“நீங்கள் என்னை உங்களது வார்த்தைகளால் சுட்டுத் தள்ளலாம்; உங்கள் கரங்களால் வெட்டி வீழ்த்தலாம்; உங்கள் வெறுப்பினால் என்னை கொல்லவும் செய்யலாம். ஆனால் அதன் பின்னரும் நான் எழுவேன், காற்றைப் போல”
-மாயா ஏஞ்சலோ, அமெரிக்க கவிஞர்
ஆளுனர் மாளிகை, கிண்டி…
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் படுதீவிரமாகச் செய்யப்பட்டிருக்க எங்கெங்கு நோக்கினும் காவல்துறையினரும் பத்திரிக்கையாளர்களுமாய் காட்சியளித்தனர்.
அன்றைய பதவியேற்பு நிகழ்வுக்காக முக்கிய கட்சிப்பிரமுகர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும், இன்னும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எதிர்கட்சியான முற்போக்கு விடுதலை கட்சியின் சார்பில் அக்கட்சி தலைவரான வீரபாண்டியனும் முக்கிய கட்சிபிரமுகர் செங்குட்டுவனும் விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களுக்கான இருக்கையில் பாதுகாவலர்கள் உதவியுடன் சென்று அமர்ந்தவர்களுக்கு விழா ஏற்பாட்டைக் காண காண வயிற்றெரிச்சல் தான்! இருப்பினும் பத்திரிக்கையாளர்களுடன் வந்திருந்த கேமராமேன்களின் புகைப்படக்கருவிக்கு அஞ்சி முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாது மறைத்துக் கொண்டனர்.
அப்போது வெளியே அரவம் கேட்க இருவரும் திரும்பி பார்க்கையில் பாதுகாவலர்கள் சூழ உள்ளே வந்து கொண்டிருந்தார் ஆகாஷ் கண்ணப்பன். அகத்தியனும் அருள்மொழியும் விடுத்த அழைப்பிற்காக முந்தைய தினம் மேற்கு வங்காளத்திலிருந்து சென்னைக்கு வந்தவர் தனது ஐ.பி.சி குழுவினரை மேற்குவங்க தேர்தல் பணிக்காக அங்கே அனுப்பிவிட்டு பதவியேற்பு விழா நடைபெறும் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்தார்.
அவருக்கான இருக்கையில் அவர் அமரவும் அடுத்த இருக்கையில் அகத்தியன் அமர வைக்கப்பட்டான். இருவரும் சிரித்துப் பேசுவதை எரிச்சலுடன் உறுத்து விழித்த செங்குட்டுவன்
“இந்த ரெண்டு பேரும் தான் தலைவரே அம்புட்டு பிரச்சனைக்கும் காரணம்” என பொரும வீரபாண்டியன் அவரை முறைத்துவிட்டு கேமராக்களின் ஃப்ளாஷை சுட்டிக்காட்டினார்.
உடனே செங்குட்டுவன் தனது முகபாவத்தை மாற்றிக்கொண்ட கணத்தில் மொத்த பத்திரிக்கையாளர் கூட்டமும் வாயில் பக்கம் திரும்பியது.
அங்கே வழக்கமான வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்டில் கரம் குவித்தபடி வந்து கொண்டிருந்தான் அருள்மொழி. அவனைச் சுற்றியிருந்த பாதுகாவலர்கள் கரங்களால் அரண் அமைத்து வேறு யாரும் அவனை நெருங்காதபடி பார்த்துக் கொள்ள அவர்களை அடுத்து காவல்துறை அதிகாரிகளுடன் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாட்டைப் பற்றி கேட்டுக்கொண்டே வந்தான் அருள்மொழியின் உதவியாளனான சங்கர்.
அருள்மொழி பதவியேற்பு நடைபெறும் இடத்திற்கு வந்தவன் பத்திரிக்கையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்த போது அவனது அன்னையுடன் தங்களுக்கான இருக்கையில் சென்று அமர்ந்தாள் யாழினி.
இரு பெண்களின் வதனத்திலும் பெருமிதம் பொங்கியது. அருள்மொழி மேடையிலேறி அங்கே இருந்த ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தான்.
“திரு அருள்மொழி சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா” என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டிருந்து விழா மேடை.
அப்போது தேசியகீதம் இசைக்க அனைவரும் எழுந்து நின்றனர். அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழாவானது இனிதே ஆரம்பித்தது.
“முதலமைச்சர் அவர்களுக்கு, பதவியேற்பு உறுதிமொழியும் இரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைக்குமாறு மாண்புமிகு ஆளுனர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்”
ஆளுனர் எழுந்து நின்றார்.
“திரு அருள்மொழி சுந்தரமூர்த்தி அவர்கள் பதவியேற்பு உறுதிமொழியும் இரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்”
காவலதுறை உயரதிகாரி இருவருக்கும் தனித்தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியைக் காட்ட ஆளுநரும் அவரைத் தொடர்ந்து அருள்மொழியும் அதன் முன்னே சென்று நின்றனர்.
விழா அரங்கில் கரகோசம் எழ அருள்மொழி நிமிர்வுடன் தன் முன்னே அமர்ந்திருந்த கூட்டத்தை நோக்கினான்.
இதில் என் மீது அக்கறை கொண்டவர்கள் எத்துணை பேர்? என்னை பகையாளியாக எண்ணுபவர்கள் எத்துணை? எனது வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் எத்துணை? இந்த அனைவருமே நான் இங்கே நிற்பதற்கு காரணமானவர்களே!
கண்கள் வரிசையாக வீரபாண்டியனில் ஆரம்பித்து ராமமூர்த்தியை கூர்மையாக நோட்டமிட்டு முடித்து அடுத்து அமர்ந்திருந்த யாழினியையும் மீனாட்சியையும் பரிவுடன் நோக்கியபடியே அகத்தியன் அருகே அமர்ந்திருந்த ஆகாஷ் கண்ணப்பனில் வந்து நின்றன.
அனிச்சையாக அடுத்து அவனது நியாபகத்தில் வந்து நின்றவள் வானதியே! அவன் இங்கே நிற்கும் அவளும் ஒரு காரணம்! அவளது சுயநலத்திற்காக காய் நகர்த்தியிருந்தாலும் அதனால் அருள்மொழிக்கு இன்று வரை தீமை எதுவும் வரவில்லையே!
இன்னும் அவளைப் பற்றி உனக்கு முழுவதுமாகத் தெரியவில்லை அருள்மொழி என்று விதி எச்சரிப்பது அவனது செவியில் விழும் முன்னரே ஆளுனர் “I, Arulmozhi Sundaramoorthi” என்று பதவியேற்பு பிரமாணத்தின் முதல் வரியைச் சொன்னது தான் அவனது செவிகளை அடைந்தது.
உடனே தன் முன்னே இருந்த ஒலிவாங்கியைச் சரி செய்து கொண்டவன் தன் கையிலிருக்கும் பதவியேற்பு அறிக்கையைப் பார்த்து
“அருள்மொழி சுந்தமூர்த்தி எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியநாட்டின் ஒப்பில்லாத ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்புக்கும் சட்டத்திற்குமிணங்க அச்சமும், ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதிமொழிகிறேன்”

என்று கூற விழா நடைபெறும் இடத்தில் அமர்ந்திருந்த அனைவரும் உற்சாகமாக கரகோசம் எழுப்பினர்.
பின்னர் அடுத்தடுத்த உறுதிமொழி, இரகசியக்காப்பு பிரமாணம் என பதவியேற்பு விழாவுக்கான அனைத்து நிகழ்வுகளும் வரிசையாக அரங்கேற அருள்மொழி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டான்.
பதவிப்பிரமாணம் முடிந்ததும் அவனது கண்கள் யாழினியையும் மீனாட்சியையும் நோக்கியது. இருவருமே உணர்ச்சிவசப்பட்டவர்களாய் அவனது இந்த வெற்றியை எண்ணி நெக்குருகிய நிலையில் அமர்ந்திருந்தனர்.
அருள்மொழியின் மனம் சுந்தரமூர்த்தியையும் ஆதித்யனையும் அக்கணம் தேடியது. தனது ஒவ்வொரு வெற்றிக்கான கொண்டாட்டத்திலும் நீங்காது இடம்பெற்றவர்கள் இந்த முக்கிய நிகழ்வில் இல்லை என்றதும் அவன் மனம் வருந்தியது என்னவோ உண்மை!
ஆனால் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவியேற்க மேடைக்கு வரவும் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டவனாக மீண்டும் நிமிர்வாக அமர்ந்தான் அருள்மொழி.
அவனது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் முப்பத்து மூன்று அமைச்சர்களும் வரிசையாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதில் சந்திரகுமார், மந்திரமூர்த்தி மற்றும் தெய்வநாயகம் மூவரும் அடக்கம். கவியன்பன் மட்டும் அதில் மிஸ்ஸிங்.
அவரைத் தான் சட்டச்சபை சபாநாயகர் ஆக்கும் தீர்மானத்தை முந்தைய தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் த.மு..கவினர் ஒருமனதாக நிறைவேற்றியிருந்தனர். எனவே அவர் பதவியேற்பைத் தொடர்ந்து நடந்த தேநீர் விருந்தில் அருள்மொழியுடன் சேர்ந்து உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.
அருள்மொழியுடன் அகத்தியன், ஆகாஷ் கண்ணப்பன் மற்றும் கவியன்பன் அமர்ந்து தேநீர் அருந்தியபடி அடுத்தக்கட்ட அரசு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பற்றி பேசும் காட்சியை செய்தி தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
நிதர்சனாவும் இதர குழுவினரும் கொல்கத்தாவுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பிட்ட தேதியை விட முன்னராகவே அங்கே செல்லும்படி ஆகாஷ் கண்ணப்பனின் கட்டளை! மீற முடியாதவர்கள் விமானம் ஏறிவிட்டனர்.
வானதி மட்டும் இன்னும் தனது வேலை முடியாததால் சென்னையில் தங்கிவிட்டாள். அவளுமே ஞாயிறு வரை தான் இங்கே இருக்க முடியும்! ஏனெனில் தேர்தலுக்கான வேலைகள் கொல்கத்தாவில் அவளுக்காக காத்திருந்தனவே!
ரிமோட்டால் நாடியை இடித்தபடி அமர்ந்திருந்தவளை தன் வசம் ஈர்த்தது மொபைலின் ரிங்டோன். அழைத்தவள் நிதர்சனா.
எடுத்ததுமே “எப்ப நீ கொல்கத்தா வர்ற?” என்று தான் கேட்டாள்.
“டுமாரோ மானிங் அவர் வர்றாரு… எல்லாம் முடிஞ்சதும் நான் ஃப்ளைட் ஏறிடுவேன் சனா” என்றாள் வானதி.
“அது இல்ல நதி… உனக்கு எதுவும் பிரச்சனை வந்துடுமோனு திக்திக்னு இருக்குடி… நீ நினைச்சது நடக்குறதுக்கு எவ்ளோ ரிஸ்க் எடுத்தேனு எனக்கு நல்லா தெரியும்… அதுக்கு அப்புறமும் ஏன் சென்னைலயே இருக்கணும்? அது தான் புரியல எனக்கு”
“நான் நினைச்சது எல்லாம் ரொம்ப ஈசியா நடந்தது அருளுக்கு என்னோட மோட்டிவ் என்னனு தெரியுறதுக்கு முன்னாடி சனா… அவன் யாருக்காக நான் இவ்ளோ தூரம் ப்ளான் பண்ணுறேன்னு கண்டுபிடிச்சதுக்கு அப்புறமா என்னோட எல்லா ப்ளானும் கொலாப்ஸ் ஆனது உனக்கு தெரியும்ல… அந்த மாதிரி நேரத்துல எனக்கு உதவி பண்ணுனவரை அம்போனு விட்டுட்டு வர முடியுமா? அவர் என் கிட்ட பதிலுக்கு உதவி கேக்கல… ஜஸ்ட் என்னை பாக்கணும்னு தானே சொல்லுறாரு… அவரைப் பாக்குறதால நான் ஒன்னும் குறைஞ்சு போயிடமாட்டேன்டி… என் கிட்ட என்னமோ சொல்லணும்னு நினைக்கிறாரு… அத காது குடுத்து கேக்காம இருந்தா நன்றிகெட்டத்தனமா போயிடும்டி சனா”
“என்னவோ சொல்லுற… ஆனா என்னால இங்க நிம்மதியா இருக்க முடியல… சட்டுப்புட்டுனு சென்னைல மிச்சமீதி இருக்குற எல்லாத்தையும் பைசல் பண்ணிட்டு ஃப்ளைட் ஏறு… அப்போ தான் நான் நிம்மதியா இருப்பேன்”
நிதர்சனாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் வானதி. சும்மாவே இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அன்றைய நாளில் புரிந்து கொண்டாள் அவள். எவ்வளவு நேரம் தொலைக்காட்சியைப் பார்த்து, சமூகவலைதளத்தில் உலாவுவது?
மதியவுணவை உண்டுவிட்டு அவளை மீறி உறங்கியும் விட்டாள். ஆனால் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்ததால் மறக்க முடியாத பழைய நினைவுகள் அவளது கனவைப் பீடிக்கத் துவங்கியது.
அதில் வந்தவன் யுவராஜ். அவன் ஒரு நபரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“கேஸ் ரெகுலேட்டர்ல பிரச்சனைனு சொன்னது உன்னோட ஸ்டாஃப் மூர்த்தி… ஆனா அந்தாளுக்குப் பதிலா நீ தான் ரெகுலேட்டரை மாத்துறதுக்கு வந்திருக்க… நீ வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் தான் சிலிண்டர் வெடிச்சிருக்கு… அது பக்கத்து வீட்டு சிசிடிவி கேமரால ரெக்கார்ட் ஆகிருக்கு… எந்த ஊர்ல தொழிலாளிக்கு உடம்பு சரியில்லனு முதலாளியே இறங்கி வந்து வேலை செய்வான்? இந்தக் கதைய போலீஸ் நம்பியிருக்கலாம்… ஆனா என் கிட்ட ஆதாரம் இருக்கு… இத போலீஸ் கிட்ட குடுத்தா நீ கம்பி எண்ணனும்… உன்னை ஏவி விட்டவனும் எங்க குடும்பத்தாளுங்களை கொன்னதுக்குப் பதில் சொல்லணும்”
அந்நபரோ அலட்சியமாக “தம்பி ஆட்சியே எங்க ஐயாவோட அண்ணனோடது தான்… அப்ப போலீஸ் மட்டும் அவருக்கு எதிரா வேலை செய்வாங்களா? என்னத்த காலேஜுல படிச்சு கிழிச்ச? உன் நல்லதுக்குச் சொல்லுறேன், போலீஸ் ஸ்டேசனுக்குலாம் போகாத… அங்க இருக்குறவங்க யாரும் எங்கய்யாக்கு எதிரா ஒரு செங்கல்ல கூட நகர்த்த மாட்டாங்க… நீ ஏமாந்து போவ… ஏமாந்தா கூட பரவால்ல… ஆனா உன்னையே இல்லாம பண்ணிட்டா என்ன பண்ணுவப்பா? செத்தவங்க என்ன வயசுப்பசங்களா? எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சவங்க தான… ஆனா நீ வாழ வேண்டியவன்பா… யோசிச்சுக்க… அப்புறம் உன் பாடு” என்று அவனது தோளில் தட்டிவிட்டு சென்றார்.
யுவராஜ் அவளிடம் சொல்லிக்கொண்டு காவல்நிலையத்திற்கு போன காட்சியும் மறுநாள் பிணமாக அரசு மருத்துவமனை பிணவறையில் கிடந்த காட்சியும் அடுத்தடுத்து வந்தது.
நிதர்சனாவும் வைதேகியும் அழுது அரற்றும் போது தான் கல்லாய் அமர்ந்திருந்த காட்சியும் பின்னர் ஆவேசத்துடன் எழுந்து அந்நபரின் கேஸ் ஏஜென்சிக்குச் சென்று சண்டையிட்ட காட்சியும் அவளின் கனவில் சம்பவமாக விரிந்தது.
“இங்க பாரும்மா அவன் நெஞ்சுவலி வந்து போய் சேர்ந்ததுக்கு இங்க வந்து ஏன் ஒப்பாரி வைக்கிற? போ போய் பொணத்தை எரிக்குறதுக்கு வழிய பாரு”
“யுவா நெஞ்சுவலில சாகலனு உனக்கு நல்லா தெரியும்… ஏன்யா இப்பிடி எல்லாருமா சேர்ந்து அநியாயம் பண்ணுறீங்க? பிடி நிலத்துக்கு நாலு பேரோட உயிரை விலையாக்கிட்டிங்களே… நீங்கல்லாம் நல்லாவே இருக்கமாட்டிங்க… எங்க குடும்பம் இல்லாம நான் தவிக்குற மாதிரி நீயும் தவிப்ப… இது நடக்கும்”
அவள் ஆவேசத்துடன் முழங்கும் போதே “என்னங்க இந்தப் பொண்ணு யாரு? ஏன் அழுதுட்டிருக்கு?” என்ற கேள்வியுடன் வந்து நின்றார் ஒரு நடுத்தரவயது பெண்மணி.
உடனே அந்நபரின் முகம் மாறியது.
“இது என்னவோ பைத்தியம் போல இருக்கு மாலா… நீ உள்ள வா… மேகலா சாப்புட்டாளா? மோகன் டியூசனுக்குப் போனவன் வந்துட்டானா?” என மனைவியிடம் பேசியபடி ஏஜென்சிக்குள் நுழைந்தவர் வாயில்காப்போன் போல இருந்த ஒருவனிடம் கண் காட்ட அவன் வானதியை தரதரவென இழுத்து வந்து வெளியே தள்ளினான்.
முழங்கைகளில் தார்ச்சாலையின் சூட்டினையும், அங்கே கிடந்த பொடிக்கற்கள் சிராய்த்ததால் உண்டான காயத்திலிருந்து எட்டிப்பார்த்த இரத்தத்தையும் இப்போதும் உணர்ந்தாள் வானதி.
நிமிர்ந்து அந்தக் கட்டிடத்தை ஏறிட்டவளின் பார்வையில் விழுந்தது “மேகலா கேஸ் ஏஜென்சி” என்ற பெயர்ப்பலகை.
பின்னர் என்னென்னவோ காட்சிகள் வரிசையாய் வர கடைசியாய் அந்த கேஸ் ஏஜென்சியின் உரிமையாளனும் தனது பெற்றோர் மற்றும் செந்தில்நாதனின் இறப்புக்க்குக் காரணமான ராஜகுரு மருத்துவமனையில் அழுது அரற்றும் காட்சி வந்தது.
“ஐயோ என் பொண்டாட்டி, புள்ளைனு எல்லாரையும் இழந்துட்டு நான் மட்டும் ஏன் உயிரோட இருக்கணும்… என்னையும் விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்”
“சார் இது ஹாஸ்பிட்டல்… கசாப்புக்கடை இல்ல… நீங்க செத்துட்டீங்கனா உங்க பொண்ணை யார் பாத்துப்பாங்க? உங்களுக்காச்சும் தூக்கி வீசுனதுல ஃப்ராக்சர் தான் ஆகிருக்கு… ஆனா அந்தப் பொண்ணு கால் மேல லாரி ஏறுனதால கால் சிதைஞ்சிடுச்சு… முட்டிக்குக் கீழ ஆம்புட்டேசன் பண்ணிருக்கோம்… வாழ்க்கை முழுக்க அந்தப் பொண்ணால நடக்கவே முடியாது… அம்மா, அண்ணன் ரெண்டு பேரும் இறந்துட்டாங்க… மிச்சம் இருக்குறது நீங்க மட்டும் தான்… நீங்களும் செத்துட்டா அந்தப் பொண்ணு அனாதை ஆகிடும்”
வைதேகிக்கு மாரடைப்பு என மருத்துவமனையில் சேர்க்க வந்த சமயத்தில் ராஜகுரு கதறிய காட்சியைக் கண்டுவிட்டனர் நிதர்சனாவும் வானதியும்.
தெய்வம் நின்று கொன்றிருக்கிறது! ஆனால் கொன்ற நபர்கள் தான் அப்பாவிகளாய் போய்விட்டனர். ஏனோ சந்தோசம் வருவதற்கு பதில் வானதியின் மனதில் சங்கடம் தான் சூழ்ந்தது.
ராஜகுரு கதறியபடியே திரும்பியவர் வானதியைப் பார்த்ததும் ஓவென்று பெருங்குரலெடுத்து அழுதபடியே ஓடிவந்தார்.
“என்னை மன்னிச்சிடும்மா… உன் குடும்பத்துக்கு நான் பண்ணுன பாவத்துக்கு இப்ப தனிமரமா நிக்கேனே”
அவர் அழுது அரற்றிய காட்சி! அதன் பின்னர் வானதி அவரது மகள் மேகலாவிடம் ஆறுதலாய் பேசிய காட்சி!
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு வைதேகியின் சடலத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் கிளம்பிய போது அவரும் மகளை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி சென்ற காட்சி!
கனவு போல தோன்றினாலும் நிஜ சம்பவத்தின் வலிகளை அவளும் ஏற்படுத்திவிடவே உறங்கிக்கொண்டிருந்த வானதி எழுந்துவிட்டாள்.
அதன் பின்னர் அவளுக்கு உறக்கம் வரவில்லை. எப்படியோ பொழுது விடிந்த சமயத்தில் தான் கண்ணுறங்கினாள் அவள். கண்ணுறங்கிய சில நிமிடங்களிலேயே அழைப்புமணி ஒலிக்கவும் திட்டுக்கிட்டு எழுந்தவள் மெதுவாய் சென்று கதவைத் திறந்தாள்.
“தூங்கிட்டிருந்தியாம்மா? தொந்தரவு பண்ணிட்டேன் போலயே” என்றபடி அங்கே நின்று கொண்டிருந்தவர் ராஜகுரு.
வானதி மெதுவாய் புன்னகைத்தவள் “இல்ல சார்… உள்ள வாங்க… ட்ரெய்ன் கரெக்ட் டைமுக்கு வந்துடுச்சு போல?” என்று விசாரித்தபடியே அவரை ஃப்ளாட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
அதே சமயம் அருள்மொழி முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளன்று இனிய மனநிலையுடன் எழுந்தான்.
இனி வணிகன், அரசியல்வாதி என்பதோடு சேர்த்து இந்தப் பரந்து விரிந்த தமிழகத்தின் முதலமைச்சர் என்ற மாபெரும் பொறுப்பும் அவன் தோளில் தான்!
சுந்தரமூர்த்தியின் அலுவலக அறைக்குள் நுழைந்தவன் அங்கேயே அமர்ந்துவிட சில நிமிடங்கள் கழித்து காபியுடன் உள்ளே பிரவேசித்தாள் யாழினி. அவளைக் கண்டதும் புன்னகைத்தவன் காபி கோப்பையை வாங்கிக் கொண்டான்.
“குட் மானிங் அருள்” என்றவள் வானதி இன்னும் சென்னையில் தான் இருக்கிறாள் என்ற தகவலை அவன் காதில் போட்டு வைத்தாள்.
அவனோ மறுப்பாய் தலையசைத்து “யாரோ உனக்கு ராங் இன்ஃபர்மேசன் குடுத்திருக்காங்க… அவ ஒர்க் டெடிகேசன் உள்ள பொண்ணு… இந்நேரம் கொல்கத்தால அடுத்த எலக்சனுக்கான வேலைய ஆரம்பிச்சிருப்பா” என்றான்.
“இல்ல அருள்… மிஸ்டர் ஏ.கே உன் மாமா கிட்ட பேசுறப்ப நான் கேட்டேன்.. அவ ஏதோ பெர்சனல் வேலையா சென்னைல தங்கியிருக்காளாம்… கமிங் சண்டே வரைக்கும் லீவ் போட்டிருக்கானு சொன்னார் அவர்” என்றாள் யாழினி.
“நீ வேணும்னா அவளை நம்ம வீட்டுக்கு டின்னர் சாப்பிட இன்வைட் பண்ணுறீயா?” என்று நப்பாசையுடன் கேட்டவளை பார்த்து சத்தமாகச் சிரித்தான் அருள்மொழி.
“அவ எப்பிடிப்பட்ட வில்லினு உனக்குத் தெரியாதுக்கா… அதான் இவ்ளோ கேஸ்வலா டின்னருக்கு இன்வைட் பண்ண சொல்லுற… சரி வில்லிய விடு.. வில்லனோட மேட்டருக்கு வருவோம்… என்ன பண்ணுறார் நம்ம சித்தப்பா?” என்று பேச்சை ராமமூர்த்தி பக்கம் திசை திருப்பினான்.
அதன் பின்னர் யாழினியும் அந்தப் பேச்சில் ஆழ்ந்துவிட்டதால் வானதியை மறந்துவிட்டாள். ஆனால் அருள்மொழியோ அப்படி என்ன தனிப்பட்ட வேலை காரணமாக வானதி சென்னையில் தங்கியிருப்பாள் என யோசிக்க ஆரம்பித்தான். தனக்குத் தெரியாமல் அவள் வேறேதும் திட்டம் தீட்டியிருப்பாளோ என்ற கேள்வி அவனுக்குள்!
சில நொடிகள் யோசித்தவன் சங்கரிடம் “ஹலோ சங்கர் சி.எம்மா வேலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அருள்மொழியா சிலரை மீட் பண்ணணும்… சீஃப் செகரட்டரி கால் பண்ணுனார்னா நீங்களே பேசிடுங்க” என்று கூறிவிட்டு வானதியின் ஃப்ளாட் இருக்கும்ஜாய்ஸ் ரெசிடென்சியல் கம்யூனிட்டி அமைந்திருக்கும் போரூர் கந்தசாமி நகரை நோக்கி காரை செலுத்தினான்.
அப்பார்ட்மெண்டுக்குள் கார் நுழையும் முன்னர் தடுத்து நிறுத்திய காவலாளியிடம் முகத்தைக் காட்ட அவர் மகிழ்ச்சியாய் அதிர்ந்து சல்யூட் வைத்தார்.
பதிலுக்குச் சிரித்தபடி வானதியின் ஃப்ளாட் எண் என்னவென கேட்க அவரும் பதிலளித்தார். பின்னர் தரிப்பிடம் எங்கே என்று கேட்டவனுக்கு வழி காட்டினார். அருள்மொழி காரை தரிப்பிடத்தில் நிறுத்தியவன் மின் தூக்கி துணையுடன் வானதியின் ஃப்ளாட் இருக்கும் தளத்திற்குள் பிரவேசித்தான்.
அவளது ஃப்ளாட் எண்ணைப் பார்த்துவிட்டவன் அழைப்பு மணியை அழுத்தவும் கதவு திறந்து கொண்டது.
“ஸ்விகி பாய்னு நினைக்கேன் சார்… நம்ம ரெண்டு பேருக்கும் ப்ரேக் ஃபாஸ்ட் ஆர்டர் பண்ணிருந்தேன்” என்றபடி திறந்தவள் வானதி தான்!
அருள்மொழி யார் அந்த சார் என்று எண்ணமிடும் போதே அவனது எதிர்பாரா வருகையில் திகைத்து நின்றாள் அவள்.
அவளது திகைப்பைக் கண்டுகொள்ளாது “எக்ஸ்யூஸ் மீ! இன்னும் கொஞ்சநேரம் நான் வெளியவே நின்னா மத்த ஃப்ளாட்காரங்க பாத்துடுவாங்க” என்று அருள்மொழி கூறவும் உள்ளே இருந்து
“யாரும்மா வந்திருக்காங்க?” என்ற கேள்வியுடன் ராஜகுரு ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது.
அருள்மொழி வானதிக்குப் பின்னே விரிந்த ஹாலில் வந்து நின்ற ராஜகுருவைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
இவன் என்னைக் கொலை செய்ய முயன்றவன் அல்லவா? இவன் வானதியின் வீட்டில் என்ன செய்கிறான்? உரிமையோடு இவள் சார் என்று அழைக்கும் அளவுக்கு இவனுக்கும் இவளுக்கும் என்ன உறவு?
ஏகப்பட்ட கேள்விகள் மூளையில் பூகம்பம் ஏற்படுத்த சிலையாய் நின்ற வானதியைத் தாண்டி வேகமாய் ஹாலுக்குள் நுழைந்தான் அவன்.
நேரே ராஜகுருவிடம் சென்றவன் “நீ இங்க என்னய்யா பண்ணுற?” என்று சீற வானதி வேகமாக அவர்களுக்கு இடையே வந்து நின்றாள்.
“என் வீட்டுக்கு வந்து என்னோட கெஸ்டை அவமானப்படுத்துறதுக்கு உனக்கு எந்த ரைட்சும் இல்ல அருள்”
அருள்மொழி சீற்றம் குறையாது அவளை உறுத்து விழித்தவன் “அஹான்! உன்னோட இந்த கெஸ்ட் தான் என்னை ஆக்சிடெண்ட்ங்கிற போர்வைல கொல்ல பாத்த கொலைகாரன்” என்றான் பற்களை கடித்தபடியே.
வானதி எனக்குத் தெரியும் என்பது போல நிற்க ராஜகுருவோ எச்சில் விழுங்கினார்.
அருள்மொழி அவளிடம் “இவன் இங்க என்ன பண்ணுறான்னு கேட்டேன்” என்று கத்தவும்
“தட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்” என்றாள் அவள்.
“இப்பிடிலாம் கேட்டா நீ உண்மைய சொல்ல மாட்ட… இப்பவே போலீசுக்குக் கால் பண்ணி இந்தாளை விசாரிக்கச் சொல்லுறேன்” என்றவன் சொந்த உபயோகத்திற்கு வைத்திருந்த மொபைலை எடுத்து காவல்நிலைய எண்ணை அழுத்தவும் வானதி தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“போலீசுக்குக் கால் பண்ணாத அருள்”
“ஏன் பண்ணக்கூடாது? நான் பண்ணுவேன்”
“அவர் இங்க என்னை பாக்குறதுக்கு தான் வந்திருக்கார்… அவருக்காக தான் நான் சென்னைல இருக்கேன்”
“அதான் ஏன்னு கேக்குறேன்”
“ஏன்னா அவர் கிட்ட நான் குடுத்த வேலைய கரெக்டா பண்ணிட்டார்… ஆனா இப்ப அதால அவருக்கு ஆபத்து வந்துடுமோனு பயப்படுறார்… அப்பிடியே அவருக்கு எதுவும் ஆனாலும் அவர் பொண்ணு மேகலாவோட பொறுப்பை என் கிட்ட ஒப்படைக்குறதுக்காக வந்திருக்கார்”
வானதி உரத்த குரலில் சொல்லிவிட்டு “போதுமா? இப்ப கிளம்புறீயா?” என்கவும் முடியாது என்பது போல மறுப்பாய் தலையசைத்தான் அருள்மொழி.
“நீ அப்பிடி என்ன தலை போற வேலைய இந்தாளுக்குக் குடுத்த?”
சொல்லாமல் இவன் விடப்போவதில்லை! சொல்லவில்லை என்றாலோ தனக்காக துணிந்து வேலை செய்த ராஜகுருவின் வாழ்க்கை அழிந்துவிடும்! இனியும் மறைத்து பயனில்லை!
“உன்னை ஆக்சிடெண்ட் பண்ணுன வேலை”
வானதி நிதானமாய் கூற அருள்மொழி அதிர்ச்சியுற்றான். அவனால் அவள் கூறியதை நம்ப முடியவில்லை.
“என்ன பாக்குற? நான் தான் இவர் கிட்ட உன்னை ஆக்சிடெண்ட் பண்ண சொன்னேன்… அந்தப் பழிய உன் சித்தப்பா மேல போடச் சொன்னதும் நான் தான்… ஒரு காலத்துல என் குடும்பத்துக்குப் பண்ணுன பாவத்துக்குப் பிராயசித்தமா இத்தனை நாள் ரௌடியிசத்த விட்டு ஒதுங்கியிருந்தவரு நான் சொன்ன வேலைக்கு ஒத்துக்கிட்டாரு…. சோ உன் கோவத்த என் மேல காட்டு அருள்… அவரை விட்டுடு… பாவம்”
அவள் பேசி முடித்ததும் அருள்மொழி “ஏய்” என்று கர்ஜித்தபடி அவள் தொண்டையைப் பற்றியிருந்தான். கரங்கள் அவளது குரல்வளையில் அழுந்தவும் வானதி இருமத் துவங்க ராஜகுரு பதறிப்போனார்.
உடனே அவனைத் தடுக்க முயன்றபடியே “விடுங்கய்யா… அவங்க ஒன்னும் திட்டம் போட்டு என்னை செய்ய சொல்லலை” என்று கதற அருள்மொழியின் பிடி நெகிழத் துவங்கியது.
வானதி சுதாரித்து தனது கழுத்தை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் இரும ஆரம்பிக்க ராஜகுரு நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்பிக்கத் துவங்கினார்.
“கொஞ்சநாளுக்கு முன்னாடி என் தோஸ்து வீரய்யன் என்னை பாக்குறதுக்கு என் லாரி சர்வீஸ் ஆபிசுக்கு வந்தான்… வந்தவன் ராமமூர்த்தி ஐயா செய்ய சொன்ன வேலை ஒன்னு இருக்குனு ரொம்ப சோகமா சொன்னான்… அது உங்களை ஆக்சிடெண்ட் மாதிரி கொலை செய்யணுங்கிற வேலை தான்… ராமமூர்த்தி ஐயாக்கு நீங்க தான் அரசியல் எதிரினு சொல்லி உங்க கதைய முடிக்க சொல்லிருக்காரு அவரோட பி.ஏ மாணிக்கம் சார்… வீரய்யன் இந்த மாதிரி கூலிக்கு கொலை பண்ணுறத விட்டு ரொம்ப நாள் ஆச்சுய்யா….
திருந்தி அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருந்தவனை மாணிக்கய்யா கூப்புட்டு இந்த வேலைய செய்ய சொல்லி மிரட்டிருக்காரு… அவனை விட்டா விசுவாசமான ஆளுனு யாருமில்லனு சொன்னதோட இந்த வேலைய செஞ்சு முடிக்கலனா அவன் மேல இருக்குற பெட்டி கேஸ் எல்லாத்தையும் தோண்டி துருவி அவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவன் பொண்டாட்டி புள்ளைங்களை தீர்த்து கட்டிருவோம்னு பயங்கரமா மிரட்டுனதால அவனும் சம்மதிச்சிட்டான்… அவங்க தான் குடிச்சிட்டு லாரி ஓட்டுனதால நடந்த ஆக்சிடெண்ட் மாதிரி இருக்கணும்னு ப்ளான் போட்டு குடுத்திருக்காங்க… அவன் மனசு தாங்காம என் கிட்ட புலம்புனான்யா… நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைச்சேன்”
நம்ப முடியாமல் அருள்மொழி பார்க்கவும் ராஜகுரு கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அடுத்த நாள் வானதிம்மாவையும் அவங்க ஃப்ரெண்டையும் அவங்களோட வீடு எரிஞ்சு போன இடத்துல பாத்தேன்… ரொம்ப வருசம் கழிச்சு அவங்களை பாத்தப்ப கூட என்னால தான் அவங்க குடும்பமே அழிஞ்சுதுங்கிற குற்றவுணர்ச்சி எனக்குப் போகல” என்றவர் அன்றைய தினம் மதுரையின் நடந்ததை கூற ஆரம்பித்தார்.
தங்களது வீட்டைப் பார்த்து பெருமூச்சு விட்டு கிளம்பிய வானதியையும் நிதர்சனாவையும் ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.
“பாப்பா நில்லும்மா”
இருவரும் அவரைப் பார்த்ததும் கண்கள் பனிக்க நின்றனர்.
அவரோ இரு கரம் கூப்பி “நல்லா இருக்கீங்களாம்மா?” என்று கரகரத்த குரலில் கேட்டார்.
வானதியும் நிதர்சனாவும் அமைதியாக இருக்கவே “இன்னும் நீங்க என்னை மன்னிக்கலயாம்மா?” என்று அழ ஆரம்பித்தார் ராஜகுரு.
வானதி பதறிப் போய் அவரிடம் வந்தவள் “உங்க மேல எனக்கு இருந்த கோவமெல்லாம் எப்பவோ போயிடுச்சு சார்… அந்த ராமமூர்த்தி மேல தான் என் முழு கோவமும்… அந்த ஆளுக்கும் அவரோட அதிகாரத்துக்கும் கூடிய சீக்கிரம் முடிவு வந்துடும்… அந்த முடிவை அவரோட அண்ணன் மகனே எழுதுவான்” என்றாள்.
ராஜகுரு கண்களைத் துடைத்துக்கொண்டவர் “என்னமோ சொல்லுறம்மா… ஆனா அந்த மனுசன் அவரோட அண்ணன் மகனையே கொல்லுறதுக்குத் திட்டம் போட்டிருக்காரு… இந்த மாதிரி அரசியல்வாதிங்களுக்கு பந்தம் பாசத்த விட பதவியும் அதிகாரமும் தான் பெருசா தெரியும் போல” என்றதும் வானதியும் நிதர்சனாவும் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தனர்.
ராஜகுருவும் வீரய்யன் தன்னிடம் கூறி புலம்பியதை அவர்களிடம் விளக்க, அந்நேரத்தில் தான் வானதியின் மனதில் புதிய திட்டமானது உதித்தது.
வீரய்யனிடம் மாணிக்கம் கூறிய திட்டத்தை அவருக்குப் பதிலாக ராஜகுரு செயல்படுத்த வேண்டுமென வேண்டுகோள் வைத்தாள் வானதி.
“கண்டிப்பா செய்யுறேன்மா… உங்க குடும்பத்துக்கு நான் செஞ்ச பாவத்த இதால கழுவ முடியும்னா கண்டிப்பா நீங்க சொல்லுறத நான் செய்யுறேன்” என்று உறுதியளித்தார் ராஜகுரு.
“வீரய்யனை எதாச்சும் சொல்லி குடும்பத்தோட வேற எங்கயாச்சும் போகச் சொல்லிடுங்க… அவருக்குப் பதிலா அருள்மொழிய நீங்க ஆக்சிடெண்ட் பண்ணுங்க… எந்த லொகேஷன்ல அருள்மொழிய ஆக்சிடெண்ட் பண்ணச் சொன்னாங்களோ அந்த லொகேசனுக்கு அவர் எப்ப வருவார்ங்கிற அப்டேட்டை நான் உங்களுக்குக் குடுக்குறேன்…
நீங்க பண்ணப் போற இந்த ஆக்சிடெண்ட்ல அருள்மொழிக்குக் காயம் கொஞ்சம் பலமா பட்டாலும் தப்பில்ல… ஏன்னா இனிமே நடக்கப் போற ஒவ்வொரு சம்பவத்தையும் தீர்மானிக்கப் போறது அந்தக் காயமும் அதுல இருந்து வழியுற ஒவ்வொரு சொட்டு ரத்தமும் தான்… எவ்ளோ அதிகமா ரத்தம் வருதோ அவ்ளோ அதிகமா அருள்மொழி மேல மக்களுக்கு இரக்கம் வரும்… அவருக்கு அந்த ராமமூர்த்தி மேல தீராத கோவம் வரும்… அது தான் எனக்கு வேணும்” என்றாள் வானதி.
சொன்னபடியே வதம்பச்சேரியிலிருந்து பாலாவுடன் அருள்மொழி கிளம்பிய போது பாலாவிடம் அவர்கள் எங்கே வந்து கொண்டிருக்கின்றனர் என்ற விவரத்தைக் கேட்டு ராஜகுருவுக்கு அதை தெரியப்படுத்தினாள்.
அவரும் அருள்மொழியின் காரை மோதி இடித்துவிட்டுத் தப்பினார். வீரய்யனை தமிழ்நாட்டை விட்டு ஆந்திரா பக்கம் செல்லும்படி முன்னரே கூறிவிட்டதால் காவல்துறை விசாரணையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக ஒப்புக்கொண்டார் ராஜகுரு.
பின்னர் நடந்தது தான் அருள்மொழிக்கே தெரியுமே! அவனுக்குத் தெரியாததெல்லாம் இந்த விபத்தைத் திட்டமிட்டது மட்டுமே ராமமூர்த்தி, அந்தத் திட்டத்தை தனக்கு ஏற்றார்போல பயன்படுத்திக்கொண்டு அவரை பலிகடா ஆக்கியவள் வானதி என்பது மட்டுமே!
ராஜகுரு அனைத்தையும் சொல்லி முடிக்கவும் அருள்மொழியின் கண்களில் கோபாக்கினி கொளுந்து விட்டெரிந்தது.
“வழக்கம் போல கிடைச்ச வாய்ப்ப யூஸ் பண்ணி என்னை வச்சே என் சித்தப்பாவ பழி வாங்கிட்டல்ல… அகெய்ன் உன்னோட தந்திரத்துக்கு முன்னாடி நான் தோத்துட்டேன் வானதி”
குமுறலாய் பேசியவனிடம் வானதி எந்தப் பதிலும் பேசவில்லை. பதிலுக்கு ராஜகுருவே அவளுக்குப் பரிந்து பேசினார்.
“உங்களை ஆக்சிடெண்ட் பண்ணுனதுக்காக நீங்க கண்டிப்பா என்னை சும்மா விடமாட்டிங்கனு தெரியும்… என்ன இருந்தாலும் ராமமூர்த்தி ஐயா உங்க சித்தப்பா… அவருக்காக நீங்க என்னை போலீஸ் கிட்ட மாட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல… அப்பிடி நான் இல்லாம போயிட்டா என் பொண்ணு மேகலா தனியா கஷ்டப்பட்டுடக்கூடாது… அதான் அவ பொறுப்பை வானதிம்மா கிட்ட ஒப்படைக்கலாம்னு வந்தேன்… அவங்களும் எனக்குப் பின்னாடி என் பொண்ணை பாத்துக்கிற பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க… அவங்கள விட்டுடுங்கய்யா” என்று கைகூப்பினார் அம்மனிதர்.
அருள்மொழி அவரைப் பார்த்தால் தானே! அவனது பார்வை முழுவதும் வானதி மீதல்லவா இருந்தது.
“சப்போஸ் இந்த ஆக்சிடெண்ட்ல நான் இறந்து போயிருந்தா நீ என்ன பண்ணிருப்ப வானதி?”
இதே கேள்வியை ஒரு நாள் அவளது மனசாட்சி அவளிடம் கேட்டதல்லவா! அதற்கு அளித்த பதிலையே அவனிடம் கூறினாள் வானதி.
“உன்னோட குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சிட்டு, உன் உடம்புக்கு ஒரு மலர்வளையம் வச்சிட்டுக் கிளம்பிருப்பேன்… நான் ராமமூர்த்திய பத்தி எவ்ளோவோ சொல்லியும் அவரை எதிர்ல வைக்க விரும்பல, கீழ வைக்க தான் ஆசைப்படுறேன்னு சொன்னல்ல, அது உனக்கு நியாயமா தோணுச்சுனா, நான் போட்ட ப்ளானும் எனக்கு நியாயமா தான் தோணுச்சு… இப்பவும் நான் அதுக்காக வருத்தப்படல அருள்”
இளக்கமற்ற குரலில் உரைத்த இந்த வானதி அவனுக்கு ஒன்றும் புதிதில்லை. அவளது குடும்பத்திற்கு நேர்ந்த அவலத்திற்கு பழி வாங்க என்னவெல்லாம் திட்டம் தீட்டியிருக்கிறாள்?
அவளைப் பார்க்க பிடிக்காது அங்கிருந்து கிளம்பிவிட்டான் அருள்மொழி. வானதியும் அவனது கோபத்தைப் பெரிதுபடுத்தாமல் ராஜகுருவை மதுரைக்குச் செல்லுமாறு பணித்தவள் வந்த வேலை முழுவதுமாக முடிந்து விட்டதால் கொல்கத்தாவுக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.
விமானம் ஞாயிறு மாலையில் தான் என்பதால் அது வரை நாட்களை நெட்டித் தள்ளினாள். அவ்வபோது தொலைகாட்சி செய்திகளில் அருள்மொழி வந்து சென்றான்.
சட்டப்பேரவையில் அவன் பதவியேற்றது, அவனது கன்னிப்பேச்சு, அவன் அறிவித்த நலத்திட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் அவனே பேச்சுப்பொருளாக மாறியிருந்தான் அந்தச் சில தினங்களில்.
இவ்வாறே ஞாயிறும் வந்துவிட்டது. வானதி தனது உடமைகளுடன் போரூரை விட்டுக் கிளம்பியவள் விமான நிலையத்திற்கு சீக்கிரமே வந்துவிட்டாள். அவள் செல்ல வேண்டிய விமானத்திற்கான அறிவிப்பு வரும் வரை காத்திருந்தவளை அவளது மொபைல் தொந்தரவு செய்தது.
இப்போது யார் அழைப்பது என்ற கேள்வியோடு தொடுதிரையை நோக்கியவள் நிதர்சனாவின் அழைப்பு என்பதால் உடனே ஏற்று பேசத் துவங்கினாள்.
“நதி நீ இன்னிக்கு நியூஸ் பாத்தியா? பாத்தேனா உன் மனசு குளிர்ந்து போயிடும்டி… ஃபைனலி நம்ம நினைச்சதுலாம் நடந்து முடிஞ்சிடுச்சு” என்று பெரிய பீடிகையைப் போட்டாள் நிதர்சனா.
வானதிக்குப் புரியவில்லை என்றதும் “அருள் சாரோட அதிரடி ஆக்சன் எதையும் நீ இன்னும் பாக்கல போல… ஃப்ளைட்டுக்குத் தான் இன்னும் டைம் இருக்குல்ல… யூடியூப்ல பாருடி” என்று குதூகலித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
வானதியும் யூடியூபில் செய்தி சேனலை ஓடவிட்டவள் அதில் அருள்மொழியைப் பற்றி வந்த செய்தியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
மீண்டும் மீண்டும் அவனது பராக்கிரமம் பற்றிய செய்திகளாகவே வரவும் கடுப்பானவள் யூடியூப் செயலியை விட்டு வெளியேற எத்தனித்த கணத்தில் அச்செய்தி ஒளிபரப்பானது.
“தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராமமூர்த்தி அவரது சகோதரரான சுந்தரமூர்த்தி ஆட்சியில் இருந்த போது அவரது பதவியைப் பயன்படுத்தி அரசு டெண்டர்களில் தலையிட்டு தனது பினாமி நிறுமங்களுக்கு அந்த டெண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ததற்காகவும், பின்னர் அந்த டெண்டர் மூலம் சம்பாதித்த முறைகேடான பணத்தை யூனிகார்ன் குழுமத்தின் கீழிருக்கும் நிறுவனங்களுக்குத் தனது பினாமி நிறுவனங்களான கெட்வெல், ஸ்வான் மற்றும் பீஜியன் குழுமங்கள் வாயிலாக முதலீடாக கொண்டு வந்து சட்டத்திற்கு புறம்பான பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறைக்கு வந்த புகாரின் பேரில் அவரை சி.பி.ஐ கைது செய்தது”
ராமமூர்த்தியை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சி ஒளிபரப்பானது.
தொடர்ந்து ஒளிபரப்பான இன்னொரு செய்தியில் வானதி சந்தோசத்தின் உச்சிக்கே சென்றாள்.
“தமிழ்நாடு முன்னேற்ற கழகம் ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் எதிரான கட்சி என்பதில் எள்ளளவும் மக்களுக்குச் சந்தேகம் வேண்டாம். எங்களது கட்சியின் துணைத்தலைவரான ராமமூர்த்தி அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதால் ஒழுங்கு நடவடிக்கையாக அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், துணைத்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கும் முடிவை கட்சித்தலைமை எடுத்துள்ளது. ஊழல்வாதிகளுக்கு என்றைக்கும் த.மு.க புகலிடம் அளிக்காது என்பதை இதன் வாயிலாக நாங்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறோம். தலைமையின் இந்த முடிவுக்குக் கட்சியின் முக்கியப்பிரமுகர்களும் பொதுக்குழுவும் ஒப்புதல் அளித்துவிட்டதால் இனி திரு ராமமூர்த்திக்கும் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இந்த அறிக்கை வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்”
த.மு.கவின் பொதுச்செயலாளரும் சட்டச்சபை சபாநாயகருமான கவியன்பன் இந்த அறிக்கையைப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்க அவருடன் சேர்ந்து அமர்ந்திருந்தாள் யாழினி.
செயலியை விட்டு வெளியேறிய வானதியின் மனம் நிறைந்திருந்தது. அரசியல் செல்வாக்கால் தனது குடும்பத்தை அழித்த ராமமூர்த்தி சி.பி.ஐ அதிகாரிகளுடன் முகம் வெளிற நடந்து சென்ற காட்சியில் இத்தனை நாட்கள் அவளுக்குள் எரிந்து கொண்டிருந்த பழிவெறி எனும் தீ மெதுமெதுவாக அணைய ஆரம்பித்தது.
இனி அரசியலில் அவர் ஒரு பூஜ்ஜியம்! சி.பி.ஐ வழக்கை உடைக்க அவருக்கு உதவியாக இனி அருள்மொழியும் வரமாட்டான்! கட்சியும் வராது! அப்படியே வழக்கை உடைத்து வெளியே வந்தாலும் இனி அவருக்கென அரசியலில் எந்த இடமும் இருக்காது! இது போதும் அவளுக்கு! இந்தத் தண்டனை தரும் வலி உயிர் போகும் வலியை விட ராமமூர்த்திக்குக் கொடுமையாக இருக்கும் அல்லவா!
ஆனால் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகும் ஏன் அருள்மொழி தனது சித்தப்பாவை பாதுகாக்க எண்ணவில்லை? அன்றைய சம்பவத்துக்குப் பின்னர் அவன் கட்டாயம் ராமமூர்த்தியிடம் கொண்ட கோபத்தை விட்டுவிடுவான் என்றே எண்ணியிருந்தாள் வானதி. ஆனால் அவளது எண்ணத்தைத் தப்பென்று சொல்லிவிட்டது அருள்மொழியின் நடவடிக்கை.
சந்தோசமிகுதியில் அவனது சொந்த உபயோகத்துக்கான எண்ணுக்கு அழைத்தாள் வானதி.
ஆச்சரியம்! உடனே அழைப்பு ஏற்கப்பட்டது!
“சொல்லுங்க வானதி மகேந்திரன். நியூஸ் பாத்திட்டிங்க போலயே” கிண்டலாய் கேட்டது அருள்மொழியின் குரல்.
வானதி அந்தக் குரலில் தொனித்த கிண்டலை ஒதுக்கிவிட்டு “என் எதிரி ஒன்னுமில்லாம ஆனதை பாத்த சந்தோசத்துல எனக்கு உன்னோட கிண்டல் பேச்சு ஒரு பொருட்டாவே தெரியல அருள்” என்றாள்.
“ரொம்ப சந்தோசப்படாத வானதி… என்னை அழிக்க நினைச்சவருக்கே இப்பிடி ஒரு தண்டனைனா உன் நிலமை என்னனு கொஞ்சம் யோசி… எல்லாம் முடிஞ்சிடுச்சுனு நினைக்காத… இன்னும் ஃபைவ் இயர்ஸ் கழிச்சு மறுபடியும் அசெம்ப்ளி எலக்சன் வரும்… அதை மறந்துடாத வானதி” என்றான் அருள்மொழி.
வானதி சற்றே உரக்க சிரித்தவள் “அது எப்பிடி மறக்கும் அருள்? இந்தத் தடவை உன்னோட நாலெட்ஜ் இல்லாமலயே உன்னை என் இஷ்டத்துக்கு ஆட்டி வச்சு என் காரியத்த நிறைவேத்துன மாதிரி இன்னும் ஃபைவ் இயர்ஸ் கழிச்சும் நான் ஆட்டி வைக்கிற மாதிரி தான் நீ ஆடப்போற… அந்த நேரத்துக்காக நான் காத்திருக்கேன் அருள்” என்றாள் பழைய வானதியாக.
“கண்டிப்பா… ஆனா இனிமே உன் இஷ்டத்துக்கு ஆடுறதுக்கு நான் கத்துக்குட்டி அரசியல்வாதி அருள்மொழி இல்ல… தமிழ்நாட்டோட சி.எம் அருள்மொழி சுந்தரமூர்த்தி… சோ திஸ் இஸ் த டைம் டு எண்ட் டு யுவர் ரிடிகுலஸ் மைண்ட் கேம்… குட் பை”

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் விமானத்திற்கான அறிவிப்பு வந்தது. தனது உடமைகளுடன் கிளம்பினாள் வானதி.
எத்தனையோ ஆண்டுகள் கழித்து அவள் எண்ணி வந்த யாவும் பலவித சவால்களுக்கு இடையே நிறைவேறிய திருப்தி அவளுக்கு! இனி அடுத்து புதியதொரு தேர்தல் களம் அவளுக்காய் காத்திருக்கிறது! புதிய இடம்! புதிய மனிதர்கள்! புதிய அனுபவங்கள்! இது தான் அவளது வாழ்க்கை!
இத்தனை நாள் நடந்தேறிய யுத்தகாண்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக எண்ணி விமானத்தில் அவளுக்கான இருக்கையில் அமர்ந்தாள் வானதி! ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் அருள்மொழிக்கும் உள்ளது என்பதை விதி அவளுக்கு இனி வரும் காலங்களில் நினைவுறுத்தும்!
யுத்தகாண்டம் நிறைவுற்றது!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction