“சில நேரங்களில் பெரியவர்கள் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தியதற்கான வழக்குகள் பதியப்படுகின்றன. ஜூலை 2021ல் டெல்லி பெண்கள் ஆணையம் ஓரு பெண் மீது அவரது சிறுவயது மகனுடன் நடனமாடிய வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. காரணம் அந்தப் பாடலின் வரிகள் ஒரு ஆண் பெண் மீது கொண்ட வேட்கையை விவரித்த விதமும், அதற்கு அந்தக் குழந்தை தன்னை வேட்கை கொண்ட ஆணாக சித்தரித்து நடனமாடிய விதமும் தான். இந்த வீடியோவானது 1.67 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் ரீல்ஸில் பதிவேற்றப்பட்டிருந்தது. பாலின வேட்கையைத் தூண்டும் அத்தகைய பாடலிற்கு தனது மகனை அந்தப் பெண் ஆட வைத்தது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை எனவும், அந்தப் பெண் தன்னையும் இதர பெண்களையும் போகப்பொருளாகப் பார்ப்பதற்கு இளம்வயதிலேயே கற்றுக்கொடுக்கிறார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது”
-சாரதா, தி நியூஸ் மினிட் – 25 பிப்ரவரி 2022
மொத்த டியூசன் செண்டரும் ஆசிரியர் நடத்திக் கொண்டிருந்த வேதியியல் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்க ஸ்ருதியின் கண்கள் மட்டும் அஜய் எங்கே அமர்ந்திருக்கிறான் என தேடியது.
அங்கே மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவ்வளவு எளிதில் அவன் கண்ணில் சிக்கவில்லை. ஸ்ருதியின் அருகே அமர்ந்திருந்த ரேஷ்மி இதோடு ஆயிரம் முறையாவது பாடத்தைக் கவனிக்கும்படி அவளை எச்சரித்திருப்பாள்.
இறுதியில் அவளது கவனம் வேதியியல் சமன்பாட்டின் பக்கம் திரும்பிய போது டியூசனே முடிந்துவிட்டது. அனைவரும் தங்களது புத்தகப்பைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப ரேஷ்மி ஸ்ருதியிடம் பானிபூரி சாப்பிட்டுவிட்டுச் செல்லலாமா என்று கேட்டபடியே நடந்தாள்.
ஸ்ருதியின் கவனம் தான் அங்கில்லையே. இரண்டு முறை கேட்டுவிட்டு மூன்றாவது முறை புஜத்தில் கிள்ளினாள் ரேஷ்மி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவ்ஸ்! ஏன்டி கிள்ளுன?” புஜத்தைத் தடவியபடி முறைத்தாள் ஸ்ருதி.
“எத்தனை தடவை பானிபூரி சாப்பிடலாமானு கேக்குறேன்… எந்த ரியாக்சனும் காட்டாம இருந்தா என்ன அர்த்தம்?” பற்களைக் கடித்தாள் ரேஷ்மி.
ஸ்ருதி அசட்டுச்சிரிப்போடு தலையில் குட்டிக்கொண்டாள். பின்னர் தனது மொபைலை எடுத்தவள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை ரேஷ்மியிடம் காட்டினாள்.
“அதே எய்ட் கே ஃபாலோயர்ஸ் தான்… என்னமோ ஒன் மில்லியன் வந்துட்ட மாதிரி கனவுல மிதக்குற?” கிண்டல் செய்தாள் அவள்.
ஸ்ருதி அவளைப் பொய்யாய் முறைத்தபடி அஜய்யின் கமெண்டை காட்டினாள்.
“நானும் ரொம்ப நேரமா இவனைத் தேடுறேன்… ஆனா கண்ணுல படவே மாட்றான் ரேஷ்… நமக்குலாம் ஃபாலோயர்ஸ் இருக்குறதே பெரிய விசயம்… இதுல அவன் என்னோட ஃபேன்னு சொல்லிருக்கான் பாரு… எனக்கு அப்பிடியே க்ளவுட் நைன் மொமண்ட் தான்” என்று சிலாகித்தவளுடன் சேர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள் ரேஷ்மி.
“இந்தச் சந்தோசத்த பானிபூரி சாப்பிட்டுக் கொண்டாடுவோம் வா” என்று ஸ்ருதியை தள்ளுவண்டியில் பானிபூரி விற்கப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
“பய்யா! தோ ப்ளேட் பானிபூரி”
இரண்டு விரல்களைக் காட்டிவிட்டு அங்கே போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
பானிபூரி நீட்டப்படவும் வாயில் அதக்கிக்கொண்டவர்கள் காரம் சுர்ரென்று இழுக்க சுவைநரம்புகள் தூண்டப்படுவதை ரசித்தப்படி உண்டனர்.
“ஹாய் ஸ்ருதி”
பழக்கமற்ற குரலில் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க அங்கே இன்ஸ்டாக்ராம் புரொபைலில் சிரித்த அஜய் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் வாய்க்குள் மிச்சமிருந்த பானியும் பூரியும் புரையேற இருமினர் இருவரும்.
“ஹேய் ரிலாக்ஸ்! ஏன் இவ்ளோ டென்சன்?” என்றபடி பானிபூரிக்காரரிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி நீட்டினான் அஜய்.
அதை வாங்கிக் கொண்டவர்கள் நீரை அருந்தி முடித்ததும் நன்றியாய் புன்னகைத்தனர்.
“நான் உங்களை டியூசன்ல தேடுனேன்” என்றாள் ஸ்ருதி அவனிடம்.
“நானும் தான்… பிகாஸ் எனக்குப் பிடிச்ச ரீல்ஸ் ஸ்டார் என் கமெண்டுக்கு ஹார்ட்டின் போட்டதால அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு தேடுனேன்” என்றான் அஜய்.
ஸ்ருதி இறக்கையின்றி பறக்கத் துவங்கினாள் என்பது தான் உண்மை. அவளருகே அமர்ந்திருந்த ரேஷ்மியோ வாயெல்லாம் பல்லாக புன்னகைத்தாள். தோழிக்குக் கிடைத்த இந்தச் சிறிய மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்துக் கொண்டாள்.
“லாஸ்ட் வீக் நகரம் மூவி வடிவேலு காமெடி பண்ணுனல்ல அது சூப்பரா இருந்துச்சு ஸ்ருதி” என்று மனதாற பாராட்டினான்.
ஸ்ருதி சிரிக்க ரேஷ்மியோ “நீங்க தான் சூப்பர்னு சொல்லுறிங்க… ஆனா ஸ்ருதியோட டேலண்டுக்கு இந்நேரம் அவளுக்கு ஃபாலோயர்ஸ் எகிறிருக்கணும்… ஆனா ரொம்ப நாளா எய்ட் கே ஃபாலோயர்ஸ்லயே நிக்குறா… இப்ப சினிமா சாங்ஸ் ரீல்சுக்குத் தான் வியூஸ் அதிகம் வருது” என்றாள் சலித்துக்கொண்ட குரலில்.
ஸ்ருதியின் முகமும் அதையே பிரதிபலித்தது.
அஜய் தனக்கு ஒரு பானிபூரியை வாங்கிக் கொண்டவன் “தென் நீயும் சினிமா சாங்ஸ் ட்ரை பண்ணலாமே” என்றான்.
ஸ்ருதி தயக்கத்துடன் “அதுக்கு ஹீரோயின்ஸ் மாதிரி ஃபேர் ஸ்கின் வேணும்… மேக்கப் பண்ணிக்கணும்… கூடவே காஸ்ட்யூம்சும் டிசைன் டிசைனா பண்ணணும் அஜய்… இப்போ எனக்கு அம்மா சப்போர்ட் பண்ணுறாங்க… ஆனா அதுக்காக எல்லா விசயத்தையும் அவங்க கிட்ட கேக்க முடியாதுல்ல” என்றாள்.
உடனே அஜய் பகபகவென நகைத்தான். ஏன் இவன் சிரிக்கிறான் என்று புரியாது விழித்தனர் இருவரும்.
“முதல்ல நீ சொன்னியே ஃபேர் ஸ்கின் வேணும்னு… அதை நினைச்சேன் சிரிச்சேன்… சரி உனக்குப் பிடிச்ச ரீல்ஸ் ஸ்டார் யாரு?”
“அகிரா அஹானா சிஸ்டர்ஸ்”
“அவங்க ஒரிஜினல் ஸ்கின் டோன் என்னனு தெரியுமா?”
கேட்டவன் அந்தக் கேரளப்பெண்களின் ரீல்ஸ் அல்லாத சாதாரண வீடியோ ஒன்றை காட்டினான். அதில் அந்த இரு பெண்களும் முகப்பூச்சின்றி சாதாரணமாக இருக்கவே ஸ்ருதியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“இவங்க டஸ்கி ஸ்கின் தானா? ஆனா ரீல்ஸ்ல பாக்குறப்ப ஃபேர் ஸ்கின்னா இருப்பாங்களே?” சந்தேகமாக கேட்டாள் ரேஷ்மி.
“அதுல்லாம் ஃபில்டர்மா… கூடவே கொஞ்சம் மேக்கப்… அவ்ளோ தான்… இது ரெண்டும் சேர்ந்தா யாரா இருந்தாலும் சினிமா ஸ்டார் மாதிரி மின்னுவாங்க… நான் ஒன்னு சொல்லட்டுமா? ஸ்டார்ட்டிங் டேய்ஸ்ல அவங்களும் சாதாரணமா இருக்குறதை வச்சு ரீல்ஸ் போட்டவங்க தான்.. அப்புறம் வியூஸ் ஃபாலோயர்ஸ் அதிகமானதும் இண்ஸ்டா இன்ஃப்ளூயன்சிங்ல நல்லா சம்பாதிச்சு பியூட்டி புராடக்ட்ஸ் காஸ்ட்யூம்ஸ்னு வாங்கி இப்ப க்ராண்டா ரீல்ஸ் பண்ணுறாங்க… டோண்ட் லூஸ் யுவர் ஹோப் ஸ்ருதி” என்றான் அஜய்.
கூடவே அவன் செய்வதாக கூறிய இன்னொரு உதவி அவளை ஆச்சரியப்படுத்தினான்.
“எங்கண்ணா அவனோட ஃப்ரெண்டுக்கு ரீல்ஸ் வீடியோ பார்ட்னர்… நான் வேணும்னா அவன் கிட்ட உனக்காக ஹெல்ப் கேக்கட்டுமா?”
“உங்கண்ணா எனக்கு என்ன ஹெல்ப் பண்ணுவார்?”
புரியாது கேட்டாள் ஸ்ருதி.
“அவனோட ஃப்ரெண்டுக்கு இன்னும் டூ ஹண்ட்ரெட் ஃபாலோயர்ஸ் வந்துட்டா ஒன் மில்லியன் ரீச் ஆகிடுவாங்க… அவங்க ரீல்ஸை ஷூட் பண்ணுறது, எடிட் பண்ணுறது எல்லாமே என் அண்ணா தான்… அவங்களோட யூடியூப் சேனலை கவனிக்கிறதும் என் அண்ணா தான்… அவன் கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணுவான்”
உறுதியாகக் கூறினான் அஜய்.
ஸ்ருதி அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் தவிக்க ரேஷ்மியோ “நாங்க யோசிச்சிட்டு சொல்லுறோம் அஜய்… இப்ப டைம் ஆகுது.. எங்க வீட்டுல தேடுவாங்க… நாளைக்கு ஸ்கூல்ல மீட் பண்ணுவோம்… பை” என்று அவளைக் கிளப்பினாள்.
ஸ்ருதி புரியாது விழித்தபடி அவளுடன் கிளம்ப அஜய் இருவருக்கும் விடை கொடுத்தான்.
செல்லும் வழியில் ரேஷ்மியிடம் ஏன் அவசரப்படுத்தினாய் என்று கேட்டவளுக்கு அவள் அளித்த பதிலில் ஏனோ திருப்தியில்லை.
“ப்ச்! அவனே வந்து ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுறான்… நீ ஏன் அவசரமா கூட்டிட்டு வந்த ரேஷ்?”
“அது தான் எனக்குச் சந்தேகமா இருக்கு… எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அவன் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ண நினைக்குறான்?”
“ஏன்னா அவன் என்னோட ஃபேன்” ஸ்ருதி கர்வமாக உரைக்கவும் தலையில் அடித்துக்கொண்டாள் ரேஷ்மி.
“இருக்கட்டும்டி… அதுக்காக இவ்ளோ பெரிய ஹெல்ப்லாம் பண்ணுறேன்னு சொல்லுறதை தான் நம்ப முடியல… அவசரப்பட்டு அவன் கிட்ட ஓ.கே சொல்லாத… ஆன்ட்டி கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு அஜய் கிட்ட பேசு”
ஸ்ருதி பூம்பூம் மாடு போல வெளியே தலையாட்டினாலும் மனதுக்குள் என்னவோ அஜயின் சகோதரனிடம் உதவி கேட்க அவளுக்கும் ஆசை தான். இருப்பினும் தோழியின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து சரியென்றாள்.
வீட்டுக்குச் சென்றவள் அன்னையிடம் அஜய் பேசியதை கூறி ஆலோசனை கேட்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரவுணவுக்குப் பிறகு தந்தையும் ஆச்சியும் உறங்கிவிட பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவிட்டு உறங்க சென்ற ராதாவிடம் வந்து நின்றாள் ஸ்ருதி.
“என்னடா?” என்று ஆதுரமாக கேட்டவளிடம் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த ஆச்சியைக் காட்டினாள் ஸ்ருதி.
அவரது உறக்கம் கலைந்துவிடவேண்டாமென இருவரும் வராண்டாவிற்கு சென்றனர்.
சிலுசிலுவென அடித்த காற்றில் அங்கேயே அமர்ந்தனர் இருவரும்.
“என்னடா ஸ்ருதி? ஸ்கூல்ல எதுவும் பிரச்சனையா?”
“இல்லம்மா”
“அப்ப டியூசன் போன இடத்துல…” என்று ராதா இழுக்கவும் ஸ்ருதி தனது மொபைலை எடுத்தாள்.
அதில் அஜயின் இன்ஸ்டாக்ராம் கணக்கைக் காட்டியவள் “என் க்ளாஸ்மேட் தான்மா.. இவனோட அண்ணா ரீல்ஸ் வீடியோ ஷூட் பண்ணுறது, எடிட் பண்ணுறதுலாம் பக்காவா பண்ணுவாராம்… அதுக்காக அவர் கிட்ட ஹெல்ப் கேக்கவானு இன்னைக்கு என் கிட்ட கேட்டான்மா” என்றாள்.
ராதா அவளது மொபைலில் அஜயின் இன்ஸ்டாக்ராம் கணக்கிலிருந்த பதிவுகளைப் பார்வையிட்டபடியே “அதுக்கு நீ என்ன சொன்ன?” என்று கேட்க
“நான் ஒன்னும் சொல்லலைமா… அதுக்குள்ள ரேஷ் என்னை இழுத்துட்டு வந்துட்டா… ஆன்ட்டி கிட்ட கேக்காம நீ அவனுக்குப் பதில் சொல்லக்கூடாதுனு கண்டிசன் வேற” என்றாள் ஸ்ருதி.
ராதாவின் முகத்தில் புன்சிரிப்பொன்று முகிழ்த்தது. தன் மகளுக்கு நல்ல தோழி தான் வாய்த்திருக்கிறாள் என்றெண்ணியவள் ஸ்ருதியின் சுருள்முடியை வருடிக் கொடுத்தாள்.
“உனக்கு நிறைய பேர் உன்னைப் பாராட்டணும்னு ஆசையா இருக்கா?”
“ஆமாம்மா! என்னை கறுப்புனு சொல்லி கிண்டல் பண்ணுன எல்லாரும் ஸ்ருதி போல யார்னு சொல்ல வைக்கணும்… அதுக்கு எனக்கு ரீல்ஸ் தான் பெரிய டூல்மா… நான் அழகு இல்லனு சொன்னவங்க வாயாலயே ஸ்ருதி மாதிரி அழகு யாருமில்லனு சொல்ல வைக்கணும்… அதுக்கு அஜய் அண்ணாவோட ஹெல்பை கேட்டா தப்பு இல்லையேம்மா?”
கண்களில் ஏக்கம் மின்ன கேட்ட குழந்தை ஒரு காலத்தில் தன்னை நினைவுபடுத்தினாள் ராதாவுக்கு.
அவளும் இளம்பருவத்தில் சரும நிறத்திற்காக எத்தனை கேலி கிண்டல்களைச் சந்தித்திருப்பாள்! இரண்டாயிரங்களில் உள்ள கதாநாயகிகளைப் போல அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற அவளது ஆசையைக் கூட இம்மாதிரி கேலி கிண்டல்களுக்காக ஒதுக்கி வைத்தவள் தானே ராதா!
இந்நிலை மகளுக்கு ஏன் வரவேண்டும்? அவளது முகப்புத்தக கணக்கில் அவ்வபோது வரும் ரீல்ஸ் வீடியோக்கள் திரையுலக தாரகைகளுக்கு நிகராக மின்னும் எத்தனையோ இளம்பெண்களைப் பார்த்து வியந்திருக்கிறாள்.
தன் மகளும் இப்படியெல்லாம் உடையணிந்து அழகாய் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கனவு அவளுக்கு வராமல் இல்லை. சொல்லப் போனால் அவை அனைத்தும் ராதாவின் நிறைவேறாத கனவுகளே!
அதை தனது மகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்பட்டவள் “சரி! நீ அந்தப் பையன் கிட்ட ஹெல்ப் கேளு… ஆனா நானும் அவன் கிட்ட பேசணும்” என்ற நிபந்தனையுடன் கூடிய அனுமதியை மகளுக்கு வழங்கினாள்.
ஸ்ருதியின் கண்களில் நட்சத்திரங்கள் மின்னின.
“தேங்க்ஸ்மா… நான் நாளைக்கே அஜய் கிட்ட கேக்குறேன்… அவங்கண்ணா மட்டும் எனக்கு வீடியோ ஷூட் எடிட்டிங்ல ஹெல்ப் பண்ணுனா என்னோட ஃபாலோயர்ஸ் இன்க்ரீஸ் ஆவாங்க… அப்புறம் நானும் இன்ஸ்டால இன்ஃப்ளூயன்சிங் பண்ணி நிறைய சம்பாதிப்பேன்… பி.ஆர்ல எனக்கு நிறைய காஸ்ட்யூம்ஸ் பியூட்டி புராடெக்ட்ஸ்லாம் வரும்… அகிரா அஹானா மாதிரி நானும் ஃபேமஸ் ரீல்ஸ் ஸ்டார் ஆகிடுவேன்”
தனது கனவுகளை வரிசையாக ஒப்பித்தாள் அவள். ராதாவோ அதை கேட்டுப் புன்னகைத்தவள் மகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாரானாள்.
அதில் அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே கணவனும் மாமியாரும் தான் என்பதை அப்போது அவள் மறந்தே போனாள். ஆனால் தக்க சமயத்தில் என்ட்ரி கொடுத்து நாங்களும் இருக்கிறோம் என்பதை அவர்கள் நிரூபிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

