புக்குல இருக்குற மாதிரி காதல் கதைகள் நிஜத்துல நடக்குமான்னு கேட்டா, சுத்தமா இல்லைன்னுதான் சொல்லணும். நம்ம வாழ்க்கையில ஒருத்தன் பின்னாடியே வந்து சுத்தறது, சர்ப்ரைஸ் குடுக்கறது, கண்ணுக்குள்ளேயே பார்த்து உருகறது எல்லாம் நடக்கவே நடக்காது. இங்கல்லாம், ஒரு சாதாரண சாக்லெட் வாங்கிக் குடுக்கவே யோசிப்பாங்க! இந்த ஹீரோயினுக்கு எல்லாம் வாழ்க்கையில எவ்ளோ பெரிய சவால்கள் வந்தாலும், ஈஸியா ஒரு ஹீரோ வந்து காப்பாத்திடுறான். நிஜத்துல நமக்கு ஒரு சின்ன பிரச்சனைனாக்கூட, நம்மதான் போராடணும். சும்மா வானத்துல இருந்து ஒருத்தனும் குதிச்சு வரமாட்டான். அப்புறம் இந்த லவ் ப்ரொபோசல்ஸ்! எவ்ளோ கிராண்டா, சினிமாட்டிக்கா இருக்கும்! நிஜத்துல, “நான் உன்ன லவ் பண்றேன்”னு சொல்லவே பல வருஷம் ஆகும். ஒருத்தன் சொல்லிட்டாக்கூட, நம்மளுக்கு டவுட்டுதான் வரும். இந்த நாவல்கள் எல்லாம் படிக்க நல்லா இருக்கு, மனசுக்கு இதமான உணர்வைக் குடுக்குது. ஆனா, இதுல வர்றதெல்லாம் கனவுலகம்னு எனக்குத் தெரியும். சரி, நாளைக்கு இருக்கற இன்டர்னல் எக்ஸாமுக்கு படிக்கணும், அதுதான் இப்போ முக்கியம்!
-விழியின் மொழிகள்
“கருக்கல்ல தோட்டத்துல நிக்காத சிவகாமி. பூச்சி பொட்டு நடமாடும்”
அக்கறையாய்ச் சொன்ன நரசிம்மனிடம் ராமபாணக்கொடியில் மலரத் தயாராகியிருந்த மொக்குகளைக் காட்டினார் சிவகாமி.
“நேத்து மல்லிச்செடி எல்லாம் அவ்ளோ பூ. அதுக்குப் போட்டியா இன்னைக்கு ராமபாணம் விரிய ரெடியாகிருக்கு பாருங்க” என்று காட்டினார்.

பிசினசின் அழுத்தங்கள் வீடு வரை வந்து நரசிம்மனைத் தாக்காமல் இருப்பதற்கு அவரது ரசனைக்கார மனைவியும் ஒரு காரணம். இப்படி எதையாவது பற்றி அவர் பேச, நரசிம்மன் அதற்கு தனது கோணத்தில் இன்னொரு விளக்கம் தர என்று அவர்களுடைய உரையாடல்கள் வயோதிகத்தின் வாசலில் நின்றபோதும் அவர்களை இளமையாக உணரவைக்கும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இக்காலத் தம்பதிகளிடையே பிரச்சனை வரக் காரணமே முறையான உறவை வளர்க்கும் உரையாடல்கள் அரிதானதே! அதை அப்போதிருந்தே உணர்ந்தவர்கள் என்பதால் சிவகாமியும் நரசிம்மனும் இம்மாதிரியான உரையாடல்களை எப்போதுமே தவிர்ப்பதில்லை.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே மகிழ்மாறனின் கார் வருவதைக் கவனித்தார்கள்.
“மருமக வந்துட்டா. அவளுக்கு இந்தக் கொடியைக் காட்டணும். அவ தோட்டத்தைப் பாக்கணும்னு ஆசைப்பட்டா காலையிலயே”
காரிலிருந்து இறங்கிய மகிழ்மாறன் ஏதோ சொல்ல அதற்கு மலர்விழி தலையாட்டியபடியே நடப்பதைக் கண்ட சிவகாமி “இருந்தாலும் மாறன் நம்ம மருமகளை ஆட்டிவைக்குறான்” என்று சொல்ல
“இன்னும் கொஞ்சநாள் போகட்டும்! மருமகளைப் பாத்து இதே வார்த்தையை நீ சொல்லுவ. ஏன்னா அதுதானே உலக நியதி” என்று சொல்லி சிரித்தார் நரசிம்மன்.
இருவரும் பேசிச் சிரிப்பதைப் பார்த்ததும் மலர்விழிக்குத் தனது பெற்றோரின் நினைப்பு வந்துவிட்டது. சிகாமணிக்குக் குழலி என்றால் அவ்வளவு பிரியம்.
அத்துணை கஷ்டத்திலும் மனைவிக்காகச் செய்வதில் அவர் எந்தக் குறையும் வைக்கமாட்டார். சிகாமணிக்கு ஒன்று என்றால் குழலி துடிப்பதற்கும், அவர் ஒரு காரியத்தைச் சொன்னார் என்றால் மறுபேச்சின்றி செய்வதற்கும் அவர்களிடையே இருக்கும் உள்ளார்ந்த அன்பே காரணம்.
அவர்களைப் பார்த்து வளர்ந்தவளுக்குப் பணக்கார வீடுகளில் வாழ்பவர்களிடையே இந்த அன்பும் அன்னியோன்யமும் இருக்குமா என்ற ஐயம் எப்போதும் உண்டு.
காரணம் மாணிக்கவேலு – நிலவழகி!
அந்த ஐயம் நரசிம்மனும் சிவகாமியும் இயல்பாகப் பேசிச் சிரிப்பதைக் கண்டதும் ஓடிப்போனது.
“வந்துட்டியா? உனக்குச் சமோசா பிடிக்குமாமே? வேணி இப்ப தான் சூடா செஞ்சிருக்கா. போய் சாப்பிடு. டீ குடிச்சிட்டு இங்க வா.” என்றார் சிவகாமி ஆசையாக.
“சரிங்கத்தை” என்று தலையை உருட்டிய மலர்விழி ஓரக்கண்ணால் மகிழ்மாறன் கண்ணாடியை அழுத்தியதுமே “அது… அத்தை” என்று திணற
“சும்மா சும்மா அவளை மிரட்டாத மாறா” என்று மகனின் புஜத்தில் அடித்தார் அவர்.
“நான் எங்க மிரட்டுனேன்? நான் சாதாரணமாதானே இருக்கேன்?” என்று கேட்டவன் ‘நான் உன்னை மிரட்டுகிறேனா?’ என்று பொருள்படும்விதமாக மனைவியை நோக்கிப் புருவம் உயர்த்தினான்.
“இந்தா இதுக்கு என்ன அர்த்தம்? பாவம் மருமக! நீ ரொம்பதான் மிரட்டி வைக்குற”
அன்னையும் மகனும் தன்னை வைத்து காமெடி செய்கிறார்களா என்று யோசித்தாள் மலர்விழி. அதில் அவளுக்கு வருத்தமில்லை. இதமான உணர்வுதான்.
“அண்ணா இப்ப ஓ.கேவா?” என்று பேச்சை மாற்றினான் மகிழ்மாறன்.
“கொஞ்சம் பரவால்ல மாறா. நீ அவன் கிட்ட பேசிப் புரியவை. இன்னைக்கு ஹோட்டலுக்குப் போகல. இப்பிடி எத்தனை நாள் இருப்பான்? வாழ்க்கையோட்டத்துல எல்லாரும் அடுத்தவங்களுக்கு நடந்ததை மட்டுமே நினைச்சிட்டிருக்கமாட்டாங்கனு அவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவை” என்றார் நரசிம்மன்.
“சரிப்பா! நான் பேசுறேன். நீங்களும் வந்துடுங்க” என்றவன் கையோடு மலர்விழியையும் தன்னுடன் அழைத்துப் போய்விட்டான்.
“டெய்லி வீட்டுக்கு வந்ததும் பேக்கை இங்க வச்சுட்டு, முகம் எல்லாம் கழுவி வேற ட்ரஸ் மாத்திட்டு அப்புறம் காபி, டீ, ஸ்னாக்ஸ்னு எதை வேணாலும் சாப்பிடு. இதை ரொட்டீன் ஆக்கிக்க. புரியுதா?”
‘பள்ளிக்கூட வாத்தியார் தோற்றுப்போனார்’ என மனதில் நினைத்தபடி சரியெனத் தலையாட்டியவள் அவன் காட்டிய மேஜையில் தனது ஷோல்டர் பேக்கை வைத்தாள்.
மகிழ்மாறன் இலகு உடைக்கு மாறி புவனேந்திரனைத் தேடிச் சென்றதும் அவளும் முகம் கழுவி வேறு உடைக்கு மாறி சமையலறைக்குச் சென்றாள்.
சமையல்காரம்மா வேணி அவளிடம் தேநீரையும் சமோசாவையும் எடுத்து நீட்டினார்.
“இன்னும் ஒன்னு வேணுமா பாப்பா?” என அவர் கேட்க
‘பாப்பாவா? விட்டா ஃபீடிங் பாட்டிலை எடுத்து குடிக்கச் சொல்லுவாங்க போல’ என்று திகைத்தவள் “இல்ல! இதுவே நிறைய” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாமியாரைத் தேடித் தோட்டத்துக்குச் சென்றாள்.
நரசிம்மன் அங்கில்லை. மாமியாரிடம் ஒரு சமோசாவை நீட்டினாள்.
அவரோ சுற்றும் முற்றும் பார்த்தார்.
“யாரைத் தேடுறிங்க அத்தை?”
“உன் புருசனைத்தான். எண்ணெய் பலகாரத்தைக் காண விடமாட்டான். நெஞ்செரிச்சல் வரும், கொலஸ்ட்ரால் அது இதுனு நாலு பக்கத்துக்குப் பேசுவான்மா. அவன் பேசுறதைக் கேட்டாலே எனக்குப் படபடனு வந்துடும் போ”
சிவகாமி சொல்லவும் சத்தமாக நகைத்தாள் மலர்விழி.
“நான் கூட அவரோட பேச்சு எனக்கு மட்டும்தான் படபடப்பைக் குடுக்குதோனு நினைச்சேன். நீங்களும் துணைக்கு இருக்கிங்க. சந்தோசமா இருக்கு”
“இதுல என்னடி பொண்ணே உனக்குச் சந்தோசம்? ஹூம்”
விளையாட்டாக அவர் மோவாயில் இடிக்க இன்னும் சிரித்தாள் மலர்விழி.
அந்நேரம் புவனேந்திரனின் அறையில் இருக்கும் ஃப்ரெஞ்ச் விண்டோவில் அருகே அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டிருந்த மகிழ்மாறனின் காதுகளில் அவளது சிரிப்புச்சத்தம் கேட்டது.
அவனது கவனம் கலைந்து கண்கள் தன்னிச்சையாக அவளிடம் திரும்பின.
அவள் சிவகாமியிடம் ஏதோ கேட்டு ஆச்சரியப்படுவதைக் காண முடிந்தது. அந்த விழிகளில் சொட்டிய அப்பாவித்தனம் கண்டிப்பாக இந்த நூற்றாண்டு பெண்களிடம் இராத ஒன்று. இருக்க அவசியமும் இல்லை. அப்பாவிகளை இந்த உலகம் வெகு எளிதில் ஏமாற்றிவிடும். சிகாமணியிடமிருந்து இவளுக்கு இக்குணம் வந்திருக்குமோ?
“ஜாம் நகருக்குப் போற ட்ரெயின்ல ஏறுனதா சொல்லுறாங்க. ஆனா அவ அங்கதான் போயிருப்பானு என்ன நிச்சயம்?” எனச் சொல்லிக்கொண்டிருந்த புவனேந்திரன் இளையவனின் பார்வை போன திக்கைக் கவனித்ததும் அவனையறியாமல் முறுவலித்தான்.
தோளில் அடித்து அவனது கவனத்தைக் கலைத்தவன் “உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணுறேன்ல” என்க, மகிழ்மாறனோ முறைத்தான்.

“நீ என்னோட அண்ணன். உனக்கு ஒரு பிரச்சனைனா உனக்காக நான் யோசிப்பேன். ஆனா நீ பிரச்சனைய விட்டு விலகமாட்டேன்னு அடம்பிடிக்குற” என்றான் எரிச்சலோடு.
அருகே அமர்ந்திருந்த நரசிம்மனின் முகத்தில் கவலையின் ரேகைகள்!
“அப்பாவ பாரு. இத்தனை வருசம் அவர் ஓடியாச்சு. அவருக்கும் ஓய்வு வேண்டாமாண்ணா? உன் பொறுமைக்கு ஹோட்டல் இண்டஸ்ட்ரி பொருத்தம்னு உன்னை ஆசையா அங்க உக்கார வச்சார். நீ உன்னை வேண்டாம்னு உதறிட்டுப் போனவங்களுக்காக அப்பாவ தவிக்க விடுற. உனக்குப் புரியுதா? மதுமதி போயிட்டா! அவ எங்க போனா என்ன?”
புவனேந்திரனுக்கும் தனது போக்கு சரியில்லை என்பது புரிந்தது.
“எனக்குள்ள இருக்குற கேள்விக்கு அவ மட்டும்தான் பதில் சொல்ல முடியும் மாறா. அதுக்காகத்தான் அவ எங்க இருக்கானு தேடத் துடிக்குறேன். அவ என் கண் முன்னாடி வந்து நிக்கணும்னு நினைக்குறேன். இதை எப்பிடி உனக்குப் புரியவைக்கணும்னு எனக்குத் தெரியலைடா. ஆனா நான் செஞ்சது தப்புதான். இன்னைக்கு ஹோட்டலுக்குப் போகாம இருந்திருக்கக்கூடாது. சாரிடா. சாரிப்பா. நான் நாளையில இருந்து தவறாம ஹோட்டலுக்குப் போயிடுறேன்”
புவனேந்திரன் தெளிந்ததில் மகிழ்மாறனுக்குச் சிறியதாக நிம்மதி. நரசிம்மனோடும் அவனோடும் சிறிது நேரம் பேசினால் தேவலை என்று தோன்ற அங்கேயே அமர்ந்து பேச்சில் ஆழ்ந்துவிட்டான்.
அதே நேரம் தோட்டத்திலிருந்தபடி அன்னை தந்தையிடம் வீடியோ காலில் உரையாடி முடித்தாள் மலர்விழி.
சிகாமணிக்கு மகளின் சிரிப்பைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. முந்தைய தினம் மண்டபத்தில் முகத்தில் சுரத்தேயில்லாமல் நின்ற மகளை இப்போது சந்தோசமாகப் பார்த்ததும் அவரது வதனத்தில் ஆசுவாசம் தெரிந்தது.
அவர்களிடம் பேசி முடித்த பிற்பாடு மாமியாரும் மருமகளுமாக ராமபாணக்கொடியில் இருந்த மலர்களைப் பறிக்கத் தொடங்கினார்கள்.
“உனக்குப் பூ கட்டத் தெரியுமா?”
“தெரியாதுத்தை. ஆனா எங்கம்மா நல்லா கட்டுவாங்க”
“அப்பிடியா? மதினிக்கு டக்குனு யார் கிட்டவும் பழக வராதோ?”
“கொஞ்சம் அமைதியானச் சுபாவம். ஆனா பழகுனா அவங்களை மாதிரி அன்பானவங்க யாரும் இருக்கமாட்டாங்க”
தனது அன்னைக்கும் தோட்டம், மலர்கள் என்றால் இஷ்டம் என்று மலர்விழி சொன்னதும் பேச்சு பின்னர் மலர்கள் பக்கம் திரும்பியது.

“எனக்குப் பூச்செடி மேல பைத்தியக்காரத்தனமா பிரியம் உண்டு. அது முத்துனது காலேஜ் படிச்சப்ப” என்றார் சிவகாமி.
“காலேஜா?” என ஆச்சரியமாகப் பார்த்தாள் மலர்விழி.
“ஆமா! பி.ஏ இங்கிலீஸ் லிட்டரேச்சராக்கும் நான்” என்றவர் “சாரா டக்கர் காலேஜ்ல அப்பவே படிக்க வச்சார் எங்கப்பா. இங்கிலீஸ் லிட்டரேச்சர் படிச்சதால இங்கிலீஸ் நாவல்கள் படிக்க அவ்ளோ பிடிக்கும். அதுவும் வாலிப வயசு. காதல் கதைகள்னா கொள்ளை இஷ்டம் எனக்கு. ஜேன் ஆஸ்டினோட ‘ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்’ மட்டும் அத்தனை தடவை படிச்சிருப்பேன்! ஜேன் ஆஸ்டினோட நாவல்கள்ல பூக்களுக்கு நிறைய பங்கு இருக்கும். அப்பிடி படிச்சப்ப பூ மேல வந்த பிரியம் இப்ப வரைக்கும் போகல”
மாமியார் சொல்வதை ஆச்சரியத்தோடு கேட்டபடி பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தாள் மலர்விழி.
“எனக்கு இங்கிலீஸ் வாசிக்க வரும். ஆனா கதை படிக்குற அளவுக்கு வராது அத்தை”
“லைப்ரேரியன் ஆகணும்னு ஆசைப்படுற பொண்ணுக்கு இங்கிலீஸ் நாவல் படிக்க வராதா? என் ரூம்ல நிறைய புக்ஸ் வச்சிருக்கேன். இன்னைக்கு எடுத்துட்டுப் போ. ஃப்ரீ டைம்ல படி. உனக்கு எந்த லைன் புரியலையோ அதை அண்டர்லைன் பண்ணி வை. நான் உனக்கு விளக்கம் சொல்லுறேன். இங்கிலீஸை இப்பிடித்தான் கத்துக்க முடியும்டி பொண்ணே!”
அவர் சொல்ல ஆர்வமாகத் தலையாட்டியவள் அனைத்தும் முடிந்து அவர்களின் அறைக்குச் சென்றபோது கை நிறைய ஆங்கில நாவல்கள். குறிப்பாகக் காதல் கதைகள். ஜேன் ஆஸ்டினின் ‘ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிசும்’ அதில் அடக்கம்.
பொழுது போகவில்லையென தொலைக்காட்சியில் நகைச்சுவை சேனலைப் பார்த்துக்கொண்டிருந்த மகிழ்மாறன் நாவல்களும் கையுமாக வந்தவளைப் பார்த்ததும் கவனம் கலைந்தான்.
மலர்விழி அனைத்துப் புத்தகங்களையும் மேஜை மீது வரிசையாக வைக்கவும் அங்கே சென்றான். அவள் புத்தகங்களை அடுக்கும் ஆர்வத்தில் நெருங்கி நின்றவனைக் கவனியாது போனாள்.
“புக் பைத்தியமா நீ?” அருகில் கேட்டக் குரலில் திடுக்கிட்டு விலகியவள் பின்னே நகர்ந்ததில் அவளது தலை வேகமாகச் சுவரில் இடிக்கப் போக, அதற்குள் தனது கரத்தை அங்கே வைத்து அவளது பின்னந்தலை சுவரில் இடிக்காமல் காத்தான் மகிழ்மாறன்.
தலை நச்சென அவனது கரத்தில் மோதியதும் திரும்பிப் பார்த்தவள் தலை மோதிய வேகத்தில் அவனுக்கு வலிக்குமே எனப் பதறி கையைப் பிடித்து “வலிக்குதாங்க? சாரி!” என்றபடி தடவிக்கொடுக்க, அவனுக்குள் என்னவெனப் புரியாத ரசவாத மாற்றம் மெதுவாக நிகழ்ந்தது.
கையிலிருந்த அவளது பார்வை அவனது கண்களுக்குத் திரும்பியதும் மெல்லிய திடுக்கிடல்!
விலகப் போனவள் இருவருக்கிடையே இருந்த இடப்பற்றாக்குறையால் திணற, அதை ரசிக்கப் பிடித்தது மகிழ்மாறனுக்கு.
அது என்னவோ அவளிடம் பேச, அவளைச் சீண்ட அவனுக்குப் பிடிக்கிறது. எனக்கே எனக்கானப் பெண்ணிவள் என்ற உரிமையுணர்வு அவளைக் காணும் போதெல்லாம் தலைதூக்குகிறது.
அவளது கண்கள் காட்டும் ஒரு பாவனையையும் பார்க்க, ரசிக்கத் தோன்றுகிறது.
“நான் போகட்டுமா?” மெல்ல வினவினாள் மலர்விழி.
“ஏன் போகணும்?” பதிலுக்குக் காத்திருந்தவளுக்குக் கேள்வியே பதிலடியாக வந்தால் என்ன செய்ய முடியும்?
“அது… நான் படிக்கணும். நீங்க போங்க”
“நான் எதுக்குப் போகணும்?” இம்முறை அதிகாரம் அவனது குரலில்.
“அதான் சொன்னேனே… படிக்கணும்னு…”

மகிழ்மாறனின் பார்வை அனிச்சையாக மேஜை மீதிருந்த ஆங்கில நாவல்கள் மீது பாய்ந்தது.
“இதைப் படிக்கவா இவ்ளோ ஆர்வம்?”
“ம்ஹூம்! மார்க்கெட்டிங்ல இன்னைக்கு நடத்துன ஷேப்டரைப் படிக்கணும்”
“படிக்கலாம்! முதல்ல நீ என் கூட சகஜமா பேசுறதுக்குக் கத்துக்க. அப்புறமா பாடம் கத்துக்கலாம்”
மீண்டும் சீண்டுகிறான்! ‘அடேய் என்னடா வேணும் உனக்கு?’ மனதுக்குள் புலம்பியவள் “நான் சகஜமாதானே பேசுறேன் சா…மகிழ் மாமா” என்று கேட்க
“அஹான்!” என்றவனின் இதழிலும் கண்களிலும் அத்துணை ஜொலிப்பு!
“சரி! நீ சகஜமா பேசுறதாவே வச்சுப்போம். கொஞ்சநேரம் இப்பிடியே நின்னு பேசி எனக்கு அதை ப்ரூவ் பண்ணு”
மலர்விழிக்கு அவனது கடுகடு முகத்தைக் கூட சமாளிக்கும் தெம்பு இருக்கிறது. ஆனால் இதோ இப்படி கண்களில் குறும்பும், பேச்சில் விசமமுமாக நிற்கும் இந்தப் புதிய மகிழ்மாறனைச் சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது.
இதில் சகஜமாக இருக்கிறேன் என நிரூபிக்க வேறு வேண்டுமாம். இன்னும் இரண்டு நிமிடங்கள் நீடித்தால் அவள் மயக்கம் போட்டு விழுந்தாலும் ஆச்சரியமில்லை.
முதலில் இப்படி நெருக்கமாக நின்று எதைப் பற்றி பேசுவது?
“இதோ இந்த நாவலைப் பத்தி பேசலாமே!” அவனே எடுத்துக் கொடுக்கவும் மலர்விழியின் கண்கள் ‘ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்’ பக்கம் திரும்பின.
“அது உங்களுக்குப் போரடிக்கும்”
“எனக்குப் போரடிக்கும்னு உனக்கு எப்பிடி தெரியும்?”
“ஏன்னா ஆம்பளைங்களுக்குப் புனைவு வகையறா புக்ஸ் பிடிக்காது”
மகிழ்மாறனின் புருவம் உயர்ந்தது மெச்சுதலாக.
“அப்பிடியே படிச்சாலும் க்ரைம், ஹிஸ்டாரிக்கல், சயின்ஸ் ஃபிக்சன்தான் படிப்பாங்க. லைப்ரரில கவனிச்சிருக்கேன். ரொமான்ஸ் எல்லாம் சீண்டக்கூட மாட்டாங்க”
இவ்வளவு நீளமாக அவள் தன்னிடம் பேசுவதே அதிசயம் என்று தோன்றியது அவனுக்கு. அதே நேரம் அவளுக்குப் பிடித்ததைப் பற்றி பேசினால் தயக்கம் உடைத்து இயல்பாகப் பேசுகிறாள் என்பதும் புரிந்தது.
மனதுக்குள் குறித்துக்கொண்டவன் “ம்ம்! மேல சொல்லு” என்க இருவரும் இருக்கும் நெருக்கம் மறந்து இயல்பாய், அழகாய் அவள் பேச அதில் கரைவது சுகமாய்த் தோன்றியது மகிழ்மாறனுக்கு.
மலர்விழி புத்தகங்களைப் பற்றிய பேச்சு என்றதும் ஆர்வமாகப் பேசியவள் அவனது பார்வையில் தெரிந்த மாற்றம், உதட்டோரம் உறைந்திருந்த சிரிப்பு, இறுக்கம் தொலைத்து இளகி நின்ற அவனது தோற்றத்தைக் கவனித்துவிட்டு மெதுவாகப் பேச்சை நிறுத்தினாள்.
“என்னாச்சு?”
“அது… நீங்க… நீங்க இப்ப பாக்குறதுக்கு முழுசா வேற ஒருத்தர் மாதிரி இருக்குறிங்க”
“ஏன்? என் முகத்துல மாஸ்க் எதுவும் போட்டிருக்கேனா?”
“ம்ஹூம்! அப்பிடி இல்ல. இது வேற மாதிரி”
“எப்பிடி?”
“எனக்கு விளக்கிச் சொல்லத் தெரியலயே!”
முட்டைக்கண்கள் விரிய அவள் சொன்னதுமே மறைந்திருந்த சிரிப்பு வெளிப்படையாகவே மகிழ்மாறனின் உதட்டில் குடியேறியது.
“விளக்கம் எல்லாம் சொல்லத் தேவையில்ல. நீ இன்னைக்கு ஒரு விசயத்தை நிரூபிச்சிட்ட. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுனு”
“புரியலையே!”
“புத்தகத்துல இருக்குற சுரைக்காயை வச்சு சமையல் பண்ண முடியாது. அதே மாதிரி எவ்ளோ காதல் கதைகள், ரொமான்ஸ் நாவல் படிச்சாலும் சிலருக்கு ரியாலிட்டில அது உதவாது. பெஸ்ட் எக்சாம்பிள் நீதான்”
சிரிப்போடு சொன்னவன் விலகிப் போய்விட, அவன் சொன்னதன் பொருள் புரிந்து சிலையாய்ச் சமைந்தவளின் முகம் என்னவோ நாணத்தை உடுத்தியிருந்தது. இனி எங்கே அவள் மார்க்கெட்டிங் பாடத்தைப் படிப்பது!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction