NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
உயிர்க்கொல்லி
 
Share:
Notifications
Clear all

உயிர்க்கொல்லி

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“ஆரோஹி” என்று பெருங்குரலெடுத்துக் கத்தியவனின் கூச்சலில் இவ்வளவு நேரம் முகம் புதைத்திருந்த கணினியிலிருந்து திடுக்கிட்டு விழித்தாள் ஆரோஹி.

எதற்கு இவ்வளவு அவசரமாகத் தன்னை அழைக்கிறான் என்று எண்ணியபடியே “இதோ வர்றேன் இஷான்” என்று சொன்னபடியே அவனது அறையாக உருமாறியிருந்த விருந்தினர் அறைக்குள் நுழைந்தாள் அவள்.

அவன் தொலைக்காட்சியில் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தது ஏதோ ஆங்கில வெப்சீரிஸ். வெப்சீரிஸ் என்றாலே அதில் சில தாராள காட்சிகள் இடம்பெறுவது வழக்கம் தானே! அதிலும் ஆங்கிலமொழி வெப்சீரிஸ் என்றால் அம்மாதிரி காட்சிகள் தண்ணீர் பட்ட பாடு!

ஆரோஹி இவற்றை கண்டதும் ஐயோ அம்மாவென அலறும் குழந்தைப்பெண்ணில்லை. School Of Earth And Planetary Science –National Institute Of Science Education And Researchல் ஆஸ்ட்ரோபயலாஜியில் ஆராய்ச்சி மாணவி. வேற்றுகிரக உயிரினங்களை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவள்.

இம்மாதிரியான காட்சிகளைக் கண்டு நாணிக்கோணும் ரகமல்ல அவள். எனவே சோபாவில் அமர்ந்து அவளையும் தொலைகாட்சியையும் மாறி மாறி பார்ப்பவனிடம் “என்ன இஷான் வேணும் உனக்கு?” என்று பெருமூச்சுடன் கேட்டவளுக்குக் கணினியைப் பார்த்ததில் தலைவலிக்கவே சமையலறையை நோக்கிச் சென்றாள்.

இஷான் வேகமாக எழுந்தவன் “இப்போ இந்த டிவில வந்த சீன் என்னது?” என்று கேட்க ஆரோஹி ஒரு கணம் திகைத்து பின்னர் தலையில் அடித்துக் கொண்டாள்.

பின்னர் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு “அது லவ் மேக்கிங் சீன்ஸ்… இங்கிலீஸ் வெப்சீரிஸ்ல இந்த மாதிரியான சீன்ஸ் வர்றது சகஜம் தான்” என்று அவனது முகம் பார்க்காது உரைத்துவிட்டு பிளாக் காபி தயாரிக்க ஆரம்பித்தாள்.

இஷானோ தனது நீலக்கண்மணிகள் யோசனையில் சுருங்க “லவ் மேக்கிங்னா என்ன ஆரோஹி?” என்று கேட்க அவள் மீண்டும் சங்கடப்பட்டு போனாள்.

இவனை என்ன செய்தால் தகுமென கடுப்பு எழுந்தாலும் விளக்கி ஆகவேண்டிய கட்டாயம் அவளுக்கு உள்ளதே! சும்மா இருந்தவனை இங்கே அழைத்தது அவள் தானே!

“அது… எப்பிடி சொல்லுறது? ஆங்… மேள் அண்ட் ஃபீமேள் தங்களோட காதலை வெளிப்படுத்திக்கிறாங்க… தட்ஸ் ஆல்… புரிஞ்சுதா? இதோட என்னை விட்டுடு இஷான்… உனக்கு எதை பத்தி தெரிஞ்சுக்கணும்னாலும் கூகுள் ஆண்டவரை கூப்பிடு” என்று சொல்லிவிட்டு தயாரான பிளாக் காபியை அருந்தத் தொடங்கினாள்.

இஷானோ அவள் சொன்னதற்கு அர்த்தம் புரியாதவனாக “வாட் இஸ் காதல்? ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்… எதுவா இருந்தாலும் சயிண்டிபிக் டேர்ம்ஸ்ல சொல்லு ஆரோஹி” என்று கேட்க

ஆரோஹி பல்லைக் கடித்தவள் “ஐயோ! என் வாயைக் கிளறுறானே!” என்று தனக்குள் கடுகடுத்துக்கொண்டு அவனை நோக்கினாள்.

ஆறடி உயரம், ஜெல் பூசிய சிகை, கூரிய நாசி, பார்ப்பவரை லேசராய் துளையிடும் நீலநிற விழிகள் இவையனைத்தும் ஒருங்கே சேர்ந்து ஓருருவமாக நிற்பவனின் முகத்தில் கிஞ்சித்தும் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.

“சயிண்டிபிக் டேர்ம் தானே வேணும்? ரீ-புரொடக்சன்… போதுமா?” என சொல்லிவிட்டு மடமடவென காபியை வாய்க்குள் சரித்துக்கொண்டாள்.

இஷான் புரிந்தது போல தலையாட்டியவன் “ஓ! உங்களோட மெத்தட் ஆப் ரீ-புரொடக்சன் வித்தியாசமா தான் இருக்கு… வியர்டாவும் இருக்கு… யூ ஹியூமன் பீயிங்ஸ் ஆர் வியர்ட் ஸ்பீசிஸ்” என்றான்.

“வீ ஆர் நாட் ஸ்பீசிஸ்” என்றாள் ஆரோஹி சட்டென்று.

“ஓகே! அப்கிரேடட் வெர்சன் ஆப் ஸ்பீசிஸ்” என்று சொல்லி தோளைக் குலுக்கியவனின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன என தோன்றியது அவளுக்கு.

“நோ! நாட் அட் ஆல்! யூ ஆர் அண்டர்-எஸ்டிமேட்டிங் ஹியூமென்… வீ ஆர் த ரூலர்ஸ் ஆப் தி எர்த், தி மில்கிவே கேலக்சி அண்ட் தி யூனிவர்ஸ்” என்றாள் ஆரோஹி கர்வத்துடன்.

“கரெக்சன்… யூ காண்ட் பீ தி ரூலர்ஸ் ஆப் யூனிவர்ஸ், ஏன்னா நாங்க உங்களை விட பரிணாம வளர்ச்சில முன்னேறினவங்க… நீங்க எங்களோட கடைநிலை ஊழியர்களா வேலை செய்யுறதுக்கு கூட லாயக்கில்லாத அறிவு வளர்ச்சி இல்லாத ஜீவராசிகள்” என்று ஏளனமாக உரைத்தவனை கோபத்துடன் உறுத்து விழித்தாள் அவள்.

“ஷட்டப்… அந்த லாயக்கில்லாத ஜீவராசியோட தயவுல தான் நீ பூமில இருக்க இஷான்… அண்ட் நான் இன்வைட் பண்ணி இந்த பூமிக்கு வந்த நீ எங்களோட மனுச இனத்தையே கேவலமா பேசுனா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று கடுகடுத்துவிட்டு கொஞ்சம் காபி மிச்சமிருந்த கப்பை சமையல்மேடை மீது வைத்துவிட்டு அகன்றாள்.

அதைக் கேட்டு இஷானுக்கு கோபம் வரவில்லை. சிரிப்பும் வரவில்லை. சொல்லப்போனால் இந்த உணர்ச்சிகள் எதுவுமே அவனுக்குக் கிடையாது. ஏனெனில் அவன் மனிதனே கிடையாது.

பரந்த பிரபஞ்சத்திலுள்ள ஆளில்லா அண்டங்களுக்கும், பேரண்டங்களுக்கும் சுற்றுலா பயணி போல செல்வது அவனது கிரகத்திலுள்ளவர்களின் பழக்கம்.

அவனும் அப்படி சுற்றியவன் சனியின் நிலவான டைட்டனில் இறங்கிய போது அவனது தகவல் வாங்கும் கருவியான மேகினி விண்வெளியில் வந்த ஒலி சிக்னல்களை ஏதோ குறிப்பு வார்த்தைகளாக காட்டியது.

அதன் அர்த்தம் “சீக்கிரமாக வா; உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன்” என்பது. அத்தகவல் பூமியிலிருந்து வந்தது என்பதைக் கண்டுகொண்டவன் அதை அனுப்பியவளின் முன்னே வந்து நின்று இன்றோடு மூன்று வாரங்கள் முடிவுற்றிருந்தது.

பிரபஞ்சம் முழுவதுக்குமான இயற்பியல் விதிகள் எப்படி மாறாதோ அதே போல தான் ஜீவராசிகளின் உருவமைப்பும் மாறுவதில்லை என்று தான் மனிதர்களை போல தோற்றமளிப்பதற்கான காரணத்தை ஆரோஹியிடம் கூறியிருந்தான் அவன். அவனுக்கு இஷான் என்ற பெயரைச் சூட்டியவளும் அவள் தான்.

அதன் பின்னர் அவனுக்கு மனிதர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்க ஆரோஹி ஆராய்ச்சியாளர் என்ற முறையில் அவளால் இயன்ற தகவல்களைக் கூறி தன்னிடம் இருந்த புத்தகங்களுடன் இணையத்தை அவனுக்கு அறிமுகப்படுத்திவைத்தாள்.

ஆனால் பரிணாமவளர்ச்சியின் உச்சத்திலிருந்தவன் தன்னை விட மனிதர்கள் அறிவுவளர்ச்சியில் தொழில்நுட்பத்தில் குறைந்தவர்கள் என்பதை சீக்கிரத்தில் கண்டுகொண்டான்,.

அவனுக்குத் தெரியாததை இணையத்தின் மூலம் பார்த்துத் தெரிந்துகொண்டவன் இன்றைய வெப்சீரிஸ் காட்சிக்கான பொருளை கேட்டு ஆரோஹியின் கோபத்தைத் தூண்டிவிட்டு மீண்டும் இணையத்தில் ஆழ்ந்துவிட்டான்.

அப்போது தான் டீபாய் மீதிருந்த காபிகோப்பையைக் கவனித்தான் இஷான். அடிக்கடி அந்த கருப்புநிற திரவத்தை ஆரோஹி குடிப்பதைப் பார்த்திருக்கிறான் அவன்.

அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் உந்த மீதமிருந்த பிளாக் காபியைக் குடித்தான் இஷான். குடித்ததும் பெரிதாக ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

ஆனால் சில நிமிடங்கள் கழியவும் அவனது உடலுக்குள் ஏதோ பிரளயம் உருவாவதைப் போல உணர்ந்தான் அவன். சில மில்லி திரவமானது அவனது உடலுக்குள் வலியை உண்டாக்கியதோடு வயிற்றை சுருட்டிக்கொள்ளும் அளவுக்கு வலியை உண்டாக்கியது.

கண் பார்வை மங்கலாகும் போதே “ஆரோஹி” என அவன் முடிந்த வரை கத்த அவள் என்னவோ ஏதோ என பதறிப்போய் வந்தவள் வயிற்றைப் பிடித்துகொண்டு சரிந்திருந்தவனைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.

“என்னாச்சு இஷான்?” என பதறியளிடம் காபிக்கோப்பையைக் காட்டியவன் “அதுல இருந்த லிக்விட் பேர் என்ன?” என்று வினவினான்.

“அது பிளாக் காபி… அதை நீ குடிச்சியா?”

“ஆ… ஆமா… அதோட மோலிகுலார் ஃபார்முலாவ சொல்லு” என்று கேட்க ஆரோஹி காபியின் வேதியியல் கட்டமைப்பை எழுதிக்காட்டினாள்.

அதை மங்கிய பார்வையில் படித்தவன் “இ… இது எங்களைப் பொறுத்தவரைக்கும் கொடூரமான விஷம் ஆரோஹி” என்றான் மூச்சிறைக்க.

ஆரோஹி அதிர்ந்து போனவள் பின்னர் சுதாரித்துக்கொண்டு “இதுக்கு ஆன்டி-டோட் இருக்கும் தானே… என்னனு சொல்லு… சீக்கிரமா வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்ல அவளிமிடருந்து பேப்பரையும் பேனாவையும் வாங்கியவன் தடுமாறியபடியே எழுதிக்கொடுத்தான்.

அதைப் படித்ததும் ஆரோஹி அதிர்ந்து போனாள்.

“வாட்? இதுவா விஷமுறிவு மருந்து?” என குழம்பிப்போய் கேட்டவளிடம்

“யெஸ்… இது தான் இந்த விஷத்தை முறிக்கும்” என்றான் இஷான் சொருகிய கண்களுடன்.

“கஃபைனுக்கு ஆன்டி-டோட் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டா? லுக்! அந்த ஆசிட் லைட்டா மேல பட்டாலும் தோல் திசு சிதைஞ்சிடும்… அதையா நீ மருந்துனு சொல்லுற?”

“ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டான்ட் ஆரோஹி? நீ சாதாரணமா குடிக்கிற லிக்விட் எனக்கு விஷமா இருக்குறப்போ உங்க உடம்பை சிதைக்குற லிக்விட் எனக்கு மருந்தா இருக்கமுடியாதா? என் பயாலஜிக்கல் ஸ்ட்ரெக்சர் வேற ஆரோஹி… அது அந்த ஆசிட்டை தாங்கும்… நீ வாங்கிட்டு வா… இந்த விஷம் இன்னும் ஒரு மணிநேரம் தான் என்னை உயிரோட வச்சிருக்கும்” என்றான் இஷான் சிரமத்துடன்.

அதற்கு மேல் ஆரோஹி யோசிக்கவில்லை. வருவது வரட்டும் என்று ஆன்லைனில் லோக்கல் டீலர் ஒருவரிடம் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஆர்டர் செய்தாள்.

சேமிப்புக்கிடங்கு அவளது வசிப்பிடத்துக்கு அருகாமையில் இருந்ததால் அமிலத்தோடு அரைமணிநேரத்தில் சேல்ஸ்மேன் வந்து நிற்க அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு கண்ணாடிப்பாட்டிலுடன் இஷானின் அறைக்கு விரைந்தாள் ஆரோஹி.

“இஷான் உன்னோட ஆன்டி-டோட் வந்துடுச்சு… இதை இன்ஜெக்ட் பண்ணணுமா? இல்ல டிரிப்பா ஏத்தணுமா?’

அவன் சிரமத்துடன் கண் விழித்தவன் அவள் கையிலிருந்த பாட்டிலை வாங்கியவன் அவசரமாகத் திறந்து கண் மூடித் திறப்பதற்குள் அந்தப் பாட்டிலோடு அமிலத்தை குடிக்க ஆரம்பித்தான்.

எவ்வளவோ முயன்றும் ஆரோஹியால் பயத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதைக் குடித்து முடித்து பாட்டிலை நீட்டியவனின் முகம் இரத்தமென சிவந்திருக்க “உனக்கு என்ன பண்ணுது இஷான்? உள்ள எரியுதா?” என பயத்துடன் வினவினாள் ஆரோஹி.

இல்லையென மறுத்தவன் “ஐ வாண்ட் ரெஸ்ட்… தூங்குனா தான் இந்த லிக்விட் என் நரம்புல ஏறும்” என்று முணுமுணுக்க அவனைத் தூங்க சொல்லிவிட்டு வெளியேறினாள்.

அவன் உறங்கிய இரண்டு மணிநேரங்களில் அவள் கதிகலங்கிப் போய்விட்டாள் எனலாம். ஆனால் இஷானோ தூக்கம் கலைந்து எழுந்தவன் மிகவும் தெளிவாகப் பேசினான்.

ஆரோஹி மாற்றி மாற்றி எங்கேனும் வலிக்கிறதா என துளைத்தெடுக்க “ஐ அம் ஆல்ரைட் ஆரோஹி” என்று சொல்லிப் புரியவைத்தான்.

சிறிதுநேரம் அமைதியில் கழிந்தது. திடீரென ஆரோஹியின் அறைக்குள் புகுந்தவன் “நீ குடிச்ச லிக்விட் மனுசங்களுக்கு எந்தப் பாதிப்பையும் உண்டாக்காம இருக்குறதுக்கு வாய்ப்பே இல்ல ஆரோஹி” என்றபடி அவளருகே அமர்ந்தவன் தனது நீலநிற விழிகளால் அவளை ஸ்கேன் செய்ய ஆரம்பித்தான்.

அவளின் இரத்தநாளங்களில் கஃபைன் கலந்திருப்பதை கண்டறிந்தவன் இந்த மனிதர்களுக்கு ஏன் விஷத்தின் பாதிப்பு இல்லையென யோசித்தான்.

ஆரோஹி நமட்டுச்சிரிப்புடன் “எதுக்குமே லாயக்கில்லாத ஜீவராசி எப்பிடி விஷத்தை ஜீரணிச்சிட்டு தில்லா உக்காந்திருக்குனு யோசிக்கிறீயா?” என்று கேட்க அவன் ஆமென தலையாட்டினான்.

பின்னர் “ஐ னோ, மனுசங்களுக்கும் எங்களுக்கும் இடையில நிறைய பயலாஜிக்கல் டிபரென்ஸ் இருக்கு… பட் ஹியூமன் பீயிங்ஸ் ஆர் ரியலி வியர்ட் ஸ்பீசிஸ்… எங்களைக் கொல்லுற விஷம் உங்களை ஒன்னுமே செய்யல” என்று யோசனையுடன் கூறினான்.

ஆரோஹி நகைத்தவள் “வீ ஹேவ் அவர் ஓன் மிஸ்ட்ரீஸ்! அண்ட் யூ ஒன் திங், உனக்கு குடுத்தேனே ஆன்டி-டோட், ஐ மீன் ஹைட்ரோகுளோரிக் ஆசிட், சாப்பாட்டை செரிக்க வைக்குறதுக்காக அது எங்க உடம்புல இயற்கையா சுரக்கும்… சப்போஸ் நீ சொல்லுற மாதிரி கஃபைன் விஷமா இருந்தாலும் அதை தான் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் முறிச்சிடுமே” என்றாள் கண்களைச் சிமிட்டியபடியே.

இஷான் யோசனையில் ஆழ அவன் தோளில் தட்டியவள் “டோண்ட் அண்டர் எஸ்டிமேட் ஹியூமென்… சாவுங்கிறது பரிணாம வளர்ச்சில முன்னேறுன உங்களையும் விட்டுவைக்காதுனு இப்போ உனக்குப் புரிஞ்சிருக்கும்… இவ்ளோ அறிவிருக்குற உனக்கே உயிர் போற ஆபத்து வந்தப்போ நீ தவிச்ச… உன்னோட ஒபீனியன் படி அறிவுல குறைஞ்ச மனித இனம் எத்தனையோ ஆபத்துக்களையும் தாண்டி இவ்ளோ முன்னேறிருக்குனா அது சாதாரண விசயமில்ல இஷான்” என்றாள் கர்வத்துடன்.

அவனும் தலையாட்டி ஆமோதித்தவன் “அப்சல்யூட்லி ரைட், உங்களால விஷத்தை சாதாரணமா குடிக்க முடியுது… அந்த விஷத்தை முறிக்கிற மாற்று மருந்து உங்க உடம்புல இயற்கையா சுரக்குது… இட்ஸ் அமேசிங்” என்றவன் மர்மப்புன்னகை பூத்தான்.

அதைக் கண்டு அதிர்ந்தாள் ஆரோஹி. ஏனெனில் இங்கு வந்து மூன்று வாரங்களில் அவனது முகத்தில் எந்த உணர்ச்சியும் வந்ததில்லை. காரணம் கேட்டால் தாங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் உடையவர்கள் என்பான். தங்கள் உடலிலுள்ள கட்டுப்பாட்டு மண்டலம் உணர்வு மண்டலங்களைக் கட்டுப்படுத்துவதால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை என்று கூறியிருக்கிறான்.

அப்படிப்பட்டவன் சிரிக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? ஒருவேளை கஃபைன் அவனது கட்டுப்பாட்டுமண்டலத்தைச் சிதைத்துவிட்டதோ என கேட்க,

அவனோ “நோ! சம்டைம்ஸ் நாங்க உணர்வுமண்டலத்தை செயல்பட விட்டுடுவோம்… உன் கிட்ட என்னோட உணர்வுகளை மறைச்சதுக்கான காரணம் மனுசங்களால எங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியாது… நீங்க பயந்துடுவீங்க” என்று சொல்லவும் ஆரோஹி வழக்கம் போல புரியாவிடினும் தலையாட்டி வைத்தாள்.

இஷான் சிரிப்பை முடித்துக்கொண்டு “என்னைக் காப்பாத்துனதுக்கு நன்றி ஆரோஹி… அண்ட் இன்னும் நான் மனுசங்களை ஸ்டடி பண்ணவேண்டியதிருக்கு… அதனால நான் என்னோட கிரகத்துக்குத் திரும்பிப் போக இன்னும் ரொம்ப நாளெடுக்கும்” என்றான் தீவிரக்குரலில்.

“நோ பிராப்ளம்! எங்க பூமி வந்தாரை வாழவைக்கும் கிரகம்… நீ தாராளமா இருந்து ஸ்டடி பண்ணிக்கலாம்… அண்ட் இனிமே காபியை விட்டு மட்டும் தள்ளி இரு… அது தான் உனக்கு உயிர்கொல்லி” என்று நமட்டுச்சிரிப்புடன் கூறிய ஆரோஹியை நோக்கி மர்மப்புன்னகை பூத்தான் இஷான்.

“ஐ ஹேவ் செவரல் பிளான்ஸ் ஃபார் ஹியூமென்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் “அது உயிர்கொல்லியா இருக்கலாம்.. ஆனா மனுசங்களோட உடம்புல இருக்குற அற்புதத்தை எனக்குப் புரியவச்சது அந்த கஃபைன் தான்… சோ அதை நான் மறக்கவே மாட்டேன்” என்றான் ஆரோஹியிடம் தனது நீலநிறவிழிகள் பளபளக்க.

அதில் தெரிந்த கூடுதல் பளபளப்புக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் எப்படியோ ஒரு வேற்றுகிரகவாசிக்கு மனிதர்களும் அற்புதமானவர்களே என்பதைப் புரியவைத்த அவர்களின் உயிர்கொல்லியான பிளாக் காபிக்கு நன்றி கூறிக்கொண்டாள் ஆரோஹி.

*********

ஹலோ மக்களே

இந்தச் சிறுகதை 2021 ஜனவரி 25ல் பிரதிலிபி டெய்லி டாபிக்குக்காக எழுதுன கதை..
இது பெரிய நாவலா எழுதவிருந்து கிடப்பில் போடப்பட்ட கதை தான்… நானும் என் ஃப்ரெண்ட் தேவியும் இதை ஆங்கிலத்துல எழுதலாமானு யோசிச்சோம்… யோசிச்சிட்டே இருக்கோம்… அதுக்காக சில அறிவியல் விதிகள், அறிவியல் தகவல்களைப் படிச்சு மனப்பாடம் பண்ணவும் செஞ்சேன்… வேலைசுமை அதிகமானதால இந்தக் கதை நான்கு அத்தியாயத்தோட நிக்குது… ஃப்ரீ டைம் கிடைக்குறப்போ தூசி தட்டி எடுத்து எழுதணும்… பிரதிலிபி டெய்லி டாபிக்ல கேட்டப்ப அதுக்காக சிறுகதையா சுருக்கி எழுதுனேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.

நன்றி

நித்யா மாரியப்பன்

1762081310-WhatsApp-Image-2025-11-02-at-162736_67ca73c1.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : November 2, 2025 4:31 PM
(@crvs2797)
Honorable Member Member

அய்யய்யோ..! இஷான் கன்னிங்கா சிரிக்கிறதைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கும் போலயிருக்கே.
இது தெரியாமல், ஆரோஹி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிட்டு வந்துட்டாப் போலவே.

இந்த கதையை கூடிய சீக்கிரம் எழுத ஆரம்பியுங்களேன் ப்ளீஸ்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 2, 2025 8:37 PM
(@kothai-suresh)
Honorable Member Member

Interesting👍👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 2, 2025 8:39 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

கதை நல்ல இருக்கு..... 😍 
இஷானோட இந்த மர்ம சிரிப்புக்கு காரணம் சொல்லலையே....... அவன் ஏதாவது கெடுதி செய்ய போறானா?

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 8, 2025 11:22 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images