“ஒவ்வொரு ஓட்டும் துப்பாக்கியைப் போன்றது. அதன் பயன்பாடு உரிமையாளரான வாக்காளரின் இயல்பைப் பொறுத்தே அமையும்”
-தியோடர் ரூஸ்வெல்ட், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
தேர்தல் ஆணையம் ஏப்ரல் ஐந்தில் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து விட்டது. அதன் பின்னர் தேர்தல் திருவிழாவானது அதற்கே உரித்தான ஆரவாரத்துடன் ஆரம்பித்துவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இத்தேர்தல் இருமுனைப்போட்டியாக அமைந்தது. ஆளுங்கட்சியான முற்போக்கு விடுதலை கட்சிக்குத் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் போராட்டமாக தேர்தல் அமைய, எதிர்கட்சியான தமிழ்நாடு முன்னேற்ற கழகமோ அத்தேர்தலை ஒரு போராக கருதி களத்தில் குதித்தது.
இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும் வாக்கு சேகரிப்பும் தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பாக ஆரம்பித்தது. ஐ.பி.சியினர் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டுமென்ற பட்டியலைத் தயாரித்து நிதர்சனாவின் குழுவினரிடம் அளித்துவிட்டனர்.
கார்பரேட் யுக்திகளை வைத்து தேர்தலை சந்திக்கிறது என த.மு.கவினர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை அக்கட்சியானது வெகு சாமர்த்தியமாக சமாளித்தது. அதிலும் புது முகங்களுக்கு கட்சியில் அளிக்கப்பட்ட பதவிகளையும் தேர்தலில் போட்டியிட அளிக்கப்பட்ட வாய்ப்புகளையும் முற்போக்கு விடுதலை கட்சியினர் வேறு விதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எதிர்கட்சில இருக்குற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் எல்லாரும் தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில இருக்காங்க… அவங்க ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பு பூஜ்ஜியம் தான்” என்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வீரபாண்டியன் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
ஆனால் அதை த.மு.கவினர் எதிர்கொண்ட விதம் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
எந்த அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என வீரபாண்டியன் கூறினாரோ அவர்களே தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி வேகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சியினர் தங்களது ஐந்தாண்டு கால சாதனைகளை பட்டியலிட எதிர்கட்சியினரோ அவர்களது ஐந்தாண்டு கால ஆட்சி வெறும் கண்துடைப்பு தான் என்று மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது புள்ளிவிவரங்களுடன் பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டனர்.
தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் யாழினி, அருள்மொழி, கவியன்பனோடு முன்னாள் அமைச்சர்களான கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ராமமூர்த்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஐ.பி.சி கொடுத்த பட்டியலின் படி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களோடு சேர்ந்து சென்று ஓட்டு கேட்க அவர்களின் இந்த வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஐ.பி.சியின் களப்பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
எங்கெங்கு நோக்கினும் கட்சி கொடிகள், பதாகைகள், தொண்டர்கள் நடத்தும் பேரணிகள் என வாடிக்கையான தேர்தலுக்கான அடையாளங்களும் இத்தேர்தலில் இடம்பெற்றிருந்தாலும் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் ஒரே அடையாளமாக இத்தேர்தலில் முன்னிருத்தப்பட்டவன் அருள்மொழியே. அவனே முதலமைச்சர் வேட்பாளர் என்பது மக்கள் எதிர்பார்த்த முடிவு தான்!
அவனுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ‘கேம்பெய்ன் பாடல்’ சமூக வலைதளங்களில் வைரல் ஆக ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் வீடியோக்களில் விளம்பரமாக ஒளிபரப்பட்ட அந்த வீடியோ மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.
இடையிடையே ‘நாளை நமதே’ என்ற அவர்களின் பிரத்தியேக பிரச்சார வார்த்தைகளுடன் அருள்மொழி நிற்கும் பதாகைகளும், புகைப்படங்களும், அவன் பேசும் வீடியோக்களும் மக்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்தது.
இதற்கிடையே ஒரு நாள் அவன் தஞ்சாவூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று பிரச்சார பேரணி கூட்டத்தில் சிக்கிவிட அருள்மொழி பிரச்சார வாகனத்தை விட்டு இறங்கி ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு தொண்டர்களுக்குக் கட்டளையிடும் வீடியோவும் த.மு.கவின் ஐ.டி.விங் உபயத்தால் வைரலாக வலம் வந்தது.
ஆளுங்கட்சியும் இவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் தொலைக்காட்சியில் சில சின்னத்திரை பிரபலங்களை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரங்கள் வாயிலாக தங்கள் கட்சியின் ஐந்தாண்டு கால சாதனைகளை மக்கள் மத்தியில் இல்லை இல்லை தாய்மார்கள் மத்தியில் கொண்டு சென்றனர். கூடவே முதலமைச்சர் வேட்பாளரான வீரபாண்டியன் மக்களிடம் உரையாடும் காட்சிகள் அவர்கள் கட்சியின் ஐ.டி விங்கினரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
அருள்மொழியோ காவல்துறை கஸ்டடியில் நிகழ்ந்த மரணம், ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஊழல், விலைவாசி உயர்வை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியது, மக்களின் உரிமை போராட்டங்களை அரசாங்கம் அதிகாரக்கரம் கொண்டு ஒடுக்கியது, எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டது என ஆளுங்கட்சியினர் ஆட்சியின் குற்றங்களைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பிரச்சார பயணத்திலும் மக்கள் மனதில் அதையே பதியவைத்தான்.
பிரச்சார நாட்கள் வேகமாகக் கடந்தது. இவ்வாறே தேர்தல் நாளும் வந்தது. தமிழ்நாடெங்கும் வாக்குச்சாவடிகளில் மக்கள் சாரை சாரையாக ஓட்டு போட நிற்கும் காட்சியை செய்தி சேனல்கள் ஒளிபரப்பின.
அருள்மொழி தனது தாயாருடன் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வண்ணம் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தான்.
“இது அரசியல்வாதியா உங்களோட முதல் தேர்தல்… இதுல ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை இருக்குதா சார்? மக்கள் உங்களை ஏத்துப்பாங்கனு தோணுதா”
“மக்கள் ஒரு தலைவரா என்னை எப்போவோ ஏத்துக்கிட்டாங்க… தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டப்ப அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்… அவங்களுக்கு இருக்குற குறைகளையும் சிரமங்களையும் ஒரு தலைவரா காது குடுத்து கேட்டதுக்கு அப்புறம் தான் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யுற விதத்துல எங்க கட்சியோட தேர்தல் அறிக்கைய நாங்க வடிவமைச்சோம்… ஒரு தலைவரா என்னை ஏத்துக்கிட்டவங்க அவங்களுக்காக பேசுற சட்டமன்ற உறுப்பினராவும் என்னை தேர்ந்தெடுப்பாங்கனு நம்புறேன்”
அடுத்த கேள்வி அவனது அன்னை மீனாட்சியிடம்!
“உங்க மகனோட முதல் தேர்தல் பத்தி உங்களோட பார்வை என்ன மேடம்?”
“இந்தத் தேர்தலுக்காகவும் கட்சிக்காகவும் அவன் ராப்பகலா உழைச்சிருக்கான்… அவனோட அப்பாவும் அண்ணனும் இருந்திருந்தா எவ்ளோ உழைப்பை கொட்டியிருப்பாங்களோ அதே உழைப்பை ஒரே ஆளா அருள் கொட்டியிருக்கான்… அதுக்கான பலனை மக்கள் அவனுக்குக் குடுப்பாங்கனு நம்புறேன்”
முடித்ததும் மீனாட்சி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிடவும் அருள்மொழி அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.
அதே நேரம் யாழினியும் அகத்தியனும் தங்களது வாக்கை அளித்து விட்டு வரவே யாழினியைப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
“இந்தத் தேர்தல்ல உங்க கட்சிக்கு ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் இருக்குனு நம்புறீங்க மேம்?”
“எனக்குப் புள்ளிவிவரத்தோட சொல்ல தெரியல… ஆனா எங்க கட்சித்தலைவர் இத்தனை மாசம் மேற்கொண்ட சுற்றுபயணம் மூலமா எங்களுக்குத் தெரிய வந்த விசயம் தமிழக மக்கள் மாற்றத்த விரும்புறாங்கங்கிறது தான்… அந்த மாற்றத்த உருவாக்குற சக்தியா தமிழ்நாடு முன்னேற்ற கழகம் உருமாறி ரொம்ப நாளாகுது… இந்தத் தேர்தல் முடிவுக்காக நம்பிக்கையோட அடுத்த மாதம் வரைக்கும் நாங்க காத்திருப்போம்”
சொன்னதோடு அகத்தியனுடன் வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறினாள் யாழினி. அடுத்தடுத்து ராமமூர்த்தி அவரது மனைவியுடன் வந்து வாக்களித்த காட்சிகள், கவியன்பன் அவரது சகாவோடு ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கும் காட்சிகளும் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
வீரபாண்டியனும் செங்குட்டுவனும் அவர்களது தொகுதியில் சென்று வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் தங்களது ஆட்சி தான் தொடருமென நம்பிக்கையோடு பேட்டி கொடுத்தனர்.
இவ்வாறாக தமிழக சட்டசபை தேர்தல் 71.78 விழுக்காடு வாக்குகளுடன் முடிவுக்கு வந்தது. கடந்த தேர்தலை விட 1 சதவிகிதம் குறைவு தான் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதகாலம் அவகாசம் இருந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவர ஆரம்பித்தன.
ஐ.பி.சி தங்களது ஆட்களை வைத்து சேகரித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நடத்திய கருத்துக்கணிப்பில் த.மு.க கட்சி நூற்றியெண்பது இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அறிக்கை கொடுத்தது.
இன்னும் பல ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பிலும் த.மு.க கட்சியே முன்னிலை வகித்தது. சுந்தரமூர்த்தியின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி, அதை தொடர்ந்து அருள்மொழியின் அரசியல் பிரவேசத்தில் நடந்தேறிய கைது நடவடிக்கை, அவன் மேற்கொண்ட சுற்றுபயணங்கள், அவனுக்கு நேர்ந்த விபத்து இவை அனைத்தும் ஏற்படுத்திய அதிர்வலை மக்களிடமிருந்து வாக்குகளாக மாறி த.மு.க கட்சிக்கு விழுந்திருக்கலாம் என கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்தன.
நாட்கள் கடந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளும் வந்தது. செய்தி தொலைக்காட்சிகள் தங்களது பணிகளை ஆரம்பித்துவிட அருள்மொழியோ பரபரப்பின் உச்சத்தில் இருந்தான். அவனது வில்லிவாக்கம் தொகுதியில் தான் அதிகபட்ச வாக்கு பதிவாகியிருந்தது.
இருப்பினும் அவை யாவும் தனக்கான வாக்குகள் என்று அவனால் எண்ணமுடியாதே! மீனாட்சி காலையிலேயே கோவிலுக்குச் சென்றுவிட அவனும் யாழினியும் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் இருந்து வந்த தகவலின் படி வில்லிவாக்கம் தொகுதியில் அருள்மொழி முன்னிலையில் இருந்தான். அடுத்த சில நிமிடங்களில் ஆகாஷ் கண்ணப்பன் அவனுக்கு மொபைலில் அழைத்து வாழ்த்து கூறினார்.
தமிழகமெங்கும் பெருவாரியான தொகுதிகளில் தமிழ்நாடு முன்னேற்ற கழகமும் அதன் கூட்டணி கட்சியுமே முன்னிலையில் இருப்பதாக செய்தி தொலைகாட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதை எரிச்சல் மண்ட பார்த்துக் கொண்டிருந்தார் வீரபாண்டியன், அவருடன் செங்குட்டுவனும்.
“என்ன தலைவரே போற போக்கை பாத்தா இவன் தான் சி.எம்மா வந்துடுவான் போலயே? இதுக்குத் தான் நம்மாளை வச்சு இவன் கதைய முடிச்சிருக்கணும்… அந்த ராமமூர்த்திய நம்பி இப்ப நாற்காலிய இழக்குற இடத்துக்கு வந்துட்டிங்களே”
வீரபாண்டியன் இரண்டாம் முறை முதலமைச்சராகும் வாய்ப்பு தகர்ந்துவிடுமோ என்ற கலக்கம் சூழ அமர்ந்திருந்தார்.
இப்படியே வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்க வில்லிவாக்கத்தில் அவனை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரை விட எண்பதாயிரம் வாக்கு அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றான் அருள்மொழி.
உடனே கட்சி தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் ஆரம்பித்தது. ஏனெனில் அப்போது வரை இருந்த நிலவரம் இந்த முறை த.மு.க கட்சியின் ஆட்சி தான் என்று சொல்லாமல் சொன்னது.
அருள்மொழி தொண்டர்களின் உற்சாக கொண்டாட்டத்தில் நனைந்தபடி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டான்.
அன்றைய தினம் மாலையில் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் மற்றும் எல்.ஜே.பி கூட்டணி நூற்றியெழுபது தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதாக செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. எல்.ஜே.பியின் தமிழகத் தலைவர் அருள்மொழியைக் கட்சி தலைமை அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்க தேசிய தலைவர் ட்விட்டரில் வாழ்த்தினார்.
கட்சியின் தொண்டர்கள் இவ்வெற்றியை மாநிலம் முழுவதும் இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். அருள்மொழி வெற்றி பெற்ற கையோடு அன்னையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.
மீனாட்சி அருள்மொழியை ஆசிர்வதித்தவர் “இப்ப உங்கப்பாவும் ஆதியும் இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பாங்கல்ல அருள்” என்று குரல் கம்ம கூறினார். அடுத்து மொபைல் மூலமாக ராமமூர்த்தியும் வருணாவும் வாழ்த்த அவர்களது வாழ்த்தை ஏற்றுக்கொண்டான்.
“சித்தப்பா உன் கிட்ட முக்கியமா ஏதோ பேசணுமாம்” என்றார் வருணா மொபைலில்.
அருள்மொழி வேறேதும் பேசாது அழைப்பைத் துண்டித்தவன் தனது தந்தையின் அலுவலக அறைக்குள் வந்து நின்றான். அவரது புகைப்படத்தைப் பார்த்தபடி சிலையாய் நின்றுவிட்டான்.
யாழினியும் அகத்தியனும் வீட்டிற்கு வரும் வரை அங்கேயே நின்றிருந்தவன் தமக்கையின் புத்திரச்செல்வங்கள் அழைக்கும் குரல் கேட்கவும் அங்கிருந்து வெளியேறினான்.
யாழினி அகத்தியனுடன் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“நாளைக்குக் கவர்னர் சட்டச்சபைய கலைச்சதும் வீரபாண்டியன் ரிசைன் பண்ணிடுவார்… இன்னும் ரெண்டு நாள்ல நம்ம அருளை ஆட்சி அமைக்க கவர்னர் கூப்புடுவார்… இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு அகத்தியன்”
அருள்மொழி வந்ததும் அவனை அணைத்துக் கொண்டான் அகத்தியன்.
“யூ ஹேவ் மேட் இட் அருள்… சாரி சாரி… சி.எம் சார்”
அருள்மொழி மலர்ந்த முகத்துடன் சிரித்தவன் “அடுத்து நான் என்ன செய்யணும்?” என்று கேட்க
“மக்களுக்கு நன்றி சொல்லி ஒரு வீடியோ ஷூட் பண்ணணும்னு வானதி சொல்லிருந்தாங்க” என்றாள் யாழினி.
அதன் பின்னர் அவனை அழைத்துக் கொண்டு கட்சி அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். பின்னர் வாக்களித்த தமிழக மக்களுக்கு அருள்மொழி நன்றி தெரிவிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
இன்னும் சில மணிநேரங்களில் அந்த வீடியோ ஊடகங்களும் சமூக வலைதளங்களுக்கும் சென்றுவிடும்.
அதே நேரம் ஆகாஷ் கண்ணப்பன் தனது குழுவினருடன் வீடியோ கான்பரன்சில் பேசிய போது அவர்களின் கடின உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்தார். வானதிக்கும் நிதர்சனாவின் குழுவினருக்கும் தனிப்பட்ட முறையில் அவர் பாராட்டு தெரிவித்த போது வெளியே மற்ற ஊழியர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பும் சத்தம் கேட்டது.
வானதி என்னவென பார்க்கும்படி கிஷோரிடம் கூற அவனும் வெளியே சென்றவன் உள்ளே வரும் போது அவனோடு சேர்ந்து அருள்மொழியும் அகத்தியனும் வந்தனர்.
இருவரையும் கண்டதும் அங்கிருந்தவர்கள் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாய் கரகோஷம் எழுப்பினர்.
“கங்கிராட்ஸ் அருள் சார்” என்ற அவர்களின் உற்சாகக்குரலில் அந்த அறை நிரம்பியது.
வீடியோ கான்பரன்ஸில் இருந்த ஆகாஷ் கண்ணப்பன் தன் பங்குக்கு வாழ்த்து தெரிவித்தவர் அவனது பதவியேற்பு விழாவுக்கு அகத்தியன் அழைப்பு விடுக்கவும் கட்டாயம் வருவதாக வாக்களித்தார்.
இவ்வளவையும் வானதியும் நிதர்சனாவும் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். பேச்சின் நடுவே திடுதிடுப்பென அருள்மொழி வானதியை அழைக்கவும் அவள் என்னவென புரியாது அவனருகே வந்து நின்றாள்.
“உங்க டீம் கூட சேர்ந்து நான் போட்டோ எடுக்கணும்னு ஆசைப்படுறேன் மிஸ் வானதி மகேந்திரன்”
அடுத்த சில நிமிடங்களில் ஐ.பி.சி குழுவினர் அனைவரும் குழுமி நிற்க, வானதி மற்றும் நிதர்சனாவுடன் அகத்தியனும் அருள்மொழியும் நடுநாயகமாக நிற்கும் காட்சி புகைப்படமாகப் பதிவானது.
அகத்தியன் ஒவ்வொரு குழுவினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கையில் அருள்மொழி வானதியிடம் பேச ஆரம்பித்தான்.
“வெல்! நெக்ஸ்ட் உன்னோட ப்ளான் என்ன?”
என்ன கேள்வி இது என்பது போல வானதி அவனை நோக்கவும்
“கம் ஆன் வானதி… உன் ஃபேமிலிக்கு நடந்த அநியாயத்துக்குக் காரணமான மிஸ்டர் ராமமூர்த்தி அதிகாரத்த இழந்து நிக்குறார்… இதோட அவரை நான் சும்மா விடப்போறதில்ல, அவருக்கு எதிரா பெருசா எதாச்சும் செய்வேன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்… சோ உன்னோட முயற்சிக்குப் பலனா அவரை நீ திருப்தியா பழிவாங்கி முடிச்ச மாதிரி தானே.. இனிமேலும் இப்பிடியே தான் உன் வாழ்க்கை கழியுமா என்ன?” என்று வினவினான் அருள்மொழி.
வானதி அவனது பேச்சின் அர்த்தம் விளங்காது “நீ என்ன சொல்ல வர்றனு எனக்குப் புரியல” என்கவும்
“பாஸ்ட் இஸ் பாஸ்ட்… இனியும் அதுலயே மூழ்கியிருக்கப் போறியா? உனக்குனு ஒரு ஃபேமிலி, சில்ரன் இதை பத்திலாம் என்ன யோசிச்சு வச்சிருக்கனு கேட்டேன்” என்றான் அருள்மொழி.
இனி தனது வாழ்க்கை அரசியல் தான் என்பது முடிவாகி விட்டது. ஒரு காலத்தில் இவளைத் தான் காதலித்திருக்கிறோம்! இவள் இன்னும் தனிமரமாக வாழ்ந்தே தீர வேண்டுமா என்ற குறுகுறுப்பு அவனுக்கு!
வானதிக்கு அவனது எண்ணம் புரியவரவும் பெருமூச்சொன்றை எடுத்து விட்டாள்.
“அருள்! குடும்பம் குழந்தைங்கிற குறுகிய வட்டம் எனக்கு செட் ஆகாது… இந்த எலக்சன் முடிஞ்சிடுச்சு… சோ இங்க எங்களோட வேலை முடிஞ்சுது… அடுத்து வேற ஸ்டேட், வேற எலக்சன் இப்பிடி தான் என் வாழ்க்கை கழியப்போகுது… என் கால் ஓடி ஓடி பழகிடுச்சு அருள்… இனிமே அது எப்ப நிக்கும்னு எனக்கே தெரியாது”
பெருமூச்சுடன் உரைத்தவளைக் கேலியாகப் பார்த்தவன் “அப்பிடி உன்னோட கால் நிக்குறப்ப உனக்காக நான் அங்க இருப்பேன்” என்றான் கிண்டலாக.
வானதிக்கு அவனது பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. இன்னும் இரண்டு தினங்களில் இவனது தோள்களில் மாபெரும் பொறுப்பொன்று சுமையாக ஏறவிருக்கிறது. இந்நேரத்தில் கூட இவனால் ஜோக்கடிக்க முடிகிறதே!
அவனைப் போலவே கேலியாக “அஹான்! அப்ப எனக்கு வயசாகிருக்கலாம்… முடி கூட நரைச்சிருக்கலாம்… இந்த க்ளோயிங் ஸ்கின் சுருங்கி ஓடுன கால் நடக்குறதுக்குக் கூட தள்ளாடலாம்” என்றாள் வானதி.
அப்போது ஒரு ஊழியர் காபி கோப்பையை நீட்ட அருள்மொழிக்கு அதை கொடுத்துவிட்டு தனக்கு இன்னொரு கோப்பை கொண்டு வருமாறு பணித்தவள் அவர் சென்றதும் கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள்.
அருள்மொழி காபியை அருந்தியபடியே “அந்த மாதிரி டைம்ல தானே நம்மளை தாங்கி பிடிக்க துணை வேணும்… அந்தத் துணையா நான் இருப்பேன்… என்ன ஒன்னு, அப்ப எனக்கும் வயசாகிருக்கும்… பட் ஒன் திங், கண்டிப்பா நான் இதே ஃபிட்னெஸ்சோட இருப்பேன்… சோ தடுமாறுற உன்னை தாங்கிப் பிடிக்க நான் இருப்பேன்” என்றான் மீண்டும் கிண்டலாக.
வானதி தனக்கு நீட்டப்பட்ட காபி கோப்பையை வாங்கிக்கொண்டவள் “நல்லா பேச கத்துக்கிட்ட அருள்” என்று கூறவும்
“பொலிடீசியன் ஆகிட்டேன்… இன்னும் ரெண்டு நாள்ல முதலமைச்சரா பதவி ஏற்க வேற போறேன்… இப்பவும் பேச தெரியலனா அசிங்கம்ல” என்று இலகுவாகக் கூறிவிட்டு அடுத்த மிடறு காபியை அருந்தினான்.
பின்னர் “எப்ப கொல்கத்தா கிளம்புறீங்க?” என்று அங்கே வந்த நிதர்சனாவிடம் வினவ
“நீங்க பதவி ஏற்கப் போறதுக்கு அடுத்த நாள் கிளம்புறோம் அருள் சார்” என்றாள் அவள். கூடவே நாளைய தினம் த.மு.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த அலுவலகத்தை கலைத்துவிட்டு தங்கள் உடமைகளை எடுத்துக் கொள்வோம் என்றாள்.
அருள்மொழி ஆமோதிப்பாய் தலையசைத்தான். அடுத்த சில நொடிகளில் சங்கரிடமிருந்து அழைப்பு வந்தது.
“சார் கட்சியோட வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட நீங்க வீடியோ கான்பரன்ஸ்ல பேசுறேன்னு சொன்னிங்கல்ல, அதுக்கான அரேஞ்ச்மெண்ட் முடிஞ்சாச்சு… நீங்க வந்தா கான்பரன்ஸை ஆரம்பிச்சிடலாம்”
அவ்வளவு தான்! இது வரை பேசிய விளையாட்டான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கிளம்ப எத்தனித்தான் அவன். இனி இது போன்ற இலகுவான பேச்சுக்கு அவனது வாழ்வில் நேரமேது! அகத்தியனுடன் சேர்ந்து அங்கிருந்த ஐ.பி.சி குழுவினருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிவிட்டு விடைபெற்றான் அருள்மொழி.
“அருள்” என்ற வானதியின் குரலில் நின்றவன் திரும்பி பார்க்க வேகமாக அவனருகே வந்து கரத்தைக் குலுக்கினாள் அவள்.
“எலக்சன்ல ஜெயிச்சதுக்கு வாழ்த்துக்கள்… அடுத்து உன்னை… உங்களை மீட் பண்ணுவேனானு தெரியல… சோ சி.எம்மா பதவியேற்க போறதுக்கும் சேர்த்து இப்பவே வாழ்த்திடுறேன்… கங்கிராட்ஸ் அருள்”
சொன்னவளின் குரலும் கண்களும் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை கனிந்திருந்தது. அருள்மொழி அதை கண்டுகொண்டான். அவனது முகத்திலும் இப்போது புன்னகை அரும்பியது.
“நீங்க எப்ப வேணும்னாலும் என்னை மீட் பண்ண வரலாம் வானதி மகேந்திரன்… பிகாஸ் நீங்க சி.எம்மோட ஃப்ரெண்ட்டாச்சே”
சொன்னவன் அகத்தியனுடன் கிளம்பிவிட வானதி மனநிறைவோடு அங்கேயே நின்றாள். அப்போது நிதர்சனா வேகமாக வந்தவள் அவளிடம் மொபைலை நீட்டவும் இப்போது யார் அழைக்கிறார்கள் என்ற கேள்வியோடு வாங்கிக் கொண்டாள். தொடுதிரையில் அழைத்தவர் யாரென்று பார்த்ததும் வானதி யோசனைவயப்பட்டவளாக பேச ஆரம்பித்தாள்.
மறுமுனையில் பேசிய நபரிடம் “நோ ப்ராப்ளம்… உங்களுக்காக இந்த வாரம் முடியுற வரைக்கும் நான் சென்னைல வெயிட் பண்ணுறேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
நிதர்சனாவிடம் போனை அளித்தவள் “நீங்க எல்லாரும் முதல்ல கொல்கத்தாக்குக் கிளம்புங்க… நான் சண்டே ஈவ்னிங் ஃப்ளைட்ல வந்துடுறேன்” என்றாள்.
நிதர்சனா சென்றதும் தனது அலுவலக அறைக்குள் சென்றவள் தனது நாற்காலியில் அமர்ந்து தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக தனது ஆட்காட்டிவிரலில் கருப்பு கோடு போல இருந்த மையைப் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்தாள்.

தான் எண்ணியது ஈடேறும் என்ற நம்பிக்கையே அவளை சற்று முன்னர் இலகுவாய் அருள்மொழியிடம் பேச வைத்தது. ஆனால் அருள்மொழி மனம் மாறிவிட்டால் என்னாகும் என்ற கோணத்தில் அவள் யோசிக்கவே இல்லையே! அவனது ஈகோவை ராமமூர்த்தி தொட்டிருக்கிறார் தான்! ஆனால் பழையபடி அவரை எதிரே வைத்து பார்க்க விரும்பவில்லை, கீழே வைத்து கொள்வேன் என்று அவன் ஆரம்பித்தால் வானதியின் இத்தனை நாள் போராட்டமும் விழலுக்கு இறைத்த நீராகி விடுமே! வானதிக்குள் மீண்டும் போராட்டம் ஆரம்பித்து விட்டது.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction