“நான் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். நம் குடும்பமோ அலுவலகமோ நம்மைச் சுற்றி தான் இயங்குகிறது, நாம் இல்லையென்றால் அவர்கள் தவித்துப் போவார்கள் என்று முட்டாள்தனமாக மார்த்தட்டிக் கொண்டிருப்போம் நாம். ஆனால் கசப்பான உண்மை யாதெனில், யார் இல்லையென்றாலும் இந்த உலகம் இயங்கும். நாம் இல்லையென்றாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அவர்களது வழக்கமான இயல்பு வாழ்க்கையை வாழ்வார்கள். எனவே எல்லாமே நான் தான் என்ற கர்வத்தை விடுத்து வாழ கற்றுக்கொள்வது நல்லது”
-ருத்ரதேவ்
தக்ஷிண்யா தங்களது உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். யாரை பார்க்கக்கூடாதென இத்தனை ஆண்டுகள் வைராக்கியத்துடன் இருந்தாளோ அவர்களை கண்டுவிட்டாளே! இம்மனிதர்கள் வாழும் ஊரில் இனி அவளுக்கென்ன வேலை!
ருத்ரதேவை அவள் காதலித்திருக்கலாம். ஆனால் அவன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிந்த அடுத்த நொடி அவனும் அவனது காதலும் இனி தேவையில்ல என்ற முடிவை அவள் எடுத்துவிட்டாள்.
அவனது குடும்பத்தினரின் புகைப்படத்தைப் பார்க்கும்படி நைனிடால் செல்லும் போதே அவன் கூறினானே! மகாதேவின் அழைப்பு மட்டும் வரவில்லை என்றால் அவள் எப்போதோ அவனை விட்டு விலகியிருப்பாள். அவனாவது அவளது குடும்பத்தைப் பற்றி முழுமையாக விசாரித்திருக்கலாம். தக்ஷிண்யா சொல்ல வரும் போதெல்லாம் உனது கசப்பான கடந்தகாலம் பற்றி எந்த விவரமும் எனக்குத் தேவையில்லை என்று அவனும் கூறிவிட இருவரும் யாரென முழுவதுமாக தெரிந்து கொள்ளாமலேயே காதலித்து பாதி திருமணம் வரை வந்துவிட்டனர்.
வார்த்தைக்கு வார்த்தை அத்தையைப் பற்றி சொல்லி உருகுபவன் கட்டாயம் லலிதாவுக்குப் பிடிக்காத தன்னை மணமுடிக்கவே மாட்டான். இந்நேரம் அவனுக்குத் தகவல் போயிருக்க கூடும். ஆனால் இது வரை அவனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதிலேயே அவனது முடிவு தெரிந்துவிட்டது தக்ஷிண்யாவுக்கு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
உறவுகளையே நம்பாதவள் காதலித்தது தவறு. காதலிப்பவனின் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் காதலித்தது மாபெரும் தவறு. அந்த தவறுக்கான தண்டனையாக மீண்டும் ஒரு முறை மனமுடைந்து நிற்பது அவள் தானே!
லலிதாவின் மனதில் இருக்கும் வஞ்சம் கிஞ்சித்தும் குறையவில்லை. அவளது மருமகனை இனி மணந்தால் தக்ஷிண்யாவின் சுயமரியாதைக்கு அது இழுக்கு.
தங்களின் உடைமைகளை எடுத்து வைத்தவள் அப்படியே அமர்ந்து விட்டாள். சிந்தனை செய்யும் திறனையிழந்து மூளை மந்தமாகிப் போனது.
“எங்கப்பாவ பாக்கணும்… என்னை உள்ள போக விடுங்க”
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திரனுக்கும் தேவிகாவுக்கும் விவாகரத்து ஆன பிறகு பிருந்தாவனத்தின் வாயிலில் நின்று லலிதாவிடம் கெஞ்சியது அவளது நினைவுக்கு வந்தது.
“இனிமே உங்கப்பாக்கும் உங்கம்மாக்கும் எந்த ஒட்டும் உறவுமில்ல… இந்த வீட்டுப்படி ஏறுறதுக்கு உனக்கு உரிமையும் இல்ல… நான் அடிச்சுத் துரத்துறதுக்கு முன்னாடி நீயே போயிடு”
முகத்தில் ராட்சச பாவனையுடன் லலிதா கூறியது தக்ஷிண்யாவின் நினைவிலாடியது. அன்றிருந்த குரூரம் இன்னும் மாறவில்லை. இப்படிப்பட்டவர் இருக்குமிடத்தில் தன்னால் எப்படி வாழ முடியும்?
அவள் தரையில் அமர்ந்திருக்கவும் ஆரோஹி அவளருகே வந்து உட்கார்ந்தாள்.
“தேவ் மாமா எப்ப வருவாங்க?”
ஆவலுடன் அவள் கேட்க தக்ஷிண்யா பதில் சொல்ல வழியின்றி தவித்துப் போனாள்.
அப்போது வீட்டுக்குள் ஷூ கால்களின் அரவம் கேட்டது. சில நொடி தாமதத்திற்கு பிறகு அவள் அமர்ந்திருந்த அறையின் வாயிலில் நின்றிருந்தான் ருத்ரதேவ்.
கை காலெல்லாம் சிராய்ப்புடன் ஹேசல்நட் விழிகளில் கோபம் மின்ன நின்றவனைக் கண்டதும் தூக்கி வாரிப் போட எழுந்தாள் தக்ஷிண்யா.
“தேவ் மாமா” என்று ஆர்ப்பரித்தபடி அவனிடம் ஓட முயன்ற ஆரோஹியை இழுத்துப் பிடித்துக்கொண்டவள் கண்களால் அவளை மிரட்டி தன்னிடம் நிறுத்திக்கொண்டாள்.
ருத்ரதேவ் முழங்கையில் சிராய்த்திருந்த காயத்தில் வழிந்த இரத்தத்தை உதறியபடியே அவளை நெருங்கவும் “ஆரு நீ ரூமுக்குப் போ” என்று அவசரமாக ஆரோஹியை வீட்டிற்குள் அனுப்பி வைத்தாள்.
பின்னரும் தன்னிடம் நின்றவனை ஏறிடும் தைரியம் அவளுக்கு இல்லை தான். ஆனால் இப்படியே இவனது கோபத்திற்கு அஞ்சினால் தனது சுயமரியாதை கேள்விக்குறியாகிவிடுமே!
துணிவைத் திரட்டிக்கொண்டு “எதுக்கு இங்க வந்தீங்க?” என்று வினவியவளை ஆத்திரத்துடன் உறுத்து விழித்தான் ருத்ரதேவ்.
“ஏன்னு உனக்குத் தெரியாதா? யாரை கேட்டு எங்கப்பா அம்மா கிட்ட என்னை பிடிக்கலனு சொல்லிட்டு ஓடி வந்த தக்ஷி?”
கண்களில் சினம் பொங்க வினவினான் அவன்.
“யாரைக் கேக்கணும்? எனக்கு இஷ்டமில்ல… அதான் உங்களைப் பிடிக்கலனு சொல்லிட்டு வந்துட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னவள் மீது கோபம் வந்தாலும், பாவம் அவனால் அவளிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியாதே!
காரணம் அவள் மீது முதல் பார்வையிலேயே வைத்துவிட்ட காதல் ருத்ரதேவை அந்தளவுக்குப் பைத்தியக்காரனாக்கி இருந்தது.
இருப்பினும் பொறுமையாக வினவவும் பிடிக்கவில்லை.
“ஏன் பிடிக்கல? ஷான்ஃபி, நைனிடால்னு என் கூட சுத்துறப்ப பிடிச்சிருந்துச்சுல்ல… உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்த அதே ரிவர் பேங்க்ல வச்சு உன் கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணுனப்ப என்னைப் பிடிச்சிருந்துச்சுல்ல… அனுதீப் மேரேஜ்ல விளையாட்டுத்தனமா பண்ணுனாலும் அக்னிசாட்சியா உன் நெத்தில குங்குமம் வச்சப்ப அவ்ளோ பிடிச்சிருந்துச்சுல்ல… இப்ப ஏன் பிடிக்கல? எனக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் தக்ஷி”
தக்ஷிண்யாவோ “இதுக்கான ரீசனை என் கிட்ட கேக்குறதை விட உங்க அத்தை மாமா கிட்ட கேட்டா பெட்டர்… ஏன்னா எல்லாத்துக்கும் ஆரம்பப்புள்ளி அவங்க தான்… சோ என் டைமை வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க” என்றவளின் பார்வை பதிந்தது என்னவோ அவனது முழங்கை காயத்தின் மீது தான்.
தனது பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தால் விழுந்தடித்து ஓடி வந்திருப்பானா? நெற்றியிலும் காயம் இருக்கிறதே! ஒருவேளை வரும் வழியில் ஏதேனும் வாகனத்தின் மீது இடித்திருப்பானா?
காதல் கொண்ட மனம் என்னென்னவோ கேள்விகளை பிதற்றித் தள்ளியது. ஆனால் அவள் நாவை கட்டிப் போட்ட சுயமரியாதையைத் தாண்டி ஒரு சொல் கூட வெளியே வரவில்லை.
ருத்ரதேவ் கிளம்பாமல் அங்கேயே நின்றான்.
“நான் உங்களை போகச் சொன்னேன் ருத்ரா”
தக்ஷிண்யாவின் குரல் உயர அவனது கோபம் பன்மடங்காகியது. வேகமாக அவளை நெருங்கியவன் அவளது மோவாயை அழுத்தமாகப் பற்றவும்
“என்ன பண்ணுறிங்க நீங்க? எனக்கு வலிக்குது ருத்ரா” என்று அவனது கையைத் தட்ட முயன்றாள் தக்ஷிண்யா.
“வலிக்குதா? இவ்ளோ நால் லவ் பண்ணிட்டு இப்ப பிடிக்கலனு சொல்லுறப்ப எனக்கும் தான் வலிக்குதுடி… என்னால வேற யார் கிட்டவும் எந்தக் காரணத்தையும் கேக்க பிடிக்கல… நான் லவ் பண்ணுனது உன்னைத் தான்… ஒழுங்கா என்ன காரணம்னு சொல்லு… இல்லைனா உன்னை நான் விடுறதா இல்ல”
கோபத்தில் பற்கள் அரைபட பேசியவனின் இந்த முகம் தக்ஷிண்யாவுக்குப் புதிது. கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.
ஆனால் அவனோ விடுவதாக இல்லை. அவனது பிடி இன்னும் இறுகவும் மோவாய் எலும்புகளில் வலி பரவ கண்களை இறுக மூடிக்கொண்டவள்
“உங்க மாமா தான் என்னோட அப்பா… எங்கம்மாவோட பேர் தேவிகா… இது போதுமா?” என்று கத்தினாள்.
அடுத்த நொடி ருத்ரதேவின் கரங்கள் அழுத்தத்தை இழந்து தானாக கீழே இறங்கியது.
“வாட்? நீ இப்ப என்ன சொன்ன?” அதிர்ச்சியாய் கேட்டான் அவன்.
“நான் ராஜேந்திரனுக்கும் தேவிகாவுக்கும் பிறந்த பொண்ணு… உங்க குடும்பம் மொத்தமும் எங்கம்மாவை லவ் மேரேஜ் பண்ணுனதுக்காக மிஸ்டர் ராஜேந்திரனை ஒதுக்கி வச்சது மறந்து போச்சா?”
ருத்ரதேவுக்கு இப்போது புரிந்தது ஏன் இவளை எங்கேயோ பார்த்தது போல இருந்தது என்று.
இந்த முகம் அவர்களின் வீட்டின் அறையில் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும் பெரியவர்களில் ஒருவரான தாட்சாயணி பாட்டியோடு அல்லவா ஒத்துப் போகிறது!
அப்படி என்றால் இவள்….
யோசிக்கக் கூட அவனுக்குப் பயமாக இருந்தது.
“ராஜாக்குப் பொண்ணு பிறந்திருக்குதாம்… அவ அப்பிடியே தாட்சாயணி அத்தை ஜாடையாம்”
அவன் சிறுவயதில் இருந்த போது யாரோ சதாசிவத்திடம் கூறியது இப்போது அவனது செவியில் அறைவது போல கேட்டது.
“அந்த தேவிகாவால என் பொண்ணு விஷம் குடிச்சிட்டாளே”
பார்வதி அழுது அரற்றும் காட்சியும், வாயில் நுரை தள்ள லலிதாவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற காட்சியும் திரைப்படம் போல விரிந்தது.
“அழாதிங்க அத்தை… நான் ராஜா மாமாவ வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?”
மருத்துவமனை படுக்கையில் கிடந்த லலிதாவிடம் கேட்ட சிறுவன் அவனே!
“அந்த தேவிகா மோசக்காரி ருத்ரா… அவ உன் மாமாவ நம்ம கிட்ட அனுப்பமாட்டா தங்கம்” என்றபடி லலிதா கண்ணீர் உகுத்த நிகழ்வும் அந்த ஞாபக வரிசையில் வரிசையாய் வரவும் தன்னெதிரே நின்று கொண்டிருந்த தக்ஷிண்யாவை வெறித்தான் ருத்ரதேவ்.
இவளது அன்னை எனது அத்தையின் வாழ்க்கைக்கு உலை வைத்தவர்! எங்கள் குடும்பத்து பெரியவர்களை பரிதவிக்க வைத்தவர்! காதல் மயக்கத்தில் இவளைப் பற்றிய விபரம் எதையும் கேட்க மறுத்த என் மீது தான் தவறுள்ளது.
ஆனால் எந்தக் காரணத்துக்காகவும் என் காதலை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. இவளோ கடந்த கால கசப்பை மனதில் வைத்துக்கொண்டு என்னையும் என் காதலையும் அல்லவா உதாசீனப்படுத்துகிறாள்!
என் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் என்னை வேண்டாமென உதறியவள் உண்மையாகவா என்னைக் காதலித்திருப்பாள்? பெரியவர்களின் சண்டையை எங்கள் காதலுக்குள் நுழைத்து இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும் முன்னர் ஒரு முறை கூட ஷான்ஃபியில் நடந்த எதுவும் இவள் மனதைச் சுடவில்லையா?
குடும்பப்பிரச்சனைக்காக தன்னை ஒதுக்கித் தள்ளியவளை கண்கள் நிறைய வெறுப்பை நிரப்பிக்கொண்டு பார்த்தான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா அவனது முகமாற்றத்தை வேறுவிதமாகப் புரிந்து கொண்டாள்.
“இனிமே உங்களுக்கும் என்னைப் பிடிக்காது… ப்ளீஸ் கிளம்புங்க” என்கவும் நேராய் நிமிர்ந்தவன் அவளைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
தக்ஷிண்யா செல்பவனையே பார்த்தவள் ஆரோஹியின் நினைவு வர அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்.
*******
பிருந்தாவனம்…
“ருத்ரா அவளை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துடுவான்ல… சொல்லுங்கப்பா, அந்த தேவிகாவோட பொண்ணை அவன் வேண்டாம்னு சொல்லிடுவான் தானே”
சதாசிவத்திடம் அச்சம் கப்பிய விழிகளுடன் கேட்டுக் கொண்டிருந்தார் லலிதா.
ருத்ரதேவ் சென்று சில நிமிடங்களில் கோவிலுக்குச் சென்றிருந்த பெரியவர்கள் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். அங்கே நிலவிய அசாதாரணமான அமைதி அவர்களுக்குப் புதிராய் தோன்றியது.
“என்னாச்சு சசி? ஏன் நாலு பேர் முகமும் சரியில்ல?”
மீனாட்சி மகளிடம் வினவ அவர் பதிலளிக்கும் முன்னர் லலிதா அனைத்தையும் மாமியாரிடம் கூறிவிட்டார்.
தேவிகாவைப் பற்றிய பேச்சில் பெரியவர்கள் முகம் மாறினாலும் இத்தனை வருடங்கள் கழித்து வீட்டை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்ற இரத்த உறவு திரும்பி வந்த மகிழ்ச்சி தோன்றாமல் இல்லை.
எப்போதும் மகளுக்காக வேண்டிக்கொள்ளும் சதாசிவம் கூட இம்முறை பேரனின் மனது என்ன பாடுபடும் என்றே சிந்தித்தார்.
போன தலைமுறையின் பிணக்குகளை இளையவர்களிடம் வேறுபாட்டை உண்டாக்க வேண்டாம் என்ற எண்ணம் அவருக்கு. அதை வெளிப்படையாகச் சொன்னால் மகள் எவ்வாறு புரிந்துகொள்வாளோ என்ற பயத்தால் வாயைத் திறக்கவில்லை அவர்.
மாணிக்கவாசகமும் மீனாட்சியும் பேத்தியைக் காண முடியாதா என்ற ஏக்கத்தில் மூழ்கிவிட பார்வதியோ மகளையும் மருமகனையும் புதிராகப் பார்த்தார்.
“என்ன பண்ணலாம்னு இருக்க ராஜா?”
ராஜேந்திரனிடம் வினவினார் அவர்.
சதாசிவத்திடம் பேசிக்கொண்டிருந்த லலிதாவோ “அவர் பண்ணுறதுக்கு என்ன இருக்கு? என் மருமகன் அந்த ஒழுக்கம் கெட்டவளோட பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துடுவான்” என்றார் மனதில் உதித்த பயத்தை மறைத்தவாறு.
மகளைக் கண்டிக்கும் பார்வை பார்த்தார் பார்வதி.
“அம்மாவோட குணம் பொண்ணுக்கு இருக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல லல்லி”
“என்னம்மா பேசுற நீ? கொஞ்சமாச்சும் என்னைப் பத்தி யோசிச்சியா நீ?”
“இனிமே உன்னை பத்தி யோசிக்க எதுவும் இல்லாததால இப்ப நான் என் பேரனை பத்தி யோசிக்குறேன்… நீ ஆசைப்பட்ட மாதிரி ராஜாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு மகனோட நிறைவா தான வாழுற… ருத்ரா மட்டும் ஏன் அவ விரும்புன பொண்ணை விட்டுட்டு வரணும்? உன்னோட பகை, வெறுப்பை மூட்டை கட்டி வச்சிட்டு ருத்ராவுக்காக யோசி”
“நீயா பேசுறம்மா?”
“நானே தான்… என் பேரனுக்காக நான் பேசாம வேற யார் பேசுவா?”
சசிகலா பார்வதியை திகைப்புடன் பார்த்தார். மகளுக்குப் பரிந்து பேசும் மாமியாரா இது என்ற வியப்பு!
சொல்லப் போனால் அங்கிருந்த அனைவருக்கும் அதே எண்ணம் தான். தானாக யாரிடமும் பேசக்கூட யோசிக்கும் ருத்ரதேவ் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் அவள் கட்டாயம் அவனுக்குப் பிடித்த குணாதிசயங்களைக் கொண்டவளாகவே இருப்பாள். மற்றவர்கள் எப்படியோ சசிகலாவுக்குத் தேவிகாவைப் பற்றி நன்றாகவே தெரியும்.
பாசமோ வெறுப்போ அதை வெளிப்படையாக காட்டுபவர் அவர். லலிதாவைப் போல அமைதியாகக் காட்டிக்கொண்டு குழி தோண்டும் பழக்கம் தேவிகாவுக்குக் கிடையாது. கடந்து போன சம்பவங்களில் பெரும்பான்மை லலிதாவின் அகங்காரத்தால் நிகழ்ந்தவை. தேவிகாவின் ஈகோவும் அதற்கு ஒரு காரணம் தான் என்றாலும் ராஜேந்திரன் தேவிகாவின் பிரிவுக்கு முழுமுதற்காரணம் லலிதாவே.
அச்சமயத்தில் அவர் செய்த கலவரங்கள் எண்ணற்றவை. இப்போதும் அதே போல கலவரம் செய்து மகனின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க திட்டமிடுகிறார் என்றே சசிகலா எண்ணினார்.
பார்வதியிடும் அவர் விவாதிப்பதை பொறுமையாகப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்தார்.
“என் மகன் என்ன சொல்லுறானோ அது தான் முடிவு… அவனை யாரும் குழப்ப நினைக்க வேண்டாம்… ருத்ரா நம்மவீட்டுப் பையன்னு தெரிஞ்சதால தான் தக்ஷி அவனை வேண்டாம்னு சொல்லிருக்கா… என்னமோ நீ மட்டும் தான் பாதிக்கப்பட்ட மாதிரி நடிக்காத லல்லி… உங்க எல்லாரோட சண்டையில பெரிய பாதிப்பு அந்தப் பொண்ணுக்குத் தான்… நீ எங்க அண்ணனை மேரேஜ் பண்ணிக்கிட்டு ஒதுங்கிட்ட… தேவிகாவுக்குக் கமல் துணையா இருந்திருப்பான்… ஆனா உங்கள்ல யாருமே தக்ஷிய பத்தி யோசிக்கல”
“ஏன்? அவளுக்கு என்ன குறை? அவங்கம்மாவ கட்டுன ரெண்டாவது அப்பன் அவளை ஒன்னும் அம்போனு விட்டுருக்க மாட்டான்… நீ பாத்தியே, உன் ஃப்ரெண்ட் விவாகரத்து கிடைச்சதும் அது தான் சாக்குனு அந்தக் கமல்நாத்தை கல்யாணம் பண்ணி பிள்ளையும் பெத்துருக்கா”
லலிதா துவேசமாகப் பேசவும் சசிகலாவின் கோபம் இன்னும் அதிகரித்தது.
“ஓஹோ! நீ கூட தான் விவாகரத்து கிடைச்சதும் எங்கண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சர்வாவ பெத்துக்கிட்ட… சொல்லப் போனா சர்வாவ விட ஆரோஹி சின்னவ… உன் கணக்குப்படி பாத்தாலும் தேவிகா அவ்ளோ சீக்கிரம் இது தான் சாக்குனு ரெண்டாவது தடவை குடும்பவாழ்க்கையில நுழையல… அவளை பத்தி இன்னொரு வார்த்தை அசிங்கமா பேசுனேனா நல்லா இருக்காது சொல்லிட்டேன்… பெத்தவங்க விவாகரத்து பண்ணி பிரிஞ்சு அவங்களுக்கு இன்னொரு பொண்டாட்டியவோ புருசனையோ தேடிக்கலாம்… ஆனா அவங்களுக்குப் பிறந்த குழந்தை இன்னொருத்தரை அப்பாவாவோ அம்மாவாவோ ஏத்துக்காது… என்ன தான் கமல் தங்கத்தட்டுலயே சோறு ஊட்டியிருந்தாலும் தக்ஷிக்கு அவனை அப்பாவா ஏத்துக்க முடியல… இப்ப வரைக்கும் அவனை அவ அங்கிள்னும், கார்டியன்னும் தான் சொல்லுறதை வச்சு கூடவா உனக்குப் புரியல? என் ஃப்ரெண்டைப் பத்தி அவ பொண்ணைப் பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது… தக்ஷி பத்தி முடிவெடுக்குற உரிமை ருத்ராவுக்கு மட்டும் தான் இருக்கு”
லலிதா சசிகலாவின் பேச்சிலிருந்த உண்மையால் முகம் வெளிறிப் போய் நிற்கும் போதே “இனிமே தக்ஷிண்யாவுக்கு என் வாழ்க்கையில எந்த இடமும் இல்லம்மா” என்றபடி வந்து நின்றான் ருத்ரதேவ்.
சசிகலாவோடு சேர்ந்து மற்ற அனைவரும் அதிர லலிதாவின் முகத்திலோ வெற்றிப்புன்னகை!
மருமகனை கண்ணீர் மல்க பார்த்தவர் “நீ என் மருமகன்னு நிரூபிச்சிட்ட ருத்ரா” என்றார்.
ருத்ரதேவ் எவ்வித உணர்ச்சியுமின்றி அனைவரையும் வெறித்தவன் “அவளைப் பத்தி உண்மை தெரிஞ்சதால நான் இந்த முடிவுக்கு வரல… என்னோட இந்த முடிவுக்கு அவ மட்டும் தான் காரணம்… கடந்த காலத்துல நடந்த சம்பவத்துக்காக என்னை வேண்டாம்னு தூக்கிப் போட நினைச்சவளை நான் எப்பிடி காதலிக்க முடியும்? யார் ஒருத்தர் என்னோட அன்பையும் பாசத்தையும் புரிஞ்சிக்கலையோ அவங்க எனக்கு வேண்டாம்… இனிமே இங்க யாரும் அவளைப் பத்தி பேசாதிங்க” என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் வந்து அடைபட்டுக்கொண்டான்.
அவனது மனம் எரிமலையைப் போல கொதித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு எளிதில் இவள் என்னைத் தூக்கி எறிந்துவிட்டாள்? அது சரி! பெண்களுக்குக் காதலைத் தூக்கி எறிவது என்ன புதிதா? ஒருவனைக் காதலித்து இன்னொருவனை மணமுடிக்கும் வித்தையை பிறப்பிலேயே கொண்டு பிறந்தவர்கள் தானே பெண்கள்!
அந்நேரம் ஒட்டுமொத்த பெண்கள் சமுதாயத்தையே வெறுத்தான் ருத்ரதேவ். மனமோ சினமடங்காமல் கொதித்துக் கொண்டிருந்தது. நீண்டநேரம் அறைக்குள் அங்குமிங்குமாக அலைந்தவன் நெடுநேர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக அனுதீப்பின் எண்ணுக்கு அழைத்துப் பேசினான்.
அவனது கோரிக்கையை அனுதீப்பும் ஏற்றுக்கொண்டான்.
“ஓ.கே… நான் தக்ஷியோட ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் பண்ணிடுறேன்… இதுக்கு மேல நீயே பாத்துக்க… எனக்கு என்னோட வேலை முடியணும்… அதே நேரம் என் ஃப்ரெண்ட்டும் நல்லா இருக்கணும்… இப்ப நீ சொன்னதுக்கு நான் சம்மதிக்குறேன்… ஆனா கோவத்துல அவங்களை ஹர்ட் பண்ணுறேனு நீ எதுவும் ஏடாகூடமா பண்ணுனா அது உன்னைத் தான் காயப்படுத்தும்னு மறந்துடாத ருத்ரா… எதையும் செய்யுறதுக்கு முன்னாடி ஆழ்ந்து யோசிச்சுட்டு செய்”
நண்பனின் நல்வாழ்வுக்கு அறிவுரை பகர்ந்துவிட்டு அவனும் அழைப்பைத் துண்டித்தான். ருத்ரதேவ் மனம் தெளிந்தவனாக தனது அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர அங்கே மிச்சமிருந்தவர் லலிதா மட்டுமே!
சோபாவில் அவன் சாவகாசமாக அமரவும் ஓடோடிப் போய் காபி போட்டு எடுத்து வந்து நீட்டியவர்
“நீ எடுத்த முடிவு தான் சரி ருத்ரா… அவளை மாதிரி ஒருத்திய நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ அம்மாவ மாதிரியே உன் முதுகுக்குப் பின்னாடி இன்னொருத்தன் கூட உறவு வச்சிக்க அவ தயங்கமாட்டா… நீ தப்பிட்டடா” என்கவும் எடுத்த காபி கோப்பையை மீண்டும் சாசரில் வைத்துவிட்டு எழுந்தான் ருத்ரதேவ்.
லலிதா என்னவென நோக்கும் போதே அவரை உணர்ச்சிகளற்ற விழிகளால் ஏறிட்டவன்
“முன்னாடி நடந்த பிரச்சனைல நீங்க பாதிக்கப்பட்டிருக்கீங்க… அந்த லேடி பண்ணுன தப்பு என்னனு இந்தக் குடும்பத்துக்கே தெரியும்… அதுக்காக அவங்களை இந்தக் குடும்பத்தை விட்டு ஒதுக்கியும் வச்சோம்… அவங்களும் இன்னொரு வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு ஒதுங்கிட்டாங்க… இதுல தக்ஷியோட தப்பு எதுவுமில்ல… ஆனா இன்னைக்கு என்னை வேண்டாம்னு ஒதுக்குனது அவ செஞ்ச ஆகச்சிறந்த தப்பு… அவளை என்ன பண்ணணும்னு நான் பாத்துக்குறேன்… இனிமே நீங்க அவளைப் பத்தி பேசாதிங்க… என் வாழ்க்கையில என்ன நடக்கணும்ங்கிறதை நான் பாத்துக்குறேன்… நீங்க இனிமே ரெஸ்ட் எடுக்கலாம்” என்று சொல்லிவிட அவரது முகம் சிறுத்துப் போய்விட்டது.
காபி கோப்பையுடன் அவர் அங்கிருந்து சென்றுவிட ருத்ரதேவ் அவனது மேலாண்மைக்குக் கீழே இருக்கும் கோகோ லகூன் ரிசார்ட்டுக்கு வழக்கமான அலுவல்களைக் கவனிக்க கிளம்பிவிட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


