
பிறவித்துயர்
செயிண்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை....
ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் வெள்ளை சுடிதாரின் மீது அடர்பழுப்பு வண்ண கோட்டினை அணிந்து நேராய் நிமிர்ந்து ரவீந்திரநாத் தாகூரின் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வகுப்பினருக்குப் பின்னேயும் அவரவர் வகுப்பாசிரியைகள் அவர்களது சீருடையான ஆகாயநீலத்தில் சிறு சிறு கருப்பு வண்ண பூக்களிட்ட பூனம் சேலையில் அவர்களை பார்த்தபடி நேராக நின்றிருந்தனர்.
கடைசியில் வரும் “ஜயஹே ஜயஹே ஜய ஜய ஜய ஜயஹே”வை மட்டும் வெகு உற்சாகத்துடன் பாடி முடித்தவர்கள் அசெம்பிளி முடிந்து அவரவர் வகுப்புக்குச் செல்ல கலைந்தனர்.
ஏழாம் வகுப்பு மாணவியரின் பின்னே நடந்து சென்று கொண்டிருந்தாள் வசுந்தரா. அவள் ‘சி’ பிரிவினருக்கு வகுப்பாசிரியை.
மாணவிகள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டே செல்லவும் “கேர்ள்ஸ் சைலன்ஸ் ப்ளீஸ்” என்று சொன்னவாறு அவர்களோடு வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே வந்ததும் வகுப்புத்தலைவியைத் தேடியது அவளது விழிகள்.
“வேர் இஸ் பிரஹதி?”
அவளுடைய தோழியான சந்தோஷி இரட்டை ஜடை அசைய எழுந்து நின்றாள்.
“மிஸ் அவ இன்னைக்கு லேட்டா வந்திருக்கா... ஸ்கூல் கேட் பக்கத்துல பி.டி மிஸ் லேட்கம்மர்ஸ் கூட அவளையும் நிறுத்தி வச்சிருக்காங்க”
உடனே வசுந்தராவின் நெற்றியில் யோசனைக்கோடுகள்! பிரஹதி தான் அந்த வகுப்புத்தலைவி. பெரும்பாலான பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் முதல் தரம் எடுக்கும் மாணவியை வகுப்புத்தலைவியாக்கும் பழக்கம் தான் செயிண்ட் மேரீசிலும் கடைபிடிக்கப்பட்டது.
பிரஹதி படிப்பில் படு கெட்டி. கூடவே சமயோஜிதமான பெண்பிள்ளையும் கூட! அவளது பதிமூன்று வயதிற்கு உரித்தான துடுக்குத்தனத்துடன் சுறுசுறுப்பாய் வகுப்பாசிரியை கொடுக்கும் வேலைகளைச் செய்து பொறுப்பான வகுப்புத்தலைவியாக வலம் வருபவள்!
சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வருபவள் தேதி மாற்றும் வேலை, வகுப்பறை சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என கண்காணிக்கும் வேலை அனைத்தையும் பள்ளி அசெம்ப்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே முடித்துவிடுவாள்.
இன்று ஏனோ தாமதமாகி விட நேற்றைய தேதியுடன் கரும்பலகை வசுந்தராவை நோக்கி புன்னகைத்தது.
“ஓகே! சிட் டவுன்... ஷாலிகா கம் ஹியர்... ப்ளாக் போர்ட்ல டேட்டை சேஞ்ச் பண்ணிட்டு எத்தனை பேர் ப்ரசண்ட்னு மார்க் பண்ணிடு” என்று வசுந்தரா கட்டளையிடவும் இன்னொரு மாணவி எழுந்து வந்து கரும்பலகையின் மேல்பக்க வலது ஓரத்தில் போட்டிருந்த கட்டத்திலிருந்த தேதி என்ற இடத்தில் அன்றைய தேதியை எழுதினாள்.
அடுத்து வகுப்புக்கு வந்திருந்தவர்களை எண்ணியவள் முப்பத்தைந்து என எழுதப்போன தருணத்தில் “மே ஐ கம் இன் மிஸ்?” என்றபடி தோளில் மாட்டியிருந்த புத்தகப்பையின் இருபக்க வாரையும் கைககளால் சுரண்டியபடி முப்பத்து ஆறாவது மாணவியாக நின்று கொண்டிருந்தாள் பிரஹதி.
வசுந்தரா இது வரை அவள் தாமதமாக வந்ததில்லை என்பதால் கண்டிக்கவில்லை. ஏன் தாமதம் என்று மட்டும் கேட்டாள்.
“மேத்ஸ் மிஸ் இன்னைக்கு ஜாமெட்ரி வரையணும்னு சொன்னாங்க... என் கிட்ட ஜாமெட்ரி பாக்ஸ் இல்ல மிஸ்... அதை வாங்க கடைக்குப் போனப்ப கூட்டமா இருந்துச்சு... அதான் லேட் ஆயிட்டு” என்றாள் பிரஹதி சுரத்தற்ற குரலில் தலையைக் குனிந்தவண்ணம்.
வசுந்தரா அவளது பதிலை ஏற்றுக்கொண்டு உள்ளே அனுமதித்தாலும் என்னவோ சரியில்லை என அவளது மனம் முரண்டியது.
வகுப்பில் அனைத்து மாணவிகளும் வந்துவிட்டதால் வழக்கான ப்ரேயருடன் காலை வணக்கத்தைக் கூறிவிட்டு மாணவிகள் அமரவும் அலுவலகப்பணியாளர் வருகை பதிவேட்டுடன் வரவும் சரியாக இருந்தது.
அடுத்து வருகை பதிவேட்டில் பள்ளிக்கு வந்தவர்களையும் வராதவர்களையும் கணக்கெடுக்கும் வேலையை முடித்துவிட்டு அன்றைய பாட அட்டவணையில் முதல் வகுப்பான சமூக அறிவியலை எடுக்க ஆரம்பித்தாள் வசுந்தரா.
அன்றைய பிரிவு புவியியல் என்பதால் எரிமலைகள் பற்றி பாடம் நடைபெற ஆரம்பித்தது.
“வல்கனோ ஹேஸ் அ ரிசர்வயர் ஆப் மோல்டன் மெட்டீரியல் பிலோ த சர்ஃபேஸ்...” என்று எரிமலையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தவளின் கவனம் தன்னைக் கவனிக்காமல் ஜாமெட்ரி பாக்சை வெறித்துக் கொண்டிருந்த பிரஹதியின் மீது படிந்தது.
என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு? எப்போதும் வகுப்பில் கவனமாய் இருப்பாளே!
“வாட் ஆர் யூ டூயிங் பிரஹதி?”
வசுந்தரா போட்ட அதட்டலில் திடுக்கிட்டு மலங்க மலங்க விழித்தாள் பிரஹதி. பின்னர் சுதாரித்து எழுந்தவள் “சாரி மிஸ்” என்று இறங்கிய குரலில் கூற
“நீ இன்னைக்கு அப்நார்மலா பிஹேவ் பண்ணுற... எனிதிங் ராங்?” என்று வினவினாள் வசுந்தரா வகுப்பாசிரியையின் பொறுப்புடன்.
“நத்திங் மிஸ்” அவசரமாக மறுத்தாள் சிறுபெண்.
அவளை அமருமாறு பணித்தவள் பாடத்தைத் தொடர பிரஹதியும் அதன் பிற்பாடு பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அந்த வகுப்பு முடிந்ததும் பிரஹதியைக் கவனித்தவாறே சந்தோஷியைத் தன்னுடன் ஆசிரியைகளுக்கான அறைக்கு வரும்படி அழைத்துச் சென்றாள் வசுந்தரா.
அங்கே சென்று அவளது இருக்கையில் அமரந்தவள் தன் எதிரே நின்ற சந்தோஷியிடம் “பிரஹதிக்கு உடம்பு எதுவும் சரியில்லயா சந்தோஷி?” என்று ஆங்கிலத்தில் வினவ அச்சிறுபெண்ணோ உடனே ஆங்கிலத்தில் பதில் வராமல் விழித்தாள்.
மெதுவாய் புன்னகைத்த வசுந்தரா “இட்ஸ் ஓகே! இது கிளாஸ் ரூம் இல்ல... சோ தமிழ்லயே பேசு” என்கவும் உற்சாகமாக தலையாட்டியவள்
“அவ ஒன் வீக்கா இப்பிடி தான் இருக்கா மிஸ்... அவங்க வீட்டுக்குப் போனப்ப அவங்கம்மா அவளைத் திட்டிட்டே இருந்தாங்க... ஏன்னு கேட்டதுக்கு அவ எதுக்கெடுத்தாலும் ரொம்ப அடம்பிடிக்கிறானு சொன்னாங்க அந்த ஆன்ட்டி” என்றாள்.
வசுந்தரா யோசனையுடன் அவளை அனுப்பி வைத்துவிட்டு பிரஹதியைக் குறித்த யோசனையில் ஆழ்ந்தாள்.
பொதுவாக பெண் குழந்தைகள் பயிலும் பள்ளியில் இருக்கும் ஆசிரியைகள் அனைவருக்கும் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் பணி மட்டும் இருப்பதில்லை. அதிலும் வசுந்தராவைப் போல வளர் இளம் பருவத்தினருக்கு வகுப்பாசிரியைகளாக இருப்பவர்களுக்குக் கூடுதல் பொறுப்பாய் அவர்களது மனநலன் மற்றும் பழக்கவழக்கங்களை சீர்படுத்தும் வேலையும் இருக்கிறதே!
அப்போது பக்கத்து மேஜையை யாரோ இழுக்கும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தாள் வசுந்தரா. அங்கே மேஜையின் இழுப்பறையில் மாத தேர்வு விடைத்தாள்களை எடுத்துக் கொண்டிருந்தாள் மாலதி. வசுந்தராவின் வகுப்புக்கான கணித ஆசிரியை.
“மன்த்லி டெஸ்ட் பேப்பரை கரெக்ட் பண்ணிட்டியா மாலு?”
“நேத்தே திருத்திட்டேன் வசு... உன் கிளாஸ்ல எப்பவும் போல பிலோ ஃபிப்டி யாருமில்லப்பா... ஆனா உன் கிளாஸ் டாப்பர் கேர்ளோட ஸ்கோர் ரொம்ப கம்மி... எப்பவும் செண்டம் எடுக்குற பொண்ணு இந்தத் தடவை பிலோ செவண்டில நிக்குறா... வாட் ஹேப்பண்ட்? உன் கிளாஸ்ல அட்டென்சிவா இருக்குறாளா?”
பேச்சு பிரஹதியைக் குறித்து செல்லவும் வசுந்தரா குழம்பினாள்.
“என் கிளாஸ்லயும் எதையோ பறிகுடுத்த மாதிரி தான் பிஹேவ் பண்ணுறா மாலு... சம்திங் ஃபிஷி... பேசாம நாளைக்கு பேரண்ட்சை கூட்டிட்டு வரச் சொல்லிடலாமானு பாக்கேன்”
“தட்ஸ் அ குட் ஐடியா... இப்ப சின்னப்பசங்க டிப்ரஷன்ல விழுறது ஜாஸ்தி ஆகிடுச்சு... எஜூகேசன் சிஸ்டமும் அதுக்கு ஒரு காரணம் தான்... பட் அது மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது... வேற எதுவும் பிரச்சனையானு அவ பேரண்ட்சை விசாரிச்சா தான் தெரியும்”
“ம்ம்”
“சரி வசு... அடுத்து உன் கிளாஸுக்கு தான் போகப்போறேன்... இன்னைக்கு அல்ஜிப்ரா வேற... பசங்களுக்கு ஃபார்முலாவை விளக்குறதுக்குள்ள என் நாக்கு வெளிய வந்துடும்... டாட்டா”
“ம்ம்”
யோசனையில் உம் கொட்டியவள் திடீரென அதிர்ந்தாள். காலையில் பிரஹதி கூறியது காதில் ஒலித்தது.
“மேத்ஸ் மிஸ் இன்னைக்கு ஜாமெட்ரி வரையணும்னு சொன்னாங்க... என் கிட்ட ஜாமெட்ரி பாக்ஸ் இல்ல மிஸ்... அதை வாங்க கடைக்குப் போனப்ப கூட்டமா இருந்துச்சு... அதான் லேட் ஆயிட்டு”
மாலதி இன்றைய கணித வகுப்பில் இயற்கணிதம் தான் எடுக்கப் போவதாக கூறினாள். அதற்கு ஜாமெட்ரி பாக்ஸ் தேவைப்படாதே! இந்தப் பெண்ணுக்கு என்னவாயிற்று?
குழம்பித் தவித்த போதே எட்டாம் வகுப்பிற்கு அவள் செல்லவேண்டியது நினைவில் வரவும் சமூக அறிவியல் புத்தகத்துடன் கிளம்பினாள் வசுந்தரா.
அதே நேரம் ஏழாம் வகுப்பு ‘சி’ பிரிவில் பிரஹதி இன்னும் பிரமை பிடித்தவளைப் போல தான் அமர்ந்திருந்தாள்.
“(a+b+c)2 = a2+b2+c2+2ab+2bc+2ac” (ஸ்கொயர் என்று படிக்கவும்)
சத்தமாகக் கூறிவிட்டு அதற்கான விளக்கத்தை அளிக்க ஆரம்பித்தாள் மாலதி.
ஆனால் பிரஹதியின் செவியில் இது எதுவுமே விழவில்லை.
மாறாக “நான் சொன்னபடி கேட்டா உனக்கு ஆல்பன்லிபே வாங்கி தருவேன்... அதானே பிரஹதி பாப்பாக்குப் பிடிக்கும்” என்று கன்னத்தை வருடி கழுத்தைத் தடவி மார்பில் பதிந்த கரங்களுக்குச் சொந்தக்காரனின் குரல் கேட்டது.
கூடவே அவனது இச்சை வழியும் சிரிப்பும். ஆனால் அந்த பிஞ்சிற்கு அது எம்மாதிரி இச்சை என்று புரியவில்லை. ஏதோ தவறு என்று மட்டும் புரிந்தது. அவனது கரம் அவளது உடலில் ஊர்ந்த போது இரயில் பூச்சி நினைவு தான் வந்தது அச்சிறுமிக்கு.
மழை நேரத்தில் மட்டுமே வரும் அந்த கருப்பு வண்ணப்பூச்சியிடம் வீசும் துர்நாற்றம் என்றால் பிரஹதிக்கு அருவருப்பு. அதை கண்டாலே மயிர் கூச்செறியும். ஒருமுறை கடந்த காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குச் சென்ற சமயத்தில் பாட்டியுடன் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தபோது அந்தப் பூச்சி எப்படியோ அவள் கால் மீது ஏறி ஊர்ந்து போக திடும்மென காலைப் பார்த்தவள் வீலென்று அலறி ஓடியது இப்போது நடந்தது போல தோன்றியது அவளுக்கு.
இப்போது நடக்கும் செயல்களும் அப்பூச்சி ஊர்வதைப் போன்ற அருவருப்பை தான் அச்சிறுமிக்குக் கொடுத்தது. கூடவே மார்பகங்களும் காலையிலிருந்து வலித்தது.
இதற்கு ஒரு முடிவே கிடையாதா என்று நொந்து ஒடுங்கியவளுக்கு இருக்கிறதடி பெண்ணே என்று பதிலளிப்பது போல அவளது பெஞ்சிலிருந்து கீழே விழுந்தது ஜாமெட்ரி பாக்சோடு சேர்ந்து கூர்முனை கொண்ட டிவைடர் ஒன்று.
குனிந்து அதை எடுத்தவளை “அங்க என்ன சத்தம் பிரஹதி?” என்ற மாலதியின் குரல் அதட்டவும்
“சாரி மிஸ்” என்றபடி ஜாமெட்ரி பாக்சின் உபகரணங்களைப் பொறுக்கினாள்.
அனைத்தையும் உள்ளே வைத்தவள் டிவைடைரை மட்டும் சீருடை கோட்டின் வயிற்றுப்பகுதியில் இருந்த பையில் மறைத்துக் கொண்டாள்.
கணித வகுப்பு முடிந்ததும் பதினைந்து நிமிட இடைவேளைக்கான மணி அடித்தது.
“நாளைக்கு இந்த சம் எல்லாம் ஹோம் ஒர்க் நோட்ல ஒர்க் அவுட் பண்ணிருக்கணும்... நான் வந்ததும் செக் பண்ணுவேன்... இப்ப எல்லாரும் போகலாம்”
மாலதி வகுப்பை விட்டு வெளியேறியதும் சந்தோஷியைக் கூட அழைக்காது வேகமாக வெளியேறியவளின் கரம் கோட்டின் பையைத் தடவிக்கொண்டது.
கழிவறையை நோக்கி சென்றவளை “பிரஹதி” என்ற வசுந்தராவின் குரல் தடுத்து நிறுத்தியது.
பதற்றத்துடன் திரும்பி பார்த்தவளிடம் “டுமாரோ உன் பேரண்ட்ஸை கூட்டிட்டு வா... நான் அவங்களோட பேசணும்” என்றாள் வசுந்தரா.
பிரஹதியும் குழப்பத்துடன் தலையாட்டிவிட்டு கழிவறைக்குள் சென்றவள் கோட் பையிலிருந்த டிவைடரை எடுத்தாள்.
கண்களை இறுக மூடியபடி அதை தனது மணிக்கட்டை நோக்கி கொண்டு சென்றவள் வேகமாய் அதன் கூர்முனையால் கரத்தை கிழிக்கவிருந்த நேரத்தில் கதவு படபடவென தட்டப்பட்டது.
“எவ்ளோ நேரம் தான் உள்ளேயே இருப்பீங்க? சீக்கிரம் வெளிய வாங்க ப்ளீஸ்... நான் பேட் சேஞ்ச் பண்ணணும்”
யாரோ மாணவி ஒருத்தி அவசரத்தில் தட்டவும் வேறு வழியின்றி டிவைடரை மீண்டும் கோட் பையினுள் வைத்துவிட்டு கதவைத் திறந்து வெளியேறினாள்.
அப்படியே வகுப்பறைக்கு வெளியே இருந்த குல்மொஹர் மரத்தடியில் அமர்ந்த அச்சிறுமிக்கு அடுத்து என்ன செய்யவென்றே புரியாத நிலை. இடைவேளை முடிந்து வகுப்புக்குச் செல்ல மணியும் அடித்துவிட அடுத்தடுத்த வகுப்புகளிலும் இயந்திரம் போல அமர்ந்து பாடத்தைக் கவனித்தாள் பிரஹதி. மதியவுணவு இடைவேளைக்கு முந்தைய பகுதி நன்னெறி வகுப்புக்காக ஒதுக்கப்பட்டது.
அதை அவரவர் வகுப்பாசிரியைகளே எடுப்பது வழக்கம். எனவே மீண்டும் வசுந்தரா வகுப்பறைக்குள் நுழைய மாணவிகள் அவளுக்கு மதியவணக்கத்தைக் கோரஸாக கூற அவளும் தலையாட்டிவிட்டு அவளது நாற்காலியில் அமர்ந்தாள்.
“ஓகே கேர்ள்ஸ்... டுடே மாரல் கிளாசோட டாபிக் என்னனு நேத்தே சொல்லிருந்தேன்ல... யாருக்கு நியாபகம் இருக்கு?” என்று கேட்க
“குட் டச் அண்ட் பேட் டச் பத்தி கிளாஸ் எடுக்குறதா சொல்லிருந்தீங்க மிஸ்” என மீண்டும் கோரஸாக பதில் வந்தது.
“வெரி குட்... இன்னைக்கு நம்ம பாக்க போறது குட் டச் அண்ட் பேட் டச் பத்தி தான்... மனுசங்க தங்களோட உணர்வுகளை தொடுதல் மூலமா ஒருத்தருக்கொருத்தர் கடத்துறாங்க... ஃபார் எக்சாம்பிள், உங்க அம்மா அப்பா உங்களுக்கு பக்க பலமா இருக்குறதுக்கு அடையாளமா உங்களை ஹக் பண்ணுறது, தோள்ல தட்டிக் குடுக்குறது, தலைய வருடிக் குடுக்குறதுலாம் அவங்க உங்க மேல வச்சிருக்குற அன்பை உங்களுக்கு உணர்த்துறதுக்கான வழி... குட்டிப்பசங்களை அவங்கப்பா தோள் மேல தூக்கி வச்சு கொஞ்சுறது, கன்னத்துல முத்தம் குடுக்குறத பாத்திருக்கிங்கல்ல, அது அந்தக் குழந்தை மேல அப்பாவுக்கு இருக்குற அபரிமிதமான அன்போட வெளிப்பாடு...
இப்பிடி தான் டச் ஐ மீன் தொடுதல்ங்கிறது உணர்வுகளோட வெளிப்பாடு... அது எந்த மாதிரி உணர்வுகள்ங்கிறத பொறுத்து தான் அந்த டச், குட் டச்சா பேட் டச்சானு நம்ம முடிவு பண்ண முடியும்...
பொதுவா யார் நம்மளை அதிகமா டச் பண்ணுறதுனு யோசிச்சா அம்மா தான் நியாபகத்துக்கு வருவாங்க... நம்மளை மடில உக்கார வச்சிக்கிறது, தன்னோட சேர்த்து அணைச்சிக்கிறதுனு ரொம்ப வெளிப்படையா அன்பை காட்டுற அம்மாவோட செய்கைகள் குட் டச்சுக்கு உதாரணம்... இந்த லிஸ்ட்ல அப்பா, ஃப்ரெண்ட்சையும் சேர்த்துக்கலாம்... பொதுவா குட் டச் பண்ணுறவங்க எல்லார் முன்னாடியும் சாதாரணமா நடந்துப்பாங்க... பெரும்பாலும் தோள், கன்னம், கைய தான் அவங்க டச் பண்ணுவாங்க... முக்கியமா அவங்க டச் பண்ணுறப்ப நமக்கு வினோதமா ஃபீல் ஆகாது... அது நமக்குப் பழக்கப்பட்ட அன்பான தொடுகையா தான் இருக்கும்... உங்களுக்குத் தெரிஞ்ச குட் டச் பத்தி சொல்லுங்க பாப்போம்” என்றாள்.
உடனே ஒரு மாணவி எழுந்து “எங்க சித்தி பையனை நான் மடில உக்கார வச்சிக்கிட்டு முத்தா குடுப்பேன் மிஸ்... அது குட் டச் தானே?” என்று கேட்க
“ஆமா! அது உன் தம்பி மேல நீ வச்சிருக்குற அன்போட வெளிப்பாடு தர்ஷிணி... இன்னும் யாருக்குல்லாம் குட் டச்சுக்கு எக்சாம்பிள் தெரியும்?” என்று வசுந்தரா கேட்கவும் அடுத்தடுத்து மாணவிகள் எழுந்து உதாரணங்களை அடுக்கவும் அவளுக்குத் திருப்தியாக இருந்தது.
எது தீயது என்று நமக்குத் தெரிய வேண்டுமென்றால் முதலில் நல்லதை தெரிந்து கொண்டால் போதுமல்லவா! அதை தவிர்த்து மற்றைய அனைத்தும் தீயது என்று தன்னால் தெரிந்துவிடுமே!
“வாவ்! என்னோட ஸ்டூடண்ட்ஸ் இவ்ளோ புத்திசாலி பொண்ணுங்களா இருக்காங்களே! சரி! அடுத்து பேட் டச் பத்தி பாப்போம்... பொதுவா பேட் டச் பண்ணுறவங்க நமக்கு தெரிஞ்சவங்க முன்னாடி ஒரு மாதிரியும் அவங்க இல்லாத நேரத்துல ஒரு மாதிரியும் நம்ம கிட்ட பிஹேவ் பண்ணுவாங்க... ஃபார் எக்சாம்பிள், இப்போ உங்க பேரண்ட்ஸ் பக்கத்துல நீங்க இருந்தீங்கனா அவங்க உங்களை நார்மலா நடத்துற மாதிரி இருக்கும்... உங்க பேரண்ட்ஸ் இல்லாத நேரத்துல தனியா உங்கள மீட் பண்ணுறப்ப உங்க கிட்ட வித்தியாசமா நடந்துப்பாங்க...
தேவையில்லாம பக்கத்துல உக்கார்றது, கன்னம், கழுத்தை தொடுறது, அவசியமே இல்லாம மடியில உக்கார வச்சிருக்கிறது, கொஞ்சுறேன்ங்கிற பேர்ல உங்க உடல் பாகங்களை வலிக்குற அளவுக்கு அழுத்துறதுனு இதுக்கு உதாரணம் சொல்லிட்டே போகலாம்... முக்கியமா ப்ரைவேட் பார்ட்ஸ்சை தேவையில்லாம தொடவோ அழுத்தவோ செய்வாங்க, அதனால உங்களுக்கு பெயின் வருதுனு தெரிஞ்சாலும் நிறுத்த மாட்டாங்க... இந்த மாதிரியான தொடுகைகள் தான் பேட் டச்... இந்த மாதிரி அனுபவங்கள் உங்களுக்கு நடந்துச்சுனா நீங்க என்ன செய்யணும் தெரியுமா?” என்று கேட்டு விட்டு நிறுத்த மாணவிகளோ புரியாமல் விழித்தனர்.
வசுந்தரா அவர்களை தீர்க்கமாக நோக்கியவள் “முதல்ல பயப்படுறத நிறுத்தணும்... அந்த மாதிரி பேட் டச் பண்ணுறவங்களை பத்தி பேரண்ட்ஸ் கிட்டவோ ஸ்கூல்ல டீச்சர்ஸ் கிட்டவோ ஓப்பனா சொல்லிடணும்... அவங்க மிரட்டுனாங்கனா கண்டிப்பா பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிடணும்... ஒருத்தர் தொடர்ந்து உங்க கிட்ட மோசமா பிஹேவ் பண்ணுறார்னா அவரோட தனியா எங்கயும் போகக்கூடாது... சப்போஸ் தனியா நீங்க மாட்டிக்கிட்டிங்கனாலும் அவர் உங்களை தப்பா தொட முயற்சிக்கிறப்ப சத்தம் போட்டு கத்தணும்... வாய மூட வந்தா கடிச்சு வச்சிடணும்... எப்பவுமே ட்ரஸ்சுக்கு உள்ள சேப்டி பின் ஒன்னு மாட்டி வச்சிக்கணும்... இந்த மாதிரி தப்பா தொட முயற்சிக்கிறவங்களை அதால கிழிச்சிட்டு தப்பிக்கணும்... ஊக்கால குத்துறது ஒன்னும் கொலைபாதகம் இல்ல... நம்மளை தவறா கையாள நினைக்கிறவங்களை தாக்குறது தற்காப்பு தான்... புரியுதா?” என்று கேட்க அனைவரும் தலையாட்டினர்.
கூடவே சேர்ந்து பிரஹதியும் தலையாட்டி வைத்தாள். அவளுக்கு இப்போது என்னவோ புரிந்தது போல இருந்தது. அடிக்கடி கோட் பையிலிருந்த டிவைடரை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். மதியவுணவை சந்தோஷியுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.
அதன் பின்னர் நடந்த வகுப்புகளை கவனித்தாள். மாலை இடைவேளையில் பள்ளி கேண்டீனில் சமோசா வாங்கி சாப்பிட்டாள். மொத்தத்தில் காலையில் இருந்த சோகமான மனநிலை ஓரளவுக்கு மாறியிருந்தது.
மாலையில் பள்ளி முடிந்த பிறகு மிதிவண்டியுடன் வெளியேறியவளிடம் அவளது பெற்றோரின் எண்ணை வாங்கிக் கொண்டாள் வசுந்தரா.
“சிவன் கோவில் தெருவுல தான் உங்க வீடு இருக்குதா பிரஹதி?”
“ஆமா மிஸ்... இதுக்கு முன்னாடி கோட்டூர் ரோட்ல இருந்தோம்... இங்க வந்து ஒரு மாசம் ஆகுது... அப்பாக்கு மார்க்கெட்ல அரிசிக்கடை இருக்கு”
“ஓ! அம்மா என்ன பண்ணுறாங்க?”
“நாங்க மாடு வளக்குறோம் மிஸ்... அம்மா பால் கறந்து விப்பாங்க”
“பரவால்லயே! அம்மாவும் அப்பாவும் பிசினஸ் பீபிள்... அப்ப பிரஹதியும் வருங்காலத்துல பெரிய பிசினஸ் விமனா வருவா”
வசுந்தரா பாராட்டவும் முகம் மலர்ந்து சிரித்தவள் அவளிடம் விடைபெற்று கொண்டு சிவன் கோவில் தெருவை நோக்கி செல்லும் சாலையில் மாணவிகளோடு மாணவியாய் சைக்கிளை உருட்டத் துவங்கினாள். காலையிலேயே டயர் பங்சர் ஆகிவிட்டது!
அவள் நடந்து வந்து நின்ற இடம் சிலுவை போல பாதையைக் கொண்டது. அதன் தெற்கே பிரஹதி செல்ல வேண்டும். வடக்கே வசுந்தராவின் வீடு இருக்கும் பகுதி. மேற்கில் கடைத்தெருவும் கிழக்கில் அவர்களது பள்ளியும் இருக்கும்.
பெரும்பாலான மாணவிகள் கடைத்தெரு இருக்கும் வழியே சென்றுவிட பிரஹதி மட்டுமே சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்றாள். வசுந்தரா செல்பவளைப் பார்த்தபடி தனது பாதையில் நடக்கத் திரும்பியவள் திடீரென பிரஹதியின் பின்னே சென்ற ஒரு நடுத்தரவயதுக்காரனைக் கண்டதும் குழப்பத்தில் அங்கேயே நின்றுவிட்டாள்.
அந்த நபர் பிரஹதியின் தோளைத் தொடுவதையும் அவள் சங்கடத்தில் நெளிந்தபடி நடப்பதையும் கண்டவள் ஏதோ தவறாக இருக்கிறதே என்று எண்ணியவளாக மெதுவாக அவர்களறியா வண்ணம் தொடர்ந்து நடந்தாள்.
மறைந்து மறைந்து வந்தவளுக்குத் தெரிந்தவரை இத்துடன் ஆயிரம் முறையாவது அந்நபர் பிரஹதியின் தோள்பட்டை மற்றும் பின்பகுதியை வருடியிருப்பான்!
நேரம் மாலை நான்கு முப்பது தான். சூரியன் கூட மறையவில்லை. அந்தத் தெருவில் இத்தனைக்கும் அவ்வபோது ஆட்கள் நடமாடிக் கொண்டு தான் இருந்தனர். இவர்களில் ஒருவருக்குக் கூடவா அந்நபர் பிரஹதியைத் தொடுவது தவறாக படவில்லை?
கடுப்புடன் முன்னேறிய வசுந்தரா தானே சென்று கேட்டுவிடலாம் என்று எண்ணும் போது பிரஹதி ஒரு வீட்டின் முன்னே நின்று மிதிவண்டியை ஸ்டாண்ட் போட்டாள்.
அங்கே இன்னும் சில மிதிவண்டிகள் நிற்பதையும் ‘கவிமணி டியூசன்’ என்ற பலகை அதனருகே இருந்த தெருவிளக்கு கம்பத்தில் தொங்குவதையும் பார்த்துவிட்ட வசுந்தரா இங்கே டியூசன் படிக்க வந்துள்ளாள் போல என்று எண்ணி மீண்டும் அங்கே நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினாள்.
பிரஹதி நின்றதும் அந்நபரும் அங்கேயே நின்றுவிட அவள் அவரிடம் முகத்தைச் சுளித்தபடி ஏதோ மிரட்டுவது வசுந்தராவுக்குத் தெரிந்தது.
பேசிவிட்டு பிரஹதி அந்த வீட்டுக்குள் சென்றுவிட அந்நபரும் அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றுவிட்டான். உடனே வசுந்தராவுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது. வேகமாக நடந்து அந்த வீட்டின் கதவைத் தட்ட அது உட்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
“பிரஹதி கதவை திற... நான் வசு மிஸ் வந்திருக்கேன்”
கதவை உடைப்பது போல அவள் தட்ட ஆரம்பிக்க உள்ளே இருந்து “ஆ! அம்ம்மாஆஆஆ” என்று ஆண்குரல் ஒன்று அலறுவது கேட்டது.
அடுத்த நொடி தடதடவென ஷூ அணிந்த கால்கள் ஓடிவரும் சத்தமும் அதைத் தொடர்ந்து கதவின் தாழ்பாளை திறக்கும் சத்தமும் கேட்டது.
வசுந்தரா பதற்றத்துடன் கதவருகே நிற்கும் போதே கதவைத் திறந்த பிரஹதி கண்கள் கலங்க அவளை அணைத்துக் கொண்டாள். அவளது வலக்கரத்தில் இரத்தக்கறையுடன் இருந்தது இவ்வளவு மணி நேரம் கோட் பையில் குடியிருந்த டிவைடர்.
“மிஸ் அந்தாளு என்னை பேட் டச் பண்ணுனாரு... அதான் டிவைடரை வச்சு கையில கிழிச்சிட்டேன்... அங்க... அங்க... ரத்தம்”
விசும்பலுடன் கூறிய சிறுமியின் உடல் நடுங்கியது. பதிமூன்று வயதில் அவளுக்கு நேர்ந்த அதிர்ச்சி அப்படிப்பட்டது அல்லவா!
வசுந்தரா அவளது தோளில் தட்டிக்கொடுத்தவள் “அழாத! டியூசன் எங்க நடக்குது?” என்று வினவ
“இன்னும் ஆரம்பிக்கல மிஸ்... ஃபைவ் ஓ க்ளாக் தான் மணி சார் வருவாரு... மேல தான் டியூசன் நடக்கும்... இந்த கீழ்வீட்டுல யாருமே இல்ல... இங்க தான் பாத்ரூம் இருக்கு... அதான் மணி சார் சாவிய இந்த திண்டுல வச்சிருப்பாரு... கேர்ள்ஸ் மட்டும் இங்க இருக்குற பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாம்... நான் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் இங்க வந்து முகம் கழுவிட்டு உக்காந்திருப்பேன் மிஸ்... டியூசனுக்கு வர்ற மத்த பாய்ஸ்லாம் கேம் ஸ்டேசனுக்குப் போயிடுவாங்க... இங்க தினமும் நான் மட்டும் தான் சார் வரைக்கும் தனியா இருப்பேன்” என்றாள்.
குழந்தை தனியாய் இருப்பது தெரிந்தே வந்திருக்கிறான் அந்த மிருகம்!
“சரி நீ இங்கயே இரு... நான் அந்தாளுக்கு என்னாச்சுனு பாத்துட்டு வர்றேன்”
“வேண்டாம் மிஸ்... லிங்கம் சித்தப்பா ரொம்ப மோசம்... அங்க போனா உங்களையும் பேட் டச் பண்ணிடுவாரு”
அவள் அழ ஆரம்பிக்கவும் வசுந்தராவுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
“அவன் கைய உடைச்சு அடுப்புல வச்சிட்டு தான் மறுவேலை” என தனது ஆசிரியை பணி கொடுத்திருந்த நாசூக்கு நாகரிகங்களை களைந்து ரௌத்காரமானாள் வசுந்தரா.
பின்னர் தான் “சித்தப்பாவா? அந்தாளை உனக்குத் தெரியுமா?” என்று கேட்க
“எங்கப்பாவோட தூரத்து சொந்தம் மிஸ்... எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாரு... வீடு மாத்துறதுக்கு எங்களுக்கு ஹெல்ப் பண்ணுனது லிங்கம் சித்தப்பா தான்” என்று அழுதபடி கூறினாள் பிரஹதி.
அவர்கள் பேசும் போதே அந்நபர் இரத்தக்கோடுகளுடன் கூடிய கையை பிடித்தபடி வெளியே வர பிரஹதி வசுந்தராவின் முதுகுக்குப் பின்னே ஒடுங்கினாள்.
அவனது கண்களில் இச்சையுடன் சேர்ந்து தன்னை காயப்படுத்திய பிரஹதியைக் கொல்லும் வெறி! அதற்கு தடையாய் வசுந்தரா நிற்கவும் முகபாவத்தை மாற்றிக் கொண்டான்.
“நீங்க யாரும்மா? பிரஹதி என்னோட ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு தான்... வயசுப்புள்ள தனியா ஆம்பளைப்பசங்க படிக்கிற டியூசனுக்கு வருதேனு துணையா வந்தேன்... இங்க வந்ததும் ஒரு பையன் கூட சேர்ந்து என்னமோ பேசிட்டிருந்தா... நான் பாத்ததும் அந்தப் பையன் புறவாசல் வழியா தப்பிச்சு ஓடிட்டான்... இது எத்தனை நாளா நடக்குதுனு கேட்டதுக்கு என் கையில எதையோ வச்சு கிழிச்சிட்டா... முதல்ல மகேஷ்வரன் அண்ணன் கிட்ட அவரு மகளோட நடத்தைய பத்தி சொல்லணும்” என்று மிரட்ட வேறு செய்ய பிரஹதி பயப்படுவது வசுந்தராவின் இடையைச் சுற்றியிருந்த அவளது கரங்கள் இறுகுவதில் தெரிந்தது.
வசுந்தரா கடுஞ்சினத்துடன் “யோவ் நீ இவளை தப்பா தொட்டதை நானே என் கண்ணால பாத்தேன்... என் கிட்டவே பொய் சொல்லுறியா?” என்று கத்த
“என் பொண்ணு மாதிரி நினைச்சு தோள்ல தொட்டது தப்பா?” என்றான் அந்தக் கேவலமான பிறவி.
உடனே பிரஹதிக்கு எங்கிருந்து தான் தைரியம் வந்ததோ வசுந்தராவின் தோள்மறைவிலிருந்து வெளியே வந்த அச்சிறுமி கண்ணீருடன்
“பொய் சொல்லாதிங்க சித்தப்பா... நேத்து நான் உங்க வீட்டுக்கு பால் கொண்டு வந்தப்ப சித்தி இல்ல... நீங்க அப்பவும் என்னைய பேட் டச் பண்ணுனீங்க... மிஸ் எனக்கு அது ரொம்ப வலிச்சுது... அப்ப பேட் டச் தான? சித்தப்பா பொய் சொல்லுறாரு மிஸ்” என்று தனது மார்பு பகுதியைத் தொட்டுக் காட்டி அழவும் வசுந்தரா அவனை எரிப்பது போல முறைத்தாள்.
“இங்க பாரு... நீ சொல்லுற பொய்யை நான் நம்ப மாட்டேன்... உன் அசிங்கம் பிடிச்ச சதைவெறிய தீர்த்துக்க இந்தப் பிஞ்சு தான் கிடைச்சுதா? இதை நான் சும்மா விடமாட்டேன்... வாம்மா நான் உங்கம்மா கிட்ட பேசுறேன்” என்று பிரஹதியை இழுத்துச் சென்றுவிட்டாள்.
வீட்டுக்கு வரும்வரை பிரஹதி அழுதுகொண்டே தான் வந்தாள். இடையிடையே
“அம்மா கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாங்க மிஸ்... ஒரு தடவை அப்பாவ பாக்க வீட்டுக்கு வந்தப்பவும் இப்பிடி பேட் டச் பண்ணி எனக்கு தொடையெல்லாம் வலிச்சுது... அப்ப அம்மா கிட்ட சொன்னதுக்கு சித்தப்பா பாசமா மடில உக்கார வச்சு கொஞ்சுனதை தப்பாவா சொல்லுறேனு திட்டுனாங்க... அப்பா கிட்ட சொல்லக்கூடாது, இதுல்லாம் அசிங்கம்னு சொல்லிட்டாங்க... அதுக்கப்புறம் நான் அம்மா கிட்ட கூட இத சொல்லல மிஸ்... நேத்து பால் கொண்டு போனப்ப என்னை தனியா கூப்பிட்டு பேட் டச் பண்ணுறப்ப வலி தாங்காம நான் கத்திட்டேன்... அப்ப நான் அவர் சொன்னபடி கேட்டா ஆல்பன்லிபே வாங்கித் தர்றேனு சொன்னாரு மிஸ்” என்று நடந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லிக்கொண்டே வந்தாள்.
வீடும் வந்துவிட்டது. அவள் மிதிவண்டியின் சத்தம் கேட்கும் போதே “பிரஹதி இன்னைக்கு ஏன் சீக்கிரமா வந்துட்ட?” என்ற கேள்வியோடு வந்து நின்றாள் பிரஹதியின் அன்னை கவிதா.
கூடவே நின்ற வசுந்தராவைக் கண்டதும் அழுத முகமாய் நின்ற மகளையும் பார்த்துவிட்டு “நீங்களா மிஸ்? பிரஹதி எதுவும் சேட்டை பண்ணுனாளா?” என்று பரபரத்தவளை கையமர்த்திவிட்டு பிரஹதியுடன் வீட்டினுள் நுழைந்தாள் வசுந்தரா.
குழப்பத்துடன் அமரச் சொன்னவளிடம் லிங்கத்தின் நடத்தையைப் பற்றிய அனைத்து விவரங்களையும் போட்டு உடைத்தாள் வசுந்தரா. இன்னும் கவிதா நம்ப முடியாமல் விழிக்கவும்
“ஏம்மா பொம்பளைப்புள்ளைய பெத்தா மட்டும் போதாது... இந்த மாதிரி மிருகங்கள் கிட்ட மாட்டிக்கிட்டு அவங்க அவஸ்தை படுறத சொன்னா காது குடுத்து கேக்கணும்... அந்தாளு மடில தூக்கி வச்சு கொஞ்சுறேன்னு தொடைய அழுத்தித் தடவுறது உங்களுக்குப் பாசமாவா தோணுச்சு? நேத்து குழந்தையோட ப்ரெஸ்டை அழுத்திருக்கான்... அவ வலில அழுதிருக்கா... இது எதாச்சும் உங்களுக்குத் தெரியுமா? ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வெளியாளுங்க தேவையில்லாம நம்ம குழந்தைங்களை தொடுறத பாசம்ங்கிற பேர்ல ஊக்குவிக்குற உங்களை மாதிரி பேரண்ட்ஸ் இருக்குற வரைக்கும் இந்த மாதிரி அசிங்கம் பிடிச்சவனுங்க ஒழிய மாட்டானுங்க... உங்க பொண்ணு பதிமூனு வயசு குழந்தை... தப்பா நினைச்சிட்டானு வச்சுப்போம்... நான் இருபத்தேழு வயசு பொண்ணு தானே... என் கண் முன்னாடி உங்க பொண்ணோட தோளையும் பின்பக்கத்தையும் அந்த மிருகம் தடவுனான்... அப்ப நான் பாத்ததும் பொய்னு சொல்லப் போறிங்களா?” என்று அவளைத் திட்டித் தீர்த்தாள்.
கவிதாவுக்குச் செருப்பால் அடிப்பது போல இருக்கவும் அழுது கொண்டிருந்த மகளை வேகமாக அணைத்துக் கொண்டாள்.
“என் தங்கம்! இத்தனை நாளு இவ்ளோ கஷ்டப்பட்டியாம்மா? இந்தக் குருடி அத பாத்தும் பாக்காத மாதிரி இருந்துட்டேனே... வீடு மாத்துறப்ப ரொம்ப ஒத்தாசையா இருந்தான்... அவன் பொண்டாட்டியும் நல்ல மாதிரி... ரெண்டு வயசுல பொட்டப்புள்ளை வேற இருக்கு... எங்களுக்கு இங்க உதவினு சொல்லிக்க அவன் மட்டும் தான் இருந்தான்... அண்ணன் மதினினு பாசமா வீட்டுக்கு வாரான்னு நினைச்சேன்... பாப்பா பாப்பானு கொஞ்சவும் அவன் மகளை மாதிரி நினைச்சு தானே கொஞ்சுறான்னு நானும் இவ அப்பாவும் நினைச்சிட்டோம் மிஸ்... புள்ளை சொன்னப்ப கூட நான் நம்பலயே!””
கண்ணீர் விட்டு அவள் கதறும்போதே பிரஹதியின் தந்தை மகேஷ்வரன் வந்துவிட அவரிடமும் விசயத்தைக் கூறிவிட்டாள் வசுந்தரா.
அவர் கவிதாவை பளாரென அறைந்தவர் “அந்த நாய் கேவலமா நடக்கப்பாக்குறான்னு புள்ள சொன்னா நீ என் கிட்டலாம் சொல்லிருக்கணும்... அத விட்டுட்டு புள்ளைய ஏசிருக்க... நீயெல்லாம் ஒரு அம்மையா?” என்று எகிற
“சார்! அவங்க பாவம்... அவங்களை திட்டுறத விட்டுட்டு அடுத்து என்ன பண்ணணும்னு யோசிங்க” என்றாள் வசுந்தரா.
மகேஷ்வரன் மகளை கண் கலங்க பார்த்தவர் “என் அம்மையே எனக்குப் பிறந்திருக்கானு நினைச்சு அருமை பெருமையா என் புள்ளைய வளக்கேன் டீச்சர்... அந்தப் பய இப்பிடி குடிகெடுப்பானா இருப்பான்னு என் மூளைக்குத் தெரியலயே... இப்ப நாங்க என்ன பண்ணணும்?” என்று கேட்க
“போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுங்க” என்றாள் வசுந்தரா.
மூவரும் தயங்கவும் “நீங்க தானே சொன்னீங்க... அந்தாளுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்குனு... இப்ப உங்க மகளுக்கு நடந்ததை நீங்க குடும்ப கவுரவத்தைக் காரணமா காட்டி மறைச்சிங்கனா நாளைக்கு வேற குழந்தைங்க கிட்ட அவன் கேவலமா நடந்துப்பான்... இந்த மாதிரி ஆளுங்களுக்கு உறவு பந்தப்பாசம்லாம் கிடையாது... அவன் சொந்த மகள் கிட்டவே இப்பிடி நடந்துக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல... போன வாரம் நியூஸ்ல கூட சொன்னாங்களே! அதனால யோசிக்காம கம்ப்ளெய்ண்ட் குடுங்க... அவங்க போஸ்கோ ஆக்டுக்கு கீழ ஆக்சன் எடுப்பாங்க... குழந்தை பேர் வெளிய வராது” என்றாள் வசுந்தரா.
மகேஷ்வரன் இன்னும் தயங்கவும் பிரஹதியிடம் வந்தாள்.
“உங்கம்மா அப்பா கம்ப்ளெய்ண்ட் குடுப்பாங்களா இல்லையானு எனக்குத் தெரியாது... ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரியும்... இன்னைக்கு உனக்கு ஜாமெட்ரி கிளாஸ் கிடையாது”
அவள் சொல்லவும் பிரஹதிக்கு அழுகை பீறிட்டது.
“நான் டிவைடரை வச்சு கைய கிழிச்சிட்டுச் செத்து போகலாம்னு இருந்தேன் மிஸ்”
அவள் அவ்வாறு கூறவும் அவளது பெற்றோர் அதிர வசுந்தராவின் முகத்தில் விரக்தி இழையோடியது.
“எதுக்கும் தற்கொலை முடிவா இருக்காது பிரஹதி... இந்த மாதிரி ஹராஸ்மெண்ட் உனக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறீயா? நிறைய பெண்களுக்கு இதே கொடுமை நடக்குதும்மா... ஆனா யாரும் வெளிய சொல்லுறதில்ல... சொன்னா தன்னை தப்பா நினைப்பாங்களோங்கிற தயக்கம்... உன் வயசு பொண்ணுனா வாய் விட்டு சொல்லிடலாம்... ஆனா வாய் பேச தெரியாத பச்சைக்குழந்தைங்களை ஹராஸ் பண்ணுறவங்க கூட இருக்காங்கம்மா... பொண்ணா பிறந்துட்டா இந்த துன்பம்லாம் இலவச இணைப்பா நம்மளோடவே பிறந்துடும்... இது பெண்பிறவிகளுக்கு வாய்ச்ச பிறவித்துயர்... அத நம்ம மனோதிடத்தாலயும் தைரியத்தாலயும் தான் ஃபேஸ் பண்ணணுமே தவிர சூசைட் பண்ணுற முடிவுக்குலாம் வரக்கூடாது...
நீ சூசைட் பண்ணி செத்துட்டனா அந்த லிங்கம் இன்னொரு பொண்ணு கிட்ட தப்பா நடந்து தன்னோட இச்சைய தீர்த்துப்பான்... ஆனா உன் பேரண்ட்சுக்குத் தானே வேதனை... இனிமே சூசைட் பண்ணணும்னு யோசிக்கவே கூடாது” என்று அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவளது பெற்றோரிடம் பேச ஆரம்பித்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் ஏன் ஷாக் ஆகுறிங்க? ஒரு கேவலமானவன் தன்னை வலுக்கட்டாயமா பாலியல் ரீதியா தொந்தரவு பண்ணுறான்; அதை அம்மா கிட்ட சொன்னா நம்பல... அவளால ஒவ்வொரு தடவையும் வலிய தாங்கிக்கவும் முடியல... அப்ப அந்தக் குழந்தை என்ன பண்ணுவா? ஒரேயடியா செத்துடலாம்னு தற்கொலை செய்யுற முடிவுக்கு வந்திருக்கா... இது தான் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைங்களுக்கு விதிக்கப்பட்ட விதி சார்... கம்ப்ளெய்ண்ட் குடுக்குறது பத்தி கொஞ்சமாச்சும் யோசிங்க... குடும்ப கவுரவத்தை விட உங்க குழந்தைக்கு கிடைக்க வேண்டிய நீதி பெருசு... இதுக்கு மேல உங்களை வற்புறுத்த எனக்கு உரிமையில்ல... நான் கிளம்புறேன்”
கனத்த மனதுடன் கிளம்பினாள் வசுந்தரா. ஒரு ஆசிரியையாக அவளது வழிகாட்டும் கடமையைச் சரியாகச் செய்துவிட்டாள். இனி பெற்றோராக அவர்களது கடமையைச் செய்ய வேண்டியது மகேஷ்வரனும் கவிதாவும் தான்! அவர்கள் செய்வார்களா? நமது சமூகத்தில் இது கேள்விக்குறியே!
பெண்ணின் உடலமைப்பும், உடல் பாகங்களும் பரிணாம வளர்ச்சியில் இயற்கை அவளுக்கு அளித்த வரம். ஆனால் கோணல் புத்தியும் இச்சையும் கொண்ட மானுட விலங்குகள் அந்த வரத்தை சாபமென அவள் நொந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளுகின்றனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு கட்டத்தில் தங்கள் உடலமைப்பை வெறுத்துவிடுவர்.
குழந்தைக்குப் பசியாற்றவே பெண்ணுடலில் மார்பகங்கள் இருக்கிறது. அதைக் காமக்கண் கொண்டு பார்ப்பவர்கள் ஏராளம்! பசியாற்றக் கூடிய மார்பகங்களை முறைகேடாக இச்சையுடன் வருடுபவன் அவனுக்குப் பாலூட்டிய தாயை அவமதித்தவனே ஆவான்!
உயிர் இவ்வுலகில் ஜனிக்கும் வழி தான், அவளது உடலில் இருக்கும் பிறப்புறுப்பு. அதை இரட்டை அர்த்தத்துடன் பேசும் இழிபிறவிகளும் இச்சை தீர்க்கும் உறுப்பாய் மட்டும் பார்க்கும் கேவலமான ஜென்மங்களும் தங்கள் பிறப்பையும் சேர்த்து இழிவுபடுத்திக் கொள்கின்றனர்.
மொத்தத்தில் பெண்களைத் தங்களின் காம இச்சையைத் தீர்க்கும் கருவியாய், பாலியல் வெறியைத் தணிக்கும் பொம்மையாய் கருதும் மனிதர்கள் இச்சமூகத்தில் இருக்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் என்ற பிறவித்துயரை அனுபவித்தே ஆகவேண்டும்!
பிறவித்துயர் முடிவு(றுமா?)ற்றது!
************
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்🙂
இந்தச் சிறுகதை பிரதிலிபி ‘கதை அரங்கம்’ போட்டிக்காக அக்டோபர் 21, 2021ல் நான் எழுதுனது... இதுல இருக்குற கருத்துக்களை கொண்ட கதைகள் நிறைய படிச்சிருப்பீங்க... இது என்னோட சிறு முயற்சி! படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிரலாம்!
நன்றியுடன்
நித்யா மாரியப்பன்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ரொம்ப ரொம்ப சரியான....அருமையான கருத்துக்கள்....
அந்த கருத்துக்களை சொன்ன விதம் இன்னும் அருமை..... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்...... ❤️
Share your Reaction
@hn5 thank you sis 😊
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
😪😪😪😪😪😪
Share your Reaction
இந்த மாதிரி நாய்களை செருப்பாலஅடிச்சாலும்,
நடுத்தெருவுக்கு இழுத்து மானத்தை வாங்கினாலும் திருந்த மாட்டாங்க, வேணுமின்னா அவங்களை நடுத்தெருவில இழுத்து வைச்சதுக்காக, அந்தப் (குட்டி) பெண்களை கொலை செய்யவும் தயங்க மாட்டாங்க கொலைகார பாவிங்க,.
இதுக்காக நீதி கேட்டு போற பெண் குழந்தைகளை பெத்தவங்களோட நிலைமை அதை விட மோசம், , பேசி
பேசியே அவங்களை உயிரோட மண்ணுல புதைக்கிறதோட, சூசைட் வரைக்கும் கொண்டு போய் விட்டுடுவாங்க ஈன ஜென்மங்க. ரொம்ப ஈஸியா சொல்லிடுவோம், போலீஸ்க்கு போன்னு, ஆனா அதுக்குப் பிறகு
தினம் தினம் வார்த்தை தீ குளிக்கணும், அதுக்கு செத்தே போகலாம் போங்க.
ஆக மொத்தம், பிறவி இருக்கிற வரைக்கும், இந்தத் துயர் நீங்க போறதில்லை, இதுக்கு விமோசனமும் கிடையாது. இது தான் நாம வாங்கிட்டு வந்த வரம். இது வரமா ? சாபமா?ன்னு கூட தெரியலை. மங்கையராக பிறப்பதற்கே மண்ணில் மாகொடுமைகள் செய்திருப்போம் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@ananthi 😑 😑 😑 😑
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 ரொம்ப பாவம் பொண்ணுங்களான நாம எல்லாம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



