NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
அன்பெனும் முடிவிலி
 
Share:
Notifications
Clear all

அன்பெனும் முடிவிலி

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

அன்பெனும் முடிவிலி

 

தீபாவளியின் காலை நேரத்துக்கே உரித்தான காதைப் பிளக்கும் பட்டாசு சத்தம் தூக்கத்தைக் கலைத்துவிட, கோரைப்பாயில் புரண்டான் ஆச்சிமுத்து.

“ஏல முத்து இன்னுமா ஒறக்கம் கலையல? எந்த ஒத்தாசையும் பண்ணாம இப்பிடியே பாயில பொரண்டுட்டு இருந்துட்டு அப்பொறமாட்டி எம்மா வடை குடுனு வா, நான் உனக்குக் கொடை குடுக்கேன்”

வெண்கலக்குரலில் அவனைப் பெற்ற அன்னை வள்ளி கத்தவும் அடித்துப் பிடித்து எழுந்தான். போட்டிருந்த டவுசரை மேலே ஏற்றிவிட்டபடி வீட்டிற்கு வெளியே வந்தவனின் நாசியை நிரப்பியது எண்ணெய் கடாயில் பழுப்பு வண்ணத்தில் மிதந்துகொண்டிருந்த பருப்பு வடைகளின் நறுமணம்!

பார்க்கும்போதே நாவில் எச்சிலூறியது.

“எம்மா ஒன்னே ஒன்னு தாயேன்”

“பண்டிகை அன்னைக்காவது சீக்கிரமா முழிக்கியால? வயசு ஆவுது பதினொன்னு... உன் வயசுப்பயலுவ எல்லாரும் காலையிலயே எண்ணை வச்சு முழுகி புதுச்சட்டை போட்டுட்டானுவ... தொரை எழுந்திரிச்சதே ஒம்பது மணிக்கு... இதுல பல்லு தேய்க்காம வடை கேக்குதோ?”

“அப்பா வந்ததும் புதுச்சட்டை போடலாமுனு ஒறங்கிட்டேன்... அப்பா எப்ப வரும்?”

“உங்கய்யன் வி.எம் சத்திரத்தைத் தாண்டி வந்துட்டாராம்... கிருஷ்ணாபுரத்துல லாரிய நிறுத்திட்டு அவரும் டிரைவர் அண்ணனும் இன்னும் கொஞ்சநேரத்துல கெளம்பிடுவாவனு போன் பண்ணுனாரு”

“அப்பா எனக்குத் துப்பாக்கியும் ரோலும் வாங்கிட்டு வருமா?”

பொறித்த வடைகளை பக்கத்திலிருந்த பாத்திரத்தில் கரண்டியால் எடுத்து வைத்தாள் வள்ளி.

“உங்கய்யன் இந்தத் தடவை பெரிய டப்பா நெறைய வெடி வாங்கிட்டு வாராறாம்... அவிய ஓனரு அவருக்கும் டிரைவருக்கும் ஆளுக்கு ஒரு டப்பா குடுத்துருக்காராம்”

“ஐய்! மொளவாத்த வெடி, அணுகுண்டுலாம் இருக்குமா?

“எல்லா வெடியும் இருக்கும்ல... ஆனா பல்லு தேய்க்காத பயலுக்கு வெடி கெடையாதுனுட்டாரு உங்கய்யன்”

“அப்பா வாரதுக்கு இன்னும் நேரம் இருக்குல்ல... நான் போய் நள்ளில (பொதுத் தண்ணீர் குழாய்) பல்லு தேச்சிட்டு வந்துடுவேன்”

“வாயைப் பாத்துட்டு நிக்காம வரணும்”

வள்ளியின் பேச்சு தண்ணீர் குழாயை நோக்கி ஓடிய ஆச்சிமுத்துவின் காதில் விழுந்தால் தானே!

பொதுத் தண்ணீர் குழாய் அருகே படர்ந்து வளர்ந்திருந்த செவ்வரளியின் கீழே கிடந்த கல்லில் அமர்ந்து பல் துலக்கத் தொடங்கினான் ஆச்சிமுத்து.

அருகிலிருந்த அரசாங்கம் கட்டிக்கொடுத்த லோன் வீட்டை நோட்டமிட்டது அவனது விழிகள்.

வீட்டின் வெளியே தென்னையோலை தட்டியால் செய்யப்பட்டிருந்த குட்டையான கேட்டில் முகத்தைத் தாங்கியபடி நின்றுகொண்டிருந்தான் ஒரு சிறுவன்.

அவனைப் பார்த்ததும் ஆச்சிமுத்துவின் விழிகள் ஒளிர்ந்தது.

“ஏல மாதக்கண்ணுஊஊஊஊ”

அந்தச் சிறுவனை அழைத்தான்.

“புதுச்சத்தை போதலியா?”

ஆச்சிமுத்து பேசியது அவனுக்குப் புரியவில்லை.

“வாயில இருக்குறத துப்பிட்டு பேசுல... ஒன்னும் வெளங்க மாட்டிக்கு”

ஆச்சிமுத்து பல் துலக்கிவிட்டு அவனிடம் ஓடினான்.

“புதுச்சட்டை போடலியானு கேட்டேன்ல... உங்கம்மா இன்னும் ஐகிரவுண்டுல இருந்து வரலியா?”

“இல்ல... எங்கய்யனுக்கு இன்னைக்குக் கட்டு பிரிக்காவ... எங்கம்மா வீட்டுக்கு வர நைட் ஆவும்” என்றான் மாடக்கண்ணு சோகமாக.

“அப்ப உனக்கு இந்தத் தடவை புதுச்சட்டை, வெடி எதுவும் கெடயாதா?”

“தீவாளிய விடு…. எங்கய்யன் திரும்பி வந்துட்டா போதும்... அவரு வந்ததும் இனிமே கொத்தவேலைக்குப் போகக்கூடாதுனு சொல்லிடுவேன்... நான் வேலைக்குப் போவேன்”

இப்படியெல்லாம் பேசும் மாடக்கண்ணுவுக்கும் வயது பதினொன்றே. ஆச்சிமுத்துவும் அவனும் நெருங்கிய நண்பர்கள். பக்கத்து ஊரிலிருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் இருவரும் படிக்கின்றனர்.

மாடக்கண்ணுவின் தந்தையான பழனி கட்டிடத் தொழிலாளி. இரண்டு மாடி கட்டிடம் ஒன்றின் வெளிப்பூச்சு வேலைக்குப் போடப்பட்டிருந்த மரச்சாரத்தில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தபோது சாரம் சரிந்து விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டுவிட, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

மாடக்கண்ணுவின் தாய் செல்வி தினந்தோறும் கணவனை பார்த்துக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிடுவாள். அன்றும் அப்படியே!

“ஏல முண்டச்சாமிக்கு நேந்திருக்கல்ல... அதை எப்பிடி செய்யுவ?”

“வேப்பங்கொட்டை பொறக்கி யாவாரிட்ட குடுத்து துட்டு வாங்குவேன்... எங்கய்யன் வேலை பாக்குற மேஸ்திரிகிட்ட சித்தாளு வேலைக்குப் போவேன்... அந்தத் துட்டுல தேங்கா வெடலை போட்டுருவேன் முத்து”

“நானும் உன்கூட வேப்பங்கொட்டை பொறக்கவா மாடக்கண்ணு?”

“நீ ஏன்ல பொறக்கணும்? உங்கய்யன் வண்டிக்குப் போய் சம்பாதிக்காரு... உங்காத்தாவும் பீடி சுத்துது... ரெண்டு பேரும் உன்னைய நல்லா படிக்க வைப்பாவ ஆச்சிமுத்து... எங்க வீட்டுல அப்பிடியா?”

ஆச்சிமுத்துவின் பிஞ்சு இதயம் வருந்தியது.

மாடக்கண்ணுவுக்கு உதவும் வகையில் அவனது குடும்ப நிலை இல்லை. ஆனால் இன்று ஒருநாள் அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாமே!

“இன்னும் கொஞ்சநேரத்துல எங்கய்யன் வெடி டப்பா புதுச்சட்டை வாங்கிட்டு வருவாரு... நீ குளிச்சுட்டு உன்கிட்ட இருக்கதுல புதுத்துணியா போட்டு ரெடியா இரு... எங்கய்யன் வந்ததும் சாமி கும்புடுறப்ப உன்னை கூட்டிட்டுப் போவ வாரேன்... எங்கம்மா இட்லி, பலகாரம் செஞ்சிருக்கு... இந்தத் தீவாளிய எங்க வீட்டுல கொண்டாடு”

தோழனின் அன்பில் மாடக்கண்ணுவின் கண்கள் கலங்கியது.

“எங்கய்யன் உடம்பு சொகமாயி வீட்டுக்கு வந்துடும்ல முத்து?”

“கண்டிப்பா மாமா வந்துருவாவ... நீ அழாதல... முதல்ல போயி குளி”

மாடக்கண்ணு கண்ணீரைத் துடைத்தபடி தலையாட்டும்போதே ஆச்சிமுத்துவின் முதுகில் சுளீரென்று அடி விழுந்தது.

“பல்லு தேய்க்கப் போன பயல காணுமேனு வந்தா நீ இவன்கூட கொஞ்சிட்டிருக்க… அந்தச் செல்வி என்னைய பத்தி ஊருல அநியாயமா பேசுனதுக்குத்தான் இவங்கப்பன் பொழைப்பானா போவானானு தெரியாம ஐகிரவுண்டுல கெடக்கான்... அந்தச் சிறுக்கியோட மவன்கிட்ட உனக்கு என்னல பேச்சு?”

தனது கோபமனைத்தையும் ஆச்சிமுத்துவின் காது மடலில் காட்டி அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் வள்ளி.

அவளுக்கும் மாடக்கண்ணுவின் தாய் செல்விக்கும் கால்வாயில் துணி துவைக்கச் சென்றபோது ஏற்பட்ட சிறு மனத்தாங்கலை செல்வி ஊர் முழுவதும் திரித்து கூறிவிட, தவறேதும் செய்யாமல் ஊராரிடம் கொடுமைக்காரி பட்டம் வாங்கினாள் வள்ளி.

பின்னர் இரு பெண்களுக்கும் பயங்கர சண்டை! மண் வாரி தூற்றுதல், சபித்தல் என கிராமப்புறச் சண்டைக்கே உரித்தான அனைத்து சம்பவங்களும் நடந்தேறியது.

செல்வியின் மகனுடன் பேசாதே என்று வள்ளி எச்சரித்தும் ஆச்சிமுத்து அதை மீறிவிட்டான்.

“ஒழுங்கா எண்ணை வை... உங்கய்யன் வந்ததும் வாய்க்கால்ல போய் குளிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் சாமி கும்புட்டு புதுச்சட்டை போடு... அதை விட்டுட்டு அந்தப் பய கூட சேர்ந்து வெளையாடப் போறேன்னு ஆரம்பிச்ச நான் பொல்லாதவளா ஆயிடுவேன்”

வீட்டுக்கு வந்ததும் மகனை எச்சரித்துவிட்டு இட்லி கொப்பரையை அடுப்பில் ஏற்றினாள் வள்ளி.

ஆச்சிமுத்து அழுதபடியே கட்டிலில் அமர்ந்தவன் அந்தக் கட்டிலின் மூலையில் கிடந்த பனையோலைக் காற்றாடியைப் பார்த்தான். அதைs செய்து கொடுத்தவன் மாடக்கண்ணு!

இரண்டு செவ்வக வடிவ பனையோலை துண்டுகளை X வடிவில் கருவேலமுள்ளைக் குத்தி இணைத்து ஒரு குச்சியில் சொருகி காற்றாடி ஆக்குவார்கள்! அதைச் சிறுவர்கள் கையில் பிடித்தபடி ஓட காற்று அடிக்க அடிக்க அந்தக் காற்றாடி அழகாய்ச் சுழலும்.

ஆச்சிமுத்து பனையோலைத்துண்டுகளை முள் கொண்டு இணைக்க எவ்வளவோ முயன்றும் ஓலை உடைய, ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்த மாடக்கண்ணு சின்ன முள்ளிற்கு பதிலாகப் பெரிய முள்ளை வைத்துக் குத்தினால் ஓலை உடையாது என்று சொல்லி காற்றாடியும் செய்து கொடுத்தான்.

முள்ளை மரத்திலிருந்து பிய்க்கையில் உண்டானக் காயத்தைக் கூட பொருட்படுத்தவில்லை! இந்த நட்புக்கு இடையே நின்றது வள்ளியின் கோபம்.

அழுதுகொண்டிருக்கும் ஆச்சிமுத்துவை ஓரக்கண்ணால் பார்த்தபடி இட்லியை அவித்து முடித்தவள் சட்னிக்கு தேங்காயைத் துருவினாள்.

“ஏல இன்னுமா அழுது முடிக்கல? ஒழுங்கா தலையில எண்ணை வை”

ஆச்சிமுத்துவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“நீ என்னைய மாடக்கண்ணு கூட பேசக்கூடாதுனு சொன்னல்லா, எனக்கு தீவாளியும் வேணாம்... நீ சுட்ட பலகாரம், வடை, இட்லி எதுவுமே வேணாம்.... அவன் என் சேக்காளி... நீ எப்பிடி அவனை ஏசுவ?”

கால்களை உதைத்தபடி கட்டிலில் மடித்து வைத்திருந்த போர்வைகளைத் தரையில் வீசினான்

வள்ளி பொறுமையிழந்து கையை ஓங்கியபடி அவனருகே செல்லும்போது வாயிலில் “ஏல முத்து” என்ற குரல் கேட்டது.

வேகமான காலடிகளுடன் உள்ளே வந்து நின்றான் சண்முகம். கைகளில் போத்தீஸின் கட்டைப்பைகளுடன் பட்டாசு அடங்கிய பெட்டி ஒன்று அமர்ந்திருந்தது.

தேசிய உரிமம் பெற்ற லாரி ஒன்றில் க்ளீனர். லாரியை முதலாளி வீட்டில் நிறுத்திவிட்டு மனைவி மகனுடன் தீபாவளி கொண்டாடுவதற்கு வந்துவிட்டான்.

அழுத முகமாய் நின்ற மகனையும், கோபத்தில் ஆங்கார ரூபினியாய் நின்ற மனைவியையும் கண்டவன் என்னவாயிற்று என வினவினான்.

“எப்பா”

கேவலுடன் சண்முகத்தை அணைத்துக்கொண்ட ஆச்சிமுத்து சற்று முன்னர் நடந்ததைக் கூறினான்.

என்ன இது என்பது போல சண்முகம் கண்களால் வள்ளியிடம் வினவ மோவாயைத் தோளில் இடித்துவிட்டு சட்னி அரைக்க சென்றுவிட்டாள்.

“சரிய்யா அழாத! அப்பா வந்துட்டேன்ல... நீ மாடக்கண்ணுவ கூட்டிட்டு வா... இங்கயே சாப்பிட்டுத் தீவாளி கொண்டாடட்டும்... என் ராசா அழக்கூடாது... அப்பா உனக்காக ரெண்டு புதுத்துணி, துப்பாக்கி, ரோல் கேப்ல வாங்கிட்டு வந்திருக்கேன்” மகனைச் சமாதானப்படுத்தினான் சண்முகம்.

ஆச்சிமுத்துவுக்கு துப்பாக்கி வந்தது முதல் சந்தோசம் என்றால் மாடக்கண்ணுவுடன் தீபாவளி கொண்டாடப்போவது இரண்டாவது சந்தோசம்!

எண்ணெய் தேய்த்துக் கொண்டவன் இச்செய்தியை மாடக்கண்ணுவிடம் பகிர்ந்துகொள்ள ஓட, வள்ளி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

“உமக்கு மவன் சந்தோசம்தான முக்கியம்... அந்த எடுபட்டவ என்னைய பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லி நாறடிச்சதுலாம் உம்ம கண்ணுக்குத் தெரியாது… புருசன் சரியில்லனா நாலு வாயி நாப்பது விதமா பேசும்ங்கிறது சரியாதான் இருக்கு”

பொருமித் தீர்த்தவளிடம் வந்து அமர்ந்தான் சண்முகம்.

தன்னை அணைத்துக் கொண்டவனின் வயிற்றில் தனது முழங்கையால் இடித்தாள் வள்ளி.

“போதும்வே! என்னைய சமாதானப்படுத்தப் பாக்கீராக்கும்?”

“சமாதானம் இல்லலா... உனக்குப் பழசை ஞாபகப்படுத்தப் போறேன்”

“என்னத்த நியாபகப்படுத்த போறீரு? எனக்குத் தலைக்கு மேல சோலி கெடக்கு”

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நான் லாரிக்குப் போயிருந்தேன்.. அப்ப நடுராத்திரி நீ எனக்குப் போன் பண்ணி ஒப்பாரி வச்ச... ஞாபகம் இருக்கா?”

“ஆமா! நீரு பெத்த மவராசனுக்குக் காய்ச்சல் கூடி வலிப்பு வந்துட்டு... அதான்”

“அன்னைக்கு நம்ம மவனை கருங்கொளம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவ உனக்குத் தொணையா வந்தது யாரு?”

வள்ளி அமைதியாகிவிட்டாள்.

“அன்னைக்குப் பழனி உனக்கு ஒதவிக்கு வந்தான்... அவன் பொண்டாட்டி எப்பிடி வேணாலும் இருக்கட்டும்... அவன் நல்லவன் வள்ளி... இன்னைக்குக் கட்டு பிரிச்சாலும் செல்வியால மாடக்கண்ணுக்குப் பண்டிக்கைநாள்னு எதையும் செஞ்சு குடுக்க முடியாது... அவனுக்கும் நம்ம முத்து வயசுதான... ஒருவேளை நான் லாரிக்கு போற இடத்துல எனக்கு அடிபட்டு நீ எனக்காக ஆஸ்பத்திரில இருக்கப்ப செல்வி நம்ம மவனை இப்பிடி நடத்துனா உனக்கு எப்பிடி இருக்கும்னு யோசிச்சுப் பாரு”

அவன் சொல்லி முடிக்கவும் வள்ளியின் கரம் வேகமாக அவனது வாயைப் பொத்தியது.

“என்னவே இது, நல்ல நாளும் அதுவுமா ஆக்கங்கெட்டத்தனமா பேசுதீரு?”

அவளது கரத்தை விலக்கினான் சண்முகம்.

“மனுச வாழ்க்கை நிலையில்லாதது வள்ளி... சண்டை சச்சரவு வந்து போறது வழக்கம்தான்... எல்லாத்தையும் மறந்துட்டு ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்குறதுக்குத்தானே இந்த மாதிரி பண்டிகை எல்லாம் வருது... அன்னைக்குக் கூடவா செல்வி மேல இருக்குற கோவத்த அவ மவன் மேல காட்டுவ?”

நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையில் கோபம் வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் மட்டும் நிலையாகவா இருக்கும்? அன்பை விதைக்கும் எண்ணத்துடன்தானே பண்டிகை கொண்டாட்டங்கள் வருகின்றன! அந்த அன்பைக் காட்டுவதற்கு பதிலாக மாடக்கண்ணுவிடம் அநியாயமாக கோபத்தைக் கொட்டிவிட்டோமே என வருந்தினாள் வள்ளி.

அப்போது ஆச்சிமுத்து மாடக்கண்ணுவுடன் வர “ரெண்டு பயலையும் வாய்க்காலுக்குக் கூட்டிட்டுப் போய் குளிப்பாட்டிட்டு வாரேன் வள்ளி! நீயும் குளிச்சி புதுத்துணி கட்டு... வந்ததும் சாமி கும்புட்டுட்டுச் சாப்புடலாம்... என்னல மாடக்கண்ணு, சரி தான?” என்று கேட்டபடி சண்முகம் எழுந்தான்.

“நீ சொன்னா சரியா இருக்கும் மாமா... ஆனா அத்தைக்குத்தான் என் மேல கோவம்” என்றான் அச்சிறுவன்.

“இல்லய்யா! அத்தைக்கு உன் மேல எந்தக் கோவமும் இல்ல... போய் எல்லாரும் குளிச்சிட்டு வாங்க”

வள்ளி அமைதியாய் உரைக்க சண்முகத்திற்கு மனம் நிறைந்தது.

மூவரும் குளித்துவிட்டு வரவும் வள்ளி புத்தாடை அணிந்து தயாராக இருந்தாள். ஆச்சிமுத்து தனது இரண்டு புத்தாடைகளில் ஒன்றை மாடக்கண்ணுவுக்குக் கொடுக்க அவனும் அணிந்து கொண்டான். சண்முகமும் உடைமாற்றிவிட நால்வருமாய் சேர்ந்து வழிபாட்டை முடித்தனர்.

பின்னர் சாப்பிட்டுவிட்டுச் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வள்ளியும் சண்முகமும் திண்ணையில் அமர்ந்து அதை ரசித்தார்கள்.

கோபம், வெறுப்பு, பகைமை போன்ற தற்காலிகமான எதிர்மறை உணர்வுகளுக்கு மத்தியில் மகத்தான ஒரு உணர்வும் இருக்கிறது! அதுதான் அன்பு! அந்த அன்புக்கு எவ்விதப் பாகுபாடுமில்லை! எல்லையுமில்லை! ஆம்! அன்பு என்பது முடிவிலி!

 

-நித்யா மாரியப்பன்

 

********

 

ஹலோ மக்களே 🤩 

 

குவிகம் நடத்திய லலிதா ஈஸ்வரன் போட்டியில் ஜெயித்த சிறுகதை இது மக்களே. எங்களோட சின்ன வயசு தீபாவளி நினைவுகளோட இன்ஸ்ப்ரேசன்ல எழுதுன சிறுகதை.

 

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1193

 

 

 

1749970620-WhatsApp-Image-2025-06-15-at-122618_7443de5d.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 15, 2025 12:16 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Arumaiyana kathai ma 💐🥰🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 15, 2025 1:44 PM
(@crvs2797)
Reputable Member Member

அருமையான கதை, அன்பை எடுத்துச்சொல்லும் அற்புதமான கதை. அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்..? அதுவும் நட்பிற்குள்..?

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 15, 2025 3:59 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari thank you akka 🤩🤩🤩🤩

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 4:35 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 kandipa... Thank you sis🤩

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 4:36 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Azhagana kadhai ❤️.....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 16, 2025 4:19 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 நன்றி சிஸ் 😊

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 16, 2025 9:01 PM
(@kothai-suresh)
Reputable Member Member

அருமையான கதை, குழந்தைகளுக்கு பகை உணர்வெல்லாம் கிடையாதுங்கறத அருமையா சொல்லிட்ட

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 18, 2025 9:01 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh தேங்க்யூ ஆன்ட்டி

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 20, 2025 7:44 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index