பிரிவின் வலியை மிஞ்சுவதாய்!
நாக்கின் நுனியில் நஞ்சுடையதாய்!
திமிரெனும் வாளால் அறுப்பதாய்!
வார்த்தைகளின் வீரியம் விதைத்தது
பிரிவெனும் திகிலினை மட்டுமே!
விடவும் முடியாமல் விலக்கவும் முடியாமல்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விம்பத்தை உடைக்காத இறுமாப்பினனுக்கு
உரிமையிழப்பும் உயிரிழப்பாய் தோன்றுமா?
-அட்சரனின் வேதா
வீடெங்கும் நிலவிய கனத்த அமைதியைச் சதானந்தனால் சீரணிக்கவே முடியவில்லை. பதின்வயதில் மகனிடம் ஆரம்பித்த சிக்கல் இன்று அவனது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இடத்தில் வந்து நிற்குமென கனவில் கூட நினைக்காத மனிதருக்கு இப்போது நிலமையைச் சீராக்க என்ன செய்வதென்றே புரியாத நிலை.

கலங்கி போய் அமர்ந்திருந்தவரின் முன்னே வந்து நின்றாள் வேதவதி. அவளைப் பார்த்ததும் இன்னுமே அவரது மனம் வருந்தியது.
இந்தப் பெண்ணுக்கு நியாயம் செய்வதாகச் சொல்லி இங்கே அழைத்து வந்து இவளையும் அல்லவா சிக்கலில் தள்ளிவிட்டோமென்ற குற்றவுணர்ச்சியில் குமைந்தவரை வேதவதியின் குரல் இயல்புக்குக் கொண்டு வந்தது.
“நான் ஊருக்குப் போயிட்டு வரட்டுமா மாமா?”
“என்னடா திடீர்னு? உனக்கு சம்பந்திய பாக்கணும்னா டிக்கெட் போட்டு இங்க வர வச்சிடுவோம்” என்றார் பதறியவராய்.
வேதவதி சிரித்தாள். ஆதுரமாய் அவளைப் பார்த்தாள். அவளது தந்தைக்கு நிகரான மனிதர். மகனுக்குக் கொடுக்காத தொழில் அதிகாரத்தை நம்பி அவள் கையில் ஒப்படைத்தவர். அவர் இப்படி கலங்கி போய் அமர்ந்திருப்பது அவளைப் பாதித்தது. இன்னும் அவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் எண்ணமில்லை.
“நான் போயிட்டு வந்துடுவேன் மாமா. லீவுக்குப் போகணும்னு முன்னாடியே ப்ளான் பண்ணுனதுதான்.” என்றவள் தயக்கத்தோடு “இன்னொரு ரெக்வஸ்ட் மாமா! நீங்க தப்பா எடுத்துக்க மாட்டிங்கனு நம்புறேன்” என்றாள்.
“என்னடா? எதுவா இருந்தாலும் சொல்லு”
“கல்யாண ஏற்பாடு எதுவும் பண்ண வேண்டாம் மாமா. நிறுத்திடுங்க”
“வேதா! என்னம்மா இது? அவன் கோவத்துல…”
“அது கோவமில்ல. அவரோட கண்ணுல தெரிஞ்சது கோவத்தை தாண்டுன ஒன்னு. வெறுப்பு அலட்சியம் ஏதோ ஒன்னு. இந்த மனநிலைல எப்பிடி எங்களோட ரிலேசன்ஷிப்பை தொடருறது? அவர் எதையும் மறக்கல மாமா. அங்க நடந்த எல்லாம் அவரோட ஈகோக்கு நடந்த அவமானமா பாக்குறார். அந்த அவமானத்தோட அடையாளமா என்னைப் பாக்குறதாலதான் அவரால ஈகோவ தூக்கிப் பிடிக்க முடியுது. ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா. வேண்டாமே!”
சதானந்தனின் கண்கள் கலங்கிவிட்டன. உறுதியான மனிதர் உடைந்தது அந்த இடத்தில்தான். சரியாக ராஜேஸ்வரி வந்துவிட்டார் அங்கே. கணவரிடம் வேதவதியின் எண்ணத்தைக் கேட்டறிந்தார்.
“அவ முடிவுபடியே இருக்கட்டும்ங்க. அப்ப இருந்து இந்தப் பொண்ணு நம்ம எல்லாரோட முடிவையும் மதிச்சா. அச்சு சொன்னதைக் கூட மறுபேச்சில்லாம செஞ்சாளே! இப்ப அவளா ஒரு முடிவெடுத்திருக்கா. நாம இந்த நேரத்துல அதை மதிக்கணும்” என்றவர் மருமகளை அணைத்துக்கொண்டார்.
“உன் முடிவுல எங்களுக்குச் சம்மதம். எப்ப அச்சு மனசு மாறுறானோ அப்ப கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம். அப்பவும் உனக்கு விருப்பமில்லனா எதுவும் நடக்காது”
“தேங்க்யூ அத்தை! ஊருக்குப் போக பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டேன். ஒன் வீக் லீவ் முடிஞ்சதும் வந்துடுவேன்”
குரல் உடைய சொன்னவள் தனது அறைக்குள் போய்விட்டாள்.
காதலை விட ஈகோவை முக்கியமெனக் கருதுபவன் இதே போக்கை வருங்காலத்திலும் தொடர்ந்தான் என்றால் அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டவளுக்குக் காலம் முழுக்க அது பெரும் வேதனை.
வேதவதி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள். மௌனமாகத் தனது உடைமைகளை எடுத்து வைத்தாள். இடையே மொபைல் அடித்தது.
பிரியம்வதா அழைத்தாள்.
“ம்ம் ப்ரியா”
“பேப் உனக்கு ரிஷப்சனுக்கு லெஹங்கா இண்டர்நெட்ல தேடுனோம்ல. நம்ம அபூ சார் ஒய்ப் பெரிய ஃபேஷன் டிசைனர். அவங்க பொட்டிக் வெப்சைட் பாத்தேன். செம அழகா ஒரு லெஹங்கா இருக்கு பேப். நாளைக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோமா?”

“நாளைக்கு மானிங் நான் ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணிட்டேன் ப்ரியா”
பிரியம்வதா அந்த இடத்தில் நிதானித்தாள். வேதவதியின் குரலில் உற்சாகமில்லை. திருமணத்திற்கான ஆர்வமில்லை. உடைந்து போயிருந்தது அவளது குரல்.
“என்னாச்சு பேப்? எதுவும் பிரச்சனையா?”
“ம்ம்! அட்சரன்…” என ஆரம்பித்தவள் அழுதபடியே அனைத்தையும் சொல்லி முடித்தாள். பிரியம்வதாக்கு அதிர்ச்சியில் இதயம் நிற்காதக் குறை.
வேதவதியோடு சேர்த்து அவனைப் பார்த்த தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் அட்சரனின் விழிகள் அவள்மீதே நிலைத்திருக்கும். ஒரு ஆணின் காதலை அவனது பார்வையிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம். ஆயிரம் அழகிகள் இருந்தாலும் பேரழகைக் காண்பது போல அவனது விழிகள் தனது நெஞ்சம் கவர்ந்தவளையே வலம் வரும்.ழ்
அட்சரனும் அப்படித்தானே இருந்தான். அவனா இவ்வாறு பேசி தோழியின் மனதை உடைத்தான்? பெண்களைச் சிக்கலானவர்கள் என்று ஆண் சமூகம் குறை சொல்லும். ஆனால் மெய்யாகவே சிக்கலானவர்கள் ஆண்கள்தான் என்று எண்ணிக்கொண்டாள்.
“சரி பேப்! நீ ஊருக்குப் போயிட்டு வா. எதையும் யோசிக்காத. அங்க போய் எழுது. கதை படி. உனக்குப் பிடிச்ச இடங்களுக்குப் போ. ஏழு நாள்ல எது வேணும்னாலும் மாறும்”
வேதவதிக்குச் சிரிப்பு வந்துவிட்டது உச்சபட்ச விரக்தியில்.
“ஆறு மாசம், நூத்தியெண்பது நாள்ல வராத மாற்றம் ஏழு நாள்ல வரும்னு நீ நம்புற. உன் நம்பிக்கை பலிக்குதானு பாப்போம்”
அவளிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் மாமனார் மாமியாரோடு இரவுணவை முடித்துக்கொண்டாள்.
அட்சரன் வரவில்லை. அவனிடம் பேசவும் தோன்றவில்லை. இரவில் உறக்கம் வராமல் படுக்கையில் உழன்றவள் திடுமென அறைக்கதவு தட்டப்படவும் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள்.
அட்சரன் தான் நின்று கொண்டிருந்தான். பேசத் தோன்றாமல் கதவை அடைக்கப்போனவள் அவன் காலால் தடுத்து நிற்கவும் திகைத்தாள்.
“என்ன?” என்றவளை உள்ளே போகுமாறு கண் காட்டியவன் அவனும் உள்ளே வந்தான்.
அவளது உடைமைகள் எடுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவனின் விழிகளில் அதிருப்தி அலை!
“அப்ப மினியன் பொய் சொல்லல. நீ ஊருக்குப் போற”
பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள் வேதவதி. மனதுக்குள் கோபம் தீக்கங்காய் கனன்று கொண்டிருந்த நேரத்தில் வார்த்தையை விட விரும்பாமல் மௌனவிரதம் தரித்தாள் அவள்.

“நான் உன் கிட்ட தான் பேசுறேன் வேதா” என்றவன் அவளது முழங்கையைப் பற்ற வருவதற்குள் விலகிக்கொண்டாள்.
“எனக்கு லீவு. போறேன்.”
“அப்ப மேரேஜ் அரேஞ்ச்மெண்ட்?”
இதற்கு மேலும் கோபத்தை அடக்க முடியவில்லை அவளால்.
“மேரேஜா? நீங்க பேசுனதைக் கேட்டதுக்கு அப்புறமும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நான் என்ன பைத்தியமா? மாமா கிட்ட எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லிட்டேன்”
அட்சரன் அதிர்ந்தவன் பின்னே கடுஞ்சீற்றத்தோடு அவளை ஏறிட்டான்.
“யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்த?”
“யாரைக் கேக்கனும்? இது என் வாழ்க்கை சம்பந்த்தப்பட்ட முடிவு. எத்தனை நாள் அடுத்தவங்க முடிவுக்குத் தலையாட்டுறது?”
“இதுல நானும் சம்பந்தப்பட்டிருக்கேன்டி”
“உங்க வாழ்க்கைல நடந்த அவமானத்தோட அடையாளம் நான். அப்பிடித்தானே சொன்னிங்க. அந்த அவமானச்சின்னத்தை ஏன் காலம் முழுக்க தூக்கி சுமக்கணும் நீங்க? கல்யாணம் கருமாதினு எதுக்கும் நான் தயாரா இல்ல. இப்பிடி ஈகோ பிடிச்ச ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க அந்த ஈகோக்குத் தீனி போட நான் ஆள் இல்ல. கூலிங் ஆப் பீரியட்னு தானே பேசுனோம். அப்பிடியே இருக்கட்டும். அது முடிஞ்சதும் நாம பிரிஞ்சிடலாம். இதுதான் என் முடிவு. இதை நான் இன்னும் அத்தை மாமா கிட்ட சொல்லலை. கோவத்துல அடுத்தவங்களைக் காயப்படுத்த நான் ஒன்னும் அட்சரன் இல்ல. என் முடிவைச் சொல்லிட்டேன். வெளிய போங்க”
“வேதா” எரிமலையின் உஷ்ணமாய் தகித்தது அவனது குரல்.
“என்ன? குரலை உயர்த்துனா நான் பயந்து நடுங்கணுமா? பயமும் வெக்கமும் சல்லிப்பைசாக்கு உதவாதுனு செருப்படி பட்டு புரிஞ்சிக்கிட்டவ நான். இனிமே இந்தக் குரலை உயர்த்தி மிரட்டுற வேலை வச்சுக்காதிங்க. நான் மோசமா பேசுறதுக்குள்ள வெளிய போயிடுங்க.”
அட்சரன் அவளது மோவாயை அழுந்தப் பற்றினான்.

“அன்னைக்கும் இப்பிடித்தான் என் சட்டைய பிடிச்சு சண்டை போட்ட. அதனாலதான் இல்லாத ஒன்னை இருக்குறதா சொன்னேன். நீ மறுபடியும் என் ஈகோவ ஹர்ட் பண்ணுற வேதா” எச்சரிக்கும் விதமாய்ச் சொன்னவனின் தாடை இறுக்கம் அவன் கொண்ட கோபத்தின் அளவைச் சொன்னது.
“எப்பிடி? நீங்க தப்பு பண்ணுனா அதை நாங்க யாரும் கேக்கக்கூடாதா? கேட்டா ஈகோக்கு கொம்பு முளைச்சு எதிர்ல இருக்குறவங்களை ஆப் பண்ண நீங்க என்ன வேனும்னாலும் பண்ணுவிங்க. இதைச் சொல்ல வெக்கமா இல்ல? முதல்ல கையை எடுங்க”
அவனது கையை உதறித் தள்ளினாள் வேதவதி. எச்சரிக்கும் விதமாய் அவனைப் பார்த்தாள்.
“என் முடிவுல எந்த மாற்றமும் கிடையாது. உங்களை மாதிரி ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்குறது எனக்கு நானே குடுத்துக்குற சாபம். காதல் எல்லாம் மனசு நிறைய இருக்கு. அதுக்காக காயப்படுத்துறவன் கால்ல விழுற அளவுக்கு நான் மானம் கெட்டுப் போயிடல. இதோட முடிச்சுக்கலாம்” என்றவள் யோசிக்காமல் அவனது காலரைப் பற்றி இழுத்து அந்த அறையின் வெளியே தள்ளினாள்.

“ஸ்டே அவே ஃப்ரம் மை லைஃப். ஸ்டே ஆன் யுவர் லிமிட்”
முகத்திலறைந்தாற்போல கதவைச் சாத்தியவள் அன்றிரவு சரியாக உறங்கவும் இல்லை.
அட்சரனோ பால்கனியே கதியே எனக் கிடந்து அதிகாலையில் உறங்கினான். அவன் கண்ணுறங்கிய நேரத்தில் வேதவதி தேன்மலைக்குக் கிளம்பத் தயாராகியிருந்தாள்.
பதினொன்றரைக்கு அவள் செல்ல வேண்டிய பேருந்து கிளம்பும்.
ராஜேஸ்வரியும் சதானந்தனும் காரில் அழைத்து சென்றார்கள். பேருந்து முனையத்தை அடையும் வரை பேசிக்கொள்ளவில்லை மூவரும்.
வேதவதி ஏசி ஸ்லீப்பரில் ஏறியமர்ந்ததும் பேருந்து கிளம்பியது.
அவளுக்கு மேலிருக்கை. அதிலேறி சாய்ந்து கால் நீட்டியமர்ந்தவளுக்கு மனபாரம் மட்டும் அகலவில்லை.
மொபைலை எடுத்து இண்டர்நெட்டை ஆன் செய்ததும் வரிசையாகச் செய்திகள் குவிந்தவண்ணம் இருந்தன. அனுப்பியவன் அட்சரன் தான்.
அவளை ஊருக்குச் செல்லவிடாமல் செய்ய என்னென்னவோ அனுப்பியிருந்தான். எதிலும் அவளது மனம் குளிரவில்லை.

இறுதியாய் “மானிங் என்னை எழுப்பு. நான் வந்து உன்னை ட்ராப் பண்ணுறேன்” என்று அனுப்பியிருந்தான். அதோடு ‘லாஸ்ட் சீன்’ என்று காட்டியது அவனது வாட்சப்.
வேதவதி அதை இப்போதுதானே பார்க்கிறாள். பதில் சொல்ல பிரியமில்லை அவளுக்கு.
அதே நேரம் வீட்டில் உறக்கம் கலைந்து எழுந்திருந்தான் அட்சரன். நேரம் என்னவென மொபைலில் பார்த்தவன் வழக்கமாய் எழுந்திருக்கும் நேரத்தை விட அதிக நேரம் உறங்கிவிட்டதை அறிந்து தலையிலடித்துக் கொள்ளாதக் குறை.
“வேதா…” சட்டென ஓடிப்போய் அவளது அறையை எட்டிப் பார்க்க அறை வெறுமையாகி இருந்தது.
உடனே கீழ்த்தளத்துக்கு வந்தவன் வீடே ஆளில்லாமல் அமைதியாகியிருப்பதை அப்போதுதான் அறிந்துகொண்டான்.
அப்படியென்றால் வேதவதி ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டாள்.
‘இரவில் நான் அனுப்பிய எந்தச் செய்தியும் அவள் மனதைத் தொடவில்லையா? போகிறவள் என்னை எழுப்பியிருக்கலாமே?’
மனத்தாங்கலோடு மொபைலைப் பார்த்தான்.
வாட்சப்பில் அவன் அனுப்பிய செய்திகளை அவள் சற்று முன்னர் தான் படித்திருந்தாள் என்பதை அறிந்தவனுக்கு மனம் ஒருநிலையில் இல்லை.
தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் சோஃபாவில்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தெரியவில்லை.
வெளியே கார் வரும் சத்தம் கேட்டுப் பரபரப்போடு எழுந்தவன் ஓடிப்போய் பார்த்தான். சதானந்தனும் ராஜேஸ்வரியும் காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வந்தார்கள்.
“வேதா போய்ட்டாளா?” என்று மெதுவாக விசாரித்தான்.
ராஜேஸ்வரிக்குப் பதில் சொல்ல பிரியமில்லை.
பூ போல அத்துணை மென்மையானப் பெண்ணிடம் மகன் பேசிய வார்த்தைகள் எத்துணை அதீதமென அவருக்குத் தெரியாதா? அதுவும் நியாயமற்ற வார்த்தைகள் வேறு!
மகன் அலைக்கழிக்கப்படுவதை விரும்பாதவராய் சதானந்தன் தான் பதிலளித்தார்.
“அவளுக்கு லெவன் தேர்ட்டிக்குப் பஸ். இந்நேரம் சிட்டியைத் தாண்டிருப்பா”
“நான் அவளை ட்ராப் பண்ணுறேன்னு வாட்சப்ல மெசேஜ் அனுப்புனேன்பா. ஆனா பதில் வரல”

குரல் கம்மிப்போக அட்சரன் சொல்ல ராஜேஸ்வரிக்கு அவனை அறையலாம் போல வெறி! ஆனால் முடியவில்லை. வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டார்.
போகிறவரைப் பார்த்துவிட்டுத் தந்தையிடம் திரும்பியவனின் கண்களில் கண்ணீர் பளபளத்தது. அது அதீத கோபத்தின் அடையாளம். சோகத்தின் அடையாளமில்லை.
“என் மைண்ட்ல இருந்ததை ஓப்பனா சொன்னேன். அது தப்பா? நீங்களே சொல்லுங்க. தேன்மலைல நடந்ததுல என் தப்பு என்ன இருக்கு?”
“நீ வேதா பேரை எடுத்திருக்க கூடாது அச்சு. அது ஒரு மாதிரி ரிமோட் வில்லேஜ். மக்கள் மனசு சிட்டியோட சமத்துவத்துக்குப் பழகியிருக்காதுனு தெரியவேண்டாமா?”
“நான் அவ கூட புக் பத்தி பேசிட்டிருந்ததா தானே சொன்னேன்பா. தப்பா கூட எதுவும் சொல்லலையே. ஆனாலும் என்னை ட்ராப் பண்ணி அவ கழுத்துல தாலிய மாட்ட வச்சு.. அது எனக்கு நடந்த அவமானம் தானே? அவ என் கிட்ட எதிர்த்துப் பேசுனப்ப கோவம் வந்து பிருந்தாவ காதலிக்கிறதா சொல்லிட்டேன். அவ அந்த இடத்துல வாயடைச்சுப் போகணும்ங்கிறதுக்காக மட்டும்தான் சொன்னேன்பா. அப்புறமும் அவ கிட்ட உண்மைய சொல்ல மனசு வரல. அன்னைக்கு குடிச்சிட்டு உளறலனா எப்பவுமே சொல்லிருக்கமாட்டேன். என் நேச்சரை நான் எப்பிடி மாத்திக்க முடியும்?”
“ஏன் வேதா மாறல? இந்த ஊருக்கு வந்த அப்புறம் தனியா சூப்பர் மார்க்கெட்டை பாத்துக்குறது, ஜோவியலா பழக முயற்சி பண்ணுறதுனு அவ மாறல? அடிப்படை மனித குணம் மாறாது அச்சு. ஆனா நம்ம கிட்ட இருக்குற பிரச்சனைக்குரிய குணங்களை மாத்திக்கலாம். அதுதான் மெச்சூரிட்டி. நீ ஏன் மாறாம போன? சரி விடு! வேதா வந்ததும் பேசிப் புரிய வை. கொஞ்சமா மாற முயற்சி பண்ணு”
வேதவதி இனி எதற்கும் இடமளிக்கப் போவதில்லை என்பதைச் சதானந்தன் அறியமாட்டாரே! அட்சரனுக்கு அதைச் சொல்லி அவரது மனதை வருத்த விருப்பமில்லை.
தூக்கவே முடியாத சுமையொன்று தன் மீது ஏற்றி வைக்கப்பட்டதாக உணர்ந்தவனுக்கு மூச்சு வாங்கியது.
“ப்பா!” செய்வதறியாது கோபத்துக்கும் வருத்தத்துக்கும் இடையே சிக்கிக்கொண்டு கலங்கியவன் அவரை அணைத்துக்கொண்டான்.

சதானந்தனும் ஆடிபோய்விட்டார். கண் கலங்குமளவுக்கு வந்திருக்கிறான் என்றால் வேதவதி மகனிடம் உண்டாக்கிய பாதிப்பு தீவிரமானது என அவருக்கும் புரிந்தது.
அவனது தோளில் தட்டிக்கொடுத்தார்.
“நாங்க உன்னைப் பெத்தவங்க. நீ எங்களை என்ன வேணும்னாலும் சொல்லலாம். மறுபடி வந்து பேசலாம். வேதா உன்னோட லைஃப் பார்ட்னர். அவளை எடுத்தெறிஞ்சு பேசிட்டு அதை மறந்துடுனு சொல்ல முடியாது அச்சு. அது நியாயமுமில்ல. வருத்தப்படாத. வேதா வந்ததும் பேசிக்கலாம்”
அட்சரனுக்கும் அவள் திரும்பி வருவாள் எனத் தெரியும். ஆனால் இனி அவனது வேதவதியாகத் திரும்பி வருவாளா என்பதுதான் கேள்வி.
அது சாத்தியமில்லை என முகத்திலறைந்தாற்போல சொல்லிவிட்டாளே நேற்றைய இரவில்.
சதானந்தன் மகனின் கேசத்தை வருடிக்கொடுத்தவர் “ஆபீஸ் கிளம்பு. வேதா எங்கயும் போயிடமாட்டா. நாங்க எதுக்கு இருக்குறோம்? நீயும் உன்னை மாத்திக்கணும்.” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அட்சரன் போகிறவரைப் பார்த்தபடி நின்றான் சிலையாய்.
திடுமென ஏதோ நினைவு வந்தவனாக வாட்சப்பில் வேதவதிக்குச் செய்தி அனுப்பினான்.
“சென்னைக்கு எப்ப ரிட்டர்ன்? ட்ரெயின் ஆர் பஸ்? எதுல டிக்கெட் போட்டிருக்க? நீ வர்ற டைம் சொல்லு. நான் பிக்கப் பண்ணிக்க வர்றேன்”
ஆன்லைன் என்று காட்டினாலும் அவனது செய்தி படிக்கப்படவில்லை.
இன்ஸ்டாகிராமில் வந்த நகைச்சுவை ரீல்சை அனுப்பினால் கூட உடனே பார்த்து அதற்காக அரட்டையபடிப்பவள் இன்று அவன் அனுப்பிய செய்தியையே தவிர்க்கிறாள்.

பெருமூச்சு விட்டவனாக ஹெல்வட்டாஸ் கிளம்பத் தயாரானான் அட்சரன். இதற்கு மேல் இறங்கி பேச அவனுக்கும் விருப்பமில்லை. இவ்வளவு தூரம் என்னைத் தவிர்ப்பவளை நான் மட்டும் கொண்டாட வேண்டுமா என முறுக்கிக்கொண்டது அவனது ஈகோ.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

