“இந்தக் குழப்பமான உலகத்தில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என உனக்குப் புரிகிறதா? எனக்கென்னவோ, இது எப்போதோ மிகச் சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே பிரபஞ்சத்தால் எழுதித் தீர்மானிக்கப்பட்டதாகவே உனக்கும் தோன்றினால் நீயும் நானும் ஒரே மாதிரி சிந்திக்கிறோமென அர்த்தம்”
“அவளைத்தானே பொண்ணு பாக்க வர்றாங்க. என்னை எதுக்கு ஷேரி கட்டச் சொன்னீங்க? ஸ்கூலுக்கு டெய்லியும் ஷேரி கட்டிட்டுப் போய் போரடிக்குது எனக்கு”
கத்தரிப்பூ நிற காட்டன் சில்க்குக்குப் பொருத்தமாய் ஆன்ட்டிக் வளையல்களை அடுக்கிக்கொண்டு பேசினாள் வெண்பா.
ஒரு பக்கம் துர்காவின் சிகையலங்காரத்துக்குப் பொருத்தமாய் மல்லிகைச் சரத்தைச் சூடிக்கொண்டிருந்த ஹேமா அவளைப் பார்த்துச் சிரித்தாள்.
“புடவை கட்டுனா நீ அழகா இருப்ப வெண்பா”
“அப்ப நான் சுடிதார்ல நல்லா இருக்கமாட்டேனா மதினி?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அப்பிடி சொன்னேனா? ஏன் துர்கா நீதானே வெண்பாவும் புடவை கட்டிக்கணும்னு சொன்ன?” என வினவியபடியே துர்காவைப் பார்க்க அவளோ எதுவும் பேசாமல் மொபைலில் வேகமாகத் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். முகத்தில் வெட்கப் புன்னகை அவளுக்கு.
“எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா பாட்டு ஓடிட்டிருக்கு ஒருத்தியோட காதுல. நாம பேசுற எதுவும் அவ காதுல விழாது”
வெண்பா கிண்டல் செய்வதுகூடத் தெரியாமல் அவள் வாட்ஸ்அப் அரட்டையில் மூழ்கியிருந்தது புகழேந்தியுடன். புகைப்படத்தைப் பார்த்ததும் அவளுக்கு அவனைப் பிடித்துப்போய்விட அன்னையர் மூலமாக எண்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.
சில நாட்களாக வாட்ஸ்அப்பில் அரட்டை பரிமாற்றமும் நடக்கிறது. அச்சமயங்களில் எல்லாம் அவர்கள் வேறொரு உலகத்துக்குப் போய்விடுவார்கள்.
வெண்பா அவளது தலையில் தட்டிவிட்டு எழுந்தாள். சரியாய் அச்சமயத்தில் அந்த அறைக்குள் வந்தார் அவளது பெரியம்மா மனோன்மணி.
முதலில் அவரது பார்வை வயலட் பூவாய் நின்ற வெண்பாவிடம்தான் சென்றது. திகைத்துப்போய் கரத்தைக் குவித்து மோவாயில் வைத்தபடி ஆச்சரியப்பட்டார்.
“இந்தப் புடவை உனக்கு இவ்ளோ பாந்தமா இருக்கும்னு நினைக்கலடி சின்னவளே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று நெட்டி முறித்து அவர் திருஷ்டி கழிக்கவும்
“தேங்க்ஸ் பெரியம்மா” என அவரது கழுத்தைக் கட்டிக் கன்னத்தில் முத்தமிட்டாள் வெண்பா.
“நீ அந்தப் போனை இப்பவும் வைக்கமாட்டியா?” என மகளிடம் வந்தவர் மகளின் தோற்றத்தில் திருப்தியானார்.
“ம்மா! புகழ் பேசிட்டிருக்கார்” என்றபடி எழுந்தாள் துர்கா. அமைதியான அழகு அவளுடையது. முகத்தில் சாந்தத்தின் ரேகைகள் அழகாய்ப் பரவிக் கிடந்தன.
“இன்னும் பத்து நிமிஷத்துல நேர்ல பாக்கப் போறல்ல. இன்னுமா சாட் பண்ணணும்?”
அவர்கள் பேசிக்கொண்டிருக்க ஹாலில் அமர்ந்து தீவிரமாய் உரையாடிக்கொண்டிருந்தார்கள் துர்காவின் தந்தை வெற்றிவேலும் வெண்பாவின் தந்தை செண்பகராமனும்.
வெற்றிவேல் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்றவர். செண்பகராமனுடன் எப்போதும் அவருக்கு நல்ல உறவு உண்டு. கடின உழைப்பாளிகளை மதிக்கும் மனிதர் அவர்.
“நல்ல குடும்பம் சகலை. அரசியல்ல இருந்தாலும் இத்தனை வருஷத்துல சம்பந்தி மேல சின்னதா ஒரு குறை சொல்ல முடியாது. அதனாலதான் நான் உங்ககிட்ட சொன்னேன். உங்களுக்கு ஒண்ணும் சங்கடமில்லையே?” – வெற்றிவேல்.
செண்பகராமன் மென்மையாய்ப் புன்னகைத்தார். அவரது கண்களில் வெற்றிவேல் மீதான நம்பிக்கை சுடர்விட்டது.
“நீங்க இதுவரைக்கும் எத்தனையோ யோசனைகளைச் சொல்லிருக்கீங்க எனக்கு. எல்லாமே எனக்கு நல்லதாதான் முடிஞ்சிருக்கு சகலை. இதுவும் நல்ல யோசனையாதான் இருக்கு. முடிவானா நல்லது. இல்லனா அடுத்த வேலையைப் பாக்கப் போறோம். இதுல என்ன சங்கடம் இருக்கப்போகுது?”
“ஆனா நம்ம பிள்ளைக்கிட்ட இன்னும் சொல்லலையே?”
“அவ புரிஞ்சிப்பா. நாம அவளுக்குக் கெட்டது நினைக்க மாட்டோம்னு தெரியாதா என்ன?”
அவர்களது பேச்சின் சாராம்சத்துக்குச் சொந்தக்காரர்களான ராஜவேலுவின் குடும்பத்தினர் அங்கே வருகை தருவதன் அறிகுறியாய்க் கார்கள் வரும் சத்தம் கேட்டது.
“அவங்க வந்துட்டாங்கனு நினைக்குறேன்” வெற்றிவேல் சொல்லும்போதே எழிலன் வந்தவர்களை வரவேற்கும் சத்தம் கேட்டது.
“வாங்க அங்கிள்! வாங்க ஆன்ட்டி”
செண்பகராமன் வேகமாய்ச் சோபாவிலிருந்து எழுந்தார்.
“நாம போவோம் சகலை. இந்த எழில் பையனுக்கு என்னமோ இங்கிலாந்துல வாழுற நினைப்பு” கிண்டல் செய்தபடி இருவரும் சேர்ந்து வாயிலுக்குப் போய் வந்தவர்களை வரவேற்றார்கள்.
“வணக்கம் சம்பந்தி! வணக்கம் மார்த்தாண்டன் சார்! வாங்க” கம்பீரமாய் வரவேற்ற வெற்றிவேலுவுக்கு வணக்கம் சொன்னபடி வீட்டுக்குள் நுழைந்தார்கள் ராஜவேலுவும்
அனைவரும் உள்ளே வர முதலில் உற்சாகமாய் நுழைந்தவள் என்னவோ ராஜவேலுவின் மகள்வழிப் பேத்தி மதுஸ்ரீதான். கூடவே மார்த்தாண்டனின் புத்திரி நிருபமாவையும் இழுத்துக்கொண்டு வந்தாள் அவள்.
“வா சித்தி! சீக்கிரமா அத்தையைப் பாக்கணும்”
அவளது அன்னை புவனா பெரியவர்களோடு வந்துகொண்டிருந்தாள்.
அனைவரும் சோஃபாவில் அமர குந்தவையும் அங்கயற்கண்ணியும் உமையாளையும் மனோன்மணியையும் பார்த்ததும் பூரிப்புடன் எழுந்தார்கள்.
மனோன்மணியும் குந்தவையும் கைகோர்த்துத் தங்களது இத்தனை ஆண்டுகால நட்பைப் பறைசாற்றிக்கொண்டார்கள்.
“எங்க என் மருமகள்?” அங்கயற்கண்ணி கேட்க புகழேந்தியின் விழிகள் தன்னவளைத் தேடின.
மார்த்தாண்டனும் ராஜவேலுவும் செண்பகராமனிடம் அறிமுகமாகிக்கொண்டார்கள்.
“திடீர்னு சில ஏற்பாடுகளைப் பண்ணுனதுல உங்களுக்குத்தான் கொஞ்சம் சிரமமா இருந்திருக்கும்” என்றார் மார்த்தாண்டன்.
“அப்பிடியெல்லாம் இல்ல சம்பந்தி. முதல்ல கொஞ்சம் திகைப்பா இருந்துச்சு. சகலையும் மதினியும் இருக்கப்ப எங்களுக்கு என்ன சிரமம் சொல்லுங்க”
செண்பகராமனின் விழிகள் நன்றியோடு வெற்றிவேலிடம் சரணடைந்தன. சரியாய் அந்நேரத்தில் துர்காவை அழைத்து வந்தார்கள் ஹேமாவும் வெண்பாவும்.
புகழேந்தியின் கண்கள் ஜொலிக்க அவனருகே அமர்ந்திருந்த அவனது தமக்கை புவனா தம்பியையும் அவனது வருங்கால மனைவியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
பின்னர் நமட்டுச் சிரிப்போடு “உன் ஆளு ரொம்ப அழகு புகழ்” என்று அவள் சொல்ல
“அவங்க தங்கச்சியும்தான்.” என்றாள் அவர்களுக்கு அடுத்து அமர்ந்திருந்த நிருபமா உற்சாகமாக.
“துர்கா சாந்தமான அழகு. வெண்பாவும் அழகுதான். ஆனா கியூட் ரகம்டி. பொம்முகுட்டி மாதிரி. அவ முகத்துல மிரட்சிதான் தெரியுது எனக்கு.”
சகோதரிகள் பேசுவதைப் புகழேந்தி எங்கே கவனித்தான்! அவனது பார்வைதான் துர்காவிடம் கொக்கியில் மாட்டிய ஆடை போலச் சிக்கிக்கொண்டதே!
இளையவர்கள் இவ்வாறிருக்க பெரியவர்களின் முகத்தில் புதிய உறவுக்கான ஆர்ப்பரிப்பும் ஆவலும் நிரம்பியிருந்தது.
துர்கா சபைக்கு வணக்கம் சொல்ல அவளது புடவை முந்தானையைப் பற்றிக்கொண்டு நின்றான் ஆகாஷ். உடனே மதுஸ்ரீ ஓடிப்போய்ப் புகழேந்தியின் அருகில் அமர்ந்துகொண்டது. அவள் மாப்பிள்ளை வீட்டுக்காரி அல்லவா!
சிறுவர்களின் இச்செயல் பெரியவர்களுக்குச் சிரிப்பை வரவழைக்கத் துர்காவைத் தன்னருகே அமர்த்திக்கொண்டார் அங்கயற்கண்ணி.
குந்தவையின் விழிகள் வெண்பாவை ஆவலாய் ஏறிட்டன.
“நல்லா வளர்ந்துட்டா வெண்பா. செங்கோட்டை தேரோட்டத்துல பாத்தப்ப பதிமூனு வயசுல்ல இவளுக்கு?”
உமையாளிடம் பேச்சு கொடுத்தார் அவர்.
“ஆமா அக்கா! பொண்ணு வளர்த்தி புடலை வளர்த்தினு சும்மாவா சொன்னாங்க. டக்குனு வளர்ந்துட்டா. இப்ப ரங்கநல்லூர் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்குறா”
“அக்காவா? நீ இருக்கப் பாரு, உறவுமுறையை மாத்துறடி”
குந்தவை பொய்யாய்க் கோபம் கொள்ள அவர்களின் பேச்சு வெண்பாவுக்கு பால்ய கால சினேகிதிகளின் நட்பார்ந்த உரையாடலாகவே தோன்றியது.
“சின்னவனுக்கு இன்னைக்குக் கொஞ்சம் கட்சி வேலை. வர கொஞ்சம் நேரமாகும்னு சொன்னான். இந்த வயசுல அவனுக்குப் பொறுப்பு அதிகம்” என்றார் ராஜவேலு தம்பி மகனைப் பற்றிப் பெருமிதமாக.
“அண்ணா இப்ப வந்துடுவாங்க மாமா! நான் உள்ள வர்றப்பவே வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணுனேன். புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல வந்துட்டாராம்” என்றாள் நிருபமா பொறுப்பான பெண்ணாக.
மாப்பிள்ளையே வந்தாயிற்று, அந்தத் தம்பிக்கு மட்டும் என்ன அப்படி ஒரு வெட்டி முறிக்கிற வேலையாம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் வெண்பா.
புகழேந்திக்கும் துர்காவுக்கும் எத்துணை பொருத்தமென ஹேமாவிடம் சொல்லிச் சிரித்தாள் அவள்.
“ஹேமா! நீயும் சின்னவளும் காபி எடுத்துட்டு வாங்க” என்று மனோன்மணி சொல்ல இருவரும் சமையலறைக்குச் சென்றார்கள்.
“உமா உன் மக ரொம்ப அமைதியான டைப்பா? பேசவே மாட்டேங்கிறாளே?”
குந்தவை வினவ உமையாளும் மனோன்மணியும் இல்லையென மறுப்பாய்த் தலையசைத்தார்கள்.
“அதெல்லாம் நல்லா பேசுவா. நீங்க எல்லாம் இப்பதானே வந்திருக்கீங்க? நல்லாப் பழகுனதும் அரட்டை அடிப்பா. புது ஆளுங்க கிட்ட மட்டும்தான் அவளுக்குப் பேசத் தயக்கம்”
சரியாய் அந்நேரத்தில் நிருபமாவின் மொபைலுக்குச் செய்தி வந்தது.
“நான் வீட்டுக்கு வந்துட்டேன் நிரு. ஒரு முக்கியமான போன் கால். பேசிட்டு உள்ள வர்றேன். நசநசனு இனிமே மெசேஜ் பண்ணுனனு வையேன், உன் பாக்கெட் மனி கட்”
கறாராய்ச் செய்தி அனுப்பியவனைக் கிண்டல் செய்ய நாக்கைத் துருத்தும் எமோஜியை அனுப்பிவிட்டு நல்லப்பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டவள் புவனாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
“அப்பிடியா? ம்ம்… இதுவும் நல்ல ஐடியாதான். இனி நான் பாத்துக்குறேன்” என்றவள் காபி ட்ரேயுடன் வந்த வெண்பாவிடம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா புன்னகையை ஈந்தபடி ட்ரேயை வாங்கிக்கொண்டாள்.
“நான் காபி குடுக்குறேன்மா. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா? வந்த அவசரத்துல கார்லயே என் ஹேண்ட்பேக்கை மறந்துட்டேன்டா. அதுல துர்காக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன். எடுத்துட்டு வர்றியா?”
“சரி அக்கா”
‘அக்காவா’ என அவள் திகைக்கையிலேயே “விடுக்கா! இன்னும் கொஞ்ச நேரத்துல சரியான உறவுமுறையை அவங்களே சொல்லுவாங்க” என்று சொன்ன நிருபமா காபிக் கோப்பையை எடுத்துக்கொண்டாள்.
அதே நேரம் போர்டிகோவுக்கு வந்த வெண்பா கார்கள் நிறுத்திவைக்கப்பட்ட தரிப்பிடத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது அங்கே சேம்பெய்ன் வண்ண லினன் சட்டையும் சார்க்கோல் நிற லினன் பேன்ட்டும் அணிந்து கையில் ரேபானைச் சுழற்றியபடி மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டு ஒரு உயரமான இளைஞன் முதுகு காட்டிக்கொண்டு நிற்பதைக் காண நேர்ந்தது.
“ஹான்! நிகில்கிட்ட எல்லாத்தையும் சொல்லுங்க. அவன் நோட் பண்ணிப்பான். நான் பெருமாள்புரத்துக்கு வந்திருக்கேன். புகழ் அண்ணா கல்யாண விஷயம்”
அவன் பேசும்போது கேட்ட குரலில் துணுக்குற்றவளுக்கு அந்தப் பாதையைத் தவிர தரிப்பிடத்துக்குச் செல்ல வேறு பாதையும் இல்லை.
மலர்ச்செடிகளின் காதலியான துர்கா வீட்டின் முகப்பு முழுவதும் செடிகளை வளர்த்து வைத்திருந்தாள். கச்சிதமாய் அவற்றிற்கிடையே ஓடிய பாதையின் நடுவே குட்டியாய் மண்டபம் போலக் கட்டப்பட்டிருந்த இடத்தைத் தாண்டித்தான் தரிப்பிடத்துக்குச் செல்ல முடியும்.
எனவே முதுகுகாட்டி நின்ற உயரமானவனை நகருமாறு சொல்ல வாயெடுத்தவள் அவனே திரும்பியதும் அமைதியானாள். ஆனால் திரும்பியவனோ அவளைக் கண்டதும் கண்களில் குறும்புப் புன்னகை மிளிர ஒரு கையை இடையில் ஊன்றி நின்றான்.
“ஹேய் டீச்சரம்மா!” கிண்டலும் குறும்புமாகக் கண்கள் மலரப் பேசினான் நேத்ரன்.

‘இவனா’ எனத் திகைத்தவள் அரசியல்வாதி குடும்பத்தில் இவன் தான் இளையவன் என்று புரிந்ததும் முயன்று தனது திகைப்பை மறைத்தாள்.
“நீ இங்க என்ன பண்ணுற?” என்றவனின் விழிகள் அவளது புடவைக் கோலத்தை ரசிக்கத் தவறவில்லை. அந்த கண்கள் கனிந்தவிதம்தான் பிடிக்கவில்லை அவளுக்கு.
“இது எங்க பெரியம்மா வீடு! என் அக்காவைப் பொண்ணு பாக்க வந்திருக்காங்க”
“ஓஹ்! புரிஞ்சுபோச்சு. பொண்ணு பாக்குற ஈவென்ட் உள்ள நடக்குது. நீ இங்க என்ன பண்ணுற? உனக்கு மாப்பிள்ளை பாக்க வந்தியா?”
சட்டென அவன் கேட்டதும் பதில் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் முகத்தில் மட்டும் கடுப்பின் சாயல் பரவியது. பெருமூச்சு விட்டுக்கொண்டாள். தலை தானாய்க் கவிழ்ந்தது. வெட்கத்தால் இல்லை. இவனும் அந்தக் குடும்பத்தோடு சம்பந்தமுள்ளவன். தனது கோபத்தைக் காரணமாய்க் காட்டி எதுவும் பிரச்சனை ஆகிவிட்டால்?
“கார்ல அக்காவுக்குக் குடுக்க வேண்டிய கிஃப்ட் இருக்குனு சொன்னாங்க. அதை எடுக்க வந்தேன்” என்றாள் தன்னை அடக்கிக்கொண்டு.
நேத்ரனுக்கு வெண்பா தலையைக் குனிந்து பதில் சொன்ன விதமே மேலும் அவளைச் சீண்டத் தூண்டியது.
“அதுக்கு ஏன் டீச்சரம்மா வெட்கப்படுற? அந்தளவுக்கா என் பிரசன்ஸ் உன்னை டிஸ்டர்ப் பண்ணுது?”
“எதே?” தலையை உயர்த்தியவள் கண்கள் விரிய “இம்பாசிபிள்! நான் எதுக்கு வெட்கப்படப்போறேன்?” என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு “இவன் பெரிய ஆணழகன். இவனைப் பாத்து நான் வெட்கம் வேற படணுமாக்கும்?” என மெதுவாய் வாய்க்குள் பொருமிக்கொண்டாள்.
பொருமலின் சூடு அவளது இரு கண்களில் படர அதைக் கண்டுகொண்டான் நேத்ரன்.
“அடேங்கப்பா! கண்ணு ரெண்டுலயும் அனல் பறக்குதே” என்றபடி தனது கைகளில் சுழற்றிய ரேபானை அவளது கண்களில் மாட்டிவிட்டான்.
அதை எதிர்பாராதவள் திகைக்க “போட்டுக்க டீச்சரம்மா! உன் புரொபஷனுக்குக் கண்ணு முக்கியம்! என்னை விட உனக்கு ரேபான் அழகா இருக்கு” என்று கண்களைச் சிமிட்டிச் சொல்லிவிட்டு அவளை நகர்த்திவிட்டு வீட்டை நோக்கி நடைபோட்டான்.
அவனது செயல்கள், குறும்புப் பேச்சு என்று எதையும் தடுக்க முடியாமல் செயலிழந்து நின்றவள் வீட்டை நெருங்கி சென்று கொண்டிருந்தவனின் முகத்தில் குத்துவதாய் எண்ணிக்கொண்டு காற்றில் கைகளை வீசிக் குத்தித் தனது கடுப்பைத் தீர்த்துக்கொண்டாள்.
பின்னர் தரிப்பிடம் சென்று அங்கே நின்ற கார்களில் ஒன்றில் இருந்த புவனாவின் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டவள் ரேபான் இன்னும் கண்களில் இருப்பதை மறந்து வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல மாமா! பிரச்சாரம் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு”
நேத்ரனின் குரல் மட்டும் துண்டாய்க் கேட்டது அவளது செவிகளில்.
“பிறக்குறப்பவே வருங்காலத்துல அரசியல்வாதியாகுறப்ப உதவியா இருக்கும்னு வாயில மைக்கை முழுங்கிட்டுப் பிறந்திருப்பான் போல”
முணுமுணுத்துக்கொண்டே வந்து சேர்ந்தவளை முதலில் பார்த்தவள் புவனாதான். போகும்போது இல்லாத ரேபான் இப்போது இருக்கவும் தம்பியின் ரேபானைக் காணவில்லை என்றதும் அவளுக்கு விஷயம் புரிந்துபோனது.
குறும்புச் சிரிப்போடு புகழேந்தியின் காதில் ரகசியம் பேசினாள்.
“சீனியர் நீ இன்னும் பொண்ணுகூடப் பேசல. அங்க பாரு, ஜூனியர் பேசி முடிச்சு ரேபானே மாட்டிவிட்டுட்டு வந்திருக்கான்”
அப்போதுதான் புகழேந்தியும் மற்றவர்களும் வெண்பாவைக் கவனித்தார்கள். நேத்ரனும்தான்.
“ஒரு ஹேண்ட்பேக்கை எடுக்க இவ்ளோ நேரமா டீச்சரம்மாக்கு?”
அவன் கிண்டலாய்ப் பேசவும் பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டார்கள். அவர்கள் சகஜமாய் பேசியிருக்கிறார்கள் என்று எண்ணியவர்களாய் அவர்கள் மேற்கொண்ட பார்வை பரிமாற்றத்தில் மறைக்கப்பட்ட செய்தியொன்று இருந்ததை நேத்ரனும் வெண்பாவும் கவனிக்கவில்லை.
“இந்தாங்க அக்கா” என்றபடி ஹேண்ட்பேக்கைப் புவனாவிடம் கொடுத்தவள் அதே சோஃபாவில் அமர்ந்திருந்த நேத்ரனிடம் அவனது ரேபானைக் கழற்றி நீட்டினாள்.
அவனோ புன்னகையோடு மறுத்தவனாய் “உனக்குத்தான் அது தேவை. நீயே வச்சுக்க” என்றான் அமர்த்தலாய்!
‘இதென்ன வம்பு! இவனது செய்கையால் என் குடும்பம் அல்லவா நான் வரம்பு மீறி இவனிடம் பழகுவதாக எண்ணிவிடும்’
தவிப்போடு தனது குடும்பத்தாரைப் பார்த்தவள் அங்கே கண்டிப்புப் பார்வைக்குப் பதிலாய் மலர்ச்சியான புன்னகையோடு கூடிய பார்வை இருக்கவும் குழம்பிப்போனாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


