கடுப்பின் உச்சத்துக்குச் சென்ற அவந்திகாவை இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்று பிடறியில் தட்டி கீழே இறக்கியது அவளது அலைபேசியின் ரிங்டோன். அதன் தொடுதிரையைப் பார்த்ததுமே இவனுக்கு என்ன காலையிலேயே தன் நியாபகம் என்று யோசித்தபடி அழைப்பை ஏற்றாள்.
“ஜான்சிராணி பிஸியா இருக்கியா என்ன?” என்ற ராகவின் நையாண்டி கலந்த குரலே அவளது இரத்த அழுத்தத்தை உயர்த்த
“ஆமா! நீ போனைக் கட் பண்ணு” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கச் சென்றவளை
“ஓகே! கட் பண்ணிக்கோ! பட் நான் உன் ஆபிஸ்ல வந்து உன்னை மீட் பண்ணிக்கிறேன்” என்று சொன்னவனைக் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தாலும் அலைபேசியில் அவ்வசதி இல்லையே! அதனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவந்திகா.
“கட் பண்ணலை! சொல்லு”
“அந்த நியூஸ் உன்னையும் கௌசிம்மாவையும் தப்பா பேசுனவங்களுக்கு என்னால குடுக்க முடிஞ்ச ரிப்ளை! இது பத்தாதுனு எனக்குத் தெரியும்.. பட் டோண்ட் ஒரி! நம்ம மேரேஜ் நியூசை இதை விட பிரமாதமா குடுத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டே செல்ல
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எல்லாமே உன் இஷ்டம் ராகவ்… என் கிட்ட நீ இதை கேக்க வேண்டிய அவசியமே இல்லை… இப்போ நான் போனை வைக்கிறேன்… ராகவ் கபூர் அளவுக்கு இல்லைனாலும் நானும் கொஞ்சம் பிஸி தான்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாள் அவள்.
இணைப்பைத் துண்டித்தவள் வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள். வராண்டாவில் இன்னும் வருங்கால மருமகனின் பிரதாபங்கள் பாடப்பட்டுக்கொண்டிருக்க அதைக் கேட்கும் பொறுமையற்றவள்
“சித்தி! நான் கிளம்புறேன்… இன்னைக்கு பிரேக்பாஸ்ட் வெளியே பார்த்துக்கிறேன்… உங்களுக்கும் டைம் ஆகுது சித்தி… நினைச்ச நேரத்துக்குப் போறதுக்கு அது ஒன்னும் உங்க வருங்கால மருமகன் கட்டி வைச்ச பேங்க் இல்லை” என்று கேலி செய்துவிட்டு அர்ஜூனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் அவள்.
செல்லும் வழியில் அர்ஜூன் கேட்ட கேள்விகளுக்குச் சம்பந்தா சம்பந்தமின்றி உளறியபடி வந்தவள் அவனது பள்ளிப் பேருந்து வரவும் அதில் அவனை ஏற்றிவிட்டுத் தனது அலுவலகம் நோக்கி விரைந்தாள்.
அங்கே இன்னும் ரித்திமாவும் பிரதியுஷாவும் வரவில்லை. இருவருக்கும் திருமணவேலைகள் இருக்கவே அவள் மட்டுமே அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயம். வழக்கம் போல அலுவலகம் சென்றவளுக்கு அந்த வாரத்தில் எந்த வேலையும் இல்லாததால் பொழுதைக் கழிப்பது சற்று சிரமமாக இருக்கவே கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
டேலியில்(Tally) எல்லாவற்றையும் உடனடியாக பிரதியுஷா ஏற்றி வைத்திருந்ததால் அவளுக்குப் பார்ப்பதற்கு எளிதாக இருந்தது. இடையிடையே சந்தேகங்களுக்குப் பிரதியுஷாவுக்குப் போன் செய்து கேட்டுக்கொண்டாள்.
பிரதியுஷாவும் ரித்திமாவும் திருமண உடைத்தேர்வுக்குச் சென்றிருக்க அன்றைக்கு கல்யாணிதேவி ராஜஸ்தானிலிருந்து பெங்களூரு வருவதாகச் சொல்லியிருந்ததால் விமான நேரத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள் அவந்திகா.
“ஏர்ப்போர்ட்டுக்கு அண்ணா போயிருக்கார்… சோ டோன்ட் ஒரி ஹனிபி… நீயும் எங்களோட டிரஸ் செலக்சனுக்கு வந்திருக்கலாம்… ராதிகா ஆன்ட்டி உன்னை தேடுனாங்க தெரியுமா?” என்று பிரதியுஷா சொல்லிக் கொண்டே செல்ல அவந்திகா பேச்சை மாற்ற விரும்பினாள்.
“சரி! டிரஸ்லாம் உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கவனமாக வருங்கால மாமியாரைப் பற்றிய பேச்சை திசை திருப்பினாள் அவள். பிரதியுஷாவும் திருமணப்பெண்ணுக்குரிய உற்சாகத்துடன் தனது ஆடையைப் புகைப்படம் எடுத்து வாட்சப்பில் அனுப்புவதாகச் சொல்லிவிடவே தான் பிறகு அழைப்பதாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டாள் அவந்திகா.
ஏனோ ராகவின் குடும்பத்தாருடன் அவளால் ஒன்ற இயலவில்லை. அவர்கள் யாருமே தங்களை விடக் குறைவாக எண்ணவில்லை தான். இருந்தாலும் அவர்களுடன் அவளுக்கு ஒட்டவில்லை. சிரித்த முகமாய் அவளுடன் பேசிய மூன்று மாமியார்களிடமோ, தங்கள் மகள்களிடம் உரையாடுவது போல சகஜமாகப் பழகிய மாமனார்களிடமோ இன்னுமே அவளுக்குப் பற்றுதலோ நெருக்கமோ தோன்றவில்லை.
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீட்டினரிடம் ஒட்டுதல் ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு அவளது வாழ்க்கைத்துணைவனுக்கும் அவளுக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பது அவசியம். ஆனால் இங்கேயோ எல்லாம் தலைகீழ். ராகவுக்கும் அவளுக்குமிடையே ஒரு சுமூகமான உறவு இல்லாத நிலையில் அவனது குடும்பத்தினரிடம் அவளால் எளிதில் கலந்து பழக முடியவில்லை.
திடுதிடுப்பென்று எல்லாம் நடந்துவிட்டதால் அவளுக்கு மூச்சுவிடுவதற்காவது அவகாசம் வேண்டுமெல்லவா! அவளது வருங்காலப் புகுந்தவீட்டினர் இதைப் புரிந்துகொண்டவர்களாய் நடந்து கொண்டது அப்போதைக்கு அவள் மனதுக்கு இதமாக இருந்தது. அதை எண்ணும் போது அவள் இதழில் புன்முறுவல் பூக்க ஆரம்பிக்க வாசலில் நிழலாடுவதை அவளால் கவனிக்க முடிந்தது.
யாரென்று திரும்பிப் பார்த்தவளுக்குக் கண்ணில் டன் கணக்கில் அலட்சியம் வழிய நின்று கொண்டிருந்த தியா பட்டுவிடவே இவளை வேறு நான் சமாளிக்க வேண்டுமா என்ற சலிப்பு அவளை அறியாமல் தோன்றிவிட்டது.
வந்தாரை வரவேற்பது நமது பண்பாடு. ஆனால் வம்பு வளர்க்க வந்திருந்தவளை வரவேற்கும் அளவுக்கு அவந்திகாவுக்குப் பரந்த மனம் இல்லாததாலும், வந்திருந்தவளின் கண்ணில் தெரிந்த அலட்சியம் அவந்திகாவுக்குள் எரிச்சலை உண்டாக்கியதாலும் அவளைக் கண்டுகொள்ளாதவளாய் மீண்டும் வேலையில் மூழ்கினாள்.
இது வரை யாரிடமும் இப்படிப்பட்ட வரவேற்பை ஏற்றிடாத தியாவுக்கு அவந்திகாவின் செய்கை எரிச்சலூட்டுவதாய் அமைய
“ஆபிஸுக்கு வந்தவங்களை விஷ் பண்ணனும்கிற பேஸிக் கர்டசி கூட உனக்கு தெரியாதா? இது கூடத் தெரியாத உன்னை மாதிரி ஒருத்தியை ராகவ் எப்பிடி லவ் பண்ணுனான்? – தியா.
“அதை நீ ராகவ் கிட்ட தான் கேக்கணும்… ஏன் இங்கே வந்து என் வேலையைக் கெடுத்துட்டிருக்க?” என்றாள் அவந்திகா தடாலடியாக.
தியா அவளிடம் இந்த தடாலடியை எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். நிச்சயதார்த்தம் அன்று ராகவின் அருகில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் நின்றிருந்தவளா இவள் என்ற திகைப்பு பட்டவர்த்தனமாக அவள் கண்ணில் தெரிந்தது.
தான் வீணாவுக்குச் சொந்தக்காரி என்பதால் அவந்திகா தனது புகுந்தவீட்டினரின் உறவினரை மரியாதையாகத் தானே நடத்தியாக வேண்டும் என்ற எண்ணம் இவ்வளவு நேரம் அவளுக்குள் ஒருவித அலட்சியத்தை உண்டாக்கிவிட்டிருந்து.
அந்த அலட்சியத்தை அவந்திகா ஒரே ஏகவசனப்பேச்சில் நொறுக்கித் தள்ளிவிட்டு இன்னும் ஏன் நின்று என் கழுத்தை அறுக்கிறாய் என்ற ரீதியில் எரிச்சலுற்ற பார்வையை வீச அந்தப் பார்வையில் தியா முகம் கன்றிப் போனாள்.
இருந்தாலும் அவளுக்குப் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற ஆவேசத்துடன்
“ராகவ் கிட்ட தானே கேட்டேன் அப்பிடி என்ன இருக்குனு நீ அவந்திகாவை நினைச்சு இப்பிடி உருகிறனு? அவன் ட்வென்டி ஒன் டேய்ஸ்னு ஒரு கதை சொன்னான்.. பட் யூ ஆர் ரியலி க்ரேட் அவந்திகா… ஃப்ரெண்ட் லவ்வரோட தம்பியை எவ்ளோ சாதுரியமா மடக்கிட்ட? இவ்ளோ டேலண்ட் எனக்கு இருந்திருந்தா என்னோட ஃபியான்சியை நான் உன் கிட்ட இழந்திருக்க மாட்டேன்” என்று பொய்யான மெச்சுதலுடன் பேச அவந்திகா லேப்டாப்பின் திரையை மூடிவைத்தவள் நிதானமாக எழுந்து தியாவின் எதிரில் வந்து நின்றாள்.
“வேணும்னா வீக்லி ஒன்ஸ் நான் உனக்குக் கிளாஸ் எடுக்கிறேன்… பட் அப்பிடியும் உனக்கு அந்த டேலண்ட்லாம் வர்றது கஷ்டம்… கற்பூரம் கப்புனு பத்திக்கும் தியா… ஆனா ஈர வாழைமட்டை ஜென்மத்துக்கும் பத்திக்காது… சோ உனக்குச் சொல்லிக் குடுக்கிறது வேஸ்ட்” என்று அவளுக்குச் சற்றும் குறையாத வேகத்துடன் அவந்திகாவிடம் இருந்து பதிலடி வந்தது.
தியாவுக்கு அவந்திகாவின் இந்த ஏளனமான பேச்சும், எகத்தாளம் நிறைந்த குரலும் அடங்காச் சினத்தை உண்டாக்க கோபத்தில் வார்த்தைகளின் வீரியத்தை உணராமல் அள்ளிவீசத் தொடங்கினாள் அவள்.
“சீ! போயும் போயும் உன்னை மாதிரி ஒரு கோல்ட் டிக்கர் (GOLD DIGGER) கிட்ட நான் ஏன்டி கிளாசுக்கு வரணும்? அடுத்தவளுக்குச் சொந்தமானவனா இருந்தாலும் பணக்காரன்னு தெரிஞ்சதும் மொத்தக்குடும்பமும் வரிசை கட்டி வந்து நிக்கிறிங்களே! அசிங்கமா இல்லை உங்களுக்கு? நீ ட்வென்டி ஒன் டேய்ஸ்ல என்னமோ அவன் ஒருத்தன் கூட மட்டும் தான் இருந்த மாதிரி பேசுற? யாருனு தெரியாத நாலு பசங்க கூட வெக்கமே இல்லாம ஒரே வீட்டுல இருந்துட்டு உனக்கு இவ்ளோ வாய் வேற… இதெல்லாம் உன் சித்தியோட டிரெய்னிங்கோ?” என்று வார்த்தைகளை அமிலமாய் வீசியவளின் காதுக்குள் அடுத்த நொடி ‘நொய்ங்’ என்ற சத்தம் ரீங்காரமிட்டது.
கன்னத்தில் சுளீரென்ற தீச்சுட்டாற் போன்ற உணர்வு வந்த பின்னர் தான் தியாவுக்குப் புரிந்தது அவந்திகா தன்னை கன்னத்தில் அறைந்துவிட்டாள் என்பது. பொறிகலங்கிப் போயிருந்தவள் தன்னை விடச் சிறியவளிடம் அறை வாங்கிவிட்டோமே என்ற அவமானத்துடன் கண்ணீரும் சேர்ந்துகொள்ள அவள் எதிரே முகம் நிறைய கனலை ஏந்தி நின்ற அவந்திகாவின் தோற்றத்தில் அவளை அறியாமல் உள்ளுக்குள் பயம் பரவியது தியாவுக்கு.
“இன்னொரு தடவை என் முன்னாடி வந்து இந்த மாதிரி கேவலமான வார்த்தையைப் பேசிடாதே! நான் இவ்ளோ பொறுமையா(?) எப்போவும் இருக்க மாட்டேன் தியா… யூ நோ வாட், பொண்ணுங்களுக்கு எதிரி பசங்க இல்லை; உன்னை மாதிரி அரைவேக்காடு பொண்ணுங்க தான்…
நல்லா கேட்டுக்கோ, நான் ஒன்னும் ராகவை அட்ராக்ட் பண்ணனும், மடக்கணும்னு நினைச்சு அவன் பின்னாடி சுத்தலை… பிகாஸ் அவனை அட்ராக்ட் பண்ணுறதை விட எனக்கு வாழ்க்கையில எவ்ளோவோ முக்கியமான வேலைகள் இருக்கு… அதே மாதிரி எந்த நாலு பசங்களோட நான் இருந்தேனோ அந்த நாலு பசங்களோட குடும்பத்துக்கே நான் மருமகளா வர்றதை வச்சு எந்தப் பிரச்சனையும் இல்லை… இதுல உன்னை மாதிரி வேஸ்ட் லக்கேஜுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை…
சோ இனிமே கோல்ட் டிக்கர், வளர்ப்பு, மண்ணாங்கட்டினு பேசிட்டு என் முன்னாடி வந்தா உன் வம்சத்துக்கே மரியாதை இல்லை… பீ கேர்ஃபுல்… அண்ட் ஒன் மோர் திங் உன் ராகவை நான் ஒன்னும் என்னோட சுடிதார் துப்பட்டால முடிஞ்சு வச்சுக்கலை! இனிமே அவனை வச்சு என்னை இன்சல்ட் பண்ணனும்னு நினைக்கிறப்போ இந்த அறை தான் உனக்கு நினைவுக்கு வரணும்…. கெட் லாஸ்ட் இடியட்” என்று அடக்கப்பட்ட சினத்துடன் முகம் சிவக்க நின்றவளின் கோபப்பார்வையில் நடுங்கியவாறு இடத்தைக் காலி செய்தாள் தியா.
அவள் சென்ற பின்னரும் அவந்திகாவின் கோபம் அடங்கவில்லை. தொப்பென்று தனது இருக்கையில் சரிந்தவளின் உடலுக்குள் ஓடும் இரத்தத்தின் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.
எந்த மாதிரியான மோசமான வார்த்தைகள்! இது வரை அவளோ அவளது குடும்பத்தினரோ இப்படி அசிங்கப்பட்டதே இல்லை! எவனோ ஒருவன் தனது குற்றவுணர்ச்சியைப் போக்கிக் கொள்ள அவளைப் பொம்மை போல ஆட்டிவைக்கிறான்! அவன் அவளது வாழ்வில் நுழைந்த நாளிலிருந்து முழு சுதந்திரமும் பறி போய்விட்டதோடு தேவையற்ற நபர்களின் வாயில் வேறு விழ வேண்டியிருக்கிறதே என்ற வேதனையும் சூழ்ந்து கொள்ள அவளுக்குத் தன் மீதே கழிவிரக்கம் தோன்ற ஆரம்பித்தது.
ஆனால் அதை மீறி இதற்கு காரணமானவன் மீது எரிச்சலாக வந்தது. நடந்த ஒரு சிறுவிபத்துக்காக எந்த முட்டாளாவது வாழ்க்கையை அடமானம் வைப்பானா என்று எண்ணியவளுக்கு திருமணம் என்ற விஷயத்தை அவன் எவ்வளவு இலகுவாக எண்ணிவிட்டான் என்ற ஆச்சரியமும் ஒரு சேர எழுந்தது.
திருமணம் குறித்து எண்ணும் போது வெறும் நிச்சயத்துக்கே தன்னை இப்படி இகழும் சிலர் திருமணம் முடிந்தால் இன்னும் அசிங்கமாக ஏதேனும் சொல்லக்கூடும் என்ற எண்ணமும் எழ அவந்திகாவுக்கு உடல் கூசிவிட்டது. அந்த நிமிடத்தில் இது எதுவுமே எனக்குத் தேவை இல்லை என உதறித்தள்ளிவிட்டு எங்கேனும் சென்றுவிடலாமா என்று கூட தோணியது.
சற்று நிதானித்தவள் தான் ஏன் எங்கேயோ ஓடவேண்டும், இதற்கெல்லாம் காரணகர்த்தாவான ராகவ் என்பவனை இப்போது அவளது வாழ்க்கையை விட்டு விரட்டவேண்டுமே தவிர அவள் ஓடிப்போவது என்பது பைத்தியக்காரத்தனம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். தனது வாழ்வில் அவனது அத்தியாயத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிடும் ஆவேசத்தோடு தியாவின் விஷவார்த்தைகள் ஏற்படுத்தியக் கோபத்தையும் மனம் நிறைய நிரப்பிக்கொண்டு ராகவைச் சந்திக்க அவனது அலுவலகத்துக்குப் புறப்பட்டாள் அவந்திகா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


