கயல்விழி சமாதானம் சொல்லும்போதே பொங்கியெழுந்துவிட்டாள் அவள்.

“இன்னும் நான் எதுக்குப் பொறுமையா இருக்கணும்? உங்க மகன் எனக்குத் துரோகம் பண்ணிருக்கார். மெயின் ஸ்ட்ரீம் மீடியால ஆரம்பிச்சு சோஷியல் மீடியா வரைக்கும் அவரும் அந்தப் பொண்ணும் நியூசிலாந்துல எடுத்த போட்டோஸ்தான் வைரல் ஆகிட்டிருக்கு. இதே தப்பை நான் செஞ்சிருந்தா நீங்க உங்க மகனைப் பொறுமையா இருனு அட்வைஸ் பண்ணுவீங்களா?”
கயல்விழி ஏதோ சொல்ல வந்தவர், தங்களை வேடிக்கை பார்த்தபடி நின்ற அருள்மொழியைப் பார்த்ததும் தவிப்போடு அவனிடம் சென்றார்.
“அருள்! கட்சி மீட்டிங்கில என்ன சொன்னாங்க? ஆதி எந்தத் தப்பும் பண்ணலதானே? என் மகன் மோசமானவன் இல்லதானே?”
அருள்மொழி உணர்வற்ற விழிகளால் அவரை ஏறிட்டான்.
“ஆதியைக் கட்சிய விட்டு நிக்குறதுக்கான தீர்மானத்தை நிறைவேத்தியாச்சு. அந்தப் பொண்ணு கோர்ட்ல கேஸ் போடப்போறதா சொல்லிருக்கா. கேஸ் போட்டா ஆதியோட எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து. அவ வச்சிருக்குற போட்டோ வீடியோ எதுவும் பொய்யில்ல. ஆதிக்கு அவ கூட அஃபயர் இருந்தது உண்மை.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கயல்விழி கதிகலங்கிப் போனார். மகனின் பதவி பறிக்கப்படுவதற்காக அல்ல; அவன் வழிதவறிப் போனானே என்ற ஆதங்கத்தில். அவருக்கே அப்படி என்றால் ஸ்ரீநிதியின் நிலை அதை விடப் பரிதாபம். அவள் ஆதித்யனை முழுதாக நம்பினாளே! மனைவி மகன் என்று குடும்பஸ்தனாக இருப்பவன் செய்யக்கூடிய காரியமா இது?
அவள் அழுதுகொண்டே ஓடிவிட, கயல்விழி மனமுடைந்து போய் சோஃபாவில் சரிந்து அழ ஆரம்பித்தார். அவரது அழுகை அருள்மொழியின் மனதை அசைத்ததுதான். ஆனால் அவனது திட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கத் தோன்றவில்லை. யார் அழுதாலும் யார் உடைந்து உருத்தெரியாமல் போனாலும் அவன் கவலைப்படப் போவதில்லை. முதலில் கண்ணீரைக் கண்டதும் கலங்கும் மனதைக் கல்லாக்கப் பழக வேண்டுமெனத் தனக்குள் சொல்லிக்கொண்டு அவனது அறைக்கு வந்துவிட்டான்.
அவன் வந்த சில நிமிடங்களில் அவனைத் தொடர்ந்து வானதியும் வர, சீண்டலான முறுவலொன்று அவனது இதழில்.
“ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரிஞ்சு இருக்க முடியாதுல்ல உன்னால?”
அவன் நக்கலாகச் சொன்னதும் இரத்தமெனச் சிவந்து போனது அவளது வதனம். விறுவிறுவென அவன் முன்னே வந்து நின்றாள்.
“நீதானே இதுக்கும் காரணம்?” என்று குற்றம் சாட்டினாள்.
“இல்ல” என்று மறுத்தவன் “நீதான் காரணம்” என்று குற்றத்தை அவள் மீது திருப்பினான். ‘நானா? நான் என்ன செய்தேன்?’ வானதி குழம்பியபோது அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தபடியே ஃபார்மல் சட்டையைக் கழற்றி டீசர்ட்டுக்குள் புகுந்தான்.
“என்னாச்சு? அடுத்த ராணா அயூப், பூனம் அகர்வாலா மாறப்போற தி கிரேட் இன்வெஸ்டிகேட்டிவ் ஜெர்னலிஸ்ட் வானதி ஜெயசந்திரனுக்கு இன்னுமா புரியல?”
கிண்டலாய் கேட்டவன் சாவகாசமாய் படுக்கையில் அமர்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டான்.
“உன் அண்ணன் இந்த ஃபேமிலிக்குத் தெரியாம செய்யுற எல்லா வேலையும் லண்டன்ல இருந்து இங்க வந்த ஒரு மாசத்துலயே நான் கண்டுபிடிச்சிட்டேன். முக்கியமா அவனோட அஃபயர், எம்.எல்.ஏ பதவியப் பயன்படுத்தி அவன் செஞ்ச அராஜகம் இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும். எனக்குத் தேவையான சமயத்துல ஒவ்வொன்னா வெளிய கசிய விட்டு அவனைக் காலி பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்தேன். இடையில நீ தேவையில்லாம என்னைச் சீண்டிவிட்டுட்ட. என்ன சொன்ன? எனக்கு அரசியல்ல ஏபிசிடி கூட தெரியாது, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நான் தூரமா நின்னு போட்டோ எடுக்குறதோட சந்தோசப்பட்டுக்கணும்னு என்னென்ன பேசுன நீ.”
“ரெண்டே வாரம், உன் அண்ணனோட எம்.எல்.ஏ பதவி காலி ஆகும். இடைத்தேர்தல் வரும். நீ தூரமா நின்னு போட்டோ எடுக்கச் சொன்ன அதே செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு நான் எல்லா அதிகாரத்தோடவும் போய் காட்டுறேன். பாக்குறியா?”
விரலைச் சொடுக்கி சவால் போல அவன் சொல்லவும் வானதியின் முகம் இறுகிப் போனது.
“உனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியுமா?”
“உன் நொண்ணன் மட்டுமில்ல, உன் அப்பனும் என்னென்ன தகிடுதத்தம் பண்ணுனான்னு நல்லா தெரியும். இப்போதைக்கு உன் அண்ணனைக் காலி பண்ணுறேன். பொதுத்தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. உங்கப்பனை மெதுவா அடிக்கலாம்.”
“மரியாதை அருள்” தந்தையை அவன் ஒருமையில் பேசவும் எச்சரித்தாள் வானதி.
“குடுக்க முடியாது! உங்கப்பாவே அதெல்லாம் என் கிட்ட எதிர்பாக்க மாட்டார். நீ என்ன சொல்லுறது?”
“இடைத்தேர்தல் வந்தாலும் உன்னைத் தான் வேட்பாளரா நிறுத்தணும்னு என்ன கட்டாயம் எங்கப்பாக்கு? ஆல்ரெடி வாரிசு அரசியல்னு கட்சி மேல லேபிள் ஒட்டுறாங்க. இதுல உன்னையும் உள்ள இழுக்க அவர் விரும்பமாட்டார்.”
அருள்மொழி அசட்டையாக உச்சு கொட்டினான்.
“அவர் விருப்பத்தை இப்ப யார் கேட்டாங்க? அந்தக் கட்சில ஜெயசந்திரனுக்கு விசுவாசிங்க இருக்குற மாதிரி சுந்தரமூர்த்திக்கும் விசுவாசிங்க இருக்காங்க. அவங்க எல்லாம் என் பக்கம்தான். அவங்களை வச்சு பேசுவேன். அப்பிடியும் உங்கப்பன் முடியாதுனு சொன்னா நீ எதுக்கு இருக்குற? இடைத்தேர்தல்ல என்னை வேட்பாளர் ஆக்கலனா உன்னை டிவோர்ஸ் பண்ணுவேன்னு சொல்லுவேன். உங்கப்பா மோசமான அரசியல்வாதியா இருந்தாலும் உனக்கும் உங்க அண்ணனுக்கும் மட்டும் நல்ல தகப்பன் தான். மகளோட வாழ்க்கைக்காக அவர் ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? மக வாழ்க்கைக்காக இல்லனாலும்..” என்றபடி எழுந்து வந்தவன் வானதியை நெருங்கி நின்றபடி “பேரக்குழந்தைக்காக ஒத்துப்பார்ல” என்று அலட்சியச் சிரிப்போடு சொன்னவனாக அவளது குர்தியின் மேலே வயிற்றைத் தொட்டுக் காட்டினான்.
வானதி செயலிழந்து சிலையானவள், குழந்தையைச் சொன்னதும் சுதாரித்துச் சுயநினைவுக்கு வந்தாள். கொத்தாக அவனது சட்டை காலரைப் பற்றியவள் “எல்லாமே உனக்குப் பகடைக்காய்ல. நான், இப்ப நம்… என்னோட குழந்தை எல்லாமே… அசிங்கமா இல்ல இப்பிடியெல்லாம் பிளான் போடுறதுக்கு?” என்று கொதிப்போடு வினவினாள்.
அருள்மொழி அவளது கையைச் சட்டையின் காலரிலிருந்து விடுவித்தவன் “ஏன்? எதுக்கு இவ்ளோ கோவம்? அராம்சே பேட்டா” என்று அவளது கன்னத்தைத் தட்ட, சட்டென அவனது கையைத் தட்டிவிட்டாள். விலகியும் நின்று கொண்டாள்.

“நீ மாறிருப்பனு நம்புனேன் அருள்” என்றாள் உடைந்த குரலில், ஆனால் உடையாத மனவலிமையோடு.
“இப்ப வரைக்கும் உன் விசயத்துல நான் நல்லவனா தான் இருக்கேன். எனக்குள்ள உனக்காக மட்டும் கொஞ்சமா இருக்குற இந்த நல்ல மனுஷத்தனம் தொடருறதும் முடியுறதும் உன் கையிலதான் இருக்கு. நீ அடிக்கடி உங்கப்பனுக்காக, உன் அண்ணனுக்காக என் கிட்ட சவால் விடாத வானதி. நான் பொறுமையா உங்கப்பன் கட்டிவச்ச அதிகாரக் கோட்டையோட ஒவ்வொரு செங்கலையும் உருவி அந்தக் கோட்டையை நிர்மூலமாக்குற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு. அதுதான் உனக்கும் நல்லது. ‘நம்ம’ குழந்தைக்கும் நல்லது.”
‘நம் குழந்தை’யை அழுத்தமாகச் சொல்லி அது தனக்கும் குழந்தையென நினைவூட்டினான் அருள்மொழி.
“Revenge often costs a life (பழிவாங்குதல் பெரும்பாலும் ஒரு உயிரையே விலையாகக் கேட்கும்). அது எப்பவும் நிறைவைக் குடுத்துடாது அருள்.”
அருள்மொழியின் கண்களில் ஆச்சரியச் சிரிப்பு.
“உண்மைக்கு ரொம்பப் பக்கத்துல வந்துட்ட போல. உண்மை உனக்கு வேண்டியவங்களுக்கு எதிரா இருக்கும்னு புரிஞ்சதாலதான் சமீபத்துல நீ என் கிட்ட தேவையில்லாம கோவப்படுற. ப்ச்! நீதி நேர்மை நியாயம்னு பேசுற வானதிக்குத் தன்னோட குடும்பம்னு வந்ததும் பாசம் கண்ணை மறைக்குது. உனக்கும் சாதாரண மனுஷிக்கான பலவீனம் இருக்கு. அதைக் கடந்து யோசிக்க முயற்சி பண்ணு. எனக்கு அட்வைஸ் பண்ணுறதால நடக்கப்போற எதுவும் மாறாது.”
மெய்யாகவே ஆதித்யனுக்குக் கொடுத்த பதிலடி வானதியை அவன் நோகடித்த விசயத்துக்காகத்தான் என்று அவளிடம் சொல்லத் தோன்றவில்லை அருள்மொழிக்கு. அவன் சொன்ன உண்மை சுட்டதால் தலை குனிந்து நின்றவளுக்குத் தனது ஒருதலைபட்சமான நிலைப்பாடு குற்றவுணர்ச்சியைக் கொடுத்துவிட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

