“நீங்க என்னவா நினைக்குறீங்களோ அதுவாவே மாறிப்போயிடுவீங்கனு எங்கேயோ படிச்சிருக்கேன். நம்ம எண்ணங்கள் நம்மளைச் செதுக்குற உளிகள். அதுல எனக்கு என்னைக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்ல. உங்க எண்ணங்கள்ல தூய்மை இருந்தா உங்க செயல்களும் தூய்மையா இருக்கும்.”
-வசுமதி
காலம் காயங்களை ஆற்றும் மருத்துவன் மட்டுமில்லை. மனித மனங்களில் மாற்றங்களைப் புகுத்தும் மந்திரக்காரனும்கூட. எந்தக் காலம் வசுமதியின் மனதில் இருந்த ஆறாக் காயங்களைக் குணமாக்கியதோ அதே காலம் வசீகரனின் மனதில் சில நல்ல மாற்றங்களைப் புகுத்தி அவனை அவனது பெயருக்குத்தக்க வசீகரமானவனாக மாற்றிவிட்டது.
ஆண்மை எனப்படுவது ‘நான்தான் குடும்பத்தின் அனைத்துச் சுமைகளையும் சுமப்பவன். இங்கே ஓர் அணு அசைய வேண்டும் என்றாலும் அதில் என் விருப்பம் பிரதானம். மனைவி என்பவள் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் மட்டுமே வாழப் பிறந்தவள். என் குடும்பத்தினரின் மனநிலைக்காக அவள் தனது சுகதுக்கங்களை மறந்து வாழ வேண்டும். அவளது சிறு ஆசைகளை, சிறு கனவுகளைத் துறந்து வாழ வேண்டும்’ என்று ஒருதலைபட்சமாய்ச் சுயநலமாய்த் திரிவதில்லை.
ஆண்மை எனப்படுவது தனது சரிபாதியாய் வந்தவளை அந்தச் சரிபாதிக்குரிய முக்கியத்துவத்தோடும், முன்னுரிமையோடும் நடத்துவதே! எச்சூழலிலும் தானும் அவளும் வெவ்வேறு நபர்கள் என்ற எண்ணத்தை அவளுக்குள் வலியத் திணிக்காமல் இருப்பதே! பிறர் அவளை இழிவாய்ப் பேசுகையில் வேடிக்கை பார்க்காமல் இருப்பதே!
இதை எல்லாம் உணர எல்லா ஆண்களுக்கும் சில வருடங்கள் எடுக்கும். அந்தப் புரிதல் வந்த பிறகு அவர்கள் தங்கள் மனைவியரை நடத்தும் விதம் மாறும். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அந்த மாற்றத்திற்கான காலம் வரும் முன்னர் அவரவர் மனைவியருக்கு ‘இவன் என்றுமே என்னைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. இனி இவன் மாறினால் என்ன? மாறாமல் போனால் என்ன?’ என்ற சலிப்பு வந்துவிடும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது?
ஆனால் இதெல்லாம் ஆண்களுக்கு அதாவது கணவன்மார்களுக்கு மட்டும்தானா என்ன? இன்றைய காலகட்டத்தில் கணவனைப் புரிந்துகொள்ளாத மனைவிமார்களும் அநேகம். எதற்கெடுத்தாலும் பிறரின் வாழ்க்கையோடு, பிறரின் வாழ்க்கைமுறையோடு தங்களை ஒப்பிட்டுக் காட்டியே கணவனை நோகடிக்கும் பெண்களும் உள்ளார்கள்.
அந்த வகைப் பெண்களுக்கு அவர்களின் கணவர்கள் எத்துணை செய்தாலும் மனம் நிறையாது. நீங்கள் தாஜ்மஹாலையே அந்தப் பெண்களுக்காகக் கட்டினாலும் அவர்களின் கவனம் யாரோ ஒருத்தி வைத்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியின் மீதுதான் இருக்கும்.
இத்தகைய பெண்களுக்கு அறிவுரை சொல்லித் திருத்துவது எல்லாம் எக்காலத்திலும் சாத்தியப்படாத ஒன்று. கணவனின் அன்பைக் காட்டிலும் அடுத்தவளின் உடைமைகள் மீது அதீத ஆர்வம் கொண்ட பெண்ணை மணந்தவன் பரிதாபத்துக்குரியவனே!
இதற்குச் சிறந்த உதாரணமாய் மாறிப்போனாள் மகிழினி. அவள் மனதால் நினைத்ததை உடனே செய்துகொடுத்து எவ்வித அசௌகரியமும் அவளுக்கு நேராமல் பார்த்துக்கொண்ட சர்வானந்தன் அவளை மணந்த காரணத்தால் விரக்தியாய் நாட்களை நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தான்.
இந்நிலையில் தான் அவளது கர்ப்பகாலத்தின் ஒன்பதாம் மாதம் வந்தது. சரியாய் அந்த மாதத்தில்தான் பிரசவத்துக்கான தேதியும் குறித்திருந்தார்கள். அந்த மாதத்தில் சின்னச் சின்ன வேலைகள் செய்வது, இடுப்புக்கு வெந்நீர் ஊற்றுவது, குழந்தையின் துடிப்பைக் கணக்கிடுவது என மகிழினியின் கவனம் வசுமதியிடமிருந்து குழந்தையிடம் தாவியது.
அதனால் தேவையற்ற எண்ணங்களைக் களைந்துவிட்டு அவள் மனமும் கொஞ்சம் தெளிந்திருந்தது. வாராவாரம் அவளைப் பார்க்க வந்த பரமேஸ்வரியின் அன்பும் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்குப் புரிய ஆரம்பித்ததும் அந்தக் காலகட்டத்தில்தான்.
மனதில் எதிர்மறை உணர்வுகள் மேகமாய்ச் சூழ்ந்திருக்கும்போது அன்பு, நேசம் போன்ற சூரியனையொத்த பிரகாசமான நேர்மறை உணர்வுகளை அந்த மனம் உணராது. எப்போது எதிர்மறை உணர்வுகள் களையத் தொடங்கியதோ அப்போதுதான் நேர்மறை உணர்வுகளின் இதத்தை உணரும் மனித மனம்.
அப்படித்தான் மகிழினியின் மனமும் உணரத் தொடங்கியது. போதாக்குறைக்கு முன்பெல்லாம் அவள் மதினியைப் பற்றிக் குறை பேசும்போது கம்பெனி கொடுத்த குமுதவல்லி இப்போதெல்லாம் கப்சிப்பானதால் மேற்கொண்டு அவளைப் பற்றிய தரக்குறைவான எண்ணங்களுக்கான வழிகள் இல்லாமல் போனது.
எப்போதும் வசுமதியைப் பற்றிப் பேசுகையில் “திண்ணையில கிடந்தவளுக்குத் திடுக்குனு வாழ்வு வந்துச்சாம். அந்தக் கதையா வேலைக்குப்போய்க் குடும்பப் பாட்டைப் பாத்துக்கிட்டவ என் மகனைக் கல்யாணம் பண்ணி அங்க சொகுசா வாழுறா. இந்த வாழ்க்கைக்கே அவ நன்றியோட இருக்கவேண்டாமா? நம்மளை எதுக்கும் அண்டக் கூடாதுங்கிறாளே” என்று பிலாக்கணம் வைப்பார்.
அடிக்க அடிக்க அம்மியும் நகருமாம்! அப்படித்தான் மதினியைப் பற்றிய மட்டமான எண்ணவோட்டங்களால் நகர்ந்தது மகிழினியின் மனம். இப்போது நகர்த்த ஆளில்லை என்பதால் நிலையாய் ஒரு இடத்தில் இருந்து தனது வாழ்க்கையைப் பற்றி மட்டும் சிந்திக்க ஆரம்பித்தது.
வேறு வழியின்றி சிலரை நாம் வாழ்க்கையில் சகித்துக்கொள்வோம். அந்த மனிதர் கள்ளங்கபடமற்றவராக நம்மிடம் அன்பைக் கொட்டுகையில் ஏதோ ஒரு தருணத்தில் நமது செயல்களுக்காக வெட்கிப்போவோம். அப்படித்தான் ஒவ்வொரு முறை பரமேஸ்வரி தன்னைப் பார்க்க வரும்போதும் வெட்கிப்போனாள் அவள்.
முன்புபோல ஒதுங்காமல் பாசமாய் அவரிடம் பேசினாள். அண்ணன் தன்னிடம் பேசும்போதும் தேவையற்ற குறைகள், சின்னத்தனமான பேச்சுகளில் நேரத்தை விரயமாக்காமல் வசுமதியின் உடல்நிலை பற்றி விசாரித்தாள்.
வசுமதி தன்னிடம் பேசாமல் ஒதுங்குவதைப் பெருங்குறையாக்கிக் காட்டித் தமையனிடம் சண்டை போடவும் இல்லை அவள். அவளது மாற்றத்தை கமலநாதனும் வசீகரனும் நன்கு உணர்ந்துகொண்டார்கள். அவர்கள் இல்லாமல் மூன்றாவதாய் உணர்ந்தவன் சர்வானந்தன்.
வாராவாரம் மனைவியைப் பார்த்துவர அவளது பிறந்த வீட்டுக்குச் சென்று வரும் அன்னை மனைவியைப் பற்றிப் பேசும்போதே அவளது சுபாவத்தில் வந்த மாற்றங்களை அவனது மனம் உணரத் தொடங்கியது. ஆனால் உடனே அவளிடம் அன்போடு சரணடைய அவனுக்குத் தோன்றவில்லை.
இன்னும் அவள் தெளியவேண்டும். வாழ்க்கை இதுபோலச் சிறுபிள்ளைத்தனமான பொறாமைகளுக்கும், ஆற்றாமைகளுக்குமான ஆடுகளமில்லை, அது அன்பை விதைத்து அன்பை மட்டுமே அறுவடை செய்யும் விளைநிலமென அவள் முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் நாள் வரை காத்திருக்க முடிவு செய்தான் அவன்.
இந்நிலையில்தான் வசுமதி வசீகரனிடம் திடுமென இக்கேள்வியைக் கேட்டாள்.
“மகிழுக்குக் குழந்தை பிறந்துச்சுனா போய்ப் பாப்பீங்கல்ல?”
இருவரும் கடற்கரைக்கு வந்திருந்தார்கள். ஓய்வாக நடந்தபோது இக்கேள்வியைத் திடுமென எழுப்பியவளை அவன் குழப்பத்தோடு பார்த்தான்.
“ஏன் திடீர்னு கேக்குற? கண்டிப்பா போவேன்” என்றான் அவன்.
வசுமதியின் முகத்தில் சன்னப்புன்னகை. இந்தப் பதிலைத்தான் அவளும் எதிர்பார்த்தாள். ‘நான் மாறிவிட்டேன்’ என்று தற்காலிகச் சமாளிப்புக்காகக் குடும்பத்தினரோடு ஒட்டு உறவில்லை என்று போலியாய்ச் சப்பைக் கட்டு கட்டும் ஆண்களைப்போல அவன் இல்லை. மாறினாலும் தனது மனதிலிருக்கும் பந்த பாசத்தைத் தூக்கியெறியவில்லை என்பதே அவனுக்குள் இருக்கும் உண்மையான ஆணுக்குச் சான்றாய்!
“போறப்ப நானும் வர்றேன்” என்று வசுமதி சொல்லவும்
“நீயா? நீ வரலனா நான் தப்பா நினைச்சுப்பேன்னு யோசிச்சுச் சொல்லுறியா?” என வினவினான் வசீகரன்.
இல்லையென மறுப்பாய்த் தலையசைத்தாள் வசுமதி.
“எனக்கு மனுஷங்களோட செயல்பாடுகள் மேலதான் வெறுப்பும் ஒதுக்கமும். அந்தச் செயல்பாடுகள் என்னைக்கோ ஒருநாள் மாறலாம். அதுக்காக நான் மனுஷங்களை வெறுத்துட முடியாதுல்ல? இந்த வீட்டுல உங்கம்மாவும் தங்கச்சியும் செய்யுற தலையீடு இருக்கக் கூடாதுனு சொன்னது அவங்களுக்கான எல்லையை வகுக்குறதுக்காக மட்டும்தான். அவங்களை விட்டுட்டு வாங்கனு நான் சொன்னது நீங்க என்னை எப்பவும் ரெண்டாந்தரக் குடிமகள் மாதிரி நடத்துன ஆத்திரத்தாலதான்.
வெறுப்பும் துவேஷமும் என்னையே ஒரு நாள் அழிக்கும்ங்கிற முதிர்ச்சி எனக்கு இருக்கு. நான் ஒதுங்கித்தான் இருந்தேனே தவிர அவங்களை ஒரேயடியா வெட்டிவிடுற எண்ணம் எனக்கு இல்ல. என் ஒதுக்கத்தை நீங்க எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. நாளைக்கே மகிழுக்குக் குழந்தை பிறந்தா அதுக்கு நீங்க தாய்மாமா. நான் அத்தை. என்னால ஒரு குழந்தையை அப்பிடி வெறுத்து ஒதுக்கிட முடியாதுல்ல. இப்பவும் நான் உங்க மனைவியா என்னோட கடமையைச் செய்யத் தயாரா இருக்கேன். ஆனா இதுக்கு அர்த்தம் ‘வசுமதி மறுபடி நம்ம அம்மாவும் தங்கச்சியும் டாமினேட் பண்ணுறதை ஏத்துக்கத் தயாராகிட்டா’ங்கிறது இல்ல. இதை நீங்க தெளிவா புரிஞ்சிக்கணும்”
கடல் காற்று குழலைக் கலைக்க அவள் நிதானமாய் எடுத்துச் சொன்ன விதத்தில் வசீகரனுக்கும் திருப்தியே! தனியே போய்த் தங்கையைப் பார்த்தால் வளைகாப்பில் பேசிய நரம்பற்ற நாக்குகள் மீண்டும் தாக்கும். இப்போது வசுமதி அதற்குத் தீர்வு சொல்லிவிட்டதால் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியும்.
“தேங்க்ஸ்! எனக்குச் சங்கடமான சூழல் வராம தடுக்குறதுக்கு” என்றான் மனம் நெகிழ்ந்து.
அவனது புஜத்தில் இரு கரங்களையும் கோர்த்து அதே புஜத்தில் சாய்ந்துகொண்டவள் “இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும். உங்ககிட்ட ஒண்ணு காட்டணும்” என்றாள்.
இருவரும் அவள் சொன்ன தூரம் வரை நடந்தார்கள். கடற்கரையின் மணல் முடிந்து ஆகாயத்தாமரைகள் அங்கே பரவிக் கிடந்தன. அதன் ஓரமாய் வழுவழுவென விதவிதமான நிறங்களில் கற்கள் கிடந்தன.
“அழகா இருக்குல்ல! நாம வர்றப்பவே பாத்தேன். வீட்டுக்குப் போறப்ப பொறுக்கிக்கலாம்னு இருந்தேன்” என்றவள் குனிந்து அவற்றைப் பொறுக்கவும் ஆரம்பித்தாள்.
“இதெல்லாம் ஏன் எடுக்குற? யாரோ ஃபிஷ் டேங்க்ல இருந்த கல்லை இங்க வந்து கொட்டிருக்காங்கனு நினைக்குறேன். எழுந்திரு” என அதட்டினான் வசீகரன்.
“ஷ்ஷ்! அந்த வரலாறு எல்லாம் இப்ப எதுக்குங்க? அழகா இருக்குல்ல? இதை நம்ம யூட்டிலிட்டி ஏரியால இருக்குற ப்ளாண்ட்ஸைச் சுத்திப் போடலாம். அழகா இருக்கும்” என்று ரசனையோடு சொன்ன அவனது மனைவி அவற்றைப் பொறுக்கி எடுத்தாள்.
அவளது கை கொள்ளாமல் போகவும் வசீகரனிடம் பாதியைத் திணித்தாள்.
“இதை வெச்சுக்கிட்டு எப்படிக் கார் ஓட்டுறது?” கேலியாய்க் கேட்டான் அவன்.
“பேன்ட் பாக்கெட்ல போட்டுக்கோங்க. நான் கவுன் பாக்கெட்ல போட்டிருக்கேன் பாருங்க” என்றாள் அவள்.
உப்பிப்போய்த் தெரிந்த கவுனின் பாக்கெட்டுகளைக் காட்டி அவள் சொல்லவும் சிரித்தான் வசீகரன்.
“உனக்கு பெபிள்ஸ் வேணும்னா ஆன்லைன்ல வாங்கிருக்கலாம்”
“வாங்கலாம்தான்! ஆனா இதை மிஸ் பண்ண மனசு வரல”
கடற்கரையின் உப்புக்காற்றையும், அந்த மாலையின் இதமான நினைவுகளையும் தங்களுக்குள் சுமந்துகொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் நுழைந்தனர் இருவரும். உள்ளே வந்ததும் நேராகச் சமையலறைக்குச் சென்று, தங்கள் பாக்கெட்டுகளில் நிறைத்து வைத்திருந்த அந்த வண்ணக் கூழாங்கற்களை ஒரு சிறிய பிளாஸ்டிக் கூடையில் கொட்டி, தண்ணீரில் அலசிச் சுத்தப்படுத்தினாள் வசுமதி.
நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட அந்தக் கற்கள் கோடை மழையில் நனைந்த நாவற்பழங்களைப் போலப் பளபளத்தன.
படுக்கையறையில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை ஆன் செய்த வசீகரன், ஒரு மெல்லிய இளையராஜா பாடலை ஒலிக்கவிட்டான். கிட்டார் மற்றும் புல்லாங்குழலின் சங்கீதம் அந்த வீட்டின் அமைதியை ஒரு மெல்லிய பட்டுப் போர்வைபோலப் போர்த்தியது.
யூட்டிலிட்டி ஏரியாவில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த தொட்டிச் செடிகளுக்கு அருகே இருவரும் அமர்ந்தனர். வசுமதியின் தாய்மைச் சோர்வைப் புரிந்துகொண்டவன், அவளை ஒரு சிறிய மர முக்காலியில் அமரச் செய்துவிட்டு, அவன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான்.
“இந்தாங்க, இந்த வெள்ளைக் கல்லை அந்த மணி ப்ளாண்ட் தொட்டியில வைங்க. இந்தக் கலர் கல்லை பீஸ் லில்லிக்குப் போடுங்க,” என்று ஒரு சின்னக் குழந்தையைப்போல உற்சாகமாக உத்தரவிட்டாள் வசுமதி.
அவள் சொன்னபடியே தொட்டிகளில் இருந்த கருமையான மண்ணை மறைத்து, அந்த வண்ணக் கற்களை நேர்த்தியாக அடுக்கினான் வசீகரன். அவன் குனிந்து வேலை செய்யும்போது, அவனது முகபாவனையில் இருந்த துளிச் சிரிப்பை ஓரக்கண்ணால் ரசித்தாள் வசுமதி. அந்த மங்கிய ஆப் ஒயிட் விளக்கு வெளிச்சத்தில் அவனது திராவிட நிற முகத்தின் கம்பீரம் அதீதமாய்த் தெரிவதாய்!
இப்போதெல்லாம் காரண காரியமின்றி விழியகலாமல் அவனைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பித்து.
“என்ன, செடியைப் பாக்கச் சொன்னா என்னையவே சைட் அடிச்சிட்டு இருக்க?” என்று செடியில் பார்வை பதித்தபடியே கேட்டான் வசீகரன். எப்போதுமே தீவிரமாக இருக்கும் அவனது கூர்மையான பார்வையில் இப்போது மெல்லிய குறும்பு கொப்பளித்தது.
“அடப்பாவமே! நான் ஏன் உங்களை சைட் அடிக்கப் போறேன். அந்த செடிக்கு இந்தக் கல் எவ்ளோ அழகா இருக்குனு பாத்துட்டு இருக்கேன்,” என்று சமாளித்தாள் வசுமதி.
ஆனால் அவளது உணர்ச்சிகளைப் பேசும் கண்கள் அவளைக் காட்டிக்கொடுத்துவிட்டனவே!
“ஆமா ஆமா! அப்படியே செடியையே பாத்துக்கிட்டு இரு,” என்று சிரித்தவன், கடைசிச் சில கற்களை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“நீயும் கொஞ்சம் வை. மொத்தமா நானே செஞ்சா அப்புறம் உனக்குத் தூக்கம் வராது.”
“தேங்க்ஸ்!” என்றபடி அவள் மெல்லக் குனிந்து அந்தக் கற்களை மண்ணின் மீது வைத்தாள். இருண்டிருந்த அந்த மண்ணின் மீது பளபளக்கும் அந்த வண்ணக் கற்கள் அமர்ந்ததும், செடிகளின் அழகு பல மடங்கு கூடியதுபோல் தெரிந்தது.
“பாத்தீங்களா? எவ்வளவு அழகா இருக்குல!” என்று அகம் மகிழ்ந்து கேட்டாள் வசுமதி.
தன் கைகளைத் தட்டித் துடைத்தபடி நிமிர்ந்து அவளைப் பார்த்த வசீகரன், “உண்மைதான் வசு. சின்னச் சின்ன விஷயங்கள்லதான் இவ்ளோ சந்தோஷம் ஒளிஞ்சிருக்குனு உன்னைப் பாத்த பிறகுதான் எனக்குப் புரியுது,” என்றான் ஆழமான குரலில்.
தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
அந்த ஆப் ஒயிட் விளக்கு பின்னணியில் செடிகளோடு உறவாடி மகிழ்ந்த தம்பதிகளுக்கு ஏற்ற பாடல் வரிகள் படுக்கையறையிலிருந்து ஒலித்தன.
அந்தப் பாடல் வரிகள் சூழலை இன்னும் அழகாக்குவதாய்! இதமான மாலைப்பொழுதில் அவர்கள் இருவரது மனநிலையும் மிகக் கச்சிதமாக ஒன்றிணைந்து, அந்த யூட்டிலிட்டி ஏரியாவை ஒரு காதல் நந்தவனமாக மாற்றியிருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


