
கோல்டன் கஃபே! காலையும் மதியமும் சந்திக்கும் நேரத்தில் வெளியே அடித்த வெயிலுக்கு இதமாக ஏ.சி காற்றை தனது கூரையின் கீழ் இருப்பவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அதன் கண்ணாடிக்கதவைத் திறந்தபடி உள்ளே எரியும் மஞ்சள் விளக்கொளியில் மின்னும் கஃபேக்குள் இறுக்கமான முகத்துடன் நுழைந்தாள் ஆராதனா.
இருபத்தெட்டு வயது நிரம்பியவள். எளிமையான காட்டன் சுடிதாரில், காதில் சிறிய தங்கத்தினாலான ஸ்டட், கையில் ஒரு வெள்ளி பிரேஸ்லெட் இவ்வளவு தான் அவள் அணியும் அணிகலன்கள். கூர்நாசிக்கு மேல புருவங்கள் சந்திக்கும் இடத்தில் கடுகு போல புருவத்தின் நிறத்திலேயே சிறிய பொட்டை ஒட்டியிருந்தவள் அடிக்கடி அது நெற்றியில் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தவாறு தன்னை வரச் சொன்ன நபரைத் தேடி கண்களை அலைய விட்டவளின் செவியில் “ஏய் ஆரு! ஆரு பேபி” என்ற குரல் விழவே அவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள்.
இந்த இருபத்தெட்டு வருடத்தில் அவளை ஆரு பேபி என்று அழைக்கக் கூடியவன் தான் இப்போது மும்பையில் இருக்கிறானே என்று எண்ணியவளாய் குரலுக்குரியவனைத் தேட அவள் முன்னே வந்து பிரசன்னமானான் அவன்.
அவனை முதல் முறை பார்த்த போது இருந்த அதே குறும்புத்தனம் இன்னும் குறையாமல் தன் முன் நின்றவனைக் கண்ட ஆராதனாவின் இதழ்கள் “அர்ஜூன்” என்று அந்தப் பெயருக்கு வலிக்குமோ என்பது போல அவனது நாமத்தை உச்சரிக்க அவள் எதிரில் நின்றவனுக்கு இந்த ஏழு வருடத்தில் தனது பெயருக்கு இல்லாத உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. அவன் தான் அர்ஜூன், இருபத்தெட்டு வயது ஆண் மகன். கம்பீரத்திலும், ஆளுமையிலும் அவனை மிஞ்ச ஆளேது என்று பார்ப்பவர் கூறும் அளவுக்கு இருக்கும் அவனது தோற்றம்.
ஆனால் ஆராதனாவைக் கவர்ந்தது அவனது குணநலனே. இருவரும் முதலில் சந்தித்தது அவர்களின் கல்லூரியில் தான். இருவரும் ஒரே வகுப்பு வேறு. முதல் முறையாக பார்த்த போதே ரேகிங் செய்த இறுதியாண்டு மாணவர்களிடம் இருந்து வகுப்புத்தோழியைக் காப்பாற்றிய அவனது உதவும் மனப்பான்மையே ஆராதனாவை அவனுடன் நட்பு கொள்ள வைத்தது. அது மட்டுமன்றி மனதில் கல்மிஷம் இன்றி மூன்று வருடங்களுக்கு அந்த நட்பைக் கட்டி காத்த கண்ணியவான் அவளது இந்த உயிர் நண்பன் என்ற பெருமை அவளுக்கு எப்போதுமே உண்டு.
ஆனால் அவளுக்கு இருந்த ஒரு சிறு வருத்தம், அவளது திருமணத்துக்கு கூட வராமல் அவன் பூனா சென்றது தான். அதன் பின் அவளைத் தொடர்பு கொள்ள கூட அவன் முயலவில்லை. ஆராதனாவுக்குமே அதன் பின் அவளது கணவன் ஆதித்யா, அவளது வங்கிப்பணியில் கவனம் திரும்பி விட அர்ஜூனின் நினைவுகள் அவள் மனதோடு உறைந்துவிட்டது. ஆனால் அவ்வபோது ஆதித்யாவிடம் அவனும் அவளும் செய்த குறும்புகளைச் சொல்லி சிரிப்பதுண்டு.
இவை அனைத்தையும் நியாபகப்படுத்தியவள் பெருமூச்சுடன் “வாங்க பெரிய மனுசரே! உங்களுக்கு என்னைல்லாம் நியாபகம் இருக்கா?” என்று கடுப்பு கலந்த கேலியுடன் கேட்க
அர்ஜூன் அவளைச் சமாதான படுத்தும் விதமாக காதுகளைப் பிடித்துக் கொண்டவன் “ஆரு பேபி! உன் செல்ல ஃப்ரெண்டை மன்னிக்க மாட்டியா? இப்போ நீ மன்னிக்கலைனு வையேன், இன்னைக்கு நான் காபிஷாப்புக்குப் பார்க்க வந்திருக்கிற பொண்ணை வேண்டானு சொல்லிட்டு வாழ்க்கை பூரா சிங்கிளாவே இருந்துடுவேன்” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்டான்.
நண்பனின் பாவனையில் கலகலவென்று நகைத்தவள் “அப்பிடி எதுவும் பண்ணிடாதடா! சரி வா உக்காந்து பேசுவோம்” என்றபடி ஒரு டேபிளில் அமர்ந்துவிட்டு இருவருக்கும் காபி ஆர்டர் செய்துவிட்டு பழைய கதைகளை அர்ஜூன் எடுத்துவிட கலகலப்பான உரையாடல் ஆராதனா எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டதும் சோகமயமானது.
அவள் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆராதனாவும் அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளையைச் சந்திக்கவே அங்கே வந்திருந்தாள் என்பது அர்ஜூனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆதித்யா எங்கே என்ற கேள்வி அவன் மனதை நெருட வாய் விட்டே கேட்டு விட்டான் அவன்,.
“ஆரு! நான் கீர்த்தியோட பொண்ணு பர்த்டே ஃபங்சன்ல உன் பேரண்ட்ஸோட உன் பொண்ணு ஆரத்யாவையும் மீட் பண்ணுனேன். குட்டிம்மா அப்பிடியே உன் சாயல் தான். பட் குணம் எல்லாமே ஆதி சார் போலனு நினைக்கிறேன். சரியான பிடிவாதக்காரி. அன்னைக்கு அவளை நான் உப்புமூட்டை ஏத்துனா தான் ஆச்சுனு அடம்பிடிச்சு அதுல ஜெயிக்கவும் செஞ்சுட்டா உன் பொண்ணு. ஆமா ஆதி சார் எப்பிடி இருக்கிறாரு?” என்று நயமாகக் கேட்க அவன் எதிரே இருந்த ஆராதனாவின் முகம் கலங்கத் தொடங்கியது.
கம்மிப் போன குரலில் “ஆரத்யா வயித்துல இருக்கிறப்போவே ஆதி ஆக்சிடெண்ட்ல தவறிப் போயிட்டார் அர்ஜூன். என் பொண்ணு இப்போ வரைக்கும் அப்பா முகத்தை போட்டோல மட்டும் தான் பார்த்திருக்கா” என்று முடிக்க அர்ஜூனுக்கு உள்ளே வலித்தது.
அவள் கண்ணீரை விழுங்கியபடியே “நீ சொன்னது சரி தான். அவ ஆதி மாதிரியே பிடிவாதக்காரி. அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அப்பா இருக்காங்களாம். அதனால அவளுக்கும் அப்பா வேணும்னு சொல்லி அடம்பிடிச்சதால தான் நான் ரீமேரேஜுக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா வர்றவங்க எல்லாருமே குழந்தையை அப்பா அம்மா கிட்ட விட்டுடணும்னு சொல்லுறப்போ எனக்கு வெறுத்துப் போயிடுச்சு அர்ஜூன். நான் என் குழந்தைக்காக தான் கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சேன். ஆனா அவளே என் கூட இருக்கக் கூடாதுனா அது என்ன அர்த்தம் அர்ஜூன்?” என்றவளின் கேள்வியில் ஒரு தாயின் நியாயமான ஆதங்கம் இருக்கவே அர்ஜூனால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“நான் இப்போ எனக்கு இன்னொரு புருசனை தேடல அர்ஜூன். சப்போஸ் இப்போ சரினு சொல்லிட்டு பின்னாடி என் பொண்ணை கஷ்டப்படுத்துனா நான் என்ன பண்ணுவேன்? என் பொண்ணை தன்னோட பொண்ணா நினைக்கிற அளவுக்கு உயர்ந்த உள்ளம் உள்ளவன் இன்னும் பிறக்கல அர்ஜூன். இந்த மீட்டிங் வெறும் கண்துடைப்பு தான். நான் இஷ்டமில்லனு சொல்ல தான் வந்திருக்கேன்” என்று அவள் முடிக்க அர்ஜுனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
அதன் பின் இருவரும் பேசாமல் காபியை காலி செய்ய அவர்களின் மேஜைக்கு அருகில் வந்து நின்றாள் ஒரு நவநாகரிக உடை அணிந்த இளம்பெண். அர்ஜூனை நோக்கிப் புன்னகைத்தவள் “ஆர் யூ மிஸ்டர் அர்ஜூன்? நான் தீப்தி. அப்பா அம்மா என் போட்டோ அனுப்பியிருப்பாங்களே” என்றுச் சொல்ல ஆராதனாவுக்கு தன் நண்பன் பார்க்க வந்த பெண் இவள் தான் என்று புரிந்துவிட்டது.
அர்ஜூனும் ஆராதனாவை தீப்திக்கு அறிமுகம் செய்து வைத்தான். மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆராதனாவுக்குப் போன் வர அவள் பேசிவிட்டு இருவரிடமும் திரும்பியவள் “ஹே கைய்ஸ்! நான் பார்க்க வந்த பெர்சன் வந்துட்டார். யூ கேரி ஆன்” என்றுச் சொல்லிவிட்டு தீப்திக்கும், அர்ஜூனுக்கும் கையைக் கொடுத்துவிட்டு நகர
அர்ஜூன் “பேச்சுவார்த்தை முடிச்சிட்டு கொஞ்சம் வெயிட் பண்ணு ஆரு. அம்மா பக்கத்துல தான் கோயிலுக்குப் போயிருக்காங்க. உன்னை பார்த்து நாளாச்சுனு சொன்னாங்க” என்க அவள் சரியென்று தலையசைத்துவிட்டு தான் பார்க்க வந்த ஆளை நோக்கி நடைப்போட்டாள்.
நேரே சென்று இருக்கையில் அமர்ந்தவள் தனது நிலையை விளக்கிவிட அவளுக்குப் பார்த்தவனோ குழந்தை மட்டும் ஆராதனாவின் பெற்றோர் வசம் இருக்கட்டும் என்று வழக்கமான வேண்டுகோளை விடுக்க ஆராதனா ஒரே வார்த்தையில் விருப்பமில்லை என்று அந்தச் சம்பந்தத்தை மறுத்துவிட்டு வந்தாள்.
வந்தவள் அர்ஜூனின் டேபிளில் தீப்தியை தேட ஆனால் அங்கே அர்ஜூனும் அவனது தாய் ஜானகியும் மட்டும் இருக்க அவரை நோக்கிச் சென்றாள். ஏற்கெனவே அறிமுகமானப் பெண்மணி தான் என்பதால் அவரிடம் நலம் விசாரித்தவள் தங்கள் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்றுச் சொல்லி கையோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.
அதே நேரம் ஆராதனாவின் வீட்டில் அவளது ஐந்து வயது செல்ல மகள் ஆரத்யா தாயின் வரவுக்காகக் காத்திருந்தாள். நீண்ட நேரம் ஆகவே போனிடெயில் அசைய அவளது பாட்டி சுசிலாவிடம் ஓடியவள் “சுசி பாட்டி! அம்மா இன்னைக்கு அப்பாவைக் கூட்டிட்டு வருவாங்க தானே” என்று இதோடு ஆயிரத்து ஒன்றாவது முறையாகக் கேட்க அவரும் புன்னகை மாறாமுகத்துடன் “ஆமாடி செல்லக்குட்டி! இன்னைக்கு உன் அம்மா உன்னோட அப்பாவோட தான் வருவா” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் சத்தம் கேட்டது.
சுசிலா அவரது கணவர் ராஜனிடம் “ஏங்க! ஆரும்மா ஆட்டோல தானே போனா. இப்போ கார் சத்தம் கேக்குது?” என்று கேட்க அவரும் செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு வராண்டாவுக்கு பேத்தியுடன் சென்றார்.
அங்கே காரிலிருந்து அர்ஜூன் மற்றும் அவனது அன்னையுடன் ஆராதனா இறங்க அவனை ஏற்கெனவே தெரியும் என்பதால் மனைவியிடம் “சுசிம்மா நம்ம அர்ஜூன் தான் வர்றான். கூடவே அவங்க அம்மாவும் வர்றாங்க” என்றபடி புன்னகை பூத்த முகத்துடன் கேட் அருகில் சென்றவரை அவரது பேத்தியும் தொடர்ந்தாள். ஆராதனா தன் நண்பனிடம் தீப்தியைப் பற்றி கேட்க அவனோ “நீ எப்பிடி நோ சொல்லுறதுக்குனு அங்கே வந்தியோ அதே மாதிரி தான் நானும்” என்று சாதாரணமாகச் சொன்னபடி தங்களை இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜனை நோக்கி முன்னேறினான்.
தாத்தாவின் அருகில் நின்று வாசலை எட்டிப் பார்த்த ஆரத்யா அர்ஜூனை கண்டதும் உற்சாகமாக “ஐய்! தாத்தா அஜ்ஜூ அங்கிள் வந்திருக்காரு” என்றுச் சொன்னபடி அவனை நோக்கி ஓடினாள். ஜானகியும் கீர்த்தி மகளின் பிறந்தநாள் விழாவின் போதே ஆரத்யாவைப் பார்த்திருப்பதால் அவளைக் கண்டு புன்னகைக்க அவள் ஓடிச் சென்று அர்ஜூனின் கால்களைக் கட்டிக் கொண்டாள்.
அர்ஜூனும் அவளைக் கண்டதில் மகிழ்ந்தவன் “மை டியர் ரதி பேபி” என்றபடி அவளைத் தூக்கிக் கொள்ள ஆரத்யா அவன் கன்னத்தில் முத்தமிட்டவாறு “அஜ்ஜூ அங்கிள் அப்போ நீங்க தான் அம்மா எனக்காக பார்க்கப் போன அப்பாவா?” என்றுக் கேட்க ஆராதனாவுக்கு சங்கடமாகி விட்டது.
மகளைக் கண்டிப்புடன் பார்த்தவள் “ஆரத்யா என்ன பேச்சு இது?” என்று அவளை அதட்ட ஜானகி “குழந்தை தானே ஆரு! ஏன் திட்டற? நீ வாடி ராஜாத்தி” என்று மகனிடம் இருந்து ஆரத்யாவை வாங்கியவர் “நல்லா இருக்கிங்களா அண்ணா? அன்னைக்கு பார்த்ததுக்கு நீங்க மெலிஞ்சிட்டிங்க” என்று ராஜனின் நலத்தை விசாரித்தபடி உள்ளே சென்றார்.
சுசிலா ஜானகியைக் கண்டதில் மகிழ்ந்தவர் அர்ஜூனிடம் “அர்ஜூன் எப்போ கல்யாணச்சாப்பாடு போடப் போற?” என்று கேட்கவும் தவறவில்லை. அதன் பின் பொதுப்படையான பேச்சுகளுக்குப் பிறகு அர்ஜூன் சுசிலாவிடமும் ராஜனிடமும் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க ஆராதனா புருவ முடிச்சுடன் அவனைப் பார்த்தார்.
அவன் தொண்டையைச் செருமிக் கொண்டு “ஆன்ட்டி, அங்கிள் நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல! எனக்கு ஆருவை கல்யாணம் பண்ணிக் குடுக்கிறிங்களா?” என்று கேட்டு மூவரையும் அதிர வைத்தான். ஆராதனா நண்பனின் வார்த்தை ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் விலகாதவளாய் அவனை நோக்க அவனோ தன் புன்னகை வழியே அவளை சரி செய்ய முயன்றான்.
ஆராதனா ஜானகியைப் பார்க்க அவரும் மகனின் கருத்தை ஏற்பது போன்ற முகபாவத்துடன் இருக்க அவளால் பொறுக்க முடியாமல் உள்ளே எழுந்துச் சென்று விட்டாள். சுசிலா, ராஜன் தம்பதியினர் கையைப் பிசையவே ஜானகி “எனக்கு இது எட்டு வருசத்துக்கு முன்னாடியே தெரியும் அண்ணா. இங்க பாருங்க அவ சின்ன பொண்ணு! நாம தான் அவளுக்குப் புரிய வைக்கணும். நான் ஆரு கிட்ட பேசுறேன்” என்று மகனுக்குப் பரிந்து பேசிவிட்டு ஆராதனாவின் அறையை நோக்கிச் சென்றார்.
அர்ஜூன் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராஜன் “அர்ஜூன்! நீ இப்போ தான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறப்பா! ஆனா ஆராதனா அப்பிடியில்லயே” என்று கசந்தகுரலில் சொல்ல
அர்ஜூன் “நீங்க சொல்ல வர்றது புரியுது அங்கிள். ஆனா ஒரு விஷயத்தை நானும் சொல்லிக்க விரும்புறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஆராதனா என்னோட நல்ல ஃப்ரெண்ட் மட்டுமில்ல. நான் காலேஜ் டேய்ஸ்ல ஆருவை லவ் பண்ணுனேன் அங்கிள். எனக்கு அவளைத் தவிர அங்கே கேர்ள்ஸ்ல வேற ஃப்ரெண்ட்ஸ் கூட கிடையாது. ஆனா அவ என்னை எப்போவுமே ஒரு நல்ல ஃப்ரெண்டா பார்த்தா. காலேஜ் ஃபைனல் இயர் முடிஞ்சு நான் பிரபோஸ் பண்ண போன நேரத்துல தான் ஆதித்யா சாரை அவ லவ் பண்ணுன விஷயத்தை என் கிட்ட சொன்னா. அப்போவே என் காதலை குழி தோண்டி புதைச்சிட்டு ஒரு நல்ல நண்பனா அவளுக்கு வாழ்த்து சொல்லிட்டு பூனாவுக்குப் போனவன் இன்னைக்கு தான் அவளை மறுபடியும் பார்க்கிறேன். அவ பேசுன வார்த்தைகள் ஒரு தாயோட நியாயமான வருத்தமா எனக்கு பட்டுச்சு. ஆரத்யாவை நினைச்சு நீங்க கவலைப்பட்டிங்கன்னா டோண்ட் வொர்ரி அங்கிள். அவ என்னோட பிரின்சஸ். அவளை இளவரசி மாதிரி நான் வளர்ப்பேன். என் கருத்தை நான் சொல்லிட்டேன். இனி ஆருவோட பதில் தான் முடிவை உறுதி பண்ணும்” என்று தெளிவான குரலில் உரைத்துவிட்டு ஆரத்யாவுடன் விளையாட ஆரம்பித்தான்.
ஆராதனாவின் அறைக்குச் சென்ற ஜானகி அவள் ஆதித்யாவின் போட்டோ அருகில் அமர்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் மனம் வருந்தியவராய் அவள் அருகில் சென்று அமர்ந்தவர் “என்னடா யோசிக்கிற? இப்பிடி திடுதிடுப்புனு அர்ஜூன் பேசுவான்னு நீ நினைச்சிருக்க மாட்ட! ஆனா இப்பிடியே போனா உன் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா?” என்றார் அவளது தலையை ஆதரவாக வருடியபடி.
ஆராதனா அவரை ஏறிட்டவள் “என் வாழ்க்கைக்கு அர்த்தம் குடுக்க ஆரத்யா மட்டும் போதும்னு நினைக்கிறேன்மா. என்னால ஒரு சிங்கிள் மதரா என் பொண்ணை வளர்க்க முடியும். என் ஆதிக்கு அப்புறம் எந்த ஆணையும் நான் நம்புறதாவும் இல்லம்மா. இன்னைக்கு பெண்குழந்தைகளுக்கு நடக்கிற அசம்பாவிதங்களைப் பார்த்ததுக்கு அப்புறமும் நான் மறுமணத்துக்கு ஏன் சம்மதிச்சேன்னா அம்மா அப்பாவோட வற்புறுத்தலுக்காக தான். ஆனா வர்ற ஒவ்வொருத்தரும் என்னை சதைப்பிண்டமா பார்த்துட்டு என் பொண்ணை சுமையா மட்டும் தானே பார்க்கிறாங்க. என் பொண்ணுக்காக தானே நானே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். அதோட அடிப்படை காரணமே அடி பட்டு போனா நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்?” என்று நியாயமான ஆதங்கத்துடன் கூற
ஜானகி அவளை வாஞ்சையுடன் பார்த்தவர் “நீ சொல்லுறது எல்லாமே சரி தான். உன்னால ஒரு சிங்கிள் மதரா உன் பொண்ணை வளர்க்க முடியும்கிறதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா உன் பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய ஒரு தகப்பனோட பாசத்தை தடுக்கிற உரிமை உனக்கு இல்லடா” என்றுச் சொல்ல ஆராதனா விரக்தியுடன் “நீங்க அர்ஜூனை வளர்க்கலையாம்மா?” என்றதும் அவர் புன்னகைத்தார்.
“அர்ஜூனோட அப்பா போனதுக்கு அப்புறம் அவரோட வேலை எனக்கு கிடைச்சதுடா! அவனை தனியாளா வளர்க்க முடியும்னு நான் நம்புனேன். ஆனா அவன் விவரம் தெரிஞ்ச பையனா வளருற வரைக்கும் எத்தனை கழுகு கண் என்னை வட்டம் போட்டுச்சுனு எனக்கு மட்டும் தான் தெரியும். உனக்கு கணவன் வேணும்னு நாங்க உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தலைடா. உனக்கும், ஆரத்யாவுக்கும் ஒரு காவலன் வேணும். அர்ஜூனால உங்க ரெண்டு பேருக்கும் அந்த பாதுகாப்பை குடுக்க முடியும்னு நான் நம்புறேன்” என்றார் அவர் தெளிவாக.
ஆராதனாவின் தயக்கமே அர்ஜூன் தான் என்பதை எவ்வாறு இவரிடம் கூறுவது என்று தவித்தாள் அவள்.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “மா! அர்ஜூனுக்கு இது தான் முதல் கல்யாணம். ஆனா நான் அப்பிடியில்லயே! இப்பிடி ஒரு ரெடிமேட் ஃபேமிலி அர்ஜூனுக்கு தேவை தானா? உங்க பையன் கல்யாணத்தை பத்தி உங்களுக்கு நிறைய கனவு இருக்கும். என்னை மாதிரி ஒரு விதவையை….” என்றவளின் வாயைத் தன் கரங்களால் பொத்தினார் ஜானகி.
பதறிப் போனவராய் “உன் வாயால அப்பிடி சொல்லாதேடா! நீ வாழ வேண்டிய பொண்ணு. ஏதோ கெட்ட நேரம் இப்பிடி ஆயிடுச்சு. அதுக்காக நீ எந்த விதத்துலயும் தகுதி குறைஞ்சு போகல ஆரும்மா! அர்ஜூனுக்கு நீன்னா உயிருடா. அவன் இது வரைக்கும் உன் கிட்ட சொல்லாத விஷயம் நிறைய இருக்கு” என்று அவர் பீடிகை போட ஆராதனா குழம்பி போனாள்.
ஜானகி அவளது குழப்பத்தை தீர்த்து வைக்கும் ஆவலுடன் வேகமாக மகனின் மனதை அவளிடம் தெரிவிக்க ஆரம்பித்தார்.
“ஆரும்மா! அர்ஜூனுக்கு நீன்னா ரொம்ப இஷ்டம். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸுனு எனக்கு நல்லாவே தெரியும். காலேஜ்ல ரெண்டு பேரும் ஒன்னா கட் அடிச்சிட்டு சினிமா போனதுல இருந்து, உன்னை பார்த்து காப்பி பண்ணி எக்சாம் எழுதுன வரைக்கும் அவன் என் கிட்ட எதையுமே மறைச்சது இல்ல. உன்னை காதலிச்சதை கூட” என்று சொல்லி நிறுத்த ஆராதனாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
அர்ஜூன் தன்னை காதலித்தானா? இது என்ன புது குழப்பம் என்று பரிதவித்துப் போனவளை சாந்தமான முகத்துடன் ஏறிட்ட ஜானகி “ஆமாடா ஆரு! அர்ஜூன் உன்னை ரொம்பவே காதலிச்சான். பட் காலேஜ் முடியுற வரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு உன் கிட்ட அதை மறைச்சிட்டான். அவன் அதை உன் கிட்டச் சொல்ல வந்த நேரம் தான் நீ ஆதித்யா உனக்கு பிரபோஸ் பண்ணுன விஷயத்தை அவன் கிட்ட நீ சொன்ன.
அப்போவே என் பிள்ளை மனசளவுல உடைஞ்சு போயிட்டான். இருந்தாலும் உன்னோட வாழ்க்கைக்கு இடையூறா இருக்க கூடாதுங்கிறதாலயும், உன்னை இன்னொருத்தரோட மனைவியா பார்க்க முடியாதுங்கிறதாலயும் தான் அவன் பூனாக்கு போயிட்டான். போய் கொஞ்ச நாள்ல என்னையும் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு அங்கேயே அழைச்சிட்டுப் போயிட்டான். கீர்த்தியோட பொண்ணு பிறந்தநாளுக்கு அவன் வந்தா தான் ஆச்சுனு கீர்த்தி அடம்பிடிச்சதால தான் அவனும் நானும் மறுபடியும் சென்னைக்கு வந்தோம்டா.
அப்போ ஆரத்யா பார்த்த உடனே அர்ஜூன் கிட்ட பசை போட்ட மாதிரி ஒட்டிக்கிட்டா. அவனும் ஆரத்யாவும் அங்கே விளையாடுறதைப் பார்த்துட்டு என் மனசு நிறைஞ்சு போயிடுச்சுடா. உன்னை தவிர வேற யாரையும் அவன் மனசால நினைக்க மாட்டான் ஆரு. அவனை ஏத்துக்கிட்டு என் பிள்ளைக்கும் மத்தவங்க மாதிரி ஒரு அழகான குடும்பத்தைக் குடும்மா” என்று அவர் வேண்டுதலாய் கேட்க ஆராதனாவுக்கு அர்ஜூனின் இன்னொரு பக்கம் ஆச்சரியத்தை கொடுத்தது.
அவரை யோசனையுடன் பார்த்தவள் “நான் அர்ஜூன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல அவரும் அர்ஜூன் வெளியே ஆரத்யாவுடன் இருப்பதாகக் கூற அவளும் வராண்டாவை நோக்கிச் சென்றாள்.
அங்கே அர்ஜுன் ஈஸி சேரில் சாய்ந்திருக்க ஆரத்யா அவன் மடியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள்.
“அஜ்ஜூ அங்கிள்! அப்போ இனிமே நீங்க எங்க கூடவே தான் இருப்பிங்களா?”
“ஆமாடா ரதி பேபி. நீ சொன்னல்ல உன் எனிமிஸ் அவங்களைலாம் நம்ம உண்டு இல்லைனு ஆக்கிடலாம்” என்று குழந்தையுடன் குழந்தையாய் இருக்கும் தனது தோழனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவள் மெதுவாக அவர்கள் அருகில் சென்றாள்.
ஆராதனா வந்து நிற்கவுமே அர்ஜூனின் மனசாட்சி “டேய் அர்ஜூன் இவ உனக்கு அட்வைஸ் பண்ணி மனசை மாத்த டிரை பண்ணுவா. ஸ்டே ஸ்ட்ராங்” என்று அவனை ஏதோ போருக்கு தயாராவதைப் போல தட்டிக் கொடுக்க
ஆராதனா ஆரத்யாவிடம் “ஆரத்யா உன்னை பாட்டி கூப்பிடறாங்க. என்னனு கேளுடா” என்று மகளை அனுப்பி வைத்தவள் அவனிடம் வந்தாள். அவன் இன்னும் தோரணையுடன் அமர்ந்திருக்க அவன் தலையில் தட்டியவள் “துரைக்கு போஸ் ஒன்னு தான் குறை. எழுந்திரிடா எருமை” என்றுச் சொல்ல அவனும் எழுந்தான்.
தன் எதிரே நிற்பவனை விழி நீக்காமல் பார்த்தவள் “ஏன் அர்ஜூன் உன் மனசுல இருக்கிற காதலை என் கிட்ட சொல்லவே இல்ல? சொன்னா நான் உன் ஃப்ரெண்ட்ஷிப்பை வேண்டானு சொல்லிடுவேனு நினைச்சியோ?” என்று கேட்க
அர்ஜூன் பதறியவனாய் “ஏய் ஆரு அப்பிடிலாம் இல்லடி! நீ என் ஃப்ரெண்ட்ஷிப்பை எப்போவுமே கட் பண்ணிக்க மாட்டனு எனக்கு தெரியும். பட் அப்போ நம்ம ரெண்டு பேருமே காலேஜ்ல படிச்சிட்டிருந்தோம். அது காதலிக்கிறதுக்கான வயசு இல்ல, நம்ம காதலிக்கிறதுக்காகவும் காலேஜுக்கு போகல. நம்ம காதல் படிப்புக்கு தடையாயிடக் கூடாதுனு யோசிச்சேன். அப்புறம் உன் கிட்ட அதை வெளிப்படுத்த வந்தப்போ நீ ஆதி சாரோட பிரபோசலை பத்தி சொன்ன. இன்னொருத்தனை காதலிக்கிற பொண்ணு கிட்ட என்னோட காதலை நான் எப்பிடி சொல்ல முடியும்? அதான் மனவருத்தத்தோட பூனாக்கு போயிட்டேன். நான் மறுபடி உன்னை பார்ப்பேனு நினைக்கவே இல்ல ஆரு. வாழ்க்கை அவ்ளோ தானு நினைச்சேன். பட் கடவுள் எனக்கு இன்னொரு வாய்ப்பை குடுத்திருக்காரு” என்றபடி அவள் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
ஆராதனா சங்கடத்துடன் “அர்ஜூன் கல்யாண வாழ்க்கைனா நம்ம காலேஜ் லைஃப் மாதிரி இல்ல. நீயும் ஒரு சாதாரண மனுசன் தான். உனக்கும் சில ஆசாபாசங்கள் இருக்கும். ஆனா நான் இருக்கிற மனநிலையில என்னால ஒரு நல்ல மனைவியா இருக்க முடியுமானு தெரியலடா. ஒரு ஃப்ரெண்டா உன்னை எப்போவுமே சந்தோசமா வச்சிப்பேன். ஆனா ஒரு மனைவியா என்னால…” என்றபடி தயங்க
அர்ஜூன் “எனக்கு புரியுது ஆராதனா. நீ சொல்லுற மாதிரி எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கு தான். பட் அது எதுவுமே ஆராதனா, ஆரத்யாவுக்கு முன்னாடி எனக்கு முக்கியம் இல்ல. எனக்கும் என் ஃப்ரெண்ட் இப்பிடி விரக்தியா வாழறது பிடிக்காம தான் என்னை கல்யாணம் பண்ணிக்கோனு கேக்கிறேன். ஒரு கணவனா உன்னை சந்தோசமா வச்சிக்க முடியுமான்னா அது டவுட் தான். பட் நானும் ஒரு ஃப்ரெண்டா உன்னையும், ரதியையும் நல்லா பார்த்துப்பேன் ஆரு. என்னை நம்பு. பிளீஸ்” என்று மன்றாட ஆராதனா தன் முன் சாக்லேட்டுக்காக அடம்பிடிக்கும் குழந்தை போல நிற்கும் தனது ஆறடி உயர நண்பனைக் கண்டு திகைப்பாக இருந்தது.
“அதுக்காக ரதி பேபி சொல்லுற எல்லாத்துக்கும் ஆமா சாமி போட மாட்டேன். அவளுக்கு விளையாட்டு நேரத்துல ஒரு நல்ல ஃப்ரெண்டா இருக்கிற மாதிரி, அவ வாழ்க்கையில முடிவெடுக்க தயங்குறப்போ அவளுக்கு ஒரு நல்ல அப்பாவா இருந்து நல்லது கெட்டதை புரிய வைப்பேன்” என்றுச் சொல்ல இது வரை பார்த்த வரன்களின் சர்க்கரைப்பூச்சு பேச்சுக்களை நினைத்துப் பார்த்தாள் ஆராதனா. முக்கியமாக அவனது பேச்சில் உண்மை இருந்தது. அவள் மீதும், ஆரத்யா மீதும் அவனுக்கு இருக்கும் அக்கறை அவன் வார்த்தைகள் மூலமே புரியவர ஆராதனா நண்பனைக் கண்டு புன்னகைத்தாள்.
இவன் எங்கள் வாழ்வில் வர நானும் ஆரத்யாவும் என்ன புண்ணியம் செய்தோமோ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் தன் கரத்தை பற்றியிருந்த அவனது கரத்தின் மீது இன்னொரு கரத்தை வைத்து அழுத்திவிட்டு “எனக்கு என் ஃப்ரெண்ட் அர்ஜூன் மேல முழு நம்பிக்கை இருக்கு. உடனே இல்லனாலும் மெது மெதுவா உன்னைப் புரிஞ்சுகிட்டு நல்ல மனைவியா மாற நானும் டிரை பண்ணுவேன்” என்றவளின் கடைசிவார்த்தையில் அவளது சம்மதத்தை அவள் கூறிவிட அர்ஜூன் கிட்டத்தட்ட வானத்தில் ஒரு நிமிடம் மிதந்துவிட்டு கீழே வந்தான்.
அவளை நோக்கிப் புன்னகைத்தவன் இந்த தகவலை இருதரப்பு பெற்றோரிடமும் தெரிவிக்க ராஜனுக்கும், சுசிலாவுக்கும் மகளின் வாழ்வு இனி துளிர்க்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஜானகியோ தனது மகனின் நீண்டநாள் ஆசை நிறைவேறிய திருப்தியில் இருவரையும் ஆசிர்வதிக்க ஆரத்யாவும் அவர்களைப் போலவே பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவே அனைவரும் அதைக் கண்டு மனநிறைவுடன் நகைத்தனர்.
பெற்றோர்கள் திருமணத்தை கோயிலில் வைத்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருக்க அர்ஜூன் ஆரத்யாவை தோள் மீது வைத்தபடியே “ஆரு பேபி! இன்னைக்கு என் ஃபேவரைட் பாஸ்தா பண்ணுவியா? சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என்று கேட்க
அவன் தோளில் அமர்ந்த்திருந்த ஆரத்யா “ஐய்! அஜ்ஜூ எனக்கும் பாஸ்தானா ரொம்ப பிடிக்கும். நிறைய சீஸ் போட்டு..ம்ம்ம்ம்” என்று நாக்கைச் சுழற்றி அவள் சப்பு கொட்ட அர்ஜூன் அவளுக்கு ஹைஃபை கொடுத்தான்.
மகளும் நண்பனும் உரையாடுவதைக் கண்ட ஆராதனா நீண்டநாளுக்கு பிறகு நிறைந்த மனதுடன் புன்னகைத்தாள். ஏனெனில் அவள் நன்றாக அறிவாள் இவ்வுலகில் எல்லா ஆராதனாக்களுக்கும் அர்ஜூன்கள் கிடைப்பதில்லை. அதே மன நிறைவுடன் தனது அறையில் தொங்கும் ஆதித்யாவின் புகைப்படத்தைப் பார்க்க அது காற்றில் ஆடியது ஆராதனாவுக்கு ஆதித்யாவே தனது சம்மதத்தை தெரிவித்தது போல இருந்தது.
அவளின் மனநிறைவுக்கு காரணமான அவளது நண்பன் அர்ஜூன் தன் வாழ்வில் தொலைந்து போன வசந்தம் தோழியின் ரூபத்தில் மீண்டும் வந்துவிட்டதை எண்ணி தனது வாழ்வின் வரமான அவளது சிரிப்பில் தானும் கலந்து கொண்டான். அர்ஜூன் ஆராதனாவின் வாழ்வில் மீண்டும் வந்த வசந்தம் அவர்களின் செல்ல மகளான ஆரத்யாவின் வாழ்வையும் இனி வண்ணமயமாக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
********
ஹலோ மக்களே! இந்தச் சிறுகதை பிரேமாக்கா சைட்ல நடந்த போட்டிக்காக எழுதுனது. எந்த வருசம்னு ஞாபகமில்ல. இதுவும் பழசுதான். கொஞ்சம் க்ரிஞ்சா இருக்கலாம். வழக்கம் போல அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும். நாளைக்கு மலர் மகிழ் வருவாங்க. குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
ஏற்கனவே படிச்சதுதான்னாலும் என்னவோ திரும்பப் படிக்கணும்ன்னு தோணுச்சு..
படிச்சிட்டேன, ரொம்ப நல்லா இருந்தது.
😀😀😀
CRVS (or )CRVS 2797
Share your Reaction
சூப்பர்👌👌👌👌👌
Share your Reaction
Correct thaan Ella aarathana Kum Arjun kidaikkarathu illai thaan. 👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕
Share your Reaction
Nice story 🥰🥰🥰🥰
Share your Reaction
@crvs2797 நன்றி சிஸ் 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
@kothai-suresh thank you aunty 😍 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
@priyarajan ama... athu possible illa
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  
@sasikumarmareeswari thank you akka
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



