“தம்பதிகளுக்குள்ள சின்னதா ஆரம்பிக்குற ஒரு கருத்து வேறுபாடு எப்ப பூதாகரமா மாறும் தெரியுமா? அதைப் பத்தி நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்ககிட்ட பேசாம மத்தவங்ககிட்ட எல்லாம் டிஸ்கஸ் பண்ணுறப்பதான். சம்பந்தப்பட்ட ஆளோட உணர்வுகள் புரிஞ்சாதானே நீங்க அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியும்! அதை விட்டுட்டு மத்த எல்லார்கிட்டயும் யோசனை கேட்டு எதையும் சாதிக்க முடியாது.”
-வசுமதி
ஞாயிற்றுக்கிழமை காலை, வீடு பரபரப்பாகியிருந்தது வழக்கத்துக்கு மாறாய். விடுமுறை நாளின் சோம்பல் ஏதுமில்லாமல் வசீகரன் உற்சாகமாய்க் கிளம்பிக்கொண்டிருந்தான்.
கண்ணாடிக்கு முன் நின்றபடி, தன் அடர்ந்த கருங்கூந்தலைப் போனி டெயிலாகப் போட்டுக்கொண்டிருந்தாள் வசுமதி. பீச் வண்ணத்தில் காட்டன் பிரெக்னன்சி கவுன் அணிந்திருந்தாள். இப்போதெல்லாம் அதுதான் அவளுக்கு இலகுவாகவும் உடலை உறுத்தாமலும் இருக்கிறது.
அப்போது குளித்துவிட்டுக் கண்ணாடியின் முன் வந்து நின்றான் வசீகரன். அவன் ஒன்றும் சிக்ஸ்-பேக், எயிட்-பேக் ரகமில்லை. ஆனால் கேட்டட் கம்யூனிட்டியின் உடற்பயிற்சிக் கூடத்தை முறையாகப் பயன்படுத்துபவன். அதை அவனது புஜங்களும் வயிற்றுப்புறத் தசைகளுமே பறைசாற்றும்.
சில நொடிகள் அவனை ரசித்துப் பார்த்த வசுமதியின் விழிகள் பின்னர் தவறு செய்துவிட்டாற்போலச் சட்டெனத் திசையை மாற்றிக்கொண்டன. அதை அறிந்தவனின் சன்னப்புன்னகை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தனக்குப் பொருத்தமாய்ப் பவுடர் ப்ளூ வண்ண லினன் கேஷுவல் சட்டையும், லினன் பேன்ட்டும் அணிந்து சிகையை வாரினான் விசிலடித்தபடியே! வாரி முடித்ததும் கன்னங்களில் இருந்த உரோமக் கூட்டத்தை வருடியபடியே சற்றுத் தள்ளி நின்ற மனைவியைப் பார்வையால் வருடினான்.
“கிளம்பலாமா வசு?”
“ம்ம்”
அடையாறில் இருந்து மிக அருகிலிருக்கும் ‘லிட்டில் மவுண்ட்’ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு காரில் வந்திறங்கினர் அனைவரும். முதல் முதலில் மெட்ரோ ஸ்டேஷனைப் பார்த்த சுகமதிக்குத் திகைப்பில் வாய் மூடவில்லை.
“வாவ்… பாக்கவே கொரியன் ட்ராமாவுல வர்ற ஸ்டேஷன் மாதிரியே இருக்கு மாமா!” என்று ஆச்சரியத்தில் கண்கள் விரியப் பார்த்தாள் சுகமதி.
“உள்ள வா, இன்னும் நிறைய இருக்கு,” என்று சிரித்தபடியே அனைவரையும் அழைத்துச் சென்றான் வசீகரன்.
எஸ்கலேட்டரில் ஏறிச் செல்லும்போதே தன் மொபைலை எடுத்து செல்ஃபிகளைக் சொடுக்கத் தொடங்கிவிட்டாள் சுகமதி. டிக்கெட் கவுண்டரில் அனைவருக்கும் டோக்கன்களை வாங்கிய வசீகரன், ஸ்கேனரில் அதை எப்படிக் காட்டுவது என்று சுகமதிக்கும், பெரியவர்களுக்கும் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தான்.
சுகமதி அங்கிருந்த வெண்டிங் மெஷின்களில் ஏதேதோ குளிர்பானங்களை வாங்கினாள்.
மெட்ரோ ஸ்டேஷனின் பளபளக்கும் தளமும், இதமான குளிரூட்டப்பட்ட காற்றும் அவர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. சில நிமிடங்களில், தடத்தில் ஒரு வெள்ளிப் பாம்பைப் போல வளைந்து நெளிந்து வந்து நின்றது அந்த மெட்ரோ ரயில்.
தானியங்கிக் கதவுகள் ‘ஸ்ஸ்ஸ்…’ என்ற மெல்லிய ஒலியுடன் திறக்க, வசீகரன் முதலில் வசுமதியின் கைகளைப் பிடித்துப் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்றான். அவளுக்காக ஒரு இருக்கையை உறுதி செய்த பிறகே, மற்றவர்களை அமரச் சொன்னான்.
ரயில் வேகம் எடுக்கத் தொடங்கியதும், ஜன்னல் வழியே சென்னையின் அடுக்குமாடிக் கட்டடங்கள் பின்னோக்கி ஓடுவதை வியப்போடு பார்த்தாள் சுகமதி. நிலத்துக்கு மேலேயும் கீழேயுமாக ஒரு மாயாஜாலப் பறவையைப் போல ரயில் தடையின்றிப் பறந்துகொண்டிருந்தது.
“மாமா, அக்கா… ரெண்டு பேரும் கொஞ்சம் க்ளோஸா உக்காருங்க. ஒரு செல்ஃபி!” என்று சுகமதி மொபைலை நீட்ட, வசீகரன் இயல்பாக வசுமதியின் தோளோடு தோள் உரசி அமர்ந்து, அவளது இடையோடு கைபோட்டு அணைத்துக்கொண்டான். எதிர்பாராத அந்த நெருக்கத்தில் வசுமதியின் கண்கள் லேசாக விரிய, அவளது உதடுகளில் ஆரம்பித்த நெருக்கம் உடலெங்கும் பரவி வியாபித்தது.
அந்த செல்ஃபியில், அவளது நீண்ட கருங்கூந்தலும், அவனது மிடுக்கான தோற்றமும் இணைந்து ஒரு கச்சிதமான காதல் ஜோடியின் சித்திரமாய்ப் பதிவாகியிருந்தது.
“ஹேய், சூப்பரா வந்துருக்கு! இதை இன்ஸ்டாவுல போட்டா லைக்ஸ் அள்ளும்!” என்று குதூகலித்தாள் சுகமதி.
“பாத்து மெதுவா! விழுந்துடப் போற,” என்று அக்கறையாகச் சொன்னான் வசீகரன்.
ஆயிரம் விளக்கு மெட்ரோ நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’ மாலுக்கு நடந்தனர். சுகமதியின் கண்கள் மாலின் பிரம்மாண்டத்தில் வியந்து நின்றன. அத்தனை பெரிய கடைகளுக்கும், அலங்கார விளக்குகளுக்கும் நடுவே அவள் ஒரு வண்ணத்துப்பூச்சிபோலச் சுற்றி வந்தாள். அவளுக்குப் பிடித்த ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்த வசீகரன், பெரியவர்களுக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தான். ஒரு குடும்பத் தலைவனாக அவன் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்ட விதம் வசுமதிக்குப் பெருமிதமாக இருந்தது.
மதிய உணவிற்காக ஒரு பெரிய உணவகத்தில் அமர்ந்தனர். வசுமதிக்குப் பிடித்தமான அதிக காரமில்லாத உணவுகளை அவசரம் இல்லாமல் பொறுமையாய் ஆர்டர் செய்தான் வசீகரன்.
மீல்ஸில் ஒரு ஓரமாய் வைத்திருந்த பொரித்த மோர் மிளகாயை ஆசையாய்க் கடித்தவளுக்குப் புரையேறிவிட அவளை விட அதிகம் பதறினான் வசீகரன்.
தண்ணீரைப் புகட்டிவிட்டு அந்த மிச்ச மிளகாயைத் தனது இலைக்கு மாற்றிக்கொண்டான்.
முறைப்போடு பார்த்தவளது இதழோரத்தில் ஒட்டியிருந்த உணவை, தன் விரல்களால் மிக மென்மையாகத் துடைத்துவிட்டான். அவனது சின்ன ஸ்பரிசமும், தீவிரப் பார்வையை வீசிய கண்களும் எதையோ சொல்ல வந்து பின்னர் தயங்குவதைக் கண்டுகொண்டாள் வசுமதி.
ஒரு காலத்தில், தன் இருப்பு இந்த வீட்டில் ஒரு சுமைதானோ என்று ஏங்கியவள் அவள். ஆனால் இன்றோ, வசீகரனின் அக்கறைக்கும், கவனத்துக்கும், ரசனைக்கும் தான் குத்தகைக்காரியான பிறகு தன் மொத்த உலகமும் வசந்தமாக மாறிவிட்டதாக உணர்ந்தாள்.
மதியம் வீடு திரும்பியதும் பெரியவர்கள் திருநெல்வேலிக்குக் கிளம்ப உடைமைகளை எடுத்து வைக்க சுகமதியும் வசுமதியும் தனித்துவிடப்பட்டார்கள்.
“நான்கூட உன் லைஃப் எப்பிடி இருக்குமோனு பயந்துட்டே இருந்தேன் அக்கா. ஆனா மாமா ரொம்ப ஸ்வீட். நாம காலையில கிளம்புனதுல இருந்து இப்ப வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் அவரை மட்டும்தான் கவனிச்சிட்டே இருந்தேன். எங்களை கவனிக்கிறதுல அக்கறையா இருந்தாலும் அவர் கண்ணு முழுக்க உன் மேலதான். சச் அ வொண்டர்ஃபுல் மேன் அவரு”
சுகமதியின் புகழ்ச்சியை மட்டும் வசீகரன் கேட்டிருந்தான் என்றால் நிச்சயம் அவனுக்கு ஜலதோஷம் கண்டிருக்கும். அதை வசுமதி கேலியாகக் குறிப்பிட முறைத்தாள் அச்சிறுபெண்.
“உன் நாத்தனாரையே பாரேன்! அவங்க ஹஸ்பெண்ட் இப்ப வரைக்கும் கல்லு மாதிரி இருக்காங்க. ஆனா மாமா, இந்த நேரத்துல உனக்கு அவரோட துணை வேணும்னு எவ்ளோ கேர் பண்ணுறாரு. ஒரு ஹஸ்பெண்ட்னா மாமா மாதிரிதான் இருக்கணும்”
வசுமதிக்கு அந்த இடத்தில் கசப்பான முறுவல் பூத்தது.
“வெளிய இருந்து பாக்குறப்ப நமக்குச் சிலர் மோசமானவங்களா தெரிவாங்க சுகா. சர்வா அண்ணா நல்ல மனுஷன். அவங்களுக்குள்ள என்னனு நமக்குத் தெரியாதுல்ல. தெரியாதவரைக்கும் நாம யாரையும் ஜட்ஜ் பண்ண வேண்டாம். நாளைக்கே மகிழுக்குக் குழந்தை பிறந்ததும் ஓடோடி வருவார் பாரு”
அப்போதும் சுகமதிக்குத் திருப்தியாகவில்லை.
“ஹான், இது நல்லா இருக்கே. ஃபுல் பிரெக்னன்ஸில நீ யாரோ நான் யாரோனு இருந்துட்டு குழந்தை பிறந்ததும் வருவாராமே! அப்ப குழந்தையை விட மகிழ் மதினி அவ்ளோ முக்கியமில்லையா? அவங்க என்ன அவரோட குழந்தையைச் சுமக்குற நடமாடும் இன்குபேட்டரா? இதெல்லாம் சுத்த மோசம்கா”
“சுகா! என்ன நடந்துச்சுனு தெரியாம யாரைப் பத்தியும் பேசக் கூடாது. உனக்கு மகிழை நினைச்சுக் கஷ்டமா இருக்குதுனா அம்மாகூட ஒரு தடவை போய் அவளை வீட்டுல வெச்சுப் பாரு. அவகிட்ட பேசு. சர்வா அண்ணா, அவங்க பிரிவைத் தவிர வேற எதையாச்சும் பேசு. சப்போஸ் அவ தனிமையை விரும்புறானா ரொம்ப பேசாம திரும்பி வந்துடு. வெளியாளா நாம இதைத்தான் அவளுக்குப் பண்ணணுமே தவிர அவ வாழ்க்கையில என்ன நடந்திருக்கும்ங்கிறதை ஆராயக் கூடாது.”
சுகமதி தமக்கை நியாயமாக அறிவுரை சொன்னால் கேட்டுக்கொள்ளும் ரகம். எனவே இதற்கும் சம்மதமாகத் தலையாட்டினாள்.
அன்று மாலையே குடும்பத்தினர் அனைவரும் திருநெல்வேலிக்குக் கிளம்பினார்கள். கமலநாதன் மருமகளிடம் கிளம்பும் முன்னர் தனியே அழைத்துப் பேசினார்.
“என்னம்மா பையன் இப்ப ஒழுங்கா இருக்கான் போலையே”
“இப்ப பிரச்சனை இல்ல மாமா. என்னை ஒழுங்கா பாத்துக்குறார். முன்ன மாதிரி வெடுக்குனு பேசுறதில்ல. நீங்களே அவரோட மாற்றத்தைப் பாத்திருப்பீங்களே”
“உன் வாயால கேட்டாதான் எனக்கு மனசு நிறையும்மா. அதான் கேட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. சீக்கிரமே மகிழ் நிலைமையும் மாறும்னு நம்புறேன்”
“சர்வா அண்ணா என்ன சொல்லுறார்?”
“முன்ன மாதிரி இல்லம்மா, இப்ப வாரவாரம் சம்பந்தியம்மாவோட வர்றார். ஆனா மகிழ்கிட்ட பேசுறதில்ல. இந்தப் பொண்ணு என்ன பேசி வெச்சாளோ?”
பெருமூச்சுடன் பேசியவரிடம் மகிழினியின் பேச்சைச் சொன்னால் நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்துவிடுவாரென அவளுக்குத் தெரியும் என்பதால் அமைதி காத்தாள்.
“நெல்லையப்பர் அருளால அவ வாழ்க்கையில வெளிச்சம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க இங்க சண்டை போடாம சந்தோஷமா வாழணும். அவளாச்சும் பக்கத்துல இருக்குறா. சட்டுனு போய்ப் பாக்க முடியுது. உங்களுக்குள்ள பிரச்சனைய நீ வாயைத் திறந்து சொல்லமாட்டேங்குறியேம்மா. அதான் எனக்குக் கவலை”
“நாங்க ஒரு குடும்பத்தை உருவாக்குற அளவுக்கு முதிர்ச்சியானவங்கனு நம்பித்தானே எங்களுக்குக் கல்யாணம் பண்ணித் தனிக்குடும்பமா வாழ வெச்சிருக்கீங்க மாமா. அதுக்கு அப்புறமும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அம்மா அப்பா, மாமனார் மாமியாரைத் தொந்தரவு செஞ்சா நாங்க முதிர்ச்சியில்லாதவங்களா ஆகிடுவோமே! அதான் நான் சில பிரச்சனைகளை யார்கிட்டயும் சொல்லாம மறைக்கக் காரணம். என்னைக்கோ ஒரு நாள் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வரும்னு நான் நம்புனதும் ஒரு காரணமா இருக்கலாம். அதை விடுங்க மாமா! நீங்க பத்திரமா போயிட்டு வாங்க. சுகாகிட்ட டைம் கிடைச்சா மகிழைப் போய்ப் பாக்கச் சொல்லிருக்கேன்”
“சரிம்மா! நான் கிளம்புறேன். பத்திரமா இருக்கணும்.”
தலையில் கைவைத்து ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பினார் அவளுடைய மாமனார்.
அவர்களை ரயில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு கனத்த மௌனம் வசீகரன் – வசுமதி இடையே!
அன்றைய இரவுணவுக்கு காமாட்சி சப்பாத்தியும் வெள்ளைக் குருமாவும் கொடுத்துவிட்டிருந்தார் ப்ரஷாந்தியிடம். அதனால் இரவுணவு சமைக்கும் வேலையும் இல்லை. வசுமதிக்கு மட்டும் வழக்கமாய்க் கொடுக்கும் பழச்சாறைப் போட்டு எடுத்துக்கொண்டு அவர்களின் அறைக்கு வந்தான் வசீகரன்.
அவள் ஏதோ யோசனையோடு படுக்கையில் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளருகே போய் அமர்ந்தவன் பழச்சாறு நிரம்பிய டம்ளரை நீட்ட, வாங்கிக்கொண்டாள்.
அதை அவள் மிடறு மிடறாக அருந்தும்போது வசீகரனின் ஆடம்ஸ் ஆப்பிள் ஏறியிறங்கியது. பக்கவாட்டுக் கண்போட்டுப் பார்த்தவள் சட்டெனத் திரும்பினாள்.
“உங்களுக்கு ஜூஸ் வேணுமா என்ன? ஏன் அப்பிடி பாக்குறீங்க?” என்று வினவ, வசீகரன் பார்வை கனிய அவளது கன்னத்தைத் தொட்டு உறவாடிய கூந்தல் கற்றையைக் காதோரம் அழகாய் ஒதுக்கிவிட்டுவிட்டுக் காதுமடலை வருடிக்கொடுத்தான்.
வெப்பச் சூறாவளியாய் அவனிடமிருந்து நீண்டதொரு பெருமூச்சு வெளிப்பட அதைக் கவனித்தவள் மடமடவெனப் பழச்சாறைக் காலி செய்துவிட்டு டம்ளரை டீபாய் மீது வைத்தாள்.
ஒவ்வொரு முறை கழுத்தோரம் அவனது மூச்சுக்காற்று மோதும்போதும் தவிப்பு அலையாய் அவளுக்குள் எழுந்து வாரிக்கொண்டது.
பொறுக்க முடியாமல் “என்ன வசீ?” என அவள் மெல்லிய குரலில் வினவ அவளது கரத்தை எடுத்துத் தனது கன்னத்தைப் பற்றுமாறு வைத்துக்கொண்டான் வசீகரன்.
அவள் புரியாமல் விழிக்கவும் அவளது பின்னங்கழுத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் என்னவென அவள் யோசிக்கும் முன்னரே அவளது செவ்விதழில் முத்தத்தைப் பதித்தான். அவள் விலக்கினால் விலகிவிடும் எண்ணம்தான். ஆனால் வசுமதிக்கும் கணவனின் இதழணைப்பில் மறுப்பில்லாது போனது.
அவன் ஆரம்பித்ததை அவள் தொடர அதுவே அவனுக்கு வசதியாய்ப் போனது. கழுத்தில் அவனது கரத்தின் இறுக்கம் அதிகமாக அதிகமாக முத்தத்தின் வேகமும் கூடிக்கொண்டே போனது.
இத்தனை நாட்கள் விலகலின் தவிப்பையும் எப்படியேனும் போக்கிக்கொள்ளும் வேகம் இருவருக்கும். இதழணைப்பிலிருந்து விடுதலையாகி ஒருவர் விழியை மற்றொருவர் ஏறிடுகையில் இருவரின் இதழ்களிலும் புன்னகையின் சாயல்.
இருவரது வதனங்களிலும் அழகான மையலின் சாயல்!
“வசு! ஐ.. ஐ நீட் யூ பேட்லி” திக்கித் திணறிச் சொன்னபோதே வசீகரனின் இதழ்கள் அவளது முகமெங்கும் ஊர்கோலம் போயின.
“ஹான்… ஆனா..” என்றவளின் கரங்கள் அனிச்சையாய் வயிற்றில் குவிந்தன.
அவளது விழிகளை ஏறிட்டவன் அதில் ஒரு கரத்தை எடுத்து உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான்.
“நான் பாத்துக்குறேன்” என்று உறுதி வேறு கொடுத்தான்.
சட்டென நகைத்துவிட்டாள் வசுமதி.
“கேரண்டி குடுக்குறீங்களா?” என்று கேட்க
“நீ பயப்பட வேண்டாம்னு சொல்லுறேன்” என்றவன் அடுத்த நொடி அவளது கழுத்தில் முகத்தைப் புதைத்திருந்தான். அவளுக்கே உரித்தான யார்ட்லி மிஸ்டின் நறுமணம் நாசியில் ஏறி போதையேற்றியது அவனுக்கு.
அதன் ஆல்பைன் ரோஸ், ப்ளாக் கரண்ட் நறுமணம் இனிப்பாய் இருக்கும் சுவாசிக்கும்போதே! ஆழ்ந்து சுவாசித்து அதை அனுபவித்தவனின் நாசியும் உதடுகளும் நிரம்ப வசுமதியின் தவிப்பைக் கூட்டுவதாய்!
விலக்க எழுந்த கரங்களைத் தனது கரங்களால் அடக்கியவன் “ப்ளீஸ்” என்க அதற்கு மேல் தடுக்கும் எண்ணம் அவளுக்கும் இல்லை. அவளும் அவனது அண்மையில் உருகிப்போய்த்தான் அமர்ந்திருந்தாள்.
தடுப்பாரில்லாமல் போகவும் வசீகரனுக்குள் பொங்கிய தாபம் வசுமதியைக் கொள்ளையிட மென்மையாய்ப் பூவுக்கே தெரியாமல் தேனை எடுக்கும் வண்டுபோல அழகாய் அங்கே ஒரு கூடல் அரங்கேறியது.
இத்தனை நாட்கள் பிரிவும் விலகலும் வார்த்தையாடலும் அந்த அழகிய சங்கமத்தின் எரிபொருளாய் மாறிவிட இனி இடையே எவ்விதத் தடையுமில்லாமல் இணைந்து போயின இரு இதயங்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


