“மதில் மேல் பூனை நிலையை இது வரை அனுபவித்திருக்கிறீர்களா? நாம் நேசிக்கும் மனிதர்கள் இரு அணியாக பிரிந்து நிற்கும் போது அவர்களுக்கு நடுவே நிற்பது எத்துணை துரதிர்ஷ்டமான நிலை தெரியுமா? என்ன முடிவெடுப்பது, யார் பக்கம் நிற்பது என புரியாமல் குழம்பி தவிக்கும் போது வாழ்க்கை போர்க்களமாக மாறிப்போகும். அந்தப் போர்க்களத்தில் வாள்களோ ஈட்டிகளோ ஆயுதங்களாக இருப்பதில்லை. அங்கே வார்த்தைகள் மட்டுமே ஆயுதம். அதைக் கொண்டு யார் யாரைத் தாக்கினாலும் காயம் படுவதென்னவோ நடுவே தவிக்கும் மனிதனுக்குத் தான்”
-ருத்ரதேவ்
பண்டோரா ரெஸ்ட்ராண்ட், உதகமண்டலம்…
மேல்தளத்தில் மரக்கூரைக்குக் கீழே அரிக்கேன் விளக்குகள் போன்ற மின்விளக்குகள் மஞ்சள் வண்ணத்தை வாரியிறைக்க எதிரெதிரே அமர்ந்திருந்தனர் ருத்ரதேவும் தக்ஷிண்யாவும்.
அவனை முறைத்தபடி ஸ்பகடி கார்பனோராவை விழுங்கிக் கொண்டிருந்தாள் அவள். ஆரோஹி அவர்களை ஊட்டிக்கு அழைத்து வர அனுதீப்பால் அனுப்பி வைக்கப்பட்ட நவீனுடன் கீழ்த்தளத்தில் விற்கப்படும் ஸ்னோபால் குக்கீகளை (Snowball cookies) ருசிக்கச் சென்றிருந்தாள்.
“ஏன் என்னை முறைக்குற? பொண்ணுங்க முறைச்சுக்கிட்டே சாப்பிட்டா குண்டாகிடுவாங்களாம்… நீ இப்பிடி இருந்தா தான் அழகு… குண்டாகிட்டா உன்னை இஷ்டத்துக்குத் தூக்கிட்டுப் போகமுடியாதுல்ல”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
முட்கரண்டியால் ஸ்பகடியை சுழற்றி இலாவகமாக வாயில் போட்டுக்கொண்டபடி தக்ஷிண்யாவைக் கிண்டல் செய்தான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு “யூ, உன்னை…” என்று பற்களைக் கடித்தபடி முட்கரண்டியை மேஜையில் குத்த
“யூ, உன்னை ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்… சப்ஜெக்டை மட்டும் சொல்லிட்டு செண்டென்சை அரைகுறையா நிறுத்துனா என்ன வெர்ப் யூஸ் பண்ணணும்னு தெரியாம குழம்புறேன்ல… ப்ளீஸ் நீயே கம்ப்ளீட் பண்ணிடு தக்ஷி” என்று கூற
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… இன்னும் நீங்க என் கிட்ட எதுக்காக சொல்லாம கிளம்புனிங்கனு விளக்கம் குடுக்கல” என்று கூறிவிட்டு முகத்தைச் சிடுசிடுப்பாக வைத்துக்கொண்டாள் அவள்.
ருத்ரதேவ் பொறுமையாக விழுங்கி முடித்தவன் “அத்தைக்குத் திடீர்னு மூச்சிளைப்பு மாதிரி வந்துடுச்சுனு அம்மா கால் பண்ணிச் சொன்னதும் எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல… அப்ப எனக்கு ஊட்டிக்கு வந்து பாக்கணும்னு தோணுச்சே தவிர உன் ஞாபகம் வரவே இல்ல தக்ஷி” என்கவும் தக்ஷிண்யாவுக்கு ஸ்பகடி தொண்டையில் சிக்கிக்கொண்டது.
என்ன தான் அத்தை மீது பாசம் இருக்கட்டுமே! அதற்காக காதலித்தவளை அன்று இரவு கிட்டத்தட்ட பாதி மணம் முடித்தவளை மறந்துவிட்டேன் என அவன் கூறியதை தக்ஷிண்யாவால் ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதை அவளது முகமே காட்டிக்கொடுத்துவிட ருத்ரதேவ் அவளது கரத்தைப் பற்றி அழுத்தினான்.
“என்னால உன் கிட்ட பொய் சொல்ல முடியாது தக்ஷி… அதான் உண்மைய சொல்லிட்டேன்… நிஜமா அப்ப அத்தைய பாக்கணும்ங்கிறது மட்டும் தான் என் மைண்ட்ல ஓடுச்சே தவிர வேற எதையும் யோசிக்குற நிலமையில நான் இல்ல… மானிங் தான் அனுதீப்புக்குக் கால் பண்ணி சொன்னேன்… ஆல்ரெடி அவனுக்கு க்ளாம்பிங்ல இண்ட்ரெஸ்ட் இருந்ததால ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா உன்னை இங்க அனுப்ப ஒத்துக்கிட்டான்”
என்ன தான் அவன் தன்னை மறந்ததாக கூறியதில் வருத்தம் இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொன்னதில் தக்ஷிண்யாவுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி தான். இவன் என்னிடம் எதையும் மறைக்க விரும்பாதவன் என்ற நிம்மதி அவளுக்குள் பரவ நீண்ட நேரத்துக்குப் பிறகு புன்சிரிப்பு அவள் இதழில் உதயமானது.
“ஹப்பா! சிரிச்சிட்டியா? ஒருத்திய சிரிக்க வைக்குறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதா இருக்குடா சாமி”
ருத்ரதேவ் சலித்துக்கொள்ள “தேவ் மாமா” என்றபடி நவீனுடன் வந்தாள் ஆரோஹி. கையில் குக்கீ நிரம்பிய டப்பா ஒன்று.
“உனக்கும் குக்கீ வாங்கிட்டு வந்திருக்குறேன்கா” என்றவள் தக்ஷிண்யாவின் வாயில் திணிக்க
“மாமாக்குத் தர மாட்டியா ஆரோஹி?” என்று பொய்யாய் அழுவது போல ருத்ரதேவ் பாவனை செய்யவும் அவன் வாயிலும் குக்கீ திணிக்கப்பட்டது.
இப்படியாக இரவுணவு இனிமையாக நகர ருத்ரதேவ் அவர்கள் இருவரையும் தங்களுக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க சொன்னதோடு அவர்களை தனது காரிலேயே அங்கே அழைத்துச் சென்றான்.
அந்த கெஸ்ட் ஹவுஸ் படுசுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்ததால் சுத்தம் செய்யும் வேலை தக்ஷிண்யாவுக்கு மிச்சம். மற்றபடி குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளும் பழங்களும் நிரம்பி வழிய சமையலறையின் அலமாரிகளில் பலசரக்கு சாமான்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்க தங்களுக்காக முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்தவனை நன்றியுடன் விடைகொடுத்து அனுப்பினாள் தக்ஷிண்யா.
செல்லும் முன்னர் “நாளைக்கு என் பேரண்ட்சும், அத்தை மாமாவும் உன்னை மீட் பண்ணணும்னு ஆசைப்படுறேன்… நானே உன்னை அழைச்சுட்டுப் போக வர்றேன்… இல்லனா கார் அனுப்பி வைக்குறேன்… நீயும் ஆரோஹியும் ரெடியாகி இருங்க… இப்ப போய் நல்லா ரெஸ்ட் எடு… குட் நைட்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான்.
தக்ஷிண்யா அவனது கார் மறையும் வரை வாயிலிலேயே நின்றவள் ஆரோஹி அழைக்கவும் உள்ளே சென்றாள். தூங்குவதற்கு முன்னர் நவ்யாவின் மொபைலுக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கதை போல கூறியவள் அவளுடன் அரட்டை அடித்துவிட்டு உறங்குகையில் நேரம் நள்ளிரவாகி இருந்தது.
ஆரோஹி டேன்சிங் கேக்டசுடன் அவள் மடியிலேயே படுத்து உறங்கிவிட தக்ஷிண்யா அதை எடுத்து ஓரமாக வைத்தவள் தங்கையைக் கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
*******
பிருந்தாவனம்…
காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் ருத்ரதேவ். வழக்கமாக இந்நேரத்தில் வீடு கலகலப்பாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களால் அனைவரும் அவரவர் அறைக்குள் முடங்கிக் கொள்ள ருக்மணி மட்டும் அவனுக்கு இரவுணவு எடுத்து வைப்பதற்காக விழித்திருந்தார்.
அவனைப் பார்த்ததும் “எல்லாரும் தூங்க போயாச்சு தம்பி… நீங்க வாங்க… நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன்” என்றவரிடம்
“இல்லம்மா… நான் வெளிய சாப்பிட்டுட்டேன்… நீங்க போய் தூங்குங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தவன் அவனது அறைக்குச் செல்லும் முன்னர் சதாசிவமும் மாணிக்கவாசகமும் மாடியறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டான்.
“ஹலோ ஓல்ட்மென்! இன்னுமா தூங்காம முழிச்சிட்டிருக்கீங்க? இருங்க உங்க ஒய்ப்ஸ் கிட்ட போட்டுக் குடுக்குறேன்” என்றபடி அவர்களருகே அமர்ந்தான்.
“அப்பிடி என்ன தான் டிஸ்கஸ் பண்ணுறிங்க?” என்றவனிடம்
“வீட்டுல இப்ப நடந்த பிரச்சனை சம்பந்தமா தான் ருத்ரா” என்றார் சதாசிவம்.
“சசிக்கும் லல்லிக்கும் இடையில இருக்குற இடைவெளி குறையாதானு வருத்தமா இருக்குப்பா” என்று வருத்தம் தொனிக்க கூறினார் மாணிக்கவாசகம்.
ருத்ரதேவ் இருவரையும் ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்தான். அவனுக்கும் கூட அதே ஆசை தான். ஆனால் குணம், செயல்கள் என அனைத்திலும் அன்னையும் அத்தையும் இரு வேறு துருவங்கள். அவர்கள் ஒன்றாக இணைவது என்பது நடக்காத காரியம் என்பதை இத்தனை ஆண்டுகளில் அவன் புரிந்துகொண்டான். ஆனால் அந்த இரு வயோதிகர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!
“உங்க ரெண்டு பேரோட வருத்தமும் எனக்குப் புரியுது தாத்தா… ஆனா அவங்க ஒருத்தரை ஒருத்தர் கண்டுக்காம இப்பிடியே இருக்குறது தான் நல்லது… யாரையும் நம்மளால வற்புறுத்தி ஒன்னா இருக்க வைக்க முடியாது… அப்பிடி வச்சா அந்த உறவு போலியா தான் இருக்கும்” என்றவன் உரையாடலுக்கிடையே ராஜேந்திரன் வரவும்
“அத்தைக்கு இப்ப பரவாயில்லையா மாமா?” என்று வினவ
“அவ நார்மல் ஆகிட்டா ருத்ரா… இப்ப எந்தப் பிரச்சனையும் இல்ல… நாளைக்கு மானிங் நம்ம முன்னாடியே பேசுனபடி நீ காதலிக்குற பொண்ணை நம்ம ஹோட்டலுக்கு வரச் சொல்லிடு… சசி வாங்கி வச்ச ரிங்கை மாத்தி பேசி முடிச்சிடுவோம்” என்றபடி அவர்களின் கூட்டணியில் தானும் இணைந்தார் அவர்.
மகாதேவ் மூலம் ருத்ரதேவ் – தக்ஷிண்யாவின் காதல் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தனர் வீட்டினர் அனைவரும்.
ஊட்டிக்குத் திரும்பியதும் லலிதாவின் உடல்நிலை சீராகும் வரை காத்திருந்த ருத்ரதேவ் தக்ஷிண்யாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் குடும்பத்தினரிடம் கூறிவிட்டான்.
கூடவே உறவுகளைப் பற்றிய அவளது நிலைப்பாடு மற்றும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாகக் கூறியவன்
“அவளுக்குப் பேரண்ட்ஸ் சரியில்ல… அவங்க பக்கமும் நியாயம் இருக்கலாம்… ஆனா அவளால அதை ஏத்துக்க முடியல… அவங்களை பத்தி பேசுனாலே தக்ஷி உடைஞ்சு போயிடுவா… சோ யாரும் அவ கிட்ட பேரண்ட்சை பத்தி கேக்க வேண்டாம்” என்று வேண்டுகோளும் விடுத்தான்.
குடும்பத்தினர் யாவரும் தக்ஷிண்யா என்ற பெயரில் திடுக்கிட்டாலும் அவனது காதலியைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தனர்.
லலிதாவுக்குக் கூட அதில் மகிழ்ச்சி தான். எனவே தான் ருத்ரதேவ் புகைப்படத்தை அனைவரும் காட்டுவதாகக் கூறிய போது கூட
“உன்னோட பொண்டாட்டியா வரப் போறவளை முதல் முதல்ல நாங்க நேர்ல பாக்க விரும்புறோம் ருத்ரா” என்று சொல்லிவிட்டார் அவர்.
எப்போதும் அவரது பேச்சை ஒத்துக்கொள்ளாத சசிகலாவுக்குக் கூட இம்முறை தட்ட மனதில்லை.
“ஆமா ருத்ரா… அவ வந்ததும் நீங்க மாத்திக்குறதுக்காக நான் மோதிரம் கூட வாங்கி வச்சிருக்கேன் தெரியுமா?” என்றவர் அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட மோதிரங்களைக் காட்ட
“எக்ஸ்யூஸ் மீ! அதை செலக்ட் பண்ணுனது நானாக்கும்” என்று இடையில் புகுந்தாள் அவனது தங்கை மாலினி.
இப்படியாக முழு குடும்பமும் நடந்த பிரச்சனையை மறந்து ருத்ரதேவின் காதலியைக் காண ஆவலோடு காத்திருந்தனர்.
இதோ இப்போது கூட அவளைப் பற்றி தான் சதாசிவமும் மாணிக்கவாசகமும் பேசிக்கொண்டிருந்தனர். அதற்கு இடையே தான் ருத்ரதேவும் ராஜேந்திரனும் வந்திருந்தனர்.
“உன் கையால மோதிரம் போட்டு அவளை உரிமையோட இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வாடா… நாங்க எல்லாரும் அவளுக்காகக் காத்திருப்போம்” என்றனர் சதாசிவமும் மாணிக்கவாசகமும்.
“நீங்களும் எங்க கூட ஹோட்டலுக்கு வந்தா நல்லா இருக்கும்”
ராஜேந்திரனிடம் மறுப்பாக தலையசைத்தனர் இரு பெரியவர்களும்.
“இந்த வீட்டுல தான் முதல் முதல்லா ருத்ராவோட பொண்டாட்டிய பாக்கணும்னு எங்களுக்கு ஆசை” என்றார் மாணிக்கவாசகம்.
“சரி சரி! ரொம்ப நேரம் பேசி தூக்கத்தைக் கெடுத்துக்காம ரெண்டு பேரும் அவங்கவங்க ரூமுக்குப் போங்க… எங்களுக்கு வயசான காலத்துல தூக்கம் வரல… நாங்க இன்னும் கொஞ்சநேரம் பேசிட்டு அப்புறமா தூங்கப் போறோம்” என்ற சதாசிவம் ராஜேந்திரனும் ருத்ரதேவும் அங்கிருந்து அகலவும் மீண்டும் ருத்ரதேவின் வருங்கால மனைவி குறித்து அவருக்குள் முரண்டியதை நண்பரிடம் பகிர ஆரம்பித்தார்.
“எனக்கு வேற ஒன்னும் பிரச்சனை இல்லா மாணிக்கம்… அந்தப் பொண்ணு பேர் தக்ஷிண்யா… அதை மகா சொன்னதுல இருந்து யோசனையா இருக்கு” என்றார் அவர்.
மாணிக்கவாசகத்துக்கும் அந்தப் பெயரைக் கேட்டதும் ஒருவித திடுக்கிடல் உண்டானது என்னவோ உண்மை! அவளது புகைப்படத்தை ருத்ரதேவிடம் கேட்டுப் பார்க்கலாமா என்று கூட எண்ணினார்.
ஆனால் லலிதாவின் உடல்நலக்குறைவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட தக்ஷிண்யா என்ற பெயர் உண்டாக்கிய கலக்கம் கலைந்து போனது.
அந்தப் பெயரைக் கேட்டதும் அதிர வேண்டிய லலிதாவும் ராஜேந்திரனும் கூட இயல்பாக இருக்கவும் தாங்கள் கொஞ்சம் அதிகப்படியாக கவலை கொள்கிறோமோ என்று பெரியவர்களுக்குத் தோன்றியது.
கூடவே இந்த உலகில் தக்ஷிண்யா என்ற பெயரோடு அவள் ஒருத்தி தான் இருப்பாளா என்ற கேள்வி வேறு!
“நீ ஒன்னும் கவலைப்படாத சதா… நம்மளை விட்டுப் போன துரதிர்ஷ்டம் போறப்ப அவளையும் அழைச்சிட்டுப் போயிடுச்சு…. அவ இப்ப எங்க இருக்குறா, என்ன பண்ணுறானு கூட நமக்குத் தெரியாது… எல்லாம் முடிஞ்சு பதினாலு வருசமாகுது… இப்ப அவளே நம்ம முன்னாடி வந்து நின்னா கூட நமக்கு அடையாளம் தெரியுறது கஷ்டம் தான்… ருத்ரா காதலிக்கிற பொண்ணா அவ இருந்தா கூட நல்லா தான் இருக்கும் சதா”
அவர் அவ்வாறு கூறவும் சதாசிவம் அதிர்ந்தார்.
“நீ புரிஞ்சு தான் பேசுறியா மாணிக்கம்? லல்லியோட நிலமை என்னாகும்னு யோசி”
“புரியுது சதா… ஆனா அவ என் பேத்தி… எங்கம்மாவ மறுபடி பாத்த மாதிரி தங்கவிக்கிரகமா பிறந்த குழந்தைடா அவ… எவ்ளோ ஆசையா தாட்சாயணினு எங்கம்மா பேரை வச்சோம்னு உனக்கே நல்லா தெரியும்… அவளைக் கூடவே வச்சு அழகு பாத்து வளக்க முடியாத தாத்தனா போயிட்டேனேனு அப்பப்ப மனசு அடிக்குறதை என்னால யார் கிட்டவும் சொல்ல முடியல… எங்கம்மா அவ”
சொல்லிவிட்டுக் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டார் மாணிக்கவாசகம்.
சதாசிவம் அவரது தோளை ஆறுதலாகத் தொட்டவர் “அழாத மாணிக்கம்… அழுதுறதால நடந்த எதுவும் மாறப் போறதில்ல… அவளும் நம்ம கிட்ட வரப்போறதில்ல… இத்தனை வருசத்துல அவளுக்கு நம்ம முகம் கூட மறந்து போயிருக்கும்… நீ வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காத” என்றார்.
கண் கலங்க அமர்ந்திருந்த நண்பரைப் பார்த்தபடியே மனதுக்குள் கடவுளிடம் வேறு விதமாக வேண்டிக் கொண்டார் அவர்.
“கடவுளே! இத்தனை வருசம் வராதவ இனியும் வர வேண்டாம்… எங்கயோ கண் காணாத இடத்துல நல்லா இருக்கட்டும்… அவ இங்க வந்தா என் பொண்ணு வாழ்க்கை தடம் புரண்டுடும்… ஒரு தகப்பனா என் பொண்ணுக்காக நான் வைக்குற சுயநலமான வேண்டுதல் இது”
அதன் பின்னர் பெரியவர்கள் இருவரும் உறங்க சென்றுவிட மறுநாள் காலை பிருந்தாவனத்துக்கு மகிழ்ச்சி பொங்கும் காலையாக விடிந்தது.
மாலினியும் மகாதேவும் ஆர்வமாக ஹோட்டலுக்குக் கிளம்பிய ருத்ரதேவைக் கேலி செய்ய அவனோ புன்சிரிப்புடன் அவர்களுக்குப் பதிலடி கொடுத்ததோடு பெற்றோரையும் அத்தை மாமாவையும் சீக்கிரம் கிளம்பும்படி அவசரப்படுத்தினான்.
“அவசரக்காரனுக்கு அண்டா உள்ள கை நுழையாதுனு சொல்லுவாங்கடா ருத்ரா… கொஞ்சம் பொறு… மருமகப்பொண்ணுக்கு வாங்குன மோதிரத்தை எடுத்துக்குறேன்” என்று சலித்துக் கொண்டபடி அவரது அறைக்குச் சென்றார் சசிகலா.
ராஜேந்திரனும் லலிதாவும் சொன்னபடி தயாராகி வந்துவிட “நீங்க வந்துட்டிங்க… இன்னும் என்னைப் பெத்த தெய்வங்கள் ரெடியாகல” என்று சோகமாக கூறினான் அவன்.
“வருங்கால பொண்டாட்டிய காக்க வைக்கக்கூடாதுனு பையன் எவ்ளோ மெனக்கிடுறான் பாருங்க” என்று லலிதா கேலி செய்ய ராஜேந்திரனும் புன்னகைத்தார்.
கணவரது புன்னகையைப் பார்த்ததும் லலிதாவுக்கு மகிழ்ச்சி. இத்தனை நாட்கள் பாராமுகம் கொடுத்த சோகமெல்லாம் பறந்தோடிப் போனது.
ஒருவழியாக லோகநாதனும் சசிகலாவும் வந்துவிட அந்நேரம் பார்த்து ருத்ரதேவுக்கு அடுத்த சோதனை வந்துவிட்டது.
க்ளாம்பிங் டெண்ட்களை மலைச்சரிவில் கட்டி முடிக்க புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டிய நாள் அன்று தான் என உதவியாளர் நினைவுபடுத்தவும் தன் நெற்றியில் ஆட்காட்டிவிரலால் தட்டிக்கொண்டான் அவன்.
“ஓ.கே… ஐ வில் பி தேர்” என்றவன் தந்தையிடம்
“நீங்க நாலு பேரும் ஹோட்டலுக்குப் போங்கப்பா… வி.ஐ.பிக்கான ஹில் வியூ ப்ளேஸ்ல தக்ஷி உங்களுக்காக வெயிட் பண்ணுவா… நான் இந்த கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியோட டீலை சைன் பண்ணிட்டு ஓடி வந்துடுறேன்” என்றான் பரபரப்புடன்.
“சரி சரி! அதுக்கு ஏன்டா இவ்ளோ டென்சன் ஆகுற?” என்று லோகநாதன் வினவ
“தக்ஷி கொஞ்சம் சென்சிடிவானவப்பா… சோ…” என்று அவரது மைந்தன் இழுக்கவும் அவனது தோளில் அடித்தார் அவர்.
“எங்களுக்கு அவ வருங்கால மருமகள்டா… நாங்க ஒன்னும் அவளை மிரட்ட மாட்டோம்… நீ பயப்படாம டீலை சைன் பண்ணிட்டுப் பொறுமையா வா… அதுக்குள்ள நீ எல்லாரையும் அதட்டி உருட்டி மிரட்டி வேலை வாங்குற கதைய எல்லாம் என் மருமகள் கிட்ட நான் பேசி முடிச்சிடுவேன்” என்றார் அவர் விளையாட்டாக.
ருத்ரதேவோ “வேற வினையே வேண்டாம்… மகா கிட்ட கட் அண்ட் ரைட்டா ஒரு நாள் பேசுனதுக்கே உங்களுக்கு இவ்ளோ கோவம் வருமானு கேட்டவ அவ… தயவுபண்ணி அவ கிட்ட ஏடாகூடமா எதையும் சொல்லி மறுபடியும் ஷான்ஃபிக்கு ஓட வச்சிடாதிங்கப்பா” என்று பரிதாபமாக கேட்டுக்கொண்டான்.
இதைக் கண்டு அனைவரும் நகைக்க லலிதா மருமகனுக்கு ஆதரவாக வந்தார்.
“அது எப்பிடி என் மருமகனை விட்டு அவ ஓடலாம்? அவளே ஓடுனாலும் நான் இழுத்துப் பிடிச்சு உனக்குக் கட்டி வச்சிடமாட்டேன்” என்று அவர் கூறவும்
“தேங்க்ஸ் அத்தை” என்று சந்தோசத்தில் அவரது கன்னத்தில் முத்தமிட்டவன்
“ஓ.கே! நீங்க கிளம்புங்க… மகா நீ என் கூட வா, உனக்கும் அந்த டீலோட முக்கியமான க்ளாசஸ் தெரியணும்” என்று சொல்லிவிட்டு இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் தானும் அவர்களோடு வருவதாக அடம்பிடித்த மாலினியை ஒழுங்காக கல்லூரிக்குச் செல்லும்படி அதட்டிவிட்டுக் கிளம்பினார் சசிகலா. மைந்தனின் மனம் கவர்ந்த பெண்ணைக் காணும் ஆர்வம் அவரது முகத்தில் தெரிய மற்ற மூவரையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறியவருக்கு இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஆர்வம் மகிழ்ச்சி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பது தெரியவில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


