“டிஜிட்டல் அறிவு வளர்ந்திருப்பதால் குழந்தைகள் தங்களது வயதுக்கு தகாத வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்கான பின்விளைவுகள் பெற்றோரையே பாதிக்கிறது. கல்வி சம்பந்தப்பட்ட அல்லது பொழுதுபோக்கு வீடியோக்களை அவர்கள் பதிவேற்றினால் கூட தங்களிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு பதிவேற்றினார்களா என கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்குத் தான் உள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்படும் போது குழந்தைகள் கேலிக்குள்ளாகலாம். அதனால் குழந்தைகள் பெற்றோர் கட்டாயமாக்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர், இன்னும் சிலரோ ப்ராண்ட் பார்ட்னர்ஷிப்கள் மூலம் வரும் பணத்திற்காக வீடியோக்களை கண்காணிக்காமல் பதிவேற்றம் செய்கின்றனர் என்கிறார் மனோதத்துவ நிபுணர் சமன்விதா ஆதிசேஷன்”
-சாரதா, தி நியூஸ் மினிட் – 25 பிப்ரவரி 2022
அம்பத்தூர்…
தனது வீட்டிலிருக்கும் ஸ்டூடியோ செட்டப்பை ஸ்ருதிக்கும் ராதாவுக்கும் காண்பித்துக் கொண்டிருந்தாள் மேக்னா.
அவள் தான் அஜய்யின் சகோதரன் விஜய் உதவியால் பிரபல ரீல்ஸ் ஸ்டாராக வலம் வரும் பெண். முதலில் தனியாக ரீல்ஸ் செய்தவள் விஜயின் அறிமுகம் கிடைத்தும் தான் அதிலுள்ள நுணுக்கங்களை அறிந்து கொண்டாள்.
அவனது உதவியால் இன்று இன்ஸ்டாக்ராம், யூடியூப், ஃபேஸ்புக் என அனைத்து சமூக செயலிகளிலும் அவள் பிரபலம். இன்ஸ்டாக்ராம் இன்ஃப்ளூயன்சிங்கில் அவள் சம்பாதிப்பதில் நாற்பது சதவிகிதத்தை விஜய்க்கு கொடுக்கிறாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கூடவே இருவரும் காதலிப்பதாக ராதாவிடம் கூறினாள் அவள். ராதாவுக்கு வியப்பு. இவளுக்கு வயது பதினெட்டு, விஜயோ பத்தொன்பது வயது வாலிபன். இருவரும் கல்லூரியில் இளங்கலை பயிலுபவர்கள். அதற்குள் காதலா என்று திகைத்தவள் இது அவர்களின் சொந்த விசயம் என்பதால் கருத்து கூறுவது நாகரிகமாகாது என அமைதியாய் மேக்னா கூறுவதை கேட்டுக்கொண்டாள்.
“ஆக்ஸ்வலி விஜயோட ப்ரதர் ஸ்ருதிய இன்ட்ரோ குடுக்குறப்பவே நான் யோசிச்சேன் ஆன்ட்டி, இவளுக்கு போட்டோஜெனிக் ஃபேஸ்… கொஞ்சம் க்ரூம் பண்ணுனா ஸ்ருதி ஜொலிப்பா”
தாயும் மகளும் விழிக்கவே சிரித்தாள் மேக்னா.
“ஆன்ட்டி! ஸ்ருதிய பியூட்டி சலூனுக்குக் கூட்டிட்டுப் போங்க… ஹேர், ஃபேஸ் ரெண்டுக்குமே க்ரூமிங் தேவை… ஒரே ஒரு மேக் ஓவருக்கு அப்புறம் நீங்களே உங்க பொண்ணை பார்த்து வாயடைச்சுப் போயிடுவிங்க” என்றாள்.
பியூட்டி சலூன் என்றதும் ராதா தயங்கினாள்.
“அங்கல்லாம் போய் பழக்கமில்லடா மேக்னா”
“இனிமே பழகிக்கோங்க ஆன்ட்டி… நம்மளை நம்மளே பெஸ்டா ப்ரசெண்ட் பண்ணுறதுக்கு செல்ஃப் க்ரூமிங் முக்கியம்… நேச்சுரல் பியூட்டி ப்ளா ப்ளா இதுல்லாம் சும்மா பேச்சுக்குத் தான் ஆன்ட்டி… ஃபேரா இருக்குற பொண்ணு எந்தவித மேக்கப்பும் யூஸ் பண்ணாம பியூட்டி ட்ரீட்மெண்ட் எடுக்காம இருந்தா அதை நேச்சுரல் பியூட்டினு கொண்டாடுவாங்க… அதுவே கொஞ்சம் டஸ்கி ஆர் டார்க் காம்ப்ளெக்சன் உள்ள பொண்ணு ஃபாலோ பண்ணுனா இந்த மூஞ்சியெல்லாம் யாருடா பார்ப்பானு கிண்டல் பண்ணுவாங்க… இந்த சொசைட்டில இயற்கையான அழகுனா கூட அது சிவப்பு தோல் தான் ஆன்ட்டி… கருப்புனாலே அழுக்குனு யோசிக்கிற மெண்டாலிட்டி… நான் ஒன்னும் ஸ்ருதிய வெள்ளையாக்குறதுக்கு அங்க போகச் சொல்லலை… அவளுக்குள்ள ஒளிஞ்சிருக்குற நேச்சுரல் க்ளோவ வெளிய கொண்டு வர்றதுக்கு இந்த பியூட்டி சலூன் க்ரூமிங் அவசியம்”
மேக்னாவின் பேச்சு வாஸ்தவமாகப் படவும் ராதாவும் சம்மதித்தாள்.
மேக்னா ஸ்ருதியிடம் தங்களது ஸ்டூடியோவில் இருக்கும் உபகரணங்களைக் காண்பிக்கத் துவங்கினாள்.
“இது தான் ரிங் லைட்… மோஸ்ட்லி நான் தனியா ரீல்ஸ் பண்ணணும்னா இதை யூஸ் பண்ணுவேன்… இதுக்கு நடுவுல இருக்குற ஸ்டாண்ட்ல மொபைலை வச்சுக்கணும்… அப்புறம் இந்த ஸ்டாண்டை நிறுத்திட்டு இதோட ஹைட்டுக்கு ஏத்த மாதிரி சேர் போட்டு உக்காந்து ரீல்ஸ் பண்ணுவேன்”
வட்டவடிவமான ரிங் விளைக்குடன் கூடிய தாங்கியைக் காட்டி விளக்கினாள் அவள்.
“இது பேக் ட்ராப்… இதுவும் முக்கியம்” என்று தாங்கிகளுடன் நின்று கொண்டிருந்த கருப்புநிற தாங்கியைக் காட்டியவள் அடுத்து எல்.ஈ.டி விளக்குகளைக் காட்டினாள்.
“இது ட்ரைபோட் அண்ட் இது மைக்ரோபோன்… இது எல்லாமே நான் இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சிங்ல சம்பாதிச்சதுக்கு அப்புறம் வாங்குனது தான் ஸ்ருதி… இனிமே இந்த ஸ்டூடியோவ நீயும் நானும் ஷேர் பண்ணிக்கலாம்… அண்ட் ஒன் மோர் திங், யூ ஆர் லைக் மை சிஸ்டர்… சோ பின்னாடி நீ பெரிய இன்ஃப்ளூயன்சர் ஆனாலும் உன்னோட இன்கம்ல நான் ஷேர் கேக்க மாட்டேன்”
“இல்லடாமா” என்று ராதா இடைபுகவும்
“ஆன்ட்டி விஜய்யோட பிரதருக்காக நான் இதை கூட செய்ய மாட்டேனா?” என்று அவளது வாயை அடைத்தாள் மேக்னா.
மொத்தத்தில் ஸ்ருதி ரீல்ஸ் செய்வதில் அஜய் விஜயோடு மேக்னாவும் உதவ தயாராக இருக்க அம்பத்தூரின் பிரபலமான பியூட்டி சலூனில் அந்த வார இறுதியில் ஸ்ருதிக்கு அழகு சிகிச்சை ஆரம்பித்தது.
அவளது சுருள்சுருளான கூந்தல் வெட்டப்பட்டு கெரட்டின் ட்ரீட்மெண்டோடு லேயர் கட்டில் பளபளத்தது. பள்ளியில் கூந்தலுக்கு வண்ணம் பூசுவதற்கு தடை என்பதால் அவள் தலைமுடியின் கறுப்பு வண்ணம் தப்பித்தது.
பின்னர் கரங்களுக்கு, கால்களுக்கு, முகத்திற்கு என தனித்தனியாக அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு ஜொலித்த ஸ்ருதியைக் காண ராதாவிற்கு பேரானந்தம்!
ஸ்ருதியே தன்னைப் புதியவளாக உணர்ந்தாள். இருவரும் வீட்டிற்கு வந்த போது அதிருப்தி சூழ்ந்த முகத்துடன் வரவேற்றார் செண்பகவள்ளி.
பேத்தியின் வெட்டப்பட்ட கூந்தலும் திருத்தப்பட்ட தோற்றமும் அவரது கவனத்தைத் தீண்டியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இரு தினங்களுக்கு முன்னர் பியூட்டி சலூனுக்குச் செல்ல பணம் கேட்டு ராதா முத்துகுமரனிடம் சண்டையிட்டது வேறு நினைவுக்கு வரவே
“நல்லா இருந்த முடியையும் மூஞ்சியையும் இப்பிடி ஆக்குறதுக்கா நீ குமாரை போட்டு பாடாப்படுத்தி காசு வாங்குன ராதா?” என்று குறைபட்டார்.
உடனே ராதாவுக்கு வந்ததே கோபம்.
“உங்களுக்கு நான் என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிக்குறது தானே வேலை… என் பொண்ணு ரீல்ஸ் பண்ணுறதுக்கு இதெல்லாம் அடிப்படைதேவை… ஒரு அம்மாவா நான் அவளுக்குச் சப்போர்ட் பண்ணுறேன்… இதுல தேவையில்லாம நீங்க தலையிடாதிங்க… என் புருசன் சம்பாத்தியத்துல செலவு பண்ணுறதுக்கு எனக்கும் என் மகளுக்கும் முழு உரிமை இருக்கு”
வெடுக்கென அவள் கூறிவிட செண்பகவள்ளிக்கும் கோபம் வந்துவிட்டது.
“பொட்டப்புள்ளை பொழுதன்னைக்கும் போனை பாத்து பல்லை காட்டிட்டே இருந்தா உருப்படுமா? அடிச்சு திருத்தாம நீயும் கூட சேர்ந்து ஆட்டம் போடுற?”
“ஏன் அடிக்கணும்? என் பொண்ணுக்குத் திறமை இருக்கு… அந்தத் திறமைய வெளிப்படுத்துறதுக்கு வாய்ப்பு கிடைக்குதுனா அதை அவ யூஸ் பண்ணிக்கிறதுல என்ன தப்பு? எனக்கு இப்ப இருக்குற டெக்னாலஜிய யூஸ் பண்ண தெரியாது… தெரிஞ்சா நானே அவளுக்கு உதவியா இருந்திருப்பேன்”
“என்னமோ போ… உங்க ஆட்டம் இந்த வீட்டை எங்க கொண்டு நிறுத்தப்போகுதோ? எல்லாத்தையும் அந்த நெல்லையப்பன் தான் பார்த்துக்கணும்”
குறைபட்டபடி அவர் சென்றுவிட ராதா ஸ்ருதியை அணைத்துக்கொண்டாள்.
“நீ ஒன்னும் யோசிக்காதடா… நாளைக்கு மேக்னா வீட்டுக்குப் போ… போகுறப்ப மறக்காம ரேஷ்மிய அழைச்சுட்டுப் போ… தைரியமா ரீல்ஸ் பண்ணு… அம்மா இருக்கேன் உனக்கு”
“ஆச்சி அப்பா கிட்ட சொல்லி எதுவும் பண்ணிடுவாங்களா?”
“அவங்க என்னை மட்டம் தட்டி எனக்குள்ள தாழ்வு மனப்பான்மைய உருவாக்குனப்ப நான் எதுவும் சொல்லலை… உன் விசயத்துல அத்து மீறி மூக்கை நுழைச்சாங்கனா நான் தகுந்த மாதிரி பதிலடி குடுக்குறேன்… நீ பயப்படாத”
அன்னையும் மகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவே செண்பகவள்ளி முத்துகுமரனிடம் கூறிய எந்தக் குற்றச்சாட்டும் எடுபடவில்லை.
விளைவு மறுதினம் பள்ளி முடிந்து ரேஷ்மியையும் அழைத்துக்கொண்டு மேக்னாவின் வீட்டை அடைந்தாள் ஸ்ருதி. மேக்னாவின் பெற்றோர் பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்பதால் விஜயும் அஜயும் அங்கே வருவதற்கு எப்போதும் தடை சொன்னதில்லையாம்.
இதோ புகைப்படக்கருவியுடன் விஜய் தயாராக அதே நேரம் மேக்னா ஸ்ருதியைத் தயார் செய்தாள்.
ஆகாயநீலவண்ண சாட்டின் கவுனை அணிந்து நின்றவளோடு தானும் பேபி பிங் வண்ண சாட்டின் கவுனோடு நின்றவள்
“ஃபர்ஸ்ட் வீடியோ ரெண்டு பேருமா சேர்ந்து பண்ணுவோம்… அதை ரெண்டு பேரோட அக்கவுண்ட்லயும் போடுவோம்… இதால என் ஃபாலோயர்ஸுக்கு உன்னைத் தெரிஞ்சிக்க சான்ஸ் கிடைக்கும்… அடுத்தடுத்த வீடீயோ நீ சோலோவா பெர்ஃபார்ம் பண்ணு” என்றாள்.
ஸ்ருதியும் மேக்னா என்ன கூறினாலும் சரியென்று தலையாட்டிவைத்தாள்.
மெஸ்ஸி கேர் போல செட் செய்யப்பட்ட கூந்தலும் ‘நோ மேக்கப்’ மேக்கப் லுக்குமாக ஸ்ருதியும் மேக்னாவும் ‘ஹலாமதி ஹபிபோ’ பாடலுக்கு ஆட விஜய் அதை படமாக்கினான்.
ரேஷ்மியோ ஸ்டூடியோ பேக் ட்ராபில் ஜொலித்த தோழியை உற்சாகப்படுத்த பயமின்றி மேக்னாவுடன் சில நிமிட வீடியோவை ஆடி முடித்தாள் ஸ்ருதி. முடித்தவளிடம் விஜய் புகைப்படக்கருவியைக் காட்டினான்.
“நீயும் மேகியும் கலக்குறிங்க போங்க… டேய் அஜய் உன் ஃப்ரெண்டை என்னமோனு நினைச்சேன்… ஆனா இவ எக்ஸ்ப்ரசன் குயின்… நீ வேணும்னா பாரு, இந்த வீடியோ உன்னோட எக்ஸ்ப்ரசனுக்காகவே வைரல் ஆகும்” என்றான் அவன்.
ஸ்ருதியோ “அட போங்கண்ணா… ஃபேமஸ் ஆக்டர்ஸ்ல ஆரம்பிச்சு ரீல்ஸ் ஸ்டார்ஸ் எல்லாருமே இந்த சாங்குக்கு பெர்ஃபார்ம் பண்ணிட்டாங்க… இதுல என்னோடது தான் வைரல் ஆகப்போகுதாக்கும்?” என்றாள் கேலியாக.
விஜய் முகத்தைச் சுளித்தவன் “நம்பர் ஒன் இனிமே நீ என்னை அண்ணானு கூப்பிடக்கூடாது… நம்பர் டூ நம்பிக்கையில்லாம ரீல்ஸ் பண்ண வரக்கூடாது… ஏன்னா இது ஒன்னும் விளையாட்டுக்காரியம் இல்ல… இதுக்கு அப்புறம் நான் இதை எடிட் பண்ணணும்… நிறைய வேலை இருக்கு… சோ நீ ரீல்ஸ் பண்ணுறப்பவே ஒவ்வொரு வீடியோவும் வைரல் ஆகணும்னு வேண்டிக்கிட்டே பண்ணு” என்று கறாராகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் சென்றதும் ஸ்ருதியின் முகம் வாடிவிட அவளைச் சூழ்ந்தனர் மேக்னா, அஜய் மற்றும் ரேஷ்மி.
“அண்ணா கொஞ்சம் முசுடு… தப்பா நினைச்சுக்காத” – அஜய்.
“ப்ச்! நீ நம்பிக்கையோட பண்ணுடி” – ரேஷ்மி.
“கம் ஆன் ஸ்ருதி! உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா? கச்சா பாதாம் ரீல்ஸ் பார்த்திருக்கியா? அதை ஒரிஜினலா பாடுன பூபன் பட்யாகார் ஒரு சாதாரண கடலை வியாபாரி தான்… கடலை விக்குறப்ப அவர் பாடுன பாட்டை ஒருத்தன் வீடியோ எடுத்து சோசியல் மீடியால போட்டதால அவரும் பாட்டும் வைரல் ஆனாங்க… அந்தப் பாட்டுக்காக மியூசிக் ஹவுஸ் அவருக்குக் குடுத்த ரெமுனரேஷன் த்ரீ லாக்ஸ் ருபீஸ்… சோ எந்த கன்டெண்ட் எப்ப வைரல் ஆகும்னு யாருக்கும் தெரியாது… டோண்ட் லூஸ் யுவர் ஹோப்” – மேக்னா.
மேக்னாவின் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும். ஏனெனில் அவள் சொன்னபடி எதிர்பாராவண்ணம் அவளும் ஸ்ருதியும் செய்த ரீல்ஸ் வைரல் ஆனது. அதில் ஸ்ருதியின் முகபாவனைகள் அனைவராலும் பாராட்டப்பட ஒரே இரவில் அவளும் பேசப்படுகிற ரீல்ஸ் ஸ்டார் ஆனாள். அவளின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மெதுமெதுவாக அதிகரிக்க ஆரம்பிக்க ஊடகவெளிச்சம் எனும் கானலை நோக்கி சிறகடித்தது ஸ்ருதி எனும் சிட்டு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

