப்பாங்க? உனக்கு இவ்ளோ கடமை காத்திருக்கிறப்போ அப்பிடியே எல்லாத்தையும் அம்போனு விட்டுட்டுப் போயிடுவியா நீனு?” என்று உஷா கூற அவந்திகா வாயைக் கையால் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
சிரித்துக்கொண்டே இருவரையும் அருகில் வரச் சொன்னவள் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவர்களும் அவளைத் தோளுடன் அணைத்துக்கொள்ள “உங்களை விட்டுட்டு நான் எப்பிடித் தனியாப் போவேன்? மை டியர்ஸ்! நம்ம மூணு பேரையும் சாவால கூடப் பிரிக்க முடியாதுடி! அதான் நானும் திரும்பி வந்துட்டேன்” என்று கேலியாகச் சொல்ல மூவரும் சிரித்தனர்.
அன்று அவந்திகாவுக்குத் தலையிலிருக்கும் கட்டைப் பிரிக்கப் போகும் நாள். மருத்துவருக்குக் காத்திருந்த அவந்திகா பொறுமை இழந்தாள்.
“ராகவ்! ஒரு சிஸர் இருந்தா நானே இத ரிமூவ் பண்ணிடுவேன். இதுக்குப் போய் அந்த டாக்டர் அங்கிள் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணனுமா? அவர் எப்போ வந்து எப்போ கட்டைப் பிரிச்சு நான் வீட்டுக்குக் கெளம்புறது?” என்று அவள் சலிப்புடன் கூறினாள்.
“ரித்திமா! ப்ளீஸ் அவளைக் கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கச் சொல்லு! நானே டாக்டர் வந்து என்ன சொல்லப் போறாரோனு டென்ஷன்ல இருக்கேன்! இவ வேற காமெடி பண்ணிக்கிட்டு” என்று பல்லைக் கடித்தபடிக் கூறிவிட்டு அவளை ஒரு முறை முறைத்தான்.
“அத டேரக்டா என்கிட்டயே சொல்லு! எதுக்குடா ப்ராக்ஸி?” என்று அவள் அவனை இன்னும் எரிச்சல்படுத்துவதற்கு முன் வந்து சேர்ந்தார் மருத்துவர்.
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவர் “மிஸஸ் கபூர்! ஹவ் டு யூ ஃபீல் நவ்?” என்று கேட்கவும் அவரைப் புரியாமல் பார்த்தாள் அவந்திகா.
“யாரச் சொல்லுறீங்க டாக்டர்?” என்று அவள் கேட்கவும் அவருக்கு ஒருவேளை இந்தப் பெண்ணிற்கு ஆக்சிடென்டில் எதுவும் மறந்துவிட்டாளோ என்று ஒரு நிமிடம் தோன்றிவிட்டது.
“டாக்டர் மிஸஸ் கபூர்னு சொன்னீங்களே! இங்க நிக்கிறாளே” என்று சொல்லிவிட்டு உஷாவைக் காண்பிக்க “அவளும் மிஸஸ் கபூர்தான். இப்போ சொல்லுங்க! யாரைச் சொல்லுறீங்க?” என்று புருவம் உயர்த்தி அவரைக் கேட்டாள்.
“சரி சரி! அவந்திகா! இப்போ ஹேப்பியா?” என்று சொல்லிவிட்டு நர்ஸை அழைத்துக் கட்டைப் பிரிக்க ஆரம்பித்தார்.
காயம் நன்றாக ஆறிவிட்டாலும் மருந்து போட வேண்டியதன் அவசியத்தை ரித்திமாவிடம் விளக்கிவிட்டு இனி பயப்பட எதுவும் இல்லையென்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் கை கால்கள் இன்னும் பாதி சரியாகாததால் அவள் இன்னும் சில நாட்களுக்கு வீல்சேரை உபயோகித்தால் கால்களுக்கு நல்லது என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.
உஷாவும் கிஷோரும் டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டிஸைக் கவனிக்கச் செல்ல அவந்திகாவுடன் ரித்திமாவும் ராகவும் மட்டுமே இருந்தனர்.
அவந்திகா கண்ணாடியை எடுத்துத் தன்னைப் பார்த்தவள் அதிர்ந்தாள். தலைக் காயத்திற்குச் சிகிச்சை செய்வதற்காக அவளது கூந்தல் வெட்டப்பட்டுப் பார்ப்பதற்குப் பையன் மாதிரி தெரியவும் அவளுக்குத் திகைப்பானது தன்னுடைய இந்தப் புது ஹேர்ஸ்டைலைப் பார்த்து!
“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்னை? கோலிவுட் ஹீரோயின் மாதிரி இருந்த என்னைக் கொரியன் ஹீரோ மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க?” என்று முகத்தைச் சுருக்கிச் சொல்ல ரித்திமாவுக்கும் ராகவுக்கும் சிரிப்புதான் வந்தது.
“டோண்ட் வொர்ரி ஜான்சி ராணி! ஹேர் சீக்கிரமா வளந்துடும்” என்று அவளது தலையைத் தடவிக்கொடுத்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


