NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

கேணி

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹெரிட்டேஜ் ரெசிடென்சியல் ஸ்கூல்...

“டூ இயர்ஸ் பேக், என் ஃபர்ஸ்ட் ஒய்ஃப் இறந்ததுல இருந்தே ரிதன்யா யார் கூடவும் பேசாம ரிசர்வ்ட் டைப் ஆகிட்டா மேடம்... எனக்கு ரீ-மேரேஜ் ஆகி ஒன் இயர் ஆகுது... ஆனா ரிதன்யாவால சௌம்யா கூட அட்டாச் ஆகவே முடியல... அவளும் என்னென்னமோ செஞ்சு பாத்துட்டா... பட் ரிதன்யாவோட பிஹேவியர்ல எந்த சேஞ்சும் வரல... ரீசண்டா அவ கொஞ்சம் வியர்டா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டா... சௌம்யா தன்னை கொல்ல பாக்குறதா புலம்புனா... இதுக்காக சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கவுன்சலிங் கூட்டிட்டுப் போனப்ப தான் அவ ஏஜ் குழந்தைங்க கூட வளர்ந்தா இந்த குணம் மாறிடும்னு சொன்னார்... அதான் அவளை போர்டிங் ஸ்கூலுக்கு மாத்திடுவோம்னு டிசைட் பண்ணுனேன்”

கவலையுடன் தன் முன்னே அமர்ந்திருந்த பள்ளி முதல்வர் வான்மதியிடம் மகளின் மனநிலையைப் பற்றி விளக்கி கொண்டிருந்தார் பிரபல தொழிலதிபர் ஆதிசேஷன்.

அந்தப் பெண்மணியும் அவர் கூறுவதை கேட்டுவிட்டு அவரருகே அமர்ந்திருந்த பதிமூன்று வயது ரிதன்யாவை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தார்.

வட்டமான குழந்தைத்தனம் மாறாத முகம்! அதில் ஏதோ இனம்புரியாத குழப்பம் குடி கொண்டிருந்தது. கண்களோ மிரட்சியின் உறைவிடமாக இருந்தது. அடிக்கடி நாவினால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள். சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தபடி இரு கரங்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு மடியில் வைத்திருந்தாள்.

மொத்தத்தில் அவள் வயது குழந்தைகளுக்கே உரித்தான துறுதுறுப்போ உற்சாகமோ கிஞ்சித்தும் அவளிடமில்லை என சொல்லாமல் சொன்னது ரிதன்யாவின் உடல் மொழி.

பாவம்! தாயிழந்த பெண், உடனடியாக நடந்த தந்தையின் மறுமணம் அவள் மனதை பாதித்திருக்கலாம். சிற்றன்னையை தாயின் ஸ்தானத்தில் வைத்து பார்க்க அவள் மனம் சம்மதிக்கவில்லை போல! அதனால் தான் சௌம்யாவிடம் அவள் தாய்ப்பாசத்தை உணரவில்லை என்று எண்ணிக்கொண்டார் வான்மதி.

“நீங்க ரிதன்யாவ பத்தி கவலையே படாதிங்க ஆதிசேஷன் சார்... எங்க ஸ்கூல் குவாலிட்டியான எஜூகேசனுக்கு மட்டுமில்ல, சேஃப்டி என்விரோன்மெண்டுக்கும் பேர் போனது... உங்கள மாதிரி எலைட் க்ளாஸ் பீபிள் அவங்க பசங்களை இங்க படிக்க வைக்கிறதுக்கு அது தான் முக்கிய காரணம்... எஜுகேசனோட டிசிப்ளினையும் சேர்த்து தான் நாங்க கத்துக் குடுக்குறோம்... இங்க டீச்சர்சும் சரி, டாமெட்ரில இருக்குற வார்டன்சும் சரி, ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க.... அடுத்த தடவை எக்சாம் ஹாலிடேக்கு ரிதன்யா உங்க வீட்டுக்கு வர்றப்ப அவ கிட்ட நீங்க சேஞ்சஸை ஃபீல் பண்ணுவீங்க... நீங்க நம்பி உங்க பொண்ணை எங்க ஸ்கூல்ல சேர்க்கலாம்”

சில மணிநேர பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ரிதன்யாவின் உடமைகள் டாமெட்ரியில் குடியேறியது. ஆதிசேஷனின் உதவியாளர் அவரது கால அட்டவணையில் அடுத்த நிகழ்வை அறிவிக்க அவரும் விடை பெற்றார்.

தந்தையின் கார் பள்ளியின் வளாகத்தை விட்டு வெளியேறி அந்த மலைவாசஸ்தலத்தின் வளைவு நெளிவான சாலையை அடைவதை டாமெட்ரியின் வராண்டாவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரிதன்யாவின் கண்கள் கலங்கியது.

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது, உங்க பொண்ணை நல்ல போர்டிங் ஸ்கூலா பாத்து சேர்த்து விடுங்க... இனியும் அவளோட பைத்தியக்காரத்தனத்த என்னால பொறுத்துக்க முடியாது ஆதி... முதல்ல இருட்டை பாத்து பயந்தா... அப்புறம் கார்டனுக்குப் போக பயந்தா... ஸ்கூல்ல ரெஸ்ட் ரூமுக்குத் தனியா போக பயமா இருக்குனு போன மாசம் பீரியட் வந்தும் அவ சானிடரி நாப்கினை சேஞ்ச் பண்ணாமலே இருந்து அலர்ஜி ஆனதுக்கு அப்புறம் தான் எனக்கு உங்க மகளை பாத்து பயம் வந்துச்சு... இப்போ என்னடானா நான் அவளைக் கொலை பண்ண பார்க்குறேன்னு என் மேலயே பழி போடுறா... சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்தும் இவ சரியாகல... இதுக்கு மேல என்னால இவ இருக்குற வீட்டுல இருக்க முடியாது ஆதி... நானா இவளானு முடிவு பண்ணுங்க”

சிற்றன்னை சௌம்யாவின் கட்டளை இன்றும் அவள் காதில் ஒலித்தது. கூடவே அவளது அன்னையும் அவளும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அதிலிருந்து அவளை காப்பாற்றிய அன்னை காரின் பெட்ரோல் டேங்க் வெடித்து சம்பவ இடத்திலேயே கருகி பலியான காட்சியும் அவள் மனக்கண்ணில் ஓடியது.

கூடவே “உன்னால தான் உன் அம்மா கருகி செத்துப் போனா... நீ தான் அவ சாகுறதுக்குக் காரணம்” என்று அடிக்கடி தந்தை கடிந்து கொள்வதும் நினைவிலாடியது.

“இங்க பாரும்மா! உனக்கு நோய் எதுவுமில்ல... உனக்குள்ள இருக்குதே ஒரு குற்றவுணர்ச்சி, அது தான் உனக்கு நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம்... அதை தூக்கி எறிஞ்சிடு... உன்னால உன் அம்மா செத்துப் போகல... சாகணும்னு விதி இருந்துச்சுனா அன்னைக்கு நீ கார்ல இல்லனாலும் அவங்க செத்துருப்பாங்க... இதை புரிஞ்சுக்க ரிதன்யா... இல்லனா இது உன்னை தின்னு தீர்த்துடும்”

இது அவளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்த மனோதத்துவ மருத்துவரின் அறிவுரை! ஒவ்வொரு முறையும் அவர் அவளுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறி மருந்து மாத்திரைகளும் அளிப்பார்.

ஆனால் ரிதன்யாவின் பிரச்சனை தீரவில்லை. காரணம் குழந்தையின் தந்தையே தனது முதல் மனைவியின் மரணத்துக்கு அவளைக் குற்றம் சாட்டி வெறுத்து ஒதுக்கியது தான். அந்த மாறாத வடுவே மனரீதியான பாதிப்பாக மாறிவிட்டிருந்தது.

“இல்ல டாக்டர்... அப்பாவே அடிக்கடி என்னால தான் அம்மா செத்துப் போனாங்கனு சொல்லுவாங்க... நான் மட்டும் இல்லனா அவங்க செத்துருக்க மாட்டாங்க... நான் ஒரு அன்லக்கி கேர்ள்... என்னை பாத்தாலே நல்லது நடக்காதுனு அப்பாவோட நியூ ஒய்ப் சொல்லுவாங்க டாக்டர்... அவங்க என்னை அடிக்கடி திட்டுவாங்க... எனக்கு இருட்டுனா பயம்னு தெரிஞ்சும் ஒரு நாள் முழுக்க என்னை இருட்டான ரூம்ல போட்டு பூட்டிட்டாங்க... அவங்க என்னை கொல்ல ட்ரை பண்ணுறாங்க டாக்டர்”

“ஓ.கே.. உன் பாயிண்டுக்கே வருவோம்... உனக்கு ஏன் இருட்டுனா பயம்?”

“இருட்டுல தெரியுற சில உருவம் என்னைக் கொல்ல வருது டாக்டர்”

“இசிட்? அது பாக்குறதுக்கு எப்பிடி இருக்கும்?”

“ரொம்ப டாலா கருப்பா இருக்கும்... அதோட பல் எல்லாம் ஷார்ப்பா ஊசி மாதிரி இருக்கும்... கை நெய்ல்சும் நீளமா இருக்கும்... அதோட கண் ரெட்டிஷ்ஷா இருக்கும்... அப்புறம் அது வாய்ல இருந்து ப்ளட் வடிஞ்சிட்டே இருக்கும்”

“ம்ம்... குட்... அது உன்னை என்ன செய்யும்?”

“என்னை பாத்து கை நீட்டி ‘உன்னையும் என் கூடவே கூட்டிட்டுப் போயிடுவேன்’னு சொல்லும் டாக்டர்... சொல்லிட்டு அது சிரிக்கிறப்ப ரூம் ஷேக் ஆகும்”

“அதுக்குப் பேர் இருக்கா ரிதன்யா?”

“தெரியல டாக்டர்... என் கழுத்தை நெறிக்க வரும்... நான் கத்துனதும் மறைஞ்சிடும்”

“லிசன் ரிதன்யா! அந்த உருவம் எல்லாமே உன்னோட ஹாலூசினேசன்... பொதுவா உன்னை மாதிரி சின்னப்பசங்க தன்னோட கெட்ட குணங்கள்னு நினைக்கிறதை தனி பெர்ஷ்னாலிட்டியா உருவகப்படுத்திப்பாங்கம்மா... சப்போஸ் உன்னோட கெட்ட குணம்னு நீ நினைக்குறது தான் தனி உருவமா உனக்குத் தெரியலாம்”

மருத்துவரின் இந்தக் கூற்றை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

“இல்ல டாக்டர்... எங்க பாட்டி என் கிட்ட சொல்லுவாங்க, இருட்டுல உலாவுற ரத்த காட்டேரி இப்பிடி தான் இருக்கும்னு... நான் பாக்குற உருவமும் அப்பிடி தான் இருந்துச்சு”

“அவங்க சொன்ன விசயங்கள், உன்னோட மன பிரமை இதெல்லாம் சேர்ந்தது தான் நீ பாக்குற உருவம்... கூடவே உன்னோட ஸ்டெப் மாம் உன்னை இருட்டு ரூம்ல அடைச்சு வச்சதால உனக்கு அந்த அதிர்ச்சி தீரல... இருட்டுங்கிறது பேயோ பூதமோ இல்ல... அது வெளிச்சத்தால தீண்டப்படாத பகுதி மட்டும் தான்”

அத்தனை கட்ட ஆலோசனைகள் மருந்து மாத்திரைகள் எல்லாம் பயனளிக்கத் துவங்கிய நேரத்தில் தான் சௌம்யா தன்னைக் கொல்ல வருவதாக பயந்து அலறி போர்டிங் ஸ்கூல் வாழ்க்கையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டாள் ரிதன்யா.

பள்ளி முதல்வரிடம் மட்டும் அவளது மனோதத்துவ சிகிச்சை பற்றிய விவரத்தைக் கூறிவிட்டார் ஆதிசேஷன். அதே நேரம் ரிதன்யாவிடம் சக மாணவர்களுக்கு இவ்விசயத்தைக் கூறிவிடாதே என்ற கட்டளையும் இடப்பட்டது.

இதோ அவர் கிளம்பிவிட்டார்! இனி ரிதன்யாவைக் காண அவர் வரவே போவதில்லை! காரணம் வீட்டிலிருந்து கிளம்பும் முன்னர் சௌம்யா அவரிடம் ரகசியம் என்று கருதி பேசிய அனைத்தையும் ரிதன்யா கேட்டுவிட்டாள்.

“இனிமே அவ அங்கயே இருக்கட்டும் ஆதி... அவ அடிக்கடி பயந்து கத்துறது எனக்குத் தூக்கி வாரிப் போடுது... இது நம்ம குழந்தைய பாதிச்சிடக் கூடாதுல்ல... ஸ்கூல் முடிச்சதும் காலேஜ் கூட ஹாஸ்டல்ல தங்கியே படிக்கட்டும்... படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி தூரமா அனுப்பிடுவோம்... எல்லாமே நம்ம குழந்தைக்காக தான் கேக்குறேன் ஆதி... ப்ளீஸ்! செய்வீங்களா?”

சௌம்யா கருவுற்றிருக்கும் விசயமே அப்போது தான் ரிதன்யாவிற்கு தெரிந்தது. அவளுக்குச் சகோதரனோ சகோதரியோ பிறக்கப் போகிறார்கள் என்றதும் சௌம்யாவிற்கும் ஆதிசேஷனுக்கும் அவள் சுமையாக மாறிவிட்டாள் என்பது உறைத்தது. தன்னை வெறுக்கும் தந்தைக்கு இப்போது இன்னொரு வாரிசு வரப்போகிறது! இனி தான் இருந்தாலும் இறந்தாலும் அவருக்குக் கவலை இல்லை!

இப்போது மட்டும் அம்மா இருந்திருந்தால்....

அந்த எண்ணத்தில் கண் கலங்கி போனவளின் முதுகில் யாரோ கை வைக்க வேகமாக கண்ணீரை விழுங்கிக் கொண்டு திரும்பினாள் அச்சிறுமி.

அங்கே அவளது வயதையொத்த இன்னொரு சிறுமி நின்று கொண்டிருந்தாள்.

“ஹாய்! நீ தான் என்னோட நியூ டாம்-மேட்டா?”

சினேகமாக சிரித்தபடி வினவியளை ரிதன்யாவிற்கு பார்த்த கணத்திலேயே பிடித்துப் போனது.

“ம்ம்”

ஒற்றை வார்த்தையாய் பதில் வரவும் அச்சிறுமியே தொடர்ந்தாள்.

“நான் சமிக்ஷா... நானும் செவன்த் தான் படிக்கேன்... வா நம்ம டாம்கு போவோம்... இங்க நின்னா வார்டன் வந்து திட்டுவாங்க... அதோட இந்த இடம் அமேலியா ஆஸ்பார்ன் அடிக்கடி வந்து நிக்குற இடம்... வெரி வெரி டேஞ்சரஸ் ப்ளேஸ்”

ரிதன்யாவிற்கு யார் அமேலியா? ஏன் இந்த இடம் அபாயகரமானது என்ற கேள்வியெல்லாம் மூளையில் உதித்தாலும் புதியவளிடம் பேசிப் பழக தயங்கியவளாக தங்களது டாமெட்ரி அறைக்குள் நுழைந்தாள்.

வசதியான அறை தான்! அழகான கண்ணை உறுத்தாத வண்ணப்பூச்சு! இரு மாணவிகளுக்குத் தனித்தனியே விளக்குகளுடன் கூடிய ஸ்டடி டேபிள்கள், படுத்து உறங்குவதற்கு மெத்தையுடன் கூடிய ஈரடுக்கு கட்டில், உடைகளை வைப்பதற்கு வார்ட்ரோப் என சகல வசதிகளுடன் அமைந்திருந்தது அவ்வறை!

கூடவே இனிமையே உருவாய் ஒருத்தி! ஒருவேளை இவளும் தனது மனோதத்துவ சிகிச்சை பற்றி அறிந்தால் பைத்தியம் என ஒதுக்கிவிடலாம்! எனவே எல்லையோடு பழக தீர்மானித்தாள் ரிதன்யா.

“நீ இன்னும் உன் நேமை சொல்லவேல்ல”

“ரிதன்யா”

“நான் உன்னை ரித்துனு கூப்புடுறேன்... நீ என்னை சமினு கூப்பிடு... வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்”

கை நீட்டியவளை சினேகமாக பற்றி குலுக்கினாள் ரிதன்யா. பின்னர் டாமெட்ரி, பள்ளியைப் பற்றி விரிவாக விளக்கியவள்

“நீ எங்க வேணாலும் போகலாம்... ஆனா நம்ம டாமெட்ரிக்கு லெப்ட் சைட்ல புதர் மாதிரி செடி வளர்ந்திருக்குல்ல, அங்க இருக்குற மூடுன கிணறு பக்கம் மட்டும் போயிடாத” என்றாள் ரகசியக்குரலில்.

ஏன் என்று புரியாமல் விழித்த ரிதன்யாவிடம் “ஏன்னா அந்தக் கிணத்துக்குப் பக்கத்துல இருந்த நீச்சல் குளத்துல விழுந்து நிறைய கேர்ள்ஸ் இறந்து போறாங்கனு அதை ஸ்கூல்ல இருந்து மூடிட்டாங்க... ஆனா அதுக்கு உண்மையான காரணம், அந்த மூடியிருக்குற கிணத்துல ஆவியா இருக்குற அமேலியா ஆஸ்பார்ன் தான்” என்றாள் கண்களை உருட்டியபடி.

“அவங்க யாரு?” வாய் திறந்து கேட்டாள் ரிதன்யா.

சமிக்ஷா மெதுவாக எழுந்து கதவைச் சாத்திவிட்டு வந்து தனது ரகசியக்குரலை இன்னும் தணித்து யார் அந்தப் பெண்மணி என்று கூற ஆரம்பித்தாள்.

“நம்ம ஸ்கூல் பிரிட்டிஷ்காரங்களால தான் ஆரம்பிக்கப்பட்டுச்சு... அவங்க ஊரோட சீதோஷ்ணம் மாதிரியே இந்த ஊரோட சீதோஷ்ணமும் இருந்ததால இங்கயே அவங்க ஃபேமிலியோட சம்மர் டைம்ல தங்க ஆரம்பிச்சாங்களாம்... அப்பிடி தங்குனப்ப சிலர் பெர்மனண்டாவும் இங்க தங்கிட்டாங்களாம்... அவங்களோட சில்ரன் படிக்கிறதுக்காக ஆரம்பிச்சது தான் நம்ம ஸ்கூல்... இங்க அவங்க தங்குனப்ப வில்லியம் ஆஸ்போர்ன்னு ஒருத்தர் தன்னோட ஃபேமிலியோட தங்கியிருந்தாராம்... அவரோட ஒய்ப் தான் அமேலியா ஆஸ்பார்ன்”

அவள் நிறுத்தவும் கதவு தட்டப்பட்டது. சமிக்ஷா கதவைத் திறக்கவும் “லஞ்ச் சாப்பிட வரலயா சமி?” என்றபடி உள்ளே நோட்டமிட்டாள் இன்னொரு சிறுமி.

“இவ என்னோட நியூ டாம்-மேட் ரித்து... நாங்க வர்றோம்... நீ போ” என்று அவளை அனுப்பி வைத்தவள் டின்னர் ஹாலுக்கு ரிதன்யாவை அழைத்துச் சென்றாள்.

இருவரும் மதியவுணவாக சப்பாத்தி காய்கறி கூட்டுடன் கொஞ்சம் சாதம் சாம்பாரை எடுத்துக்கொண்டு தனியே அமர்ந்தனர். அங்கிருந்து பார்த்தால் புதர் அடர்ந்த சிமெண்டால் பூசப்பட்ட இரண்டு வட்ட வடிவ இடங்கள் தெரிந்தது.

அவை தான் அந்த மூடப்பட்ட கிணறு மற்றும் நீச்சல்குளமாக இருக்க வேண்டும்! அந்த இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிவப்பு செங்கல் கட்டிடங்கள் பாழடைந்து அனாதையாய் மரக்கூட்டத்திற்கிடையே நிற்பது பகல் நேரத்திலேயே ஒருவித பயத்தை கொடுத்தது ரிதன்யாவிற்கு.

கூடவே கிணற்றின் மீது பூசப்பட்டிருந்த சிமெண்டின் மீது கூட சில செடிகள் முளைத்திருந்தன. இதற்குள்ளா அமேலியா ஆஸ்பார்ன் இறப்பிற்கு பிறகும் வாசம் செய்கிறாள்? ரிதன்யாவால் நம்பவே முடியவில்லை.

அவளின் பார்வை அங்கே மேய்ந்து கொண்டிருக்க விரல்களோ சப்பாத்தியையும் சாதத்தைச் சுமந்த கரண்டியையும் மாறி மாறி தொட்டுக் கொண்டிருந்தன.

அப்போது தான் அந்த பாழடைந்த செங்கல் கட்டிடங்களுக்கிடையே யாரோ நிற்பது தெரிந்தது. மரக்கூட்டத்திற்கிடையே அந்த உருவம் மெதுவாய் நகர்வதும் தெரிய சப்பாத்தி விள்ளலுடன் ரிதன்யாவின் கரம் அந்தரத்தில் நின்றது.

அவளது கண்கள் கூர்மையுற்றது. அது யாராக இருக்கும்? மரக்கூட்டத்தின் அடர்த்தி குறைந்த பகுதியை அடைந்ததும் அந்த உருவம் ஒரு பெண் என்பது தெரிந்தது.

அந்த உருவம் திரும்பி பார்க்கையில் ரிதன்யாவை தன் பக்கம் திருப்பினாள் சமிக்ஷா.

“அமேலியாக்கு என்னாச்சுனு தெரியணுமா?”

அந்த உருவத்தை மறந்து சமிக்ஷாவின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தாள் ரிதன்யா.

“அவங்களும் அவங்களோட பன்னிரண்டு வயசு மகள் லில்லி ஆஸ்பார்னும் இங்க தங்கியிருந்தப்ப தான் இந்தியால ஃப்ளூ காய்ச்சல் பரவுச்சாம்... அதுல அவங்க பொண்ணு அவளோட தேர்ட்டீன்த் பர்த்டே அன்னைக்கு இறந்துட்டாளாம்... மகளோட இறப்பை அமேலியாவால தாங்க முடியல... அவங்களும் கொஞ்சநாள்ல ப்ளூ காய்ச்சலால இறந்துட்டாங்களாம்... அவங்களுக்குச் சாக விருப்பமே இல்லையாம்... சாகுறப்ப ‘எனக்கு என் மகள் வேணும்’னு சொல்லிட்டே இறந்தாங்களாம்... அவங்களோட சிமெட்ரி அதோ அந்த இடத்துல இருக்குற கிணறு பக்கத்துல தான் இருந்துச்சாம்... அப்புறம் பிரிட்டிஷ் பீரியட் முடிஞ்சதும் இந்த ஸ்கூலை விலைக்கு வாங்குனவங்க அந்த ரெண்டு பேரோட சிமெட்ரிய இடிச்சு அதுல இருந்த சவப்பெட்டிய அந்தக் கிணத்துக்குள்ள போட்டுட்டாங்களாம்... அப்புறம் கிணத்தையும் மூடிட்டு அதுக்கு நெருக்கமா ஸ்விம்மிங் ஃபூலை கட்டுனாங்களாம்...

அந்த ஸ்விம்மிங் ஃபூலை ஸ்டூடண்ட்ஸ் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு டெத்தா நடந்துச்சுனு சொன்னாங்க... அப்புறம் தான் அந்த நீச்சல்குளத்தையும் கிணத்தையும் மந்திரத்தகடு வச்சு பூட்டி சிமெண்டால அடைச்சுட்டாங்களாம்”

முழுக்கதையையும் சமிக்ஷா சொல்லி முடித்த வேளையில் ரிதன்யா சாப்பிட்டும் முடித்தாள்.

கை கழுவி விட்டு மீண்டும் டாமெட்ரியின் அறைக்குள் திரும்பிய போதும் கதை இன்னும் தொடர்ந்தது.

“அங்க இருக்குற பில்டிங்கை ரினோவேட் பண்ணுறப்ப தெரியாம ஸ்விம்மிங் ஃபூலுக்குப் பக்கத்துல இருந்த கிணத்தோட மேல்தளம் உடைஞ்சு அந்தத் தகடு காணாம போயிடுச்சாம்... அப்போ இருந்து அமேலியாவோட ஆவி தினமும் வெளிய வருதுனு சொல்லுவாங்க... அவங்க பொண்ணு வயசுல இருக்குற சின்ன பொண்ணுங்களை அமேலியா தன்னோட கூட்டிட்டு போயிடுவாங்கனு குக் அக்கா சொன்னாங்க... அந்த ஏரியாக்கு யாரும் போகக்கூடாதுனு ஸ்கூல் மேனேஜ்மெண்ட் அனவுன்ஸ் பண்ணிட்டாங்க”

“ம்ம்... எல்லாம் சரி... நம்ம தான அங்க போகமாட்டோம்... பட் அந்த அமேலியா நினைச்சா வரலாம்ல” சந்தேகம் மேலிட கேட்டாள் ரிதன்யா.

சமிக்ஷா அவளை மெச்சுதலாகப் பார்த்தவள் “பாயிண்டுக்கு வந்துட்டியே... யெஸ்... அந்த லேடியோட ஆவி நம்ம டாமெட்ரிக்கு நைட் நேரத்துல வரும்னு குக் அக்கா சொன்னாங்க... அவங்க அதை பாத்திருக்காங்களாம்... அந்தக் காலத்து பிரிட்டிஷ் லேடி மாதிரி லாங்கா கவுன் போட்டு கர்லி கேரோட நம்ம வராண்டால நிக்குமாம்... அங்க நின்னுட்டே தன்னையும் தன் மகளையும் பிரிச்ச மரணத்தை நினைச்சு ஒரு பாட்டு பாடுமாம்... அது அந்தக் காலத்துல பிரிட்டன்ல ஃபேமஸா இருந்த ஒரு ஃபோல்க் சாங்... யூ நோ ஒன் திங், நீ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நின்னு வேடிக்கை பாத்தியே, அது தான் அமேலியாவோட ஃபேவரைட் ப்ளேஸ்... ஏன்னா அங்க தான் அவங்களும் அவங்க பொண்ணும் நின்னு இயற்கைய ரசிப்பாங்களாம்” என்றாள்.

ரிதன்யாவிற்கு இதை கேட்க கேட்க மனதிற்குள் மெதுவாய் கிலி பரவியது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனைகள் மூளைக்குள் ஓடவும் சற்றே நிதானித்து யோசித்தவள்

“இவ்ளோவும் உனக்கு எப்பிடி தெரியும்? நீ அமேலியாவ பாத்திருக்கியா? இது வெறும் கதையா கூட இருக்கலாம்” என்றாள் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்.

“நாம் அமேலியாவ பாக்கல... பட் என்னோட ஃபார்மர் டாம் மேட் ஸ்வரா பாத்திருக்கா... அந்த வராண்டால நின்னு அமேலியா பாட்டு பாடுறதை அவ கேட்டிருக்கா... ஒரு நாள் கீ ஹோல் வழியா பாத்தப்ப அமேலியா அது கிட்ட வந்த பயமுறுத்துனதுல ஸ்வரா அலறுன அலறலை நான் மறக்கவே மாட்டேன்பா... அன்னைல இருந்து டெய்லியும் அமேலியா அவளை கூப்புடுறதா பயந்து அழுவா... நைட் ஆனா தூங்கவே மாட்டா... கொஞ்சநாள் கழிச்சு அமேலியா தன்னைக் கொல்லப் பாக்குறதா பயந்து ஓடி வந்ததுல டாமெட்ரி படிக்கட்டுல விழுந்து அவளுக்குத் தலையில அடிபட்டதால அவளோட பேரண்ட்ஸ் அவளை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க... இப்ப அவ ப்ளேசுக்குத் தான் நீ வந்திருக்க ரித்து” என்றாள் சமிக்ஷா.

ரிதன்யாவின் பயம் கொண்ட மனது படபடக்க ஆரம்பித்தது.

சமிக்ஷா அதோடு நிறுத்தாது தனது வார்ட்ரோபை அடைந்தவள் ‘ஸ்வரா’ என்ற லேபிளுடன் கூடிய நோட்டு ஒன்றினை எடுத்து வந்து ரிதன்யாவிடம் நீட்டினாள்.

“இதுல அமேலியா பாடுன பாட்டு இருக்கு... ஸ்வரா அதை கேட்டுட்டு எழுதி வச்சிருந்தா... நான் சொன்னத நம்ப முடியலனா படிச்சுப் பாரு”

ரிதன்யா வேகமாகத் தலையசைத்து மறுக்கவும் அதை ஈரடுக்கு கட்டிலின் கீழடுக்கிலிருந்த மெத்தையில் வீசினாள் சமிக்ஷா.

பின்னர் பக்கத்து அறையிலிருந்த சிறுமிகள் வரவும் சிறிது நேரம் அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருந்தாள் ரிதன்யா.

மாலையில் ஆதிசேஷன் பேசுவதாக பள்ளி முதல்வர் அறையிலிருந்து வந்த அழைப்பை ஏற்று சென்றவள் தொலைபேசியில் அவரிடம் சுருக்கமாகப் பேசினாள்.

பள்ளி பிடித்திருக்கிறதா என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. அவர் பேசிய தொனியே பிடிக்காவிட்டாலும் நீ அங்கே தான் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திவிட்டது. கூடவே இனியாவது இருட்டு, உருவம் என்று அலறி பதறும் பைத்தியக்காரத்தனத்தை விடுத்து படிக்க ஆரம்பி என்ற அறிவுரை வேறு!

ரிதன்யாவால் என்ன சொல்ல முடியும்? கண்கள் கலங்க சரி என்று மட்டும் உரைத்தவள் அங்கிருந்து வெளியேறும் போதும் இக்கேள்வி தான் அவளுக்குள்!

இப்போது மட்டும் என் அம்மா இருந்திருந்தால்...

மெதுவாக முதல்வரின் அறையிலிருந்து வெளியேறியவள் இருட்டின் கரங்கள் அங்கே தழுவ ஆரம்பித்ததும் வேகமாக தங்களது டாமெட்ரியை நோக்கி ஓடினாள்.

ஓடுபவளின் செவியில் மெதுவாய் கேட்டது ஒரு மெல்லிய குரல்!

My heart is cold; it trembles at such news!
Here's bags of gold, if you will me excuse
And seize on those; and finish thou their strife,
Who wretched are, and weary of their life.

Are there not many bound in prison strong
In bitter grief? And souls that languish long,
Who could but find the grave a place of rest
From all their grief; by which they are opprest.

Besides there's many with a hoary head
And palsied joints; from whom all joy is fled
Release thou them whose sorrows are so great,
And spare my life until a later date!'

மிக மெதுவாக கேட்ட அவ்வொலி ஒவ்வொரு வரியாக வர வர அருகே ஒலிக்க ஆரம்பித்தது. யாரோ தெளிவான ஆங்கிலத்தில் பாடுகிறார்கள்! அது ஒரு பெண் குரல்!

மலை பிரதேசத்தின் குளிரிலும் வியர்வை அரும்புகள் பூக்க சுதாரித்து வேகமாக ஓட ஆரம்பித்தாள் ரிதன்யா. அவள் ஓட ஓட பின்னே யாரோ ஓடிவருவது போல அரவம்!

அந்நேரம் பார்த்து டாமெட்ரியின் வராண்டாவில் ஒரு மாணவி கூட இல்லை. அது படிப்பதற்கான நேரம் என்பதால் அவரவர் அறையில் புத்தகத்துடன் முடங்கி விட்டார்கள்.

ரிதன்யாவிற்கோ மூச்சிறைத்தது. இதோ இன்னும் சில அடிகள் தான்! டாமெட்ரியின் படிகள் வந்துவிடும்! வேகமாக ஓடியவள் படிகளில் நெஞ்சம் பதபதைக்க ஏறினாள்.

பின்னே கேட்ட யாரோ ஓடி வரும் சத்தம் நின்றுவிட்டது. அவளது அறையும் வந்துவிட்டது. அங்கே சமிக்ஷா படித்துக் கொண்டிருந்தாள்.

ரிதன்யாவைக் கண்டதும் “ஏன் உன் ஃபேஸ்ல இவ்ளோ வேர்வை? ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்றாள் அவள்.

ரிதன்யாவும் முகம் கழுவி விட்டு வந்தவள் நடந்த எதையும் சமிக்ஷாவிடம் கூறவில்லை. மாறாக ஸ்வராவின் டைரியைத் தேடினாள் அவள்! அதில் தானே ஸ்வரா அமேலியா பாடும் பாடலை எழுதி வைத்திருந்தாள் என்றாள் சமிக்ஷா.

கட்டிலில் கிடந்த நோட்டினை எடுத்தவள் மெதுவாக அதன் பக்கங்களைப் புரட்டினாள். முத்து முத்தான ஆங்கில எழுத்துக்களில் ஸ்வரா என்னென்னவோ எழுதியிருந்தாள். சில பக்கங்களில் அந்த காலத்து விக்டோரியா மகாராணி போல உடையணிந்த பெண்மணி ஒருவரது ஓவியம் இருந்தது. அடுத்த பக்கத்தில் அவள் எழுதி வைத்திருந்ததை படித்த ரிதன்யாவின் இரத்தம் உறைந்து போனது.

சற்று முன்னர் அவள் கேட்ட அதே ஆங்கிலப் பாடல் ‘The great messenger of Mortality’ என்ற தலைப்பில் எழுதி அடிக்கோடிடப்பட்டிருந்தது.

Lady :

'My heart is cold; it trembles at such news!
Here's bags of gold, if you will me excuse
And seize on those; and finish thou their strife,
Who wretched are, and weary of their life.

Are there not many bound in prison strong
In bitter grief? and souls that languish long,
Who could but find the grave a place of rest
From all their grief; by which they are opprest.

Besides there's many with a hoary head
And palsied joints; from whom all joy is fled
Release thou them whose sorrows are so great,
And spare my life until a later date!'

Death:

Though thy vain heart to riches is inclined
Yet thou must die and leave them all behind.
I come to none before their warrant's sealed,
And, when it is, they must submit, and yield.

Though some by age be full of grief and pain,
Till their appointed time they must remain;
I take no bribe, believe me,this is true.
Prepare yourself to go; I'm come for you.'

அதாவது தன்னை நெருங்க வரும் மரண தேவனை ஒரு பெண் தடுத்து தன் ஆயுளை நீட்டிக்கும்படி கெஞ்சிய பாடல் அது. மெதுவாக அதன் வரிகளை வாசித்தாள் ரிதன்யா.

இதை தான் அமேலியா பாடுவாளோ? அந்நேரம் பாழடைந்த கட்டிடங்களுக்கு அருகே இருந்த சிமெண்ட் பூச்சுடன் கூடிய கிணற்றின் மேற்பரப்பில் இருந்த புதர்ச்செடிகள் காற்றில் அசையத் துவங்கியது. மெல்லிய உறுமலொன்று அங்கிருந்து எழுந்தது.

அது எதுவும் தெரியாமல் அமேலியாவின் பெயரை உச்சரித்தவள் “அப்ப நான் கேட்டது அமேலியாவோட ஆவி குரலையா?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

மீண்டும் வியர்க்க ஆரம்பித்தது. அவளின் கண்கள் திறந்திருந்த கதவின் வழியே தெரிந்த வெற்று வானத்தை வெறித்தது. அங்கேயும் காரிருள்! கண்ணை மூடிக்கொண்டாள் அதிலும் காரிருள்!

இதோ விளக்கு வெளிச்சம் போனதும் இந்த அறையும் காரிருளில் மூழ்கிவிடும்! அந்த இருள் தானே அவளுக்குப் பயமே!

பாட்டி சொன்ன இரத்தக் காட்டேரி கதையும், இரவில் முன்பெல்லாம் தன் அறைக்கு வரும் கோரமான கற்பனை உருவமும் சற்று முன்னர் சமிக்ஷா சொன்ன கதையுடன் சேர்ந்து கொள்ள என்னவோ தான் மட்டும் அந்த அறையில் இருப்பது போல அச்சமும் தவிப்புமாய் உணர்ந்தாள் ரிதன்யா.

இரவுணவு உண்ண அவளுக்கு விருப்பமில்லை. அறையில் தனித்திருக்கவோ பயம்! எங்கே அமேலியா வந்துவிடுவாளோ என்று!

எனவே வேறு வழியின்றி டைனிங் ஹாலுக்குச் சென்றவள் அக்கம் பக்கம் பாராது சாப்பாட்டை விழுங்கி வைத்தாள்.

அதன் பின்னர் தூக்கம் தான்!

சமிக்ஷா தங்களது அறைக்கு வந்ததும் “நான் மேல படுத்துக்கிறேன் ரித்து... நீ கீழ படுத்துக்க... குட் நைட்” என்று கூறிவிட்டு படுத்துவிட்டாள்.

அவள் என்னவோ விளக்கை அணைத்துவிட்டுப் படுத்து உறங்கிவிட்டாள். ஆனால் கீழே படுத்திருந்த ரிதன்யாவோ போர்வையால் தலை வரை இழுத்துப் போர்த்தியவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் தலைமாட்டில் ஸ்வராவின் டைரி கிடந்தது.

அதே நேரம் டாமெட்ரியின் பக்கவாட்டில் இருந்த புதரும் மரக்கூட்டமும் அடர்ந்த பகுதியில் நீச்சல்குளத்தையும் கிணற்றையும் மூடியிருந்த சிமெண்ட் தளம் விரிச்சல் கண்டது.

விரிச்சலுற்ற தரை மெதுவாகத் திறக்க ஒரு உருவம் அந்த விரிசலின் வழியே மேலே வந்தது.

பனிப்படலம் போல காட்சியளித்த அவ்வுருவத்தின் கால்கள் தரையில் பதியவில்லை. காற்றில் மிதந்து சென்ற அவ்வுருவம் அணிந்திருந்த நீண்ட கவுன் தரையில் புரண்டது. அதன் கூந்தலோ குளிர்க்காற்றில் அசைந்தது.

அந்த உருவம் மெதுவாக நகர்ந்து டாமெட்ரி பக்கம் நகர ஆரம்பிக்க அதன் வராண்டாவிலுள்ள விளக்குகள் அணைந்து அணைந்து எரிய ஆரம்பித்தன. காற்றும் மினி சூறாவளியாக மாறி வீசத் துவங்க அவ்வுருவம் பாடத் துவங்கியது.

Oh! heavy news! must I no longer stay?
How shall I stand at the great Judgement Day?'
Down from her eyes the crystal tears did flow,
She says, 'None knows what I now undergo!

Upon my bed of sorrow here I lie!
My selfish life makes me afraid to die!

மெல்லிய குரலில் ஒலித்த அப்பாடல் அவ்வுருவம் வராண்டாவை அடைந்ததும் கோரமான குரலாக மாற துவங்கியது. மரணத்தை ஏற்க மறுத்த அந்த ஆன்மாவின் துயர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பாடலாய் ஒலித்தது அந்த டாமெட்ரியின் வராண்டாவில்.

இரவிற்கே உரித்தான ஆழ்ந்த அமைதி! அந்த அமைதியைக் கிழித்தபடி பெரும் ஓலமாக ஒலித்த பாடல்! கூடவே திடீரென சில்லிட்ட குளிரில் உறக்கம் கலைந்த ரிதன்யா மெதுவாய் போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்து பார்த்தாள்.

அப்போது அவள் எதிரே நின்று கொண்டிருந்தது அவ்வுருவம்! அதை பார்த்ததும் ரிதன்யாவின் கருவிழிகள் அசையவில்லை! நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது!

அவ்வுருவம் தனது நீண்ட நகங்களுடனான கரத்தை நீட்டியது.

“கிவ் மீ”

பயங்கரமாக ஒலித்த அதன் குரலில் ரிதன்யா அலறப்போக அவ்வுருவமோ அவளது கரத்தின் அடியே இருந்த நோட்டினை நோக்கியது.

“கிவ் மீ”

மீண்டும் பயங்கரமாக உறும ரிதன்யா பயத்தில் உறைந்தே விட்டாள். தான் சொன்னதை கேட்கவில்லை என்றதும் அவ்வுருவத்திற்கு கோபம் வந்துவிட்டது.

பெருஞ்சினத்துடன் “ஆஆஆஆஆஆ” என்று கத்தியது அவ்வுருவம்.

ரிதன்யா பயத்தில் செவிகளை மூடிக்கொள்ள, வாய் கிழிந்து நீளப்பற்களுடன் எலும்பு துருத்திய மோவாயில் உதிரம் வழிய வெண்ணிற கவுனுடன் அங்கே நின்று கொண்டிருந்தவள் அமேலியா ஆஸ்பார்ன்.

அவளின் கரங்கள் நீளமான நகங்களுடன் நீண்டு ரிதன்யாவின் கரத்தைப் பிடிக்க வர அவளோ கத்தவும் துணிவின்றி வேர்த்து வழிந்தபடி இமைக்காது அமர்ந்திருந்தாள்.

உதிரம் துளிதுளியாக ரிதன்யாவின் போர்வையில் தெறிக்க அவளை விழுங்குபவளைப் போல வாயைப் பிளந்தபடி ரிதன்யாவை நோக்கி வெறியுடன் பாய்ந்தாள் அமேலியா.

“அம்மாஆஆஆஆஆ”

பயத்தில் ரிதன்யா அலற அடுத்த நொடியில் “ரித்து” என்று பதற்றத்துடன் சமிக்ஷாவின் குரல் ஒலிக்க அங்கிருந்த அமேலியாவின் கோரமான ஆத்மா வெண்ணிறப்பனிப்புகையாய் கலைந்து மறைந்தது.

ரிதன்யா பயத்தில் கோழிக்குஞ்சாய் நடுங்க அறையின் விளக்கைப் போட்ட சமிக்ஷா அவளிடம் ஓடி வந்து என்னவென வினவினாள்.

“அ....ம்...ம்...மே...லி...யா...ஆ”

நடுங்கியபடி உரைத்தாள் ரிதன்யா.

சமிக்ஷா சுற்றி முற்றி பார்த்தவள் அங்கே யாருமில்லை என்றதும் “நான் சொன்ன கதைய வச்சு நீ பயந்துட்ட... அமேலியா எப்பவும் வராண்டால தான் நிப்பா... ரூமுக்குள்ள வர மாட்டானு ஸ்வரா சொல்லிருக்கா” என்றாள்.

“நா....ன் பாத்...தே...ன்... கை... நீளமா”

பயத்தில் நடுங்கியபடியே உரைத்தாள் ரிதன்யா. சொன்னவளின் விழிகளில் மீண்டும் கலவரம் மூளவும்

“என்னாச்சு ரித்தி?” என்றாள் சமிக்ஷா.

ரிதன்யா பேசாமல் தனது கரத்தை நீட்டி அவளின் பின்னே காட்ட திரும்பினாள் சமிக்ஷா.

அங்கே கூரிய பற்களைக் காட்டியபடி கோரமாகச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள் அமேலியா.

இது வரை செவி வழியாக மட்டும் கேட்டிருந்தவள் ஆவியுருவத்தைக் கண்டதும் நடுங்கிப் போனாள்.

பயத்தில் அலறப் போனவளின் கழுத்தைப் பற்றிக் கொண்டாள் அமேலியா. அவளின் கூர்நகங்கள் சமிக்ஷாவின் கழுத்தில் காயத்தை உண்டாக்க வலியில் அவள் முனக ஆரம்பித்தாள்.

இவ்வளவையும் பார்த்தபடி அச்சத்தில் விழி தட்டாது அமர்ந்திருந்த ரிதன்யா பதற்றத்தில் ஸ்வராவின் நோட்டினை தட்டி விடவும் அமேலியாவின் ஆவி கோபத்துடன் ரிதன்யாவிடம் திரும்பியது.

அது சமிக்ஷாவை தூக்கி வீசியதும் அவள் வராண்டாவில் சென்று விழ ரிதன்யாவும் வெளியே பாய்ந்து ஓடினாள். அமேலியாவின் ஆவி சீற்றமுற்றது. ஓடிய ரிதன்யா “சமி” என்று கண்ணீருடன் தரையில் பேச்சு மூச்சற்று கிடந்த சமிக்ஷாவை அணைத்துக் கொண்டாள்.

உள்ளேயோ அமேலியாவின் கொடூரம் வழியும் விழிகள் அந்த நோட்டினைக் கண்டதும் அதை வாரியெடுத்துக் கொண்டது.

காற்றில் மிதந்தபடியே வராண்டாவிற்கு வந்த அமேலியா கொடூரமாகக் கத்தி வாயைப் பிளந்தவள்

“ஹவ் டேர் யூ டு சிங் மை சாங்? ஐ வில் கில் போத் ஆப் யூ” என்று தனது கூர்நகங்களால் ரிதன்யாவை நெருங்கியம் நொடி அவள் மனம் அச்சத்தில் தவித்தது.

இப்போது மட்டும் என் அம்மா இருந்திருந்தால்...

அடுத்த நொடி அங்கே பலமாக காற்று வீசியது. ரிதன்யா கண்ணைத் திறந்து பார்க்க அமேலியாவின் கரத்திலிருந்த நோட்டு அந்தக் காற்றில் பறந்து படிக்கட்டில் உருண்டோடி அதன் கீழ்ப்புறத்தில் ஒரு ஓரமாக விழுந்தது.

எங்கோ கோட்டான்கள் ஊளையிடும் சத்தம் கோரமாய் கேட்க பெரும் அலறலுடன் அமேலியா அவர்களை நெருங்கிய நொடியில் படிக்கட்டில் தடதடவென பலரது காலடி சத்தம் கேட்டது.

அதை கேட்டதும் அமேலியா புகையாய் மாறி மறைய ரிதன்யாவோ சமிக்ஷாவைக் கட்டியணைத்தபடி நடுங்க ஆரம்பித்தாள்.

“ரிதன்யா”

திடுதிடுப்பென கேட்ட குரலில் திடுக்கிட்டவள் அங்கே பள்ளி முதல்வரும் காவலாளியும் வார்டன்கள் சகிதம் நிற்கவும் பயம் குறைந்து சமிக்ஷாவைக் காட்டினாள்.

“என்னாச்சு ரிதன்யா? வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்? இந்தப் பொண்ணு ஏன் இப்பிடி விழுந்து கிடக்கா?” என கேள்விக்கணைகளைப் பொழிந்தவண்ணம் சமிக்ஷாவைத் தூக்குமாறு கட்டளையிட்டார் வான்மதி.

“நம்ம ஸ்கூல் டிஸ்பென்சரிக்கு இந்தப் பொண்ணை தூக்கிட்டுப் போங்க பீம்... ரிதன்யா நீயும் வா” என்றவர் வார்டன்களிடம் மற்ற மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கட்டளையிட்டு விட்டு பள்ளி வளாகத்திலிருக்கும் சிறிய டிஸ்பென்சரியை நோக்கி ரிதன்யாவுடன் சென்றார்.

அங்கே சமிக்ஷாவை சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு ரிதன்யாவின் அதிர்ச்சி தீரட்டும் என காத்திருந்தார் வான்மதி. அதற்குள் வார்டன்கள் வந்துவிட அவர்களைத் திட்டி தீர்த்தார்.

“கேர்ள்ஸோட பாதுகாப்பை கவனிக்காம நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க? ரெண்டு பொண்ணுங்களுக்கு ஏதோ ஆபத்து வந்திருக்கு... அவங்க கத்துன சத்தம் உங்களுக்குக் கேக்கவே இல்லையா?”

“இல்ல மேடம்! நீங்களும் பீமும் வந்து கதவைத் தட்டுனதுக்கு அப்புறம் தான் எங்க தூக்கம் கலைஞ்சுது... எப்பவும் இப்பிடி தூங்குனது இல்ல”

“ஷட்டப்... ஐ டோண்ட் நீட் யுவர் சில்லி எக்ஸ்ப்ளனேசன்... இனிமே என்னோட ரூமை நான் கேர்ள்ஸ் டாமெட்ரி பக்கம் மாத்திக்கலாம்னு இருக்கேன்... ஐ டோண்ட் நோ, வாட் இஸ் த யூஸ் ஆப் வார்டன்ஸ் ஹியர்? ரிதன்யாவோட அம்மா கால் பண்ணுனதால நான் டெலிபோன் ரிங் கேட்டு எழுந்திருச்சேன்... என் பொண்ணு கிட்ட பேசணும்னு அவங்க சொன்னாங்க... இப்ப என்ன பேசப்போறீங்கனு கேக்குறப்ப தான் கேர்ள்ஸோட அலறல் என் காதுல விழுந்துச்சு... விழுந்தடிச்சுக்கிட்டு பீமும் நானும் வந்தா நீங்கல்லாம் தூங்கிட்டிருக்கீங்க... அந்தப் பொண்ணுங்க நிலமைய பாத்தீங்களா? பதிமூனு வயசு பொண்ணுக்கு கீழ விழுந்ததுல பயங்கரமான அடி... ஹேண்ட் போன் வேற ஃப்ராக்சர் ஆகியிருக்கு... இன்னொரு பொண்ணு ஆல்ரெடி சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் எடுத்தவ... அவளுக்கு இந்த மாதிரி மோசமான அனுபவம் தொடர்ந்து நடந்துச்சுனா அவளோட மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்குனு அவங்கப்பாவே சொன்னார்... நாளைக்கு அவர் வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?”

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே “மேம்” என்ற ரிதன்யாவின் குரல் கேட்டது.

அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்க்க வான்மதியோ “ஆர் யூ ஆல்ரைட் ரிதன்யா? என்னம்மா நடந்துச்சு அங்க?” என்று படபடக்க

“எங்கம்மா இறந்து போய் டூ இயர்ஸ் ஆகுது மேம்” என்று மட்டும் பதில் அளித்தாள் ரிதன்யா.

வான்மதி அதிர்ச்சியில் கண்களை மூட மறந்தவர் ஆதிசேஷன் தனது இரண்டாவது மனைவி சௌம்யாவைப் பற்றி கூறியது நினைவில் வரவும் இன்னும் அதிர்ந்தார்.

“அப்பாவோட நியூ ஒய்புக்கு என்னை அவங்க மகள்னு சொல்லிக்கப் பிடிக்காது”

அப்படி என்றால் தனக்கு அழைத்தவர் யாராக இருக்க முடியும்? எவ்வளவோ யோசித்தும் வான்மதிக்கு விடை கிடைக்கவில்லை.

வார்டன்களோ தங்களது வேலை தப்புமா என்ற தவிப்பில் இருக்க அவரோ இச்சிறுமிகளுக்கு என்ன தான் நடந்தது என்பதை விசாரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

நடுக்கம் குறைந்து இயல்புக்குத் திரும்பிய ரிதன்யாவைத் தன்னருகே அமர்த்திக் கொண்டவர்

“உங்க ரெண்டு பேரையும் இந்த நிலமைக்கு ஆளாக்குனது யாரு? பயப்படாம சொல்லும்மா” என்று விசாரிக்க

“அமேலியா” என்று குரல் நடுங்க பதிலுரைத்தாள் ரிதன்யா.

வான்மதி இது என்ன பைத்தியக்காரத்தனம் என்பது போல அவளைப் பார்த்தார்.

“லிசன்! இங்க அமேலியா ஆஸ்பார்ன் பத்தி நிறைய கட்டுக்கதை நடமாடுதுனு எனக்கும் தெரியும்... அவங்க வாழ்ந்தது கிட்டத்தட்ட மூனு நூற்றாண்டுக்கு முன்னாடி ரிதன்யா... அவங்களோட பாடி கூட இப்ப மிச்சமிருக்காது... அப்பிடிப்பட்டவங்க உங்களை பயமுறுத்துனாங்களா? சரி நீ சொல்லுறது உண்மைனே வச்சுப்போம்... ஏன் அவங்க உங்களை பயமுறுத்துனாங்க?”

“சமி அவங்களோட பாட்டு எழுதுன நோட்டை என் கிட்ட குடுத்தா... அவங்க டெய்லியும் வராண்டால நின்னு அந்தப் பாட்டை பாடுறப்ப சமியோட டாம் மேட் ஸ்வரா அதை கவனிச்சு நோட்டுல எழுதி வச்சாளாம்”

“ஸ்வரா மீன்ஸ், மாடிப்படில தவறி விழுந்து இங்க இருந்து கிளம்பி போனாளே அந்தப் பொண்ணா?”

“ம்ம்”

வான்மதி குழம்பிப் போனார்.

“சரி! அந்த நோட்டுக்கு இப்ப என்ன?”

“அந்த நோட்ல எழுதியிருக்குற ‘the messenger of mortality’ங்கிற பாட்டை நான் வாசிச்சேன் மேம்... அது அமேலியாவுக்குப் பிடிக்கல... அதான் அவங்க எங்களைக் கொல்லப் பாத்தாங்க... அந்தப் பாட்டை அவங்களை தவிர வேற யாரும் படிக்க கூடாதுனு நோட்டை என் கிட்ட இருந்து பிடுங்குனாங்க... அப்ப நீங்க வந்ததும் அவங்க மறைஞ்சு போயிட்டாங்க... எனக்கு அவங்க மறுபடியும் வந்துடுவாங்களோனு பயமா இருக்கு மேம்”

அழுதபடி அவரது கையை ரிதன்யா இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வான்மதியோ எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“அந்த நோட் எங்க?”

“அது எங்க போச்சுனு தெரியல மேம்”

ரிதன்யாவை கூர்ந்து நோக்கியவர் “நைட் நீ வழக்கமா போடுற மெடிசினை போட்டியா?” என்று வினவ இல்லையென தலையசைத்தாள் ரிதன்யா.

அவள் கூறிய அனைத்தையும் வைத்து ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் வார்டன்களை அனுப்பிவிட்டு ரிதன்யாவுடன் டிஸ்பென்சரியில் இருந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் வந்த மருத்துவர் வான்மதியை அழைத்தார்.

“அந்தப் பொண்ணோட கழுத்துல ஷார்ப்பான நகக் காயங்கள் இருக்கு மேம்... ட்ரீட்மெண்ட் முடிஞ்சாச்சு... ஸ்லீப்பிங் டோஸ் குடுத்திருக்கேன்... மானிங் மத்த விசயத்த விசாரிச்சுக்கலாம்... இன்னொரு கேர்ள் என்ன சொல்லுறா?”

“வழக்கமான அமேலியாவோட ஆவி கதை தான்... என்னால அதை நம்ப முடியல... ஏன்னா இந்தப் பொண்ணு சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் போய் மெடிசின் எடுத்திருக்கா... மெடிசின் சாப்பிடாததால அவளுக்கு எப்பவும் வர்ற ஹாலுசினேஷனால தானும் பயந்து சமிக்ஷாவையும் பயமுறுத்திட்டானு தோணுது”

“தென் வாட் அபவுட் தோஸ் நெக் இன்ஜூரிஸ் மேம்? ரெண்டு கேர்ள்ஸோட கையிலயும் நகம் நீளமா இல்ல... சம்திங் ஃபிஷ்ஷி.... எதுக்கும் கேர்ள்ஸ் டாமெட்ரில சி.சி.டி.வி வைக்கிறது நல்லது”

அவர்கள் பாதுகாப்பு குறித்த கண்ணோட்டத்தில் பேசிக்கொண்டிருக்க ரிதன்யாவோ முகம் வெளிறிப் போனவளாய் அமர்ந்திருந்தாள்.

கண்ணை மூடினால் அமேலியா பிளந்த வாயிலிருந்து வழியும் இரத்தத்துடன் “ஹவ் டேர் யூ?” என்று பயமுறுத்தினாள்.

இப்படியே இரவு கழிந்தது. மறுநாள் விடியலில் வான்மதி இருவரின் பெற்றோருக்கும் நடந்ததை தெரிவித்துவிட்டார். அவர்களும் சீக்கிரம் வருவதாக கூறிவிட கண் விழித்த சமிக்ஷாவிடம் என்ன நடந்தது என்று கேட்க அவளும் அமேலியாவின் கதையையே கூறினாள்.

வான்மதியால் அதை நம்ப முடியவில்லை. சமிக்ஷாவோ “என்னால தான் மேம் எல்லாமே நடந்துச்சு... நான் தான் ரித்துக்கு அமேலியாவோட கதைய சொன்னேன்... ஸ்வராவோட நோட்டை குடுத்ததும் நான் தான்... அவ அந்தப் பாட்டை வாசிச்சது தான் அமேலியாக்குப் பிடிக்கல... அதான் அவங்க எங்களை கொல்ல பாத்தாங்க” என்றாள் திக்கி திணறியபடி.

ரிதன்யா அங்கே வர அவளிடம் மன்னிப்பும் கேட்டாள். இப்படியே நாள் கழிய மாலையில் தான் இருவரின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர்.

சமிக்ஷாவின் தந்தை மகளின் நிலையைக் கண்டு உடைந்து போனார். கழுத்தில் காயம், உடைந்த கையுடன் மகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புவதாக அவள் கூற வான்மதியாலும் மறுக்க முடியவில்லை. மாலை மங்கி இருள் மெதுவாய் பரவ ஆரம்பித்த நேரத்தில் சமிக்ஷாவை காரில் ஏற்றி வைத்தனர். பீம் அவர்களுக்கு உதவியாக இருக்கவும்

“டி.சிய நான் கொரியர் பண்ணி விட்டுடுறேன் சார்” என்று மட்டும் கூறியவர் தனது அலுவலக அறைக்குத் திரும்பினார். ஆதிசேஷனும் சௌம்யாவும் எரிச்சலுடன் அமர்ந்திருப்பதைக் கண்ணுற்றுவிட்டு அவர்களின் முடிவு என்ன என்று வினவினார்.

ஆதிசேஷன் பதிலளிப்பதற்குள் முந்திக் கொண்ட சௌம்யாவோ “ரிதன்யா இங்கயே இருக்கட்டும் மேம்... அவ அங்க வந்தா அந்த உருவத்த பாத்தேன், இந்த உருவத்த பாத்தேன்னு சொல்லி சொல்லி ஆதிய டென்சன் ஆக்குவா” என்க

“அதே தான் இங்கயும் சொல்லுறா... அவ சொல்லுற அமேலியா ஆஸ்பார்ன்ங்கிற பிரிட்டிஷ் லேடி இறந்து போய் கிட்டத்தட்ட முன்னூறு வருசம் ஆகுது... இங்க ஸ்விம்மிங் ஃபூல் கட்டுறப்ப அவங்க சமாதிய இடிச்சு பக்கத்துல இருந்த கிணத்துல அவங்க சவப்பெட்டிய தூக்கி போட்டுட்டதால அந்தக் கிணத்துக்குள்ள அமேலியா இருக்குறதா ஒரு கட்டுக்கதை இந்த சுத்து வட்டாரத்துல உலாவுது... ஸ்டூடண்ட்ஸ் சிலர் நீச்சல் குளத்துல விழுந்து இறந்து போனதால அதை ஸ்கூல் மேனேஜ்மெண்ட் மூடிட்டாங்க... அந்தக் கிணறைச் சுத்தியும் மண்ணைக் கொட்டி மேடாக்கி கிணத்தையும் சிமெண்ட் போட்டு மூடியாச்சு... அதுல இருந்து ஆவி வருதுனு யாரோ போற போக்குல சொன்ன கதைய சில ஸ்டூடண்ட்ஸ் நம்புனதால இங்க நிறைய பிரச்சனை வந்துச்சு... இதுல்லாம் சுத்த மூடத்தனம்... இந்த டெக்னாலஜிக்கல் வேர்ல்ட்ல பேய் ஆவினு பேசுறதுல்லாம் சுத்த ஹம்பக்” என்றார் வான்மதி.

ஆதிசேஷன் மௌனம் கலைந்தவர் “இப்ப நாங்க என்ன தான் செய்யணும் மேம்?” என வினவ

“சிம்பிள்! உங்க பொண்ணை இங்க இருந்து அழைச்சிட்டுப் போயிடுங்க... ஸ்வரா போனப்பவே சமிக்ஷாவையும் அனுப்பி வச்சிருந்தா இப்ப அவளால ரிதன்யா பயந்திருக்க மாட்டா... இப்ப உங்க பொண்ணும் அமேலியாவோட ஆவி கதைய நம்புறா... தென் அவ மூலமா இந்தக் கட்டுக்கதை தொடர்ந்து பரவும்... அதுல எனக்கு விருப்பமில்ல... அவளை வேற எதாச்சும் போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துடுங்க... உங்க பி.ஏவை டுமாரோ அனுப்பி வைங்க... டி.சி ப்ராசஸ் பண்ணி குடுத்துடுறேன்” என்றார் வான்மதி.

ஆதிசேஷன் அயர்ந்துவிட சௌம்யா வான்மதியிடம் நைச்சியமாகப் பேசினாள்.

“ரிதன்யா இந்தக் கதைய வெளிய சொல்லமாட்டேன்னு உறுதி குடுத்தா நீங்க இங்கயே அவளை வச்சுப்பீங்களா மேம்?”

“அது பாஸிபிளா? உங்க பொண்ணு ரொம்ப பயந்திருக்காம்மா”

“அவ இனிமே இந்தக் கதைய வெளிய சொல்லமாட்டா... நான் அவ கிட்ட பேசுறேன்... இப்ப ரிதன்யா எங்க இருப்பா?” என்று வினவ

“அவளோட ரூம்ல தான் உக்காந்திருந்தா... நான் வர்றப்ப ஆபிஸ் ரூமுக்குக் கூப்புட்டேன்... ஆனா அவ காது கேட்ட மாதிரியே காட்டிக்கல... எனக்கு முதுகு காட்டி எதையோ தேடிட்டிருந்தவ ரூமை விட்டு வெளிய வரவேல்ல” என்றார் அவளது வார்டன்.

சௌம்யா ஆதிசேஷனிடம் சொல்லிக்கொண்டு டாமெட்ரியை நோக்கி கிளம்பினாள். வெளியே இருளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது.

விளக்கின் வெளிச்சம் இருளை விரட்டிய பாதையில் செல்லும் போதே மொபைல் சிணுங்க அதை காதுக்குக் கொடுத்தவள் “சொல்லு நிகில்” என்று பேசியவாறே நடந்தாள்.

“நான் இப்ப அந்தச் சனியன் படிக்கிற போர்டிங் ஸ்கூல்ல தான் இருக்கேன்... அது இங்க வந்தும் ஏதோ பேய் கதை சொல்லுதாம்... வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்கனு பிரின்சிபல் ஸ்ட்ரிக்டா சொல்லுறாங்க... அதான் ஒழுங்கு மரியாதையா இங்கயே வாய மூடிக்கிட்டு இரு, அங்க வந்தேன்னா உங்கம்மா போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வச்சிடுவேன்னு மிரட்டி பணிய வைக்கலாம்னு அதோட டாம்கு போறேன்”

மறுமுனை ஏதோ சொல்ல “ஆதியா? அவருக்கு இவளைச் சுத்தமா பிடிக்காது... முதல் பொண்டாட்டி மேல ஓவர் லவ்ஸ்... அந்தம்மா செத்ததே இவளால தான்னு நம்புறவர் ஏன் இவ மேல பரிதாபப்படப் போறார்? நான் வேற கன்சீவா இருக்கேன்னு பொய் சொல்லி வச்சிருக்கேன்... முதல் தாரத்துக்குப் பிறந்தது தான் பைத்தியமா போயிடுச்சு, இந்தக் குழந்தையாச்சும் நல்லபடியா பிறக்கணும்னு மனுசன் நான் கேட்ட எல்லாத்தையும் டக்கு டக்குனு செய்யுறார்டா தம்பி... நீ ஒன்னும் கவலைப்படாத” என்று சமாதானம் சொன்னபடி நடந்தவள் மாடிப்படியை அடைந்துவிட்டாள்.

அங்கேயே நின்று “சோ வாட்? இந்தக் குட்டிச்சாத்தான் இல்லாத கேப்ல அந்தாளை மயக்கி உண்மையாகவே கன்சீவ் ஆகுறதுக்கு எனக்குத் தெரியாதா என்ன? நம்ம ப்ளான் படி ஆதிசேஷன் சொத்து நம்ம கைக்கு வந்து சேரும்டா... சோ கவலைப்படாத நிகில்... உன் அக்கா புத்திசாலி... எதையும் ப்ளான் பண்ணி தான் செய்வா” என்று பேசி முடித்தவள் நகர முற்படுகையில் அவள் காலில் ஏதோ இடற என்னவென குனிந்து எடுத்தாள்.

அது ஒரு நோட்டு. அதன் முகப்பில் ‘ஸ்வரா’ என்ற பெயருடன் லேபிள் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அதைப் புரட்டியபடியே படிகளில் ஏறத் துவங்கினாள். அதில் ஆங்கிலேயே பெண்மணியின் படம் வரையப்பட்டிருக்க சுவராசியமாகத் திருப்பியவள் அடுத்தப் பக்கத்தில் எழுதியிருந்த ‘the messenger of mortality’ என்ற பாடலைப் பார்த்துவிட்டாள்.

Lady:
'What bold attempt is this? Pray let me know
From whence you come, and whither I must go.
Shall I, who am a lady, stoop or bow
To such a pale-faced visage? Who art thou?'

Death:

'Do you not know me? I will tell you then:
I am he that conquers all the sons of men,
No pitch of honour from my dart is free,
My name is Death! Have you not heard of me?'

Lady:

'Yes; I have heard of thee, time after time;
But, being in the glory of my prime,
I did not think you would have come so soon;
Why must my morning sun go down at noon?'

Death:

'Talk not of noon! you may as well be mute;
There is no time at all for vain dispute,
Your riches, gold, and garments,jewels bright,
Your house, and land, must on new owners light.'

மரணத்துக்கும் ஒரு பெண்ணுக்குமிடையேயான உரையாடல் பாணி பாடல் என எண்ணிக்கொண்டவள் வாய் விட்டு அதன் வரிகளை முணுமுணுத்தபடியே டாமெட்ரியின் வராண்டாவை அடைந்துவிட்டாள்.

அதன் முதல் அறையில் தான் ரிதன்யா தங்கியிருக்கிறாள் என்பதை ஏற்கெனவே கேட்டுத் தெரிந்து கொண்டவள் அந்த அறைக்கதவைத் தட்டினாள்.

“ஏய் நான் தான் வந்திருக்கேன்... கதவைத் திற”

உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. பூட்டியிருந்த கதவை மீண்டும் தட்டினாள் சௌம்யா.

அப்போது வராண்டாவின் கடைசி முனையில் யாரோ நிற்பது போல தெரிந்தது. சௌம்யா திரும்பிப் பார்க்கையில் பனிப்புகையாய் ஒரு உருவம் அங்கே நின்றிருந்தது. கூடவே மெல்லிய குரலில் அது பாடத் துவங்கியது.

What bold attempt is this? Pray let me know
From whence you come, and whither I must go.
Shall I, who am a lady, stoop or bow
To such a pale-faced visage? Who art thou?

 

“யாருங்க அது?” கேட்டபடியே நின்றாள் சௌம்யா.

அந்தப் பனி போன்ற உருவம் மெதுவாக பாடியபடி அவளை நெருங்கி வந்தது. அருகே வர வர அந்த உருவம் அமேலியாவாக மாறியது.

பெரிய கவுனும் தோளில் புரளும் கூந்தலுமாக நின்றவள் சௌம்யாவைப் பார்த்து கொடூரமாகச் சிரித்தாள்.

சிரிக்கையில் அவள் வாய் கிழிந்து பெரிய ட்ராகுலா பற்கள் வெளியே தெரிய அவள் வாயிலிருந்து வழிந்த உதிரம் மோவாயை நனைத்தது.

“நீ.... நீ... யாரு?”

சௌம்யா பயத்தில் திக்கி பேச அமேலியாவோ தனது கூரிய நகங்களுடனான கரத்தை நீட்டி “கிவ் மீ” என்று கேட்டாள்.

அவ்வளவு அகோரமான ரூபத்தை அருகே பார்த்தவளுக்கு அட்ரினலின் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்தது.

“என்னை விட்டுடு”

“கிவ் மீ” என்று உறுமியது அமேலியாவின் ஆவி!

சௌம்யாவிற்கு அமேலியா எதை கேட்கிறாள் என்று புரியவில்லை. இவ்வளவு பயங்கர உருவத்தை அவள் பார்த்ததே இல்லை. ரிதன்யா இப்படி சொல்லும் போதெல்லாம் கேலி செய்திருக்கிறாள்! இதோ அப்படி ஒரு அமானுஷ்யம் அவள் கண் முன்னே நிற்கிறது. பயத்தில் நோட்டை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் அவள்.

சௌம்யா நோட்டை கொடுக்கவில்லை என்றதும் கோபமுற்ற அமேலியா அவளது முகமருகே வாயைப் பிளந்தபடி வரவும் பயந்து போய் சௌம்யா ஓட ஆரம்பித்தாள்.

ஓடியவள் படிகளில் வேகமாக இறங்கி எங்கே செல்கிறோம் என்று புரியாது டாமெட்ரியின் பக்கவாட்டில் புதர்களும் மரக்கூட்டங்களுமாய் நிற்கும் பாழடைந்த கட்டிடங்களை நோக்கி சென்றாள். அவளுக்குப் பின்னால் அமேலியாவின் அமானுஷ்ய சிரிப்பும் அகோரமான புகை ரூபமும் “ஓ” என்ற கொடூர ஓலத்துடன் தொடர்ந்தது.

அதே நேரம் முதல்வரின் அறையில் ஆதிசேஷன் வான்மதியைச் சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருக்கையில் “மேம்” என்றபடி வந்து சேர்ந்தாள் ரிதன்யா. கூடவே காவலாளி பீம்!

அவளைப் பார்த்ததும் “சௌம்யா எங்க? நீ மட்டும் வந்திருக்க?” என்று வினவினார் ஆதிசேஷன்.

“அவங்க எங்கனு தெரியலப்பா... நான் இப்ப தான் சமிக்ஷாவை வழியனுப்பிட்டு வாட்ச்மேன் அங்கிள் கூட இங்க வந்தேன்... அவங்க அங்க வரலையே” என்றாள் ரிதன்யா.

வார்டனோ “நான் இங்க வர்றப்ப நீ உன்னோட ரூம்ல எதையோ தேடிட்டு இருந்தியே ரிதன்யா” என்க

“இல்ல மேடம்... பாப்பா என் கூட தான் இருந்துச்சு... சமிக்ஷா பாப்பாவோட அப்பா வந்த கார்ல சின்ன பிரச்சனை... அது சரி பண்ணிட்டு வழியனுப்பி வச்ச கையோட நானும் பாப்பாவும் இங்க தான் வர்றோம்” என்றார் பீம்.

ஆதிசேஷன் குழப்பம் சூழ “அப்ப சௌம்யா எங்க?” என்று வினவ அப்போது தான் அந்த அலறல் சத்தம் கேட்டது.

“ஆஆஆஆஆ”

ஆதிசேஷன் பதறியடித்துக் கொண்டு ஓடியவர் அந்த அலறல் வந்த திசை எது என புரியாது தவிக்க மீண்டும் அலறல் ஒலித்தது.

பீம் அவர் பின்னோடு ஓடிவந்தவர் “சார் அந்தப் பழைய கிணத்து பக்கத்துல இருந்து தான் அலறல் சத்தம் வருது” என்று கைகாட்ட இருவரும் சேர்ந்து அங்கே ஓடினர்.

அவர்கள் பின்னே வான்மதியும் வார்டன்களும் பதற்றத்துடன் செல்ல ரிதன்யாவோ வேறு வழியின்றி அந்தக் கிணறு இருக்கும் பகுதிக்குத் தைரியத்தைத் திரட்டிக்கொண்டு சென்றாள்.

அனைவரும் அங்கே சென்று பார்க்கையில் சௌம்யாவை ஏதோ ஒன்று அந்தரத்தில் தூக்கி நிறுத்தியிருந்தது. அங்கிருந்த யாருக்கும் அமேலியாவின் உருவம் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் ரிதன்யா பார்க்கையில் கோபாவேசத்துடன் தனது கூரிய நகங்கள் கொண்ட கரத்தால் சௌம்யாவின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த அமேலிய கொடூர ரூபமாகத் தெரிந்தாள்.

அவளது உறுமல் தொனியில் அந்த இடமே அதிர்ந்தது. சௌம்யாவை நோக்கி ஆதிசேஷன் ஓட எத்தனித்த நேரத்தில் அங்கே சிமெண்ட் பூச்சுடன் தெரிந்த கிணறும் நீச்சல்குளமும் விரிச்சல் கண்டன.

அமேலியா சௌம்யாவின் கரத்திலிருந்த நோட்டை பிடுங்க செய்த முயற்சியில் அவளது கரம் உடைக்கப்பட்ட சத்தம் அங்கே வார்டன்களுடன் நின்றிருந்த வான்மதியை மருட்டியது. அமேலியாவின் இன்னொரு கரம் சௌம்யாவின் கழுத்தை வெறியோடு நெறித்திருந்தது.

அடுத்த நொடி சௌம்யாவின் வாயிலிருந்து உதிரம் வழிய அவள் துடிதுடித்து மரணத்தைத் தழுவ ஆரம்பித்த தருணம் அமேலியா அவளை ஆதிசேஷன் முன்னே தூக்கி வீசினாள்.

பொத்தென்று தன் முன்னே விழுந்த சௌம்யாவின் பிணத்தை அழுகையுடன் ஆதிசேஷன் தூக்கச் செல்லவும், அங்கே பலத்த சூறாவளி காற்று வீச அமேலியாவின் ஆவி வெகு மூர்க்கத்துடன் அந்தக் கிணற்றுக்குள் சென்று மறைய கூடவே அந்த நோட்டும் காற்றில் பறந்து அவளுடனே சென்று மறைந்தது. இப்போது பழையபடி சிமெண்ட் பூச்சும் பாசியும் செடியுமாக காட்சியளித்தது அந்தக் கிணறு!

ரிதன்யா வானமதியின் கரத்தைப் பற்றி “அந்த நோட்டை தான் சொன்னேன் மேம்... அந்தப் பாட்டை யாராச்சும் படிச்சா அமேலியாக்குப் பிடிக்காது... இவங்க அந்த நோட்டை குடுக்காம இருந்ததால தான் அமேலியா கொன்னுட்டாங்க” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டாள்.

ஆதிசேஷனோ தன்னிடம் கருவுற்றிருப்பதாக சௌம்யா சொன்னது பொய் என்பது இன்னும் சிறிது நேரத்தில் பிரேத பரிசோதனை மூலம் தெரியப்போவது அறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்.

அதே நேரம் கிணற்றுக்குள் இருந்து அமேலியாவின் பாடல் மெதுவாய் அங்கே கேட்க ஆரம்பித்தது.

Thus may we see the mighty rise and fall,
For cruel Death shews no respect at all
To those of either high or low degree.
The great submit to Death as well as we.

The grave's the market place where all must meet
Both rich and poor, as well as small and great;
If life were merchandise, that gold could buy,
The rich would live -- only the poor would die!

அந்தகாரம் சூழ்ந்த இரவில் மனைவியை இழந்த ஆதிசேஷனின் அழுகையும் ரிதன்யாவின் அகலாத அச்சமும் அமேலியாவின் பாடலுடன் கலந்து விட்டது.

முடிவுற்றது!

ஹலோ மக்களே😍

2021, டிசம்பர் 30ல பிரதிலிபி நடத்துன ‘அந்தகாரம்’ போட்டிக்காக எழுதுன கதை இது மக்களே! பயங்கர கதைகள் எழுதி பழக்கமில்லாததால கொஞ்சம் சொதப்பிருப்பேன்... இதுல எல்லா விசயங்களுக்கும் காரணம் சொல்லிருக்க மாட்டேன்... பிகாஸ் ஹாரர், ஃபேண்டசி கதைகளுக்குப் பெரியளவில் காரணம் தேவையில்ல... ஹாரர்ல ஒரு சின்ன முயற்சி... அங்க வின் பண்ணவும் செஞ்சுது... படிச்சிட்டு உங்க கருத்தைப் பகிர்ந்துக்கோங்க. குட் நைட்!

நன்றி🙏

நித்யா மாரியப்பன்🦋

 

 

 

1756637039-WhatsApp-Image-2025-08-31-at-161253_22445c5c.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 31, 2025 4:13 PM
(@crvs2797)
Reputable Member Member

நிசமாவே  செய்த பயங்கரமா 

இருந்தது. நல்லவேளை, ரிதன்யா மட்டுமாவது தப்பிச்சாளேன்னு தோணுச்சு போங்க.

😀😀😀

CRVS (or )CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 31, 2025 9:23 PM
(@kothai-suresh)
Reputable Member Member
  • அச்சோ பயமா இருந்துது, நல்லவேளைநல்லவேளை ரிதன்யா தப்பிச்சா, அவ அம்மா தான்  காப்பாத்தி இருக்கா

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 31, 2025 11:35 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

நிஜமா ரொம்ப பயங்கரமா இருக்கு....

 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 1, 2025 7:22 PM
(@ananthi)
Trusted Member Member

எப்பா....செம்மையா இருந்தது.....கண் முன்னாடி அமேலியா நிக்குற மாதிரியே இருக்கு.,😰😰😰😰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 2, 2025 6:34 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index