“பாழாய் போன காதல் வந்து விட்டால் மனித மனதுக்கு மரியாதையைப் பற்றிய கவலை போய்விடும் போல. என்ன தான் ஈகோ முன்னே வந்து தடுத்தாலும் காதலிப்பவளின் கண்கள் கலங்கினால் மனம் துடித்துப்போவதை என்னால் தடுக்க முடியவில்லை. எனது இந்த கையாலாகாத நிலையை எண்ணி என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. அதே நேரம் கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதே என்று மனமும் எச்சரிக்கிறது. இவள் உன்னை வேண்டாமென புறக்கத்தணித்தவள் என்று மூளை கோள் மூட்டிக்கொடுத்தாலும் அதை கேட்க எனக்குத் தைரியம் வரவில்லை!
-ருத்ரதேவ்
க்ரேட் மௌண்ட் ஹோட்டல்…
மேலாண்மை இயக்குனரின் அலுவலக அறையில் ஸ்கை க்ளாம்பிங்குக்கு உபயோகிக்க வேண்டிய கட்டுமான பொருட்கள் பற்றிய ப்ரசெண்டேசனை அளித்துக் கொண்டிருந்தனர் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுனர் குழு.
அதில் இளைஞனாகத் தெரிந்தவன் எந்தெந்த கச்சாப்பொருட்களை பயன்படுத்தப்போகிறோம் என்பதை ஸ்கை க்ளாம் டெண்ட்டின் மினியேச்சர் மாதிரியை வைத்து விளக்கிக் கொண்டிருந்தான்.
“க்ளாம்பை கவர் பண்ணுற இந்த அரைவட்ட டோம் ட்ராஸ்பரண்டான பி.வி.சி சார்… நெருப்பு பத்துனாலும் வேகமா பரவாத மாதிரியும், புற ஊதாக்கதிர் ஊடுருவாத மாதிரியும் இந்த மெட்டீரியல் டிசைன் பண்ணப்பட்டிருக்கு… இதுல தண்ணியும் உள்ள நுழையாது”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எவ்ளோ உயரம் வச்சா பெட்டரா இருக்கும்?”
அந்த கட்டிடக்கலை வல்லுனன் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து கேட்டான் ருத்ரதேவ். அவனருகே இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்திருந்த தக்ஷிண்யா அந்த மீட்டிங்கின் சாராம்சத்தை தனது மடிக்கணினியில் தட்டச்சு செய்தபடியே கொடுக்கப்படுகிற விளக்கத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
“மினிமம் மூனுல இருந்து நாலு மீட்டர் உயரத்துக்கு இந்த டோமை டிசைன் பண்ணலாம் சார்… இதை தாங்கி நிக்குற ஃப்ரேமுக்கு கால்வனைஸ்ட் ஸ்டீலை யூஸ் பண்ணப் போறோம்… அப்ப தான் காத்துல இருக்குற ஈரப்பதத்தால இரும்பு துருப்பிடிக்காம இருக்கும்… இந்த ஃப்ரேம் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்துல வீசுற காத்தை தாங்கி நிக்கும்… ஸ்னோ ஃபாலையும் இது தாங்கும் சார்”
அவனது விளக்கத்தில் திருப்தியுற்ற ருத்ரதேவ் தனது யோசனையையும் கூறினான்.
“ரெண்டு விதமான க்ளாம்ப் டெண்ட்ஸ் வைக்கலாம்னு ஐடியா இருக்கு… நானும் என்னோட ப்ரோவும் டிஸ்கஸ் பண்ணுனதுல இந்த முடிவுக்கு வந்துருக்குறோம்… டீலக்ஸ் க்ளாம்ப், ப்ரீமியம் க்ளாம்ப்னு ரெண்டு விதமா நம்ம ஆஃபர் பண்ணுனா இதுக்கான வரவேற்பு அதிகமாகும்னு நினைக்குறோம்… டீலக்ஸ் க்ளாம்ப் தரையோட தரையா இருக்குற மாதிரி டிசைன் பண்ணனும்… ப்ரீமியம் க்ளாம்ப் தான் ஹில் வியூ, ஹாமக் எல்லாம் வச்சு உயரத்துல இருக்கணும்… இது தான் எங்களோட டிமாண்ட்… எப்ப வேலைய ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கீங்க?”
“கொட்டேஷனை நீங்க பாத்து ஓ.கே பண்ணுனதும் வேலைய ஆரம்பிச்சிடலாம் சார்… அதுக்கு முன்னாடி ரெண்டு வகையான க்ளாம்பையும் எந்தெந்த இடத்துல கட்டலாம்னு சைட்ல போய் பாத்துடலாம்” என்றனர் கட்டிடக்கலை வல்லுனர் குழு.
ருத்ரதேவும் அதற்கு சம்மதிக்க அவர்கள் அனைவரும் ஃபெர்ன் ஹில் பகுதியிலிருக்கும் எஸ்டேட்டுக்குக் கிளம்பினர். தக்ஷிண்யா தனது வேலை முடிந்ததென கழண்டு கொள்ள எத்தனிப்பதை ருத்ரதேவ் கவனித்து விட்டான்.
“உன் வேலை இன்னும் முடியல… நீயும் என்னோட சைட்டுக்கு வரணும்”
“கன்ஸ்ட்ரக்சன் சம்பந்தப்பட்ட தகவல் எல்லாமே நான் ரிப்போர்ட்டா ரெடி பண்ணிட்டேன்… சைட்ல எனக்கு என்ன வேலை?”
“என்ன வேலைனு வேலை குடுக்குற நான் முடிவு பண்ணிக்கிறேன்… நீ ரொம்ப யோசிக்காம அனுதீப் குடுக்குற சம்பளத்துக்கு உண்மையா வேலை செஞ்சா மட்டும் போதும்”
என்னவோ வாங்குகிற சம்பளத்துக்கு உழைக்காத சோம்பேறி போல பேசுவதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் மண்டியது.
அதை முகத்தில் மறைக்காமல் காட்டியவள் தனது மடிக்கணினியை பத்திரமாக வைக்கும்படி ருத்ரதேவின் உதவியாளர் விக்னேஷிடம் கொடுத்துவிட்டு அவனுடன் கிளம்பினாள்.
காரில் அவனுடன் பின்னிருக்கையில் அமரும் போதும் இதற்கு என்ன குதர்க்கமாகப் பேசுவானோ என்ற தயக்கம் தான். தயக்கத்தை மென்று தின்று விழுங்கிவிட்டு அமர காரும் கிளம்பியது.
ருத்ரதேவின் பார்வை அவனது மொபைலில் இருக்க தக்ஷிண்யாவோ வெளியே வெறிக்க ஆரம்பித்தாள்.
இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் என்னவோ மனதளவில் பல்லாயிரக்கணக்கான மைல் இடைவெளி அவர்களுக்குள் விழுந்து அன்றோடு ஒன்றரை மாதம் ஓடிவிட்டது.
தக்ஷிண்யா காயம் ஆறியதுமே ருத்ரதேவ் ஆரம்பிக்கவிருக்கும் ஸ்கை க்ளாம்ப் புராஜெக்ட் வேலையைப் பகுப்பாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டாள். வேலை நேரத்தில் பெரும்பாலும் ருத்ரதேவுடன் அவளுக்குக் கருத்து மோதல்கள் வந்ததில்லை. ஆனால் மிச்சமிருக்கும் ஓய்வு பொழுதுகளில் இருவரும் கீரியும் பாம்புமாகச் சண்டையிட்டுக் கொண்டனர்.
அது எப்படி நீ என்னைத் துச்சமாக நினைத்து ஒதுக்கலாம் என அவனும், உன்னைக் காதலித்த பாவத்திற்காக நீ பேசும் வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவளும் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபடுவது வாடிக்கையாகிப் போனது.
இன்னும் ஒரு மாதம் மட்டும் தான் அவளுக்கு இங்கே வேலை. பின்னர் மீண்டும் ஷான்ஃபிக்குச் சென்றுவிடுவாள். அதுவரை ருத்ரதேவின் மனவருத்தத்தைப் பொறுத்துக்கொள்ளவேண்டும்!
திடுமென ஒலித்த மொபைலின் ரிங்டோன் இசையில் ருத்ரதேவ் பக்கம் பார்வையைத் திருப்பினாள் அவள்.
அவனோ அழைப்பை ஏற்றதும் முசுடாக மாறிவிட்டான்.
“நீங்க ரெண்டு பேரும் யாரையும் பாக்க வேண்டாம்… ஒழுங்கா வீட்டுல இருங்க… இல்லனா அத்தை கிட்ட சொல்ல வேண்டியதா இருக்கும்”
கிட்டத்தட்ட மிரட்டும் குரலில் அவன் பேசுவதைக் கண்டு மனதுக்குள் நொடித்துக் கொண்டாள் தக்ஷிண்யா.
“இவன் திட்டுறதுக்கும் மிரட்டுறதுக்கும் தான் வாயையே திறப்பான் போல… சரியான திமிர் பிடிச்சவன்”
அவளது மனதின் குரலை கேட்டுவிட்டவனை போல ருத்ரதேவ் திரும்பி முறைக்கவும் சட்டென திரும்பிக் கொண்டாள். அதற்குள் அவர்கள் இறங்குமிடமும் வந்துவிட கார் நின்றது.
எஸ்டேட் செக்யூரிட்டி ருத்ரதேவைக் கண்டதும் சல்யூட் வைக்க தலையசைப்புடன் அதை ஏற்றவன் கட்டிக்கலை வல்லுனர் குழுவை உள்ளே அழைத்துச் சென்றான்.
எங்கெல்லாம் க்ளாம்பிங் டெண்டை நிறுவினால் சரியாக இருக்குமென்ற கருத்தைக் கூறியவன் அவர்கள் கூறிய ஆலோசனைகளையும் மனதில் குறித்துக்கொண்டான்.
தக்ஷிண்யா வெறுமெனே அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். பேச்சுவார்த்தை முடிவடைந்து வல்லுனர் குழு சென்றுவிட ருத்ரதேவும் கிளம்ப எத்தனித்தான்.
அப்போது தக்ஷிண்யா தான் தவறி விழுந்த சரிவைக் காட்டி “இங்க க்ளாம்பிங் டெண்ட் வைக்கணும்னு ஏன் சொல்லுறிங்க? இங்க இருந்து கீழ பாத்தா தலை சுத்திடும்… க்ளாம்ப் டெண்ட் மேல ஏறி நின்னு பாத்தா பயத்துல மயக்கம் போட்டு விழுந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல… இது முட்டாள்தனமான முடிவா உங்களுக்குத் தோணலை?” என்று கேட்க நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தான் அவன்.
“க்ளாம்பிங்னா என்னனு உனக்குத் தெரியுமா? க்ளாமரஸ் கேம்பிங் (GLAMOUROUS CAMPING)… கிட்டத்தட்ட ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோட ரூம்ல என்னென்ன வசதி இருக்குமோ அதை இந்த நானூத்தைம்பது சதுர அடி க்ளாம்ப் டென்ட்ல குடுக்கப்போறோம்… இதை என்ஜாய் பண்ணுறதுக்கு வர்றவங்க யங்ஸ்டராவும், த்ரில்லை விரும்புறவங்களாவும் தான் இருப்பாங்க… அவங்களுக்கு இந்த மாதிரி பள்ளத்தாக்குக்கு மத்தியில உயரமான க்ளாம்ப் டெண்ட்ல காபி கப்போட நின்னு சுத்தி இருக்குற எஸ்டேட்டையும் எதிர்ல இருக்குற மலையையும் ரசிக்கிறதை விட இந்த கிடுகிடு பள்ளத்தாக்கை ரசிக்குறது ரொம்ப பிடிக்கும்… நான் ஆரம்பிக்குற இந்த புராஜெக்ட் எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கணும்… அதையெல்லாம் யோசிச்சு தான் இந்த இடத்தையும் சேர்த்து வாங்குனேன்”
தக்ஷிண்யா அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவள், தான் அங்கே விழுந்ததை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.
“நான் விழுந்தது கொஞ்சம் கிடைமட்டமான இடம், அங்கயே ரெண்டு மணிநேர போராட்டத்துக்கு அப்புறம் தான் என்னை காப்பாத்த முடிஞ்சுது… நீங்க சொல்லுறது நான் விழுந்த சரிவைத் தாண்டி இருக்குற பள்ளத்தாக்கைப் பத்தி… நீங்க இங்க வர்ற மக்களோட உயிரோட விளையாடுறிங்கனு எனக்குத் தோணுது… இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு எதுவுமில்ல”
“உன்னை மாதிரி சின்ன கம்ஃபர்டபிள் ஜோனுக்குள்ள வாழுறவங்களுக்குப் பயமா தான் இருக்கும்… சாகணும்னு விதி இருந்தா செருப்பு தடுக்கி விழுந்தா கூட செத்து தான் போவோம்… உன்னோட அட்வைஸை அனுதீப் கிட்ட சொல்லுறதுக்காக பத்திரப்படுத்தி வச்சுக்க… இப்ப கிளம்பலாம்”
இனிமேல் எனக்கென்ன வந்தது என்ற அலட்சிய பாவனையுடன் அவனைத் தொடர்ந்தாள் தக்ஷிண்யா.
*******
பிருந்தாவனம்…
மாலினியும் சர்வானந்தும் பெரியவர்களிடம் தக்ஷிண்யாவைப் பார்க்க அனுமதிக்கும்படி ருத்ரதேவிடம் பேசுங்கள் என நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
பார்வதி மீனாட்சியைப் பார்க்க அவரோ “அவன் தான் பாக்கக்கூடாதுனு எங்க எல்லாருக்கும் ஆர்டர் போட்டுட்டானே… அவனோட கோவத்தைப் பத்தி தெரிஞ்சுமா ரெண்டு பேரும் அடம்பிடிக்குறீங்க?” என்று கேட்க
“அப்ப அண்ணாவுக்குத் தெரியாம பாக்குறதுக்காச்சும் அலோ பண்ணு மீனு பாட்டி” என்று மாலினி அடம்பிடித்தாள்.
“நாங்க யாருக்கும் தெரியாம போயிட்டு வந்துடுவோம் பாட்டி” என்று சர்வானந்த் கூற
“அவ வேலை பாக்குறதே உங்க அண்ணனோட ஹோட்டல்ல தான்… அவனுக்குத் தெரியாமல் அங்க ஒரு புல் கூட அசையாதுடா” என பேரனையும் பேத்தியையும் சமாதானப்படுத்த விளைந்தனர் சதாசிவமும் மாணிக்கவாசகமும்.
அந்நேரம் பார்த்து ராஜேந்திரன் அங்கே வர அவரிடம் சிபாரிச்சுக்காகப் போய் நின்றனர் இருவரும்.
தக்ஷிண்யாவின் வருகையும் அவளின் வெறுப்பும் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் அகலாத நிலையில் எப்படியாவது மகளின் அன்பை ஜெயித்தாக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள்ளும் இருந்தது. இளையவர்களின் இந்தக் கோரிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் ராஜேந்திரன்.
“கவலைப்படாதிங்கடா… நானே உங்க ரெண்டு பேரையும் தக்ஷிய பாக்குறதுக்கு அழைச்சிட்டுப் போறேன்” என்று ராஜேந்திரன் உறுதியளிக்க இருவரும் உற்சாகத்துடன் தலையாட்டினர்.
சர்வானந்துக்குத் தேர்வு நடைபெறுவதால் அவனைப் படிக்க வருமாறு அழைக்க வந்த லலிதா அவர்களின் உரையாடலைக் கேட்டு ஸ்தம்பித்துப் போனார்.
மாலினியும் சர்வானந்தும் மட்டும் தக்ஷிண்யாவைப் பார்க்க விரும்பினால் ருத்ரதேவிடம் கூறி அவர்களைத் தடுத்துவிடலாம்.
ராஜேந்திரனை அவரால் தடுக்க முடியாது. சசிகலா தமையனிடம் லலிதாவைப் பற்றி தானறிந்த அனைத்தையும் கூறிவிட்டார். அன்றைய தினத்திலிருந்து இருவருக்கும் இடையே மாபெரும் இடைவெளி ஒன்று உருவாகியிருந்தது.
ராஜேந்திரனும் லலிதாவைப் பற்றி யோசிக்காமல் தக்ஷிண்யாவைச் சந்திக்க அவ்வபோது ஹோட்டலுக்கு செல்வதுண்டு. ஆனால் அவள் பட்டும்படாமல் பேசிவிட்டு நகர்வாள்.
மற்றவர்களைக் கட்டுப்படுத்த முடிந்த ருத்ரதேவால் ராஜேந்திரனை ஏனோ கட்டுப்படுத்த இயலவில்லை. தகப்பனுக்கும் மகளுக்கும் நடுவே நிற்க தான் யார் என்ற எண்ணத்துடன் ஒதுங்கிக் கொண்டான்.
ஆனால் இம்முறை தன்னோடு மாலினியையும் சர்வானந்தையும் அழைத்துச் செல்வதை வைத்து பிரச்சனை செய்யலாம் என லலிதாவின் குறுக்குப்புத்தி வேலை செய்ய அவர் ருத்ரதேவிடம் பேச ஓடினார்.
ராஜேந்திரனும் மகனையும் மருமகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்றுவிட பெரியவர்கள் ருத்ரதேவால் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாதென வேண்டிக்கொண்டனர்.
அவர்கள் கிளம்பிய சற்று நேரத்தில் சசிகலாவும் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கிளம்பிவிட்டார். வீட்டினர் ராஜேந்திரனோடு சென்ற மாலினி மற்றும் சர்வானந்தைக் குறித்து கவலைப்பட்டதில் சசிகலாவைக் கவனிக்கவில்லை.
அவர் நேரே சென்றது தக்ஷிண்யாவும் ஆரோஹியும் தங்கியிருந்த அவர்களுக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுசுக்குத் தான்.
கெஸ்ட் ஹவுசுக்குள் நுழைந்ததும் பணிப்பெண் ஏதோ சொல்ல வர “தக்ஷிக்குக் கால் பண்ணி அவங்கப்பா வந்திருக்குறார்னு சொல்லிடுங்கம்மா” என்று கட்டளையிட்டவர் ஹாலுக்குள் பிரவேசிக்கும் போதே ஆரோஹி சிரிக்கும் சத்தம் கேட்டது.
உள்ளே சென்றதும் அங்கே அமர்ந்திருந்தவர் “சசி…” என்று அழைத்தபடி எழுந்திருக்க
“எப்பிடி இருக்க கமல்?” என்று கேட்டபடி அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு எதிர் சோஃபாவில் அமர்ந்தார் சசிகலா.
ஆம்! வந்திருந்தவர் கமல்நாத். கிட்டத்தட்ட ஒரு மாத கால போராட்டத்துக்குப் பின்னர் அனுதீப் அவரைக் கண்டுபிடித்து சசிகலா சொன்ன தகவல்கள் யாவற்றையும் கூறி உதகமண்டலத்துக்குச் செல்லும்படி வேண்டிக்கொள்ள அவரும் வந்து சேர்ந்தார்.
அவர் அங்கே வரும் தகவலை தக்ஷிண்யாவிடமோ ருத்ரதேவிடமோ கூறாது மறைத்த சசிகலா, பல வருடங்களுக்குப் பிறகு நண்பரைச் சந்திக்கப் போவதை வீட்டினரிடமும் மறைத்துவிட்டார்.
கமல்நாத் சசிகலாவை நோக்கி புன்னகைத்தவர் “நல்லா இருக்குறேன்னு சொல்ல ஆசையா தான் இருக்கு சசி… ஆனா என்னால பொய் சொல்ல முடியாது… தேவி இல்லாத வாழ்க்கைய ஏதோ வாழ்ந்துட்டிருக்கேன்… தக்ஷி என் பொண்ணை பாத்துப்பானு நம்புனேன்… ஆனா அவளுக்கு அமையுற வாழ்க்கைய கெடுத்துக்குறான்னு கேள்விப்பட்டதும் மனசு கேக்காம ஓடி வந்துருக்குறேன் சசி… என் கதைய விடு… நீ எப்பிடி இருக்குற? தக்ஷியோட அப்பா நல்லா இருக்குறாரா? அவருக்குத் தேவிய பத்தி தெரியுமா?” என்று கேட்க
“ம்ம்! இந்த பிரச்சனை வந்ததும் முதல் வேலையா நான் தேவி இறந்ததை அண்ணன் கிட்ட சொல்லிட்டேன் கமல்… உங்க மூனு பேருக்கு நடுவுல சதி பண்ணுனவ லலிதா தான்னு அவர் கிட்ட எப்பவோ சொல்லிருக்கணும்… ஆனா அப்ப என் பேச்சை காது குடுத்துக் கேக்குற நிலமையில யாரும் இல்ல… அதோட நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டிங்க… நீ தேவியோட ஹைதராபாத்துக்குப் போயிட்ட… என் அண்ணாவும் லலிதாவ கல்யாணம் பண்ணிட்டார்… இந்த வாழ்க்கையாச்சும் அவருக்கு நிலைக்கட்டும்னு நான் வாயை மூடி அமைதியா இருந்தேன் கமல்… ஆனா இப்ப என் மகன் வாழ்க்கை பாதிச்சிடுமோனு பயமா இருக்கு… அந்தப் பயத்துல தான் நான் உன்னை வரவழைக்க அனுதீப் கிட்ட உதவி கேட்டேன்” என்றார் சசிகலா.
“நீ கவலைப்படாத சசி… தக்ஷி கண்டிப்பா உன் மருமகளா வருவா… அவ ஆசைப்பட்டது மாதிரி காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிப்பா… அவளையும் ருத்ராவையும் சேர்த்து வைக்குற துருப்புச்சீட்டு ஒன்னு என் கிட்ட இருக்கு… நீ கவலைப்படாத… கல்யாணம் முடிஞ்சதும் நான் ஆரோஹிய என் கூட அழைச்சிட்டுப் போயிடுவேன்… உன் வீட்டு மனுசங்க இவளால சங்கடப்பட வேண்டாம்”
“நீ ஆரோஹிய இங்க இருந்து அழைச்சிட்டுப் போனா வருத்தப்படுற முதல் ஆள் என் மகன் தான்… உன்னோட வருங்கால மருமகன் மனசு வருத்தப்பட்டா பரவால்லனு நினைச்சா நீ ஆரோஹிய அழைச்சிட்டுப் போகலாம்”
சசிகலா இவ்வாறு கூறவும் கமல்நாத்துக்குத் தர்மசங்கடமானது. அதை அவர் கூறவும்
“நீ தானப்பா ஆரோஹி இனிமே தக்ஷியோட பொறுப்புனு சொல்லிட்டு ஓடுனவன்… இப்ப மட்டும் ஏன் தயங்குற?” என்றார் அவர்.
“அப்ப நிலமை வேற சசி… அதோட ஆரோஹிக்காக கண்டிப்பா தக்ஷி மேரேஜ் லைஃபுக்குள்ள போவானு நான் நம்புனேன்… அவ வேற யாரையாவது மேரேஜ் பண்ணியிருந்தா கூட நான் இவ்ளோ யோசிக்க மாட்டேன்… அவ காதலிச்சது உன் பையனை… உன்னோட அண்ணிக்கு தக்ஷியவே பிடிக்காது… இதுல ஆரோஹியும் அங்க வந்துட்டா அதை வச்சு ரெண்டு பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்துவாங்களே”
“நான் ஒருத்தி இருக்குறதையே நீ மறந்துட்டல்ல”
கமல்நாத் அதன் பின்னர் ஆரோஹி தொடர்பாக வாதிடவில்லை. இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே “நீங்க ஏன் திடீர்னு இங்க வந்திருக்கீங்க?” என்ற கேள்வியோடு அங்கே வந்து நின்றாள் தக்ஷிண்யா.
ருத்ரதேவின் மீட்டிங்கில் சேகரித்த விவரங்களை அறிக்கையாக்கி அனுதீப்புக்கு அனுப்பியதோடு அன்றைய வேலை முடிந்துவிட ஃபெர்ன் ஹில்லில் இருந்து ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் அவளை கெஸ்ட் ஹவுஸில் இறக்கிவிட்டு சென்றிருந்தான் அவன்.
வரும் வழியிலேயே பணிப்பெண் அவளது மொபைலுக்கு அழைத்து விவரத்தைச் சொல்லிவிட ருத்ரதேவ் முன் முகம் மாறாமல் எப்படியோ சமாளித்து வந்து நின்றாள்.
“எல்லாம் காரணமா தான் தக்ஷி” என்றார் கமல்நாத்.
“அந்தக் காரணம் ருத்ரா தக்ஷியோட மேரேஜா இருந்தா நீங்க வந்தது வேஸ்ட்… நான் என்னோட முடிவை மாத்திக்க மாட்டேன்”
பிடிவாதத்தின் மறுவுருவாக நின்றவளை தீர்க்கமாகப் பார்த்த கமல்நாத் தான் கொண்டு வந்த பேக்கிலிருந்து டைரியை எடுத்து நீட்டினார்.
“இது என்ன?”
“இது தேவியோட டைரி… அவளுக்கு கேன்சர் வந்து ட்ரீட்மெண்ட் ஃபெயிலியர் ஆனதுக்கு அப்புறம் டைரி எழுதுறதை வழக்கமா வச்சிருந்தா… நான் ஒன்னும் சசி கூப்பிட்டானு அடிச்சுப் பிடிச்சு இங்க ஓடி வரல… நான் உயிருக்கு உயிரா காதலிச்ச தேவி அவளோட மகளுக்குச் சொல்ல நினைச்ச தகவலை கொண்டு வர்ற போஸ்ட்மேனா தான் வந்திருக்குறேன்… இதை படிச்சிட்டு ருத்ராவ மேரேஜ் பண்ணிக்கணுமா வேண்டாமானு நீ முடிவு பண்ணு… உன்னை நானோ சசியோ கட்டாயப்படுத்தப் போறதில்ல”
தக்ஷிண்யா டைரியை மறுபேச்சின்றி வாங்கிக்கொண்டாள். தனது சிறுபிள்ளைத்தனமான தவறுகளால் தேவிகாவுடன் வாழும் வாய்ப்பை இழந்துவிட்டதாக தினமும் வருந்துபவளுக்கு அன்னையின் எழுத்தாவது தன்னுடன் இருக்கட்டும் என்ற எண்ணம். கூடவே அப்படி என்ன தான் அம்மா தன்னிடம் கூற நினைத்திருப்பார் என்ற குறுகுறுப்பும் ஒரு காரணம்.
“கடைசி டைரிக்குறிப்பை வாசி… அதுல தான் உங்கம்மாவோட ஆசைய அவ எழுதியிருக்கா”
கமல்நாத் சொல்லவும் டைரியில் இறுதியாக எழுதப்பட்ட குறிப்பை வாசிக்க ஆரம்பித்தாள் தக்ஷிண்யா. வாசிக்க வாசிக்க இறுதி நாட்களில் அன்னை தன்னோடு வாழ எவ்வளவு விரும்பியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.
தேவிகா எப்போதும் மானே தேனே என்று கொஞ்சும் ரகமல்ல. கோபமோ பாசமோ அதை வெளிப்படையாக எவ்வித சர்க்கரைப்பூச்சுமின்றி இயல்பாக காட்டுபவர். அவரது டைரிக்குறிப்பும் அதையே பிரதிபலித்தது.
யாரோ யாருக்கோ எழுதும் கடிதம் போலின்றி தேவிகாவே எதிரே நின்று பேசுவது போன்ற மாயையை தக்ஷிண்யாவுக்கு உண்டாக்கியது அந்த டைரிக்குறிப்பு.
முழுவதுமாக வாசித்து முடித்தவளின் கண்கள் கலங்கி, நிற்க தெம்பில்லாமல் சோர்ந்து அமர்ந்துவிட்டாள்.
சசிகலா அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொள்ளவும் விம்மி அழ ஆரம்பித்தாள்.
கமல்நாத் அருகே அமர்ந்திருந்த ஆரோஹி அவள் அழுவதற்கான காரணம் புரியாமல் விழித்தாள்.
“அக்கா ஏன் அழுறாப்பா?”
“அக்காவுக்கு மேரேஜ் ஆகப்போகுதுல்ல… புது குடும்பத்துக்குள்ள போகுறதுக்கு அவளுக்குப் பயமா இருக்குதாம்… அதான் அழுறாடா”
ஆரோஹி உடனே எழுந்து அவளருகே வந்தவள் புஜத்தைச் சுரண்டி அழைத்தாள்.
தக்ஷிண்யா கண்ணீரோடு பார்க்கவும் துடைத்துவிட்டவள் “நீ பயப்படாதக்கா… தேவ் மாமா ரொம்ப நல்லவங்க… அவங்க உன்னை அழவிடமாட்டாங்க… நானும் உன் கூடவே வர்றேன்… யாராச்சும் உன்னை அங்க பயம் காட்டுனா நான் அவங்களை என் கேக்டசுக்குச் சாப்பாடா போட்டுடுவேன்” என்று சொல்லவும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளது அன்னை தேவிகா அவளுக்கென விட்டுச் சென்ற ஞாபகச்சின்னங்கள் அந்த டைரியும் ஆரோஹியும் மட்டும் தான். ஆரோஹியை அணைக்கும் போது அன்னையை அணைக்கும் உணர்வு அவளுக்கு.
கமல்நாத் எழுந்து தக்ஷிண்யாவிடம் வந்தவர் அவளது சிகையை வாஞ்சையோடு கோதி கொடுத்தார்.
“நீயும் ருத்ராவும் சண்டைய மறந்துட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும் எனக்கு”
“ஏன் இந்த டைரிய முன்னாடியே என் கிட்ட நீங்க குடுக்கல?”
“தேவியோட ஞாபகமா இந்த டைரியை வச்சிருந்தேன்மா… நான் இதை ஓப்பன் பண்ணி படிச்சதே இல்ல… அனுதீப் என்னை கூப்பிட்டு விவரத்தைச் சொல்லவும் ஏனோ இதை படிச்சா தேவி என் கூட பேசுற உணர்வு வருமேனு படிக்க ஆரம்பிச்சேன்… கடைசி டைரிக்குறிப்பை படிச்சதும் உன் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்னு நம்பி ஓடி வந்திருக்குறேன் தக்ஷி… ப்ளீஸ்மா! பிடிவாதத்தை விட்டுடு”
அவர் சொல்வதை கேட்கலாமா வேண்டாமா என இரட்டைமனதுடன் தக்ஷிண்யா போராட ஆரம்பித்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


