காலம் வேகமாக உருண்டோடியது. காலத்தோடு சேர்ந்து அவந்திகா ராகவின் காதலும் வேகமாக வளர்ந்து வந்தது. இருவரும் இருபத்து நான்கு மணிநேரமும் உருகி வழியும் ரகமில்லை. அதே நேரம் தினமும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்து நிமிடங்களாவது உரையாடாவிடில் இருவருக்குமே அந்நாள் சூனியமாகத் தோன்றும். அந்தப் பத்து நிமிட அவகாசத்திலும் ஆயிரம் கேலி, கிண்டலுடன் அழகானச் செல்லச் சண்டைகளை முடித்துவைக்கும் அன்பான தோளணைப்புகள் என்று கண்ணியமாக வளர்ந்தது அவர்களின் காதல்.
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்ததாலே கௌசல்யா ராகவுடன் பழகுவதற்கு அவந்திகாவுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்ன தான் நிச்சயம் செய்த மாப்பிள்ளை என்றாலும் திருமணத்துக்கு முன்னர் இருவரும் ஒரு கட்டுப்பாட்டுடன் பழகுவதே சிறந்தது என்று ஒரு முறை கோடிட்டுக் காட்டியதோடு சரி; அதன் பின்னர் இருவரையும் அவர் தொல்லை செய்யவில்லை.
இதற்கிடையே ரித்திமா மற்றும் கிஷோரின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அந்த நல்ல நிகழ்வுடன் சேர்ந்து பிரதியுஷாவும் வருணும் கபூர் குடும்பத்திற்கு வாரிசு ஒன்று பிறக்கப் போகிற நற்செய்தியையும் சொல்லிவிட வீட்டில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.
பிரதியுஷாவைப் பார்க்கச் செல்லும் சாக்கில் ஞாயிறன்று கூட ராகவைக் காண கபூர் பேலஸில் ஆஜராகிவிடுவாள் அவந்திகா. தூரத்தில் இருந்து அவன் விழிகள் பேசும் மொழியில் நனைந்தபடி ஒவ்வொரு முறையும் அவனது சிரிப்பில் துள்ளிக் குதிக்கும் இதயத்துடன் ராதிகா, பிரியா, வீணாவுடன் சேர்ந்து வளவளத்துக் கொண்டிருப்பதில் தான் அவளது ஞாயிற்றுகிழமைகள் கழிந்தன.
கூடவே நேகா பிந்துவுடன் சேர்ந்து கொண்டு ரித்திமாவையும் பிரதியுஷாவையும் ‘ஆன்ட்டி’ என்று கேலி செய்து அவர்களை எரிச்சலூட்டுவதில் அலாதி இன்பம் கண்டாள் அவள்.
ராகவ் என்பவன் அவள் அடிக்கும் லூட்டிகளை ரசித்தபடி அவளைச் சீண்டுவதில் அந்த ஐந்து மாதக் காலத்தை ஓட்டினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஐந்து மாதமும் கடந்து அவந்திகாவின் ஜாதகத்தில் வியாழனின் பார்வையும் படவே, இருவீட்டாரும் கல்யாணப்பேச்சை ஆரம்பித்தனர். ஆரம்பமே வாக்குவாதத்தில் தான் தொடங்கியது. அதன் காரணகர்த்தாக்கள் இருவர், சுமித்ரா மற்றும் அம்புஜா.
சுமித்ரா தன் பேரனின் திருமணம் தங்கள் வழக்கப்படி நடக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, அம்புஜாவோ தனது ஒற்றை பேத்தியின் திருமணம் தான் மொழி தெரியா குடும்பத்தில் முடிந்ததென்றால் அதன் சடங்குகளாவது தங்கள் சம்பிரதாயப்படி இருக்கவேண்டாமா என்று ஆதங்கப்பட்டார்.
இருவரின் வாக்குவாதங்களும் முடிவது போலத் தெரியாததில் எரிச்சலுற்ற அவந்திகா ஒரு கட்டத்தில் பொறுமையை முற்றிலுமாக இழந்துவிட்டாள். எப்படியோ திருமணம் முடிந்தால் மட்டும் போதாதா? இவர்கள் பேசிப்பேசி பேச்சுவார்த்தையைச் சண்டையாக மாற்றிவிடுவார்கள் போல என்று கடுகடுத்தவள் அதே கடுப்புடன் கௌசல்யா, ரகுவரனிடம்
“பேசாம நானும் ராகவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமானு யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்… இவங்க இப்பிடியே சண்டை போட்டுக்கிட்டாங்கனா இன்னும் கொஞ்சநாள்ல நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமா வருவோம்.. நீங்க வேணும்னா பாருங்க” என்று சொல்லிவிட்டாள்.
இது போதாதென்று இந்தப் பிரச்சனையால் அவர்கள் இருவருக்குமிடையே சில சலசலப்புகள் வேறு எழுந்துவிட்டன. ராகவிற்கு இது என்னடா புது பிரச்சனை என்று தோன்றினாலும் இரண்டு முதியப்பெண்மணிகளின் உணர்வையும் அவன் மதித்தான்.
ஆனால் இந்தப் பெருங்குழப்பத்துக்கு ரித்திமா ஒரு தீர்வு சொல்லி பிரச்சனையைத் தீர்த்துவைத்தாள்.
“எதுக்காக பெரியவங்க மனசைக் கஷ்டப்படுத்தணும்? பேசாம ரெண்டு சைட் ரிச்சுவல்சையும் ஃபாலோ பண்ணி கல்யாணம் பண்ணிக்கோங்க ஹனிபி… சிம்பிள்” என்று அவள் தோளைக் குலுக்கிச் சொன்ன பாணியில் அவந்திகாவுக்குக் குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறிவிட்டது.
“வாட்? ரெண்டு தடவை கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று கண்ணை விரித்தவளிடம்
“என்னமோ ரெண்டு தடவையும் வேற வேற ஆளை மேரேஜ் பண்ணிக் போற மாதிரி ஷாக் ஆகாதே ஹனிபி… நம்ம டிரெடிசன் படி நம்ம நல்லநேரம் பார்த்து கல்யாணத்தை காலையில வைச்சுப்போம்… ஈவினிங் இவங்க டிரெடிசன் படி இன்னொரு தடவை ராகவ் கையால தாலி வாங்கிக்கோ” என்று இலகுவாகச் சொல்லிவிட்டாள் அவள்.
அவந்திகா புருவச்சுழிப்புடன் இருக்க, பிரதியுஷா “இப்போதைக்கு நமக்குக் கிடைச்ச சொல்யூசன் இது தான்… இதைப் பத்தி தாதி கிட்ட நான் பேசுறேன்… ரித்தி நீ ராதிம்மா கிட்டப் பேசு… ஹனிபி நீ கௌசிக்காவையும் ரகுண்ணாவையும் சம்மதிக்கவை… முக்கியமா அம்புவுக்கு இந்த ஐடியா கண்டிப்பா பிடிக்கும்” என்று கூற
கனவிலிருந்து விழித்தவளைப் போல “ஆங்! என்ன சொன்ன உஷா? சாரிடி நான் கவனிக்கலை” என்றவளை முறைத்துவைத்தனர் தோழியர் இருவரும். பின்னர் இரண்டு சம்பிரதாயங்களின் படி திருமணம் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல என்று ஒரே மூச்சாக அவளுக்கு விளக்கி விட்டுத் தான் ஓய்ந்தனர் இருவரும்.
இரு தோழியரும் கொடுத்த நம்பிக்கையில் வீட்டுக்குச் சென்றவள் தன் குடும்பத்தாரிடம் இதைப் பற்றிக் கூற அவர்களுக்குமே இப்பிரச்சனைக்கு இது தான் முடிவென்றால் தாராளமாக இருமுறைப்படியும் திருமணம் நடைபெறட்டும் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.
அதிலும் அம்புஜாவுக்குத் தங்கள் முறைப்படி தான் முதலில் திருமணம் நடைபெறும் என்ற குஷியில் வாயெல்லாம் பல்லாகப் பேத்தியிடம் சம்மதம் கூறிவிட்டார்.
அதே நேரம் கபூர் பேலஸிலும் ரித்திமாவின் இந்த யோசனை பிரதியுஷாவின் பேச்சுச்சாமர்த்தியம் காரணமாகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. ராகவ் தன் மனதிற்கினியவளை இரு முறை இறைவன் சாட்சியாகக் கரம் பற்றப்போகும் ஆனந்தத்தில் இந்த யோசனைக்குச் சம்மதம் சொல்லிவிட்டான்.
கூடவே வருண், கிஷோர் மற்றும் அமரின் கேலிகளைப் பிந்து மற்றும் நேகாவின் உறுதுணையுடன் உடைத்துக் கொண்டிருந்தான். சில சமயம் தங்கைகள் உடையானும் படைக்கஞ்சான் தான் என்பதை அவர்கள் இருவரும் நிரூபித்தனர்.
பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்த அன்றிரவே அவந்திகாவுடனான தனது செல்லச்சண்டைக்கு முற்றுபுள்ளி வைத்தான் ராகவ். வழக்கம் போல அவளது வினோதமான பேச்சுக்களுக்குத் தனது அலட்சியமான பதில்களை உரைத்து அவளைச் சீண்டியும் ஆனந்தப்பட்டுக் கொண்டான்.
திருமணத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கும் நேரம் இன்னொரு செய்தி அவர்களின் செவியைத் தீண்டியது. ரித்திமாவும் கிஷோரும் தங்களின் இல்வாழ்க்கையை இனிமையாக்கும் வண்ணம் தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்கப்போகும் செய்தியைக் குடும்பத்தினருக்கு அறிவிக்கவும் அனைவருக்கும் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல இருந்தது.
அதே இனிமையுடன் நாட்கள் நகர அவந்திகாவுக்கு மணப்பெண்ணுக்குரிய சடங்குகள் எல்லாமே நடத்தப்பட்டது. மெஹந்தியன்று ராகவின் பெயரைத் தன் கையில் ஏந்தியிருந்தவள் மருதாணியால் சிவந்த அவனது பெயருடன் கூடிய தனது கரத்தை புகைப்படம் எடுத்து அவனுக்கு வாட்சப்பில் அனுப்பிவைத்துவிட
“என் பேரு இவ்ளோ அழகுனு இப்போ தான் தெரியுது ஜான்சிராணி” என்று ஒரு காலத்தில் தனக்குப் பக்கம் பக்கமாகக் காதல் வசனம் பேசத் தெரியாதென்றவன் இன்று கடமை தவறாத காதலனாகப் பதிலளித்தான்.
மறுநாள் ஹல்தி நிகழ்வுக்கு மஞ்சள் பூசும் போது ராகவ் முகத்தைச் சுளித்ததை கிஷோர் தவறாமல் புகைப்படமாகப் பதிவுசெய்து அவந்திகாவுக்கு அனுப்பி வைக்க அவள் அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அடுத்தச் சில நிமிடங்களில் அவளுடைய முகமும் அதே பாவத்தைத் தத்தெடுத்தது. இவ்வாறான கலாட்டாக்களுடன் திருமணத்துக்கானச் சடங்குகள் இனிதே முடிவடைந்தன. மறுநாள் காலையில் திருமணம் என்றிருக்கையில் அவந்திகாவுக்கு இப்போதே தொண்டை அடைத்தது போல ஆகிவிட்டது.
தனது வீட்டையும் தனது அறையையும் சுற்றி சுற்றி வந்தவள் கல்யாணப்பரபரப்புடன் இருந்த கௌசல்யாவைக் கட்டிக் கொண்டாள். அன்றைய இரவில் முழுக்குடும்பமும் அவளது வேண்டுக்கோளுக்கிணங்க நிலாச்சோறு சாப்பிட்டனர். சாப்பிடும் போதே அவந்திகாவின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
மறுநாள் காலையில் திருமணம் என்றாலும் தங்கள் முறை திருமணத்துக்குக் கௌசல்யா பெரிதாக யாரையும் அழைத்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் தமிழகத்தில் எந்த உறவினரும் இல்லை. எனவே வங்கியில் தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்களை மட்டும் தான் அழைத்திருந்தார் அவர்.
காலையில் அவந்திகா எழுந்ததும் மணமகளுக்குச் செய்ய வேண்டிய சடங்கு சாங்கியங்களைச் செய்து முடித்து அவளை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர் கௌசல்யா, வாசந்தி மற்றும் மைதிலி. இவர்களுடன் ஆண்களும் சேர்ந்து கொள்ள அர்ஜூனும் அம்புஜாவும் கூடவே புறப்பட்டுவிட்டனர்.
மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் தயாராக இருக்கவே ரித்திமா விளக்கியபடி நேகா ஆரத்தி எடுத்து அவந்திகாவை உள்ளே அழைத்துச் சென்றாள். நாதஸ்வர இசை திருமணத்திற்கான இனிய அலையை அந்த மண்டபத்தில் பரவவிட்டிருந்தது.
மண்டபத்துக்கு வந்த அவந்திகாவுக்கு மணப்பெண் அறையில் முகூர்த்தப்பட்டுடன் அலங்காரம் ஆரம்பித்தது. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவள் இன்று பூ அதிகம், சேலை கசகசக்கிறது, நகைகள் பாரமாக இருக்கிறது என்றெல்லாம் பேசவில்லை.
அவள் கவனமெல்லாம் தனக்காக மணமேடையில் காத்திருப்பவனைச் சுற்றியே இருக்க பட்டுப்புடவையில் தங்கச்சிலையென ஜொலித்தவளுக்கு திருஷ்டி கழித்தார் அம்புஜா.
அதே நேரம் கல்யாணி தேவி அவந்திகாவின் திருமணத்துக்காக ராஜஸ்தானிலிருந்து வந்திருந்தவர் அவளது கழுத்தில் ஒரு ஆரத்தைப் போட்டுவிட்டவர் “இது போலேநாத் சன்னதியில வச்சு பூஜை பண்ணுனதுடா.. இதைப் போட்டுக்கிட்டா அவரோட அருள் உன் கூடவே இருக்கும்” என்று சொல்லி அவளை ஆசிர்வதித்தார்.
அதே நேரம் ராகவ் மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நெற்றியில் மெல்லியச் சந்தனத் திலகம் சிரிக்க புரோகிதர் சொல்லும் மந்திரங்களைக் கர்மச்சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். வாழ்க்கையிலேயே முதல் முறையாக வேஷ்டி சட்டையை அணிந்திருந்தவன் அதைக் கட்டி முடிப்பதற்குள் ரகுவரனைப் படுத்திய பாடு சொல்லி மாளாது.
அதே நேரம் ராகவின் குடும்பத்தினர் அனைவரும் அவனது இந்தப் புதிய அவதாரத்தைக் கண்ணாறக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுப்பெண்களும், மருமகள்களுமே இன்று பட்டுப்புடவை சுற்றிய காரிகைகளாக மண்டபத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
கௌசல்யாவும் வாசந்தியும் வருபவர்களை வரவேற்று உள்ளே அனுப்பிவைக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அழைத்திருந்தவர்கள் வந்ததில் ரகுவரனுக்கும் கௌசல்யாவுக்கும் மிகவும் மகிழ்ச்சி. இருவரும் மணமேடைக்குச் செல்ல புரோகிதர் மணப்பெண்ணை அழைத்துவரச் சொல்லவும் பிந்துவும் நேகாவும் அவந்திகாவை அழைத்துவரச் சென்றனர்.
அங்கே ரித்திமாவும் பிரதியுஷாவும் அவந்திகாவைக் கேலி செய்தே சிவக்க வைத்துக் கொண்டிருக்க இருவரும் அவந்திகாவைப் புரோகிதர் அழைப்பதாகச் சொல்லவும் அவளும் தோழிகள் மற்றும் நாத்தானர்களுடன் மணமேடைக்குச் செல்ல அங்கிருந்து வெளியேறினாள்.
ராகவ் மந்திரங்களைச் சொல்லிமுடித்தவன் தன்னவள் தழைய தழையப் ஜரிகைப்பட்டில், ஆபரணங்கள் மின்ன, காதின் குடைஜிமிக்கி கன்னத்துடன் கதை பேச, மல்லிகை மலரைச் சூடி தரைக்கு வலிக்குமோ என்று மெதுவாக நடைபோட்டு அழகுச்சிலையாக அவன் அருகில் வந்து அமரும் வரை அவளைப் பார்த்த பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை.
அது ஏனோ பட்டுப்புடவையில் அவளைக் கண்டுவிட்டால் அவன் மனம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது. இப்போதும் அப்படித் தான். ஆனால் ஹோமகுண்டத்தின் புகை அவளது பிம்பத்தையும் மீறி கண்ணிலுள்ள கண்ணீர்ச்சுரப்பிகளுக்கு வேலையைக் கொடுக்க ஆரம்பித்தது.
ராகவின் கண்கள் கலங்க ஆரம்பிக்கவும் அவனை இவ்வளவு நேரம் இரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகா மெதுவாக அவன் புறம் சரிந்தவள் “அழகானவங்களைப் பார்த்தா இப்பிடித் தான் கண் கலங்கும் ராகவ்” என்று அமர்த்தலாக மொழிய
ராகவ் “இஸின்ட்? இந்தப் புடவையில நீ கொஞ்சம் போல பொண்ணு மாதிரி இருக்க ஜான்சிராணி… அதுக்குனு ஓவரா அழகு அது இதுனு சொல்லாதே!” என்று பதிலடி கொடுக்க இருவரின் பேச்சுவார்த்தையும் குடும்பத்தினரின் கவனத்தை நன்றாகவே ஈர்த்தது.
சுமித்ரா தன்னருகில் மேடிட்ட வயிற்றுடன் வருண் கரம் பற்றி அமர்ந்திருந்த பிரதியுஷாவை அழைத்து “உன் ஃப்ரெண்டுக்கும் ராகவுக்கும் பேசுறதுக்கு வேற இடமே இல்லையா? அந்தப் புரோகிதர் அவர் பாட்டுக்கு மந்திரம் சொல்லுறாரு… ரெண்டும் அதைக் கண்டுக்காம மணமேடையில உக்காந்து கதை பேசுதுங்க” என்று சலித்துக் கொள்ள அவருடன் அமர்ந்திருந்த மொத்தக் குடும்பமும் நமட்டுச்சிரிப்புடன் அந்தக் காட்சியை ரசிக்க ஆரம்பித்தது.
கௌசல்யா அவந்திகாவின் கழுத்திலுள்ள மாலையைச் சரி செய்யும் விதமாய் குனிந்தவர் அவளைச் செல்லமாகக் கடிந்து கொள்ள அதற்கு பின் அவள் வாயை மூடி புரோகிதர் சொல்லும் மந்திரங்களை நல்லப்பெண்ணாகச் சொல்ல ஆரம்பித்தாள்.
பிந்து அட்சதைத்தட்டில் வைக்கப்பட்ட தாலியை அனைவரிடமும் சென்று ஆசிர்வாதம் வாங்கிவர புரோகிதர் தட்டைக் கையில் வாங்கியவர் மும்மூர்த்திகளையும் வேண்டி ராகவிடம் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார்.
ராகவ் அதைப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன் தன்னருகில் எழில்பாவையென அமர்ந்திருந்த அவந்திகாவைக் காதலுடன் நோக்க, அவளது கண்களும் அவன் கண்களுடன் கலக்க இருவிழிகளும் காதல் மொழி பேச ஆரம்பிக்க, மாங்கல்யத்தை அவந்திகாவின் கழுத்தில் பூட்டினான் ராகவ்.
குடும்பத்தினரின் அட்சதை மழையில் நனைந்தவாறு மூன்று முடிச்சுகளையும் தானே போட்டுவிட்டு நிமிர்ந்தவன் அவளது காதில் மெதுவாக “ஐ லவ் யூ” என்று முணுமுணுக்க அவந்திகா வெட்கத்தில் தலை குனிந்தபடி புன்னகைத்தாள்.
புரோகிதர் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிடும்படி சொல்லவும் அதை அவந்திகாவின் வகிட்டில் வைத்தவன் அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான். காதல் கணவனின் கையால் வாங்கிய மாங்கல்யமும் குங்குமமும் அவளுக்குப் புது அழகைக் கொடுத்திருக்க மகிழ்ச்சியில் முகம் ஜொலிக்க, கன்னங்குழிய புன்னகைத்தாள் அவந்திகா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


