“மனிதர்களாகிய நாம், நம் மீது அன்பு வைத்திருப்பவர்களுடன் என்ன பிரச்சனை வந்தாலும் அவர்களை விட்டு விலகாமல் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவர்கள் இருக்கும் போதே அவர்களின் அன்பையும் நேசத்தையும் அனுபவித்துப் பார்த்துவிடவேண்டும். ஏனெனில் காலம் கடந்து போனால் அவர்களும், அவர்களின் அன்பும் வெறும் நினைவுகளாக மட்டுமே மாறிப்போகும். அந்நினைவுகளை நம்மால் அசைபோட முடியுமேயன்றி அனுபவிக்க முடியாது”
-தக்ஷிண்யா
“சோ இப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… அப்பிடி தானே?”
கிண்டலும் கோபமும் கலவையாக வந்த குரலில் தலையைக் குனிந்து கொண்டாள் தக்ஷிண்யா.
“இது எங்கம்மாவோட டைரி… இதுல கடைசியா அவங்க ஆசைப்பட்டது நான் உங்க ஃபேமிலியோட சேர்ந்து வாழணும்ங்கிறதை தான்… அவங்களுக்குக் கமல் அங்கிள் பத்தி முன்னாடியே தெரிஞ்சிருக்கு… அவங்க இல்லாம அவரால இயல்பான வாழ்க்கை வாழ முடியாதுனு புரிஞ்சிக்கிட்டு என்னையும் ஆரோஹியையும் உங்க ஃபேமிலி கூட சேர்த்து வச்சா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்காங்க… இப்பவும் நீங்க கட்டாயமா நான் சொல்லுறதை கேட்டே ஆகணும்னு சொல்ல மாட்டேன்… பன்னிரண்டு வருசமா எங்கம்மாவுக்காக நான் எதுவுமே பண்ணுனதில்ல, அவங்களை வெறுத்ததை தவிர… இந்த ஆசையவாச்சும் நிறைவேத்தி வைப்போமேனு தான் உங்க கிட்ட பேசிட்டிருக்குறேன்”
அவளது விளக்கத்தில் நியாயம் இருந்தாலும் ருத்ரதேவுக்கு அந்த நியாயம் தென்படவில்லை. அதற்கு பதிலாக இப்போது கூட அவள் தனக்காக திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை என்ற எரிச்சல் மண்டியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அது எப்பிடி, உனக்குத் தேவையில்லனா தூக்கியெறிஞ்சிடுவ, வேணும்னா தூக்கி வச்சு கொஞ்சுவ… என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டேல்ல”
“இல்ல ருத்ரா… நான் நமக்காகவும் தான் பேசுறேன்”
“வாவ்! இத்தனை நாள்ல நமக்குங்கிற வார்த்தை உன் வாய்ல இருந்து வரவேல்ல… இப்ப மட்டும் தான் நம்ம லவ் பண்ணுனோம்ங்கிறதே உனக்கு ஞாபகம் வருதா? இதுக்குப் பேர் லவ் இல்லடி, சுயநலம்… நீ என்னை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சப்ப எனக்கு எவ்ளோ வலிச்சுதுனு தெரியுமா?”
கோபத்தில் அவன் கொந்தளிப்பதைக் கண்டு தக்ஷிண்யாவின் கண்கள் கலங்கிவிட்டது. நாசி நுனி சிவக்க அழுதபடி தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
“அழுது சமாளிக்காத தக்ஷி… நான் ஹர்ட் பண்ணுறப்ப உன்னால அழுகைல அந்த வலிய கரைச்சிக்க முடியும்… ஆனா என்னால அழவும் முடியாது… ஏன்னா ஆம்பளை அழக்கூடாதுனு எந்த முட்டாளோ சொல்லி வச்சிட்டுப் போயிட்டான்… அவன் என் கையில கிடைச்சா செத்தான்”
பற்களைக் கடித்தபடி அவன் கூற தக்ஷிண்யாவின் அழுகை இன்னும் அதிகரித்தது.
ருத்ரதேவால் அவளை அலட்சியம் செய்ய இயலவில்லை. என்ன செய்வது? காதலித்து தொலைத்து விட்டான் அல்லவா? அதே நேரம் தனக்காக இவள் யோசிக்கவே மாட்டாளா என்ற ஆத்திரமும் பொங்கியது.
கரங்களை தன் முன்னே கிடந்த மேஜையில் குத்தி ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டான். பெரிய மூச்சுகளை எடுத்துவிட்டு தன்னை சமாளித்துக்கொண்டான் அவன்.
“கடைசியா நான் ஒன்னு கேக்கணும்… என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்தா உன் சுயமரியாதை கேள்விக்குறியாகிடும்னு யோசிச்சல்ல… என்னை வேண்டாம்னு சொன்ன உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட சுயமரியாதைக்கு அது கேவலம் தானே?”
குத்தலாக கேட்டபடி எழுந்தவன் டைரியை அவளிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு அலுவலக அறைக்குச் சென்றுவிட்டான்.
தக்ஷிண்யா செல்பவனையே பார்த்தபடி மேலாண்மை இயக்குனரின் ஓய்வறையில் அமர்ந்திருந்தாள்.
அவளின் விரல்கள் மீண்டும் டைரியைப் புரட்டியது. தேவிகாவின் முத்து முத்தான கையெழுத்தில் அவரது ஆசைகளை அப்படியே பிரதிபலித்தன டைரியின் காகிதங்களில் ஓடிய ஊதா எழுத்துகள்.
“நான் என்னோட நாட்களை எண்ணிட்டிருக்குறேன்… இப்ப என்னோட கவலை எல்லாம் எனக்குப் பின்னாடி தக்ஷியையும் ஆரோஹியையும் யார் பாத்துப்பாங்கங்கிறது தான்… கமலால நான் இல்லாத வாழ்க்கைய யோசிச்சுப் பாக்கவே முடியாது…
என்ன தான் என் மேல கோவம் இருந்தாலும் தக்ஷி பொறுப்பானவ… அவ ஆரோஹிய நல்லபடியா பாத்துப்பா… அதே நேரம் அவ அவளோட அப்பா குடும்பத்துல அவளும் ஒரு அங்கமா மாறணும்னு எனக்கு ஆசை…
ராஜா கிட்ட இருந்து அவளைப் பிரிச்சு அழைச்சிட்டு வர்றப்ப அவளுக்குப் பாதுகாப்பான ஒரு குடும்ப சூழலை குடுப்பேன்னு நம்புனேன்… பட் விதியா, இல்ல அவளோட சிறுபிள்ளைத்தனத்தை சீரியசா எடுத்துக்கிட்ட என்னோட கோவமானு தெரியல, என் பொண்ணு தனியாளா நின்னுட்டா… கமலை அப்பாவா ஏத்துக்காம வெறுத்தப்ப பேசி புரியவைக்காம ஹாஸ்டலுக்கு அனுப்புனது தான் என் வாழ்க்கையில அவளுக்கு நான் பண்ணுன பெரிய துரோகம்.. நான் தான் அவ இப்ப தனியா நிக்குறதுக்குக் காரணம்… காலம் கடந்து, மரணம் இதோ வந்து உன்னைத் தூக்கிட்டுப் போகப்போறேன்னு சொல்லுறப்ப தான் என்னோட தப்பு என் கண்ணுக்குத் தெரியுது…
என்னால அவ அப்பாவ இழந்துட்டா, குடும்பத்தையும் அதுல கிடைக்குற பாசத்தையும் இழந்துட்டா… ராஜாவோட குடும்பத்தால அவளுக்குப் பாசம் திரும்ப கிடைச்சா நான் இல்லைனாலும் என்னோட ஆத்மா சந்தோசப்படும்… என் பொண்ணோட கோவத்துக்குப் பின்னாடி இருக்குற பாசம் என்னோட இந்த ஆசைய நிறைவேத்தும்னு நம்புறேன்… கமல் இந்த டைரிய படிச்சிங்கனா தக்ஷி கிட்ட சொல்லிடுங்க, ஐ லவ் ஹெர்… ஷீ இஸ் ஆல்வேஸ் ஸ்பெஷல் டூ மீ… என்னை அவ வெறுக்க வேண்டாம்னு சொல்லிடுங்க… உங்களையும் ஆரோஹியையும் பத்திரமா பாத்துக்கோங்க கமல்… ஸ்டே ஸ்ட்ராங்க்”
இதோடு ஆயிரம் முறை படித்திருப்பாள். ஒவ்வொரு முறை படிக்கும் போது காகிதங்களில் வீசிய தேவிகாவின் அன்பின் வாசம் குறையவே இல்லை.
என்னுடைய முட்டாள்தனத்தால் அன்னையின் அன்பை இழந்த துரதிர்ஷ்டசாலி நான் என தன்னைத் தானே குற்றம் சாட்டிக்கொண்டாள்.
கமலை தன்னால் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவரை ஒரு மனிதராக கூட கருதாமல் ஒதுக்கியதன் விளைவால் தேவிகாவின் கோபத்துக்கு ஆளானது, அவர்களை விட்டு பிரிந்து விடுதி வாழ்க்கையில் தனிமையே துணையாக வாழ்ந்தது அனைத்துமாகச் சேர்ந்து இப்போது பூதாகரமாக உருவெடுத்து நீ ஒரு அவசரபுத்திக்காரி என்று தக்ஷிண்யாவை நிந்தித்தது.
இருந்த போது அன்னைக்கு எதுவும் செய்யாதவள் இறந்த பிற்பாடு அவரது ஆசையை நிறைவேற்றினாலாவது தனது குற்றவுணர்ச்சி குறையுமா என்ற தவித்தாள்.
அதற்காக தான் ருத்ரதேவிடம் திருமணம் குறித்து பேசினாள். ஆனால் அவனோ பிடி கொடுத்து பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான். அவனது கோபத்திலும் நியாயம் இருக்கிறது. தனது சொந்த கோபதாபங்களுக்கு அவனை பந்தாடியது மாபெரும் தவறு. அதை செய்துவிட்டு அவனிடமே வந்து என் அன்னையின் ஆசைக்காக என்னைத் மணந்துகொள் என்று கேட்டது சுயநலத்தின் உச்சகட்டம் தானே!
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் இனி நடப்பது நடக்கட்டும் என்ற விரக்தி மனநிலைக்கு வந்துவிட்டாள். சசிகலா கேட்டால் ருத்ரதேவை வற்புறுத்தி திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்காதீர்கள் என்று கூறிவிடலாம் என முடிவெடுத்தவள் கனத்த மனதுடன் தனது அன்றாட வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
******
பிருந்தாவனம்…
லோகநாதனிடம் ருத்ரதேவின் நடவடிக்கைகளைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். தேவிகாவின் கடைசி ஆசை பற்றிய தகவல் சசிகலா மூலம் அவருக்கும் சொல்லப்பட்டிருந்தது. முன்பு எதிரியாகத் தெரிந்த கமல்நாத்திடம் கூட சுமூகமாகப் பேச ஆரம்பித்திருந்தார் அவர்.
வீட்டிலிருந்த பெரியவர்களோ முன்பு தக்ஷிண்யாவின் மனம் மாற வேண்டுமென காத்திருந்தவர்கள் இப்போதோ ருத்ரதேவ் மனமிறங்க வேண்டுமே என கவலை கொண்டனர்.
ஆனால் அவனோ ராஜேந்திரனின் புலம்பலை செவிமடுக்கவில்லை. எப்போதும் போல ரிசார்ட்டுக்குச் செல்கிறேன் என்று கோகோ லகூனுக்குச் செல்வது, மிச்சமிருந்த நேரங்களில் ஸ்கை க்ளாம்பிங் சைட்டுக்குச் சென்று அங்கே நடைபெறும் வேலைகளைப் பார்வையிடுவது என அட்டவணை போட்டாற்போல வேலையில் மட்டும் கவனம் செலுத்தினான்.
இதில் ஆனந்தம் கொண்ட ஒரே உள்ளம் லலிதா மட்டுமே. அவரது மருமகன் தக்ஷிண்யாவை ஒதுக்கிவைத்துவிட்ட ஆனந்தம். ஆனால் அவன் அவரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்திவிட்டான் என்பதை வசதியாக மறந்து போனார்.
இப்போது கூட தமையனும் கணவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்டுக்கொண்டு தான் இருந்தார்.
“எனக்கு மட்டும் அந்தப் பொண்ணை மருமகளாக்கிக்க ஆசையில்லயா ராஜா? இது வரைக்கும் பசங்களை எதுக்கும் கட்டாயப்படுத்துனது இல்ல… அதான் என்னால ருத்ரா கிட்ட அழுத்தமா பேச முடியல”
“புரியுது லோகா… ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாரு, ருத்ரா இதுக்கு முன்னாடி ஏன் கோவமா இருந்தான்? தக்ஷி லலிதாவுக்காக அவனை வேண்டாம்னு சொன்னதால தானே… இப்ப அவளே கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டா.. ஆனா இந்தப் பையன் ஒத்துக்க மாட்றானே”
பேச்சினிடையே பெரியவர்கள் நால்வரும் வரவே, கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாலினியும் மெதுவாக அவர்கள் பேச்சில் கலந்து கொண்டாள்.
“நீங்க சொன்னா அண்ணா கேப்பார்… என்னையும் மகா அண்ணாவையும் மட்டும் எப்பிடி அதட்டுறீங்க? ருத்ரா அண்ணாவையும் அப்பிடி மிரட்டி அண்ணிய மேரேஜ் பண்ணிக்கச் சொல்லுங்கப்பா… ஷீ இஸ் சோ லவ்லி… ஒரு தடவை பேசுனதுலயே அது புரிஞ்சிடுச்சு”
“உனக்குத் துணையா ஒரு அண்ணி வேணும்னு எங்களை தூண்டிவிட்டுட்டு நீ சைலண்டா போயிடுவ… உன் அண்ணனோட முறைப்பை யார் வாங்கி கட்டுறது?”
மீனாட்சி இவ்வாறு அங்கலாய்க்கவும் “அது சரி… இப்பிடி எல்லாரும் பயந்தா யார் தான் பூனைக்கு மணி கட்டுறது?” என்று அவள் துடுக்குத்தனமாக கேட்ட போதே
“யாரை பூனைனு சொன்ன மாலினி?” என்றபடி வந்து நின்றான் ருத்ரதேவ்.
திடீரென அவனது குரல் கேட்கவும் மாலினி அதிர்ந்து மலங்க மலங்க விழித்தாள். அது அவனுக்குச் சிரிப்பை வரவழைக்கவே முறுவலித்தபடி அவளது சிகையைக் கலைத்துவிட்டவன் அங்கே அமர, லோகநாதன் மைந்தனிடம் நேரடியாகவே திருமணம் குறித்து கேட்டார்.
“உங்க எல்லாரோட பொறுமையையும் ரொம்ப அதிகமாவே சோதிச்சிட்டேன் போல” என்றவன் “எனக்கு இந்த மேரேஜ்ல சம்மதம்… ஆக வேண்டியதை பாருங்க” என்று கூறவும் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த லலிதா தேள் கொட்டியதைப் போல அதிர்ந்தார்.
இவன் தக்ஷிண்யாவை வெறுத்தானே! இப்போது எப்படி திருமணத்துக்குச் சம்மதித்தான்? ஆதங்கத்துடன் அங்கே நடப்பதை மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
பெரியவர்கள் ருத்ரதேவின் முடிவில் மகிழ லோகநாதன் சந்தேகமாக “நீ இத்தனை நாளா கல்யாணம் வேண்டாம்னு சொன்னியேப்பா?” என்று கேட்க
“நானே தான் இப்ப கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லுறேன்பா… இது கூட தக்ஷிக்காக இல்ல… ருத்ரா லவ் பண்ணுனான்… ஆனா அவனோட லவ் தோத்துப் போச்சுனு யாரும் என்னைக் கேலியா பேச நான் இடம் குடுக்க விரும்பல… இன்னொன்னையும் ஞாபகம் வச்சுக்கங்க, நானும் தக்ஷியும் ஆல்ரெடி கல்யாணத்தோட சில சடங்குகளை பண்ணி முடிச்சாச்சு… எனக்கு எதையும் பாதில விடுறதும் குடுத்த வாக்கை சுயநலத்துக்காக தூக்கிப் போடுறதும் பிடிக்காது… முக்கியமான இன்னொரு பாயிண்ட், நேரத்துக்கு ஏத்த மாதிரி மனசை மாத்திக்க நான் ஒன்னும் தக்ஷிண்யா இல்ல, ருத்ரா” என்று மிடுக்காக பதிலளித்துவிட்டு அங்கிருந்து எழுந்தவன் தனது அறையை நோக்கி நடைபோட்டான்.
அங்கிருந்த பெரியவர்கள் அவனது சம்மதத்தால் மனம் குளிர்ந்து போக லலிதாவோ ருத்ரதேவ் அவனது அறைக்குச் செல்லும் போது இடையில் வந்து வழிமறித்தார்.
“நீ தேவிகாவோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்குறதுக்குச் சம்மதிச்சிட்டியா ருத்ரா?”
“நான் சம்மதம் சொன்னப்ப நீங்க அங்க இல்லையே… அப்புறம் எப்பிடி உங்க காதுக்கு இந்தத் தகவல் வந்துச்சு?”
“நீங்க எல்லாரும் பேசுனது போற போக்குல என் காதுல விழுந்துச்சுடா”
“அதுக்குப் பேர் போற போக்குல காதுல விழுறதில்ல அத்தை… ஒட்டுக் கேக்குறது”
ருத்ரதேவ் முடிக்கவும் லலிதாவின் முகம் கறுவியது. அவர் பதிலளிக்கத் தடுமாறவும், ருத்ரதேவ் அவருக்குத் தேவையான செய்தியைக் கூறிவிட்டான்.
“நீங்க ஒட்டுக் கேட்ட விசயம் என்னவோ உண்மை தான்… நான் தக்ஷிய கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்… தேவிகா அத்தைய இத்தனை நாள் தப்பா நினைச்சதுக்கு அவங்க எனக்கு மறைமுகமா நல்லது தான் பண்ணிருக்காங்க”
“அந்த தேவிகா என் வாழ்க்கைய கெடுத்தவ ருத்ரா… நீ மறந்துட்டியா?”
“இதோட ஆயிரம் தடவை இதுக்கான விளக்கத்தை உங்களுக்கு நான் குடுத்துட்டேன் அத்தை… மாமா, அத்தை வாழ்க்கையில புகுந்தது நீங்க தான்… அம்மா எல்லா உண்மையையும் சொல்லிட்டாங்கனு உங்களுக்கே தெரியும்… அடிக்கடி அழுத்தி சொல்லுறதால பொய் உண்மையாகாது அத்தை… இறந்தவங்க கடவுளுக்குச் சமம்… அவங்களை பத்தி தப்பா பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்”
அழுத்தம் திருத்தமாக எச்சரித்துவிட்டு அவன் அகன்றுவிட, தனது மருமகன் தன் கையை விட்டு முழுவதுமாக சென்றுவிட்டான் என்ற உண்மை புரிபடவும் லலிதா சிலையாய் நின்றார்.
ருத்ரதேவ் திருமணத்துக்குச் சம்மதித்த தகவல் கமல்நாத்துக்குச் சொல்லப்பட்டது. பெரும் சுமையொன்று மனதிலிருந்து இறங்கியது போல நிம்மதியாக திருமண வேலைகளை சசிகலாவின் உதவியோடு செய்ய ஆரம்பித்தார் அவர்.
க்ரேட் மவுண்ட் குழுமத்தினரின் வீட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக ஆரம்பித்தது.
தக்ஷிண்யா தன்னை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் உரிமை கமல்நாத்துக்கு மட்டும் தான் உள்ளது என்று பிருந்தாவனத்தினரிடம் கறாராகச் சொல்லிவிட்டாள்.
“குழந்தை உருவாக காரணமா இருந்தா மட்டும் அப்பாவா ஆகிட முடியாது… நான் அடியோட வெறுத்தப்ப கூட எனக்காக யோசிக்குற கமல் அங்கிள் தான் என்னோட அப்பாவா இருந்து கன்னிகாதானம் பண்ணணும்”
அதே போல ருத்ரதேவும் திருமணத்துக்குப் பிறகு கமல்நாத் முன்பு போல நாடோடியாக சுற்றாமல் கெஸ்ட் ஹவுஸில் ஆரோஹியுடன் இருக்க வேண்டுமென கட்டளையிட்டு விட்டான்.
சும்மா இருப்பவர்களின் மூளை சாத்தானின் உறைவிடம் என்பதால் அவர் ஹைதராபாத்தில் விற்ற டி.கே. ஃபேஷன்சை போல உதகமண்டலத்திலும் ஒரு ஆடை வடிவமைப்பு பொட்டிக்கை தொடங்கி நடத்த ஆவன செய்வதாகவும் கூறினான்.
மருமகன் சொல்லிவிட்டான் அல்லவா! கமல்நாத் அதற்கு சம்மதித்து தானே ஆகவேண்டும்.
இவ்வாறு ருத்ரதேவும் தக்ஷிண்யாவும் கடந்த காலத்தில் தேவையற்ற துன்பங்களை அனுபவித்த கமல்நாத்தை தங்களால் முடிந்தளவு கௌரவிக்க இனிதே அவர்களின் திருமணநாளும் வந்தது.
தக்ஷிண்யாவின் ஆசைப்படி கமல்நாத் தந்தை ஸ்தானத்தில் இருந்து அவளை கன்னிகாதானம் செய்து கொடுக்க, பெற்றதை தவிர மகளுக்காக எதையும் செய்திடாத ராஜேந்திரன் அதை வேடிக்கை மட்டும் பார்த்தார்.
லலிதாவின் பொருமலை கண்டும் காணாமல் பிருந்தாவனத்தினர் மகிழ்ச்சியாக அட்சதை தூவ ஏற்கெனவே யாருமறியாவண்ணம் தக்ஷிண்யாவுடன் பாதி திருமண சடங்குகளை முடித்திருந்த ருத்ரதேவ், அன்றைய தினம் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ அவளது கழுத்தில் மங்கலநாண் பூட்டி முழுவதுமாக தனது சரிபாதி ஆக்கிக்கொண்டான்.
மாலினி மூன்றாவது முடிச்சை தான் இடுவதாக அடம்பிடிக்க அவளது ஆசைப்படி மூன்றாவது முடிச்சோடு மாங்கல்யம் தக்ஷிண்யாவின் கழுத்தை அலங்கரித்தது.
திருமணத்தின் இதர சடங்குகள் நடைபெறும்போது, சசிகலா மகாதேவின் வருங்கால மனைவியாக வரிக்கப்பட்ட பிரகல்யா அவளது குடும்பத்தினரோடு வருகை தந்தும் மைந்தனிடமிருந்து விலகி நிற்பதை கவனித்தார்.
மற்றவர் கண்களை உறுத்தாமல் இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்த்த காட்சிகள் சசிகலாவின் கண்களுக்குத் தப்பவில்லை. இன்னும் அவர்களின் காதல் முறிவு செய்தி பெற்றோரின் காதுகளை எட்டவில்லை.
மாங்கல்யதாரணம் முடிந்ததும் மணமேடைக்கு வந்து தக்ஷிண்யாவையும் ருத்ரதேவையும் வாழ்த்தியவள் மரியாதைக்காக சசிகலாவிடம் நலம் விசாரித்துவிட்டு கிளம்ப எத்தனிக்க சர்வானந்தை வைத்து அவளை அங்கிருந்து போகவிடாமல் செய்தார் சசிகலா.
அவன் பிரகல்யாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் மகாதேவை தன்னுடன் அழைத்துக்கொண்டு அவளிடம் வந்தவர் சர்வானந்தை போகுமாறு பணித்துவிட்டு அவர்களிருவரிடமும் என்ன பிரச்சனை என்று விசாரிக்க ஆரம்பித்தார்.
முதலில் முரண்டு பிடித்தாலும் இருவரும் நடந்த சண்டையை ஒப்பித்துவிட சசிகலா கண்டித்தது என்னவோ மகாதேவை தான்.
“அவ உன் மேல இருக்குற காதல்ல பேசுனதை நீ ஏன்டா ரொம்ப சீரியஸா எடுத்துக்குற? ஏன் என் வயித்துல பிறந்த பிரகஸ்பதிங்க ரெண்டு பேரும் காதலிக்குற பொண்ணுங்களோட மனசை கஷ்டப்படுத்துறதுல நம்பர் ஒன்னா இருக்குறிங்கடா?
பிரகல்யாவுக்கு அவரது கண்டிப்பு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அன்று வீட்டுப்பணிப்பெண்மணிக்காக தன்னைக் கண்டித்தவர் இன்று தனக்காக சொந்த மகனையே கண்டிக்கிறார்.
அவரைப் புரிந்துகொள்ள முடியாமல் பிரகல்யா தத்தளிக்க, சசிகலாவோ மகனுக்குப் புத்திமதி கூறி அவளிடம் மன்னிப்பு வேண்ட வைத்தார்.
“சாரி பிரகி!”
அவனே இறங்கி வந்து மன்னிப்பு கேட்டதில் மனம் பூரித்த பிரகல்யா தனது பேச்சும் தவறு தான் என்று ஒப்புக்கொண்டு அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
கூடவே “நான் உங்களை ரொம்ப தப்பா நினைச்சிட்டேன் ஆன்ட்டி… சாரி” என்று காது மடல்களைப் பிடித்து மன்னிப்பு வேண்ட
“அதுல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல… ருக்மணி கிட்ட நீ நடந்துகிட்ட விதம் தப்பு… அதான் உன்னை கண்டிச்சேன்… உங்க விவகாரத்துல தப்பு என் மகன் மேல தான்… அதனால தான் இவனைக் கண்டிச்சேன்… மகனும் மருமகளும் எனக்கு ஒன்னு தான்மா… யார் தப்பு செஞ்சாலும் திருத்த வேண்டியது என் கடமை” என்று சொல்லிவிட்டு சசிகலா மீண்டும் மணமேடைக்குச் சென்றுவிட்டார்.
மூத்த மகனின் திருமணம் அவன் விரும்பியவளோடு நடந்தேறியிருக்க, இளையமகனுக்கும் அவனது வருங்கால மனைவிக்கும் இடையே இருந்த பூசலை சரி செய்துவிட்ட மகிழ்ச்சியோடு திருமணத்திற்கு பிந்தைய சடங்குகளில் ஈடுபடலானார் சசிகலா.
மணமேடையில் ருத்ரதேவுடன் அமர்ந்திருந்த தக்ஷிண்யாவோ ஒருவித பரபரப்புடனே இருந்தாள். அனைத்து திருமணச்சடங்குகளையும் இன்முகத்துடன் அந்தத் தருணத்தில் மூழ்கி செய்தாலும் சமீபத்தில் அவர்கள் இருவரிடையே நிகழ்ந்த மோதல் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது.
அவளின் முகமாற்றத்தை நொடிக்கொரு தடவை கவனித்த ருத்ரதேவ் “இவ்ளோ டென்சனா ஏன் இருக்குற? நீயும் நானும் முன்ன பின்ன தெரியாதவங்க இல்ல… உன் டென்சன் தேவையில்லாத ஆணி” என்று கேலியாக கூற
“நீங்க இவ்ளோ சாதாரணமா பேசுறது தான் என்னோட டென்சனுக்குக் காரணமே” என்றாள் தக்ஷிண்யா.
“லவ் பண்ணுனோம்… சண்டை போட்டு ஒருத்தரை ஒருத்தர் ஹர்ட் பண்ணிக்கிட்டோம்… அது எவ்ளோ முட்டாள்தனம்னு புரிஞ்சுக்கிட்டு இப்ப மேரேஜ் பண்ணிருக்குறோம்… இந்த மாதிரி சிச்சுவேசன்ல உன் கிட்ட சாதாரணமா பேசாம இப்பவும் வஞ்சம் வச்சு பழிவாங்க நான் ஒன்னும் சைகோ இல்ல… இப்ப என் மனசுல உன் மேல கோவம் எதுவும் இல்ல, ஆனா வருத்தம் இருக்கு… காலப்போக்குல நம்ம காதலால அந்த வருத்தம் மறையும்னு நம்புறேன்… ஒருவேளை உனக்கு அந்த நம்பிக்கை இல்லாம தான் டென்சனா இருக்கியா?”
நிதானமாக தனது மனநிலையை அவன் விளக்கிவிட தக்ஷிண்யாவின் பரபரப்பும் மெதுவாக குறையத் தொடங்கியது.
இக்காட்சிகளை தூரத்தில் நின்று வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த லலிதாவின் இதழில் குரூரப்புன்னகை. இவளது அன்னை செய்த அனைத்துக்கும் இவளை வைத்து நான் பழி தீர்த்துக்கொள்வேன் என்று மனப்பால் குடித்தார் அவர்.
இனி அவரது விருப்பம் போல எதுவும் நிகழ தக்ஷிண்யாவோ ருத்ரதேவோ அனுமதிக்கப் போவதில்லை என்பதை யார் அவருக்குச் சொல்லிப் புரியவைப்பது?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


