
கி.பி ஏழாம் நூற்றாண்டு...
மூவேந்தர்களின் ஆட்சியினின்று விடுபட்டு தமிழகத்தில் பல்லவர்களின் கொடி பறந்த சமயம். செல்வத்திற்கும், கலைக்கும், கல்விக்கும் பெயர் பெற்ற அவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தின் பெருங்குடிமக்கள் வசிக்கும் அரண்மனைகள் நிறைந்த பகுதியில் கம்பீரமாக நின்றது அம்மாளிகை.
குற்றேவல் செய்யும் பணியாளர்கள், சேடிப்பெண்கள், பாதுகாப்பு வீரர்கள் என ஜெகஜோதியாக இயங்கி கொண்டிருந்த அம்மாளிகையின் தலைவர் காஞ்சியின் பெருவணிகராவார்.
அவர்களின் ஒரே செல்வமகள் அந்த மாளிகையின் நந்தவனத்தில் இருந்த தடாகத்தின் அருகே தோழிப்பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்தாள். அவள் மதுரவல்லி. மற்ற பெருங்குடிப்பெண்டிரை போல கேளிக்கை விளையாட்டுகளில் நேரம் கழிப்பதில் ஆர்வமற்றவள். தந்தையின் அன்பை சாக்காக வைத்துக்கொண்டு போர்க்கலைகளை கற்றுத் தேர்ந்தவளுக்கு இருக்கும் ஒரே ஒரு விருப்பம் நிறைய தூர தேசங்களுக்கு செல்லவேண்டுமென்பதே!
“மன்னர் நரசிம்மவர்மரின் அவைக்கு சிறப்புவிருந்தினராக ஒரு பௌத்த துறவி வந்துள்ளாராம். அவர் எத்தனையோ காத தூரம் பயணித்து காஞ்சியை அடைந்துள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்”
“அவர் கல்வி கேள்விகளின் தேர்ச்சி பெற்றவராம். பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும் சமஸ்கிருதத்தை முறையாகக் கற்று தேர்ந்தவர் என அரண்மனை பண்டிதர்களே கூறுகிறார்கள் தேவி”
இவையனைத்தையும் செவிமடுத்தவள் “ஹூம்! இவ்வளவு தூரம் பிரயாணம் செய்வதற்கு முக்கியக்காரணம் அவர் ஒரு ஆண்மகன்.... நம்மை போன்ற பெண்டிருக்கு இந்த அரண்மனையின் மதில்கள் தான் எல்லை... அரண்மனை உப்பரிகையில் நின்று மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதிலேயே நம் காலம் முடிந்துவிடுமா?” என்று ஏக்கத்துடன் சொல்லி பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
அந்தத் தோழிப்பெண்கள் அனைவரையும் மாளிகைக்குள் செல்லுமாறு பணித்தவள் நெருங்கிய தோழியான சத்தியவதியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டாள்.
“அந்த துறவியைப் பற்றி உனக்கு வேறு ஏதேனும் தகவல் தெரியுமா சத்தியவதி?”
“அவரது நாமம் யுவான் சுவாங் என்கிறார்கள் மதுரவல்லி... அவரது தேசத்தின் மன்னர் அவரது வருகையைத் தடுக்க பெருமுயற்சி செய்தார், அதை முறியடித்து சில பௌத்த வீரர்கள் துணையுடன் நாட்டின் எல்லையைத் தாண்டிவிட்டதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்”
மீண்டும் மதுரவல்லியால் பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது. சத்தியவதியையும் உள்ளே அனுப்பிவிட்டு பொய்கையின் கரையில் அமர்ந்து மறையும் கதிரவனின் அழகை அவள் ரசித்த நேரத்தில் தான் அந்நிகழ்வு நடந்தது.
யாரோ அந்த நந்தவனத்தில் தட்தட்டென்ற காலடிகளுடன் ஓடும் சத்தம் தான் அது. அவளது கரங்கள் இடையில் இவ்வளவு நாட்கள் உறங்கிக்கொண்டிருந்த குறுவாளைத் தடவிக்கொண்டது.
பொய்கை அருகில் இருந்த புதரில் மறைந்திருந்தவள் அங்கே ஓடிவந்தவனை பின்னே இருந்து பிடித்துக்கொண்டு தனது குறுவாளை அவனது கழுத்தில் பதித்தாள்.
“எவ்வளவு தைரியம் இருந்தால் பெருவணிகரின் மாளிகை அந்தப்புரத்துக்குள் அத்துமீறி நுழைவாய்? திரும்பு..ம்ம்” என்று மிரட்டவும் அவன் மெதுவாக திரும்பினான்.
ஆஜானுபாகுவான உயரம். மிகவும் சிறிய கண்கள், சிவந்த மேனி, தலையை மறைத்து அணிந்திருந்த துணியும் அவனது கழுத்து முதல் கால் வரை மறைத்திருந்த துணியும் அவன் அன்னியதேசத்தினன் என்பதை சொல்லாமல் சொன்னது.
அத்தோடு அவனது முதுகிலிருந்த மரக்கூடையில் உறங்கிக்கொண்டிருந்த அம்புகளும், அவன் பிடித்திருந்த மரத்தினாலான வில்லும் அவன் தலை சிறந்த வில்லாளி என்பதை உணர்த்த மதுரவல்லி புருவம் உயர்த்தி “நீவிர் யார் ஐயா?” என தனக்கே உரித்தான கம்பீரத்துடன் அவனது வீரத்துக்கு மரியாதை கொடுத்து வினவினாள்.
அந்த வில்வீரனின் விழிகளும் தன்னெதிரே நின்ற எழில்வண்ண பாவையைத் தான் நோக்கிக் கொண்டிருந்தது. எத்தனையோ தேசங்களில் எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் இந்தக் கம்பீரம் துளங்கும் வதனத்தின் பேரெழில் வேறெந்த பெண்ணுக்கும் இருந்ததில்லை. தனது வில்லையும் அம்பையும் பார்த்தபின்னர் அந்த குறுவாள் அழகி பயந்து போவாள் என நம்பியவனுக்கு அவனது வீரத்துக்கு மரியாதை அளித்தாலும் குறுவாளை இன்னும் விலக்காத அவளின் தைரியம் பிடித்திருந்தது.
எனவே அவன் கற்ற தமிழில் தட்டுத்தடுமாறி பேச ஆரம்பித்தான்.
“நான் காஞ்சியின் கடைவீதிகளை பார்வையிட்ட நேரத்தின் எனது கட்டாரியை ஒரு திருடன் பறித்துக்கொண்டான்... அவனைத் துரத்தியபோது வழி தவறி தங்களின் நந்தவனத்துக்குள் நுழைந்துவிட்டேன்”
அவனது தமிழைக் கேட்டு நகைக்க விரும்பினாலும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள் மதுரவல்லி.
மன்னர் நரசிம்மவர்மரின் அரசாட்சியில் திருடனா? இந்த வெளிநாட்டினன் பொய்யுரைக்கிறான்.
குறுவாளின் பிடியை இன்னும் இறுக்கியவள் “யாரிடம் பொய் உரைக்கிறீர்? எங்கள் மன்னரின் ஆட்சியில் திருடும் எண்ணம் யாருக்கும் வராது... உண்மையை சொன்னால் உமக்கு உயிராவது மிஞ்சும்” என்றாள் கடுமையாக.
அவளது பேச்சில் அந்த வீரனின் சின்ன கண்கள் பளிச்சிட்டு அடங்கியது.
“நான் ஏன் பொய்யுரைக்கப் போகிறேன் தேவி? நான் குரு யுவான் சுவாங்குடன் நாட்டின் எல்லையைக் கடக்கு போதே பொய்யுரைக்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்துவிட்டுத் தான் வந்துள்ளேன்”
யுவான் சுவாங்கின் பெயரைக் கேட்டதும் மதுரவல்லி குறுவாளை விலக்கிக் கொண்டாள். அவருடன் வந்த வீரர்களுள் ஒருவனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் இவன் அனைத்து தேசங்களையும் பார்த்திருப்பான்!
ஆர்வத்துடன் “நீவிர் கூறுவது...” என ஆரம்பித்தவளின் பேச்சில் இடையிட்டான் அவன்.
“நான் டாங் வம்சத்தின் மிகச்சிறந்த வில்வீரனான ஷான் ஜூவான். மன்னர் டைஷாங்கின் காவற்படை வீரன். குரு யுவான் சுவாங்குடன் சேர்ந்து பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இப்போது நாங்கள் காஞ்சியில் உள்ள பௌத்தவிகாரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம் தேவி”
அவன் சொன்ன தகவல்களைக் கேட்டதும் மதுரவல்லி எப்பேர்ப்பட்ட வீரனை சந்தேகித்திருக்கிறோம் என வருந்தியவள் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
“பேரழகு கன்னிகையின் மன்னிப்பை நான் ஏன் ஏற்காமலிருக்க முடியுமா? உங்களை நான் மன்னித்துவிட்டேன் தேவி... தயை கூர்ந்து உங்கள் பாதுகாவலர்களின் கண்ணில் படாமல் நான் வெளியேற உதவுங்கள்” என்றான் அவன்.
புன்முறுவலுடன் மற்றைய வீரர்களின் கண்ணுக்கு மறைவாக இருந்த சுரங்கப்பாதையைக் காட்டியவள் “இது காஞ்சிநகரின் எல்லையில் சென்று முடிவடையும் ஐயா... தாங்கள் சென்றுவிடுவீர்கள் தானே?” என ஐயத்துடன் சீண்ட
“பெரும் பாலைவனங்களையும், பனி சூழ்ந்த மலைகளையும் கடந்த எனக்கு இந்த சுரங்கப்பாதை பெரிய விசயமல்ல தேவி. சென்று வருகிறேன்” என விடைபெற்றான் அவன்.
அவன் சென்று சில மணிநேரங்களுக்கு மதுரவல்லிக்கு அவனது நியாபகமே.
அதன் பின்னர் நாட்கள் கழிய ஒரு நள்ளிரவில் அதே ஷான் ஜூவான் காயத்துடன் அந்தச் சுரங்கப்பாதைக்குள் வந்து சேர்ந்தான். முதுகில் கட்டாரி வெட்டிய காயத்தில் இரத்தம் பீறிட்டது.
அவன் நந்தவனத்துக்குள் நுழைந்தவன் அரண்மனைக்குள் அடியெடுத்துவைத்தான். பல்லவதேசத்திற்கெதிராக சதி செய்த ஒற்றர்களிடம் இருந்து தப்பியவனின் முதுகை கட்டாரி பதம் பார்த்துவிட மிகச் சிரமத்துடன் அந்தச் சுரங்கப்பாதையை அடைந்தவன் எப்படியோ பெருவணிகரின் மாளிகைக்குள் நுழைந்துவிட்டான்.
அவன் நுழைந்த அறை மதுரவல்லியுடையது. அவள் திடீரென எழுந்த சத்தத்தில் விழித்துக்கொண்டவள் வீரர்களை அழைக்க முயன்றபடியே விளக்கை ஏற்றினாள்.
விளக்கின் ஒளியில் தான் அவள் ஷான் ஜூவானைக் கண்டுகொண்டாள். பதறியபடி சரிந்துவிழுந்தவனை தாங்கிக் கொண்டவள் அவனது முதுகில் கசிந்த உதிரத்தைப் பார்த்ததும் “நீவிர் எல்லாம் என்ன வீரர் ஐயா? புறமுதுகிட்டு ஓடிவந்ததற்கு அங்கேயே இறந்திருக்கலாம்” என கடிந்துகொள்ள அவனோ அவளது கரங்களில் ஓலைச்சுருள் ஒன்றை திணித்துவிட்டு
“இதை நரசிம்மவர்ம பல்லவரின் அரண்மனையில் சேர்ப்பிக்க ஓடிவரும் போது எனது கட்டாரியாலேயே என்னை அந்த ஒற்றன் பதம் பார்த்துவிட்டான் தேவி” என்றான் வலியால் வந்த வேதனையை மறைத்தபடியே.
மதுரவல்லி அந்த ஓலைச்சுருளை ஓரமாக வைத்தவள் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறையில் துயிலும் சத்தியவதியை எழுப்பச் சென்றாள். அவள் பச்சிலை வைத்தியத்தில் கைதேர்ந்தவள். அத்தோடு கைவசம் மருத்துவம் செய்வதற்கான பொருட்களை வைத்திருப்பவள். அவள் நினைத்தால் ஷான் ஜூவானை காக்க முடியும்.
அவளை எழுப்பியவள் சுருக்கமாக விசயத்தைச் சொல்லி அழைத்துவந்தாள். சத்தியவதியும் மதுரவல்லியின் படுக்கையில் சரிந்திருந்த ஷான் ஜூவானுக்குப் பச்சிலை அரைத்துக் கட்டு போட்டுவிட்டு “தேவி இரண்டு யாமங்களுக்கு இவ்வீரர் கண்ணுறங்க கூடாது. அப்போது தான் பச்சிலை வேலை செய்யும்” என்றாள்.
“நான் பார்த்துக்கொள்கிறேன் சத்தியவதி. இவர் இங்கே இருப்பது யாருக்கும் தெரியவேண்டாம்” என்றாள் மதுரவல்லி.
அவளும் தலையசைத்து விடைபெற்றாள். அதன் பின்னர் அவனை உறங்கவிடாமல் செய்ய அவனது பிரயாணக்கதைகளைப் பேச ஆரம்பித்தாள்.
ஷான் ஜுவானும் ஆர்வத்துடன் தாங்கள் கடந்து வந்த பாதையை விவரித்தவன் “எப்போது தாய்மண்ணை மிதிப்போம் என காத்திருக்கிறேன் தேவி” என்றான் முடிவில்.
“உங்களின் குடும்பத்தினர் அங்குள்ளனரா ஐயா?”
“தெரியவில்லை. பிரயாணத்தில் எத்தனை வருடங்கள் கழிந்ததோ கணக்கில் எடுத்ததில்லை. அதனால் எனது குடும்பத்தினரின் நிலையைப் பற்றி நானறியேன்”
“வீரரே...”
“ஷான் ஜுவான்... அது தான் எனது நாமம்”
“ச..சா... உங்கள் பெயரை உச்சரிக்க என்னால் இயலவில்லை வீரரே. அதை எம் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன பொருள்?”
“ஷான் ஜூவான் என்பது எங்கள் மொழியில் சந்திரனைக் குறிக்கும் தேவி. முழுமதி என்றும் அர்த்தம் கொள்ளலாம்”
“மதி... அவ்வாறே நான் உம்மை அழைக்கிறேன்” என்றாள் அவள் புன்சிரிப்புடன்.
அவளது புன்னகையில் அவனது மதி மயங்கியது என்னவோ உண்மை. திடீரென அவன் அமைதியுறவும் “என்னவாயிற்று வீரரே? ஏன் அமைதியுற்று விட்டீர்? எங்கேனும் வலிக்கிறதா?” என வினவியபடி படுக்கையில் அமர்ந்த மதுரவல்லியின் விழிகளின் நிறைந்த கலவரம் அவனுக்கு ஆயிரம் கதைகள் சொல்ல இல்லையென மறுத்தான் ஷான் ஜூவான்.
“அத்துணை வலியும் தங்களின் கரம் பட்டதும் பறந்தோடிப்போனது தேவி” என்றவன் தனது தோளில் பதிந்திருந்த அவளின் கரத்தைக் குறிப்பாகப் பார்க்க மதுரவல்லியின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.
சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தவள் “இரண்டு யாமம் கழிந்துவிட்டது. நீவிர் இனி உறங்கலாம்” என விலக முயல அவளின் கரத்தைப் பற்றியிருந்தான் அவன்.
அவனது தீண்டலில் அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பெண்மை விழித்துக்கொண்டது. எந்த ஆடவனையும் தள்ளி நில் என பார்வையிலேயே விலக்கி வைப்பவள், ஆண்களுக்கு நிகராகப் போர்க்கலைகளைப் பயின்ற அம்மடந்தையின் மனதில் அக்கணத்தில் அந்த வெளிநாட்டினன் மீது உண்டான காதல் அப்பழுக்கற்றது.
கண்கள் காதலில் கனிய அவனருகே அமர்ந்தவள் “நீவிர் காயப்பட்டிருக்கிறீர் ஐயா! உடல்நலம் தேறட்டும். உமது ஓலைச்சுருளை நீவிரே மன்னர் வசம் ஒப்படையும்” என்றாள் தண்மையாக.
“அதன் பிற்பாடு?” என அவன் கேள்வியாக நோக்க
“நீவிர் உமது தாய்மண்ணுக்குத் திரும்பும் நாளில் என்னையும் அழைத்துச் செல்வீராக! உமது மனையாளாக!” என்று சொல்லிவிட்டு நாணத்துடன் தலைகவிழ்ந்தாள் அவள்.
ஷான் ஜூவான் அக்காரிகையின் காதலை வென்ற மகிழ்ச்சியில் கண் மூடிக்கொண்டான்.
அங்கிருந்த நாட்களில் மதுரவல்லியின் காதலும் சத்தியவதி மருந்துகளும் அவன் ஜீவனை காத்தது.
மதுரவல்லி சொன்னபடியே அவனே நரசிம்மவர்ம பல்லவரிடம் அந்த ஓலைச்சுருளை ஒப்படைத்தான்.
மன்னரும் உவகையுடன் “உனக்கு இதற்கு கைமாறாக என்ன வேண்டுமென கூறு வீரனே” என கேட்க
“நான் எனது தாய்மண்ணுக்குத் திரும்ப விரும்புகிறேன் மாமன்னரே. குருவின் அனுமதியும் கிடைத்துவிட்டது. எனக்கு ஒரு மரக்கலம் மட்டும் வழங்கினால் சமுத்திரமார்க்கமாக என் தேசத்தை அடைவேன்” என்றான் ஷான் ஜூவான்.
நரசிம்மவர்ம பல்லவரும் அவனுக்கு மரக்கலத்தோடு பணியாட்களையும் அளிக்கும்படி ஆணையிட அவரை வணங்கி விடைபெற்றவன் மதுரவல்லியை நந்தவனத்தில் சந்தித்தான்.
“நான் இன்று மாலையிலேயே நாவாயை கிளப்பச் சொல்லுகிறேன் மதுரவல்லி. நீயும் என்னுடன் வருவாய் அல்லவா?”
அவளின் கண்கள் பனித்தது. தாய் தந்தையர், தோழியர், இந்த காஞ்சிமாநகரம் அனைத்தையும் பிரிந்து செல்லும் முன்னர் அவள் மனம் கலங்கினாள்.
ஆனால் விரும்பியவனுடன் வாழ உடன்போக்கு மேற்கொள்வதை சங்கப்பாடல்களில் அவளே கற்றறிந்திருக்கிறாள். தந்தையும் தாயும் கட்டாயம் வெளிநாட்டினனை தனது கணவனாக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே மனதை தேற்றிக்கொண்டவள்
“எத்தனை ஜென்மமாயினும் உம்மை நான் தொடர்வேன் மதி” என்றாள் காதலுடன்.
அவன் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுவிட மதுரவல்லி தாய் தந்தையரிடம் ஆசி பெற்றாள். பின்னர் வீட்டிலிருந்த கோயிலில் சிவபெருமானை வணங்கியவள் மாலை மங்கும் நேரத்தில் சுரங்கப்பாதை வழியே வெளியேறி காஞ்சியின் எல்லையை அடைந்தாள். அங்கே அவளுக்காக காத்திருந்த ஷான் ஜூவானின் குதிரையில் ஏறியவள் “மல்லைக்கு செல்ல இன்னும் எவ்வளவு நாழி ஆகும்?” என வினவ
“நீ என்னுடன் இருக்கிறாய் அல்லவா! கண் இமைப்பதற்குள் புரவி கடல் மல்லையை அடைந்துவிடும்” என்று ஷான் ஜூவான் சொல்ல இருவரின் சிரிப்பொலியுடன் அந்தப் புரவி புயல் வேகத்தில் மாமல்லபுரத்தை நோக்கி பறந்தோடியது.
கடற்கரையில் மரக்கலம் அவர்களுக்காக காத்திருந்தது. இருவரும் புரவியை நீங்கி அதில் ஏறினர். மரக்கலம் கடலில் செல்ல ஆரம்பித்த தருணத்தில் அதன் மேற்பகுதியில் விரிந்திருந்த பாய் விரிய பரந்த கடலைப் பார்த்தபடி நின்றிருந்த மதுரவல்லியுடன் உரையாடிக்கொண்டிருந்தான் ஷான் ஜூவான்.
“என் தாய்மண்ணை அடைந்ததும் எங்கள் வழக்கப்படி நாம் மணமுடித்துக்கொள்வோம் மதுரா”
அவள் கன்னம் குழிய புன்னகைத்தவள் “தங்கள் சித்தப்படியே மதி” என்று சொன்னவண்ணம் அவனை அணைத்துக்கொண்டாள்.
இருவரும் அவர்களின் காதலை உணர்ந்த அத்தருணத்தில் ஷான் ஜூவான் தனது மார்பில் ஏதோ துளைப்பது போல உணர்ந்தான். அவனது கரங்கள் மதுரவல்லியின் முதுகைத் தடவ அங்கே உதிரத்துடன் ஈரத்துடன் தட்டுப்பட்டது ஒரு அம்பின் கூரிய நுனி.
அடுத்த கணம் மதுரவல்லியும் கலவரத்துடன் நிமிர்ந்தவள் தங்கள் இருவரையும் துளைத்திருந்த அம்பைக் கண்டு அதிர்ந்தாள். இதயத்தை ஊடுருவிச் செல்லும் வலியுடன் “மதி” என்றவளின் கரங்கள் அவனது பரந்த முதுகைத் தடவ அங்கே குத்தி நின்றது அம்பு.
அந்த ஒற்றை அம்பு இருவரையும் துளைத்ததைக் கண்டு அவர்களோடு மரக்கலத்தின் பணியாட்களும் அதிர்ந்து போய் நிற்க வில்லுடன் உதயமானான் கொடூரன் ஒருவன்.
“எனது ஓலையைப் பறித்த அன்றே உன் உயிரை எடுத்திருக்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டதன் பலனாகத் தான் நரசிம்மவர்மனிடம் எங்கள் குழு சிக்கிக்கொண்டது. இதோ உன் உயிரைக் குடித்த இந்த அம்பில் நான் தடவிய நஞ்சு இந்நேரம் உங்கள் இருவரின் உதிரத்திலும் சங்கமித்திருக்கும். காதலியுடன் தாய்மண்ணில் வாழ நினைத்த வாழ்க்கையை எமலோகத்தின் சென்று வாழ்வாயடா” என வெஞ்சினத்துடன் உரைத்தவனை கப்பலின் வீரர்கள் பிடித்துக்கொள்ள அவனோ ஒரு கட்டாரியால் தன்னைத் தானே குத்திக்கொண்டு சாய்ந்தான்.
இவ்வளவையும் உயிர் போகும் வலியுடன் கேட்டுக்கொண்டிருந்த ஷான் ஜூவான் மதுரவல்லியின் கரத்தைப் பற்றிக்கொண்டான்.
“என்னை மன்னித்துவிடு மதுரா. இந்த மரக்கலத்திற்கு உன்னோடு மரணத்தையும் சேர்த்தே அழைத்துவந்துவிட்டேனே. என் மரணம் உன்னையும் குடிக்க காரணமான இந்த பாவியை மன்னித்துவிடு”
சொல்லும் போதே மூச்சிரைக்க தங்களை நெருங்க முயன்ற ஊழியர்களைத் தடுத்தான்.
மதுரவல்லி வேதனையோடு வாயிலிருந்து வழிந்த உதிரத்தைத் துடைத்துக்கொண்டவள் “நான் உமக்கு வாக்களித்திருந்தேன் அல்லவா! நீவிர் எங்கே சென்றாலும் உம்மைத் தொடர்வேன் என்று. அதைக் காத்த மகிழ்ச்சியில் உயிரை உம்முடன் சேர்ந்து துறப்பதில் நான் கர்வம் கொள்கிறேன். மீண்டும் கூறுகிறேன், எத்தனை ஜென்மமாயினும் நான் உம்மை தேடி வருவேன் மதி” என்றவளைப் பார்த்தவனின் கண்கள் ஜொலிக்க அடுத்த நொடியே அவை நிலைகுத்திப் போயின.
அந்த வில்வீரனின் உடல் மரக்கலத்தில் சரிய மதுரவல்லியும் அவனோடு சேர்ந்து சரிந்தவள் கடைசிமுறையாக அவனது பெயரை உச்சரித்தாள்.
“மதி!” அடுத்த நொடி பெரும்வலியொன்று தாக்க அவள் கண்களில் இருள் ஆட்சி செய்ய காதலுடன் சேர்ந்து மரணதேவதையை அரவணைத்துக்கொண்டாள் அந்தக் காரிகை.
கண்களுக்குள் மசமசவென்ற இருள்! மார்பைத் துளைக்கும் வலி! அத்தோடு வியர்வை வழிய “மதி” என்று கத்தியபடி எழுந்தாள் அவள். அவளது விழிகள் தான் இருந்த இடத்தை ஆராய்ந்தது.
அது அவளது படுக்கையறை. ஏசி தனது கடமையைச் செய்து கொண்டிருந்தாலும் அவள் நெற்றியில் வியர்வைப்பூக்கள். உடனே அவசரமாக தனது மொபைலை எடுத்து தேதி பார்த்தாள்.
அக்டோபர் 3, 2019!
எத்தனை நாட்கள் தான் இந்தக் கனவுடன் வாழ்வது! வழக்கமாக வரும் கனவு தான். ஆனால் இன்று தான் அந்தப்பெண்ணும் ஆடவனும் அவள் கண்ணுக்கு முழு உருவமாக தெரிந்தனர்.
இத்தனை நாட்கள் மங்கலாக வந்து கலையும் கனவு இன்று திரைப்படம் போல தெள்ளத்தெளிவாக ஓடியது ஏன்?
அதிலும் அந்தப் பெண் தன்னைப் போலவே இருந்தாள்! எதுவும் புரியவில்லை அவளுக்கு!
அப்போது “மது எழுந்திருச்சிட்டியாடி?” என்றபடி அந்த அறைக்குள் வந்தாள் அவளது தோழி சத்யா.
வியர்வை வழிய அவள் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு என்னவோ ஏதோ என பதறியவள் அவளருகே சென்று அமர்ந்தாள்.
“இன்னைக்கும் அந்தக் கனவு வந்துச்சுடி... அதுல அந்தப் பொண்ணும் அவ காதலிச்சவனும் கப்பல்ல போறப்போவே செத்துட்டாங்க... அந்தப் பொண்ணு என்னை மாதிரியே இருந்தா... அவ நேம் மதுரவல்லி”
சத்யா தனது தோழியைக் கடுப்புடன் நோக்கியவள் “மண்ணாங்கட்டி... அடியே நீ மதுவந்தி... என்னோட ஃப்ரெண்ட்... நம்ம ரெண்டு பேரும் டெக்பார்க்ல ரெண்டு வருசமா ஒர்க் பண்ணுறோம்ங்கிற பேர்ல இந்தச் சிங்கார சென்னைல குப்பை கொட்டுறோம்... நீ அடிக்கடி மகதீரா, அருந்ததி, அனேகன் மாதிரி மூவி பாக்குறதால உனக்கு கனவுலயும் முன்ஜென்மம் மாதிரி சீன்ஸ் வருது... இது எதுவுமே உண்மை இல்லடி... நீ ஒத்துக்க மாட்ட... இன்னைக்கு டாக்டர் வர்ஷாவ பாத்துடுவோம்” என்றாள் முடிவாக.
ஆனால் மதுவந்தியால் அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது கனவில் வந்த பெண் எத்தனை ஜென்மமாயினும் தனது சீனக்காதலனை தொடர்வேன் என்றாளே! அப்படி என்றால் தான் அவளது புனர்ஜென்மமா? அது உண்மை எனில் அந்த ஷான் ஜூவானும் பிறந்திருக்கவேண்டுமே!
யோசித்தாலே தலை வலித்தது அவளுக்கு. எனவே சத்யாவுடன் டாக்டர் வர்ஷாவைக் காணச் சென்றாள்.
டாக்டர் வர்ஷா, சைக்கியாடிரிஸ்ட் என்ற போர்டுடன் வரவேற்றவர் “மறுபடியும் கனவா மது?” என்று வினவ
“இல்ல டாக்டர்... இது கனவு இல்ல... என்னோட முன் ஜென்ம நினைவுகள்” என்றவள் அனைத்தையும் விளக்கினாள்.
ஆனால் சத்யாவோ வர்ஷாவோ அதை நம்பியது போல தெரியவில்லை.
“நீங்க நம்பல தானே... அது பல்லவா பீரியட்... யுவான் சுவாங் காஞ்சிபுரத்துக்கு வந்த நேரத்துல இவ்ளோவும் நடந்திருக்கு... அந்த ச... சா... ஷான் ஜுவான் அவன்....”
“அவனைப் பத்தி ஹிஸ்டரில எந்த ஆதாரமும் இல்ல மது” என்றார் வர்ஷா மறுப்பாக.
“நம்ம வரலாறு என்னைக்குமே சாமானியனைப் பத்தி பேசினது இல்லயே டாக்டர்... வரலாற்றை எழுதுனவங்களைப் பொறுத்தவரைக்கும் மதுரவல்லியும் ஷான் ஜுவானும் முக்கியமில்லாதவங்களா இருந்திருக்கலாம்... ஒரு வணிகனோட மகளுக்கும், வில்வீரனுக்கும் நடந்த அவலத்தை பதிவு பண்ண வரலாறு மறந்திருக்கலாமே”
ஆதங்கத்துடன் கேட்டவளுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பி வைத்தார் வர்ஷா.
மதுவந்தியும் பல்லைக் கடித்தபடி நான்கு நாட்களைக் கழித்துவிட்டாள். ஆனால் ஐந்தாம் நாள் மீண்டும் அந்தக் கனவோடு தான் விழித்தாள்.
விழிக்கும் போதே செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
“சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் மாமல்லபுர வருகை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும்”
அதைக் கேட்டபடியே குளித்துமுடித்தவள் வார இறுதி என்பதால் வழக்கம் போல சத்யாவுடன் ஊர் சுற்றக் கிளம்பினாள். இருவரும் போய் சேர்ந்த இடம் மகாபலிபுரம்.
சீன அதிபரின் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இருவரும் வழக்கம் போல சிலைகளையும் பாறையில் அமைந்த கோயில்களையும் பார்த்து ரசித்தவர்கள் அர்ஜூனன் தபசு என்று அழைக்கப்படும் நீண்ட பாறைச்சிற்பத்தை பார்த்துக்கொண்டிருந்த போது அந்நிகழ்வு நடந்தது.
ஒரு மனிதன் வேகமாக ஓடிவந்து மதுவந்தியின் மீது இடித்துக்கொள்ள அவன் கையிலிருந்து தவறி விழுந்தது ஒரு வாலட். கண்ணிமைக்கும் நொடிக்குள் அதை அவன் எடுக்க குனிவதற்குள் வாலட்டை எடுத்த மதுவந்தி தனது கராத்தேவால் அவனை செயலிழக்கச் செய்தாள்.
அப்போது “ப்ராவோ” என்று சீன உச்சரிப்போடு கேட்ட ஆங்கிலவார்த்தை அவளைத் திரும்பச் செய்தது.
திரும்பியவளின் எதிரே வந்து நின்றான் ஒரு சீனவாலிபன். பரந்த தோள்கள், கருத்த சிகை, சிறிய கண்கள், உதட்டில் உறைந்திருந்த புன்னகை, வெள்ளை வெளேர் என்ற நிறம். பார்மல் ஷேர்ட் மற்றும் பேண்டில் நின்றவனின் விழிகள் அவளது முகத்தில் ரசனையுடன் படிய மதுவந்தி மெதுவாக அவனிடம் “நம்ம முன்னாடியே பாத்திருக்கோமா?” என ஆங்கிலத்தில் வினவினாள்.
அவனும் புருவச்சுருக்கத்துடன் “எனக்கும் அப்பிடி தான் தோணுது... பட் நான் இப்போ தான் இந்தியாவுக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கேன்” என்று சொன்னபடியே அவளது முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.
மதுவந்திக்கு அப்போது தான் கனவு நியாபகத்துக்கு வந்தது. அதே முகம், அதே உயரம், ஆனால் உடைகள் மட்டுமே வேறுவிதம்! இவன் அவனே தான்!
மகிழ்ச்சியில் விகசித்த முகத்துடன் “ஹாய் ஐ அம் மதுவந்தி” என அவள் கைகுலுக்க நீட்ட அதை மகிழ்ச்சியுடன் பற்றிக்கொண்டவன் “ஐ அம் ஷான் ஜூவான்... சீனா பிரதமரோட மருத்துவ ஆலோசகன்” என்றான்.
இருவருக்கும் என்ன புரிந்ததோ ஆனால் ஒருவர் கையை மற்றொருவர் விடவில்லை. சத்யா இதை கவனித்துவிட்டு “மது நம்ம கிளம்புவோமா?” என்று கேட்க மதுவந்தி தனது கரத்தை விடுவித்துக்கொண்டாள்.
“சாரி ஐ ஹேவ் டூ கோ” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தான் ஷான் ஜூவான்.
“இட்ஸ் ஓகே! நான் இன்னும் டூ வீக்ஸ் இந்தியால ஐ மீன் சென்னைல தான் இருப்பேன்... ஷால் வீ மீட்?” என ஆவலுடன் கேட்டான்.
ஏன் கேட்கிறோம் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப்பெண் தனக்குப் பரிச்சயமானவள் என்று அவனது உள்ளம் சொன்னது.
“கண்டிப்பா மீட் பண்ணுவோம்” என்றவளின் மொபைலை வாங்கி தனது எண்ணுக்கு அழைத்துக்கொண்டவன் அவளது எண்ணைத் தனது மொபைலில் சேமித்தான் “மதுரா” என்ற பெயரில்.
அவளும் “மதி” என்றே சேமித்துக்கொண்டாள். இருவரின் அறிவுக்கு அப்பாற்பட்டு நடந்த காரியம் அது.
மதுவந்தி சத்யாவுடன் கிளம்ப ஷான் ஜூவான் மீண்டும் ஒரு முறை அவளிடம் புன்னகையுடன் கூறினான் “நீ எங்க போனாலும் நானும் வருவேன்... எத்தனை ஜென்மமா இருந்தாலும் உன்னைத் தேடி வருவேன்”
மதுவந்தி கையாட்டிவிட்டு விடைபெற்றாள். இவ்வளவையும் கண்ணுற்ற சத்யாவால் தோழி சொல்லியிருந்த வில்வீரன், வணிகன் மகள், முன்ஜென்மம், மறுஜென்மம் பற்றிய கதையை நம்ப முடியவில்லை என்றாலும் அதற்கு சாட்சியாய் நின்ற இருவரையும் மனதுக்குள் வியந்தபடி தோழியுடன் கிளம்பினாள், இந்த ஜென்மத்திலாவது அவர்களின் காதல் இணையட்டும் என்ற வேண்டுதலுடன்.
*************
ஹலோ மக்களே
இந்தக் கான்செப்ட் நான் மதுரமதிங்கிற நேம்ல பெரிய நாவலா எழுதுறதுக்கு 2019ல் யோசிச்சு வச்சது. டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணுறப்ப பிரதிலிபில முன்ஜென்ம கதை பத்தி ஒரு பிரச்சனை ஓடிட்டிருந்துச்சு. அதால இந்தக் கதைய டிராப் பண்ணிட்டேன்... அப்புறம் பிரதிலிபில தினசரி டாபிக்ல முன்ஜென்மம்னு தலைப்பு குடுத்தாங்க.. 22, ஜனவரி 2021ல் இந்தச் சிறுகதை அங்க எழுதுனேன்... எப்பிடியோ நான் கலெக்ட் பண்ணுன விவரங்கள் வீணாகல, அந்த திருப்தி போதும்!... இந்தத் தேதி விவரங்கள் சொல்லக் காரணம் 'அவங்க இப்பிடி எழுதுனாங்க', 'இவங்க அப்பிடி எழுதுனாங்க'னு யாரோடையும் என் பேரை இணைச்சு தேவையில்லாத ரூமர்ஸ் வரக்கூடாது என்பதே! ஓகே! அடுத்த வாரம் ஞாயிறு இன்னொரு சிறுகதையோட வர்றேன்! குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
- ஆனா, அவங்க ரெண்டு பேரும் இந்த ஜென்மத்துலயாவது சேர்ந்தாங்களா, இல்லையான்னு சொல்லவேயில்லையே..?
 இந்த ஜென்மத்துலயும் யாராவது குறுக்கே வந்திருந்தா...?CRVS (or) CRVS 2797 
Share your Reaction
இத இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாமே..
Share your Reaction
ஐயோ.... அவங்களுக்கு இந்த ஜென்மத்துலையும் அதே மாதிரி வேற ஏதாவது விபத்து வந்தால்???
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



