‘கே.வி.ஆர் ரிப்பேர் சர்வீஸ்’ என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்த கடையின் ஷட்டரை இழுத்து மேலே விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் சரவணன்.
சுற்றிலும் மரத்தினாலான அலமாரிகள், அவற்றில் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள், ஸ்பேர் பார்ட்ஸ்கள் நிரம்பியிருந்தன.
நூறு சதுர அடிகள் கொண்ட கான்க்ரீட் கட்டிடத்தில் எந்தத் தடுப்புகளும் இல்லை. வெளிச்சத்துக்காக இரண்டு சி.எஃப்.எல் விளக்குகள் எரிந்தன. மின்விசிறியின் உபயத்தால் காற்று வரும். முக்கியமான விசயம், அந்தக் கடை அவனது சொந்தக் கட்டிடம். முந்தைய உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான்.

அந்தக் கடைக்குள் அவன் எலக்ட்ரானிக் சாதங்களை வைத்து வேலை பார்க்க ஒரு கான்க்ரீட் மேடையும் அதனருகே ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியும் கிடந்தன. அந்தக் கான்க்ரீட் மேடைக்குக் கீழே வரிசையான மின்விசிறிகள், மிக்சிகள், சிறிய கிரைண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் பழுது நீக்கத்திற்காக வந்தவை.
வீட்டுக்குத் தேவையான மின்விளக்குகள், சுவிட்சுகள், மின் இணைப்புக்குத் தேவைப்படும் ஒயர்கள், சிறிய பி.வி.சி பைப்புகள் எல்லாம் விற்பனைக்காக அங்கிருந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த அலமாரியில் ஒரே ஒரு இடம் மட்டும் வினாயகருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பித்தளை வினாயகரின் தலையிலிருந்த பழைய பூவை எடுத்துவிட்டு, அப்போது வாங்கி வந்த சரத்தைச் சூடினான் சரவணன். ஊதுபத்தியை ஏற்றி, கண் மூடி அவரை வணங்கிவிட்டு அன்றைய வேலையை ஆரம்பித்தான்.
இரண்டு மின்விசிறிகளைச் சரி செய்யவேண்டும். மூன்று நாட்களுக்கு முன்னர் கேஸ் அடுப்பு பர்னரில் அடைப்பு இருப்பதாக சொல்லி ஒரு வாடிக்கையாளர் கொடுத்துவிட்டுப் போனார். அதை முதலில் சரி செய்வோமென எடுத்தான்.
கேஸ் அடுப்பு மீது அழுக்கோ அழுக்கு. குழம்பு, சோறு சமைக்கும் போது பொங்கி வழிந்து திட்டு திட்டாகப் படிந்த அழுக்கை உடனுக்குடன் சுத்தம் செய்யாமல் விட்டிருந்தார்கள்.
ஸ்பானரை வைத்து கேஸ் அடுப்பைப் பாகம் பாகமாகக் கழற்றி அதிலிருந்த அடைப்பை எடுக்கும் வேலையில் அவன் ஆழ்ந்திருந்தபோது கான்க்ரீட் மேடை மீது யாரோ தேநீர் அடங்கிய கண்ணாடி தம்ளரை வைத்தார்கள்.
நிமிர்ந்து பார்த்தான் சரவணன்.
“டீ குடிண்ணே” வெள்ளந்தி முகத்தோடு சொன்னபடி நின்று கொண்டிருந்தான் பக்கத்து மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் பதினைந்து வயது சிறுவன் சுரேஷ்.
தேநீர் தம்ளரை எடுத்துக்கொண்டான் சரவணன்.

“என்னடா இன்னும் ஆவுடையண்ணன் இன்னும் வரலையா?”
தேநீரைச் சுவைத்தபடி வெளியே வந்து சுரேஷிடம் பேச்சு கொடுத்தான்.
கடைக்கு முன்னே தனது பைக்கை நிறுத்திவைக்கவும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிழல் வேண்டும் என்பதற்காகவும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்திருந்தான் சரவணன். அதனடியில் நின்று இருவரும் பேசினார்கள்.
“ஆவுடையண்ணனுக்கு இன்னைக்கு ஒரு கல்யாணவீடு இருக்கு வெட்டியபந்தில. அங்க போகணும்னு சொன்னாங்க. இன்னைக்கு முழுக்க கடைய நான் தான் பாக்கணும்” என்றான் சுரேஷ்.
குடும்ப வறுமையின் காரணமாக மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கிறான். கடின உழைப்பாளி. சில ஆண்டுகள் தொழிலைப் படித்துவிட்டுத் தனியே மெக்கானிக் ஷாப் ஆரம்பிக்கும் கனவும் அவனுக்கு உண்டு.
ரங்கநல்லூரின் கடைவீதியில்தான் இரு கடைகளும் இயங்கி வந்தன. அந்தக் கடைவீதியே இம்மாதிரியான பலவிதமான தொழில் நடக்கும் கடைகளுக்குப் பெயர் போனதுதான்.
இப்போதே அங்கே ஒரு கடையைப் பார்த்து வைத்திருக்கிறான் அச்சிறுவன். இது வேலை செய்யும் வயதில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு குடும்பத்திற்காக உழைப்பவனைச் சரவணனுக்கு மிகவும் பிடிக்கும்.
“மதினிய கொஞ்சநேரத்துக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்டுல பாத்தேன்”
தேநீரை உறிஞ்சிய சரவணனின் கண்கள் கூர்மையாய் அவன் மீது குவியவும் “தேவா மதினிய சொன்னேன்” என்றான்.
“அவ மட்டும்தான் உனக்கு மதினி”
சுரேஷின் பேச்சைத் திருத்திய சரவணன் மீண்டும் கடைக்குள் போக எத்தனிக்கையில் ‘ஜல்ஜல்’ என்ற கொலுசொலி அவனது செவியைத் தீண்டியது.
“வாங்க மதினி” வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான் சுரேஷ்.
சரவணன் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் தேவயானியைக் கண்டதும் திகைத்துப் போனான். அவளது மருத்துவமனையில் நிர்வாகப்பிரிவில் இருப்பவர்கள் அணியும் சீரூடையான வெளிர்ப்பச்சை வண்ண சுடிதார் அணிந்து கூந்தலை கொண்டையிட்டிருந்தாள். கண்களில் மை சிரித்தது. வினாயகர் வடிவ டாலருடன் கூடிய சிறிய தங்க செயினை கழுத்தை ஒட்டி அணிந்திருந்தாள். வலதுகை மோதிரவிரலில் நிச்சயத்தார்த்தத்தில் சரவணன் அணிவித்த மோதிரம் மின்னியது. தன்னைக் கண்டதும் திகைப்பில் உறைந்தவனை இடுப்பில் கையூன்றி முறைத்துப் பார்த்தாள்.

“வீட்டுக்காரம்மா கடைக்கே வந்துட்டாவளா?”
எதிர்ப்பக்கத்துக்கடையிலிருக்கும் டெயிலர் பொன்னுரங்கம் சத்தமாகச் சொல்லிச் சிரிக்கவும் தேவயானியின் முகத்தில் நாணச்சிவப்பேறியது.
அதை மறைத்தவள் சுரேஷிடம் “முதல் தடவையா உங்களை எல்லாம் பாக்க வந்திருக்கேன். குடிக்க, சாப்பிட எதுவும் தரமாட்டிங்களா தம்பி?” என்று கேட்க
“நீங்க உக்காருங்க மதினி. நான் ஓடிப்போய் உங்களுக்கு ஸ்பெஷல் டீயும், காரவடையும் வாங்கிட்டு வர்றேன்” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டுச் சில அடிகள் தொலைவில் இருக்கும் தேநீர்க்கடைக்கு ஓடினான் சுரேஷ்.
தேவயானி வாடிக்கையாளர்கள் அமரப் போடப்பட்டிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.
சரவணன் திகைப்பாய் நிற்கவும் “பயப்படாதிங்க. என் மிஸ்ட் கால்ஸ் பாத்தும் ஏன் கூப்பிடலனு சண்டை போடுறதுக்காக நான் இங்க வரல” என்று சொன்னாள்.
“அதில்ல தேவா…”
“அப்புறமா பேசலாம். முதல்ல சட்டைய போட்டுட்டு வாங்க”
சிவந்த முகத்தை எங்கோ பார்ப்பது போல திருப்பிக்கொண்டாள்.
வேலை செய்யும்போது அழுக்காகிவிடுமெனச் சட்டையைக் கழற்றிவிட்டு பனியனோடு வேலை செய்வது சரவணனின் வழக்கம்.
கையில்லாத பனியனில் திமிறி நிற்கும் புஜங்களும், அகன்ற தோளும் தேவயானியை ஏதோ ஒரு வகையில் இம்சித்தன. அவனும் புரிந்துகொண்டு சட்டையை அணிந்துவிட்டு வந்தான்.
“உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தானே?” தடாலடியாகக் கேட்டாள் அவள்.
“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி?”
“நீங்க இன்னும் பதில் சொல்லலையே”
“எனக்குப் பரிபூரண சம்மதம் தேவா”
“அப்ப எதுக்காக என்னை அவாய்ட் பண்ணுறிங்க சரவணன்? கடைக்கு வரவானு கேட்டா சுத்தியுள்ளவங்க கிண்டல் பண்ணுவாங்க, ஊர்க்காரங்க ஜாடை பேசுவாங்கனு சொன்னிங்க. நான் கால் பண்ணுனா எடுக்குறதும் இல்ல. எதுவும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க. பணத்தேவை எதுவும் இருந்துச்சுனா அப்பா கிட்ட சொல்லி வாங்கி தர்றேன்”
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்ற சரவணன் வெகு நிதானமாக தேவயானியின் உடல்மொழியையும் அவளது விழிகளின் அலைபாய்தலையும் கவனித்துக்கொண்டிருந்தான்.
ஒருவர் உண்மையாகவே நம் மீது அக்கறை கொண்டிருந்தால் அதை அவர்களின் உடல்மொழி வெளிப்படுத்திவிடும். நமது கண்களைப் பார்த்துப் பேசுவதை அவர்கள் தவிர்க்க மாட்டார்கள். தேவயானிக்குத் தன் மீதிருக்கும் அக்கறை அவனது மனதைத் தொட்டது.
‘வேலைச்சுமை காரணமாக மொபைலில் பேசவில்லை. அதற்குள் இந்தப் பெண் என்னவெல்லாம் கற்பனை செய்துவிட்டாள்!’
மெல்லியச்சிரிப்பு அரும்பியது அவனது உதடுகளில்.
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல தேவா. வேலை கொஞ்சம் அதிகம். கல்யாணத்துக்கு முன்னாடி நெருக்கி முடிச்சிடலாம்னு இதுலயே கவனமா இருந்துட்டேன். அதான் உன் கூட பேச முடியல.”
அவனது பதிலில் தேவயானி அமைதியானாள்.
“சரி! எதுக்கு நிக்குறிங்க? உக்காருங்க. இந்த மரியாதை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா குடுத்தா போதும்”
அவள் கேலியாகப் பேசுவதை அதிகப்பிரசங்கித்தனமாகவோ, மரியாதைக்குறைவாகவோ கருதாமல் உரிமைப்பேச்சாக எண்ணியது சரவணனின் உள்ளம்.
தனது கடையை முதல் முறையாகப் பார்க்கிறாள். அவளைப் போல நாற்காலியில் அமர்ந்து அழுக்குப் படாமல் செய்யும் வேலை இல்லை இது. ஆனால் கொஞ்சம் கூட கடையைப் பார்த்தோ சரவணனின் கைவிரல் ரேகைகளில் படிந்திருந்த கருப்பான ஆயில் கறையைப் பார்த்தோ அவள் அருவருப்படையவில்லை.

மாறாக ஒருவித மரியாதையோடு கடையை வலம் வந்தன தேவயானியின் விழிகள்.
“என்னடா இப்பவே அதிகாரம் தூள் பறக்குதுனு நினைக்குறிங்களோ? நீங்க நினைச்சாலும் எனக்குக் கவலை இல்ல. அத்தை உங்களை என் கண்ட்ரோல்ல வச்சுக்கணும்னு சொல்லிருக்காங்க”
“எங்கம்மாவா?”
“வேற யாரை நான் அத்தைனு கூப்பிடப்போறேன்? அவங்க தான்”
சுடிதார் துப்பட்டாவைச் சுழற்றியபடி சொன்னவள் மீது அன்னைக்கு இருக்கும் அன்பை அறியாதவன் இல்லை சரவணன்.
சுரேஷ் தேநீரும் வடையும் வாங்கி வந்து கொடுக்க பிகு பண்ணாமல் அதை வாங்கிக்கொண்டாள் தேவயானி.
“உங்கண்ணன் டீ குடிச்சிட்டாராம். நீ ஷேர் பண்ணிக்கிறியாடா?” என்று கேட்டுச் சுரேஷோடு தனது தேநீரையும் வடையையும் பகிர்ந்துகொண்டாள்.
“உனக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போக லேட் ஆகிடாதா தேவா?”
“அப்பிடி லேட் ஆச்சுனா நீங்க பைக்ல கொண்டு போய் விடுங்கண்ணே!” பதில் சொன்ன சுரேஷை முறைத்தான் சரவணன்.
அதில் அவன் பம்மவும் தேவயானி சிரித்தாள். சிரித்ததில் அவளுக்குத் தேநீர் புரையேறிவிட “ஹேய் கவனமா குடிக்க மாட்டியா?” என்று அவளது தலையில் தட்டினான் சரவணன்.
“அ…அது…”
தடுமாறியவளிடம் “இன்னைக்கு உன் கூட என்னால வரமுடியுமானு தெரியல. ஆனா நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து ரெட்டியார்பட்டி சாய்பாபா கோவிலுக்குப் போறோம். அங்க வச்சு உன் கிட்ட நிறைய பேசணும்” என்றான் அவன்.
தேவயானிக்கு அவன் தன்னோடு நேரம் செலவிட விரும்புவதே கொம்புத்தேனை நாக்கில் தடவியது போல மனமெல்லாம் இனித்துப்போனது. துள்ளலோடு அங்கிருந்து விடைபெற்றாள் அவள்.
அவள் போனதும் சுரேஷ் யோசனையோடு சரவணனைப் பார்த்தான்.
“என்னடா?” என அதட்டியவனிடம்
“மதினி கிட்ட இன்னும் சொல்லலையா?” என்று கேட்டான் கவலையோடு.
“ப்ச்! சொல்லுறதுக்கானச் சமயம் வாய்க்கலடா. ஆனா கண்டிப்பா நாளைக்குச் சொல்லிடுவேன்” என்றான் சரவணன் உறுதியோடு.
“சரி நீ போய் வேலைய பாரு. கணேஷனோட வண்டிய இன்னைக்குச் சாயங்காலம் குடுக்கணும்னு ஆவுடையண்ணன் சொன்னார். மறந்துட்டியா?” என்று சுரேஷை விரட்டிவிட்டவனின் மனதில் தேவயானியோடு பேசியதால் உண்டான தெளிவு ஒருவித திடத்தைக் கொடுத்திருந்தது.
‘கட்டாயம் அவள் என்னைப் புரிந்துகொள்வாள். என்னைத் தவறாக எண்ணமாட்டாள்.’
சரவணன் நம்பிக்கையோடு கேஸ் அடுப்பைச் சரி செய்ய ஆரம்பிக்க, தேவயானியோ ரங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் பாளையங்கோட்டை செல்வதற்கான பேருந்தில் ஏறிக்கொண்டாள்.
இதழில் நிரந்தரமாக உறைந்திருந்த சிரிப்பும், மனதில் மீண்டும் மீண்டும் படமாக ஓடிய சரவணனின் அக்கறையானச் செயலும் அவளை இன்னும் அழகியாகக் காட்டின.
“பாளை பஸ் ஸ்டாண்ட் இறங்குங்க”
பேருந்து நின்றதும் இறங்கி மருத்துவமனையை நோக்கி நடை போட்டாள் தேவயானி. மனமெங்கும் உற்சாகத்தில் நிரம்பி வழிந்தது. முந்தைய இரவிலிருந்து மனதை ஆக்கிரமித்த கலக்கம் அகன்று விட்டது.
மருத்துவமனைக்குள் அடியெடுத்து வைத்தவளை அவளோடு வரவேற்பில் பணியாற்றும் சுமதி மகிழ்ச்சியோடு வரவேற்றாள்.
“கல்யாணப்பொண்ணு வர்றப்பவே மான் மாதிரி துள்ளி குதிக்குதே! மாப்பிள்ளை பைக்ல ட்ராப் பண்ணுனாரோ?”
“அட நீ வேற! என்னைக் கிண்டல் பண்ணலனா உனக்குத் தூக்கம் வராதே”
அவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் போய் ஹேன்ட்பேக்கை வைத்தவள் வரவேற்பில் வந்து அமர்ந்தாள். மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அந்த வட்டாரத்தில் ‘மரியா சாமுவேல் மருத்துவமனை’ என்றால் அவ்வளவு பிரசித்தி.
“இன்னைக்கு ஜனனி மேடம் எத்தனை மணிக்கு வருவாங்க?”
“டாக்டர் வர பன்னிரண்டு மணி ஆகும். அதுவரைக்கும் நீங்க இங்க வெயிட் பண்ணாதிங்க. அந்தப் பக்கம் ஓய்வா போய் உக்காருங்க”
“என் பொண்ணு கேக்கமாட்டாங்குறாளே! பிள்ளை பிறக்குறதுக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு. அதுக்குள்ள இவ என்னை என்ன பாடு படுத்தப்போறாளோ?”
மகப்பேறு மருத்துவர் ஜனனியைப் பார்க்க வந்த பெண்மணி ஒருவர் புலம்பிக்கொண்டே போனார்.
அடுத்தடுத்து பொது மருத்துவம், எலும்பு முறிவு, இதயநோய்ப்பிரிவு என ஒவ்வொருவராக வந்து கொண்டே இருந்தார்கள். இடையிடையே போன் மூலமாக சிறப்பு மருத்துவர்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குபவர்கள் வேறு அழைக்க, அவர்களின் பெயர்களைக் கணினியில் பதிவு செய்து கொண்டாள் தேவயானி.
ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றும் செவிலியரும் அன்றைய அப்பாயிண்ட்மென்ட் பட்டியல்களை வாங்கிக்கொண்டதும் கைவிரல்களை சொடுக்கிக்கொண்டாள். அவளருகே அமர்ந்திருந்த சுமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்கு அனுமதிச்சீட்டை எழுதிக்கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு மட்டுமே நாலு ப்ரெக்னெண்ட் லேடீஸ் அட்மிட் ஆகுறாங்க”
“உடனே சி செக்சன் பண்ணிடமாட்டாங்கதானே?”
“ஜனனி மேடம் ரொம்ப நியாயமானவங்க. சுகப்பிரவசத்துக்கு முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ண வைப்பாங்க. முடியாத பட்சத்துல இண்டியூஸ்ட் லேபருக்கு முயற்சி பண்ணுவாங்க. அதுலயும் முடியலனாதான் சி செக்சனுக்கு எழுதி குடுப்பாங்க”
சொல்லிக்கொண்டே போன சுமதியின் பார்வையில் திடுமெனக் குறும்பு கூடியது.
“நீ ஒன்னும் கவலைப்படாத தேவா. உனக்குச் சிசேரியனா இருந்தாலும் சுகப்பிரவசமா இருந்தாலும் செலவு இல்ல. நம்ம ஹாஸ்பிட்டல்ல உனக்கு ஃப்ரீ டெலிவரி உண்டு” “போடி இவளே!” வெட்கத்தை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் தேவயானி. கன்னங்களில் ஏறிய செந்தூரச்சிவப்போடு கல்யாணக்கனவுகளில் ஆழ்ந்து போனாள் அவள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

