NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
அக்கரை பச்சை
 
Share:
Notifications
Clear all

அக்கரை பச்சை

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

அக்கரை பச்சை

 

வங்கிக்குச் செல்லத் தயாரானப் பிரபுவை முறைத்தபடி அவனது மொபைலை எடுத்து நீட்டினாள் சங்கவி.

“இன்னும் கோபம் தீரலையா உனக்கு?”

அவளைக் கொஞ்சிய பிரபுவுக்குத் தனியார் வங்கி ஒன்றில் மேலாளர் உத்தியோகம். பணிச்சுமை அதிகம் என்றாலும் அதற்கேற்ற ஊதியம். மேலாளராகப் பணியுயர்வு கிடைத்தக் கையோடு தூத்துக்குடியிலிருந்து சென்னை கிளைக்குப் பணியிட மாறுதலும் கிடைத்தது.

அந்த இடைவெளியில் பெற்றோர் பார்த்து வைத்த சங்கவியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுத் தனது மனையாளாக்கிக் கொண்டவன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டான்.

ஆறு மாதங்களாகிறது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு. கடந்த ஒரு மாதமாகச் சங்கவி அவனை ஒரு விசயத்துக்காக அனுமதி கேட்டு நச்சரிக்கிறாள். அவனும் முடியாதென மறுத்துக்கொண்டே இருக்கிறான்.

முந்தைய இரவில் அது குறித்த வாக்குவாதம் கொஞ்சம் தீவிரமானதால் முகம் திருப்பிக்கொண்டவள், கணவனின் வயிற்றைக் காயப்போடும் அளவுக்குக் கல்நெஞ்சம் படைத்தவள் இல்லை என்பதால் காலையுணவோடு மதியவுணவும் தயாராக இருந்தது.

இருப்பினும் கோபம் குறையவில்லை என்பதை முறைப்பின் மூலம் கடத்திக்கொண்டே இருந்தாள். பிரபு கேட்டக் கேள்விக்குப் பதிலளிக்காமல் படுக்கையறையிலிருந்து வெளியேறியும் விட்டாள்.

அவனும் பெருமூச்சோடு சாப்பிடச் சென்றான். தட்டில் இட்லி வந்து விழுந்த வேகத்தை வைத்தே அவள் இன்னும் சமாதானமாகவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.

“உக்காரு கவி. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்”

“சாப்பிடுங்க. டைம் ஆகுது. இல்லைனா ட்ராஃபிக்ல மாட்டிப்பிங்க”

“அது எங்களுக்குத் தெரியும். நீங்க உக்காருங்க மகாராணி”

“ப்ச்! மகாராணியாம்! ஆசைப்பட்டதைச் செய்ய முடியலை. இதுல மகாராணி பட்டம் ஒன்னுதான் மிச்சம்”

சலித்தபடி அவனருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள் சங்கவி. பிரபு சாம்பாரில் இட்லியைத் தோய்த்து அவளுக்கு ஊட்ட முனையவும் தந்தையின் நினைவு வந்துவிட்டது. இட்லியைச் சாப்பிட்டவள் ஒரு முடிவோடு பேசினாள்.

“ஏன் உங்களுக்கு இவ்ளோ பிடிவாதம்? ஷர்மியும் அவ ஹஸ்பெண்டும் போனவாரம் ஒரு அவார்ட் ஃபங்சன்ல ‘பெஸ்ட் கபிள் வ்ளாகர்ஸ்’னு விருது வாங்கியிருக்காங்க. ஸ்கூல்ல படிச்ச நாட்கள்ல அவ சரியான மக்கு. இங்கிலீஸ்ல கட்டுரை கூட எழுதத் தெரியாது. அவளுக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம்ல மில்லியன் கணக்குல ஃபாலோயர்கள் இருக்காங்க. அவளும் அவ ஹஸ்பெண்டும் போடுற வீடியோ, ரீல்ஸ் எல்லாம் எவ்ளோ வியூ போகுது தெரியுமா?”

“அவளாலயே முடியுறப்ப நான் சோசியல் மீடியா பத்தி நல்லா தெரிஞ்சவ. ஏன் நம்ம ‘கபிள் வ்ளாகர்’ ஆகக் கூடாதுனு பிடிவாதம் பிடிக்கிறீங்க பிரபு? நம்ம மட்டும் ஃபேமஸ் ஆகிட்டோம்னா உங்க வேலையை விட அதுல அதிகமா சம்பாதிக்கலாம். நிறைய மேடைகள்ல விருது வாங்கலாம். சினிமா பிரபலங்கள் கூட அறிமுகமாவாங்க. ப்ளீஸ் பிரபு!”

சங்கவி இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதில்லை. கடந்த ஒரு மாதமாக அவளைக் ‘கபிள் வ்ளாகிங்’ ஆசை பேயாய்ப் பிடித்து ஆட்டுகிறது. எந்நேரமும் மொபைலில் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறந்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு ரீல்ஸ் வீடியோவாகப் பார்த்து பார்த்து அவளுக்கும் அதில் வரும் கபிள் வ்ளாகர்களைப் போல வீடியோ மற்றும் வ்ளாக் போடும் ஆசை துளிர்த்துவிட்டது.

நமக்குச் சந்தோசமான நிகழ்வு ஏதேனும் நடக்கும்போது, பிடித்ததைச் செய்யும்போது மூளையில் டோப்பமைன் என்ற ஹார்மோன் சுரக்குமாம். ஆனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயங்குபவர்களுக்கு, ரீல்ஸ்களைப் பார்ப்பவர்களுக்கு செயற்கையான டோப்பமைன் சுரப்பு உண்டாகுமாம். அந்தச் செயற்கை டோப்பமைன் சுரப்புக்கு அடிமையாகிவிட்டால் நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்களை நம்மால் அனுபவிக்க முடியாத நிலை உருவாகுமாம். இது ‘ப்ரெய்ன் ராட்’ (brain rot) எனப்படும் மூளையின் செயல்திறன் குறைப்புக்கு வழிவகுக்கும்.

கிட்டத்தட்ட சங்கவியும் அந்த நிலையில்தான் இருக்கிறாளோ என்ற கவலை சமீப நாட்களாகப் பிரபுவுக்கு வந்துவிட்டது. சமூக வலைதள பிரபலங்கள் அனைவரும் ஆதர்ச தம்பதிகள் என்ற குழந்தைத்தனமான எண்ணம் அவளுக்கு. அதெல்லாம் கேமராவுக்கு முன்னே அரங்கேறும் நடிப்பு என்று சொன்னாலும் புரியவில்லை.

அறிவியல், மனோதத்துவத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் காலையில் எழுந்ததிலிருந்து இரவில் உறங்குவதுவரை ஒரு தருணம் கூட மிச்சமில்லாமல் அந்தரங்கத்தைச் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பதிவிடுவதை ஏனோ பிரபுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘கபிள் வ்ளாகர்கள்’ என்று சொல்லிக்கொள்பவர்களின் போலியான நடிப்பும், அசட்டுத்தனமான ஸ்க்ரிப்டுகளும் அவனுக்கு எப்போதுமே அலர்ஜியை உண்டாக்கும். அதையெல்லாம் விளக்கிய பிறகும், புரியாமல் பிடிவாதம் பிடிப்பவளை ஆயாசத்துடன் ஏறிட்டபடி எழுந்தான் பிரபு.

“இந்த ரீல்ஸ், கபிள் வ்ளாகிங், சோசியல் மீடியா இன்ஃப்ளூயர் வாழ்க்கை இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை சொந்த வாழ்க்கையோட அற்புதமானத் தருணங்களை வியாபாரமாக்குற வழிமுறைகள். அதை நான் விரும்புறதில்ல கவி. குடும்ப வாழ்க்கையோட ஒவ்வொரு தருணமும் அற்புதனமானது. அதை ஊரார் பார்த்துக் கைக்கொட்டிச் சிரிக்குறதும், தரக்குறைவா விமர்ச்சிக்கிறதும் நல்லாவா இருக்கு?”

“உன் ஃப்ரெண்ட் ஷர்மிக்கும் அவளோட ஹஸ்பெண்டுக்கும் இதைப் பத்தி கவலை இல்லாம இருக்கலாம். அவங்களுக்குக் காசு பிரதானமா தெரியலாம். அன்பான மனைவியும், இந்த அமைதியான வாழ்க்கையும் மட்டும் எனக்குப் போதும். வ்ளாகிங் ஆசைய விட்டுடு. உனக்கு ரொம்ப ஆசையா இருந்தா குக்கிங் சேனல் ஆரம்பி. நீ படிச்ச அக்கவுண்டன்சிய ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு பாடம் புரியாத மாணவர்களுக்குச் சொல்லிக் குடு. தம்பதிகளோட அன்னியோன்யத்தைக் கடை பரப்புற கபிள் வ்ளாகிங் ஆசைய விட்டுடு”

கறாராக எச்சரித்துவிட்டு வங்கிக்குக் கிளம்பினான் பிரபு. அப்பார்ட்மெண்டின் தரிப்பிடத்திலிருந்து காரைக் கிளப்பியவனின் மனதில் மெல்லியச் சோர்வு.

சங்கவி பிடிவாதம் பிடிக்கும் இரகமில்லை. இந்த ஆறு மாதங்களில் அவள் அவனிடம் விரும்பிக் கேட்டது இந்தக் ‘கபிள் வ்ளாகிங்’ மட்டுமே!

‘தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியின் ஆசையை நிராசை ஆக்குகிறோமோ?’ என்ற மனப்போராட்டம் அவனுக்குள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இதை வைத்து அடிக்கடி மனஸ்தாபங்கள், சின்ன சின்ன சண்டைகள், கருத்து மோதல்கள் உருவாவதை அவனால் இரசிக்க முடியவில்லை.

குடும்பத்தில் அமைதியானச் சூழல் நிலவினால் மட்டுமே பணியிடத்தில் அமைதியான மனநிலையோடு வேலை செய்ய முடியும். வீட்டில் மோதல்கள் வெடித்துக்கொண்டே இருந்தால் அமைதிக்கு இடமேது?

வங்கியை அடைந்தவனுக்கு வேலை தலைக்கு மேல் இருந்தது. கடன் விண்ணப்பங்களைப் பார்வையிடுவது, வாராக்கடன் பற்றிய அறிக்கைகள் என அவனை வேலை இழுத்துகொண்டது. மதியவுணவு நேரத்தில் உடன் பணியாற்றும் சேகர் அவரது மொபைலில் ஷர்மியும் அவளது கணவரும் கார் வாங்கிய ரீல்ஸ் வீடியோவைக் காட்டினார்.

“நம்மளும் கஷ்டப்பட்டு உழைக்குறோம் பிரபு சார். ஆனா இவங்களைப் பாருங்க. ஈசியா வீடியோ போட்டுக் கார், வீடுனு வாங்கி ஜாலியா இருக்காங்க. இந்தம்மா வாங்குன தங்க நகைகளை வச்சு வ்ளாக் போடுவாங்க. அதைக் குடுத்துட்டு வேற நகை வாங்குறப்ப ஒரு வ்ளாக் போடுவாங்க. புதுசா அந்த டிசைன் வாங்குனேன், இந்த டிசைன் வாங்குனேன்னு ஒரே அலட்டல். இதைப் பார்த்துட்டு நம்ம வீட்டுப் பொம்பளைங்க நம்மளை நச்சரிக்குறாங்க”

“சரியா சொன்னிங்க சேகர்”

மாலையில் பிரபு வீட்டுக்குத் திரும்பியபோது அவனது ஆருயிர் மனைவி கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாள்.

“என்னாச்சு கவி?”

“ஷர்மி… ஷர்மி இறந்துட்டா”

அவள் அழ, பிரபுவுக்கோ அதிர்ச்சி. ஷர்மியும் அவள் கணவரும் சமீபத்தில் மஹாராஷ்டிராவிற்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள கும்பே நீர்வீழ்ச்சியைப் பார்வையிடும் குன்றில் நின்ற ஷர்மி, வ்ளாக் கேமராவால் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது கால் வழுக்கிப் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டாளாம்.

“முன்னாடி மாதிரி அவங்களோட சேனல் வீடியோக்கு வியூஸ் வரலனு சொன்னா பிரபு. டூரிஸ்ட் ஸ்பாட்ல வ்ளாக் எடுத்துப் போட்டா வியூஸ் அதிகமா வரும்னு நினைச்சா. ஆனா…. இப்பிடி அவளே இல்லாம போயிட்டாளே!”

தோழியை நினைத்து அழுது அரற்றிய மனைவியைச் சமாதானம் செய்த பிரபு தொலைகாட்சியில் ஷர்மியின் மரணம் பற்றிய செய்தியைப் பார்த்தான்.

‘மஹாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்திலுள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்குக் கணவருடன் சுற்றுலா சென்ற ஷர்மி என்ற இளம்பெண் அருவியைப் பின்னணியாக வைத்து ரீல்ஸ் மற்றும் செல்ஃபி எடுத்தபோது கால் வழுக்கி 300 அடி பள்ளத்தில் விழுந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் ஆறு மணிநேரம் போராடி படுகாயங்களுடன் இருந்த ஷர்மியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும் கணவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது’

செய்தி சேனல்களில் இவ்வாறு சொன்னார்கள். சில யூடியூப் சேனல்களிலோ ஷர்மியின் கணவரே அவளைத் தள்ளிவிட்டிருக்கலாம் என்று புரளியைக் கிளப்பினார்கள்.

ஷர்மியின் கணவரைக் காவல்துறையினர் சந்தேகப்பட்டியலில் வைத்திருப்பதாக பிரபு சொன்னதும் சங்கவிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அவர்கள் இருவரும் ‘ஆதர்ச தம்பதிகள்’ என்றாள். சமூக வலைதளங்களில் அன்னியோன்யமாகக் காட்டிக்கொள்வது எல்லாம் மெய்யான அன்னியோன்யமாக இருந்தாகவேண்டுமெனக் கட்டாயமில்லையே!

“இந்த மாதிரி வ்ளாக் எடுக்குறவங்களுக்கு வியூஸ் வேணும், பிரபலமாகணும்ங்கிற ஆசை ஆரம்பத்துல இருக்கும். ஆனா ஒரு தடவை வியூஸ் குறைய ஆரம்பிச்சா அவங்க மனசு அலைபாயும். விட்ட இடத்தைப் பிடிக்கணும்ங்கிற வெறி வரும். ஷர்மிக்கு வந்தது அந்த வெறிதான். அதோட விளைவு, ஆபத்தான இடத்துல எச்சரிக்கையாக இருக்காம உயிரை விட்டுட்டா. இப்ப தவிக்குறது யாரு? அவளோட குடும்பமும் கணவரும்தானே? எத்தனை இன்ஃப்ளூயன்சர்கள் இந்த மாதிரி சமூக வலைதலங்கள்ல பிரபலமாகணும்னு வாழ்க்கையை, உயிரை இழந்திருக்காங்கனு கூகுள்ல தேடிப் பாரு. எதுவும் அளவோட இருந்தாதான் நல்லது கவி. சமூகவலைதள பிரபலத்துவம் மேல உண்டாகுற ஆசைக்கும் இது பொருந்தும். அந்த ஆசை அதீதமாச்சுனா அதுக்கு விலையாகப் போறது என்னவோ வாழ்க்கையும், உயிரும்தான். உபயோகமான ஒரு விசயத்தை யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலமா கத்துக் குடுக்க நீ தயாரா இருந்தா உனக்கு நான் எல்லாவிதத்துலயும் சப்போர்ட்டும் பண்ணுறேன். இந்தக் ‘கபிள் வ்ளாகிங்’ ஆசையை மட்டும் விட்டுடு கவி”

குழந்தைக்குச் சொல்வது போல பிரபு எடுத்துரைக்க, சங்கவியும் புரிந்துகொண்டாள். ஷர்மியின் மரணம் அவளுக்குக் கொடுத்த அதிர்ச்சியால் ‘கபிள் வ்ளாகிங்’ ஆசை அவள் மனதிலிருந்து முற்றிலுமாக அழிந்து போனது. இனி அந்த ஆசை அவளுக்குள் துளிர்ப்பதற்கு ஷர்மியின் மரணம் உண்டாக்கிய தாக்கம் ஒருபோதும் அனுமதிக்காது. ‘சமூக வலைதள பிரபலத்துவ மோகத்தால் இன்னொரு உயிர் போகவேக்கூடாது இறைவா’ என இறைவனிடம் வேண்டிக்கொண்டாள், மனம் மாறிய சங்கவி.

**********

ஹலோ மக்களே

இந்தச் சிறுகதை தினமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டிக்கு எழுதுனது. கதை அங்க தேர்வாகல. அதான் சைட்ல போட்டாச்சு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதப்பட்ட கதை. உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். உங்க கருத்துகளை கமெண்ட்ல  சொல்லிட்டுப் போங்க. அடுத்த சிறுகதையோட அடுத்த வார ஞாயிறு வர்றேன். குட் நைட்!

1760869610-WhatsApp-Image-2025-10-19-at-155405_d544fb9c.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : October 19, 2025 3:56 PM
(@kothai-suresh)
Reputable Member Member

சூப்பர்👌👌👌👌, நிறைய இன்றைய இளைய தலைமுறையினர் இப்படி தான் இருக்காங்க

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 19, 2025 11:05 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh தேங்க்யூ ஆன்ட்டி 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : October 23, 2025 7:00 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images