புளிக்குழம்பு
இதுவும் எனக்கு ஒரு காலத்துல விரோதி குழம்புதான். வேற வழியில்லாம வைக்கக் கத்துக்கிட்ட குழம்பும்கூட. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டேஸ்ட் பிடிக்க ஆரம்பிச்சு இப்ப வாரத்துல ஒரு நாள் இந்தக் குழம்பு வைக்குற அளவுக்கு ஸ்பெஷல் ஆகிடுச்சு. இதுவும் கஷ்டமைஸ் பண்ணுன குழம்புதான். வெண்டைக்காய் போட்ட புளிக்குழம்பு ரெசிபி பாக்கலாமா?
தேவையானப் பொருட்கள் :
புளி - எலுமிச்சை அளவு (தண்ணீரில் ஊற வைக்கவும்)
தக்காளி - பெரிய சைஸ் 1 / சின்ன சைஸ் 3
வெங்காயம் (உள்ளி) - தேவைக்கேற்ப முழுதாக உறித்து வைக்கவும்
பூண்டு - பத்து முதல் பதினைந்து பல்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மல்லித்தூள் (தனியா)- 3 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுந்து, வெந்தயம் – தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். கூடவே கட்டிப்பெருங்காயம் போட்டால் குழம்பு மணமாக இருக்கும்.
- வெங்காயம், பூண்டு பற்களைப் பொட்டு வதக்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும் துண்டுகளாக வெட்டி வைத்த தக்காளியைப் போட்டு நன்றாக வேகும் வரை வதக்கவும். மிதமான தீயில் அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறுவது முக்கியம். இல்லையெனில் தக்காளி வாணலியின் அடிப்பாகத்தில் கறுகி ஒட்டிக்கொள்ளும்.
- வெங்காயம், தக்காளி, பூண்டு ஓரளவுக்கு வெந்ததும் அந்தக் கலவையில் மல்லித்தூள், சீரகத்தூள், குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு மணம் வரும் வரை கிளறவும்.
- இந்தக் கலவையில் கரைத்து வைத்திருந்த புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
- நீங்கள் வெண்டைக்காய் வைத்து குழம்பு செய்வதாக இருந்தால் முன்னரே அதை எண்ணெய்யில் வதக்கித் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். கொதிக்கிற குழம்பில் அந்த வெண்டைக்காயைப் போடவும். ஒருவேளை கத்தரிக்காய் முருங்கைக்காய் என்றால் குழம்பு கொதிக்கும் போது போட்டுக் கொள்ளலாம்.
- குழம்பு கொதித்ததும் சிறிது நேரம் சிம்மில் வைத்தால் நல்லெண்ணெய் பிரிந்து வரவேண்டும். இதுவே புளிக்குழம்பின் பக்குவம். அப்படி பிரிந்து வந்தால் குழம்பு தயார்.
- எனக்கு புளிக்குழம்பில் கடைசியாக சுண்டைக்காய் வத்தலை நல்லெண்ணெய்யில் பொறித்துப் போட்டால் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்தால் இப்படி செய்து பாருங்கள்!
புளிக்குழம்பு, வத்தக்குழம்பு ரெண்டையும் நான் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் அதுல போடுற பொடிகளும் செய்முறையும்தான். வத்தக்குழம்புக்கு ஃப்ரெஷ்சா பொடி திரிச்சுப் போட்டு வைப்பேன். புளிக்குழம்பு அவசரத்துக்கு வைக்குறதால ரெடிமேட் பொடிகளைப் போட்டு வச்சிடுவேன். இது ரெண்டுக்குமே அப்பளம் வச்சு சாப்பிட்டா ஜோரா இருக்கும். இப்ப டயட்டுல இருக்குறதால நோ அப்பளம். ஒன்லி காய்கறி கூட்டு!
இந்தச் சிம்பிள் புளிக்குழம்பை காய்கறி இல்லாம வெறும் உள்ளியும் பூண்டும் போட்டுக் கூட வைக்கலாம். மணமா இருக்கும். இதுல கொஞ்சம் மிளகுப்பொடி சேர்த்து வச்சா ஜலதோசம் டைம்ல சாப்பிட நல்லா இருக்கும்.