
பார்த்த முதல் நாளே! உன்னைப் பார்த்த முதல் நாளே!
காட்சிப்பிழை போல உணர்ந்தேன்! காட்சிப்பிழை போல!
ஓரலையாய் வந்து எனையடித்தாய்!
கடலாய் மாறிச் சென்றெனை இழுத்தாய்!
என் கனாவில் தோன்றிய உன் முகம் உன் முகம்
என்றும் மறையாது!
பாம்பே ஜெயஸ்ரீயுடன் இணைந்து பாடியபடி கண்ணாடியைப் பார்த்தவண்ணம் தனது போனிடெயிலை இறுக்கிக் கொண்டவள் தன்னை ஒரு முறை கூர்ந்து கவனித்தாள்.
“கொலாசல் காஜல், ஸ்ட்ராபெர்ரி லிப் பாம், ஐ டெக்ஸ் பிந்தி... அண்ட் ஐ அம் ரெடி” என்று உற்சாகம் கரைபுரண்டோட முணுமுணுத்துக்கொண்டவள் தனது ஆலிவ் க்ரீன் வண்ண ஷோல்டர் கட் டாப்பை அப்படியும் இப்படியுமாய் திருப்பிப் பார்த்துக் கொண்டாள்.
எதேச்சையாக சுவர்கடிகாரத்தில் படிந்த விழிகளில் சிறு கலவரம் மூண்டது.
“அச்சோ! லேட் ஆயிடுச்சே” என்று முணுமுணுத்தவள் தனது அறையை விட்டு வெளியேற சமையலறையிலிருந்து தோசையின் வாசனை அவள் நாசியை நிரடியது.
“ரெண்டே நிமிசத்துல சட்னி தாளிச்சிடுறேன்... சாப்பிட்டிட்டுப் போடி”
அன்னையின் குரல் அவசரமாக ஒலித்தது.
“நோ மம்மி! ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு... நான் ஜானகிராம்ல கீ ரோஸ்ட் சாப்பிட்டுக்கிறேன்... இன்னைக்காச்சும் உன் பொண்ணு நல்ல சாப்பாடு சாப்பிடட்டுமே மம்மி”
“வேளாவேளைக்கு வடிச்சுக் கொட்டுனா அதை சப்புக் கொட்ட சாப்பிட்டுட்டு கேலி பண்ணுறதுல அப்பாவும் மகளும் ஒன்னு! போடி... ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து தானே ஆகணும்”
அன்னையின் குரலில் ஒலித்த சிறுகோபம் அவளுக்குச் சிரிப்பை மூட்டியது. அவரை கேலி செய்து விளையாடுவது அவளுக்கும் அவளது தந்தைக்கும் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு.
சிரிப்புடனே “ஓகேம்மா! நீ என்னை பழிவாங்கணும்னு நினைச்சிட்ட... அப்போ இன்னைக்கு டின்னர் இட்லி தான்னு கன்பார்மா தெரிஞ்சு போச்சு... வாழ்க்கையில எத்தனையோ சோதனைகள்! அதுல இதுவும் ஒன்னு! ஐ கேன் அட்ஜெஸ்ட்” என போலியான சோகத்துடன் சொன்னவள் அன்னையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
அடுத்த இருபது நிமிடத்தில் அவள் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்திருந்த வீட்டின் முன்னே நின்றிருந்தாள். போனை காதுக்குக் கொடுத்தவள் “அடியே! நான் வந்துட்டேன்டி... மாமா இருக்காரா?” என வினவ அடுத்த சில நொடிகளில் அந்த வீட்டின் கேட் திறந்து இன்னொரு பெண் ஓடிவந்தாள்.
“எவ்ளோ சீக்கிரமா வந்திருக்க நீ?” என்று குறைபட்டபடியே “அப்பா அவரோட ஃப்ரெண்டை பாக்க போயிருக்கார்... சீக்கிரமா வா” என அவளை உள்ளே இழுத்துச் சென்றாள்.
உள்ளே நுழையும் போதே வெண்பொங்கலின் மணம் நாசியை நிறைக்க “அத்தையோட வெண்பொங்கலுக்கு நான் அடிமைடி” என்று சொன்னவண்ணம் தோழியுடன் உள்ளே வந்தவள் அந்த ஹாலின் சோபாவில் ஆலிவ் க்ரீன் ஹென்லே நெக் டீசர்ட்டும், கறுப்பு ஜீன்சுமாய் அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டதும் மௌனியானாள்.
அவளது தோழியோ “அது எப்பிடி அண்ணாவ பாத்தா மட்டும் மேடம் மியூட் மோடுக்குப் போயிடுறீங்க?” என கேலி செய்ய அந்த ஹென்லே நெக் டீசர்ட் அணிந்தவனின் இதழில் குறும்பான நகை மலர்ந்தது.
அதைக் கண்டவளுக்கோ கண்ணில் நீர் நிறைந்தது. ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டவள் “ஐ மிஸ் யூ சோ மச்” என்று சொல்லவும் அவளின் தோழியும் அவனின் தங்கையுமான பெண்ணின் கண்ணிலும் கண்ணீர்!
அவளின் கண்ணீர் அவனை ஏதோ செய்திருக்க வேண்டும். உடனே அவளை விலக்கி நிறுத்தியவன் சமையலறையிலிருந்து “வாடிம்மா! உனக்காக தான் அத்தை வெண்பொங்கல் செஞ்சிட்டிருக்கேன்... உங்களோட உலாவ பிரேக்பாஸ்டுக்கு அப்புறமா வச்சுக்கோங்க” என்று சொன்னபடியே வந்த அன்னையிடம் திரும்பினான்.
“இல்லம்மா! நாங்க பிரேக்பாஸ்டை ஜானகிராம்ல முடிச்சிக்கிறோம்”
“டேய் இந்தியா வர்றப்போ தான் என் கையால உனக்கு சமைச்சுப் போட முடியும்... அப்போவும் ஹோட்டல்னா என்ன அர்த்தம்? நீயே சொல்லுடாம்மா” என அவளிடம் திரும்பினார் அவனது அன்னை. அவளுக்கு அத்தை, அத்தை என்றால் இரு உறவிலும் அத்தை தான். அதாவது அன்னையின் மதினி, அப்பாவின் தங்கை, அவளது தாய்மாமாவின் மனைவி!
எனவே தான் இந்த வீட்டில் இத்தனை சலுகை அவளுக்கு!
“அத்தை ப்ளீஸ்... இவனே வருசத்துக்கு ஒரு தடவை தான் இங்க வர்றான்... எனக்கு இவன் கூட ஊர் சுத்துறதுனா ரொம்ப இஷ்டம்னு உங்களுக்கே தெரியும்ல... ப்ளீஸ் அத்தை... இன்னைக்கு ஒரு நாள் தானே!” என அவரிடம் கொஞ்சியவளை அவரால் மறுக்க முடியவில்லை.
எனவே அவரும் அனுமதியளித்துவிட அடுத்த சில நிமிடங்களில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் நடக்கும் போதே “ஒழுங்கா கார்ல கிளம்பியிருக்கலாம்டி... எல்லாம் உன்னால தான்” என குறைபட்டபடியே தனது ஜீன்சின் பாக்கெட்டுகளில் கைவைத்தபடி நடந்தான் அவன்.
“இங்க இருக்கிற ஜங்சனுக்கும், அங்க இருக்கிற டவுனுக்கும் கார் ரொம்ப ஓவர்டா... எனக்கு உன் கூட நடந்து போக தான் பிடிச்சிருக்கு” என்றாள் அவள் ஆர்வத்துடன்.
அவன் நடப்பதை நிறுத்திவிட்டு “அப்போ நடந்தே ஜங்சன் போகலாமா?” என அதே ஆர்வத்துடன் கேட்க அவள் போனிடெயில் அசைய ஒப்புக்கொண்டாள்.
இருவருமாக சுலோசனமுதலியார் பாலத்தில் நடந்தபடியே இரு கரைகளைத் தொட்டு ஓடும் தாமிரபரணியின் அழகை ரசித்துக்கொண்டு நடந்தனர்.
“இந்தப் பாலத்துல நின்னு தாமிரபரணிய பாக்குறப்போ அப்பிடியே கூஸ்பம்ப் ஆகுதுடா... ஐ அம் ப்ரவுட் பீயிங் அ திருநெல்வேலியன்”
“ஆமா! இது லண்டன்... அது தேம்ஸ் ரிவர்... போடி காமெடி பண்ணாத”
இருவருமாக சண்டை பிடித்தபடியே திருநெல்வேலி சந்திப்பு வரை நடந்தே வந்துவிட்டனர். தோள் உரச அவனுடன் நடக்கும் போதும், “என் கையைப் பிடிச்சுக்கோ” என்று சொன்னவனின் கரத்தைப் பிடித்தபடி சாலையைக் கடக்கும் போதும் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள் அவள்.
இருவருமாக சேர்ந்து ஜானகிராம் ஹோட்டலினுள் நுழைந்தனர்.
“என்ன சாப்பிடுற?” என கேட்டவனிடம்
“கீ ரோஸ்ட்” என்றாள் அவள் நாக்கைச் சுழற்றியபடியே.
“உன்னோட கீ ரோஸ்ட் பைத்தியம் இன்னும் மாறல!” என சலித்துக்கொண்டாலும் இருவருக்கும் நெய்ரோஸ்டை ஆர்டர் செய்தவன் ரோஸ்ட் வரும் வரை அவளுடன் வம்பளக்க ஆரம்பித்தான்.
“அப்புறம் உங்க டாடி எப்பிடி இருக்கார்?”
கேட்கும் போதே கிண்டல் தொனி ஒலிக்க அவள் மூக்கைச் சுருக்கிக்கொண்டாள்.
“சோ அவர் எனக்கு டாடி மட்டும் தான்... உனக்கும் அவருக்கும் சம்பந்தமில்ல... அப்பிடி தானே”
அவள் ஏற்ற இறக்கத்துடன் பேசிய விதத்தில் பக்கென்று நகைத்தவன் அவள் முறைக்கவும் “ஓகே ஓகே! எப்பிடி இருக்கார் என்னோட மாமனார்?” என்று மாமனாரை அழுத்திச் சொல்லவே இப்போதும் அவள் முறைக்கத் தான் செய்தாள்.
“ஏய் என்னடி என்ன சொன்னாலும் முறைக்குற?”
“பின்ன நீ அவரைக் கிண்டல் பண்ணுனா முறைக்காம உன்னை கொஞ்சுவாங்களா?”
“அடேங்கப்பா நீ அப்பிடியே கொஞ்சிட்டு தான் மறுவேலை பாப்ப... எனி ஹவ் அவரைப் பத்தி பேசுனா நம்மளோட டே அவுட் சொதப்பலா போய் முடிஞ்சிடும்... ரோஸ்ட் வந்துடுச்சு! சாப்பிடுவோமா?”
அதன் பின் இருவரும் நெய்ரோஸ்டை காலி செய்ய ஆரம்பித்தனர். சாப்பிட்டதும் பில்லுக்குக் கார்டை நீட்டிவிட்டு வாங்கியவன் வாலட்டைப் பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடியே “அடுத்து எங்க டவுன் தானே? பஸ்சா இல்ல நடராஜா சர்வீசா?” என கேட்க
“சேச்சே! அந்தளவுக்கு நான் கல்நெஞ்சக்காரி இல்ல... பஸ்லயே போவோம்” என்று சொல்லிவிட்டாள்.
“நம்ம ஊர் பஸ்ல இருக்குற ஒரே இன்கன்வீனியண்ட் இது தான்... பையனும் பொண்ணும் ஒரே சீட்ல உக்கார முடியாது”
பேருந்தின் பின்னிருக்கையில் அமர்ந்தவனிடமிருந்து வாட்சப்பில் மெசேஜ் வந்தது. கூடவே மூக்கிலிருந்து புகை வரும் எமோஜி வேறு!
“அஹான்” என்று பதிலளித்தவள் கூடவே கருப்புக்கண்ணாடி போட்ட எமோஜியை அனுப்பி வைத்தாள்.
இந்த எமோஜி விளையாட்டு கோவில் வாசலில் பேருந்து நின்று இருவரும் இறங்கும் வரை தொடர்ந்தது.
அங்கே சாலையைக் கடக்க முயன்றபோதும் அவளின் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டவன் “என் கையை விடாத அம்மு” என்று கூற அந்தக் கட்டளை இன்றைய நாள் முழுமைக்குமானது என்பது அவளுக்குப் புரிந்து போனது.
சரியென தலையாட்டிவிட்டு அவனுடன் கரம் கோர்த்தபடியே நடந்தவளின் கவனத்தைக் கவர்ந்துகொண்டனர் கோவில் வாசலில் வரிசையாக அமர்ந்திருந்த கடைகள்.
“என்னோட ஐடெக்ஸ் பிந்தி தீர்ந்து போயிடுச்சு அபூ!”
“அந்தக் குட்டி டெடிபேர் வாங்கிக் குடேன்டா”
“சாயங்காலமா வந்திருக்கலாமோ? அல்வா வாங்கிருக்கலாம்”
“வாவ்! எது வாங்குனாலும் முப்பது ரூபா... ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு அந்த சில்வர் ஜிமிக்கி வேணும்”
அவள் வரிசையாய் அடுக்கிக்கொண்டே செல்ல அவனும் பொறுமையுடன் அவள் சொன்ன கடைக்குள் எல்லாம் நுழைந்து கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தபடி அவளுடன் நடந்தான்.
சிறிது தூரம் சென்றதும் அவர்களின் கார் வந்து நிற்க அதனுள் இருந்து இறங்கினான் ஒருவன்.
அவனைக் கண்டதும் “ஹாய் அண்ணா” என்றபடி அவள் குசலம் விசாரிக்க அவனும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு “அபூ! இன்னைக்கு ஈவினிங்கே நம்ம கிளம்பணும்டா... யூனிவர்சிட்டில இருந்து இன்னும் டூ டேய்ஸ்ல ஆல் ஸ்டூடண்சும் வந்துடணும்னு மெயில் வந்திருக்கு... நீ அவுட்டிங் வந்தேனு லேட் பண்ணிடக்கூடாதுனு தான் நான் காரை இங்கேயே கொண்டு வந்துட்டேன்” என்று சொல்லவும் அவளின் முகம் கூம்பிப்போனது.
உடனே அவளைப் பார்த்த அந்த தோழன் “அட தங்கச்சிமா! இதுலாம் இன்னும் ஒரு வருசத்துக்குத் தானேடா... அப்புறம் நீங்களே கழுத்தைப் பிடிச்சு தள்ளுனாலும் நாங்க இந்தியாவை விட்டு எங்கயும் போகமாட்டோம்” என்று சமாதானம் செய்தான்.
ஆனால் அவளோ “பொய் சொல்லாதிங்கண்ணா! இவனோட எய்மே அப்ராட்ல செட்டில் ஆகறது தான்... சும்மா என்னை சமாதானம் பண்ணுறதுக்காக நீங்க சொல்லுறிங்க” என்று குறைபட்டாள்.
இத்தனை நடக்கும் போதும் அவன் வேடிக்கை பார்த்தானே தவிர தன்னவளை சமாதானம் செய்ய முயலவில்லை. உண்மை அவளுக்குத் தான் தெரியட்டுமே!
சமாதானம் செய்யும் படலம் முடியவும் அவனது தோழன் விடைபெற்றான். அவன் அவளது கையிலிருந்த அனைத்தையும் காரின் பின்னிருக்கையில் வைத்துவிட்டு “கோயிலுக்குப் போயிட்டு வந்துடுவோம்” என்றான் மெதுவாக.
அவளும் சம்மதித்தவளாக அவனுடன் நடந்தாள். வழியில் பார்த்த பூக்காரம்மாவோ “கோயிலுக்கு வர்றப்போ பூ வைக்காம வரலாமா?” என கேட்டு வைக்க
“இல்ல எனக்கு மல்லிப்பூ வச்சா தலை வலிக்கும்” என சொல்ல வாயெடுத்தவளின் குரல் அவன் ஆர்வத்துடன் பூச்சரத்தை வாங்கி அவள் தலையில் சூடிய போது அப்படியே தொண்டையில் அடங்கிப்போனது.
“நீ ஏதோ சொல்ல வந்தியே” என கேட்டவனிடம்
“ஆங்... அது... என்னனா... ஹான் கொண்டைக்கடலை மாலை... இன்னைக்கு தேர்ஸ்டே... தட்சணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலை மாலை போட்டா விசேசம்.... வாங்கிப்போமா?” என பேச்சை மாற்றிவிட்டு அதையும் வாங்கிக்கொண்டு நெல்லையப்பர் கோயிலுக்குள் நுழைந்தாள்.
பெரிய வெள்ளை நந்தியும் யானையும் எப்போதும் போல மனதை நிறைக்க காந்திமதியம்மனை தரிசித்துவிட்டு நெல்லையப்பரையும், சயனம் கொண்டிருந்த பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை வலம் வந்தனர்.
சிவாலயத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது வழக்கம் என்பதால் அங்கேயே அமர்ந்தனர்.
“நீ சீரியசா ஜெர்மனில தான் செட்டில் ஆகப்போறியா அபூ?”
“ஆமா! நீ அதுக்கு உன்னை தயார் படுத்திக்கோ அம்மு... மாமாவ நான் சம்மதிக்க வச்சிடுறேன்டி... ஆனா நீ அப்பாவ பிரியமாட்டேனு அழுது அழிச்சாட்டியம் பண்ணிடாத.... ப்ளீஸ்... உனக்கு உன்னோட அப்பா முக்கியம்னா எனக்கு உன்னோட வாழப்போற வாழ்க்கை முக்கியம்... அதை எனக்குப் பிடிச்ச இடத்துல, எனக்குப் பிடிச்ச வேலையைப் பாத்துட்டு வாழ்ந்தா தான் எனக்குச் சந்தோசம்”
அவன் தீவிரக்குரலில் பேசவும் அவளது சிரமமும் ஆமோதிப்பதை போல அசைந்தது.
பின்னர் “சரி கிளம்பலாமா?” என கேட்டவளிடம்
“கிளம்பலாம்... இப்போ கிளம்புனா தான் லக்கேஜ் எடுத்து வைக்க கரெக்டா இருக்கும்” என்றபடி அவனும் எழுந்தான்.
இருவருமாய் சேர்ந்து கார் நிறுத்திவைத்த இடத்தை அடைந்தனர். காரிலேறி அமர்ந்ததும் காரைக் கிளப்பியவன் கொக்கிரகுளம் வரும்வரை எதுவும் பேசவில்லை.
அறிவியல் மையம் அருகே அவன் காரை நிறுத்தவும் புருவம் சுருக்கி பார்த்தவள் “என்னடா?” என வினவ அவனோ கிளவ் கம்பார்ட்மெண்டை திறந்தான்.
அதனுள் இருந்து ஒரு கிறிஸ்டல் உருளையை வெளியே எடுத்தான். அதன் கீழ் பகுதியில் சாவி இணைக்கப்பட்டிருந்தது.
அந்த உருளைக்குள் ஆணும் பெண்ணுமாய் இரு பொம்மைகள் கரம் கோர்த்து நின்று கொண்டிருக்க அவன் சாவியைக் கொடுக்கவும் வெள்ளை நிறத்தில் பனி தூவ இரு பொம்மைகளும் அந்த கிறிஸ்டல் உருளைக்குள் நடக்க ஆரம்பித்தன. அதனுள் சிறிய புல்வெளி போன்ற அமைப்பு இருக்க அதைச் சுற்றி சுற்றி இரண்டு பொம்மைகளும் நடக்க அதைச் சுட்டிக்காட்டியவன் “ இது நீ! அது நான்” என்று சொல்லவும் அவளின் விழிகள் கண்ணீரால் நிறைந்தது.
உணர்ச்சிவசப்பட்டவளாக “லைப் லாங் உன் கையைப் பிடிச்சுட்டு இப்பிடியே நடந்து போகணும் அபூ... அதை விட எனக்கு வேற எதுவும் தேவையில்ல... சீக்கிரமா அது நடக்குமாடா?” என கேட்க
“கண்டிப்பா நடக்கும்... ஜஸ்ட் ஒன் இயர்... அடுத்த கிறிஸ்துமஸ்கு நான் வந்துட்டுக் கிளம்புறப்போ நீயும் என்னோட சேர்ந்து தான் கிளம்புவ” என்றவன் அவளைத் தன்னருகே இழுத்து நெற்றியில் இதழ் பதித்தான்.
“ஐ லவ் யூ அம்மு”
அவனின் உதடுகள் உச்சரித்த அதே வார்த்தையை அவளது உதடுகளும் முணுமுணுத்து அடங்கியது.
“ஐ லவ் யூ அபூ”
பின்னர் வேகமாக விலகியவள் அவனிடமிருந்து கண்ணாடி உருளையை வாங்கிக்கொண்டாள்.
“நீ வர்ற வரைக்கும் இது என் கூட இருக்கும்” என்றாள் கன்னம் குழிய சிரித்தபடியே!
அவனும் ஆமோதிப்பாய் தலையாட்டிவிட்டுக் காரைக் கிளப்பினான்.
அவளோ அந்தக் கிறிஸ்டல் உருளைக்குச் சாவி கொடுக்க இரு பொம்மைகளும் கரம் கோர்த்தபடி அந்த உருளைக்குள் இருந்த புல்வெளியைச் சுற்றி உலா வர ஆரம்பித்தன.
அவளுக்கு அவனுடன் சென்று வந்த நகர் உலா நினைவுக்கு வர இனி அவன் இந்தியா வரும் வரை இந்த உலாவின் இனிய தருணங்களும், இந்தக் கிறிஸ்டல் உருளையும் தான் தனக்குத் துணை என்று எண்ணியவாறு காரை ஓட்டியவனின் புஜத்தில் தலை சாய்த்துக்கொண்டாள் அபூவின் அம்மு!
************
ஹலோ மக்களே
இந்தச் சிறுகதை பிரதிலிபி டெய்லி டாபிக்குக்காக ஜனவரி 18, 2021ல நான் எழுதுனது. கருத்துனு பெருசா இருக்காது. சும்மா ஒரு ஃபீல் குட் சிறுகதை மட்டுமே. அடுத்த ஞாயிறு வேற ஒரு சிறுகதையோட வர்றேன். குட் நைட் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சூப்பர்👌👌👌👌
Share your Reaction
Super & Duper.
😄😄😄
CRVS (or) CRVS2797
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



