கோரமங்களா, கபூர் பேலஸ்….
வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் இருந்தது. எப்போதும் உச்சஸ்தாயியில் முழங்கும் சுமித்ராவின் குரல் அடங்கிப் போயிருந்தது. குடும்பத்தினர் அனைவருக்கும் பெருங்கவலையே “இந்த வீட்டுப்பசங்களுக்கு அவுட்டிங் போகணும்னு போயும் போயும் இப்போ தான் தோணனுமா? இந்த நிலமையில எல்லாரும் ஒன்னா இருந்தா மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்… ஆனா இப்பிடி அவங்க ஒரு பக்கம் நம்ம ஒரு பக்கம்னு பிரிஞ்சிருக்கோமே” என்ற ஆதங்கத்துடன் இருந்தனர் அனைவரும்.
இத்தனைக்கும் நால்வரும் தினமும் வேளை தவறாது வீடியோ கால்களில் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி இருந்தும் குடும்பத்தினரின் பயத்தை முழுவதுமாகப் போக்க முடியவில்லை அவர்களால்.
சுமித்ரா ஒரு முறை கண்ணீரே விட்டுவிட்டார்.
“பார்த்துக் கவனமா இருங்கடா… உங்களுக்கு என்னாச்சோனு தான் இங்கே எல்லாரும் கவலைப்பட்டுட்டிருக்கோம்… ராதிகா சரியா சாப்பிட்டே ரெண்டு நாள் ஆகுது”
அவர் அழுவதைப் பொறுக்க முடியாத வருண் “தாதி! பீளீஸ் ஸ்டாப் கிரையிங்… நாங்க பாதுகாப்பா காட்டுக்குள்ள தான் இருக்கோம்… எங்களை நினைச்சுக் கவலைப்படாதிங்க… ப்ரொவிஷன்ஸ் எல்லாமே இன்னும் மூனு மாசத்துக்கு வர்ற அளவுக்கு ஆல்ரெடி வாங்கி வச்சிருக்கோம்… சோ டோன்ட் ஒரி… வீ ஆர் சேஃப்… நீங்க எல்லாரும் எப்போவும் போல இருங்க.. ஜஸ்ட் ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் தானே… இப்பிடிங்கிறதுக்குள்ள பறந்து போயிடும்” என்று அவரைத் தேற்றினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நால்வரும் என்னென்னவோ பேசி குடும்பத்தினரைச் சாதாரண மனநிலைக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருக்கையில் ராகவின் பார்வை அந்த அறைக்கு வெளியே கிடந்த சோபாவில் காலாட்டியபடி படுத்துக் கொண்டிருக்கும் அவந்திகாவின் மீது பட்டு மீண்டது.
தங்களைப் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் தன் குடும்பத்தினருக்கே தங்களை நினைத்து இவ்வளவு கவலை என்றால் இந்தப் பெண் காணாமல் போய் இன்றுடன் மூன்று நாட்கள் ஆன நிலையில் அவள் குடும்பத்தினரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று வருந்தியவனின் மனம் யோசனையில் ஆழ்ந்துவிட்டது,
சகோதரர்கள் போன் பேசி முடித்துவிட்டுச் சளசளக்க ஆரம்பிக்க ராகவ் மட்டும் புருவச்சுழிப்புடன் சிந்தனையில் மூழ்கிவிட்டான்.
**********
அன்று காலையில் விழித்த அவந்திகா அவளது மற்ற வேலைகள் அனைத்தையும் முடித்தவள் குளித்து உடைமாற்றிவிட்டு கீழே வந்த போது வாயில் கதவு திறந்திருந்தது. அவந்திகா திகைத்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தவள் ராகவ் அங்கே இல்லையென்றதும் தைரியமாக வெளியே சென்றாள்.
வெளியே சென்றவள் தன் எதிரே இருந்த அடர்ந்த கானகத்தை ஆர்வத்துடன் ரசித்தவள் திரும்பி தான் இத்தனை நாட்கள் அடைப்பட்டிருந்த வீட்டைப் பார்த்தாள்.
அவள் வழக்கமாக நிற்கும் மாடியின் வராண்டா இங்கிருந்துப் பார்க்கும் போது மிகவும் அழகாக இருந்தது. பழுப்பு நிறத்தில் பெரும்பாலும் மரவேலைபாடுகளுடன் இந்தக் கானகத்தின் நடுவே அமைந்திருந்த வீட்டை ரசித்தாள்.
அந்தக் கானகம் அவந்திகாவை இருகரம் நீட்டி வரவேற்பது போலத் தோன்ற வெற்றுக்கால்களுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் அவள்.
நெடிதுயர்ந்த மரங்களினூடே அந்த வீடு மறையத் துவங்க அவந்திகா மரத்தின் கிளைகளை ஒடித்து அடையாளத்துக்காக வைத்துக் கொண்டே அங்கே இருந்த அழகை ரசித்தபடி நடந்தாள்.
சூரியஒளி புகாத இடங்களில் அவளின் முழங்கால் உயரம் வளர்ந்திருந்த புல்வெளி அவள் அணிந்திருந்த முக்கால் ஷார்ட்ஸின் கீழ் உரசுவதை உணர்ந்தபடி வெற்றுக்கால்களில் நடந்தவளுக்கு இந்த அனுபவம் அழகாக இருந்தது.
வீட்டின் மாடியில் நிற்கும் போது அவளுக்குக் கேட்கும் இரைச்சல் இப்போது கொஞ்சம் பக்கத்தில் கேட்பதைப் போல தோன்ற “அப்போ வாட்டர் ஃபால்ஸ் பக்கத்துல தான் இருக்குதா? அந்த மைதா மாவு என்னைக் கூட்டிட்டுப் போக இஷ்டமில்லாம பொய் சொல்லிருக்கான்” என்று பொருமியபடி அந்த இரைச்சலைத் தொடர்ந்து முன்னேறினாள்.
சிறிது தூரத்தில் சென்றதும் தன் எதிரே தெரிந்த பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டதும் வாயைப் பிளந்தாள்.
வானிலிருந்து வெள்ளியை உருக்கி யாரோ கொட்டியது போல டொம்மென்ற சத்தத்துடன் சீறி விழும் அருவியின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது. அதுவும் முதல் முறையாக அருவியை நேரில் பார்த்த ஆனந்தம் வேறு.
சீறிவிழுந்த அருவி கீழே நதியாய் நுரைத்து ஓட அவந்திகாவுக்கு இதில் கால் நனைத்தால் என்ன என்று தோன்றவும் கரையில் நின்று கால்களை நனைக்கத் தொடங்கினாள்.
நதியின் நடுவில் பெரிய பெரிய பாறைகளைத் தொட்டுக் கொண்டு நதி சீற்றத்துடன் ஓட அதற்குள் செல்ல அவள் சிறிது பயந்தாள். ஏனெனில் அவளுக்கு நீச்சல் சுத்தமாக வராது.
ஏக்கத்துடன் சற்று தூரத்தில் நின்ற அருவியை நோக்கியவள் தான் காட்டுக்குள் வந்ததை தெரிந்து கொண்டால் ராகவின் முகம் எப்படி மாறும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு “மைதா மாவு ஃபேஸ் தக்காளி சாஸ் மாதிரி சிவந்து போயிடும்… அது கூட பார்க்க நல்லா தான் இருக்கும்” என்று சொல்லி தனக்குத் தானே சத்தம் போட்டுச் சிரித்துக் கொள்ள, அந்த நதியில் மீன் பிடிப்பதற்காகக் காத்திருந்த மீன்கொத்தி ஒன்று அவள் சிரிப்பைக் கேட்டு மிரண்டு பறந்தது.
பறவைகளின் ரீங்காரம் மனதுக்கு இன்பத்தை அளிக்க அதோடு சேர்த்து அருவியின் மத்தளம் போன்ற முழக்கம் அந்தச் சூழலின் அழகுடன் பொருந்திக் கொள்ள இங்கேயே இருந்துவிட மாட்டோமா என்று ஏங்கியவாறு அங்கே மரங்களில் பின்னிக்கிடந்த பலவண்ண மலர்களைக் கொண்ட கொடிகளை ரசித்தபடி நதிக்கரையை விட்டு நகர்ந்தாள் அவள்.
அந்தக் கொடிகளின் மலர்களைக் கொடிக்கு வலிக்குமோ என்று எண்ணும்படி பறித்து வைத்தவள் பெருமூச்சுடன் திரும்பி அருவியைப் பார்த்தாள்.
இங்கிருந்து கிளம்புவதற்குள் இந்த அருவியை ஒரு முறையாவது அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியவளாய் தான் நட்டு வைத்த மரக்கிளைகளை அடையாளமாய் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
அதே நேரம் ராகவ் வீட்டில் அவந்திகா இல்லாததை கண்டு பதற்றமாகி விட்டான். வீடு முழுக்கத் தேடியவன் வாயில் கதவு திறந்து கிடப்பதைக் கண்டுவிட்டு “டோர் எப்பிடி ஓப்பன் ஆச்சு? யாரு இதை ஓப்பன் பண்ணுனது?” என்று வெடிக்க ஆரம்பிக்க
கிஷோர் “நான் தான் ஓப்பன் பண்ணுனேன் பய்யா… மார்னிங் எப்போவும் அந்தப் பொண்ணு லேட்டா தான் எழுந்திருப்பா.. அதான் அவ முழிக்கிறதுக்குள்ள வீட்டைச் சுத்தி ஒரு மினிவாக் போகலாமேனு ஓப்பன் பண்ணுனேன்… அவ எப்போ வெளியே போனானு தெரியலையே” என்றான் கவலையுடன்.
வருண் கிஷோரின் பதிலைக் கேட்டு எரிச்சலுற்றவன் “இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா ஆன்சர் பண்ணுற? அந்தப் பொண்ணு ஒரு இடத்துல இருக்க மாட்டானு ரதி அடிக்கடி சொல்லுவாடா…. எத்தனை தடவை வாட்டர் ஃபால்ஸுக்கு கூட்டிட்டுப் போங்கனு நம்ம கிட்ட கேட்டானு உனக்கு நியாபகம் இல்லையா கிஷோர்? சப்போஸ் அவ அருவிக்குப் போயிருந்தா என்ன பண்ணுவ?” என்று கேட்கவும் ராகவ் அதிர்ந்தான்.
அந்த அருவிப்பக்கம் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. குடும்பத்துடன் சேர்ந்து வரும் போதே அவர்கள் அடிக்கடி அங்கே செல்வதில்லை. இந்த லெட்சணத்தில் அவந்திகா அங்கே தனியாகச் சென்றிருந்தால் என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
சிகையைக் கோதிக் கொண்டவன் “பய்யா! நான் போய் அவ அருவிப்பக்கமா இருக்காளானு பார்த்துட்டு வர்றேன்” என்று கிளம்ப அமர் தானும் உடன் வருவதாகச் சொல்லி ராகவுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறினான்.
வீட்டின் எல்லையில் கால் வைக்கும் போது கையில் காட்டு மலர்களுடன் தலையெல்லாம் கலைந்து ஆங்காங்கே இலைதழைகள் செருகியிருக்க சேறான உடையுடன் வந்து கொண்டிருந்த அவந்திகாவைக் கண்டதும் ராகவுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தாலும் அருகே அமர் இருந்ததால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அவந்திகா வீட்டை நெருங்கிவிட்ட மகிழ்ச்சியில் வந்தவள் தன்னெதிரே நின்ற இருவரையும் கண்டதும் திகைத்துப் போய்விட்டாள்.
ராகவை ஓரக்கண்ணால் பார்த்தபடி “இவனா? ஐயோ இவன் சும்மாவே கடுப்பேத்துவானே! பெருமாளே இவன் வாயைக் கொஞ்சநேரத்துக்கு மியூட்ல போடுங்க ப்ளீஸ்” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு வானை நோக்கி வேண்டிக் கொள்ள
அமர் அவந்திகா நின்ற கோலத்தைப் பார்த்து நகைத்தவன் “வாட் இஸ் திஸ் அவந்திகா? எங்கேயாச்சும் விழுந்திட்டியா?” என்று கேட்க அவந்திகா ஆமென்று தலையாட்டினாள்.
“நான் அருவியைப் பார்த்துட்டு வர்றப்போ ஒரு இடத்துல சேறா இருந்துச்சு… நான் சிலிப்பர் போடாம போனதால வழுக்கி விழுந்துட்டேன்” என்று சொல்லிவிட்டுப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
ஆனால் அவளின் பரிதாபமான முகத்தை எல்லாம் ராகவ் கணக்கில் எடுக்கவில்லை.
கையைக் கட்டிக்கொண்டு அவளைக் கூர்மையாக நோக்கியபடி “நீ யாரைக் கேட்டுக் காட்டுக்குள்ள போன ஜான்சிராணி?” என்று அழுத்தமான குரலில் வினவ
அவந்திகா பதிலளிக்காமல் நிற்க, அமர் “பய்யா! அவ கிளீன் பண்ணிட்டு வரட்டும்… எவ்ளோ நேரம் சேறோட இருக்க முடியும்?” என்று அக்கறையுடன் கூற ராகவ் அவனைத் திரும்பிப் பார்த்ததில் வாயை மூடிக்கொண்டான் அமர்.
“நீ வீட்டுக்குள்ள போ அமர்…. இந்த ஜான்சிராணி கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்று சொல்லவும் அமர் மறுபேச்சின்றி வீட்டுக்குள் சென்றுவிட ராகவ் அவந்திகாவின் புறம் திரும்பினான்.
“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? இந்த ஃபாரஸ்ட் ஏரியா சேப்டி இல்லைனு படிச்சுப் படிச்சுச் சொல்லியும் உன் இஷ்டத்துக்குப் போனா என்ன அர்த்தம்? நான் சொல்லுறதைக் கேக்கவே கூடாதுனு சபதம் எதாவது போட்டிருக்கியா?” என்று கடுப்புடன் கேட்டான்.
அவந்திகா தயக்கத்துடன் “அங்கே பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே… எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா? எனக்கு வீட்டுக்கு வரவே இஷ்டமில்லை… அந்த அருவி விழுந்தப்போ…. என்று அவள் ரசனையுடன் பேசிக்கொண்டே செல்ல
“ஷட்டப் இடியட்… இனிமே யார் கிட்டவும் சொல்லாம உன்னோட மூச்சுக்காத்து கூட இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது… நீ என்னை நினைச்சிட்டிருக்க? உன்னை உன்னோட ஃபேமிலி கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணுற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது… இதுல நீ வேற எனக்கு டிரபிள் கொடுக்காதே… இனிமே இங்கே இருந்து போனேனு வையேன், நான் உன்னை அகெய்ன் இந்த வீட்டுக்குள்ள அலோ பண்ண மாட்டேன்” என்று கறாராகச் சொல்ல
அவந்திகா தலையசைத்துவிட்டு வீட்டுக்குள் செல்ல முயல அவளை மறித்தவன் “ஏய்! இப்பிடியே வீட்டுக்குள்ள போகப்போறியா? ஒழுங்கா கிளீன் பண்ணிட்டுப் போ” என்று வீட்டின் வலப்புறத்தில் உள்ள தண்ணீர்க்குழாயைக் காட்டினான்.
அவந்திகா முகத்தைச் சுருக்கியபடி குழாயைத் திறந்து கை கால்களைக் கழுவிக் கொண்டவள் உள்ளே செல்ல திரும்ப பின்னே நின்றவனின் மீது மோதிக் கொண்டாள். திடீரென்று இவன் பின்னே வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்காததால் அதிர்ந்துவிட்டாள்.
விதிர்விதித்தவள் வேகமாக விலக முயன்று தடுமாறியவளைப் பிடித்து நிறுத்தினான் ராகவ்.
ராகவ் இவ்வளவு நேரம் இருந்த கோபம் குறைந்து அவந்திகாவின் அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டான். இன்னும் தலையில் ஆங்காங்கே செருகியிருந்த இலைதழைகளை நீக்கியவன்
“உன்னைப் பார்த்துச் சிரிக்கவா, திட்டவானு தெரியலை ஜான்சிராணி… இனிமே இப்பிடி சொல்லாம எங்கேயும் போகாதே… அப்பிடி போகணும்னு ஆசைப்பட்டா என்னைக் கூப்பிடு… ஓகேவா?” என்று சிறுகுழந்தையிடம் பேசுவது போல அவளுக்கு எடுத்துரைத்தவனைக் கண் விரியப் பார்த்துக் கொண்டிருந்தவள் பேசி முடிக்கையில் அவன் வீசிய புன்னகையில் மயங்கிப் போனாள்.
ராகவ் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். அவன் சென்று நீண்டநேரமாகியும் அங்கேயே சிலையாய்ச் சமைந்த அவந்திகா திடீரென்று வீசிய குளிர்க்காற்றில் ஈரமான உடல் வெடவெடக்கவும் உணர்வு வந்தவளாய் வீட்டுக்குள் சென்றாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


